பழையன கழிதல்

அந்த முட்டை விழுந்து உடைந்து, உள்ளிருந்த நிறமற்ற திரவத்தில் மிதந்த மஞ்சளாய் கரு தரையில் தெறித்தது. ஒரு துளி என் கால் கட்டைவிரல் நுனியில் தீண்டிய சிலிர்ப்பு  குற்ற உணர்வாய்  மனதில் இறங்கியது. ”ஐய்யய்யோ… “ என்கிறேன் தன்னிச்சையாய். கவனிக்கவில்லை. சிறிய முட்டை. அதன் அடர் மஞ்சள் நிற உயிர் துளி பால்கனித் தரையில் இறைந்திருந்தது. புறா முட்டை. பால்கனியைச் சுத்தம் செய்யும் முனைப்பில் ஓரமாய் குவித்து வைத்திருந்த சாமான்களின் இடையே புறா கூடு கட்டி இருந்ததைப் பார்க்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே நுழைந்த போது படபடப்பாய் சிறகடித்துப் பறந்து போன அந்தப் புறா இட்டதாய் இருக்கவேண்டும்.

என்றைக்கோ வந்த தண்ணீர்த் தட்டுப்பாட்டின் போது  வாங்கின ப்ளாஸ்டிக் அண்டாம், உபயோகிக்காத உடற்பயிற்சி சைக்கிள், பட்டுப்போன செடியும் உலர்ந்த மண்ணும் தாங்கிய மண் சட்டி, அட்டைப் பெட்டி நிறைய படித்து முடிக்காத வாரப்பத்திரிகைகளும் தூக்கிப்போட மனமில்லாத சங்கதிகளுமாய் பால்கனி மூலையை ஆக்கிரமித்த பொருட்களின் இடையே உருவான பாதுகாப்பான இடத்தில், அந்தப் பறவை சேகரித்துக்கொணர்ந்து வந்து நிரப்பிய வைக்கோல், பழந்துணிகளால் ஆன அதன் வீட்டில் இருந்த முட்டை.  நான் கலைக்காவிட்டால் இன்னும் ஒரு மாதத்தில் வளர்ந்து சிறகடித்து பறந்து போயிருக்கவேண்டிய புறா,  மஞ்சள் திரவமாய் சிதறிப்போய் விட்டது. எதிர் கட்டடத்தின் பதினொன்றாவது மாடி பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும், சாம்பல் நிறத்தில் கருப்பு தீற்றலாய் கழுத்தில் ஒரு சின்ன கருப்பு வளையத்தோடிருக்கும் அம்மா புறாவுக்கு இன்னும் தெரிந்திருக்காது.

மாதக்கணகில் யாரும் தொந்திரவு செய்யாமல் இருந்த இடத்தை இன்றைக்குக் நான் கலைக்க வேண்டியதாய்ப் போயிற்று. அந்த இடம் மட்டுமில்லை அந்த பால்கனியை ஒட்டிய என்  படுக்கை அறையையும். மிச்சத்தை என் மனைவியும் வீட்டாரும் செய்கிறார்கள். ஐந்து வருடங்களாய்ச்  சேர்த்து வைத்த பொருட்களையெல்லாம் எடுத்துவைத்து வேண்டியற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை தூற எறியும் ‘ பழையன கழிதல்’. ஒரு வாரமாய் அதுதான் நடக்கிறது வீட்டில்.

வீடு மாற்றல் என்கிற அலுப்பான வேலையில் மிகச் சிரமமான பகுதி அதுதான்.  பாக்கிங் செய்வது கடினமில்லை, லாரியில் ஏற்றிக்கொண்டுபோய் இன்னொரு வீட்டில் சேதமில்லாமல் சேர்ப்பது கடினமில்லை. அதெற்கெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்து முதுகு உடைய உழைக்கும் பிகாரிகள் இருக்கிறார்கள்.  சொற்ப சம்பளம் கொடுத்து உயிரை உறிஞ்சிக்கொண்டு அவர்களை வேலை வாங்கும்   நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் சேகரித்தவைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு  அவற்றில் எது வேண்டாதவை என்று தீர்மானித்து விட்டெறியும் வேலை தான் மிகக் கடினமானது.  வலி மிகுந்தது.

ஆளுக்கு ஒரு அறை என்று பிரித்துக்கொண்டு. ஒரு வாரமாய் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். அதற்குத்தான் நான் பால்கனிக்கு வந்ததும் அந்தப் புறாவின் முட்டை அழிந்தது போனதும்.

”இந்த ரூமு  முழுக்கக குப்பை. பேப்பர் கட்டிங், பழைய பத்திரிகைங்க, உதவாத சாமான்ங்க. நாங்க கையை வச்சா சத்தம் போடறீங்க. நீங்களே பாத்து எடுத்துவைங்க. தேவையில்லாத குப்பை எதுவும் எடுத்துகிட்டு வராதீங்க”.

புது வீடு மாறுகிற உற்சாகத்திலும் பொருட்களை பாக்கிங் செய்ய வேண்டிய அலுப்பிலும் மனைவி சொல்கிறாள்.

”இந்த வீட்லயே இருந்திடலாமே.. புது வீட்டை வாடகைக்கு விட்டுறலாம். இப்பதான் ரோடு எல்லாம் போட்டுகிட்டு இருக்காங்க. அந்த ஏரியா  டெவலப் ஆக கொஞ்ச மாசங்கள் ஆகும். அதுவரைக்கும் இங்க இருக்கலாமே” தயங்கித் தயங்கி சொன்னேன்.

“நல்லாயிருக்கு. மார்பிள் டைல் டிசைனு, மரவேலை எல்லாம் ஆசை ஆசையா பாத்து கட்டின வீடு. வேற யாரோ போய் குடியிருக்கறத்துக்கா எழைச்சி எழைச்சி அவ்வள செஞ்சம்?”

“இந்த வீடு ரொம்ப ராசியான வீடு”

பாவ்னா பிறந்தது, எனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு அம்மாவுக்கு உடல் நிலை சீரானது, கடைசி தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்தது எல்லாம் அந்த வீட்டிலிருந்துதான். சம்பள தைர்யத்தில் ஆறு கிலோமீட்டர் தள்ளி சொந்தமாய் புது வீடு வாங்கியதும் இந்த வீட்டின் ராசியில்தான்.

“போற வீடு இதை விட ராசியா இருக்கும்னு நினைச்சிக்கங்க. பசங்க ரெண்டும் புது வீட்டுக்கு எப்ப போறம்னு தினமும் தொணதொணக்குதுங்க. நீங்க என்னடான்னா…”

பொருட்களை வீசி எறிந்துவிடலாம்.  பொருட்களோடு தொடர்புடைய ஞாபகங்களை எப்படி எறிவதாம் ? ஞாபகங்களோடு இணைந்திருப்பதனால்தானே அவை தேவையாயிருக்கிறது.

”இதையெல்லாம் ஏன் இன்னும் வச்சிருக்கீங்க” பீரோவின் அறைகளில் ஒன்றிலிருந்து உருவின பையில் இருந்த காகிதக் கற்றைகளை கையில் வைத்துக்கொண்டு கேட்கிறாள் மனைவி.

அப்பாவின் இரண்டு வாரப்  போராட்டத்திற்குப் பிறகு இருதயம் நின்று போனதை நினைவுபடுத்தும் மருத்துவமனை பில்.  ’இருக்கட்டும்’ என்று வைத்துக்கொள்கிறேன்.  அந்தப் புறா கூடு கட்டியிருந்த பால்கனியில் தான் அப்பா  சாயந்தரமும், இரவு சாப்பாட்டுக்குப் பிறகும் நின்று வேடிக்கை பார்ப்பது.   புறாக்கள் அதிர்ந்து பறக்காதபடிக்குதான் அப்பா பால்கனி கதவைத் திறப்பார். புறாக்கள் பாதுகாப்பாய் உணர்ந்ததால்தான் அங்கே கூடு கட்ட முடிவு செய்திருக்கவேண்டும்.

பீரோவின் ஒரு மூலையில் தட்டுப்படுகிறது என்றைக்கோ காணாமல் போன ஒன்று  ”பாரு. காணம்னு தேடிகிட்டு இருந்தமே. கிடைச்சிருச்சி டீவி ரிமோட்.

”வேணாம் தூக்கிப்போடுங்க. அதான் வேற புதுசா வாங்கியாச்சே

இது கிடைத்ததைப் போல வீடு மாற்றும்போது சில பொருட்கள் காணாமலும் போகுமல்லவா ? அதில் அந்த புது டீவி ரிமோட்டும் ஒன்றாய் இருந்தால் ?  அப்போது இந்த பழைய ரிமோட் தேவைப்படாதா ?  எடுத்து வைத்துக்கொண்டேன்.

இரண்டு வருடத்துக்கு முந்தய புத்தம் புதிய உபயோகிக்கப்படாத டயரி குப்பையா இல்லை வீட்டுக்கணக்கு எழுத உதவுமா ?  அழகழகாய் அச்சடித்து உபநயனங்களுக்கும் திருமணங்களுக்கும் அனுப்பப்பட்ட அழைப்புகளை எப்படி கிழித்துப் போடுவது ?  கோபுலு, சில்பியின் ஓவியங்கள் இருக்கிற தீபாவளி மலர் ? நைந்து போன பக்கங்களோடு குறிப்புகள் எழுதிவைத்த கணையாழியின் கடைசி பக்கங்கள் ?

”வேண்டாததை தூக்கிப்போட்டு மிச்சத்தை பேக் பண்ணுங்கன்னா  என்னத்தயோ  பார்த்துகிட்டு உட்காந்திருக்கீங்க !”

புகைப்பட ஆல்பம். அப்பா அம்மாவின் இளய வயதிலிருந்து கருப்பு வெளுப்பாய் இருந்து வர்ண மயமாய் ஆன வாழ்க்கை, நினைவுத் துகள்களாய் இறைந்து கிடக்க அதை பிரட்டிப் பார்த்து பழைய நியாபகங்களில் திளைத்திருக்காமல் எப்படி பாக்கிங் செய்வது ?.

“இந்த இரண்டு குருவி மொம்மை கொஞ்சம் ஓரத்துல உடைஞ்சு போயிருச்சே. இதை தூக்கிப்போடுங்களேன். வேற வாங்கிக்கலாம்” என்பவளிடம் அதை கௌரி நினைவாக வைத்திருக்கிறேன் என்று எப்படிச் சொல்வேன் ?  நைந்து போன மூங்கில் நாற்காலி, டிவிடி யுகத்தில் வெறும் டப்பாவாகிப் போன  டேப் ரிக்கார்டர், அம்மாவின் முதல் முயற்சியான தஞ்சாவூர் ஓவியம் எல்லாமும் ஏதோ காரணத்துக்காக வேண்டியிருக்கிறதே.

காலர் கொஞ்சம் கிழிந்த சட்டை, ஃபேஷன் மாறிப்போன கால்சராய். ஜெர்மனிக்கு போகும்போது வாங்கின கோட்டு, மூலையில் கிழிந்து போன சூட் கேஸ்,  பவனின் ஸ்கூல் பை, எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். நமக்கு இல்லாவிட்டாலும் யாருக்காவது வேண்டியிருக்கலாம்.

என்னால் எதையும் விட்டு விட முடிவதில்லை. உடமைகளையும் ஞாபகங்களையும். நான் கடந்த காலத்திலேயே வாழ்வதாய் என் மனைவி சொல்கிறாள். காலம் என்பதே ஒரு மாயை என்பதையும், கடந்த காலத்தை விட்டு நிகழ்காலத்தில் வாழவேண்டிய அத்தியாவசியம் குறித்தும் சிலாகிக்கிற Eckart Tolle வின் புத்தகம் ஒன்றை எனக்கு சமீபத்தில் வந்த என் பிறந்த நாளுக்கு பரிசளித்திருக்கிறாள்.

பீரோவின் கீழே நாளிதழ்களால் சுற்றி பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருந்த ஒரு  பொட்டலத்தை கையில் எடுக்கிறாள் மனைவி. பிரித்தவுடன் வெளிப்பட்ட கையடக்க எலெக்ட்ரிக் டைப்ரைட்டரை எடுத்துப் பார்த்து “ இது எதுக்கு இனிமே “ என்கிறாள்.

கல்யாணம் ஆன புதிதில் அலுவலக வேலையாக ஜெர்மனிக்கு மாற்றலான சமயம். இணையம் மின் அஞ்சல் இல்லாத அந்த காலத்தில் அலுவலகக் கடிதங்களை டைப் செய்ய நான் ஹாம்பர்கில் வாங்கின தட்டெழுத்து இயந்திரம்.  அதன் வாசனையில்  ஜெர்மனியின் தனிமை சூழ்ந்த குளிர் உறைக்கிறது. சன்னமாய் மணி அடித்துக்கொண்டே போகும் டிராம் வண்டியின் ஓசை ஒலிக்கிறது. லேசாக ஹாட் டாக் வாசனையும் கடுகு சாசின் காரமும் நாசியில் ஏறுகிறது. எப்படி தூக்கிப்போடுவது ?

www.freepix4all.comயார் அறையில் என்ன வர்ணம் பூசவேண்டும்,  எப்படி அலங்கரிக்கவேண்டும், என்று உற்சாகமாய் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கும். ”புது வீட்டுக்கு போற உற்சாகமே இல்லையா உங்களுக்கு” என்று கேட்கிற மனைவிக்கும்  புரிவதில்லை நாம் வாழ்வது வீட்டில் மட்டுமல்ல என்பது.

பாக்கிங் செய்த குழந்தைகளின் அறை பூரா பாவ்னா வரைந்த குச்சி குச்சி அப்பா அம்மா.. டாகி…  வர்ண வர்ணமாய் நட்சத்திரம், சந்திரன், சிவப்பு மரம்,  உதா கலர் ரோஜாப்பூ எல்லாம் இன்னும் துல்லியமாய் தெரிகின்றன.

”ரோஜாப்பூ உதா கலர்ல இருக்குமா பாப்பா..?”

”இருக்கும்.  ஸ்கூல்ல இருக்கற செடியில ஊதாப்பூ ரோஜா இருக்கு.”

”நாளைக்கு பறிச்சிகிட்டு வரயா ? அப்பா பாக்கறேன்.

”மாட்டேன். டீச்சர் திட்டுவாங்கப்பா. நீங்க ஸ்கூலுக்கு வந்து பாத்துக்கங்க.

” வெள்ளை அடிக்கணும். இப்பிடி கண்றாவியா விட்டுட்டுப் போகமுடியாது.”

ஏன் வெள்ளை அடிக்கவேண்டும்? இந்த வீட்டுக்கு குடிவருகிறவர்கள் சிவப்பு மரத்தையும் ஊதா கலரில் மலர்ந்திருக்கிற ரோஜாவையும் ரசிக்கிறவர்களாய் இருக்கக்கூடாதா ?

ரோஜாக்கள் ஊதா நிறத்தில் மலர்வது நின்று போய் ஒரு வருடம் ஆகிறது. குழந்தையின் கற்பனையை முடக்கி ரோஜா சிவப்பு நிறம்தான் என்று அதற்கு போதிக்கப்பட்டுவிட்டது. புது வீட்டீல் மலர்ந்தால் அவை சிவப்பு நிறத்தில் தான் மலரும்.

“புது வீட்ல அசிங்கம் அசிங்கமா சுவர்ல கிறுக்கறதெல்லாம் கிடையாது. வால் பேப்பர் ஒட்டிட்டேன்”

குழந்தை கிறுக்கலாய் குச்சி குச்சி குடும்பமும், மரமும் ரோஜாவும் இல்லாமல் புது வீடு நன்றாய் இருக்குமா ? சுவரை உரித்தெடுத்து புது வீட்டில் பிள்ளைகளின் அறையில் ஒட்ட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

” இது என்ன? கருப்பு பிடிச்சு…  அழுக்கா எதுக்கு இதெல்லாம் எடுத்து வச்சிக்கற ?”

சமயலறை பாத்திரம் என்று என் மனைவி எடுத்து வைத்ததில் பாதி எனக்கு வேண்டாததாய் தெரிந்தது.

“ ஒரு காபி போட உள்ள வர்றதில்லை. என்ன பாத்திரம் வேணும் வேணாம்னு நீங்க என்ன சொல்றது. இதெல்லாம் எங்க அம்மா தந்த பாத்திரம் ”

அவரவர் பொக்கிஷம் அவரவர்க்கு.

அந்த வீடு மாற்று சேவை  நிறுவனத்திலிருந்து வந்த ஆறு பிகாரி இளைஞர்கள் பரபரவென்று வேலை செய்து ஒரே  நாளில் ஒட்டு மொத்த வீட்டையும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து எடுத்துக்கொண்டு போய் வேண்டிய இடத்தில் ஒப்படைத்துவிட்டார்கள்.

எங்களுக்கு தேவையில்லாதது என்று வீட்டின் மூலையில் போட்டிருந்த ஒரு குவியலை அந்த இளைஞர்கள் பார்த்து  “ இது உங்களுக்கு தேவையில்லையா சர் ஜி” என்று கேட்டார்கள். நான் வேண்டாம் என்றதும் அந்த குப்பை மேட்டை ஆராய்ந்து கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு வந்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டார்கள். “  நன்றி ஜி” என்றார்கள்.

எங்கள் வீட்டு பழயன அவர்கள் வீட்டில் புதியனவாய் இடம்பெறப்போகும் அவலம் என்னுள் மெல்லிய குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

உடமைகளை வெளியேற்றிய விட்டில் நின்று பார்க்கும்போது எங்களில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது போல இருந்தது.  சுவரின் தீபாராதனை கருப்பு திட்டு, பென்சில் கிறுக்கல்கள், கைவிரல் தடங்கள், எண்ணெய் பிசுக்கு என்று  எங்கள் அடையாளங்கள் மிச்சம் இருந்தன. எங்கள் நினைவுகளிடமிருந்து உன்னால் அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியாது என்று வீட்டிடம் சொல்கிறமாதிரி தோன்றியது. அத்தனையும் ஒரு சுண்ணாம்புப் பூச்சில் ஒளிந்து கொண்டாலும் இந்த விட்டின் நிரந்தரமான ஒரு அங்கமாய் உள்ளே உறைந்துவிடும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வரும்போது பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்படுகிறார். ” உங்களை மிஸ் பண்ணுவம் சார்” என்கிறார் என் கைகளை பிடித்துக்கொண்டு. அவ்வளவாய் நெருங்கிப் பழகாதவர் கூட இன்று பிரியும் சோகத்தில் நெருக்கமானவராய் தெரிகிறார்.

சுண்ணாம்பு வாசனை, பெயிண்டு வாசனை, வார்னீஷ் கலந்த மர வாசனையோடு புது வீடு உற்சாகமாய்த்தான் இருந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகம் இடம் இருந்தது.  இவ்வளவு இடம் இருப்பது தெரிந்திருந்தால் தூக்கிப் போட்ட சில பொருட்களை கொணர்ந்து வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

ஐந்தாம் மாடியிலிருந்து பார்த்தால் கீழே குழந்தைகள்  விளையாடிக்கொண்டிருக்கும் காட்சி உற்சாகத்தைக் கூட்டுகிறது. எதிர் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டிருப்பவர்  “ என்ன ஷிஃப்ட் பண்ணிட்டீங்களா. வெல்கம்” என்று சிநேகமாய் வரவேற்பவரை உடனே பிடித்துப்போனது.

இந்த வீட்டிலும் ஞாபகங்கள் சேரும். விலக்க முடியாத குப்பைகளும்.

அங்கேயும் புறாக்கள் இருந்தன. மூன்றாவது படுக்கை அறையை ஒட்டிய பால்கனி சுவரில் உட்கார்ந்திருந்தது அந்தப் புறா. சாம்பல் நிறத்தில் கறுப்புத் திட்டுகளாய் கழுத்தில் சின்ன கறுப்பு வளையத்தோடு. நான் ஆச்சரியமாய் அதை பார்க்கிறேன். பழைய வீட்டிலிருந்த அதே புறாவாகக் கூட இருக்கலாமோ.  அபத்தமாய் தோன்றினாலும் அப்படி நினைத்துப்பார்ப்பதில் சுகம் இருந்தது. பழைய வீட்டின் நியாபகக் குப்பைகளை திரட்டி எடுத்து வந்த தூதன் மாதிரி.

உள்ளே மனைவி குழந்தைகளிடம் “ இது நம்ம புது வீடு. சுவத்துல கிறுக்கக்கூடாது. குப்பை சேக்கக்கூடாது” என்ன புரியுதா” என்று அதட்டலாய் சொல்வது கேட்கிறது.

எனக்கு உடனே குப்பை கொஞ்சம் சேர்க்கும் ஆவல் சேர்ந்துகொண்டது.  புது வீட்டின் பால்கனி பழைய வீட்டு பால்கனியை விடப் பெரியதாய் இருக்கிறது. ப்ளாஸ்டிக் டிரம்மும், சைக்கிளும், அட்டைப்பொட்டியும் வைத்தால் கிடைக்கிற இடத்தில்  வைக்கோலையும் பழைய துணியையும் இட்டு அதற்கு ஒரு வீடு அமைத்துத்தரவேண்டும் போல் இருந்தது.

அந்தப் புறா அதில் முட்டையிடும்.  முட்டை உடைந்து போனதின் வலி மிகுந்த நினைவு அதில் மறந்து போகும்.

0 Replies to “பழையன கழிதல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.