பங்குச்சந்தை விழுந்திருந்தது

அன்று ஏன் பங்குச்சந்தை விழுந்திருந்தது என்பது எவருக்கும் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொருவரும் அதற்கு ஒரு கோட்பாட்டு விளக்கம் வைத்துக் கொள்வதனாலும் நிற்கவில்லை.
”ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்பெயினின் பங்கு குறித்த அச்சங்கள் பங்குச்சந்தையை விழ வைத்தது,” வானொலியில் ஒரு பெண் சொன்னாள். “எண்ணெய் முன்பேரத்தில் நிலவும் நிலையாமையால், பங்குச்சந்தைக்கு இன்று மூடு சரியில்லை,” தொலைக்காட்சியில் ஒரு ஆண் அறிவித்தான். “சேமநல விவரங்கள் மீது கவனம் குவிந்ததால், பங்குச்சந்தை சற்றே விழுந்தது” செய்தித்தாளில் நிருபர் எழுதினார்.
உண்மை என்னவென்றால், பங்குச்சந்தை ஏன் விழுந்தது என்பது எவருக்கும் தெரியவில்லை. காலையில் துவங்கியபோதே, வெறுமனே…… விழுந்தது. அப்படியே நாள்முழுக்க விழுந்தே காணப்பட்டது. மதிய சாப்பாட்டின் போது சில தருணங்களுக்கு சற்றே நிமிர்ந்தாலும், கடைசி வரை….விழுந்தேதான் இருந்தது.
ஏன் பங்குச்சந்தை விழுந்திருந்தது? ஒரு காரணமும் இல்லை. பாருங்கள், சொல்லப்போனால், முட்டாள்தனமான விஷயம். உண்மையைச் சொன்னால், ஒருவேளை துவக்கத்தில் ஸ்பெயின்தானோ என்னவோ. நிஜமாக அது ஸ்பெயின் பற்றிக் கவலை கொள்ளக் காரணம் என்னவென்றால், அதற்கு முழிப்பு வந்தபோதே, எதற்காவது கவலை கொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே எழுந்ததுதான். திரும்பிப் பார்ப்பதற்குள், பங்குச்சந்தை பெரிய விஷயங்களை நினைத்துக் கவலைப்படத் துவங்கியது, தீர்வு இல்லாத விஷயங்களை நினைத்துக் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டது.
பங்குச்சந்தையே இல்லாவிட்டால், எவராவது அதை எண்ணி உருகுவார்களா? வேறு எதாவதுதான் வித்தியாசமாக இருக்குமா? பங்குச்சந்தையைக் குறித்து எவராவது நிஜமாகவே கவலை கொண்டாரா அல்லது அதில் இருந்து பணம் பண்ணலாம் என்று மட்டும்தான் எண்ணினார்களா? அதற்கப்புறம் இன்னொரு பிரிவு இருந்தார்களே – பங்குச்சந்தையைக் கண்டாலே வெறுப்பைக் காட்டினார்களே; அதனாலேயே உத்தமராகக் கொண்டாடப்பட்டு, பங்குச்சந்தையை விரும்பியவர்களைவிடக் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களாக தோன்றியவர்கள் – அவர்கள் தரப்பு சரியா? அவர்களுக்குத்தான் ஏதோ தனியாகத் தெரிந்ததோ? பங்குச்சந்தைக்கு ஆன்மாவே இல்லையோ? தீமையோ? அர்த்தமற்றதோ? தீங்கிழைக்க வல்லதோ? கொடியதோ?
வாரன் பஃபெட்டை நினைத்த மாத்திரத்தில் பங்குச்சந்தைக்கு ஒரு நிமிடத்துக்கு நிதானம் கிடைத்தது. என்ன மாதிரியான வசீகரமும் அன்பும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்ற மனிதன் இந்த வாரன் பஃபெட்! அவருக்கு பங்குச்சந்தை மேல் ரொம்பவேதான் வாத்சல்யம்.  கேள்விக்கு இடமேயில்லாமல், நெஞ்சத்தில் இருந்து பீறிடும் பிரியம். அந்த நினைப்பு பங்குச்சந்தையைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.
ஆனால், பங்குச்சந்தைக்குத் தோன்றிய வேறேதோ நினைப்பு அப்படியே தன்னை கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணவைக்குமளவு அதை துக்கத்தில் ஆழ்த்தியது: வாரன் பஃபெட் ஒரு வேளை தவறாக இருந்தால் என்ன செய்வது? இந்த நினைப்பே பங்குச்சந்தையை முன்னெப்போதையும் விட நலிவாக்கியது: வாரன் பஃபெட் போன்ற மகோன்னதர், பைசா பிரயோஜனமில்லாத கொடியதான பங்குச்சந்தை மேல் அன்பு செலுத்தித் தன் இதயத்தை வீணடித்திருப்பாரோ என்னும் சிந்தனை தோன்றியது. பங்குச்சந்தைக்கு குற்றவுணர்ச்சியும் கழிவிரக்கமும் தலைதூக்க, அப்படியே மொத்தமாக உருக்குலைந்து போனால் என்ன என்று எண்ணியது. ஆனால், அது செய்யவில்லை. என்ன ஒரு பைத்தியகாரத்தனம், என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது: இப்பொழுது விழுந்திருப்பதால் விழுந்திருக்கிறாய். அட! உசுப்பேற்றிக் கொள், கொஞ்சம் உயிரோட்டம் இருப்பது போல் காண்பி.
பங்குச்சந்தைத் தன்னாலேயே மெதுவாக எழத் துவக்கியது. மக்களுக்கும் பங்குச்சந்தை முன்னேறுவதில் மகிழ்ச்சி பிறந்தது – எல்லோரும் கோஷமிட்டு ஆரவாரித்தனர் (பங்குச்சந்தை தோல்வியுறும் என்று பந்தயம் கட்டியவர்கள் தவிர, ஆனால், எப்போதுமே ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள்; அப்படிப்பட்ட ஒரு சிலரை பங்குச்சந்தையை வெறுப்பவர்கள் கூட வெறுக்கிறார்கள்.) எத்தனை பேர் பங்குச்சந்தையை மலையாக நம்புகிறார்கள் என்பதையும் எத்தனை பேர் அது நலம் பெறும் என விழைகிறார்கள் என்பதையும் பங்குச்சந்தை உணர்ந்தவுடன், அது இன்னும் கொஞ்சம் உயர்ந்தது. அதற்கு தன்னம்பிக்கை வளர்ந்து, சுயமதிப்பு பெருகுவதாக உணர்ந்தது. அந்த மாதிரி உணர்ந்ததால், அதன் தோற்றமும் அவ்வாறே ஆனது. அதனால், மேலும் பல மக்களும் அதை அவ்வாறே நடத்தினர். இதன் மூலம், அதற்கு அந்த எண்ணம் இன்னும் மேலோங்கியது.
இருந்தும், இன்னும் விழுந்திருந்தது. சும்மா அப்படியே விழுந்திருந்தது.
இப்பொழுது என்ன நேரம்? ரொம்ப தாமதமாகி விட்டது போல் தெரிகிறது.
என்ன விஷயமென்றால், பங்குச்சந்தை எப்படி இருக்குமோ அப்படித்தான் அது இருக்கும். அது என்னவென்றால், இதுதான்: சந்தை. சிலர் எப்பொழுதுமே அதைக் காதலிப்பார்கள்; சிலர் எப்பொழுதுமே அதை வெறுப்பார்கள். அது நல்லதா? அது கெட்டதா? அதை அறிந்திருப்பது அதனுடைய வேலை அல்ல. அது எதுவாக இருக்கிறதோ, அதாக இருப்பதே அதனுடைய வேலை.
வானத்தில் சூரியன் மெதுவாக இறங்கிப் போக போக, சிந்திப்பதை சற்றுநேரம் நிறுத்திவைத்து, வேலையை நிறுத்தி, ஓய்வெடுக்க பங்குச்சந்தை முடிவெடுத்தது.
அடுத்த நாள், பங்குச்சந்தை உயர்ந்தது!

Salvador Dali The Persistence of Memory

கதைக்கான குறிப்புகள்: இங்கிலிஷ் மூலம்: பி ஜே நொவாக். அவருடைய சமீபச் சிறுகதை மேலும் பலவகை எழுத்துகளின் தொகுப்பான, ‘ஓன் மோர் திங்’ என்ற புத்தகத்தில் உள்ள கதை இது – ‘த மார்க்கெட் வாஸ் டௌன்’. இந்தக் கதை எழுதிய நொவாக் குரலிலே, பாட்காஸ்ட் இங்குக் கிடைக்கிறது.
அமெரிக்க ஊடகங்களில் தொடர்ந்து கேட்கப்படும் பார்க்கப்படும் ஒரு சொற்றொடரின் அபத்தத்தைக் கிண்டல் செய்து நோவாக் எழுதிய கதைக் கட்டுரை இது.
சந்தை இன்று வீழ்ந்தது, சந்தை இன்று உற்சாகமாக இருந்தது, சந்தை இன்று பெரும் எழுச்சியோடு இருந்து திடீரென்று வீழ்ந்தது என்றெல்லாம் சகஜமாகப் பேசுவோருக்குச் சந்தை என்பது ஏதோ ஒரு தனிப் பிறவி போன்ற ஒரு பிரமையே இருக்கிறது.
இதே கூட்டம்தான் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறது. அதே முட்டாள்தனம் நிரம்பிய பேராசையால்தான் 90 சதவீத அமெரிக்கரை ஓட்டாண்டியாக்கித் தாம் மட்டும் சுகமாக வாழ முடியும் என்ற கனவில் இந்தக் கூட்டம் நடந்து கொண்டு அமெரிக்க அரசியலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சாக்கடையாகவும், வன்முறை நிறைந்ததாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. வன்முறை வெளிநாட்டு மக்கள் மீது செலுத்தப்படுவதால் அது வன்முறையாக உள்நிலத்தில் புலப்படாமல் இருப்பதும் இப்படி ஒரு கனவுநிலையால்தான்.
இதே போன்ற மூடத்தனம்தான் அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் ஓ, மஹாப் பெரிய நீதிபதிகளை, கார்ப்பொரேஷன்களும் குடிமக்கள் போன்றவையே, அவை தனிநபர்களுக்குரிய உரிமைகள் கொண்டவை, அவை தேர்தல்களுக்கு நிதி நன்கொடையை அளவின்றிக் கொடுத்து அரசியலைப் பாதிக்கலாம் என்று சலுகை வழங்கி விடத் தூண்டி இருக்கிறது.
இந்தக் கதை-கட்டுரை ஒரு பகடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.