சயனம் – அத்தியாயம் 12

பஞ்ச் பத்தான் ஊருக்குள் வந்து விட்டான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் வெறும் பத்தான் தானே ஏண்டா பஞ்ச் பத்தான்கறீங்க? கோவில் கல்லுக்கட்டில் அமர்ந்திருந்தவர்களுக்கு பஞ்ச் என்றால் தெரியாமல் கேட்டார்கள். என் வழி தனீ வழின்னு ரஜினிகாந்த் படையப்பாவுல சொல்லிட்டே திரியுவாருல்ல அது மாதிரி கைய நீட்டி எதாச்சிம் சொல்லிட்டே இருக்கான் மாமா! என்று இளவட்டம் ஒருவன் மாமனுக்கு சொல்லிக் கொண்டே போனான்.

பஞ்ச் பத்தானுக்கு ஆகக்கூடி வயசு இருபத்தி அஞ்சு தான் இருக்கும். ஐந்து வருடமாக ஆள் ஊரில் இல்லாமல் காணாமல் போயிருந்தான். அவன் வந்தது யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவன் அம்மா அல்லியம்மாவுக்கு போன உயிர் திரும்ப வந்து விட்டது போலிருந்தது. ஊருக்குள்ள போவாத சாமி! அவுங்க கண்டதீம் கடிதீம் சொல்லுவாங்க! அப்புறம் உனக்கு கோவம் வந்து இங்க வந்து சட்டி பானைய ஒடச்சுப்போடுவே! உன்னியும் என்னையும் உங்கொப்பன் உட்டுட்டு போயி பத்து வருசமாச்சு! எனக்கும் வயசாயிட்டு வருதுன்னு தெரியுமா? அஞ்சு வருசமா எங்க இருந்தே? என்ன பண்ணினேன்னு ஒன்னுஞ் சொல்லாட்டி போச்சாது சாமி. ஊருக்குள்ள போனீன்னா எதாச்சிம் வம்பை கொண்டுட்டு வந்துடறே! இப்படித்தான் அவன் மண்டையில் ஏறும்படி பேசிக்கொண்டேயிருந்தது.

அல்லியம்மாவுக்கு இவனைத்தவிர வேறு பிள்ளைகளும் இல்லை. இவனும் காணாமல் போன பிற்பாடு தேடுவதற்கு கூட ஆளில்லாமல் சிவனே என்று காட்டு வேலைக்கி போய் வந்து கொண்டிருந்தாள். இங்கிருந்து தினமும் வம்பு வழக்கை கொண்டு வருவதற்கு அவன் எங்கியோ தொலைவு போய் இருந்தால் சரியென விட்டு விட்டாள். மகன் வந்து விட்ட பூரிப்பில் கொடாப்பில் கமுத்தி வைத்திருந்த கோழியை காலையில் அவளாக குப்பை மேட்டுப்பக்கம் தூக்கிப்போய் கழுத்தில் இரண்டு கராத்தே வெட்டு குடுத்து தலை சாய்ந்ததும் படப்படவென பொங்குகளை பிடுங்க ஆரம்பித்து விட்டாள்.

ஒன்றுமில்லாத அவள் குப்பை மேட்டை கிளற அவள் பத்துப்பாஞ்சு வெடைக்கோழி வளர்த்தினாள். அவைகள் குஞ்சுகளோடு கொக்கரித்தபடி அவள் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கும். அவளிடம் கோழி பிடித்துப்போக கசாப்புக்கடைக்காரன் மாதம் ஒருமுறை வந்து போவான். கோழி வித்த காசை அவள் அரிசி மொடாவில் போட்டு வைத்திருந்தாள். ரேசன் அரிசியை அவள் தண்ணீரில் ஊறப்போட்டு அவைகளுக்கு தீனிக்கு வீசிக் கொண்டிருந்தாள். மகன் காணாமல் போன நாளிலிருந்து அவள் கறி தின்பதை மறந்திருந்தாள்.

சோறு வாயிற்கு போடும் போதே அவளுக்கு பத்தான் ஞாபகம் வந்துவிடும். இந்த நேரத்துக்கு தின்னானோ இல்லியோ என்று ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டுத்தான் சாப்பிடுவாள். பொங்கை பச்சென பொசித்துவிட்டு வந்தவள் வீட்டின் திண்ணையில் லுங்கியையே இழுத்து மேலுக்கும் போட்டு தூங்கும் பத்தானை பார்த்து உள்ளே போனாள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தான்.

பத்தான் ஊரில் இருந்த காலங்களில் தினமும் யாராவது ஒருவருடன் பிரச்சனைகளை வளர்த்திக் கொண்டிருந்தான். அவனிடம் நல்லவிதமாக பேசுபவர்கள் திடீரென போடா பொம்பளச்சட்டி! என்று சொல்லி விடுவது தான் பிரச்சனைக்கு காரணமாகி விடுகிறது. கையில் எது கிடைத்தாலும் தூக்கி அவர்களை நோக்கி வீசி எறிந்து விட்டு வந்து விடுவான். இப்படி அவனுக்கு ஊரில் பகையாளிகள் தான் அதிகம் இருந்தனர். அவனது நடையும் பேச்சும் அப்படி இருப்பதால் சின்னக் குழந்தைகள் கூட பொம்பளச்சட்டி என்று தான் கூப்பிடுவார்கள். நாளாக நாளாக பத்தான் என்ற பேர் காணாமல் போய் விட்டது!

தன் ஊர்க்காரர்களை ஐந்து வருடம் கழித்து யாரைப் பார்த்தாலும் அவனுக்கு அவர்களிடம் ஒரு நாள் முழுக்க பேச வேண்டுமென ஆசையாய் இருந்தது. பழைய ஞாபகம் வந்து விடுவதால் யாரைக்கண்டாலும் விரோதியாகவே பார்த்து ஒதுங்கி வந்தான். தன் அம்மாளை வீடு வந்து பார்த்தவன் ஓ!வென அழ ஆரம்பித்து விட்டான். திடீரென தன் வீடு வந்து அழுபவனை அடையாளம் தெரியாமல், த்தை தூரப்போயி அழு! என்று சொல்லி விட்டாள்.

அவளுக்கு மாலையில் இப்போதெல்லாம் கண் மங்கலாக தெரிவதால் வந்தது யாரென தெரியவும் இல்லை. ஆயாளுக்காக அவன் கையில் துணிமணி பொட்டணமும், தீம் பண்டங்களும் வாங்கி வந்திருந்தான். அவைகளை கொண்டு  திடு திடுவென போய் வீட்டினுள்  வைத்து விட்டு திண்ணையில் வந்தமர்ந்தவனை கண்டு கொண்டவள், ’எங்க சாமி போயிருந்தே ஆத்தாளை உட்டுட்டு இத்தினி நாளா?’ என்றாள். அழுது தீர்த்தவன் அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் திண்ணயிலேயே சாய்ந்து விட்டான்.

மகன் வந்த தெம்பில் அடுத்த நாள் அல்லியம்மா காட்டுவேலைக்குப் போகவில்லை. அவள் வீட்டில் கறிக்குழம்பு வாசம் வீசிற்று. பத்தான் வயிறு நிறைய சாப்பிட்டான். அப்போது தான் ஊருக்குள்ள வம்பு வழக்கு வெச்சிக்காத சாமி என்று அறிவு புகட்டிக் கொண்டிருந்தாள். இந்த பத்தான் தானா வம்புக்கு போவ மாட்டான், ஆனா  வந்த வம்பை விடவும் மாட்டான்! என்று ஆத்தாவிடம் முதல் பஞ்ச்சை வேறு குரலில் சொன்னான். ஆத்தா சேரி சாமி! அடி தின்னுட்டு மட்டும் ஊட்டுக்கு வந்துறாதே! இனியும் அழுதுட்டு வந்தீன்னா ஆத்தா வறக்கெணத்துல குதிச்சு மானத்துக்கு போயிருவேன்! என்றது. அவன் வட்டிலில் கையை கழுவிட்டு கடைசியாய் ஆத்தாளிடம் கேட்டான். ‘ஆமா தெனமும் நம்மூட்டுல நானில்லீன்னு கோழி போட்டு தின்னுட்டு இருந்தியா தாயே!’ ஆத்தா அவன் இன்னமும் முன்ன மாதிரிதான் என்று தெரிந்து கொண்டாள்.

கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து பத்தான் ஆத்தாவுக்கு பணம் எடுத்துக் கொடுத்தான். ஆத்தா நோட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு எத்தினி இருக்குதுடா? எங்க திருடுனே? என்றது. இவன் காலை தரையில் உதறினான். ஆத்தா மீண்டும் அதே மாதிரியே கேட்டது. எங்கடா உந்தீட்டு வந்தே? இவன் தரையில் சாணிப்பத்து பறக்க கால்களை தேய்த்தான். சேரி எங்க சம்பாத்ச்சுட்டு வந்தே? என்று கேட்டதும் தான் காலை உரசுவதை நிப்பாட்டினான் பத்தான்.

“எத்தினி காசுடா இதுல இருக்குது?” என்றாள்.

“பத்தாயிரமாத்தா! ஒரு காசு ரெண்டு காசில்ல பத்தாயிரம்! உனக்கு வேண்டாமுன்னா எங்கையில குடு நான் அதை வெச்சுட்டு மறுக்காவும் போறேன் இன்னொரு ஊருக்கு! அப்புறம் ஒரு அஞ்சி வருசம் கழிச்சி வர்றேன் இந்த கிறுக்குப்பயலுக ஊருக்கு! நீ எப்ப தாயே சாவே? உன்னிய பெதச்சுப்போட்டு மொட்டை போட்டுட்டு போயறலாம் ஒரேயடியா இந்த கிறுக்குப்பயலுக ஊரை உட்டுன்னு நெனச்சிட்டு வந்தேன். இங்க எப்பிடி தாயே இருக்கே இவனுக கிட்ட? ஆளுகளும் அவனுகளும்! எவனாச்சிக்கும் நல்ல புத்தி இருக்குதா? நான் பொச்சாட்டிட்டு நடந்தா இவனுகளுக்கு என்ன ஆத்தா? பொட்டையன்னு சொன்னானுக! எங்கே இனி சொல்லட்டும் பாக்கலாம். சொன்ன வாயை கிழிச்சிப்போட்டு தான் வருவேன். நான் பொட்டையன்னு இவனுக கண்டுட்டானுகளா? தாயே! இவனுக மோந்து பாத்தா கண்டானுக?  நீ சொல்லு தாயே! உனக்கு எல்லாச்ச்சீரையும் பண்டி சுடுகாட்டுல பொதச்சிப்போட்டு நானு இவனுகளுக்கு டாட்டா காட்டீட்டு போயுருவேன் தாயே!”

“எந்த ஊருக்குடா போனே? என்ன கருமத்தப் பண்டி சம்பாதிச்சே?”

“நானு எங்க போனா என்ன தாயே! இவனுக வாசமே படாத ஊருக்கு போயி நல்லா இருந்தேன். அங்க யாரும் என்னை பொட்டையன்னு சொல்லி மூக்கை சொறிஞ்சி உடுல!  வேல செஞ்சா காசு. உன்னியும் வந்து கூட்டிட்டு போவலாமுனு இருந்தேன் தாயே! நீ யாரு படா கேப்மாறி தான! என்னை பந்தக்கால்ல கட்டி வெச்சவ தான நீயி! பந்தக்கால்ல என்ன மசுத்துக்குடி நீ கட்டி வெச்சே என்னை?” பத்து வருசத்துக்கும் முன் நடந்த சம்பவம் ஞாபகம் வந்ததும் என்னமோ இப்போத் தான் கட்டி வெச்சு அவுத்து விட்டது போல கேட்டுக் கொண்டிருந்தான் பத்தான்.

“சரி இந்தக்காசை வெச்சு என்ன பண்றது நானு?”

“நாலு காசு சம்பாதிக்க துப்பில்லாம ஊரை சுத்துறான் எடுபட்ட காசின்னு என்னிய சொன்னில்ல! நீ சொன்ன நாலு காசி இது தாந்தாண்டி கெழவி! தின்னு அதை! ஒன்னுமே தெரியாதது மாதிரி காசை என்ன பண்றதுங்கறா கெல்ட்டுக் கொமுறி! பத்து நாளு தான் உனக்கு! அதுக்குள்ள நீயா செத்துப்போயிரு தாயே!  அந்த காசு உனக்கு தேரு கட்டி தூக்கிப்போவ! அதுல மிச்சம் புடிச்சு உன்னட கருமாதிச் செலவும் பண்டோணும். அதனால நீயா செத்துப்போயிரு! என்னையக் கொல்ல வெச்சிறாதே! நான் ஒரு தடவை சொன்னா பத்து வாட்டி சொன்னது மாதிரி! ஏன்னா எம்பட வழி குறுக்கு வழி!” என்று விரல் நீட்டினான்.

ஆத்தா இவனுக்கு மண்டைக்கோளாறு பிடித்து விட்டதாக நினைத்தாள். யாராச்சிம் வெளியூரில் மண்டையில் கட்டையால் அடித்ததிலிருந்து பயல் இப்படி ஆகி விட்டான் என்று நம்பினாள். அம்மாவாசை நாளில் ஊருக்குள்ளிருந்து ரெண்டு பேரை கூட்டு வந்து கோணப்புளியங்கா மரத்தில் வடக்கயிறு வைத்து சுத்திக் கட்டி வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். மாகாளி ஆத்தா திசை பார்த்து நீதான் இவனை காப்பாத்தோணும்! என்று வேண்டிக்கொண்டாள்.

“தாயே உங்கூட யாராச்சிம் சண்டை கட்டுனாங்களா? கெல்ட்டுத் தேவிடியான்னு யாராச்சிம் சொன்னாங்களா? இந்த ஊருப் பயலுக வாயிலதான் நல்ல வார்த்தைகளே வராதே! மாசக்கணக்கா காசு கட்டி கராத்தே கத்துட்டு வந்திருக்கன் தாயே! என்னை எவன் ஊருக்குள்ள இனி வம்பிழுத்தாலும் இப்படி நச்சுன்னு கத்தி மாதிரி கையை வெச்சுட்டு ஒரு வெட்டு அவன் தோள் சப்பையில! சிங்கிரிபாளையம் போயி கட்டு போட்டுட்டு தான் அவன் வரணும். தாயைக் காத்த தனயன்னு பேரு வாங்கத்தான் மறுக்காவும் இந்த ஊருக்கு வந்திருக்கேன். நீ பயப்படாமச் சொல்லு! யாரா இருந்தாலும் மதுப்பு மருவாதியெல்லாம் அவனுக்கு கெடையாது! ஒரு வெட்டு! சிங்கம் சிங்கிளா வந்திருக்குது தெரியுமா?”

“டேய் ஏண்டா இப்படி பித்துப் பிடிச்சவனாட்டம் பேசுறே காத்தால இருந்து?  தளாபாளையம் ஒரு நடை போயி  உனக்கு கவுறு கட்டீட்டு வந்துடலாம் நட! உனக்கு எதோ காத்து கருப்பு அடிச்சுருக்காட்ட இருக்கு”

“ஆரம்பிச்சுட்டியா! நிம்மதியா கெடந்தேன் டவுன்ல. அதனால தான் சொல்றேன் இன்னம் ரெண்டு நாளைக்கி  வேணாலும் கறிச்சாறு நக்கிக்க நாக்குக்கு ருசியா! அப்புறம் வறக்கெணத்துல குதிச்சுரு. காரியத்தை முடிச்சுட்டு கெளம்பிடறேன். வேற வழியெல்லாம் ஒன்னுமே கெடையாது” என்றவன் பேக்கிலிருந்து பேண்ட் சர்ட் எடுத்து அணிந்து கொண்டான். அவனையே வச்சகண் எடுக்காமல் அல்லியம்மா மகனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

Black_And_White_Men_Village_India_Boy_Looking_Alone

அவன் பேண்ட் சர்ட் போட்டு பார்த்ததில்லை அவள்.  இவனைப்போய் பொம்பளச்சட்டி என்று தெனமும் வாய் விட்டு கூத்து கட்டினார்களே ஊர்க்காரர்கள்? அவர்கள் பேசுவதை வைத்து ஒருவேளை இவன் பொம்பளச்சட்டி தான் என்று நம்பினோமே! என்று நினைத்தாள். அவனும் அப்படித்தான் ஊருக்குள் அப்போது பண்ணிக்கொண்டிருந்தான். ஊரில் பொம்பளைகளாய் பார்த்து அவர்களிடம் மட்டுமே கதை பேசி சிரித்துக் கொண்டல்லவா திரிந்தான்.

இரண்டு நாட்களில் வீடு வீடாய்ப்போய் எல்லார் நலமும் விசாரித்து தெரிந்து கொண்டு யாரிடமும் சண்டையில்லாமல் தான் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தான் பத்தான். அல்லியம்மாவுக்கு அது சந்தோசமாக இருந்தது. சில நேரம் சில நேரம் அவனிடம் புத்தி பிசகு இருப்பதாக நினைத்தாள். பொன்னுச்சாமிக் கவுண்டர் தோட்டத்திற்கு காய்கறி பிடுங்கிவரச் சென்றவளிடம்  பூவாத்தா தான் சொன்னாள்.

“த்தென்ன உம்பட பையன் நேத்து வந்தவன் சித்த நேரம் பேசிட்டு இருந்தான் இவத்திக்கி குக்கீட்டு. நாயம் நல்லா பேசுறானேன்னு சித்த கேட்டுட்டு இருந்தேன். எங்கியோ போயி கப்பல் பாத்தானாம் கிட்டக்க, ஏரோப்ளேன கிட்டக்க பாத்தானாம் கதை கதையா சொன்னான். ஆனா கடைசில ஊருக்கு வந்ததே உன்னை பெதச்சுட்டு போவத்தான் அப்படிங்கான்!” என்றதும்  தான், ‘அவன் அதுக்குத்தானாயா வந்திருக்கான். அப்புறம் அவனை கேக்க ஒருத்துரும் இல்லீல்லோ’ என்று சொல்லி வந்தாள். யாரிடம் பேசினாலும் கடைசியில் தாயை புதைத்து விட்டு போக வந்ததாகவே அவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் அவனுக்கு நல்லவிதமாய் முடியவில்லை. கோவில் சேந்து கிணற்றோரம் சின்னச்சாமி திண்டில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தான். பத்தான் பள்ளிக்கூடத்திலிருந்து சாலை வழியே வேலுச்சாமிக் கவுண்டர் தோட்டம் போக சென்று கொண்டிருந்தவனை அவன் தான் கூப்பிட்டு நிறுத்தினான்.

“யார்றா அது போறது பேண்ட்டு போட்டுட்டு?” என்றான் சின்னச்சாமி.

“ஏந் தெரியலியாக்கோ மாமனுக்கு! கண்ணென்ன பொடணியிலயா இருக்குது?” என்றான் பத்தான். இவனுக்கும் சினச்சாமிக்கும் ஆரம்பத்தில் தகராறு இருந்தது. தகராறுக்காரர்களிடம் இந்த மூன்று நாட்களில் பேச்சே வெச்சுக்கக் கூடாது என்று தான் பார்த்தாலும் ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தான்.

“யாரு மாப்பிள்ளையா?”

“ஆமா நீயென்ன பொண்ணா பெத்து வெச்சிருக்கிற மாப்பிள்ள போடறதுக்கு? உனக்கே இன்னுங் கலியாணத்தக் காணம். நீயே யாரு ஊட்டுல எவ கெடைப்பான்னு சுத்துறே”

“என்றா மாப்பிள்ள மாமங்கிட்ட இப்படி மருவாதி இல்லாமப் பேசுறே? எங்கியோ போயி பொழச்சு வந்திருக்கீன்னாங்க. செரி போனீன்னு கூப்பிட்டு ரெண்டு வார்த்தை பேசலாமுன்னா என்னமோ சண்டக்காரங்கிட்ட பேசுற மாதிரி நிக்கியே”

“யோவ் மாமா நீயி சண்டக்காரனில்லாம வேற யாரு? நீ என்னை இந்த ஊருக்காரனுகளாட்ட பட்டப்பேரு வெச்சு கூப்பிடுலீன்னு ஆத்தா முன்னால சத்தியம் பண்டு பாக்கலாம்”

“அதெல்லாம் அப்ப வெளையாட்டுக்கு பேசுனது மாப்பிள்ள! நீ இன்னுமா அதையே நெனச்சுட்டு பேசுறே?”

“சாவும் முட்டும் மறக்க மாட்டன் மாமா! வெளையாட்டு என்ன வெளையாட்டு எங்கூட உனக்கு? என் வயசென்ன உன் வயசென்ன?”

“அட மாப்பிள்ளைக்கு இத்தன கோவம் ஆவாதுடா சாமி. சேரி நீ இன்னும் மிந்தி மாதிரியே பொட்டையனாட்டத்தான் நடக்கே! நடைய மாத்துடா மொதல்ல!”

“டேய் ரோட்டுல போறவனை நிறுத்தி பொட்டையன்னு சொல்லாதடா அடிபடுவே”

“டேய் பேண்ட்டு போட்டுட்டா நீ பொட்டையனில்லியாடா? எங்க ஒருத்திய கைய வெச்சு அவ ஐய்யோ லொய்யோன்னு ஓடற மாதிரி பண்றா பாப்பம் பொட்டையா. இவனுக்குப்பாரு திமுரு. மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா பொண்ணு வெச்சிருக்கியாங்கான். பொட்டையனுக்கு எதுக்குடா பொண்ணு?” பீடியை சுண்டி எறிந்து விட்டு சின்னச்சாமி பத்தானைப் பார்த்தான். அவன் இவனை நோக்கி நிதானமாய் வந்தான். வந்தவன் இவனருகில் வந்து நின்று, ‘இன்னொருக்கா சொல்றா நீ ஆம்பளையா இருந்தா’ என்றான்.

“ஒருக்காச் சொன்னா போதுமாடா பொட்டை” என்றான் சின்னச்சாமி.

“போதுமுடா” என்ற பத்தான் அவன் வலது கையைப் பிடித்து ஒரு நொடியில் அவன் முதுகுக்கு கொண்டு வந்து முறுக்கினான். தோள் சப்பையில் வலி உயிர் போவது மாதிரி இருந்தது சின்னச்சாமிக்கு. இன்னொரு கையால் அவனைப் பிடிக்க முயற்சித்தான். அந்த சமயத்தில் இன்னொருமுறை திருகல் கொடுத்தான் பத்தான். வலி இவனுக்கு சுருக்கென்றது.

“உட்றா பொட்டையா கையை!”

“உட முடியாதுடா சின்னச்சாமி அப்படியே ஊருக்குள்ள நட. யாரு இருந்தாலும் இந்த லட்சணத்தை பாக்கட்டும் நடடா!” என்றவன் இன்னொரு முறை திருகலை அதிகப்படுத்தினான். ஐய்யோ! என்று வாய்விட்டே அலறினான் சின்னச்சாமி. வேலியில் போனதை வேட்டிக்குள் எடுத்து விட்ட கதையாய் போய்விட்டதாக நினைத்தான். கொஞ்சம் திமிறினாலும் பத்தான் அவன் கையை முறுக்கினான்.

“டேய் என்னையப்பத்தி தெரியாது உனக்கு. விட்டுட்டீன்னா தப்பிச்சே. இல்லீன்ன வக்காலி உன்னை பொலி போடாம உடமாட்டாண்டா!”

“பொலி போடலாம் நடடா! பள்ளிக்கூடத்துக்கு ஒரு ரவுண்டு உடு. பிள்ளைங்கெல்லாம் பாக்கட்டும்” என முறுக்கியபடி தள்ளிக்கொண்டு போனான். பள்ளியின் கேட்டை ஒட்டி புளியமர அடியில் குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். சிந்து டீச்சர் சின்னச்சாமியை ஓரிரு தடவை ஊரில் பார்த்திருக்கிறாள். ஒருமுறை இவளிடம் வந்து மணி என்ன? என்று கேட்டான். அப்போது அவன் பார்வை போன இடத்தைப் பார்த்தவள் வாட்ச் நின்னுபோச்சு! என்று சொல்லி வந்து விட்டாள். அவனுக்கு வேணும் என்று நினைத்தாள். ஆனால் அவன் கையை திருகியபடி பிடித்திருப்பவனை இன்றுதான் பார்க்கிறாள்.

குழந்தைகள் படிப்பதை விட்டு விட்டு வெளியே வேடிக்கை பார்ப்பதை கவனித்தவள் தான் அமர்ந்திருந்த சேரில் குச்சியால் ஒரு தட்டு தட்டினாள். குழந்தைகள் சிலருக்கு அவர்கள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பஞ்ச் பத்தானை தெரிந்திருந்தது. அல்லியம்மாவுக்கு ஒரு பையன் இருப்பதை தெரிந்து கொண்டார்கள். அவர்களில் இருவர் பத்மனாபனிடம் பேசி இருந்தார்கள். பத்தான் அவர்களுக்கு பாக்கெட்டிலிருந்து சாக்லெட் கொடுத்திருந்தான். பத்மனாபன் குழந்தைகளை பார்த்து கையை ஆட்டிக்கொண்டு அவனை ஊருக்குள் தள்ளிக் கொண்டு போனான். டீச்சர் இருப்பதால் குழந்தைகள் கையாட்டாமல் சும்மா இருந்தார்கள்.

ஊருக்குள் ஒரு வீதி விடாமல் அவனை ஓட்டி வந்தான் பத்தான். நான்கைந்து பேர், அட உடப்பா அவனை! என்று சொல்லிக் கொண்டு கோயில்புறத்திற்கு வந்தார்கள். அந்த நேரம்பார்த்து பொன்னுச்சாமிக் கவுண்டர் தன் டிவியெஸ்சில் எல்லைக்காட்டிலிருந்து வந்தவர் அவர்களருகே நிறுத்தினார்.

“என்ன பத்தான் என் பங்காளி கையை பிடிச்சு திருகீட்டு இருக்கே?” என்றவர் வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு வேட்டியை சரிப்படுத்தினார்.

“பங்காளி இவனை பொட்டயன்னு சொன்னேன். கையை பிடிச்சு திருகீட்டு விடுவனான்னு நிக்கான்”

“பத்தானை நீ ஏம் பங்காளி அப்படி சொன்னே? அவன் தான் ஊருல இருந்தப்பவே அப்படி சொன்னா கல்லெடுத்து எறிவான் தெரியாதா உனக்கு. பத்தா விட்டுடுடா அவன் பாவம்” என்றார்.

“இனிமேல் சொல்ல மாட்டன்னு சொல்லச் சொல்லுங்க! சொன்னதுக்கு மன்னிப்பு கேக்கச் சொல்லுங்க. நான் விட்டுடறேன்.” என்றான் பத்தான். அப்போது பள்ளியில் மணியடிக்க குழந்தைகள் ஓ! என்று சப்தமிட்டபடி பள்ளியை விட்டு ஓடி வந்தன. பொன்னுச்சாமிக் கவுண்டர் சின்னச்சாமியின் முகம் பார்த்தார். அவன் முகம் வலியின் வேதனையில் சுண்டிப்போயிருந்தது. இத்தனை வலியை தாங்கிக் கொண்டு இவன் ஏன் இப்படி இருக்கான்? என்றே யோசித்தார்.

கூடி நின்றிருந்தவர்களும் ஒப்புக்கு அவனை விடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் கவனித்தார். சின்னச்சாமி பத்தானிடம் வசமாய் மாட்டியிருக்கிறான் என்று தான் தெரிந்தது. சின்னச்சாமி மீது பகை வைத்திருந்தவர்கள் அதை ரசிப்பதை கண்டார். மீனாட்சி டீச்சர் தன் ஸ்கூட்டியை ஸ்லோ செய்து கவுண்டர் இருப்பதை பார்த்து விட்டு வேகமெடுத்துப் போய் விட்டது. சிந்து டீச்சர் தன் பாப்பாவோடு வந்தது கவுண்டர் நின்று கொண்டிருப்பதால் அதுவும் ஓரமாய் நின்று கொண்டது.

“சின்னச்சாமி பத்தான் கிட்ட இனிமேல் கூப்பிடலைன்னு சொல்லீட்டு விடுடா பிரச்சனைய! யாரு கிட்ட வம்பிழுக்கறதுன்னு வெவஸ்தையே இல்லியா உனக்கு? அவன் உனக்கு சோட்டாளா?”

“நான் மாமன்னு மரியாதையா தானுங்க பேசினேன்.”

“உட்றா பொட்டையா கையை!” என்று எரிச்சலாய் கத்தினான் சின்னச்சாமி. இது சரிப்படாது என்று கண்டு கொண்ட பத்தான் அவன் கைத்திருகலை அதிகப்படுத்தினான். விண் என்று வலி உச்சி மண்டைக்கு ஏறியது சின்னச்சாமிக்கு.

“இனிமேல் உன்னை அப்படி கூப்பிடலை உட்றா! மன்னிச்சுக்கோ!” என்றான். கையை பத்தான் விட்டதும் கோபமாய் சின்னச்சாமி காலை உயர்த்தி அவனை உதைக்க முற்பட்டான். பத்தான் உதைக்க வந்த காலை கையால் பிடித்து ஒரு இழு இழுத்து விட்டான். மண்ணில் போய் உருண்டான் சின்னச்சாமி. இனி இங்கு நிற்பது ஆகாது என்று கண்டு கொண்டவன் எழுந்ததும் வசனம் பேசிக்கொண்டே சென்றான் மேற்கே சாலையில். ‘உன்னிய உடமாட்டண்டா டேய்!’ என்று. ஆனால் தப்பித் தவறிக்கூட அவன் பொட்டையன் என்ற வார்த்தையை சொல்லவில்லை. கூட்டம் விசயம் அவ்வளவு தானென்று கலைந்தது.

பத்தான் வேலுச்சாமிக் கவுண்டர் வீடு செல்ல கிளம்பினவனை பொன்னுச்சாமிக் கவுண்டர் நிறுத்தினார். என்னுங்க? என்றவனிடம் இங்கே ரோட்டில் வைத்து பேசக்கூடாது என்று நினைத்தவர் வா! என சைகை செய்து கோவிலுக்கு பின்புறம் கூட்டிப்போனார். அவருக்கும் முன்னால் தான் கூட்டம் கலைந்த போது சென்ற சிந்து டீச்சர் தன் வீட்டு கதவை நீக்கிக் கொண்டிருந்தாள். அது வசதியான இடமென நினைத்தார் இவரும். பொன்னுச்சாமிக் கவுண்டர் தனக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்பதால் மரியாதையோடு வாங்க! என்றாள் அவளும். அவருக்கு பின்னால் வந்த பத்தானும் அவரோடு இணைந்து அவள் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஆசாரத்தில் இருந்த சேரில் அமர்ந்தவருக்கு சிந்து செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். பேருக்கு துளி உதட்டை நனைத்துக் கொண்டவர் பத்தானுக்கு செம்பை நீட்டினார். அவன் செம்பை வாங்கியதும் மடக் மடக்கென குடித்து காலி செய்து விட்டு சிந்து டீச்சரிடம் நீட்டினான்.

“என்னை எதுக்குங்க பொறவுக்கு வரச் சொன்னீங்க?”

“பத்தான் முன்ன வந்து நீ இங்க இருந்தப்ப எல்லாரும் கேலி செஞ்சாங்க நீயும் கல்லையும் மண்ணையும் வெச்சு விரட்டிட்டு இருந்தே. அது அல்லாருக்கும் வெளையாட்டாப் போச்சு. வெளையாட்டை நீயும் விளையாட்டா நெனைக்காம இருந்தே சரி. இப்ப யாருக்குமே தெரியாம போயிட்டு அஞ்சு வருசம் கழிச்சி வந்திருக்கே. பூவாயாகிட்ட பேசினப்ப ஒன்னு சொன்னியாம். வந்ததே உங்காயாவை குழியில தள்ளத்தான்னு. பெரிய பயலாகி இப்படி புத்தி கெட்டு பேசிட்டு இருக்குறது நல்லாவா இருக்குது? உங்கொம்மா நேத்து எங்கிட்ட என்னுன்னு சித்த அவங்கிட்ட கேளுங்கன்னு சொல்றா!”

“ஆமாங்க! நானு அதுக்குத்தான் வந்திருக்கேன்”

“என்ன குழியில தள்ளவா?”

“ஆமாங்க. பின்ன வயசானதை என்ன பண்ணச் சொல்றீங்க நீங்க? நான் வெளியூருல இருப்பேன். வந்து சேரக்கூட ரெண்டு நாளு ஆவிப்போயிரும். எங்கம்மாளுக்கு நான் ஒரே பிள்ளை. காரியத்தை முடிச்சுட்டு கெளம்பிட்டா இந்த ஊருக்குள்ள எனக்கு வேலை இல்லப்பாருங்க! அதனால தான் அவிங்க கிட்ட அப்படி சொன்னேன். இது ஒரு ஊரு மானங் கெட்ட ஊரு! பாருங்க வந்த ரெண்டாம் நாளு மாமங்காரன் பழைய மாதிரியே கேலி பண்றான். இந்தூருல எப்படிங்க இருக்கிறது? சொல்லுங்க பாப்பம்?”

“அதான் கையை முறுக்கி உட்டுட்டியே! எல்லாருக்கும் தகவல் தெரிஞ்சிடும். யாரும் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க!”

“அது எனக்கும் தெரியுமுங்க. அதுக்குத்தான் அவனை ஊர் முழுக்க முறுக்கி இழுத்துட்டு வந்தேன். இனி அவன் என்னைக் கண்டா பல்லை வெறுவீட்டே இருப்பான். சமயம் பார்த்துட்டு இருப்பான். நான் கருக்கடையோட ஊருல சுத்தணும். ரெண்டு நாளா யாரும் என்னை ஒரு தும்பமும் பண்டுலீங்க. இன்னிக்கி கெரகம் பாருங்க வாயை குடுக்குறான். என்னை இளிச்சவாயன்னு நெனச்சுத்தான சொல்லியிருப்பான்.”

“நீயா செத்துரு இல்லீன்னா கொன்னு போடுவன்னு உங்காயா கிட்ட சொன்னியா நீ?”

“எங்கம்மாட்ட தான சொன்னேன். உங்க கிட்டயா சொன்னேன்” என்ற போது சிந்து இருவருக்கும் டம்ளரில் டீ போட்டு கொண்டுவந்து கொடுத்தாள்.

“இவன் எங்க ஊரு தானம்மிணி! ஒரு அஞ்சு வருசமா வெளியூர்ல இருந்துட்டு இப்பத்தான் வந்திருக்கான். அப்ப பசங்க இவன் நடையப் பார்த்துட்டு கிண்டல் பேசியிருக்காங்க. பயல் ஊர்க்காரங்களையே மொத்தமா குத்தம் சொல்றான். இவங்காயா பாவம் அழுதுட்டு வந்துது. இப்ப ரவுசு பண்ணீட்டு இருந்தானா.. அதனால அவத்திக்கி வெச்சு எதும் சொல்லப்படாதுன்னு இங்க கூட்டி வந்தேன். நீ எதும் தப்பா நெனச்சிக்காதே” என்றார்.

“தப்பா நெனைக்கறதுக்கு எனத்த இருக்குதுங்க!” என்றவள் பத்தானை ஒருமுறை பார்த்தாள். சரியான ஆளை ஏன் எல்லாரும் அப்படி கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தாள்.. பத்தான் நெஞ்சை நிமிர்த்தி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“சரி பாத்து நடந்துக்க. இப்படி ஒருத்தன் ஒன்னு சொன்னான்னா அவனை கையை முறுக்கீட்டு ஊருக்குள்ள ரவுசு பண்ணீட்டு இருக்காதே. அவன் ஆகாவழின்னா நீ ஒதுங்கிப் போயிடு. இன்னம் நீ சின்னப்பையனா?”

“அது தெரிஞ்சு அவனுக நடந்துக்கோணுமுல்ல. என்னை யாராச்சிம் கிண்டல் பண்ணா அப்பவே அப்படித்தான் பண்டுவேன். இந்த பத்தான் தானா வம்புக்கு போக மாட்டான். வந்த வம்பை விடமாட்டான்” குரலை மாற்றிப் பேசினான். இவனிடம் பேசியதே வீண் என்று கவுண்டர் நடையைக் கட்டினார். அவர் போகையில் டீயை ஊதி ஊதி அலாசி குடித்துக் கொண்டிருந்தான் பத்தான்.

“தண்ணி இத்துனூண்டு ஊத்துங்க டீச்சர். நான் கெளாசை கழுவி குடுத்துடறேன்” என்றான்.

“இல்ல நாங் கழுவிக்கறேன் குடுங்க நீங்க” என்று கையை நீட்டினாள்.

“இல்லங்க டீச்சர் எனக்கு பழகிப்போச்சு” என்றவன் நேராக வீட்டினுள் சென்று பாத்ரூம் கதவு திறந்து மறைந்தான். இவனுக்கு நடை கொஞ்சம் வித்யாசமாய்த்தான் இருந்ததை அப்போது கவனித்தாள். போக பாத்ரூம் நோக்கி தினமும் போனவன் போல் போகிறானே! என்று நினைத்தாள். அவன் கழுவிய டம்ளரை கொண்டு வந்து நீட்டினான்.

“என்ன பாக்கீங்க டீச்சர். இது வரதன் அண்ணன் ஊடு. வரதன் இருந்தப்ப நாங்க இந்த வீட்டுலதான் தாயக்கரம் ஆடுவோம். அங்க பாருங்க ஆசாரத்து நடுவுல குழி குழியா இருக்கு.” என்று காட்டினான்.

“ஆமாங்க உங்கம்மா பேரு அல்லியம்மாவா? அவங்க தான் ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா கோழி கொண்டு வந்து எனக்கு குடுப்பாங்க. இங்கியே சுத்தம் பண்ணி அரிஞ்சு குடுத்துட்டு போவாங்க”

“அதெல்லாம் நல்லா பண்ணும் எங்கம்மா! உங்களுக்கு பண்ணா பரவாயில்ல நீங்க வெளியூரு. இந்தூருக்காரனுகளுக்கும் போயி ஊட்டுல வேலை செஞ்சு குடுக்கும். அதான் எனக்கு புடிக்காதுங்க. இந்தூருக்காரனுக மனுசனுகளே கிடையாது. எல்லாரும் திமுரு புடிச்சவனுக. எங்கம்மா சேலைய கட்டிக்கச் சொல்லுவானுக என்னை”

“உங்களுக்கு சேலை கட்டிக்க ஆசையா இருக்குமா?” என்றாள் சிந்து.

“இல்லீங்க டீச்சர். அப்படியெல்லாம் ஒரு நாளுகூட ஆசை எனக்கு இல்லை.”

“எப்பவும் பொம்பளைங்க கிட்ட பேசிட்டு இருப்பீங்களா?”

“இவனுக தான் என்னை எப்பவும் கிண்டல் பண்றானுகளே பின்ன யாருகிட்டத்தான் பேசிப்பழகுறது? எனக்கு நடை ஒன்னு தான் செரியில்லீங்க டீச்சர். அது பொம்பளை பிள்ளைங்க நடக்குற மாதிரி இருக்குதாம் இவனுகளுக்கு. அதனால கிண்டல் பண்றானுக. அதனால எனக்கு கோவம் வந்துடுது. இவனுக சங்காத்தமே வேண்டாமுன்னு தான் நான் ஊரை உட்டே ஓடிப் போயிட்டேன். வேலை கொஞ்சம் கம்மின்னு சரி அம்மாளை பாத்துட்டு போலாமுன்னு வந்தேன். இவனுக அப்பிடியே இருக்கானுக.”

“சின்னச்சாமி உங்களுக்கு மாமனா? அந்தாளு பேச்சு செரியில்ல”

“அவன் பொம்பளைன்னா வாயை தொறந்துட்டு போவான். கம்முன்னு வந்தேன். வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிட்டு போயிட்டான்.”

“ஒவ்வொருக்கா ராத்திரியில கதவு தட்டுற சத்தம் கேக்கும் எனக்கு. நான் பயந்துட்டு கம்முன்னு படுத்துக்குவேன்”

“அது அவன் பண்ற வேலை தான். கேட்டா நானெங்க அன்னாரத்துல அங்க வந்தேன் அப்படிம்பான். இவனால ஊருக்குள்ள ரெண்டு குடும்பம் கெட்டு கெடக்குதுங்க. வேலுச்சாமிக் கவுண்டர் குடும்பம் அப்படி கெடக்க இவன் தான் காரணம். ஊருல எல்லாருக்கும் தெரியும். நீங்க பயப்படாதீங்க டீச்சர். நான் வேணா உங்க வீட்டு திண்ணையில ராத்திரில காவலுக்கு படுத்துக்கறேன்”

“ஐய்யோ அதெல்லாம் வேண்டாமுங்க. நீங்க தான் உங்கொம்மாவை கொல்ல வந்திருக்கிறதா கவுண்டரு சொன்னாருங்களே அந்தக் காரியம் கெட்டுப்போகும்” என்றதும் சிரித்தான் பத்தான்.

“ஏனுங்க நீங்க அதை நெசமுன்னு நம்பீட்டீங்களா? நான் ஊருக்காரனுக வவுத்துல புளிய கரைக்க சொல்லி வெச்சது. எங்கம்மா இனி ஒரு ஊடு பாக்கி உடாம போயி சொல்லிப்போடும். என்னை பாத்தா பயப்படுவானுகன்னு புளுகி உட்டதுங்க. தமாசு” என்று சொல்லி சிரித்தான். திடீரென ஞாபகம் வந்தவன் போல கேட்டான் பத்தான்.

“ஆமா உங்க வீட்டுக்காரரு எங்க வேலையில இருக்காரு?”

“எங்க வீட்டுக்காரரோட எனக்கு சண்டை. அவரு எங்கிட்ட வரமாட்டாரு”

“அதான் உங்க கழுத்துல தாலி இல்லீங்களா? சரி நீங்க எந்த ஊரு? உங்க அப்பா அம்மாவெல்லாம் இருப்பாங்கல்ல. அவிங்கள கூட்டி வந்து கூட தொணைக்கி வச்சுக்கலாம்ல?”

“அவிங்க திங்களூருல தான் இருக்காங்க. நான் என் வீட்டுக்காரரை ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிட்டதால மூஞ்சில முழிக்க கூடாதுன்னுட்டாங்க. அதனால போக்குவரத்து இல்லைங்க”

“ஐய்யோ பாவம்! சின்ன வயசுல பாப்பாவை வெச்சுட்டு உங்களுக்கு சிரமம். ஆமா ஸ்கூட்டி வச்சிருக்கீங்க எங்கியும் போவறதே இல்லீங்களா?”

“எங்க போறது? முன்ன கரூர்ல டவுன்ல இருந்தோம். அப்ப வாங்கினது. இங்க சும்மா தான் நிக்கிது. ஆமா உங்களுக்கு ஸ்கூட்டி ஓட்டத்தெரியுமா?”

“தெரியுமுங்க டீச்சர். ஏங் கேக்கறீங்க?”

“எங்க பாப்பா மீன் சில்லியின்னா நல்லா சாப்பிடுவா. இங்க எல்லக்காட்டுல சில்லி போடறாங்களாமா! ஆனா பொழுது உழுந்து தான் வண்டிக்கடையில போடறாங்களாம். குடிச்சுட்டு வர்றவங்க தான் சாப்பிடறாங்களாம். நான் எப்படி போயி வாங்குறதுன்னு விட்டுட்டேன்.”

“நான் போயி வாங்கிட்டு வந்து தர்றனுங்க டீச்சர். கூச்சப்படாம எது வேணாலும் சொல்லுங்க. என்ன இந்த வண்டிய ஓட்டிட்டு போனா அவனுக்கு ஏத்த வண்டிய ஓட்டறாண்டான்னு மறுக்காவும் கிண்டல் பேசுவானுக”

“நீங்க தான் அவனுகளை கையை திருகி உட்டுருவீங்கள்ள! அப்புறமென்ன?” என்றாள் சிந்து.

“ஆமாங்க டீச்சர். ஆனா கவுண்டரு சொன்னாப்புல ஒதுங்கி போயிக்கலாம்னு யோசனைங்க. நானென்ன இன்னம் சின்னப்பையனா?”

“அப்படின்னா நானும் வர்றேன். அங்க மளிகை கடையில ஜாமான் வாங்கிட்டு நிக்கேன். நீங்க சில்லி வாங்கிட்டு வாங்க ரெண்டு பேரும் வந்துடலாம்” என்றாள் சிந்து.

“ஐய் அப்படின்னா சில்லி சாப்பிடறமா நாம இன்னிக்கி!” சிலேட்டில் பொம்மை வரைந்து கொண்டிருந்த பாப்பா சிலேட்டை கொண்டு போய் தன் ஸ்கூல் பேக்கில் வைத்து விட்டு வந்து அம்மாவோடு ஒட்டிக் கொண்டது.

“பாப்பா பாவமுங்க டீச்சர். உடு சாமி இன்னிக்கி நாம புல்லா சில்லி திங்கிறொம் இவ்ளோ” என்று கையை விரித்துக் காட்டினான் பத்தான்.

“அங்கிள் உங்க பேர் என்ன?” என்றது பாப்பா இவனிடம்.

“பத்மனாபன் என் பேரு. ஆனா பத்தான் பத்தான்னு தான் எங்கம்மாவே கூப்பிடும். உனக்கு பிடிச்சிருக்கா?”

“அங்கிள் உங்க பேரை இன்னிக்கி தான் கேக்குறேன் பத்மனாபன்னு. புதுசா இருக்குது. அம்மா கிளம்பும்மா போலாம்” என்றது பாப்பா.

“இப்பத்தான் அடுப்பே பத்த வச்சிருப்பான் சாமி. இன்னம் பொழுதே உழுகலை. அப்புறம் வண்டில லைட்டு போட்டுட்டு போவோம். ஏனுங்க டீச்சர் அந்த டிவி ஓடுமுங்களா? நான் டிவி பார்த்து அஞ்சு நாளாச்சி. சித்த போட்டு உடுங்களேன் பார்ப்போம். அது ஆறு மணிக்கு மேல போயிக்கலாம்” என்றான் பத்தான். சிந்து டிவி சுட்சை போட்டு விட்டாள். கே டிவியில் வடிவேலு தமாஸ் பண்ணிக் கொண்டிருந்தான். பாப்பா, ஐய் வடிவேலு! என்று டிவி முன் போய் உட்கார்ந்து கொண்டது.

இருட்டு விழுந்த நேரத்தில் ஸ்கூட்டி மீது கிடந்த குல்லாயை தூக்கி உதறி டீச்சர் மடித்து வைத்தாள். சாவியை கொண்டு வந்து போட்டு செல்ப் ஸ்டார்ட் செய்து பார்த்து ஸ்டார்ட் ஆனதும் அணைத்து இவனைப் பார்த்தாள். பத்தான் எழுந்து போய் ஸ்கூட்டியை ஆசாரத்தில் உருட்டியபடி வந்து வெளிக்கதவு படிகளில் பூ மாதிரி இறக்கி வாசலில் நிறுத்தினான். சிந்து பாப்பாவை அழைத்துக் கொண்டு கையில் ஒயர் கூடையுடன் வந்தாள். வீட்டை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதும் ‘ம் எடுங்க வண்டியை’ என்றாள்.

பாப்பா முன்னால் ஏறி நின்று கொண்டது. பத்தான் செல்ப் ஸ்டார்ட் செய்து வண்டியை ஒரு முறுக்கு முறுக்கினான். சிந்து கூடையுடன் வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டதும் வண்டியை கிளப்பினான் பத்தான். இரண்டு முக்கு திரும்பி ஊர் தாண்டியதும் சிந்து பத்தானின் வயிற்றுப்புறத்தில் வலது கையை போட்டு பிடித்துக் கொண்டாள்.

“நீங்க இருந்தங்காட்டி ஆச்சு இன்னிக்கி. நானெல்லாம் இருட்டுல வண்டியை எடுக்கவே மாட்டனுங்க” என்றாள் அவனிடம். பத்தானுக்கு எல்லக்காடு சீக்கிரம் வரக்கூடாதென மெதுவாக சென்றான்.

“வண்டிய என்னையாட்டவே ஸ்லோவா ஓட்டறீங்க நீங்க” என்றாள். இவன் ஒன்றும் சொல்லவில்லை. எல்லக்காட்டில் மளிகை கடையோரமாக வண்டியை நிறுத்தியவன் சைடு லாக் போட்டு பாப்பாவை கூட்டிப் போனான் தூக்கி கொண்டு. சிந்து ஜாமான் வாங்க மளிகை கடை சென்றாள். ஜாமான் வாங்கி முடித்து வண்டி அருகில் நின்றிருந்த சிந்து மேலும் அவர்கள் இருவரும் வர பத்து நிமிடம் காத்திருந்தாள். அவர்கள் கையில் மழைக்காகித பொட்டணம் இரண்டு இருந்தது. அப்போது தான் பத்தானிடம் சில்லிக்கு காசு கொடுக்காதது அவளுக்கு ஞாபகம் வந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அம்மா ரெண்டு பேரும் அங்கியே ஆளுக்கு ரெண்டு ப்ளேட் சில்லி சாப்பிட்டுட்டு தண்ணி குடிச்சுட்டு வந்தோம்” என்ற பாப்பா வந்ததும் ஸ்கூட்டியின் முன்னால் ஏறி நின்று கொண்டது.

“அம்மா அங்கிள் தினமும் என்னை கூட்டிட்டு வந்து சில்லி வாங்கித் தர்றேன்னு சொல்லிடுச்சு. அங்க ஒரு ஆள் சாப்பிட சாப்பிட பொத்துனு கீழ விழுந்து அப்பிடியே படுத்துக் கெடந்தான்.”

“பாத்தீங்களா இவ சொல்றதை. அதனால தான் நான் இங்க வர்றதே இல்லை” என்றவள் பின்னால் உட்கார்ந்து கொண்டதும் வண்டியை கிளப்பினான். அவள் பழையபடியே கையை வைத்துக் கொள்வாளா என்று பார்த்தான். இரண்டு வீடு தாண்டியதும் அவள் கையை இவன் வயிற்றுப்புறத்தில் பிடித்துக் கொண்டாள். பத்தானுக்கு அது என்னவோ செய்தது. ஆனாலும் அது ஆனந்தமாய் இருந்தது. அடுத்த நாள் சிந்துவை ஓட்டச் சொல்லி இவன் பின்னால் அமர்ந்து அவளின் வயிற்றைப் பிடித்துக் கொண்டான் பத்தான். அவள் கூச்சத்தில் கொஞ்சம் நெளிந்து வண்டியை ஒலட்டவே, ’கையை எடுத்துக்கட்டுங்களா டீச்சர்?’ என்றவன் அதை எடுத்துக் கொண்டதும் ’பரவாயில்ல பிடிச்சுக்கங்க’ என்றாள்.

“எனக்கு லைட் போட்டு ராத்திரியில வண்டி ஓட்ட வராது பயந்துக்குவேன். வர்றப்ப நீங்களே ஓட்டுங்க” என்றாள் சிந்து. இவன் மீண்டும் வயிற்றில் கை வைத்துக் கொண்டபோது வண்டி தடுமாறவில்லை. வண்டி நேற்று இவன் சென்ற வேகத்திலேயே தான் சென்றது. எதிர்க்கே வரும் டூ வீலருக்கு இவள் ரோட்டில் ரொம்ப ஓரம் கட்டினாள். ’லைட்டை டிம் பண்ணுங்க! அப்பத்தான் எதிர்க்க வர்றவங்களுக்கு கண்ணு கூசாது. பாருங்க அவன் டிம் பண்றான் கூசுதுன்னு’ என்றான். அவள் ’எப்படி டிம் பண்றது?’ என்று வண்டியை நிப்பாட்டினாள். பிறகு இவனே வண்டியை ஓட்டினான் எல்லக்காடு நோக்கி.

மூன்றாவது வாரத்தில் பத்தான் சிந்துவுக்கு சென்னிமலையில் தாலி கட்டினான். தோள் மீது கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தான். அவன் திருமணத்திற்கு பீட்டர் சாரும், குமரேசனும் மட்டுமே வந்திருந்தார்கள். அது அப்படித்தான் நடந்தது ஒரு வாரம் முன்பு. சிந்து வீட்டு திண்ணையில் இரவு கிடந்தவனை மழைத்துளி தான் எழுப்பியது. கோவில் ஆசாரத்தில் போய் படுத்து விடலாமென எழுந்தவனை கதவு நீக்கி சிந்து வீட்டினுள் அழைத்துக் கொண்டாள்.

அன்று இரவு சிந்து அவனை அப்படி செய்து விட்டாள். அவன் தன் குறியில் ரத்தம் வந்தது கண்டு அழுதான் செத்து விடுவேன் என! சிந்து பாப்பாவின் காயத்திற்கு வைத்திருந்த ஆயின்மெண்ட்டை தடவி நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். அப்புறம் பத்தான் திண்ணையில் படுப்பதில்லை.

ஊர்க்காரர்கள் பத்தானுக்கு வந்த வாழ்வை பாருய்யா! கவர்மெண்ட் சம்பளம் வாங்குற பொண்டாட்டி! என்று பேசினார்கள். நடையை மட்டும் சரிப்படுத்த முடியவில்லையே என வருந்திய பத்தான் சிந்துவின் ஸ்கூட்டியிலேயே ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் அம்மா எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை சிந்துவின் வீட்டுக்கு கோழி கொண்டு வந்து பொசித்து அரிந்து கொடுத்து சாப்பிட்டுப் போகிறது. கோழிக்கு காசு வாங்குவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.