கண்ணெதிரே

 

cheryl_rydbomமூலக் கதை:: எம் ஐ டி (மாஸச்சூஸெட்ஸ் பொறியியல் பல்கலைக் கழகத்திலிருந்து வெளி வரும் ’எம்ஐடி டெக்னாலஜி ரெவ்யு’’ என்ற பத்திரிகை அமைப்பு சிற்சில வருடங்களில் வெளியிடும் அறிவியல் கதைகளின் தொகுப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட கதை. Twelve Tomorrows என்ற தலைப்புள்ள புத்தகம், 2013 ஆம் வருடப் பதிப்பு.- கதைத் தலைப்பு ‘In Sight’

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், ஹண்ட்ஸ்வில் நகரில் வாழும் ஷெரில் ரிட்பம் (Cheryl Rydbom) பாதுகாப்பு ஏவுகணைகளுக்கான மென்பொருளை எழுதும் பொறியாளர். தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது அவர்களை வளர்க்கும் பொருட்டு எடுத்துக் கொண்ட விடுப்புக் காலத்தில் புனைகதைகள் எழுதத் துவங்கினார். 2011 ஆம் ஆண்டில் பிரசுரமான இவரின் முதல் சிறுகதையின் பெயர், “ த ஜென்னி.”

“அந்த துப்பாக்கிச் சூடு பற்றிய படங்களின் எண்ணிகையைக் கவனித்தாயா?” மரி பதட்டமாக இருக்கும் பொழுது வாய் ஓயாமல் பேசுவாள், எப்போதும் வேலையில் இறங்கும் முன் பதட்டமாகவே இருப்பாள். “அவசர உதவி எண் 9-1-1 அழைக்கப்பட்ட முதல் முப்பது நிமிடங்களில் இரண்டு டஜன் ஒளிப்படங்கள் காவல்துறைக்கு அனுப்பட்டன. அதில் மூன்று படங்கள் நன்றாக இருக்கவே காவல்துறை அந்த துப்புக்குப் பரிசுப்பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. காவல் துறைக்கு அடையாளச் சில்லுகளை யாருமறியாமல் வேவு பார்க்கும் அவசியம் இல்லாமல் போய் விட்டது.”

“நீயே அதை நம்ப மாட்டாய்.”  என் கண்கள் எதிரில் இருக்கும் கட்டிடத்தின் மீது பதிந்திருந்தன, பேச்சைக் கேட்பதில் எனக்கு அரைக் கவனம்தான். கட்டிடத்தின் மூன்றாம் மாடி ஜன்னல்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்தார்கள், ஆனால் என் கவனமெல்லாம் வாசலின் இரண்டு கண்ணாடிக் கதவுகள் மீதே இருந்தது. “துப்பாக்கிச் சூடு நடந்த நேர இடைவெளியில் அங்கிருந்த சில்லுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவே செய்தார்கள்.”.

கதவுகள் திறக்கின்றன, வழக்கமாக ஜிம்முக்கு வருபவர்களில் ஒருவர் வெளியே வருகிறார்.

“நாம் ஆரம்பிக்கலாம்”

நான் சிக்னல் விளக்கு வந்ததும் எதிர்சாரிக்கு நடக்கிறேன,. நகரின் புறப்பகுதி நோக்கி, வேலைக்குத் திரும்பிப் போகிற பெண்ணை எட்டிப் பிடித்து அவள் அருகாமையில் நடக்கிறேன்.  அவள் எப்போதும் ஜிம்மிலேயே குளித்து உடை மாற்றி வேலைக்குத் தயாராகி விடுவாள்.  அது எனக்கு அவ்வளவு வசதியாயில்லை, ஆனாலும் உயரக் குதிகால் செருப்பும், சூட் அணிந்தும் கூட என்னால் வேலையைச் சமாளிக்க முடியும்.

Identity_theft_Pieces_Women_Female_Bits_Pixels

நான் அவளிடமிருந்து ஐந்தடி தூரத்தில் இருந்தால் போதும் நடந்த விதத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி, அனேகமாக உடனடியான அடையாள சில்லுவின் நகலியை (clone) நான் தயாரிக்க முடியும். சில நொடிகள் கழிந்ததும், நான் அவளுடைய ஜிம் கூடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மஞ்சள் நிற வில்லைக் கண்ணாடியை மாட்டிக் கொள்கிறேன், அடையாள மறைப்புப் பட்டையைத் தயாராக்குகிறேன். அந்த கட்டிடத்தின் நுழைவாயிலைக் கடந்தவுடன் நான்தான் லெய்லா ப்ராட்லி.  லெய்லா ப்ராட்லி எப்போதும் மஞ்சள் நிற வெய்யில் தடுப்புக் கண்ணாடியை அணிவாள். கட்டடக் காவலர்கள் அப்படி ஒரு தனி விதமான அணிகலன் இல்லையென்றால் உற்றுக் கவனிக்க வாய்ப்பு உள்ளது.

“உன்னை சுற்றி சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை,” மரி சொல்கிறாள், இப்போது காதுக்குள் அவள் குரல் கேட்கிறது.

அண்மையில் அரசு குறைவான பராமரிப்பு வேண்டுகிற  கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி உள்ளது.  சாட்சியாகும் ஒளிப்படங்களுக்கு நல்ல வெகுமதி கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இப்போது ஒளிப்படமெடுக்கும் வசதி கொண்ட விலை மலிந்த பலவிதக் கருவிகள் குவிந்து கிடப்பதால், எல்லாப் புறமும் கண்கள் உள்ளன.

அந்தக் கண்ணாடி இரட்டைக் கதவின் வழியாக உள்ளே நுழையும் பொழுது அந்த அடையாள மாற்ற ஒட்டுப்பட்டையை மணிக்கட்டில் அழுத்தி குளோனைத் தட்டி விட்டேன். காவலாளிகள் ஒருவரும் என் மீது ஒரு பார்வை கூட செலுத்தவில்லை. நான் எலிவேட்டரில் ஜிம்மின் வாசலுக்கு வந்த உடன் அடையாள குளோன் சில்லுவை அணைத்து விட்டேன். இப்போது நான் அடையாளமற்று மறைந்து போனேன். மேல் மாடித் தளம் உயர்ந்த குதிகால் செருப்புடன் ஒரு துரித ஒட்டம்தான்.

என் வேலைக்கான கருவிகளை எத்தனையோ முறை பிரித்துச் சேர்த்து அடுக்கியிருக்கிறேனா, எல்லாம் தயாராக வைக்கச் சில நொடிகளே ஆகின்றன. ட்ரைப்பாட்,லேசர், ஆன்டென்னா, டெலஸ்கோப் மற்றும் கையடக்கக் கணிணி.

“ஹே ராபின். நான் உனக்கு அண்மையில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை அனுப்புகிறேன். அவன் வந்து கொண்டு இருக்கிறான்.”

நான் [அதிருப்தியுடன்] நாக்கால் சொட்டையிட்டேன். எங்கள் வலை வழிக் குரல் தொடர்பு, மறைக் குறியீடு(encrypt)  கொண்டதானாலும், தான் ஏன் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென்பது தெரியும் அளவு விவரமானவள்தான் மரி.

ஜாக் ப்ரின்ஸின் தெளிவற்ற ஒரு உருவப் படம் என் பார்வையின்  நடுவில்  தெரிய ஆரம்பிக்கிறது. என்னிடம் ஏற்கனவே இருக்கிற முகம் மட்டுமுள்ள படத்தில் இருந்து அவ்வளவு வித்தியாசமாய் தெரியவில்லை, ஆனால் இப்போது அவன் அவனது நேவி ஜாக்கெட்டை அணிந்து இருந்தான். நான் அந்தப் படத்தின் ஒளி புகாத் தன்மையின் அளவைச் சீர் செய்து, என் பார்வைத் திரையின் ஓரப்பகுதிக்கு ஒதுக்கினேன்.

“நான் இவனை பற்றி மேலும் படிக்க படிக்க, இவனைச் சிறிதும் பிடிக்காமல் போய்க் கொண்டிருக்கிறது,” என்றாள்.

எனக்கு ஒரு செய்தியினை மின்வெட்டு நேரத்தில் அனுப்பி வைத்தாள். அதில் சில வாக்கியங்களை தனியாக அடையாளம் காட்டியிருந்தாள். பெண்கள் காப்பகத்துக்காக ஒதுக்கப்பட இருந்த நிலத்தை வாங்குவதில்  இருந்த போட்டியில் ப்ரின்ஸ் எண்டர்ப்ரைஸஸ், ஏஞ்சல் விங்ஸ் நிறுவனத்தை வென்றிருக்கிறது. ப்ரின்ஸ் எண்டர்ப்ரைஸஸ் உரிமையாளரான திரு. ஜாக் ப்ரின்ஸ் பெண்கள் பாதுகாப்புச் சேவை நிறுவனம் நகரத்துக்கு வெளியே தமக்குத் தேவையான இடத்தை பார்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்குகிறார்.

நான் [திரையிலிருந்து] அந்தச் செய்தியை கண்ணைச் சிமிட்டி அகற்றினேன், அப்போது  “திமிர்பிடித்த நாய்ப்பயல்” என்று முணுமுணுத்தாள்..

அவனைக் கவனிப்பது எனக்கு வேலையாகக் கொடுக்கப்பட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், அவன் திமிர் பிடித்தவன் என்பதையும் தாண்டி மிக மோசமானவனாக இருக்க வேண்டும்.

நான் அவனது ஜாக்கெட்டை முதலில் பார்க்கிறேன், அதைப் பயன்படுத்தி என்னுடைய ஸ்கோப்பின் இலக்கைப் பிசகாமல் நிலைப்படுத்துகிறேன். அவன் ஒரு தெருவோரக் கடையில் நின்று தொலைபேசியின் உப கருவிகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். என்னிடம் இருந்த அமைப்புப் பாணிகளை அடையாளம் காணும் ஆப் மென்பொருள் அவன் முகத்தின் உருவுக்கும் புகைப்படத்துக்கும் மேல் பச்சை நிறக் கோடுகளால் வலைக் கம்பி போல வரைய ஆரம்பித்தது. அவன் வெளிப்புற  ஒலிப்பெருக்கிகளை எடுத்துக் கடையில் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது அவன் அடையாளத்தை உறுதி செய்தது. எனது மஞ்சள் கண்ணாடியினுள் பச்சைக் கோடுகள் இன்னும் அடர் பச்சையாகத் தெரிந்தன.

என் கண்களைச் சுருக்கிக் கொண்டு, நீண்ட மூச்சு ஒன்றை மெதுவாக வெளியே விட்டு விட்டு, ட்ரிகரை இழுத்தேன்.

நன்றாக குறிபார்க்கப்பட்ட ரேடியோ அலைகளின் கற்றை ஒன்று, மின்- படிப்பானின் குறுகிய தூரக் கற்றையை ஒத்த நீண்ட தூர ரேடியோ அலைகளாலான கற்றை அது, ப்ரின்சின் உடைகளை ஊடுருவிக் கொண்டு சென்றது. மைக்ரோ செகண்ட்கள் கழிகின்றன, ஒன்றுமே நடக்கவில்லை, பிறகு இரண்டு புள்ளிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படவும் எழுத்துகள் திரையில் ஓடுகின்றன.  இன்னும் மூன்று வினாடிகள் தேவைப்படுகின்றன, மீதமுள்ள பாதுகாப்பு முறை வரைவுகள் அழிக்கப்பட்டு அவனுடைய அடையாளச் சில்லுவின் உள்ளடக்கம் பிரதியெடுக்கப்படுகிறது.  ஒரு மெல்லிய மணியொலிக்குப் பின் நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். என்னிடம் க்ளோன் கிட்டி விட்டது. லெய்லா ப்ராட்லியிடம் நான் வெறும் பொது அடையாளத்தைதான் எடுத்தேன், ஆனால் ப்ரின்ஸிடம் எடுத்தது வெறும் அடையாளம் மட்டும் அல்ல, அவன் இது வரை அடையாள சில்லுவில் சேர்த்து வைத்த அத்தனை தகவல்களும் என்னிடம் வந்திருக்கின்றன.

“நாசமாப் போக! என்ன செய்தாய்?”  மரியின் குரல் கீறிச்சிட்டது.

நான் ஏற்கனவே என் கருவிகளைக் கலைத்து அடுக்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். “எல்லாம் முடிந்தது. போகிற நேரமாயிற்று.”

“அலார்ம் எல்லாபுறமும அடிக்கின்றது.  ப்ரின்ஸ் தொலைபேசியில் பேசுகிறான். பொலீஸிடம்தான் என்று எனக்கு நிச்சயம் தெரியும்.”

நான் கண்ணைக் கொட்டுகிறேன், தகவலைப் புரிந்து கொள்ள எனக்கு இரண்டு மில்லி வினாடிகள் ஆயின. “அவன் இதைப் பொறி வைத்துப் பிடித்திருக்கிறான்.”

“அது தெளிவு.” மரியின் பெரும் சலிப்பு, தொழில் திறமையின் நேர்த்தியாக மாறுகிறது. “அவனை மறுபடியும் தாக்கு, நான் உன்னை வெளியெ கொண்டு வந்துவிட முடியும்.”

இன்னொரு கண்சிமிட்டல், என் விரல்கள் மின்னல் வேகத்தில் கைக்கணினியில் நடமிட்டன. ”இந்த குளோனுக்கு சாவுக் கெடு இருக்கிறது.”

மரி அடுத்த சில நீண்ட நொடிகளுக்கு ஏதும் பேசாமல் இருக்கிறாள். என் விரல்கள் அந்த மவுனத்தை மறைத்தாலும், தூரத்தில் ஒலிக்கும் சைரன்களின் சத்தத்தை மறைக்கவில்லை.

மரி பலமாகச் செருமினாள். “இரண்டே நிமிடங்கள், நான் போய்விடுவேன்.”

“நல்லது.”

இப்படி ஒரு தாக்குதலுக்குப் பிறகு, வழக்கமாக இலக்கானவரின் நிதியைக் கவரவும், பணத்தை விநியோகம் செய்யவும் பல மணி நேரம் கிடைக்கும்: இப்போதோ எனக்குத் தொன்னூறு விநாடிகளே இருக்கின்றன.  நல்ல வேளை, நான் எழுதிய நிரல்கள் தயாராக இருந்தன. நான் ப்ரின்ஸின் பணத்தைத் தேடி எடுக்க ஆரம்பித்தேன். அந்தத் தேடல் நடக்கும் பொழுதே முன்னதாகப் பொறுக்கி வைத்த சேவை நிறுவனங்களின் பட்டியலை எடுத்து இரண்டாம் நிரலில் போட்டு, விநியோக சதவீதங்களைத் தீர்மானித்து நிரப்பிய பின்னர் என் ஸ்கோப்பிற்கு நகர்கிறேன்.

“சீக்கிரமா வா!” மரிக்கு பதட்டத்தில் மூச்சுத் திணறுகிற நிலை. “ப்ரின்ஸ் இன்னமும் போனில் பேசுகிறான், ஆனால் தெருவில் தேடுகிறான், ஒளிந்திருக்கிறாயா என்று எனக்குச் சொல்லு!”

“நான் மறைவில்தான் இருக்கிறேன்.” நான் ஆழ்ந்த மறைப்பில்தான் இருக்கிறேன், ஒரு எட்டு மாடிக் கட்டடத்தின் மேல் தளத்தில் என் வயிற்றின் மேல் நீட்டிப் படுத்திருக்கிறேன்.

நான் என் ஸ்கோப்பின் விழி பகுதியில்  உற்றுப் பார்த்தேன். எனது லேசரின் சக்தியைச் சரி செய்தேன். ப்ரின்ஸ் தெருவில் இருக்கும் சுற்றி எல்லா மக்களுடைய கவனத்தையும் ஈர்க்கும் விதம் ஆர்ப்பாட்டமாக ஏதோ செய்தபடியிருந்தான். காமிரா இருக்கும் பலவிதமான கருவிகளும் அவனது திசையில் திரும்பியிருக்கின்றன. நான் மூச்சை முழுதும் வெளியே விட்டு, ட்ரிகரை மறுபடி இழுத்தேன்.

ப்ரின்ஸ் பின்னோக்கி தடுமாறினான், அவன் கையை தீ சுட்டது போல் உதறினான்.

மரி அதைப் பார்த்துப் வெறி பிடித்தாற்போலக் கிளுகிளுத்தாள், அந்தச் சிரிப்பு ப்ரின்ஸின் அடையாளச் சில்லு முற்றிலும் அழிக்கப்பட்டதை எனக்கு உறுதி செய்வதாக எடுத்துக் கொண்டேன். நான் என் கருவிகளைக் கீழிறக்கி, இன்னமும் ஆழ்ந்த மறைவுக்குள் நகர்கிறேன்.

எனது முதல் நிரல் ஒடிக் கொண்டு இருக்கும் பொழுது, கைக் கணிணியை தவிர எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்தேன். எனக்கு கணிணியின் மணியொலி கேட்கிறது. கிட்டிய தொகையைப் பார்த்தால் மலைப்பாக இருந்தது.  நன்கு யோசிக்காமல் இவ்வளவு பெரும் தொகையை விநியோகிப்பது சரியில்லை என்று தோன்றியது.

” எனக்கு அவசரமாக ஒரு வங்கிக் கணக்கு வேண்டும்”

“நாசமாப் போறவனே!”

மரியின் நகங்கள் அவளது கைக்கணிணியில் தட்டுகின்றன. சில நொடிகளே ஆகியிருக்கும், ஆனால் அந்தத் தாமதம் தாங்க முடியாததாக இருந்தது. சைரன்கள் எனக்கு மிக நெருக்கத்திலேயே கேட்கத் துவங்கின.  நான் மரியை அவசரப்படுத்தவிருந்தேன், ஆனால் அவள் ஒரு வங்கி கணக்கின் எண்ணை அனுப்புகிறாள், நான் மொத்தப் பணத்தையும் அதற்கு மாற்றுகிறேன்.

நான் பறந்து ஐந்து மாடிகளில் இறங்குகிறேன். ஜிம் வாசலருகில் வந்த உடன் கால்சராயில் இருக்கும் கல்மண்ணைத் தட்டி விடுகிறேன், லெய்லா ப்ராட்லியின் அடையாள க்ளோனை அணிந்து அதைச் செயல்படுத்தச் சுண்டுகிறேன்.

“கவனத்தைத் திசை திருப்புவாயா?”

” அங்கே இருந்து முதல்லெ நீ வெளியே வரியா. என்னை நம்பு. யாரும் உன்னைப் பார்க்கப் போகிறதில்லை.” மரி படு உற்சாகமாக இருந்தாள், அது அரிதாகவே நல்லதாக இருக்கும், அத்தனை நுட்பமாகவும் இராது.

கண்ணைக் குருடாக்குமளவு மின்னிட்ட நீல விளக்குகள் மேலே சுழன்றபடி, பொலீஸ் கார்கள் தாறுமாறாகத் தெருவில் சிதறி நின்றன. அதிகாரிகள் ஸ்கேனரோடு கூட்டத்தின் ஊடாக நகர்ந்து போனபடி இருந்தார்கள். அந்த அலைப்பில், நான் இப்போது கட்டிடத்துக்கு வெளியே வந்தால் புகைப்படம் எடுப்பதை வாழ்க்கையாக கொண்ட மக்கள் கூட்டத்தின் கண்களில் இருந்து தப்பிக்கப் போதுமான களேபரமாக இருக்கலாம். ஆனால் மிகவும் சந்தேகப் பிராணியான என்னிடம் அந்த அளவுக்கு அந்த ‘இருக்கலாம்’ என்ற சொல் மீது நம்பிக்கையில்லை. தெருவில் எதிர் சாரியில் ஒரு கல்லூரி மாணவன், தன் மூக்குக் கண்ணாடி மீது விரலை வைத்தபடி மெல்லமாகத் தெருவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கிறேன்.

காதைத் துளைக்கும் கடூரமான இடிபாடுகளும், வெடிப்புகளும் பொங்குகின்றன. நான் வெளியே ஓடுகிறேன், மற்ற எல்லாரோடும் சேர்ந்து. சில பேர் கூச்சலிடுகிறார்கள், ஆனால் அந்த ஒலிகள் வெறும் ஒலிகள்தாம். ஏதும் கெட்டதாக இல்லை. அந்தச் சத்தம் வருகிற திக்கில் எல்லா லென்ஸ்களும் சுட்டுகின்றன, அந்தக் கல்லூரி மாணவனையும் சேர்த்துத்தான். ப்ரின்ஸைப் பார்க்கின்றன எல்லாம். என் உயரமான குதிகால் செருப்பு கூட்டத்தின் மீதாக எட்டிப் பார்க்க உதவுகின்றன, அங்கே துணைக் கருவிகள் விற்கும் கடையிலிருக்கும் வெளிப்புற ஒலிபெருக்கிகள் புகைந்து கொண்டிருக்கின்றன.

‘யாரோ கத்துகிறார்கள்,’ அசையாதே! அப்படியே நில்!’

எல்லா பொலீஸ் அதிகாரிகளின் ஆயுதங்களும் ப்ரின்ஸை நோக்கி நீட்டியபடி இருக்கின்றன.

ஒரு திறந்திருக்கிற பொலீஸ் காரினுள்ளிருந்து கரகரப்பான குரல், ஒரு பழங்கால ரேடியோ மூலம் பேசுகிறது. “இந்த நபரின் அடையாள சில்லு நிலையில்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்றது. இவரது அடையாளம் மாறி கொண்டே இருக்கின்றது.”.

இன்னோரு குரல் எழுந்தது ” அருகாமையில் இருக்கும் அடையாளச் சில்லுகளை இவரது சில்லு நகல் எடுக்கிறது. எனது ஸ்கேனார் போலி சில்லுகளைக் காட்டுகிறது”

ப்ரின்ஸ் தனது வழக்கறிஞர்கள் குறித்துக் கத்த ஆரம்பித்தான், நான் நகர ஆரம்பிக்கிறேன்.

“அருமையான கவனத் திருப்பல்”

மரி கெக்கலிக்கிறாள், “எது? விதவிதமான குழப்ப சப்தப் பட்டாசுகளா, இல்லை, சூழலில் இருக்கும் சில்லுகளைப் பிரதி செய்யும் க்ளோனிங் செயல்நிரலியை அவனது அடையாள சில்லுவில் மின்வெட்டு நேரத்தில் பொருத்தியதா”

இரண்டு குறுக்குத் தெருக்கள் தாண்டிப் போனதும், ஒரு உணவகத்துக்குள் சென்று அதன் நுழைவாயில் பகுதியில் என் லைலா ப்ராட்லி க்ளோனிங் பட்டையைப் பிய்த்தெடுக்கிறேன். “போய் வா, லெய்லா ப்ராட்லி,”.மஞ்சள் கண்ணாடியை மாற்றி  எனது கருப்பு கண்ணாடியை போட்டுக் கொண்டேன்.

“நாளையத் தலைப்பு செய்தி.” மரி சிரிப்பை அடக்க முடியாமல் பொங்கி வழிந்து கொண்டிருந்தாள்.

எனது பார்வையின் குறுக்கே சொற்கள் மின்னிக் கடக்கின்றன, “இளவரசனாக இருந்தவர் பிச்சைக்காரனானார்”

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.