ஒரிஜினல் உச்சரிப்பில்…

KalkiGroup

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் சமீபத்தில் சென்னையில் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு, பெரும் வரவேற்புடன் ஓடி முடிந்து வேறு சில நகரங்களை நோக்கிப்பயணித்து இருக்கிறது. தோட்டா தரணியின் மேடை அமைப்பும், தேர்ந்த நடிக நடிகையரின் உழைப்பும், மொத்தமாக குழுவினரின் ஈடுபாடும், அவர்கள் பட்ட சிரமமும் சேர்ந்து கல்கியின் புதினத்தை வெகு அழகாக மேடையேற்றி இருப்பதாக ரசிகர்களும் பல பத்திரிக்கைகளும் பரவசப்பட்டு இருக்கிறார்கள்.

ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் கல்கி இந்தத்தொடரை எழுதியபோது கதை மாந்தர்களான வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும், குந்தவையும், நந்தினியும் எப்படி இருந்திருப்பார்கள் என்று வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது மணியம் அவர்களின் கற்பனை வழியே நமக்கு கிடைத்த ஓவியங்கள். இன்னும் ஒரு படி மேலே போய் யோசித்தால், கதை நடைபெறுவது என்னவோ ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்தில். அப்போது ஆழ்வார்க்கடியானும் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் நந்தினியும் பேசிக்கொண்ட தமிழ் எப்படி ஒலித்திருக்கும், என்னென்ன வார்த்தைகளை பேச்சு வழக்கில் உபயோகித்திருப்பார்கள் என்பது எல்லாம் கல்கிக்கே வெளிச்சம். தமிழ் உச்சரிப்பை பொறுத்தவரை ராஜா ராணி காலத்து கதை என்றால் நமக்கு பொதுவாக ஞாபகத்துக்கு வருவது ராஜராஜசோழன் போன்ற படங்களில் நடிகர் திலகம் பேசும் வசனங்கள்தான். அவை அழுந்தந்திருத்தமாகவும் இலக்கண சுத்தமாகவும் இருப்பது வழக்கம். நவாப் ராஜமாணிக்கம், R.S.மனோகர் போன்றவர்களின் புகழ்பெற்ற நாடகக் குழுக்கள் சரித்திர நாடகங்களை மேடையேற்றிய போதும் அவர்கள் பேசிய பண்டைய தமிழும், வசன உச்சரிப்பும் அதே பாணியில்தான் இருந்தன. பத்து நூற்றாண்டுகளுக்கு முன் காலத்து தமிழை கேட்டால் நமக்கு அது தெளிவாகப்புரிவது மிகவும் சந்தேகம்தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் மொழியும் உச்சரிப்பும் மாறவில்லை என்று மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள் எனினும் கல்கி ஏதோ நமக்கு புரியும் தமிழில் எழுதிய கதையை நமக்கு தெரிந்த வரலாற்று பாணியில் பேசி நடித்து மேடை ஏற்றி மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

RRCholan

பத்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழை இப்போது மேடையேற்றுவது கடினம்தான். ஆனால் வெறும் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதி அப்போதே அரங்கேற்றிய போது அவருடைய வசனங்களை அந்தக்காலத்தில் எப்படி பேசி இருப்பார்கள்? இந்த யோசனையில் மூழ்கிய சிலர், இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் காலத்து உச்சரிப்புடன் இப்போதும் அவரது நாடகங்களை நடத்த முடியுமா என்று முயன்று கொண்டு இருக்கிறார்கள். நமக்கு சிவாஜி போல் ஆங்கில உலகிலும் சர் லாரன்ஸ் ஒலிவியே போன்ற புகழ் பெற்ற நடிகர்கள் வசனங்கள் பேசிய விதம் சரித்திர நாடகங்களில் எப்படி வசனங்கள் பேசப்பட வேண்டும் என்பதற்கு இன்றும் முன்மாதிரியாக இருந்து வருகிறது. 1948ல் வெளிவந்த ஹாம்லெட் படத்தில் To be or Not to be, that is the question என்கிற வசனத்தை நிறுத்தி நிதானமாக மிகவும் தெளிவான உச்சரிப்பில்தான் அவர் பேசி இருக்கிறார். கேட்டுப்பாருங்கள். ஆனால் ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்த வசனத்தை “Tuh beh oar nat tuh beh” என்பதுபோல்தான் பேசி இருப்பார்கள், அதுவும் வெகு வேகமாக என்று இப்போது ஊகித்து இருக்கிறார்கள். அப்படியானால் ஹாம்லெட், மெக்பெத், ரோமியோ, ஜூலியட் எல்லோரும் ஷேக்ஸ்பியர் காலத்திலேயே மேடை ஏறி உலவியபோது எப்படிப் பேசி இருப்பார்கள்? வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிரிஸ்டல் இந்த ஆராய்ச்சியில் நிறைய ஈடுபாடுள்ளவர். பிரிட்டிஷ் நூலகம் இவரது உதவியுடன் நடிகர்களை அந்தக்காலத்து உச்சரிப்பில் ஷேக்ஸ்பியரின் பல முக்கியமான வசனங்கள் கவிதைகள் போன்றவற்றை பேசச்செய்து, சுமார் 75 நிமிடங்கள் ஓடும் ஒரு ஒலிப்பதிவாக வெளியிட்டிருக்கிறது. அவரது மகன் பென் கிரிஸ்டல் ஒரு நாடக நடிகராகவும் இருப்பது வசதியாகப்போய் இருவரும் இணைந்து லண்டனில் உள்ள க்ளோப் தியேட்டரில் கடந்த பத்து வருடங்களாய் ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஒரிஜினல் உச்சரிப்பில் நடத்த உதவி வருகிறார்கள். உச்சரிப்பு என்பது காலப்போக்கில் மாறுவது சகஜம், அதில் தவறொன்றும் இல்லை என்பதால், ஒரிஜினல் என்பதை இந்தக்கட்டுரையைப் பொறுத்தவரை அசல் என்று புரிந்து கொள்வதற்கு பதிலாக மூலமுதலான என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் ஆங்கில உச்சரிப்பு எப்படி இருந்தது என்று துப்புத்துலக்க மூன்று உத்திகளை கையாளுகிறார்கள். முதல் உத்தி ஷேக்ஸ்பியரின் 154 சாநெட் (Sonnet) கவிதைகளை ஆராய்தல். சமகால உச்சரிப்பில் இவற்றை படிக்கும்போது முக்கால்வாசி கவிதைகளில் எதுகை மோனை நயங்கள் ஒன்றையும் காணமுடிவதில்லை. எனவே இசைந்து ஒலிக்க வேண்டிய இரண்டு சொற்களில் ஒன்றை தற்காலத்தில் மாற்றி உச்சரிக்கிறோம் என்று அறிய முடிகிறது. உதாரணமாக அவருடைய 116வது கவிதையில் கடைசி இரண்டு வரிகளில் வரும் இறுதிச்சொற்களான proved, loved இரண்டும் உச்சரிப்பில் இசைய வேண்டியவை. இக்கால உச்சரிப்பில் அவை இசையாததால், இரண்டில் ஒன்றை நாம் உச்சரிப்பது ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்து வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்துகொண்டு, வேறு எங்கெல்லாம் இந்த சொற்கள் காணப்படுகின்றன என்று தேடிப்பிடித்து, பழைய உச்சரிப்பில் proved என்பது தற்போதைய ப்ரூவ்டு என்பதுபோல் இல்லாமல் சுருக்கப்பட்டு உச்சரிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, லவ்ட் என்பதற்கு இணையாக பிரவ்ட் என்று மாற்றி நடிகர்களுக்கு சொல்லித்தந்து இருக்கிறார்கள்.

இரண்டாவது உத்தி சொற்களின் எழுத்தாக்கத்தை (Spelling) அலசுதல். ரோமியோ & ஜூலியட்டில் ஃபிலிம் (Film) என்பதை philome என்று எழுதி இருப்பதையும், ஃபிலிம் என்ற வார்த்தையை ஐயர்லாந்தின் சில பகுதிகளில் இன்றும் பி-லோம் என்ற ஈரசைச்சொல்லாக உச்சரிப்பதையும் கவனித்து அப்படியே நடிகர்களின் உச்சரிப்பை மாற்றி இருக்கிறார்கள்.

மூன்றாவது உத்தி அந்தக்காலத்திலேயே சில நூல்களில் வார்த்தைகளை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று அதிர்ஷ்டவசமாக எழுதி வைக்கப்பட்டு இருப்பதை தேடிப்பிடித்து படிப்பது. உதாரணமாக பேராசிரியர் கிரிஸ்டல் பிடித்த ஒரு பழைய புத்தகத்தில் R என்ற எழுத்தை நாய் உறுமுவது போல உச்சரிக்க வேண்டும் என்று போட்டிருப்பது உபயோகமான ஒரு துப்பு. இப்படி பலவிதங்களில் நோண்டி தேடி ஆராய்ந்து சான்றாதரங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ஷேக்ஸ்பியர் கால உச்சரிப்பை ஏறக்குறைய 95 சதவீதம் சரியாக பிடித்து விட்டார்களாம்! இந்த ஒரிஜினல் உச்சரிப்பை விடாமல் பயின்றுவரும் நடிகர்கள் Haste Makes Waste என்பதை “ஹாஸ்ட் மாக்ஸ் வாஸ்ட்” என்று உச்சரிக்கிறார்கள்!

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு! ரசிகர்கள் சில உச்சரிப்பு மாற்றங்களுக்கு கொஞ்சம் காது கொடுத்து உன்னிப்பாக கேட்டு பழக வேண்டி இருந்தாலும், வெகு நாட்களாக விளங்காமல் இருந்த பல ஷேக்ஸ்பியர் விகடங்களும், மோனை நயங்களும் திடீரென பலருக்கு புரிய ஆரம்பித்தன! இந்த முறையில் பேசுவது வேகத்தையும் சற்று அதிகரிப்பதால், ரோமியோ & ஜூலியட் நாடகம் சுமார் பத்து நிமிடங்கள் சீக்கிரமாக முடிந்து விடுவது இன்னொரு ஸ்வாரஸ்யமான பக்கவிளைவு! வரவேற்பு இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பதால், சாதாரண உச்சரிப்பு மற்றும் பழைய உச்சரிப்பு என இரு விதங்களிலும் நாடகங்களை தொடர்ந்து பல இடங்களில் நடத்தி வருகிறார்கள்.

உலகில் வாழும் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு ஒழுங்காக குடிதண்ணீர் கூட கிடைக்காதபோது இந்தமாதிரி ஆராய்ச்சி எல்லாம் தேவைதானா என்று ஒரு கேள்வி எழலாம். ஆனால் இந்த பழைய உச்சரிப்பில் நடத்தும்போது, சாதாரணமாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் உயர்தர வர்கத்து மக்களின் பொழுதுப்போக்கு என்று வெறுத்து ஒதுக்கும் பலர் வியந்து வந்து “அட, அங்கங்கே நம்மளைப்போல் பேசறாங்களே!”, என்று பார்க்கிறார்கள். எப்போதும் ஷேக்ஸ்பியர் நாடகங்களை பார்க்கும் ரசிகர்களும், அவற்றில் நடிக்கும் நடிகர்களும் ஒரிஜினல் உச்சரிப்புடன் நாடகங்கள் நடத்தப்படும்போது, கழுத்துக்கு மேலிருந்து தலையை உயர்த்திக்கொண்டு பேசுவதுபோல் இல்லாமல் இதயத்தில் இருந்து நடிகர்கள் பேசுவது போல உணர்கிறார்கள். தவிரவும், நடிகர்-ரசிகர் இடையேயான தொடர்பு இன்னும் நெருக்கமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். நல்ல கலைகள் நாலு பேருக்கு பதில் நாற்பது பேரை போய் சேர்ந்தால் நல்லதுதானே? பொன்னியின் செல்வன் நாடகத்தை சோழர் கால உச்சரிப்பில் நடத்தும் காலம் விரைவில் வரட்டும். தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்கக்காத்திருப்பார்கள்.

படங்கள்: நன்றி விக்கிபீடியா, தேமதுரம், மற்றும் பல வலைதளங்கள்.

oOo