இந்தப் பக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

India Kashmir Violence

இது நடந்து முப்பது ஆண்டுகள் நிறையப் போகிறது. மனைவி ஆபீசுக்கு போன் செய்து இருந்தாள், அதிசயமாக.

செய்தி தெரியுமா உங்களுக்கு? பிரதம மந்திரியைக் கொலை செய்து விட்டார்களாம். ரேடியோவில் செய்தி வந்தது. அக்கம் பக்கத்திலும் பேசிக்கொள்கிறார்கள். டிவியைப்  போட்டுப் பார்த்தேன், அதில் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தைகள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மூடச் சொல்லி உத்தரவு வந்ததாம். அஸ்நாவைப் பாவம் கல்சியே தன் காரில் கொண்டு வந்து விட்டாள். ரிக்க்ஷாவை டோரண்டாவுக்கு அனுப்பிவிட்டாள். அங்குதானே 5, 6 பெண்கள் இருக்கிறார்கள்? ஹினுவில் அஸ்னா மட்டும்தானே. ஆகவே தானே காரை எடுத்துக்கொண்டு வந்து விடடாள். டீ குடித்துவிட்டுப் போங்களேன் என்றேன், வேண்டாம் அவசரமாகத் திரும்பவேண்டும் என்று கூறிக் கிளம்பி விட்டாள். பாவம், அவள் முகமே சரியில்லை. நீங்கள் ஜாக்கிரதை.

எனக்கு நம்பவே முடிய வில்லை. என்னமோ செய்தது. வேலை ஓடவில்லை. அடுத்த அறைக்குள் சென்று நண்பர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். அங்கேயும் அதே பேச்சுத்தான். காட்டுத் தீயென செய்தி பரவியிருக்கிறது. நான் என் அறையில் கம்ப்யுட்டரில் வேலை செய்து கொண்டிருந்ததில் மும்முரமாக இருந்ததால் தெரியவில்லை. பிரதமரின் காப்பாளர்களில் ஒருவனே சுட்டு விட்டானாம். என்ன கொடுமை.

பேசிக்கொண்டே கான்டீனுக்குச் சென்றோம், டீ குடிக்க. அங்குதான் அந்த நம்பமுடியாத காட்சியைக் காண முடிந்தது. ஜகதீஷ் சிங் தாட்  பூட் என்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தான். கான்டீன் பாயிடம், மிட்டு! நீ இன்றைக்கு எல்லாருக்கும் லட்டு வழங்கு, என் கணக்கில்! என்று சொல்லி விட்டு, அங்கு இருந்தவர்களை நோக்கி, இன்று எல்லாருக்கும் லட்டு ப்ரீ,  என்றான்.

எல்லாருக்குமே அது துவர்ப்பாக இருந்தது என்று உணர்ந்தேன். யாரும் அவன் அழைப்பை ஏற்பதாக இல்லை. உண்மையில் மிட்டு தெரிவித்தது என்னவென்றால் அன்றைக்கு லட்டு பண்ணியதைப் பண்ணியபடியே திருப்பி எடுத்துச் செல்ல வேண்டி இருந்ததாம். ஒரு லட்டு கூட குறையவில்லையாம்.

அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகள். உதவி என்று வரும்பொழுது அவர்களைப்போல் முன் வருபவர்கள் யாரும் இருக்க முடியாது. சமுக சேவை, ஒன்றாக இருத்தல் (அவர்களது சமூகச் சமையல் அறை பார்க்கவேண்டிய ஒரு காட்சி), விருந்தோம்பலிலும் அவர்களை மீற முடியாது. ஆனால் அவர்களது மதத்தை மட்டும் யாரும் ஒரு சூசகமாகக் கூட எள்ள விடமாட்டார்கள். அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எள்ளி நகைக்க விடுவார்கள். 12 மணி என்று கூப்பிடுவதையோ, அதை வைத்து ஜோக் அடிப்பதையோ – ம்ஹூம், ஒன்றும் கவலைப்பட மாட்டார்கள். மாறாக தங்களும் ரெண்டு ஜோக் கூடச் சொல்வார்கள். ஆனால் மதத்தைப் பற்றி மட்டும் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒரு நோன்பாகவே அவர்கள் அதைச் செய்வது போல இருக்கும்.

பல நேரங்களில் அவர்கள் மூர்க்கர்களாக இருப்பதை உணரலாம். முதலாவதாக மதத்தைப் பற்றி. அடுத்ததாக எதாவது முடிவுக்கு வந்துவிட்டால் அவர்களை மாற்றுவது கடினம் மட்டுமல்ல, முடியாத காரியம் கூட. அப்பொழுதெல்லாம் அவர்கள் வாதத்திற்கோ, அறிவு சார்ந்த தர்க்கத்திற்கோ,  அல்லது வேறு எந்த விதமான இறைஞ்சல்களுக்கோ செவி சாய்க்க மாட்டார்கள். பேலாமின் கழுதையைப்போல முரண்டு பிடித்து நிற்பார்கள்.

ஜகதீஷ் சிங் ரொம்ப பாப்புலர்; ஆபீசிலும் சரி. காலனியிலும் சரி. ஆபிசில் பெர்சொனல் பிரிவில் எதாவது வேலை ஆக வேண்டுமா? அவனிடம் சொன்னால் போதும். பைனான்சில் நீங்கள் போட்ட லோன் அப்ளிகேஷன் எங்கு முடங்கி இருக்கிறது என்று பார்த்து, அதைத் ‘தள்ள’ வேண்டுமா? அவன் ரெடி. தவிர, ஆபிஸ் கல்சுரல் ப்ரோக்ராமை முன் நின்று நடத்துவான். நன்றாகப் பாடுவான்.  செமினார்கள் வந்து விட்டாலோ கேட்கவே வேண்டாம்.   நைட் டின்னரில் 2/3 பெக் போட்டுவிட்டு , கஜல் பாடினால் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

 டவுன்ஷிப்பிலும் பெண்களை மஸ்கா பண்ணுவதில் யமன். பாபிஜி, பாபிஜி என்று கூப்பிட்டுக் கொண்டே சமையல் அறைவரை நேராக நுழைந்து விடுவான். திடீரென்று காஸ் தீர்ந்து விட்டதா? அங்கே இங்கே சொல்லி ஒரு மணி  நேரத்திற்குள் காஸ் வீட்டிற்கு வந்து விடும். வேலைக்காரி   2,3 நாட்களாக வரவில்லையா, திடீரென்று ஒரு ஆதிவாசிப் பெண்ணைப்  பிடித்துக்கொண்டு வந்து நிற்பான்.

நான் அவனிடம் அதிகம் வைத்துக்  கொள்வதில்லை. அவனுக்கு என்னைக் கண்டால் உள்ளூர ஒரு பயம். நான் ஒரு உதவி கூட அவனிடம் பெற்றதில்லை.  நெருங்குவதற்கு மிகவும் முயற்சி செய்து பார்த்தான், ஆனால் அண்ட முடியவில்லை. அப்புறம் விட்டு விட்டான்.  நமஸ்தே ஜி என்று பார்க்கும்போது விஷ் பண்ணுவதுடன் சரி.

அதற்குக் காரணம் இருந்தது. இந்த வைரத்திற்கு இன்னொரு முகமும் இருந்தது.  அதாவது பெண் சபலம்.  பார்க்க  சுமாராக இருக்கும் ஒரு பெண்ணையும் விட்டு வைக்க மாட்டான். வீட்டில் ஆண்பிள்ளை இல்லை, டூரில் சென்று இருக்கிறான்  என்று தெரிந்தும் நுழைவதற்குத் தயங்க மாட்டான். எனக்கு என்னவோ சந்தேகம் அவனுக்கு எல்லோரின் டூர் ப்ரோகிராமும் தெரிந்து இருக்கும் என்று. இதையெல்லாம் நான் வம்பின் அடிப்படையிலோ, வதந்தியின் அடிப்படையிலோ சொல்லவில்லை. என் உயிர் நண்பன் ஆஸ்பத்திரியில் போராடிக்கொண்டிருந்தபோது இவன் அவன் மனைவியுடன் சரசமாடிக்கொண்டிருந்ததை நேரில் பார்த்தேன்.

மறு நாள் நாடே அமர்க்களமாயிற்று. பால் வாங்கப் போகும்போது ஆரம்பித்தன   செய்திகளும், வதந்திகளும் போர்வை போர்த்திக்கொண்டு. பிரதமரின் தேர்ந்து எடுக்கப்பட்ட அந்தரங்கப்  பாதுகாப்பாளரே தன் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் பின் புதிதாகச் சேர்ந்து இருந்த மற்றொருவர் 16 குண்டுகளைத்  தன் விசைத்துப்பாக்கியால் அவர்  உடல் மீது இறக்கியதாகவும் தகவல்கள் வந்தன. எப்படி செய்தியை அரசு பத்து – பன்னிரண்டு மணி நேரம் மறைத்து வைத்திருந்தார்கள் என்பதும் தெரிய வந்தது. (தொலைக்கட்சியில் இரவுநேரச் செய்தியின் போதுதான்  சல்மா முதல் முறையாக அறிவித்தார்)

  வேலையிடத்திலும் கும்பல் கும்பலாக நின்று பேசினர். உயர் அதிகாரி ஒருவர் தலைநகரிலிருந்து  திரும்பி வந்திருந்தார் விமானம் மூலம். அவர் எப்படி தலைநகர் முழுவதும் கலவரம் வெடித்திருக்கிறது என்றும், தப்பித்தோம்  பிழைத்தோம் என்று விமான நிலையம் வருவதற்குள் இரண்டாவது உயிர் வந்ததுபோல இருந்தது என்றும், தான் வந்ததுதான் கடைசி பிளைட் என்றும் விவரித்தார். அவர் விமானத்தில் இருந்து பல செய்தித்தாள்களை சுருட்டிக்கொண்டு வந்து இருந்தார். அதனால் பல செய்திகள் தெளிவாயின.

பகல் உணவுக்கு யாரும் போகவில்லை. கண்ட்டீனில் முன்பே பதிவு செய்தவர்களுக்கு  மட்டுமே உணவு இருந்ததால்,  ராம்தேவை விட்டு அருகில் இருந்த டீக்கடையிலிருந்து சிங்கடாவும் டீயும் தருவித்து உண்டோம். அதற்குள் லேப் டெக்னிஷியன் ஒருவன் அங்கு இருந்த மானிட்டரை கோட் ஹாங்கரின் உதவியால் ( குளிர் காலத்தில் கோட்டை மாட்டுவதற்கென்று சிலர் தங்கள் அறையில் வைத்திருப்பது வழக்கம்) தற்காலிக டிவி செட்டாக மாற்றியிருந்தான். அதில் பேய் மாதிரி ஆடிக்கொண்டே உருவங்கள் தெரிந்தன. இருப்பினும் தலை நகரில் மூண்டிருந்த கலவரம் பற்றிய தகவல்களைக்  காண முடிந்தது. அதற்குள் உள்ளுரிலும் சில இடங்களில் கலவரம் ஆரம்பித்திருந்தது. எனவே மெதுவாக ஒவ்வொருவராகக் கிளம்பத் தொடங்கினர் தத்தம் வீடு நோக்கி. அதற்குள் மேலிடத்திலிருந்து உத்தரவும் வந்து விட்டது எல்லோரையும் போகச் சொல்லி.

வீட்டிற்குப் போகும் பொது ஒரு அதிர்ச்சியான காட்சியைக் காண நேர்ந்தது. கல்சி வீட்டிலிருந்து ஒரு ரிக்க்ஷாவில் தூக்கமுடியாதபடித் தூக்கிக்கொண்டு தன் மடியில் இருத்தி  டிவி செட் ஒன்றை ஒருவன் கடத்திக்கொண்டு இருந்தான் அவன் பக்கத்தில் இன்னொருவன் ரேடியோவையும் காலடியில் புசுபுசுவென்ற கரடி பொம்மையையும் பிடித்துக்கொண்டு இருந்தான். இன்னும் பலர் அந்த வீட்டு வாசலில் குழுமி இருந்தனர். பல சாமான்கள் இறைந்து கிடந்தன. என்னுடைய இன்னும் ஒரு ஷாக் அந்த ரிக்ஷாக்காரனைப் பார்த்துத்தான். அவன் கர்மா, என் பையனை தினமும்  பள்ளியில் விட வருபவன்!

இன்னும் சற்று மேலே செல்லச் செல்ல – பல டெண்ட் கடைகள் இருந்தன அங்கே – அந்த சாலையில் கடைகள் பலவும் சூறையாடப் பட்டிருப்பது தெரிந்தது.

எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன். உள்ளூர் செய்திகள் கேட்கலாமென்று ரேடியோவைப் போட்டால், வெறும் சோக கீதம்தான் – சாரங்கி அழுது கொண்டு இருந்தது. ஊரே வெடித்துக் கலவரத்தில் அல்லோலப்படும் பொழுது எப்படி இவர்களால் ஒன்றுமே சொல்லாமல் இருக்க முடிகிறது? முன்பெல்லாம் ஹிந்து பேப்பரைப் பற்றி ஒரு கடி ஜோக் உண்டு: அவர்கள் அலுவலக வாசலில் ஆக்சிடெண்ட் நடந்தால் கூட பிடிஐ இலிருந்து டேலெக்ஸ் வந்தால்தான் செய்தியாகப் போடுவார்களாம். அது போல இவர்கள் தலைநகரிலிருந்து ஆணை வந்தால் தான்  செய்தி என்று கூறுவார்கள் போல.

மூன்று நாட்கள் ஊரடங்கு உத்திரவு போட்டிருந்தார்கள். ராணுவம் தினமும் முக்காலம் ‘கொடி’ ஊர்வலம் சென்றனர். நான் மறுநாள் காலையில் ஓரமாக ஒதுங்கிப் பதுங்கிப் பால் வாங்கச் சென்றேன்.  அப்பொழுது ஜீப்பில் வந்த ஒரு இளம் கேப்டன் திட்டினார். இல்லை, இளம் குழந்தைக்குப் பால் வேண்டியிருந்தது என்று இழுத்தேன். உன் குழந்தை பால் இல்லாமல் இருப்பது தேவலாமா அல்லது அப்பா இல்லாமல் இருப்பது தேவலையா  என்று கேட்டார். ‘ஷூட் அட் சைட்’ ஆர்டர் போட்டிருக்கோமே தெரியாதா? அதுவும் இல்லாமல்   இப்படி அரை இருட்டில் யார் சென்றாலும் ராணுவ வீரன்  முதலில் சுட்டு விட்டு அப்புறம் தான் கேள்வி கேட்பான் தெரியுமா? என பல பேசி பின்பு என்ன தோன்றியதோ அவரே ஜீப்பில் கட்டஹல் வரை கொண்டு விட்டார்.

வீட்டில் காய்கறி ஒன்றுமில்லாமல் தோட்டத்தில் தானாக முளைத்திருந்த மணத்தக்காளி இலையைப் போட்டு பருப்புக்கீரை ஒரு நாள், அதையே சுண்டவைத்து மறுநாள் என்று சாப்பிட்டோம்.

மூன்று நாள் கழித்து முதலில் எட்டு மணி நேரம், பிறகு 12 மணி நேரம் என்று படிப்படியாகத் தளர்த்தினார்கள் கர்ப்யுவை. ஆபிசில் வேலையை விட்டுவிட்டு கும்பல்கும்பலாக நின்று பேச்சுதான். செய்தி பரிமாறல்,  வதந்தி, யூகம், எல்லாமேதான்:  பிரதமர் எப்படி முன் தகவல் இருந்தும் அக்காவலனை வைத்துக்கொண்டார், அவன் எப்படி தீவிரவாதிகளால் கவரப்பட்டான்  எனப் பலப்பல.  அம்மதத்தைப் பற்றியும் பலவிதமான பேச்சுக்கள். இந்நிலையில் ஜகதீஷ் சிங்கைக் காணவில்லை என்று யாரோ சொன்னார்கள். அதற்குள் ஒருவன் அவன் பிலாய் சென்று இருப்பதாகச் சொன்னான். அங்கு அவன் அக்கா வீடு இருப்பதாகவும், அங்கேயே மாற்றல் வாங்க முயற்சி செய்வதாகவும் கூறினான்.

ஆனால் நாளாக நாளாக அவன் முற்றிலும் காணவில்லை என்பது உறுதி ஆயிற்று. போலிஸ் கூட வந்து விசாரணை நடத்தினர். அவன் கேண்டீனில் லட்டு வழங்கிய செய்தியும் அவர்களுக்குத் தெரிந்து இருந்தது.  அப்போது நானும் அருகில் இருந்ததால் அவர்கள் என்னையும் விசாரித்தனர். நான் கேண்டீனில் நடந்ததை ஒன்று விடாமல் அப்படியே கூறினேன். பதிவு செய்து  கொண்டு சென்றுவிட்டார்கள்.

ஆனால் நான் அன்று பிற்பகலில் லேபில் இருந்தபோது தொழிற்சங்கத்  தலைவனும், பிரதமரின் ஆழ்ந்த பக்தனுமான பர்வீசுக்கு கேண்டீனில் நடந்ததை விவரமாகச் சொன்ன விஷயத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.