அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

10-17 பயந்தர் விரைவு வண்டியைப் பிடிக்க வேகமாகப் போய்க்கொண்டிருந்தாள் சுதா குப்தா. அதுதான் நெரிசல் இல்லாமல் இருக்கும். மற்றவை எல்லாம் வீரார் விரைவு வண்டிகள். கூட்டம் நெரிக்கும்.

அந்தேரி ரயிலடியைப் புதுப்பித்துப் பெரிதாக்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகள் எங்கும். எல்லாவற்றையும் துவம்சம் செய்து தட்டையாக்கிவிடும் டைனோசர் புல்டோசர்கள். முதல் ரயில்மேடைப் படிகள் வழியாக மேம்பாலத்தை எட்ட நினைத்து முதல் ரயில்மேடையில் நுழைந்தாள்.

ரயில்கள் வருவது போவது பற்றிய அறிவிப்புகள் ஒலிபெருக்கி மூலம் வந்தபடி இருந்தன. ஒவ்வொரு அறிவிப்பையும் தொடர்ந்து ‘மின் வண்டியின் மேல் 25000 ’வோல்ட்’ மின்சாரம் ஓடும் கம்பி உள்ளது. பயணிகள் வண்டியின் மேல் கூரையில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அது உயிருக்கு ஆபத்தாக அமையும்’ என்ற அறிவிப்பு. பிறகு ரயில் தண்டவாளங்களைக் கடக்கக் கூடாது, ரயில்மேடையில் துப்பக் கூடாது, ரயில்மேடையில் குளிக்கவோ, பிராணிகளைக் குளிப்பாட்டவோ, பாத்திரம் தேய்க்கவோ கூடாது என்றொரு அறிவிப்பு. உலக நாடுகளிலேயே மும்பாயில்தான் இத்தகைய அறிவிப்புகள் இருக்க முடியும் என்று தோன்றியது.

படிகளில் ஏறும் கூட்டம் தள்ளிக்கொண்டு போயிற்று அவளையும். மேம்பாலத்தில் நான்காம் ரயில்மேடையை நோக்கி வலது பக்கம் திரும்பியதும் வழக்கமான பிச்சைக்காரர்கள் கண்ணில் பட்டனர். அல்லாவின் பெயரில் பிச்சை எடுக்கும் நொண்டிப் பிச்சைக்காரர். கூனல் முதுகுப் பிச்சைக்காரப் பெண். இரு குருட்டுப் பிச்சைக்காரர்கள். சற்றுத் தள்ளி வெளிநாட்டுப் பொருட்கள் என்று சோப்பையும், பவுடர்களையும் விற்பவர். பக்கத்திலேயே பழைய புத்தகக் குவியல் ஒன்று. கைபேசியில் பேசியபடி தோழனுக்காகவோ தோழிக்காகவோ காத்திருக்கும் சிலர்.

நாலாம் ரயில்மேடையில் இறங்குவதற்கான படிகளை எட்டும் முன்பே, நிதமும் புல்லாங்குழல் வாசித்துப் பிச்சை எடுப்பவர் வாசிப்பது கேட்டது. 1950, 60களின் பாடல்களை விரும்புபவர். அவர் ஓர் ஆதி நாரயணராவ் விசிறி. முதலில் ஸ்வர்ண சுந்தரி படத்தின் ‘குஹூ குஹூ போலே கோயலியா’ என்ற ராகமாலிகைப் பாட்டில்தான் தொடங்குவார். பிறகு சுதீர் ஃபட்கேயின் பாபி கீ சூடியான் படத்தின் ‘ஜோதி கலஷ் சலகே’. அவர் மனநிலை சரியில்லை என்றால் தோஸ்தி படத்தின் ‘சாஹூங்கா மே துஜே ஸாஞ்சு ஸவேரே’ என்று உருகுவார் முகமத்ரஃபியைப் போலவே. அல்லது பாராதரி படத்தின் தலத் மெஹ்மூதின் ‘தஸ்வீர் பனாதா ஹூன் தஸ்வீர் நஹி பன்தி’. பிறகு மன்னாடே, முகேஷ் என்று வரிசையாகப் போகும். மழைக்காலம் என்றால் கட்டாயம் ஸ்ரீ420 படத்தின் ‘ப்யார் ஹுவா இக்ரார் ஹுவா ஹை’ கட்டாயம் உண்டு. அல்லது சோரி சோரி படத்தின் ‘ஏ ராத் பீகி பீகி’. சில சமயம் கல்லூரி மாணவர்கள் ஜப் வி மெட் படத்தில் ரஷீத்கான் பாடிய ‘ஆவோகே ஜப் தும் ஸாஜனா’ வாசிக்கச் சொல்வார்கள்.

இன்னும் இரண்டாம் பாடலை அவர் வாசித்து முடிக்கவில்லை. அப்படியானால் 10-17 இன்னும் வரவில்லை. படிகள் அருகே போனபோதுதான் அந்தப் பெண்மணி கண்ணில் பட்டார். அறுபது வயதுக்குள்தான் இருக்கும். சுத்தமான விரிப்பு ஒன்றை விரித்து ஒரு சிறு பெட்டியுடனும், கைப்பையுடனும் உட்கார்ந்திருந்தார். கட்டாயம் பிச்சைக்காரி இல்லை. அவர் எதிரே காசு போட தட்டோ கிண்ணமோ இல்லை. தலையைப் படிய வாரி, கொண்டை போட்டு, வேணி வைத்திருந்தார். இருந்தும் சிலர் விரிப்பில் பணத்தைப் போட்டுவிட்டுப் போனார்கள். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு விரைந்தாள். ஒரு வேளை வெளியூர்களுக்குப் போகும் வண்டி ஒன்றைப் பிடிக்க வந்திருக்கலாம். சீக்கிரமாகவே வந்திருப்பார். ரயில்மேடையில் கூட்டம் மோதுவதால் இங்கே உட்கார்ந்திருக்கலாம். அப்படிச் சிலர் உட்காருவது உண்டு.

படிகளில் வேகமாக இறங்கியதும் 10-17 பயந்தர் விரைவு வண்டி வந்தது. புல்லாங்குழல்காரர் அன்று உற்சாகமாக இருந்தார் போலும். பசந்த் பஹார் படத்தில் பீம்ஸேன் ஜோஷியும் மன்னாடேயும் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவது போல் பாடிய ’கேதகி குலாப் ஜூஹி சம்பக வன ஃபூலே’ வை எடுத்துவிட்டார். திருவிளையாடல் படத்தில் ’ஒரு நாள் போதுமா’ பாட்டில் பாலமுரளியும் டிஎம் எஸ்ஸும் மோதிக்கொள்வதைப்போல ஒரு பாட்டு. பீம்ஸேன்ஜோஷியுடன் நான் எப்படி போட்டிபோட முடியும் என்று தயங்கினாராம் மன்னாடே. தோற்பதுபோல் பாட முடியவில்லையாம் பீம்ஸேன்ஜோஷிக்கு.

இன்னொரு நாளாக இருந்திருந்தால் நின்று கேட்டுவிட்டு, அடுத்த வண்டியைப் பிடித்திருப்பாள். ஆனால் அன்று அவசர வேலை இருந்தது. பயந்தர் போய் பின்பு தஹானு வரை போகவேண்டி இருந்தது. வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். பீம்ஸேன்ஜோஷியின் குரலின் புரளல்களைப் புல்லாங்குழல் சரியாகப் பிடித்துக்கொண்டிருந்தபோது வண்டி கிளம்பியது.

பயந்தர், தஹானு இரண்டு இடங்களிலும் அவள் துப்பறியும் நிறுவனம் வழக்கமாக ஏற்றுக்கொள்ளும் வேலை இல்லை. சாதாரணமாக அவளிடம் கணவனைச் சந்தேகித்து அல்லது மனைவியைச் சந்தேகித்து வருபவர்கள், தொழில்முறைக் கூட்டாளிகளை வேவு பார்க்க விரும்புவர்கள், திருமணம் நிச்சயமான பின் அந்தப் பையன் பற்றியோ பெண் பற்றியோ விசாரிக்க விரும்புபவர்கள் இவர்களுக்கான வேலைகள்தாம் வரும். கல்லூரியில் படிக்கும்போது ஒரு தோழியைப் பின்தொடர்ந்து போன அனுபவத்திற்குப் பிறகு அதில் ஒரு ருசி பிறந்தது. வித்யாதர் ராவ்தே என்ற பிரபல துப்பறியும் நிபுணரிடம் பயிற்சி பெற்றாள். வித்யாதர் ராவ்தேவுக்கு வயதானாலும் இப்போதும் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. முகங்களையும் பெயர்களையும் மறக்க மாட்டார். பெரிய மந்திரியை ஒரு முறை அறிமுகப்படுத்தியபோது, மெல்ல அவர் காதில், “மந்திரி மஹோதே ரயில் நினைவுகள் பற்றி எழுத வேண்டும். படிக்க ஆவல்” என்றார். மந்திரி சிறு வயதில் மும்பாயில் ஓடும் ரயிலில் அல்லது கூட்டம் அலைமோதும் ரயிலடிகளில் பெண்களின் கழுத்துச் சங்கிலிகளை அறுப்பதில் நிபுணராக இருந்தவர். செயின் திருடும் குழுவையே நடத்தியவர். அவர் பெயர் பழைய போலீஸ் கோப்புகளில் இருந்தாலும், கையும் களவுமாக அவர் பிடிபடவே இல்லை. வித்யாதர் ராவ்தே அதை மறக்கவில்லை. மந்திரியும் மறந்திருக்க முடியாது. அவர் முகம் வெளிறிப் பின் சிவந்தது. வித்யாதர் ராவ்தேயைச் சற்றுக் கோபமாகப் பார்த்து, விறைப்பாக அகன்றார். வித்யாதர் ராவ்தேயே அவளிடம் சொன்ன தகவல்கள் இவை. “செயின் திருடுபவர்களிடம் மரியாதையாக இரு சுதா. இருபது வருடங்கள் கழித்து நீ இப்படியே இருப்பாய். அவன் மந்திரியாக இருப்பான்” என்றுவிட்டுச் சிரிப்பார் உரக்க. நகரத்தின் ரகசிய தளங்களில் செயல்படும் அத்துமீறல்களைச் செய்யும் கும்பல் ஒன்றிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் கூட வந்திருக்கின்றன. ரோமியோ என்ற பெயரில் வேலை செய்த ஒரு நபர் வித்யாதர் ராவ்தேயை அழைத்து, “நான் ரோமியோ பேசுகிறேன்” என்று மிரட்டல் குரலில் கூறவும், “ஒரு ஜூலியட்டைத் தேடிப் போப்பா. என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது உனக்கு” என்றுவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டாராம். சொல்வார்.

சுதாவின் தொழிலையும், அவள் வீட்டிலேயே அலுவலகம் வைத்திருப்பதையும் அவள் விஞ்ஞானிக் கணவன் நரேந்திர குப்தாவும் கல்லூரி மாணவியான மகள் அருணாவும் இயல்பாக ஏற்றுக்கொண்டு பல ஆண்டுகளாகி விட்டன. சாதாரணமாக, தனிப்பட்ட முறையில் இயங்கும் துப்பறிபவர்கள் போலீசுடன் இணைந்து செயல்படாவிட்டாலும் இன்ஸ்பெக்டர் கோவிந்த் ஷெல்கே பல ஆண்டுகளாகப் பழக்கம். அதனால் அவருக்கு வேலை நெருக்கடி என்றால் சில வேலைகளை இவளுக்குத் தருவார்.

பயந்தர் வேலை முற்றிலும் வினோதமானது. அவள் வீட்டில் வேலை செய்யும் மாலு மிகவும் நச்சரித்ததால் ஏற்றுக்கொண்டது. மும்பாயில் மின்ரயில்களில் பொதுப் பெட்டிகளிலும் பெண்களுக்கான பெட்டிகளிலும் ஐந்தாறு பாபாக்கள் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். பெண்கள் பெட்டிகளில் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கும் வேலை வாய்ப்புக்கான தகவல்கள், தோற்றப்பொலிவுக்கான நிலையங்கள் போன்ற விளம்பரங்கள் சகஜம்தான். வெறும் தொலைபேசி எண்களும் எழுதப்படுவது உண்டு. ஒரு முறை அழியாத மையில், இருக்கைகளிலும், ரயில்பெட்டிச் சுவரிலும், ‘உஷா ஒரு நம்பிக்கைத் துரோகி. ஒரு நல்ல இளைஞனின் இதயத்தை உடைத்தவள்’ என்ற வாசகம் அழிக்கவே முடியாதபடி பல நாட்கள் இருந்தது. இதயம் உடைந்தவன் பெண்களிடமே அதைக் கூறுவதில் என்ன பயன் இருக்கும் என்று தெரியவில்லை. பாபாக்கள் பற்றிய சுவரொட்டிகள் சமீப காலமாக அதிகரித்துவிட்டன. பாபாக்களின் பெயர்கள் இந்து, முஸ்லிம் பெயர்களாக இருந்தாலும், படம் என்னவோ ஷீர்டி சாய்பாபாவுடையதாக இருக்கும். ‘எங்கு நீ அலைந்தாலும் முடிவில் இங்குதான் வரவேண்டும்‘ என்றோ ’போலிகளிடம் ஏமாறாதீர்கள். இவர்தான் உண்மையான பாபா’ என்றோ போட்டி வாசகங்கள் இருக்கும் சுவரொட்டிகளில். இந்த பாபாக்களிடம் எல்லாவித நிவாரணங்களும் சக்திகளும் இருந்தன. மனக் கிலேசம், குடும்பத்தில் பூசல், வேலை உயர்வு, எதிரிகளை வீழ்த்தல், வெளிநாடு செல்ல வாய்ப்பு, கடன் தொல்லை, வழக்குகளில் வெற்றி, உடல் கோளாறு, மலட்டுத்தன்மை, காதலில் வெற்றி, சினிமாவில் வாய்ப்பு, வசீகரணம் என்று ஒரு பெரிய பட்டியலே இருந்தது பாபாக்களின் சக்தியால் ஆகக்கூடிய, தீரக்கூடிய விஷயங்கள். ஒரு பாபாவின் பட்டியலில் கடைசியாக முட்கர்ணி என்று சுயமைதுனமும் தீர்வு காணக்கூடிய ஒன்றாக எழுதப்பட்டிருந்தது. தன் கையே தனக்குதவி என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த பலருக்கு இந்தப் பட்டியலில் அதைச் சேர்த்திருந்தது அதிர்ச்சியளித்திருக்கலாம்.

மாலுவின் பிரச்சினை இந்தப் பட்டியல் பற்றியது அல்ல. அவள் ஒரு பாபாவிடம் போனாளாம் குடிகாரக் கணவனைத் திருத்த. ஒரு பெரிய வெள்ளிச் சொம்பிலிருந்து அவர் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம் என்று எல்லோருக்கும் தந்தாராம். அந்த வெள்ளிச் சொம்புதான் அவளைப் பாதித்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சந்திரபூரில் மகாதேவ் பாபா என்று கூறிக்கொண்டு ஒரு பாபா வந்தாராம். இவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்தாராம். அவர் ஒரு நாள் இரவோடு இரவாகக் கம்பி நீட்டியபோது காணாமல் போன பொருட்களில் ஒன்றாம் இந்த வெள்ளிச் சொம்பு. அதில் அவள் அம்மா பெயர் பொறித்திருக்குமாம். அந்தச் சொம்பு அவளுக்கு வேண்டுமாம். ‘இது அதே மகாதேவ் பாபாதான். பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறான்’ என்றாள் மாலு. ‘மாலு, அவன் போலின்னு வேணா புகார் செய்யலாம். அவனிடமிருந்து சொம்பை எப்படி வாங்குவது?’ என்று கேட்டால் அவள் விடவில்லை. ‘அது எங்க அம்மாவுது. வாங்கித் தாங்க ஆன்ட்டி’ என்று முரண்டு பிடித்தாள். அதற்கான பயணம் இது.

தஹானு வேலை கோவிந்த் ஷெல்கேயின் மனைவி மீனாபாய் சம்பந்தப்பட்டது. மீனாபாய் ஓர் ஆதிவாசிப்பெண். கோவிந்த் ஷெல்கேயும் அவளும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். தஹானு பகுதியில் ஆதிவாசிப் பெண்களுக்காக அவள் நடத்தும் தொண்டு நிறுவனம் வேலை செய்தது. அந்தப் பகுதியில் ஒரு தம்பதி நடத்தும் பள்ளி ஒன்று இருந்தது. அரசாங்க உதவியுடன் நடத்தப்படும் பள்ளி. அந்தப் பகுதியிலிருந்த பல ஆதிவாசிப் பெண்கள் அந்தப் பள்ளிக்குப் போனார்கள். அதில் இரு பெண்கள் பள்ளிக்குப் போக மாட்டோம் என்று முரண்டுபிடித்தபோது பெற்றோர்களும் மீனாபாயின் தொண்டு நிறுவனப் பெண் ஒருத்தியும் வற்புறுத்திக் கேட்டபோது உண்மை வெளியே வந்தது. பதினாலு, பதினாறு வயதான அந்தப் பெண்கள் பள்ளிக்குப் போய் வருகைப் பதிவேட்டில் ஆசிரியை அவர்கள் வருகையைப் பதிவு செய்தவுடனேயே வளாகத்திலேயே இருந்த அந்தத் தம்பதி வீட்டில் வேலை செய்ய அனுப்பிவிடுகிறார்களாம். பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து, சமைத்து என்று எல்லாம் செய்ய வேண்டுமாம். அது மட்டுமல்லாமல் எண்ணெய் தேய்த்துவிடுவது, உடம்பு பிடித்துவிடுவது என்று வேறு வேலையாம். இது வேறு பல உடல் ரீதியான வக்கிரங்களுக்கு இட்டுச் செல்லலாம் என்று அந்தச் சிறுமிகள் பயந்தார்கள். சொல்லவும் முடியவில்லை. பள்ளி நிர்வாகமே உடந்தை. மீறினால் அடி, உதை, மிரட்டல்கள். சிறுமிகளுக்குப் படிக்க ஆசை. படித்துப் பெரிய வேலை செய்ய வேண்டும் என்று நிறையக் கனவுகள். ஆனால் படிக்கவே விடாமல் வீட்டு வேலை செய்வதும், மற்றது செய்வதும் பிடிக்கவில்லை. சொல்லிவிட்டு அழுதார்கள்.

மீனாபாய் இது பற்றி விசாரிக்க விரும்பினாள். உயர் அதிகாரிகளுக்கும், அங்கிருந்த போலீசுக்கும் புகார் தருவதற்கு முன், தீர விசாரித்து ஓர் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்குத்தான் இவள் உதவியை நாடியிருந்தாள். தஹானுவில் அவள் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தாள்.

பயந்தர் ரயில்மேடையில் வண்டி நுழையும் முன் வரும், ‘புடீல் ஸ்டேஷன் பயந்தர், அகலா ஸ்டேஷன் பயந்தர், நெக்ஸ்ட் ஸ்டேஷன் பயந்தர்’ என்ற மும்மொழி அறிவிப்பு ஆரம்பித்துவிட்டது.

* * *

யந்தர் வேலை அவள் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாகவே முடிந்தது. மாலு ரயிலடி வெளியே காத்திருந்தாள் அவளுக்காக. ஓர் ஆட்டோ பிடித்துப் போனார்கள் அந்த பாபா இருக்கும் இடத்துக்கு. முதலிலேயே சுவரொட்டியிலிருந்த கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அன்று சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டு வாங்கியிருந்தாள் இவள்.

தாடியும் மீசையுமாக இருந்தார் பாபா. கனிவான முகம். நிரந்தர அபய ஹஸ்தம். ‘ஸாலா, தோத்ஸ் ஆஹே, ஜோ சந்திரபூர்லா ஆலா ஹோதா’ என்று முணுமுணுத்தாள் மாலு அவன் அதே சந்திரபூர் ஆசாமிதான் என்று இவளிடம்.

அவரை வணங்கிவிட்டு அமர்ந்தனர். இவள் நேரடியாகவே தன் வேலை பற்றிக் கூறி, கோவிந்த் ஷெல்கே பெயரையும் சொல்லி வைத்தாள். அபய ஹஸ்தம் கீழே இறங்கியது. பக்கத்திலிருந்தவர்கள் சற்று விறைத்துக்கொண்டு நின்றனர் அவர் உத்தரவை எதிர்பார்ப்பதுபோல்.

“ஏதாவது வழக்கில் சிக்கலா? தீர்த்துவிடலாம்” என்றார் பாபா.

”உங்களுடன் தனியாகப் பேச வேண்டுமே” என்றாள் பணிவுடன்.

பாபா மற்றவர்களை வெளியே போகச் சொன்னார்.

“பாபா, பல இடங்களுக்குப் போயிருக்கிறீர்களா?”

“இந்த உடல் எங்கெங்கோ சுற்றும். உடலுக்கு ஓர் இடமா என்ன?”

“இந்த உடல் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சந்திரபூர் போனதா?’

“போயிருக்கலாம். நினைவில்லை. பல ஊர்கள். பல இடங்கள். ஆத்மா மட்டும் அவன் காலடியில்” என்று மேலே கூரையைக் காண்பித்தார்.

“சந்திரபூரில் நீங்கள் இருந்ததாக இந்தப் பெண் சொல்கிறாள்.”

”இருந்திருக்கலாம்” என்று கூறிவிட்டு மாலுவைப் பார்த்தார்.

“இவள் வீட்டில் இருந்தீர்களாம்.”

“இருந்திருக்கலாம்.”

“நீங்கள் போன பின் அவர்கள் வீட்டுப் பூஜையிலிருந்த சாமான்கள் காணாமல் போய்விட்டதாம்.”

“அப்படியா? எல்லாம் அவன் லீலை” என்றுவிட்டு மாலுவை முறைத்தார்.

“பாபாவுக்கு ஆட்சேபணை இல்லைன்னா பாபாவின் வெள்ளிச் சொம்பை நான் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டா?”

“அது மந்திரிக்கப்பட்ட சொம்பு. அதைத் தவறான எண்ணத்தோட தொட்டால் கை பொசுங்கிடும்.”

“தவறான எண்ணமே இல்லை பாபாஜி. சும்மா பாக்கணும்,. அவ்வளவுதான்.” எனச் சொல்லிவிட்டு, “ஒரு நிமிஷம்” என்று பையில் ஒலித்துக்கொண்டிருந்த கைபேசியை எடுத்தாள். அவள் கேட்டுக்கொண்டபடி கோவிந்த் ஷெல்கேயின் அழைப்பு.

“ஓ, இன்ஸ்பெக்டர் ஷெல்கேயா? இங்கே பயந்தரில் இருக்கேன். சங்கர் பாபாவைப் பார்க்க வந்தேன்….” என்றாள். உரக்கப் பேசிவிட்டு, கைபேசியை கைப்பையில் வைத்தாள்.

“பக்தியோடு இதை நீங்கள் தொடலாம்” என்றவாறு பாபா வெள்ளிச் சொம்பை நீட்டினார். கையில் வாங்கிப் பார்த்ததும், சக்குபாய் என்று மராட்டியில் பெயர் பொறித்திருந்தது தெரிந்தது. “மாஜா ஆயிசா நாவ்” என்றாள் மாலு மெதுவாக.

“உங்கள் ஆசீர்வாதமாக இந்தச் சொம்பை இந்தப் பெண்ணுக்குத் தந்துடுங்க. இவள் அம்மா பேர் இது” என்றாள் பொறித்திருந்த பெயரைக் காட்டியபடி.

பாபா சற்று யோசித்துவிட்டு, உதவியாளர் ஒருவரைக் கூப்பிட்டு, சொம்பில் இருந்த நீரை வேறு சொம்பில் ஊற்றச் சொன்னார். சொம்பை இவளிடம் நீட்டி, “இது பக்தர் ஒருவர் தந்தது. இந்தப் பெண் வீட்டுக்கு வந்தது வேறு யாரோ ‘டோங்கி’ பாபாவாக இருக்கும். ஆனாலும் நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது மறுக்க மனசில்லை. பாபாக்களின் மனம் மெழுகு, வெறும் மெழுகு” என்றுவிட்டுத் தந்தார். இருவரையும் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். தன் தலையைத் தொடவில்லை, தலையில் கொட்டினார் என்றாள் மாலு வெளியே வந்ததும்.

வெள்ளிச் சொம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு, “தாங்க்ஸ் ஆன்ட்டி” என்றுவிட்டுக் கிளம்பினாள் மாலு. தஹானுவுக்கான ரயிலைப் பிடிக்க இவள் ரயில் நிலையத்துக்கு வந்தாள்.

தஹானுவில் இவளும் மீனாபாயும் நினைத்ததுபோல் விசாரணை செய்வது கஷ்டமாகவே இருந்தது. பள்ளியில் வேறு காரணங்கள் கூறி மறைமுகமாக விசாரித்தபோது, வருகைப் பதிவேட்டைக் காண்பித்து, சிறுமிகள் இருவரும் பள்ளியில்தான் இருந்தார்கள் என்று வாதிட்டனர். சிறுமிகள் இருவரும் வெகுவாகப் பயந்தார்கள். மற்ற மாணவிகளும் மாணவர்களும் பேச மறுத்தார்கள். ஷெல்கேயிடம் பேசி அந்தத் தம்பதி இங்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று விசாரிக்கச் சொன்னபோது, ஒரு மணி நேரத்தில் விவரங்கள் கிடைத்தன. ஸாவந்த்வாடி அருகே ஒரு கிராமத்தில் பள்ளி நடத்தி வெளியேற்றப்பட்டிருந்தார்கள் இருவரும் ருசுப்பிக்க முடியாத இது போன்ற காரணங்களுக்காக. இந்த விவரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த இருவரையும் கேள்வி கேட்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருத்தி மீனாபாயைத் தொடர்பு கொண்டாள் கைபேசியில். இந்தத் தம்பதியரால் வேறு வகையில் துன்புறுத்தப் பட்டவள் அவள். ஆதிவாசிப் பெண். அவள் எப்படி உதவ முடியும் என்பது பற்றிப் பேசினார்கள். சிறுமிகள் இருவரையும் நடந்ததைக் கூறும்படி நயமாகப் பேசி அவர்கள் கூறியதைப் பதிவு செய்தார்கள். அடுத்த இரு நாட்களும் அவர்கள் பள்ளிக்குப் போக வேண்டும் என்றும் உதவி செய்ய முன் வந்த டீச்சர் அவர்கள் வளாகத்தின் அந்தப் பக்கம் போவதையும், முடிந்தால் அங்கு அவர்கள் வேலை செய்வதையும் ரகசியமாக கைபேசி மூலம் புகைப்படம் எடுக்க வெண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அந்த ருசுக்கள் இல்லாமல் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தோன்றியது. இரண்டொரு நாட்களில் எல்லா விவரங்களுடன் உயர் அதிகாரிகளையும், போலீசையும் அணுக வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

எல்லாம் செய்து முடிப்பதற்குள் ஆறு மணியாகிவிட்டது. களைத்துவிட்டாள் சுதா. அந்தேரி வரை ரயிலில் எதிர் இருக்கையில் காலைப்போட்டுக்கொண்டு, உறங்கியபடி வந்தாள். அந்தேரியில் இறங்கி, படிகளேறி மேம்பாலத்தை அடைந்ததும் இடது பக்கம் போகத் திரும்பியவள் திடுக்கிட்டுப்போனாள்.

காலையில் பார்த்த பெண்மணி அங்கேயே உட்கார்ந்துகொண்டிருந்தார் இன்னும். விரிப்பில் பலர் வீசிய காசு நாணயங்களாகவும் நோட்டுக்களாகவும்.

மேலே போக மனம் வரவில்லை. மெல்ல அவர் பக்கம் போனாள்.

“மௌஸி, காலையிலேயும் உங்களைப் பார்த்தேன். மணி எட்டு இப்ப. இன்னும் இங்கேயே இருக்கீங்களே, என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“நீங்க போங்க. ஒரு விஷயமும் இல்லை.”

“இல்லை மௌஸி. இது சரியான இடம் இல்லை. ராத்திரி நீங்க இங்கே இருக்கக் கூடாது. பிச்சைக்காரங்க கூடப் போக ஆரம்பிச்சுட்டாங்க. என்ன விஷயம் சொல்லுங்களேன், ப்ளீஸ்.”

அந்தப் பெண்மணி தலையைக் குனிந்துகொண்டு, பேச மறுத்தார்.

“மௌஸி, என்ன விஷயம் சொல்லுங்க. என்னால முடிந்ததைச் செய்யறேன். உங்களை இப்படியே விட்டுட்டுப் போக முடியாது. நீங்க பிடிவாதம் பிடிச்சா நான் போலீசைக் கூப்பிட வேண்டிவரும். அப்புறம் ரசாபாசமாயிடும்.”

போலீஸ் என்றதும் அந்தப் பெண்மணி, “இல்லை, போலீசைக் கூப்பிடாதீங்க. நான் போயிடறேன்” என்றுவிட்டு எழுந்து, விரிப்பிலிருந்த பணத்தை அள்ளி இன்னும் போகாமல் உட்கார்ந்துகொண்டிருந்த குருட்டுப் பிச்சைக்காரர் குவளையில் விடுவிடுவென்று போய் போட்டுவிட்டு வந்தாள். விரிப்பை மடிக்க ஆரம்பித்தாள்.

“நான் போயிடுவேன். நீங்க போங்க” என்றார்.

“உங்களை இங்கேயிருந்து கிளப்ப நான் போலீஸ் பற்றிச் சொல்லலை மௌஸி. நிஜமாவே உங்களைப் பற்றிய கவலையில சொன்னேன். உங்க வீடு எங்கே?”

“உயிரை எடுக்காதீங்க. வீடு இல்லை எனக்கு.”

“சரி, வீடு இல்லைன்னே இருக்கட்டும். நான் ஒண்ணு சொல்லவா? இங்கே பக்கத்துல பெண்கள் ஹாஸ்டல் இருக்கு. திடீர்னுட்டு வீட்டை விட்டு வர வேண்டிய பெண்களுக்கு ரெண்டு மூணு நாள் போலத் தங்கிக்க அங்கே வசதி உண்டு. அங்கே ஒரு ரூம் கிடைக்கும். என் சிநேகிதிதான் டைரக்டர். அங்கே போவீங்களா? இப்ப போங்க. நல்லா தூங்குங்க. நாளைக் காலைல நான் உங்ககிட்ட பேசறேன். நான் எதுக்கும் உங்களை வற்புறுத்த மாட்டேன். பெரியவங்களா இருக்கீங்க. சொன்னதைக் கேளுங்க.”

“சரி, ஹாஸ்டலுக்குப் போறேன்.”

“உங்க பேரு?”

“சந்தியாபாய்.”

“வயசு?”

“அறுவது.”

உடனே மேரியிடம் பேசினாள். விவரங்களைக் கூறியதும் மேரி சந்தியாபாயிக்கு ஓர் அறையைத் தர ஒப்புக்கொண்டாள்.

சந்தியாபாயியுடன் கீழே படியிறங்கி வந்து ஒர் ஆட்டோவைப் பிடித்தாள். அவள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் விடுதி. வழியில் ஒரு பத்து நிமிடம் வெயிட்டிங் இருக்கும் என்று ஆட்டோக்காரரிடம் சொன்னாள். இருவரும் ஏறிக்கொண்டனர்.
விடுதி வந்ததும், உள்ளெ சென்று மேல் மாடியிலிருந்த மேரியைக் கூப்பிட்டாள். மேரி உடனே கீழே வந்து, ஒரு பெண்ணிடம் பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்யச் சொல்லி, அந்த வேலை முடிந்ததும், ஓர் அறையைத் திறந்தாள். விளக்கைப் போட்டாள்.

சின்ன அறை. நீலமும் மஞ்சளுமாய் கதர் விரிப்பு விரித்த மெத்தையுடன் ஒரு கட்டில். தண்ணீர் பாட்டிலும் கிளாசும் வைத்த மேசை.

சந்தியாபாய் உள்ளே நுழைந்து கைப்பெட்டியைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து இவளையும் மேரியையும் பார்த்தார். முதல் முறையாக முகம் சிறிது மலர்ந்தது. கை குவித்தார். ”தன்யவாத்” என்றார்.

வெளியே ஆட்டோக்காரர் ஹாரன் அடித்து அவசரப்படுத்தினார்.

“நாளைக் காலைல பார்க்கலாம் மௌஸி” என்றுவிட்டு, மேரியிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியே விரைந்தாள்.

Saree_Fly_Sky_Kite_Women_Feminism_Colors_Bharti_Kapadia

* * *

றுநாள் காலை பத்துமணி வாக்கில் விடுதியை அடைந்து, சந்தியாபாயின் அறைககதவைத் தட்டியபோது, அவர் குளித்துவிட்டு, உடை மாற்றித் தயாராக இருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் விடுதியில் தங்க ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டுவிட்டு, மேரியைப் பார்க்க விரைந்தாள். மேலும் இரண்டு நாட்கள் தங்குவதில் சிரமம் ஏதுமில்லை என்ற மேரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.

மீண்டும் அறைக்கு வந்து, “சந்தியா மௌஸி, கிளம்பலாமா?” என்றாள்.

“எங்கே?”

“என் வீட்டுக்குப் போகலாம். அங்கே அமைதியா உட்கார்ந்து பேசலாம். சரியா? நாஸ்தா சாப்பிட்டாச்சா நீங்கள்?”

“இல்லை.”

”சரி, கிளம்புங்க.”

காரில் அமர்ந்ததும் கிளம்பி ஸாத் பங்களவில் இருக்கும் ஸ்வதேஷ் ஹோட்டல் வாசலில் நிறுத்தினாள். கூட்டம் இருக்கவில்லை. இருவருக்கான மேசை இருந்த மூலையில் அமர்ந்தனர்.

“மௌஸி, என்ன ஆர்டர் பண்ணட்டும்?”

“முதல்ல ஒரு கப் சாயா சொல்றியா?” என்றுவிட்டுச் சிரித்தார். உரிமையுடன் ஒருமையில் அழைத்தது பிடித்திருந்தது.

வெயிட்டர் வந்ததும் சாயாவுக்குச் சொல்லிவிட்டு, பிறகு சந்தியாபாயின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு, அவளுக்கு வெங்காய ரவா தோசையும், தனக்கு ஒரு மாதுளம்பழ ஜூஸும் கொண்டுவரப் பணித்தாள்.

“இது என் செலவாக இருக்கட்டும்” என்று கூறினார் சந்தியாபாய்.

“அதற்கென்ன, பார்க்கலாம்” என்றுவிட்டு, தோசையும் ஜூஸும் வருவதற்குள் தன் துப்பறியும் தொழில் பற்றியும், தன்னைப் பற்றியும் கூறினாள். சற்றே வியப்புடன் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்ட சந்தியாபாய் மௌனமாக இருந்தார்.

டீ வந்தது முதலில். மெல்ல ஊதி ஊதிக் குடிக்க ஆரம்பித்தார்.

“நீ மதறாஸியா?” என்று கேட்டார் சற்று நேரத்துக்குப் பின் தோசையைச் சாப்பிட்டபடி.

“ஆமாம் மௌஸி. ஏன், மதறாஸிகளைப் பிடிக்காதா?”

“அப்படியெல்லாம் இல்லை. சும்மா கேட்டேன். துத்ஸா மராட்டி சாங்லா ஆஹே. (உன் மராட்டி நன்றாக இருக்கிறது)” என்றுவிட்டு மௌனமாகவே சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்ததும் இன்னொரு டீ குடித்துவிட்டு, சுதா எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் ’பில்’லுக்கான தொகையை தானே தந்தார்.

மீண்டும் காரில் அமர்ந்து வீட்டை நோக்கி ஓட்டினாள். வீட்டுக்கு வந்ததும், சந்தியாபாய் சுற்றும்முற்றும் பார்த்தாள். அலுவலக அறையில் ஸ்டெல்லா கணினி முன் உட்கார்ந்திருந்தாள். ஸ்டெல்லாவைக் கூப்பிட்டு அறிமுகம் செய்தாள்.

செல்லம்மா வர இன்னும் நேரமிருந்தது. சந்தியாபாயை அமரச் சொல்லிவிட்டு, டீப்பாய் மேல் ஜில்லென்று இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்தாள் ஸ்டெல்லா. சுதாவும் அமர்ந்துகொண்டு மெல்லக் கேட்டாள்.

“மௌஸி, என்ன பிரச்சினை? நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அது பெரிய பிரச்சினை பேட்டீ. தீர்க்க முடியாத பிரச்சினை.”

“தீர்க்க முடியாத பிரச்சினையே கிடையாது மௌஸி. சொல்லுங்களேன்.”

மௌஸி தணிந்த குரலில் பேச ஆரம்பித்தார்.

சந்தியாபாய் கர்ஜத் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை விவசாயி. தாய் வெறும் விவசாயியின் மனைவி மட்டும் இல்லை. கணவனுடன் களத்தில் இறங்கி வேலை செய்யத் தயங்காதவள். பயிர் பற்றியும், பயிரிடுவது பற்றியும் அவருடன் விவாதிக்கத் தெரிந்தவள். இரண்டு பெண்கள் அவர்கள். சந்தியாபாய். சாந்தாபாய். இருவரும் பள்ளியிறுதிவரை படித்திருந்தாலும், பெற்றோர்களைப் போலவே சேற்றிலும் சகதியிலும் வேலை செய்யத் தெரிந்தவர்கள். மண் மோகம் பிடித்தவர்கள். சந்தியாபாயிக்குத் திருமணம் ஆகும்போது வயது இருபத்திரண்டு. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்தான். அவர்கள் தேர்ந்தெடுத்த பையன் மும்பாயில் அரசு உத்தியோகத்தில் இருந்தான். சிரித்த முகம். சகஜமாகப் பழகும் சுபாவம். பிரகாஷ் என்று பெயர். மும்பாய் போவது பற்றி ஒரு பதைபதைப்பு கூடிய ஆர்வம் இருந்தாலும். ஊரை விட்டுப் பிரியும் சோகம் இருந்தது.

“பாபா, அவருக்கு விவசாயம் பிடிக்குமான்னு கேளுங்க” என்றாள் தந்தையிடம்.

கிராமம் பக்கமே வந்தது கிடையாதாம் அவளுக்கு வரப்போகும் கணவன். மும்பாய்தான் அவன் ஊராம். தாதரில் பிறந்து வளர்ந்தவன். அவன் அம்மாவும் மும்பாய் பெண்களைப்போல் விசுக்விசுக்கென்று நடந்தாள். ‘நவ் வாரி’ (ஒன்பது கஜம்) புடவை கட்டாமல் ஆறு கஜம் புடவை கட்டினாள். அவன் தந்தையும் பாபாவைப்போல் வேட்டி கட்டாமல் பான்ட்தான் போட்டுக்கொண்டிருந்தார். சற்று பயமாக இருந்தது சந்தியாவுக்கு. ஆனால் அவர்கள் தங்கமானவர்கள். அவர்கள் இருந்த வாடியில் அவர்களைக் கொண்டாடாதவர்கள் கிடையாது என்பது பிறகு தெரிந்தது.

1978இல், திருமணமான இரண்டாம் ஆண்டு, மஹேஷ் பிறந்தான். 1980இல் மங்கேஷ். 1981இல் ஒருவர் பின் ஒருவராக மாமியாரும் மாமனாரும் இறந்து போனார்கள். வாடியில் இருந்த வீடு அவர்கள் சொந்த வீடு இல்லை. தூரத்து உறவினர் வீடு. அவர் மகன் வந்து வீட்டைத் தரச் சொன்னபோதுதான், தங்களுக்கென்று வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வாடி இருந்தது தாதரில். அங்கு வீடு வாங்க முடியும் என்று தோன்றவில்லை. மும்பாயில் தாதர் போன்ற பகுதிகளில் வீடு வாங்குவது சுலபமல்ல. போரிவிலி பகுதியில் பார்க்கத் துவங்கினார்கள். 1978இல் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய இரு வீடுகள் அருகருகே இருந்தன. நண்பர்களும் உறவினர்களும் இரண்டு வீடுகளையும் வாங்கும்படிச் சொன்னார்கள். பிற்காலத்தில் இரண்டு மகன்களுக்கும் ஆளுக்கொரு வீடு இருக்கும் என்று கூறினார்கள். ஒரு வீடு எழுபத்தைந்தாயிரம். பிரகாஷிடம் பணம் இருக்கவில்லை. பெற்றோர்கள் இறக்கும் முன் ஏற்பட்ட வைத்தியச் செலவில் கணிசமான தொகை கையை விட்டுப் போயிருந்தது.

சந்தியாவின் தந்தை பாதிப் பணம் தர முன்வந்தார். மீதிப் பணத்துக்கு சந்தியாவின் நகைகள் விற்கப்பட்டன. அவள் ஆயி தந்த நல்ல கனமான தங்க நகைகள். இரண்டு வீடுகளும் சந்தியாவின் பெயரிலேயே வாங்கப்பட்டன. பிறகு இடைச் சுவரை இடித்துவிட்டு, பெரிய வீடாக அமைத்துக்கொண்டார்கள்.

சந்தியாபாய் பேசுவதைச் சற்று நிறுத்தினார்.

‘திருமணம் செய்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள்’ என்று முடியும் கதைபோல் பட்டது சுதாவுக்கு. இதில் என்ன பிரச்சினை? ஸ்டெல்லாவைப் பார்த்தாள். ஸ்டெல்லா மெல்ல எழுந்து லவங்கப்பட்டை தேநீர் போடப் போனாள். மின்சாரக் கெட்டிலில் நீரை நிரப்பிப் பித்தானை அழுத்தினாள்.

* * *

ந்தியாபாய் தலையைக் குனிந்து கொண்டார் கைகளைப் பார்த்தபடி.

ஸ்டெல்லா ஒரு தட்டில் தேநீர்க் கோப்பைகளை கொண்டுவந்து வைத்ததும், அதில் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு, “லவங்கப்பட்டை போட்டுக்கூட சாய் பண்ண முடியுமா?” என்று வியந்தார். “இது சுதா மேடமுக்குப் பிடித்தது” என்றாள் ஸ்டெல்லா.

மெல்ல உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தார் சந்தியாபாய்.

“மௌஸி, இதுவரை சொன்னதுல ஒரு பிரச்சினையும் இல்லையே?” என்று மெல்ல ஆரம்பித்தாள் சுதா.

பதில் கூறாமல் மௌனித்தபடி தேநீர் பருகினார் சந்தியாபாய். பிறகு கூற ஆரம்பித்தார்.

வீடு வாங்கி, குடி புகுந்து, இரண்டு மகன்களும் வளர்ந்து, படித்து, வேலை கிடைத்து, அருமையான இரு மருமகள்கள், பேரக் குழந்தைகள் என்று எல்லாமே கொண்டாட்ட அனுபவங்கள்தாம். ஓர் இடி சொல் கிடையாது. சண்டை கிடையாது. முகச் சுளிப்பு கிடையாது. முகம் தூக்கல் கிடையாது.

பிரகாஷ் இரண்டாண்டுகள் முன்புதான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். வங்கி சேமிப்பு, சேம நிதி எல்லாம் சேர்ந்து ஒரு கணிசமான தொகை கையில் இருந்தது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தபோது பாபா இறந்துபோனார். அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே ஆயி போய்விட்டாள். சாந்தாபாய் தன் கணவருடன் வந்து பாபாவுடன் இருந்தாள் ஆயி போன பின்பு. சாந்தாபாயின் கணவருக்கு நிலம் புலம், விவசாயம் இவற்றில் ஈடுபாடு இருந்தது.

இவள் அறுபதாம் பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்பு சாந்தாபாயின் கணவர் திடீரென்று இறந்துபோனார். அறுபதாம் பிறந்த நாள் தன் வாழ்க்கையின் திருப்புமுனை என்று சந்தியாபாயிக்குத் தோன்றியது.

திடீரென்று அவளும் சாந்தாபாயும் படித்து வளர்ந்த நாட்களும், கிணற்றுச் சுவரில் அமர்ந்து அவர்களைப் பிரதிபலித்த தண்ணீரை உற்றுப் பார்த்த நாட்களும், பள்ளியிலிருந்து வந்தவுடன் வயலுக்கு ஓடிய நாட்களும் நினைவுக்கு வந்தன. சில நாட்கள் தூங்கி எழும்போது ஆயியுடன் பேசியபடி எழுந்தாள். கூடப் படுக்கும் பேரன் பேத்திகள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் அவள் அந்த முடிவை எடுக்கக் காரணம் சாந்தாபாயுடன் நடந்த அந்த உரையாடல்தான்.

தினமும் காலையில் ஒரு முறை சாந்தாபாய் கூப்பிடுவாள். அன்று கூப்பிட்டபோது குரல் ஒரு மாதிரி இருந்தது.

“என்ன சாந்தூ?” என்று கேட்டாள்.

“வினோத் போய் இன்னிக்கு ஒரு மாதம் ஆகப் போகிறது. தாயி, எனக்கு உன் மடியில் தலை வெச்சுப் படுக்க ஆசையா இருக்கு. துக்கம் எல்லாம் இல்லை. வினோத் ஒரு நல்ல மனுஷன். நல்ல வாழ்க்கை வாழ்ந்து, நன்றாகவே இருந்துவிட்டுப் போனார். போகும் வயதில்லை. உன் வயதுதானே தாயி, அவருக்கு? தாயி, எனக்கு ஒண்ணு தோணுது மனசுல. இன்னும் இருபது வருஷம் இருப்போமா? அந்த இருபது வருஷம் நீ என்னுடன் இருக்கக் கூடாதா? நானும் நீயுமாக இங்கே வயல்ல ஒரு பக்கம் மூலிகைச் செடிகள் வளர்க்கலாம், தாயி. நேற்று உள்ளறையில ஒரு பீரோவைத் திறந்தேன். ஒரு பழைய பெட்டியில, ஒரு பழைய நோட்டுப் புத்தகம் முழுவதும் ஆயி எனக்கு எழுதித் தந்த ராகி போட்டுச் செய்யும் சமையல் குறிப்புகள். ராகி லட்டு, ராகி ஹல்வா, ராகிக் கூழ், ராகி தோசை. அது எல்லாம் வெறும் குறிப்புகள் இல்லை, தாயி. அவங்க தலைமுறையோட ஆரோக்கிய ரகசியம். அது தவிர விதம் விதமான மூலிகைகள் பற்றிய குறிப்புகள். ஆயியும் பாபாவும் கிணற்றுக்கு அந்தப் பக்கம் முழுவதும் மூலிகைச் செடிகளும், மூலிகைப் பூக்களும் பயிர் பண்ண ஆசை வெச்சிருந்தாங்களாம். அந்த பீரோ மேல சாய்ஞ்சு பகல் முழுவதும் இருந்தேன், தாயி.”

சாந்தாபாய் பேசப் பேச, சந்தியாபாயிக்கு முதுகெலும்பு ஜில்லிடும் சுகமான உணர்வு ஏற்பட்டது. ஒரு வகை உவகை பொங்கியது. கிராமத்து வீட்டில் அவர்கள் இருவரும். வயலிலும் வெளியிலும் பலருடன் வேலை செய்தபடி. ராகிக் கூழ் சுவைத்தபடி. ஜாஸ்வந்தி, ஸதாஃபுலி, ரோஜா, மல்லிகை வளர்த்தபடி. மூலிகைச் செடிகளை பயிரிட்டபடி. அடுத்த இருபது ஆண்டுகள் ஒரு முடிவில்லாப் பச்சையாய்த் தெரிந்தது.

ஆயி பாபாவின் வீடு, அந்தப் பழைய பாத்திரங்கள், கயிற்றுக் கட்டில்கள், பானைகள், பித்தளைப் பாண்டங்கள், அடர் பச்சையும், கரு நீலமும், ரத்தச் சிவப்புமாய் ’நவ் வாரி’ புடவைகள், கரை போட்ட ரவிக்கைகள், சந்தைக்குப் போனபோதெல்லாம் எடுத்த புகைப்படங்கள் இவற்றுடன் மனத்தில் ஓர் அருங்காட்சியகமாக உருவாகியது.

சாந்தாபாய் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தது கூடத் தெரியவில்லை. அறுபதாம் பிறந்தநாள் அன்று அதைக் கூறினாள். கொண்டாடவில்லை பிறந்தநாளை. வினோத் இறந்து ஒரு மாதமே ஆகியிருந்ததால்.

“நான் கர்ஜத் போகலாம்னு பார்க்கிறேன்.”

உடனே எல்லோரும் ஆமோதித்தனர்.

“ஆமாம். போய் ஒரு ரெண்டு மாசம் இருந்துட்டு வாங்க ஆயி. மௌஸிக்கு ஆறுதலா இருக்கும்” என்றான் மங்கேஷ். அவன் மனைவியும், “ஆமாம் ஆயி. போகணும் நீங்க” என்றாள்.

பிரகாஷ் அவள் எதைச் சொன்னாலும் மறுப்பவரில்லை. அவரும் கர்ஜத் சென்று ஓரிரு மாதங்கள் இருந்துவிட்டு வரும்படி கூறினார்.

அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு அவள் மெல்லச் சொன்னாள்.

“ரெண்டு மாசம் இல்லை. நிரந்தரமா நான் அங்கே போய் இருக்கத் தீர்மானிச்சுட்டேன்” என்றாள்.

திடுக்கிட்டனர் அனைவரும்.

“என்ன சந்தியா, ‘நான் நிரந்தரமா அங்கே போறென்’னு சொன்னா என்ன அர்த்தம்? நான், உன் குடும்பம் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா உனக்கு?” என்றார் பிரகாஷ்.

“நீங்க ஒரு மும்பாய்க்காரர். கர்ஜத் பிடிக்குமா உங்களுக்கு? நீங்களும் வந்தால் சந்தோஷப்படுவேன். ஆனால் உங்களுக்குப் பொழுது போகாது. உங்களுக்கு மும்பாய் ரயில் வேணும். கூட்டம் வேணும். கடற்கரை வேணும். உங்கள் நண்பர்கள் வேணும் வாங்கடே ஸ்டேடியம் போய் கிரிக்கெட் பார்க்க. மராட்டி நாடகம் பார்க்க. சங்கீதக் கச்சேரிக்குப் போக“

“உனக்கு மட்டும் பொழுது போகுமா அங்கே? சாந்தாவுடன் எத்தனை பேச முடியும்?”

“நானும் சாந்தாவுமாக மூலிகைச் செடிகள், பூச்செடிகள் பயிரிடப் போறோம்.”

எல்லோரும் சிரித்தனர்.

“விவசாயிகள் கடன்ல மூழ்கி தற்கொலை செய்துக்கற காலம் இது, ஆயி. இதெல்லாம் உங்களால முடியாது” என்றான் மஹேஷ். அவன் மனைவி ஸீமா கல்லூரியில் பேராசிரியை.

“ஆயி, இந்த வயசுல இப்படி வினோதமான எண்ணங்கள் வரும். அது சகஜம்தான். நான் வேணா ஒரு ரெண்டு வாரம் லீவு எடுக்கவா? நீங்க வீட்டுலயே இருந்து களைச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். நாம் எல்லாருமா போகலாம் எங்கேயாவது மகாபலேஷ்வர், ஷீர்டி, நாஸிக் எல்லாம் போகலாம்.”

சந்தியாபாய் அவள் கூறியதை மெல்ல மறுத்தாள். “நீ நினைக்கிறபடி இல்லை.”

“அது என்ன மூலிகை அதுஇதுன்னு உளறல்? கையில பணம் வேண்டாமா? தவிர, சும்மா சாந்தாவோட இருக்க முடியுமா? மாசாமாசம் இங்கேயிருந்துதானே செலவுக்குப் பணம் அனுப்பணும்? இது வீண் செலவு இல்லையா?” என்றார் பிரகாஷ் குரலைச் சற்று உயர்த்தி.

“அது பற்றி நான் யோசித்தாகி விட்டது. இந்த வீடு வாங்க பாபாதான் பாதிப் பணம் தந்தார். மீதிப் பாதியை நான் தந்தேன் என் நகையை வித்து. நான் எஸ்டேட் ஏஜண்ட் கிட்ட விசாரிச்சேன். இப்போ இந்த வீடு ரெண்டு கோடிக்கு மேலே போகுமாம். வீட்டை வித்து பணத்தை அஞ்சாப் பிரிப்போம். அஞ்சாவது பங்கு இத்தனை நாள் மஹேஷும் மங்கேஷும் இந்த வீட்டுக்காக தாராளமா செய்த செலவுக்கு. மூணு பங்கு அவங்க ரெண்டு பேருக்கும். நாலாவது பங்கும் அஞ்சாவது பங்கும் எங்க ரெண்டு பேருக்கும். என் பங்கை நான் எடுத்திட்டுப் போவேன். மஹேஷும், மங்கேஷும் பெரிய பெரிய கம்பெனிகள்ல இருக்காங்க. பாங்க் லோன் வாங்கி, இந்தப் பணத்தையும் போட்டால் கடல் மாதிரி வீடு வாங்கலாமே? என்ன கஷ்டம் இதுல? இல்லை இந்த வீட்டுலியே இருக்கணும்னா என் பங்கை நீங்க ரெண்டு பேரும் வாங்கலாமே? உங்கள் பாபா உங்க ரெண்டு பேரில் யார் கிட்ட வேணுமானாலும் இருக்கலாம். அவர் வசதிக்கும், சௌகரியத்துக்கும் அவர் கிட்டே பணம் இருக்கு. கர்ஜத்தும் வரலாம் அவர். வந்தா நான் ரொம்பவே சந்தோஷப் படுவேன்.”

அதிர்ந்து போனார்கள் எல்லோரும்.

பிரகாஷ் மெல்ல அவள் முதுகைத் தடவினார். “சந்தியா, போய்க் கொஞ்சம் தூங்கு” என்றார்.

“இல்லை. தூக்கம் வரலை.”

மறுநாள் குடும்ப டாக்டர் வந்தார். பல கேள்விகளைக் கேட்டார். மூலிகைச் செடிகளைப் பற்றி அவள் கூறியபோது எல்லோரையும் பார்த்துத் தலையசைத்தார். முழு ஓய்வு தேவை என்றார். இப்படி இழுபறியாய் ஒரு வருடம். ஆரோக்கியமாக இருந்த அவள் நோயாளிபோல் அன்புடன், கருணையுடன், பாவப்பட்ட ஒருத்தியாய் பேணப்பட்டாள். அவர்களை மீறி அவள் ஏதும் செய்யாமல் இருக்க வீட்டுப் பத்திரங்கள் வங்கியில் பத்திரப்படுத்தப்பட்டன.

மன நல வைத்தியரிடமிருந்து மாதவிடாய் நின்றபின், காலம் கடந்து சில சமயம் சிலருக்கு ஏற்படும் மனக்குழப்பத்தில் அவள் இருக்கிறாள் என்ற சான்றிதழ் வாங்க முயற்சி நடப்பதை அவள் அறிந்துகொண்டபோது அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.

“கர்ஜத் போயிருக்கலாமே மௌஸி? அந்தேரி ஸ்டேஷன்லியா வந்து உட்காருவது?”

“என் பங்கு வராமல் நான் போக மாட்டேன்” என்றார் சந்தியாபாய் அழுத்தம்திருத்தமாய்.

“நீங்க காணாமப் போயிட்டீங்கன்னு அவங்க போலீஸ்ல சொல்லியிருப்பாங்க இதுக்குள்ள.”

“இல்லை. வீட்டுல யாரும் இல்லை. மஹேஷும் மங்கேஷும் குடும்பத்தோடு சிங்கப்பூர் போயிருக்காங்க ரெண்டு வாரத்துக்கு. பிரகாஷ் டெல்லி போயிருக்கார் ஒரு வேலையா.”

“அப்படீன்னா வீட்டை விட்டு ஏன் வெளியேறினீங்க? அந்தேரி ஸ்டேஷன்ல ஏன் உட்கார்ந்தீங்க?” என்றாள் சுதா மறுபடியும்.

“வீட்டுல வேலை செய்யும் பெண்ணை நாள் முழுவதும் எனக்குத் துணையா இருக்கச் சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கு இருந்த அன்பால அதைச் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அது கண்காணிப்பு மாதிரி பட்டுது. அது தாங்கலை. போரிவிலி ஸ்டேஷன் போனேன். நான் அடிக்கடி அந்தேரி வருவேன் சாமான்கள் வாங்க அப்புறம் ஸாத் பங்களாவில இருக்கிற கோயிலுக்கு. அதனால ஒரு பாஸ் எடுத்து வெச்சிருந்தேன். ரயில் வந்ததும் சட்டென்று ஏறிவிட்டேன். அந்தேரியில இறங்கினதும் மனசு குழம்பிப் போச்சு. ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு வீட்டை விட்டுப் போனால் தங்க ஏது இடம்? அவளை ஏதாவது ஆசிரமத்துக்குப் போன்னு சொல்லுவாங்க. அங்கேயே ஸ்டேஷன்ல உட்கார்ந்துவிட்டேன். ஒரு பெரிய பாறாங்கல் மாதிரி ஒரு துக்கம் நெஞ்சுல கனத்துது. மனசுல இருக்கும் ஒரு ஆசையச் சொன்னதுக்கு எனக்கு தண்டனை. சொல்லாமல் செத்திருந்தா கொண்டாடியிருப்பாங்க. சுதா, உனக்கு பல ஜன்மங்கள்ல நம்பிக்கை இருக்கா? எனக்கு இல்லை. என் பாபா சொல்லுவார். நரகமும் சொர்க்கமும் மனசுலதான். உயிரோடு இருக்கும்போதுதான். இறந்த பின்னால நாம எல்லாம் காத்து, வெறும் காத்து…”

சந்தியாபாயின் குரல் நடுங்கியது.

அவள் கைகளைச் சேர்த்துப் பிடித்து அழுத்தினாள் சுதா. ”அந்தப் பெண் இப்போ அவங்களுக்கு ஃபோன் போட்டுச் சொல்லியிருக்க மாட்டாளா?”

“இல்லை. ஒரு சிநேகிதி வீட்டுக்குப் போய்விட்டு ராத்திரி இருந்துவிட்டு வருவேன்னு சொன்னேன் அவளிடம்.”

“ரொம்ப அவசரப்பட்டு எல்லாம் செய்திட்டீங்க, தாயி.”

“இல்லை, சுதா. அவங்க வந்ததும் அந்த சர்ட்டிஃபிகெட் வாங்கிடுவாங்கன்னு தெரிஞ்சதும் பயந்து போயிட்டேன்.”

”சரி, பார்க்கலாம்” என்றுவிட்டு எழுந்தாள் சுதா.

செல்லம்மா வந்து சமைக்க ஆரம்பித்திருந்தாள். ‘தாலு’க்கு வெங்காயம் வதக்கி, தாளிக்கும் மணம் கமழ்ந்தது வீடெங்கும்.

* * *

ஸ்டெல்லாவை சந்தியாபாயியுடன் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள் சுதா.

முதலில் மித்ராவின் கைபேசி எண்களை அழுத்தினாள்.

மித்ரா வீட்டில்தான் இருந்தாள். அவள் வேலை செய்யும் தொண்டு நிறுவனத்துக்கு இன்னும் கிளம்பவில்லை.

“மித்ரா, ஒரு பெண்மணியை அந்தேரி ஸ்டேஷனில் பார்த்தேன்” என்றுவிட்டு, விவரங்களைக் கூறியதும், “அவங்க பெயர் சந்தியாபாய்தானே?” என்று கேட்டாள்.

“ஆமாம்.”

“அவங்க போன வருஷம் எங்க கிட்ட வந்திருந்தாங்க. அது ஒரு சிக்கலான கேஸ் சுதா. நாங்க அவங்க குடும்பத்தோடு ரொம்பப் பேசிப் பார்த்தோம். அவங்க பிடிவாதமா இருக்காங்க.

இவங்க சொல்லுவது எதுவும் அவங்களுக்கு விளங்கலை. நீ லிடியா கிட்ட பேசிப் பாரு. அவள் நிறுவனம் சட்ட ரீதியா அணுக உதவி செய்யலாம்.”

“சரி.”

அடுத்ததாக லிடியாவுடன் தொடர்பு கொண்டாள்.

எல்லாவற்றையும் கேட்ட லிடியா, “சுதா, இந்த மாதிரி விஷயங்களில் தடாலடியாதான் ஏதாவது செய்ய முடியும். இல்லாவிட்டால் இழுத்தடிக்கும். கிருபா எட்வர்ட் கதை தெரியுமில்லையா? அவள் விஷயத்தில் செய்ததுதான் இதிலும் செய்யணும். அதுதான் சாத்தியம். அவங்க கிட்ட கேளு இது அவங்களுக்கு சம்மதமான்னுட்டு. அப்புறம் வீட்டுப் பத்திரம், நகை வித்த ரசீது, அவங்கப்பா தந்த செக் பற்றிய விவரங்கள், இதெல்லாம் இருக்கா அவங்ககிட்டேன்னுட்டு கேளு. அப்புறம் என்ன? வேறென்ன விஷயம்? துப்பறியும் வேலை எப்படிப் போகுது?”

கிருபா எட்வர்ட் விஷயத்தில் அவர்கள் எல்லோருமே முயற்சி செய்ய வேண்டி வந்தது. சுதாவுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும், இன்ஸ்பெக்டர் ஷெல்கேயின் மறைமுக உதவி தேவைப்பட்டதால் அவளும் அதில் இணைந்துகொண்டாள். கிருபாவை அவள் கணவன் கட்டிய துணியுடன் வெளியே அனுப்பிவிட்டான் ஒரு நாள். கிருபா கல்லூரியில் வேலை பார்த்தாள். மாணவிகளுக்குக் கிருபா என்றால் உயிர். மாணவர்களுக்கும். அதுதான் பொறுக்கவில்லை. மகனை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு பத்து வயது மகளுடன் விரட்டிவிட்டுவிட்டான். வெளிநாட்டில் இருந்த தோழி ஒருத்தியின் வீடு ஒன்று இருந்தது கொலாபாவில். அவளிடம் பேசி, சாவி வாங்கி, அங்கே போனாள். வெறும் காலி வீடு. லிடியாவைத் தொடர்புகொண்டாள். லிடியாவும் மித்ராவும் சுதா மூலமாக ஷெல்கேயைக் கலந்தாலோசித்தனர். வீட்டில் இருந்த ஸோபா, குளிர்பதனப்பெட்டி, டி.வி, கட்டில் மேசை எல்லாமே அவள் சீதனமாக வந்தவை. பள்ளியில் டீச்சராக இருந்த அவள் விதவைத் தாய் உழைத்து உழைத்துச் சேர்த்துச் செய்தது. அவன் தன்னுடன் இருத்திக்கொண்ட பையனோ அம்மா இல்லாமல் இருக்க முடியாதவன்.

திட்டம் போட ஒரு நாள்தான் ஆகியது.

காலையில் பையனின் பள்ளிக்குப் போய் பிரின்ஸிபாலிடம் அனுமதி வாங்கி அவனைப் பார்த்தபோது, கன்னத்தில் கைவிரல்களின் அடையாளம் சிவப்பாகப் பதிந்திருந்தது தெரிந்தது. “அப்பா குடிச்சுட்டு அடிச்சாரு” என்றான் தொண்டையடைக்க. நேரே போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப்போய் குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்கள். பிறகு பள்ளி விட்டதும் கொலாபா வீட்டுக்கு வரும்படிக் கூறினார்கள்.

பிறகு ஒரு லாரியுடன் கிருபாவின் வீட்டுக்குப் போனார்கள். கணவன் அலுவலகம் போயிருந்தான். சாவி இருந்தது கிருபாவிடம். அடித்துக்கொண்டே இருந்த தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. ஸோபா, டி.வி, குளிர்பதனப்பெட்டி, சமையலறை சாமான்கள், மெத்தைகளுடன் கட்டில், பீரோ, நகைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், துணிமணிகள் எல்லாம் லாரியில் ஏற்றப்பட்டன ஒரு மணி நேரத்தில். மகன் மாலை வரும்போது கொலாபா வீடு தயாராக இருந்தது.

சந்தியாபாய் விஷயம் வேறு. இதை வேறு மாதிரி அணுக வேண்டும். சந்தியாபாயியுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்டெல்லா எடுத்த குறிப்புகள் இருந்த குறிப்பேட்டுடன் கோவிந்த் ஷெல்கேயைக் கூப்பிட்டாள்.

“கோவிந்த், ரொம்ப பிஸியா?”

“நெவர் பிஸி ஃபார் மை தீதி.”

“கோவிந்த், ஒரு குடும்பப் பிரச்சினை.”

“உங்க குடும்பத்திலா? நரேன் பாய்ஸாஹேபுடன் நான் சண்டை போடட்டுமா?” சிரித்தார்.

“குடும்பம் என்றால் என் குடும்பம்தானா?” என்று கேட்டுவிட்டு விளக்கினாள்

“”ம்” என்றார்.

“ஏதாவது வழி இருக்கிறதா, கோவிந்த்?”

“நேர் வழி கிடையாது.”

“பின்னே?”

“தீதி, மௌஸி வீட்டுக்குப் போகட்டும். அங்கே வேலைக்கு வர பெண் ஒரு வாரம் வராதபடி பார்த்துக்கொள்ளலாம். அவள் பெயர் என்ன சொன்னீர்கள்?”

குறிப்பேட்டைப் பார்த்தாள்.

“மந்தா.”

“வீடு எங்கேயாம்? பக்கத்திலா?”

“கணேஷ் நகர்…”

“தனியாளா?”

“இல்லை. கணவன் ஆட்டோ டிரைவராம். மூணு குழந்தைகள். ரொம்ப நல்லவளாம்.”

“சரி. பாங்க் அக்கவுன்ட் கணவர் பெயரிலா இல்லை ஜாயின்ட் அக்கவுன்டா?”

“ஜாயின்ட் அக்கவுன்ட்தான்.”

“வீட்டுப் பத்திரங்கள் எங்கே இருக்கிறதாம்?”

“பாங்க் லாக்கர்லதான்.”

“சரி, அவர் கிட்டே நான் பேசலாமா?”

“இதோ கூப்பிடுகிறேன்” என்றுவிட்டு சந்தியாபாயியை அழைத்தாள் தொலைபேசியில் பேச.

கோவிந்த் ஷெல்கே கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார் சந்தியாபாய். பேசிவிட்டு சுதாவிடம், “அவர் சொல்வது சரிதான்” என்றார்.

வீட்டுக்குப் போகவும் மற்ற திட்டங்களுக்கும் ஒப்புக்கொண்டாலும், ஒரு விதத் தயக்கம் இருந்தது சந்தியாபாயிடம். அவர்களுக்கு உணவு எடுத்து வைத்த செல்லம்மா சுதாவிடம், “சுதாம்மா, நான் வேணா ஒரு ரெண்டு நாள் போய் அவங்களோட இருக்கவா? என்னமோ ஒரு மாதிரியா இருக்காங்களே?” என்றாள். அவள் கூறியதை சந்தியாபாயியிடம் கூறியதும் அவர் முகம் மலர்ந்தது. ‘சரி’ என்றார் உடனே.

பகலுணவுக்குப் பின் சுதா அவர்களை போரிவிலி வரை காரில் அழைத்துப் போனாள். வழியில் விடுதியிலிருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு, மேலும் இரண்டு நாட்கள் அறை வேண்டாம் என்று மேரியிடம் கூறிவிட்டு வந்தனர். செல்லம்மா வீட்டுக்குப் போய் இரண்டொரு நாட்களுக்கான துணிமணிகள் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

போரிவிலி சென்றடையும்போது மூன்று மணி. மந்தா சந்தியாபாயைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றாள். டி.வியில் மராட்டி தொடர் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தாள். பிறகு தயக்கத்துடன், “ஆஜி, யாரோ மினி பஸ்ஸில் சில பேரை ஷீர்டி, நாஸிக் கூட்டிட்டுப் போறாங்களாம் எங்க பஸ்தியில. ஏதோ நேர்த்திக் கடனாம். எனக்கு ஒரு வாரம் லீவு கிடைக்குமா?”

“ஒரு வாரமா?”

“சுனிலோட ஆட்டோ லைசன்ஸ்ல ஏதோ பிரச்சினையாம். இப்பத்தான் ஃபோன் போட்டார். ஷீர்டி போயிட்டு வந்து அதைப் பார்க்கணும். ப்ளீஸ் ஆஜி…”

“சரி போ. இந்த ஆன்ட்டி எனக்குத் துணையா இருப்பாங்க.”

ஷீர்டி பயணம் ஷெல்கேயின் ஏற்பாடாக இருக்கும் என்று தோன்றியது.

மந்தா கிளம்பினாள்.

“மௌஸி, பாங்க் லாக்கர் சாவி எங்கே இருக்கு?” என்று சுதா கேட்டதும், உள் பீரோவில் இருப்பதாகக் கூறினார் சந்தியாபாய்.

“சரி மௌஸி, நாளைக்கு நான் ஒரு பத்து மணிக்கு வரேன். செல்லம்மா உங்களோட இருப்பாங்க. அவங்க என் அக்கா மாதிரி. அருணாவை வளர்த்ததே அவங்கதான்.”

சந்தியாபாய் முதல் முறையாக முகம் முற்றிலும் மலர்ந்து புன்னகைத்தார்.

* * *

ங்கிப் பயணம் சுலபமாக அமைந்து போயிற்று. வீட்டுப் பத்திரங்கள் ஒரு தனிக் கோப்பில் இருந்தன தனிப்பூட்டுப் பெட்டியில். வேறு கிளையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து ஓய்வு பெற்றிருந்த மானேஜர் ஒருவர் மூலம் ஷெல்கே இந்தக் கிளையில் இருந்த ஒருவரை அடையாளம் காட்டியிருந்தார் மற்ற விவரங்களை விசாரிக்க. அவரை அணுகியதும், 1982ம் ஆண்டில் சந்தியாபாயியின் தந்தை தந்த காசோலை பற்றிய விவரங்களையும் மற்ற விவரங்களையும் நகலெடுத்துத் தந்தார். வீட்டுக்கு வந்ததும் பழைய வங்கிப் புத்தகங்கள் பத்திரமாக அடுக்கி வைத்திருந்த டிராயரைத் திறந்து, 1982க்கான இரு புத்தகங்களை எடுத்து வங்கியிலிருந்து எடுத்து வந்திருந்த கோப்பில் வைத்தார்.

பிறகு கல்பாதேவி நோக்கிப் பயணம். அந்த நகைக்கடை இருக்குமா என்று கூடத் தெரியவில்லை. கல்பாதேவியில் நுழைந்ததும், நகை விற்க வந்த நாளை நினைவு கூர்ந்தார் சந்தியாபாய்.

“மழைக்காலம் அப்போதான் முடிந்திருந்தது. ஒரு வெல்வெட் சுருக்குப் பையில் கொண்டுவந்திருந்தோம் நகைகளை. தாதரிலிருந்து டாக்ஸி பிடிச்சு வந்தோம். ரயில் வண்டி நெரிசல்ல நகைகள் பத்திரமா கொண்டுவர முடியாது, இல்லையா? மஹேஷையும் மங்கேஷையும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்திருந்தோம். அகர்வால் நகைக் கடைக்கு வந்து அவங்க நகையை எடை போட்டுப் பார்த்தபோது பிரகாஷின் முகம் வாடியிருந்தது. ஏதோ ஒரு பெரிய தப்பு பண்ணுவது போல அவருக்கு எண்ணம். செக்தான் தந்தாங்க. எழுபத்தஞ்சாயிரம் ரொம்பப் பெரிய தொகை அப்போ. ஆயி தந்த சம்பாகலி ஹார் விலையே இருபதாயிரத்துக்கு இருக்கும். பூ மொட்டு நெக்லஸ் அது. கல்லு மாதிரி கனம். செக்கை எடுத்துட்டு, இங்கே ராஜஸ்தான் சாப்பாட்டுக்கடை ஒண்ணு உண்டு, அங்கெ போயி பூரி-ஹல்வா சாப்பிட்டோம். கூடவே மூங்தால் பகோடா. இன்னும் ஞாபகம் இருக்கு.”

அகர்வால் நகைக்கடை இன்னும் பெரிதாக்கப்பட்டிருந்தது. கல்லாவில் இருந்த இளைஞனை அணுகி விசாரித்ததும், “இப்போ நாங்க எல்லா கணக்கையும் கம்ப்யூடர்ல போட்டுவிடுகிறோம், ஆன்ட்டி. 1982 அக்டோபரில் நான் பிறக்கவே இல்லை” என்றுவிட்டுச் சிரித்தான். “டாடியும் இப்போது இல்லை” என்றவன் சிறிது யோசித்துவிட்டு, “என் சாச்சா ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்க்கிறீர்களா? அவர் எவ்வளவு சொல்லியும் பழைய மார்வாடிப் பழக்கத்தை விடாமல் எல்லாவற்றையும் ஆரஞ்சு துணியில் கட்டிக் கட்டி வைப்பார்“ என்றான். கடைச் சிப்பந்தி ஒருவரை அழைத்து பின்கட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னான்.
பின்கட்டில் ஒரு வளைந்த இரும்புப் படியில் ஏறி, ஒரு விசாலமான அறைக்குள் நுழைந்தனர். ஏ.ஸி அறை. திறந்த இரும்பு அலமாரிகளில் ஆரஞ்சுத் துணியில் கட்டப்பட்ட கோப்புகள், சிவப்புத் துணி அட்டை போட்டு, வெள்ளைக் கயிற்றால் கட்டப்பட்ட கணக்குப் புத்தகங்கள். அறையின் மூலையில் ஒரு சாய்வு நாற்காலியில் வெள்ளைப் பைஜாமா குர்த்தாவில் ஒரு கிழவர் அமர்ந்திருந்தார். இவர்களுடன் வந்த கடைச் சிப்பந்தி அவர் பக்கம் குனிந்து செவியில் இவர்கள் வந்திருக்கும் காரணம் பற்றிக் கூறினார்.

இருவரையும் பார்த்த அவர், கடைச் சிப்பந்தியிடம் மூலையில் இருந்த இரும்பு அலமாரியின் மேல் தட்டில் இரண்டாவதாக இருந்த கட்டை எடுக்கச் சொன்னார். அவர் எடுத்து வந்ததும், அதை நிதானமாகப் பிரித்தார். தடித்த, சுருக்கங்கள் ஏறிய ஆள்காட்டிவிரலால் கோப்புகளைப் புரட்டி ஒன்றை எடுத்து, சிப்பந்தி கூறிய அக்டோபர் மாதத்துக்கான விவரங்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

“பேர் என்ன சொன்னீங்க?”

“சந்தியாபாய் பவார்.”

“ரசீது உங்க பேர்லயா தந்தோம்?”

“நினைவில்லை. அவர் பேர்ல கூட இருக்கலாம். பிரகாஷ் பவார்.”

ஆள்காட்டிவிரல் நகர்ந்து நகர்ந்து தேடியது.

கடைசியில், “இதோ, உங்க பேர்லதான் இருக்கு” என்றபடி காண்பித்தார்.

நகைப்பட்டியலுடன் ஒரு ரசீது.

 1. புடாலா
 2. மூங்காச்சி ஹார்
 3. குல்ஸரி
 4. வஜ்ரடிக்
 5. பேல்பான்
 6. மோஹன் மாலா
 7. சூர்ய ஹார்
 8. கோல்ஹாபூரி ஸாஸ்
 9. புட்லிஹார்
 10. சம்பாகலி ஹார்

மெல்ல அதை கோப்புப் பட்டியிலிருந்து விடுவித்து கடைச் சிப்பந்தியிடம் தந்தார்.

“ஸீராக்ஸ் எடுத்துக் கொடுத்துவிடு. அப்புறம் இங்கே கொண்டா திருப்பி” என்றார்.

அவர் எடுத்துக்கொண்டு போனார்.

சந்தியாபாயியை உற்றுப் பார்த்தார். அவர் பக்கத்திலிருந்த சன்னல் பக்கம் திரும்பி வெளியே பார்த்தபடி,

”சல் ஜாக் முஸாஃபிர் போர் பயி
அப் ரேன் கஹான் ஜோ சோவத் ஹை”

என்று மெல்லக் கூறினார். இவர்கள் பக்கம் திரும்பி, பஜன் பாட்டு. கபீர் பாட்டா கூட இருக்கலாம். ‘சரி, எழுந்திரு பயணியே, இது தூங்கும் நேரம் இல்லை’ என்கிறார்” என விளக்கினார்.

”இன்னும் சொல்றார்:

’ஜோ கல் கர்னா ஹை ஆஜ் கர்லே
ஜோ ஆஜ் கரே வோ அப் கரே’

’நாளைக்குச் செய்வதை இன்றைக்குச் செய், இன்றைக்குச் செய்வதை இப்போதே செய்’ சொல்வது சரிதானே?”

”அடுத்தது கேளுங்க:

‘ஜப் சிடியா நே சுக் கேத் லியா
ஃபிர் பச்தாயே க்யா ஹோவத் ஹை’

குருவிகள் வயலைத் தின்ன பிறகு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம், இல்லையா?”

கடைச் சிப்பந்தி நகலுடன் வந்தார். மூலக் காகிதங்களைப் பணிவுடன் பெரியவரிடம் தந்தார். பிறகு அவர் சொல்படி கோப்பில் வைத்துக் கட்டி அலமாரியில் மேல் தட்டில் அதே இடத்தில் வைத்தார்.

ஒரு பையன் மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டுவந்தான். மசாலா சாய்.

பெரியவரே தந்தார் அவர்களிடம்.

சந்தியாபாயியிடம், “எல்லாம் நல்லபடி நடக்கும்” என்றார் ஜோசியம் சொல்வதுபோல.

சந்தியாபாய் சுருக்கமாக இந்த ரசீதின் அவசியம் குறித்துச் சொன்னவுடன், “சொத்து விஷயத்தில் ரெண்டே ரெண்டு வழிதான் உண்டு. ஒண்ணு, மார்ல ஏறி உட்கார்ந்து உனக்கு உரிமையானதை வாங்கணும். இல்லையா, துறக்கணும். பெயரே சந்தியா. துர்க்கையோட 108 நாமங்களிலே ஒரு நாமம். சிங்கத்து மேல ஏற வேண்டியதுதானே?” என்றுவிட்டுச் சிரித்தார்.

வெளியே வந்ததும், அதே இடத்தில் இருந்த ராஜஸ்தான் சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டனர். அதே பூரி-ஹல்வா இருந்தது மூங்தால் பகோடாவுடன். கூடவே பொடியாக நறுக்கி, சிவக்க வறுத்த உருளைக்கிழங்கும் ஊறுகாயும். பேசியபடி ரசித்துச் சாப்பிட்டனர். நகைப் பட்டியலை நினைவு கூர்ந்தாள் சந்தியாபாய்.

“எத்தனை வகை நகை அப்பல்லாம்! புடாலா என்ன தெரியுமா? கறுப்புக் கயிறும் தங்கச் சரடுமாய் அதில் கோர்த்த தங்கக் காசு மாலை. குல்ஸரி ஒற்றைத் தங்கச் சரடில் செய்த சோக்கர். தூஷியும் சோக்கர்தான். பெரிய சோக்கர். அதை சாந்துவுக்குக் கொடுத்தாள் ஆயி. கோல்ஹாபூரி ஸாஸ் வகைவகையா சின்னச் சின்ன பதக்கம் கோர்த்தது. 21 வகை பதக்கம் இருக்கும் அதுல. பத்து பதக்கம் தசாவதாரத்தையும், எட்டு அஷ்ட மங்கலத்தையும் குறிக்கிறது. அப்புறம் ரெண்டு சிவப்பும் பச்சையுமா. ஒரு பெரிய பதக்கம் இருக்கும் கீழே. தோராலான்னு சொல்லுவோம். கெட்ட சக்திகள் நெருங்காம தடுக்க. மற்ற மாலைகள் எல்லாம் அஞ்சஞ்சு வடத்துல மாலைகள் இலை மாதிரியும் தானியம் மாதிரியும். கோல்ஹாபூர்தான் நகைகள் செய்வதுல பேர்போனது. ஆஜி ஆயிக்கு ஏகப்பட்ட நகைகள் தந்திருந்தாங்க. எனக்குத் தந்த மாதிரியே வேற டிசைன் நகை சாந்துவுக்கு. கமர்பந்தும் அவளுக்குத்தான். இடுப்பில போடறது. அவளும் அதையெல்லாம் குழந்தைகள் வெளிநாடு போய் படிக்க விற்கவேண்டி வந்தது. அவள் வித்தபோது இருபது லட்சம் வரைக்கும் கிடைச்சுது.”

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஷெல்கேயின் அழைப்பு வந்தது.

* * *

டி.எஸ்.பி ஜோசப் பின்டோவின் அண்ணா போரிவிலியில் ஒரு வீடு வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாராம். அவர் ஒரு பெரிய தொழிலதிபர். அவர் கம்பெனி ஒன்றுக்காக வாங்க நினைக்கிறாராம். விலை படிந்து வந்தால் முன் பணமாக ஒரு தொகை தந்து மீதிப் பணத்தை வீடு கைக்கு வந்தவுடன் தருவதாகச் சொல்கிறார். ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளலாம் வீட்டைக் காலி செய்து தர. அல்லது வீட்டை அடமானமாக வைத்து சந்தியாபாயிக்கு வேண்டிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். அவர் குடும்பம் திரும்பி வந்ததும் அந்தத் தொகையைத் திருப்பித் தந்து வீட்டை மீட்டுக்கொள்ளலாம் அல்லது விற்பது குறித்து யோசிக்கலாம். சந்தியாபாயிக்கு சரி என்று பட்டால் தேவையான பத்திரங்கள் தயார் செய்ய ஒரு வக்கீலையும் உடன் அழைத்து வருவார். ஷெல்கேயுடனான உரையாடலின் சாராம்சம் இதுதான்.

கை கழுவிவிட்டு வந்த சந்தியாபாய், சோம்பும் சர்க்கரையும் கலந்த தூளை வாயில் போட்டுக்கொண்டு, கைப்பையைத் திறந்த சுதாவைத் தடுத்துவிட்டு, தானே சாப்பாட்டுக்கான பணத்தைத் தந்தார்.

வெளியே வந்து காரில் அமர்ந்ததும், “ஷெல்கே சொல்றபடி செய்யலாமா, மௌஸி?” என்றாள்.

“செய்யலாம். அடமானமே வைக்கலாம்னு பார்க்கிறேன். நல்ல யோசனை அது. இந்த வீட்டை விற்பது பற்றி அவங்க தீர்மானம் செய்யட்டும். வித்தாலும் சரிதான். மீட்டுக்கொண்டாலும் சரிதான். அது அவங்க முடிவு.”

காரை டாக்டர் மனோரமா மெஹ்தா வீட்டுக்கு ஓட்டினாள். மன நல மருத்துவர். சுதாவின் தோழி. வீட்டிலேயே அவள் மருத்துவ நிலையமும் இருந்தது. சந்தியாபாயியுடன் விரிவாகப் பேசிவிட்டு, அவர் நல்ல ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதாகச் சான்றிதழ் தந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் சிரித்த முகத்துடன் செல்லம்மாள் கதவைத் திறந்தாள். அவர்கள் உள்ளே வந்ததும், “ரெண்டு தடவை ஃபோன் அடிச்சுது. நான் எடுக்கலை” என்றாள் சந்தியாபாயியிடம் ஹிந்தியில்.

தன் கைப்பையிலிருந்த கைபேசியின் ஒலியை மௌனமாக்கியது ஞாபகம் வந்தது சந்தியாபாயிக்கு. எடுத்து, கணவரின் எண்களை அழுத்திவிட்டுப் பேசினார். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார்.

இஞ்சியும் துளசியும் போட்ட தேநீர் தயாரித்து அவர்களுக்குத் தந்து, ஒரு கோப்பையுடன் தானும் அமர்ந்துகொண்டாள் செல்லம்மாள். பேச்சு அவரவர் வாழ்க்கை பற்றிப் போயிற்று.

மாலையில் வக்கீலுடன் ஜான் பின்டோ வந்தார். சந்தியாபாய் வீட்டுப் பத்திரங்களைக் காட்டி தற்போதைக்கு அடமானம் வைப்பதாகவும், குடும்பத்தார் விருப்பப்படி மற்றவை நடக்கும் என்று கூறியதை ஏற்றுக்கொண்டார். வீடு அவருக்குப் பிடித்திருந்தது. விலையும் ஒத்து வந்தது. வாங்கவே விரும்பினார். 60 சதவிகிதம் வெள்ளைப் பணம் 40 சதவிகிதம் கறுப்புப் பணம் என்ற வழக்கமான மும்பாய் பாணி கொடுக்கல்-வாங்கலாக இல்லாமல், 100 சதவிகிதம் வெள்ளைப் பணமாக, காசோலை தருவதில் அவருக்கு உடன்பாடுதான். ஆனால் சந்தியாபாயியின் மன உணர்வுகளை மதித்தார் என்பதால் அடமானத்துக்கு ஒத்துக்கொண்டார். சந்தியாபாயியின் குடும்பம் தீர்மானிக்க எடுக்கும் ஒரு மாத கால வேளைக்கு வட்டி வசூலிக்கப் போவதில்லை என்ற சலுகையையும் தந்தார். அவர் தம்பியின் அபிமான இன்ஸ்பெக்டர் ஷெல்கேயின் வேண்டுகோளை ஏற்று இதைச் செய்வதாகக் கூறினார்.

சந்தியாபாய் வக்கீல் தயார் செய்த பத்திரங்களில் கையழுத்துப் போட்டுவிட்டு, ஜான் பின்டோவிடம் இன்னொரு வேண்டுகோள் வைத்தார். அடமானத் தொகையாக சந்தியாபாய் அந்த வீட்டின் விலையின் ஐந்து பங்கில் இரண்டு பங்கு கேட்டிருந்தார். அதில் ஒரு பங்கை அவருக்குக் காசோலையாகவும், இன்னொரு பங்கை வங்கியின் கூட்டுக் கணக்குக்கு நேரடி பணமாற்றமாகவும் செய்ய முடியுமா? அது அவர் கணவருக்கு. மீதம் மூன்று பங்குகளை தன் மகன்களுக்குத் தர விரும்புவதை ஒரு சட்ட பூர்வமான வேண்டுகோளாக, ஓர் உயில்போல் அவருடைய வக்கீல் தயார் செய்ய முடியுமா?

ஜான் பின்டோ சிரித்தார். அவருக்குத் தன் கணவர் பற்றிய கவலை இருப்பது தெரிகிறது என்றார். வக்கீல் செய்ய வேண்டியதைச் செய்தபின் ஜான் பின்டோ எழுந்து நின்றுகொண்டு, குனிந்து வணங்கி, காசோலையைத் தந்தார். வங்கிக் கணக்குக்குப் பண மாற்றம் உடனடியாகச் செய்துவிடுவதாகச் சொன்னார்.

செல்லம்மா உள்ளே போய் எல்லோருக்கும் பாயசம் எடுத்து வந்தாள். எப்போது உள்ளே போய் தயாரித்தாள் என்றே தெரியவில்லை. ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் மணத்துடன் பாயசம் இனித்தது.

* * *

ன் சாமான்களை இரு பெட்டிகளில் கட்டிமுடித்தார் சந்தியாபாய். கர்ஜத் போக வாடகை வேன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். சுதா, செல்லம்மா, சுதாவின் மகள் அருணா, ஸ்டெல்லா எல்லோருமாகப் போவதாக ஏற்பாடு.

கிளம்புவதற்கு முன் இரவு தன் கணவருக்கு மராட்டியில் எழுதிய கடிதத்தை சுதாவிடம் காட்டினார். சுதா தயங்கியபோது, “இது வெறும் கடிதம் இல்லை சுதா. இது ஒரு வாழ்க்கைக் குறிப்பு. இதை உங்க எல்லார் கிட்டேயும் பகிர்ந்துக்க ஆசைப் படறேன். படியேன்.”

“மராட்டி நல்லா பேசுவேன். வேகமாப் படிக்கத் தெரியாது, மௌஸி.”

“சரி, நான் படிச்சுக் காட்டறேன்” என்றார்.

எல்லோரும் சுற்றி அமர்ந்தனர். அவர் படிக்க ஆரம்பித்ததும், “மௌஸி, நீங்கள் உங்க கணவரை நீன்னுதான் சொல்வீங்களா?” என்று கேட்டாள் அருணா. ”ஆமாம், தனியாக இருக்கும்போதும், கடிதம் எழுதும்போதும் அப்படித்தான் கூப்பிடுவேன். அது அவருக்குப் பிடிக்கும். எனக்கும்” என்றார்.

மீண்டும் ஆரம்பத்திலிருந்து கணவனை ஒருமையில் விளிக்கும் அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார்.

என் பிரிய மித்ரனான பிரகாஷ்,

ஒரு மழைக் காலத்தில் கர்ஜத்தில் நாம் வண்டி ஏறினோம் மும்பாய் வர. வழியில் எல்லாம் வெள்ளைப் பாலாய் நீர்வீழ்ச்சிகள். பச்சைக் கடலாய் வயல்களும் மரங்களும். உன் ஆயியும் பாபாவும் நம் எதிரே இருப்பதைப் பொருட்படுத்தாமல், என் தோள் மேல் கைபோட்டு, “எப்போதும் உன் பக்கத்துல நான் இருப்பேன்” என்றாய். முப்பத்தெட்டு ஆண்டுகளாக அந்தச் சொல்லைக் காப்பாற்றி வருகிறாய். உன் மேல் அன்பு பெருகியவாறே இருக்கிறது. நீ ஓர் அபூர்வ மனிதன். நான் ஒரு சாதாரண மனுஷி. உன் தோள் மட்டும் தலை சாய்க்க இருந்தால் வேறு எதுவும் தேவை இல்லை என்று நினைத்தவள். ஆனால் உள்ளுக்குள்ளே ஊறியபடி ஓர் ஆசை இருந்தது. மண் ஆசை. நீ ஓய்வு பெற்றதுமே சொல்ல நினைத்தேன். சாந்து என்னிடம் கேட்டவுடன் அந்த ஆசை வானத்தைத் தொடும் விருட்சமாக வளர்ந்தது.

நான் எனக்காக வாழக் கூடாதா? அப்படி நினைப்பது மனப்பிறழ்வா? வேண்டியது சமைத்துவிட்டேன். வேண்டிய அளவு குடும்பத்துக்கு எல்லாம் செய்துவிட்டேன். குழந்தை வளர்ப்பு, கொண்டாட்டங்கள், அதற்கான பட்சணங்கள், வீட்டுக் கணக்கு வழக்குகள், பிரசவங்கள், அதன் பிறகு செய்யும் பேணுகை எல்லாவற்றையும் முழு மனத்துடன், எந்தக் குறையும் இல்லாமல் செய்தேன். நீயும் ஒரு குறையும் கூறியவன் இல்லை. எனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளவில்லை. தேவையும் இருக்கவில்லை. ஆனால் இப்போது வேறு பாதையில் போக ஆசைப்படுகிறேன். பயணப்படாத பாதை. அதில் ஓர் அறுபது வயதுப் பெண்மணியின் பயணம் ஆரம்பமாகப் போகிறது. பாதை கொஞ்சம் கரடுமுரடுதான். விழவும் செய்யலாம். ஆனால் எழுந்திருப்பேன். எழுந்து மீண்டும் நடப்பேன்.

என் கண்முன் ஒரு மூலிகைத் தோட்டம் விரிகிறது. ஜாஸ்வந்தியும் ஸதாஃபுலியும் ரோஜாவும் மல்லிகையும் பூக்கின்றன. சாந்து என்னை ஒட்டி நிற்கிறாள்.

நான் இந்த வீட்டை அடமானம் வைத்து நம் இருவருக்குரிய பங்கை வாங்கிக்கொண்டுவிட்டேன். நம் வங்கிக் கணக்கில் உனக்கான பங்கு இருக்கிறது. எல்லாப் பத்திரங்களும் இந்தக் கடிதத்துடன். நம் பிள்ளைகளும் மருமகள்களும் தங்கம் போன்றவர்கள். நம்மை மதிப்பவர்கள். நம் மேல் அன்பு செலுத்துபவர்கள். அவர்களிடம் சொல், ஆயி முழு நினைவுடன், அவர்கள் மேல் எந்தக் கோபமும் இல்லாமல், குறைகளும் இல்லாமல் இதைச் செய்தாள் என்று. ஒருத்தி ஒரு தனிப் பாதையைத் தேர்ந்தெடுக்க கோபமும் சோகமும் இருக்க வேண்டுமா என்ன? திருப்தியும் மகிழ்ச்சியும் சாந்தியும் இருந்தாலும் கூட, கனவுகளும் அவற்றை நிறைவேற்ற ஆசையும் வரலாம் இல்லையா?

என் வாழ்க்கைக்கான சாமான்கள் இரு பெட்டிகளில் அடங்கிவிட்டன. அதிகப்படியாக எதுவும் இல்லை. ஆனால் ஒரு ரோஜா வண்ண நகைப்பெட்டியில் நீ முதல்முதலாக எனக்குப் பரிசளித்த லக்ஷ்மிஹாரம் இருக்கிறது. முதல் ஆண்டு மண நாளில் நீ வாங்கித் தந்தது. இரவுகளில் பல முறை வெறும் லக்ஷ்மிஹாரத்துடன் உன் அருகில் கிடந்திருக்கிறேன். எப்படிப்பட்ட இரவுகள் அவை! அதனால்தான் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். உனக்கான என் அன்பு என்றும் குறையாது. வற்றாது.

அந்தக் கபீர் பாட்டு நினைவிருக்கிறதா? குமார் கந்தர்வா பாடியது? ’உட் ஜாயேகா ஹன்ஸ் அகேலா…’

அன்னம் பறந்துவிடும் தனியாக
கண்காட்சியாய் விரியும் சந்தை இவ்வுலகம்
இலை மரத்திலிருந்து விழும்போது
யாருக்குத் தெரியும்
காற்றில் அலைபட்டு அது
எங்கு விழுமென்று?
அன்னம் பறந்துவிடும் தனியாக

இந்த அன்னம் பறக்க ஆரம்பித்தாகிவிட்டது. உடன் இருப்பது எல்லையில்லா விசும்பு மட்டுமே.

உன்
சந்தியா

படித்து முடித்ததும் ஒரு மௌனம் நிலவியது.

ஸ்டெல்லாவும் அருணாவும் மெல்ல எழுந்து போய் சந்தியாபாயியை இரு புறத்திலிருந்தும் அணைத்துக்கொண்டனர். இருவர் இமைகளும் நனைந்திருந்தன. சந்தியாபாய் ஒரு ராஜபறவை போல் நடுவே அமர்ந்திருந்தார்.

0 Replies to “அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு”

 1. மந்திரி, பாபா சம்மந்தமான லேசா நகைச்சுவை, சுதாவின் துப்பறியும் வேலை என்று எல்லாம் கன கச்சியதமாய் சேர்ந்து படிக்க மிக சுவாரசியமாய் வந்துள்ளது. தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு பெண்களுக்கும் இன்னும் கேள்வி குறிதான் 🙁

 2. ஆசிரியர் குழுவினருக்கு, கமெண்ட் மாடரேஷன் வைத்திருக்கிறீர்கள். இதில் 6+2=8 போன்றவையும், பாஸ்வோட்டும் எதுக்கு? கமெண்டு போட அலுப்பாய் இருக்கு

 3. ஆசிரியர் / சொல்வனம்
  //அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு// வாசித்தமை குறித்து……
  வியந்து படிக்க ஆரத்த நான்
  வியப்போடவே முடித்தேன்.
  சகோதரி அம்பையை மெச்ச எனக்கு இலக்கிய அனுபவம் போதாது.
  ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
  – தாஜ்

 4. WordPress brings hoards of spammers, if we do not have some sort if captcha. The best captcha plugin is not free. It asks to pay dollars for its subscription service. Since, we are using a free version, the captcha algorithm is easily beatable by robots. If we do not have both, then we will get more spam in our inbox. As of now itself, we still get spam comments; in spite of this two step humanization.
  For a human, who wants to truly tell their opinion, even a seven step hurdle will be like a simple puzzle : )

 5. விறுவிறுப்புடன் அருமையாக இருந்தது கதை.ஒருத்தி ஒரு தனிப் பாதையைத் தேர்ந்தெடுக்க கோபமும் சோகமும் இருக்க வேண்டுமா என்ன? திருப்தியும் மகிழ்ச்சியும் சாந்தியும் இருந்தாலும் கூட, கனவுகளும் அவற்றை நிறைவேற்ற ஆசையும் வரலாம் இல்லையா? .நன்றி.
  பொன்.கந்தசாமி.

 6. கதை படித்து முடிக்கும் தருவாயில் மனம் நெகிழ்வாக இருக்கிறது. 60 வயதிலாவது தன் மனம் விரும்பும் பாதையை தேர்ந்தெடுக்கும் இந்தப் பெண்மணி கதாபாத்திரத்தப் பாராட்டுகிறேன். அம்பை அவர்களால் மட்டும் எப்படி 20-30 ஆண்டுகளுக்குப் பின் இருக்கும் பெண்ணின் உலகைக் கண் முன் கொண்டு வர முடிகிறது.
  “திருப்தியும் மகிழ்ச்சியும் சாந்தியும் இருந்தாலும் கூட, கனவுகளும் அவற்றை நிறைவேற்ற ஆசையும் வரலாம் இல்லையா? ” – போன்ற நேர்மறை சிந்தனைகளை வரவேற்கிறேன்.

 7. பெரும்பாலும் பெண்கள் பிரச்சினை குறித்த கதைகள் அவற்றின் அடியாழம் வரை சென்று அலசி ஆராய்ந்து எதிர்மறைவிளைவுடன் விரக்தியில்போய் முடியும். இந்தக் கதை அப்படி இல்லை. இதில் ஒரு பிரச்சினையும் அதற்கான தீர்வும் உள்ளது.எப்பொழுதுமே வாசிப்புதன்மை இழக்காத அம்பையின் நடை இந்தக் கதையிலும் செம்மையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.