வழக்கம் போல் கடைசி ஸ்டாப்பில் இறங்க நான் மட்டும்தான் இருந்தேன். “Have a good evening yourself” வாக்கியம் முழுதாகக் கேட்கவில்லை. மூடப்பட்ட கதவின் பின் மௌனமாகக் கையசைத்த ட்ரைவருக்கு பதில் அசைப்பு செய்தவாறே மெல்ல குல்லாயை இழுத்துவிட்டு நடந்தேன்.
பத்து பதினைந்து அடிகளுக்குப்பின் நான் குடியிருக்கும் தெருவினுள் திரும்பினேன்.
Delimonds street என்ற தெருப் பலகையின் அருகில் தெரு விளக்கின் அடியில் சற்று நின்று சிரமப்பட்டு இடது கை க்ளவுஸிற்கும் ஜாக்கெட்டிற்கும் இடையில் இடைவெளி உண்டாக்கி மணி பார்த்தேன். தெரு விளக்கு மஞ்சளாக 17:45 தெரிந்தது.
தெருவின் இரு கரைகளிலும் ஒரே மாதிரி தொட்டுக்கொண்டு கட்டப்பட்ட வீடுகள். ஒரு பிரமாண்ட அச்சில் தெருவின் முதல் வீட்டை வார்த்து, பின் கல்லையும் மண்ணையும் அச்சில் நிரப்பிப் படபடவெனத் தெருவில் அடுத்தடுத்து அச்சை கவிழ்த்தாற் போல். எதிர் சாரியிலும் அதே அச்சுதான். அச்சில் மரமும் உண்டு, புகைப்போக்கியும் உண்டு.
மஞ்சள் தெரு விளக்குகள் மவுனமாக தலை குனிந்து தத்தம் எல்லைகளில் மட்டும் வீசிக்கொண்டிருந்தன.
நான் ஒவ்வொரு எல்லையாகத் தாண்டி இருளும் மஞ்சளுமாக நிறம் மாறி மெல்ல நடந்து தெருவின் கடைசியை நெருங்கினேன். நெருங்க, நெருங்க அந்த தனியான (detached) வீடும் வாசலின் முன் நிற்கும் மரமும் பெரிதாகிக்கொண்டே வந்தது.
அந்த ஒற்றை மரத்தை, பல மாதங்களாக உபயோகித்த ஷேவிங் பிரஷைப் போல் தெரியும் மரத்தைப் பார்த்தேன். இலைகளே இல்லாத, வெறும் குச்சிகள் கொண்ட மூன்று, நான்கு மாடிகள் உயரமிருக்கும் ராட்சத பிரஷ்.
நானும் கடந்த இரு மாதங்களாகப் பார்க்கிறேன், வேறு எது போன்றும் தோன்றவில்லை. ஒருவேளை வேனிற் காலம் அல்லது வெயில் காலத்தில் இதைப் பார்த்திருந்தால் வேறு மாதிரி தோன்றியிருக்குமோ என்னவோ.
விளக்குகள் எதுவும் எரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது அந்த வீடு. முன் நெற்றியில் 1894 என்று புகை மூட்டத்தில் மங்கலாகத் தெரிந்தது.
சின்ன மரக்கதவை தள்ளித் திறந்து முன் தோட்டத்தைக்கடந்து கதவை நெருங்கும்போது தானியங்கி முன் விளக்கு எரிந்தது. சாவியை கொண்டு கதவைத் திறந்து வீட்டினுள் இரு காலடிகள்தான் வைத்திருப்பேன்.
பின் சட்டெனத் திரும்பி வெளியே வந்து அவசர அவசரமாக ஆர்வமாக தெருவைப் பார்த்தேன். தெரு, மரம், வீடுகள் விளக்குகள் எல்லாம் அப்படியே இருந்தன. தெருவின் இன்னொரு பக்கத்தில் வெறும் காடுதான்.
என்னை அறியாமலேயே இப்படிச் செய்திருக்கிறேன். மனதில் மெல்லிய திடுக்கிடல் எழுந்தது. வெகு நாட்களுக்குப்பின், வெகு, வெகு நாட்களுக்குப்பின் இப்படிச் செய்திருக்கிறேன்…
மறுபடியும் திரும்பி வீட்டினுள் நுழைந்தேன். சற்று நீண்ட, குறுகிய ஹால்வே. இருவர் சேர்ந்தாற்போல் நடக்கமுடியாது.
மெல்லிய, புழுக்க, மட்கிய கார்ப்பெட் வாசனை தீர்க்கமாக அடித்தது. முதன்முறை வீட்டிற்கு நுழைந்தபோது எங்கோ இந்த வாசனையை இதற்கு முன் உணர்ந்திருக்கிறோமே என்று தோன்றியது. சிறிது நேரத்தில் நினைவிற்கு வந்துவிட்டது. சின்ன வயதில் ஊட்டியில் கவர்னர் பங்களாவில்தான் இந்த வாசனையை நுகர்ந்திருக்கிறேன். நடராஜ பெரியப்பாவின் பொதுப்பணித்துறை நண்பருடன் நடையாய் நடந்து அந்த கவர்னர் பங்களாவிற்குப் போனோம். கூட வந்தவர் ஒவ்வொரு அறையிலும் இடத்திலும் என்ன பட ஷூட்டிங், எந்த நடிகர் என்று சொல்லிக்கொண்டே சென்றார். அதெல்லாம் நினைவில்லை. அந்த கார்ப்பெட் வாசனையும் புலி, சிங்க முனைகள் கொண்ட மர நாற்காலிகளும் மட்டும் நினைவிருக்கிறது…
வீட்டினுள் வெம்மையாக இருந்தது. லியம் அப்போதுதான் வேலைக்குப் போயிருக்கவேண்டும். ஹீட்டரை அணைக்காமலேயே போயிருக்கிறார். என்னதான் ஷேரிங் அக்காமடேஷன், வீட்டுச் சொந்தக்கார்தான் காஸ்ஸிற்கு பணம் செலுத்துபவராக இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம்தான்.
கையில், தோளில் இருந்த பைகளை வரவேற்பு அறையில் வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தேன். என்ன செய்திருக்கிறேன், இங்கிலாந்திற்கு வந்தபின் இதுதான் முதல் முறை…யோசித்துப்பார்த்தால் கடைசியாக எப்போது இப்படிச் செய்தேன்? நவீன் திருமணத்திற்காக தர்மபுரி போயிருந்தபோது? அது நடந்து ஐந்தாறு வருடங்கள் ஆகியிருக்குமே? அதற்கடுத்த மூன்று நாட்கள் நான் இப்படியே இருந்ததை கண்டுகொண்டு அம்மா மாத்திரை எடுத்துக்கொள்ள கெஞ்சினது நினைவிற்கு வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக சென்னை வியர்வையும், தும்மலும் நினைவில் வரும்போது…
சட்டென கண்கள் பார்ப்பதை உணர்ந்தேன். லிவிங் அறைச்சுவரின் பெரிய கடும் சிவப்பு பூக்கள் வால்பேப்பர். சற்று கவனித்தால் ஆங்காங்கே கிழிய ஆரம்பித்திருப்பது தெரியும்.
சின்ன அறைதான். அரை வட்ட அறை. அந்த அரை வட்ட வளைவு முழுவதும் ஜன்னல்களினால் சூழப்பட்டு இருந்தது. ஒரு சோபா (couch என்று வீட்டுக்காரர் ஜார்ஜ் அழைப்பார்), இரு நாற்காலிகள் அறை மூலையில் அலங்கார பொருட்கள் வைப்பதற்கான கண்ணாடி கதவுகள் கொண்ட அலமாரி. சுவரை ஒட்டி கணப்படுப்பு (fire place). கணப்படுப்பின் மேல் ஷெல்ப் போன்ற அடுக்கில் (mantel) சில அலங்காரப் பொருட்கள் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதே போன்று இன்னொரு அறை. அதை உணவு மேசையும் நான்கு நாற்காலிகளுமே நிறைத்துவிட்டிருந்தன. அங்கு கடும் நீல மலர்கள் கொண்ட வால் பேப்பர்கள் ஒட்டிய சுவர்.
லியாம் ஒரு முறை “நல்ல ரசனை, இந்த வீட்டுக்காரருக்கு” என்று சொன்னார். கிண்டல்தான் என்று நினைத்துக்கொண்டு அவரைப்பார்த்தேன். முகத்தில் எதுவும் தெரியவில்லை. எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த பிரிட்டிஷ் காரர்களுடன் இது பெரிய ஹிம்சையாக இருந்தது. கிண்டலா, சீரியஸாகவா எதுவுமே கண்டுபிடிக்கமுடியாத முகம், சிசிடீவி காணொளி போல்.
மறுபடி அனைத்து பைகளையும் எடுத்துக்கொண்டு ஹால்வேயை ஒட்டிய மரப்படிகளில் ஏறினேன்.
ஏறினதும் இடது பக்கம் எனது படுக்கையறை, வலது லியமுடையது. இருவருக்கும் நடுவில் பாத்ரூம்.
எனது படுக்கையறையில் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உடைகள் மாற்றிவிட்டு கீழே வந்தேன். லியாம் இந்த வீட்டை வாடகைக்கு என்னுடன் பகிர்ந்துகொள்பவர். வாரத்தில் ஐந்து நாட்களும் இரவு எங்கோ மோட்டார் பாதைகளில் பணி. சனி அதிகாலையில் லிவர்பூல் போய்விடுவார். மறுபடியும் திங்கள் மாலையில்தான் பார்க்கமுடியும்.
எனவே வார இறுதிகளில் நான் மட்டும் சுதந்திரமாக இருந்தேன். கத்ரிக்காய் கூட்டு வைப்பதிலிருந்து லுங்கி அணிந்துகொள்வதுவரை.
மெல்ல சமையலறைக்குச் சென்றேன். சலிப்பாக இருந்த்து, என்ன சமைப்பது என்ற குழப்பம் தினமுமே இருக்கும். ஒரு வெள்ளி மாலை, அதுவும் இந்த ஜனவரி கடும் பனிக்கால வெள்ளி மாலையைத் தனியே கழிப்பது சலிப்பூட்டுவதுதான்.
வேனிற்காலத்தில் இங்கிலாந்து பூலோக சொர்க்கம்(ஜார்ஜின் வாசகம்), ஆனால் இந்த WorkDay Implementation ஜனவரியில் திட்டமிட்டுத் தொலைத்திருக்கிறார்கள்.
வீட்டு சொந்தக்காரர் ஜார்ஜிற்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது. அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது, நான் ஏன் இந்த ரிட்டில் கிராமத்தில் வந்து வீடு தேடியது. அவருக்குத் தெரியாது, இந்திய ஐடி கம்பெனிகளின் சீப் பாலிஸி பற்றியெல்லாம்.
வீடு பார்க்க வந்த அன்று, கடுமையான மழை. சரியான முகவரியைத் தேடிப்பிடித்து வந்துவிட்டேன். போனில் சொன்ன நேரத்திற்கு ஜார்ஜ் வரவில்லை. அசட்டுத்தனமாக வீட்டின்முன் இலைகளே இல்லாத மரத்தின் கீழ் நின்றேன். இன்று போலவே அன்றும் ஒரு வெள்ளி மாலைதான். அக்கம்பக்க வீடுகளில் மனிதர்கள் இருப்பது போலவே தெரியவில்லை. தொப்பலாக நனைந்து கிளம்பிவிடலாம் என்று டாக்ஸிக்கு போன் செய்யும் போது ஒரு பழைய போர்ட் போகஸ் நிதானமாக வந்து வீட்டு வாசலில் நின்றது.
பக்கத்து நகரமான செம்ஸ்போர்டில் இருக்கும் ஒரு பார்மா அலுவலகத்தின் கிளைக்கு HR IT implementation ற்காக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன், மூன்று மாதங்கள் வரை தங்க இடம் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதுவரை அவருக்கு புரிந்தது. ஆனால் அதற்க்கப்புறம் cloud computing implementation என்பதெல்லாம் புரியவில்லை. பக்கத்திலிருக்கும் போர்ட் கம்பெனியின் Data centreல் வேலை செய்யும்போது magnetic tapeகள்தான் இருந்தன என்றார்.
நான் “ஓ” என்று அதிசயத்தேன். அவர் சற்று மவுனமாக வேறு எங்கோ பார்த்துக்கொண்டு அதெல்லாம் Star Wars, Sex pistols காலம் என்றார்.
பின் சுதாரித்து வீட்டை சுற்றிக்காட்டத் துவங்கினார். வீடு கொஞ்சம் பழையது என்றார். இங்குதான் எனது பிரிட்டிஷ்காரர்களின் நகைச்சுவை உணர்ச்சியின் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது.
“கொஞ்சம்?(a bit?)“ என்று கொக்கியாக கேட்டேன்.
சிரிக்காமல் “ஆம், நூறாண்டுகளுக்கு மேல். விக்டோரியன் காலத்தது” என்றார்.
ஒரு நிமிடம் தலையை சற்றே தாழ்த்தி மேலே பார்த்தேன், கூரை எங்கே சரிந்துவிடுமோ என்பது போன்ற பயத்தில். இப்போது அவருக்கு இந்தியரின் நகைச்சுவை உணர்ச்சி மேல் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.
“வீட்டை நிறைய மாற்றியிருக்கிறோம். கதவுகள், மாடர்ன் சமையலறை, பாத்ரூம். ஆனால் வீட்டின் அடிப்படை அமைப்பு, உத்திரங்கள் எல்லாமே 1894ல் கட்டியதுதான்”
நம்புவதற்கு சிரமப்பட்டு சோபாவின் நுனியில் அமர்ந்தேன். சொல்லிக்கொண்டே போனார்.
“ஜன்னல்களின் அலங்கார வளைவுகளை மாற்றாமல் வைத்திருக்கிறேன்.”
“இதோ இந்த கணப்படுப்பு முன்பு கரியடுப்பாகத்தான் இருந்தது. இப்போது எலக்ட்ரிக் அடுப்பை அமைத்திருக்கிறேன், ஆனால் அதன் மேல் இருக்கும் அடுக்கு (mantel) இன்னும் மாற்றவில்லை. பழைய, பழையது, ஒரிஜினல் என்றால் நம்புவாயா?” என்றார்.
“இது என் குடும்ப வீடு, அம்மா வழி தாத்தா கட்டியது” என்றார். நானேதான் 1894ல் கட்டினேன் என்று சொன்னாலும் நம்பலாம் போல் ஜார்ஜே இருந்தார்.
அவ்வளவு குண்டான உருவத்திலும் உயரமாகத் தெரிந்தார். படுக்கையறையில் எனது மரப்படுக்கையை சுலபமாக தள்ளி ஒழுங்க வைத்துவிட்டு தனக்கு 75 வயது என்றால் நம்ப சிரமமாக இருந்தது.
“இதற்கே இப்படி திகைக்கிறாயே, பக்கத்து கிராமம் இங்கஸ்டோனில் நூற்றைம்பது வருடங்களுக்கும் முந்தைய வீடுகள் இருக்கின்றன. விலை அதிகம்”…
ப்ரிட்ஜைத் திறந்து பார்த்தேன். முந்தா நாள் வைத்த ரசம் இருந்தது. சலிப்பாக இருந்தது. கூடவே இருந்த ஸ்காட்டிஷ் Aleலை திறந்து கொண்டே திரையை விலக்கி வெளியே பார்த்தேன். வெளியே எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. எங்கும் லேசாக மஞ்சள் கலந்த பனிமூட்டம். ஜன்னல் கண்ணாடி ஐஸ் கட்டி போல் சுட்டது.
திரும்ப லிவிங் அறையில் வந்து உட்கார்ந்து அனிச்சையாக ரிமோட்டை ஆன் செய்தேன்.
பிபிஸி ஒன்றில் ஏதோ டாக் ஷோ. இரண்டாவதில் தென் அமெரிக்க ஆற்றில் உள்ள மீன்களைப்பற்றிய தொடர்.
இன்று வீட்டிற்கு உள்ளே வந்தபின் மறுபடியும் வெளியே சென்று பார்த்ததைப் பற்றி எண்ணங்கள் போனது.
கல்லூரி நாட்களில் எனக்கு இந்தப் பழக்கம் விளையாட்டாக ஆரம்பித்தது.
என்னைச்சுற்றி நடப்பது எல்லாம் தற்செயலா அல்லது எல்லாமே யாரோ திட்டமிட்டபடி நடக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிடும்.
திருச்சி வடக்கு ஆண்டாள் தெருவில் நடந்து போகும்போது தெருவில் தென்படும் அனைவரும் நான் இருப்பதால்தான் இருக்கிறார்களோ என்று சந்தேகமாகவே இருக்கும்.
அடுத்தத் தெரு போனவுடன் இந்தத் தெருவில் இருப்பவர்கள் மறைந்துவிடுவார்கள் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
சட்டெனத் திரும்பி வந்து பார்ப்பேன். அல்லது எதிரில் ஜவுளிக்கடை கண்ணாடி சுவர்களை ஓரக்கண்ணால் பார்ப்பேன், எல்லாரும் கலைந்து போய்விட்டார்களா அல்லது நான் கடந்து போவதற்குக் காத்திருக்கிறார்களா என்று.
அதே மாடுகள், பட்டுப் பாவாடை சிறுமிகள், நிமிர்ந்து பார்த்தால் மலைக்கோட்டை எல்லாம் இன்னும் இருக்கும். ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நண்பர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அம்மா கவலைப்பட ஆரம்பித்தாள். அவள் நச்சரிப்புத் தாங்காமல் இரண்டு அல்லது மூன்று டாக்டர்கள் பார்த்திருக்கிறேன். சில மாதங்கள் சாதாரணமாக போகும். பின் மெல்ல இந்த எண்ணம் தலை தூக்கும். பின் மறைந்துவிடும். கடந்த சில வருடங்களாக நினைவே இல்லை. இன்று மாலை, உள்ளே நுழையும் போது திடீரென இந்தப் பழக்கம் பிரமாண்டமாகத் திரும்ப வந்திருக்கிறது…
எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. இரண்டாவது Aleயையும் முடித்தபின்புதான் இருக்க வேண்டும். ஏதோ ஒரு கணத்தில் சோபாவிலிருந்து எழுந்து தடுமாறி லிவிங் அறை விளக்கை அணைத்துவிட்டு மேலே படுக்கையறைக்கு வந்து விளக்கை அணைத்தபின் அந்தச் சத்தம் கேட்டேன்.
நிறையப் பிஞ்சு அல்லது வயதான கால்கள் மெதுவாக நடப்பது போன்ற சத்தம். அல்லது நெருக்கமாக இடித்துக் கொண்டு நிற்பது போல்.
தூக்கம் சட்டென வைப்பர் வைத்துத் துடைத்தது போல் சுத்தமாகப் போய்விட்டது. இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளிரவிலும் இதுபோல் கேட்டது, படுக்கையறையில் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு க்வில்ட்டிற்குள் சுகமாக நுழைந்து மேற் சுவரைப்பார்த்த போது இந்தச்சத்தம் கேட்டது.
படுக்கையிலிருந்து எழாமல் கண்ணாடியை மட்டும் அவசரமாகத் திரும்ப அணிந்துகொண்டு மேலேயே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் காலையில் விழித்தபோது அணைக்காத விளக்கையும் கழற்றாத கண்ணாடியையும் உணர்ந்து சற்று வெட்கமாகிவிட்டது. மதிய உணவு இடைவெளியின் போது ஜார்ஜிற்குப் போன் செய்து தயக்கமாகக் கேட்கையில் மறு முனையில் சில மௌன கணங்களுக்குப்பின் “அது ஒன்றும் இருக்காது, பரணில் (loft) நிறைய அணில்கள் இருக்கின்றன” என்றார்.
அதற்கப்புறம் இன்றுதான் கேட்கிறது.
இப்போது எனக்காகத்தான் இந்தச் சத்தங்கள் இருக்கின்றன, கேட்கின்றன என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
தூங்கிவிட்டால் அணில்களும் பரணும் மறைந்துவிடும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அட்லீஸ்ட் கண்ணாடியை கழற்றிவைத்தாலே வீடு மறைய ஆரம்பித்துவிடும் என்றும் தோன்றியது.
அட்லீஸ்ட் ஒருக்களித்துப்படுத்தாலே முன்பக்கம் இருப்பவை மறைந்துவிடும் என்று எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. எனக்குள் நிகழ்ந்துகொண்டிருப்பவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து என்னை வியாபிப்பதை அச்சத்துடன் உணர்ந்து கையாலாகத்தனமாக கவனித்துக்கொண்டிருந்தேன்.
எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் கூட போகவில்லை என்றுதான் தோன்றியது.
ஒரு கணத்தில் படுக்கையின் அருகில் நாலைந்து ஆட்கள் நிற்பது போல் இருந்தது. அதாவது டாக்டர், நர்ஸ்கள் புடை சூழ பேஷண்டை சுற்றி நின்று ஏதோ விவாதிப்பது போல் சொல்லலாம் என்று தோன்றியது.
ஏன் இந்த உதாரணம் தோன்றுகிறது என்று தெரியவில்லை. உள் மனதில் நாளை ஜார்ஜிடம் விளக்குவதற்காக என்று நினைக்கிறேன்
விரலை, காலை, இமையை எதையும் அசைக்கவில்லை. தண்ணீருக்கடியில் மூச்சை நிறுத்திக்கொண்டு எங்கு பார்வையை செலுத்திக்கொண்டிருந்தேனோ அதை சற்றும் விலக்காமல் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தேன். அசைத்தால் ஏதாவது கொத்திவிடும் அல்லது அறைந்துவிடும் என்பது போல்.
சற்று நேரம் கழித்து டாக்டர்கள் போலவே ஒருவர் பின் ஒருவராக அறையை விட்டு வெளியேறுவது போலும் உணர்ந்தேன்.
நாளை ஜார்ஜிடம் இதையும் விளக்க முடியாதுதான். இருந்தும் இப்படித்தான் தோன்றியது.
மாடிப்படிகளில் சத்தம் நின்றது. அதுவும் முதல் மாடிப்படிகளில். இறங்குவதற்கு முன் திரும்பிப் பார்ப்பது போல்…
***
குருவிகளின் இரைச்சல்களுடன் காலை விடிவது ஓர் அற்புத விஷயம். முன்னிரவில் ஒன்றுமே நிகழ்ந்திராத காலை.
பாத்ரூமில் முகத்தைக் கழுவி கண்ணாடியை மறுபடியும் அணிந்துகொண்டு படுக்கையறை ஜன்னல் வழியாக பார்த்தேன். மூடுபனி அடர்த்தியாக பிடிவாதமாகச் சூழ்ந்திருந்தது. ஆனால் கொஞ்சம் வெளிச்சமும் குருவிகளின் இரைச்சலும் விடிந்துவிட்ட தைரியத்தைக் கொடுத்தது. தலை வலியில்லை, ஆனால் நன்றாக ப் பசித்தது.
டின்னை உடைத்து பதனிட்ட பீன்ஸும் இரு டோஸ்ட்களையும் சாப்பிட்டுவிட்டு அந்த ரிட்டில் கிராமத்தின் high street என்ற கடைவீதிக்குச்சென்றபோது.ஒரு பதினோரு மணியிருக்கும்.
இங்கிலாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான வழக்கமான டவுன்களில் ஒன்று இது. பிரபல ப்ராண்ட் கிளைகள் – ஒரு மார்க் அண்ட் ஸ்பென்ஸர், WH SMITH, PRIMARK, சில காபி கடைகள், கடைவீதியின் நடுவில் ஒரு Kings Arms எனும் மதுபான விடுதி, கடைவீதியின் கடைசியில் ஒரு சர்ச்சும் அதையொட்டி இடுகாடும். அதன் பின் காடுகள், அடுத்த டவுன் வரை.
கடைவீதியில் சனிகிழமையின் வழக்கமான கூட்டம் இருந்தது. கடும் பனியின் ஊடே மனிதர்கள் ஆங்காங்கே தென்பட்டும் மறைவதுமாக இருந்தார்கள். கம்பளி கையுறைகள், கோட்டு, குல்லாயுடன் சற்று உல்லாசமாக நடந்தேன்.
எவ்வளவு கனமான கம்பளி ஆடைகள் என்றாலும் அவ்வப்போது ஊடுருவும் பனிக்காற்றைத் தடுக்கவே முடியவில்லை. உள்ளே நுழைந்து எலும்புகளைத் தொட்டுவிட்டுதான் அவை திரும்பும். கொஞ்சம் தூரம் சென்றவுடன் கணப்பிற்காக அருகில் உள்ள கடைக்குள் நுழைந்தேன். SALE அட்டைகளின் அடியில் உள்ள உடைகளை முதலில் கவனிக்காமல் விலைப்பட்டியலை கவனித்துவிட்டு மெல்லிய மனக்கணக்குடன் சுற்றி வந்தேன்.
சப்வேயில் எனது ப்ரட்டிற்கான டாப்அப் சில்லி சாஸ்தானே என்று கேட்டவனிடம் சிநேகிதமாக புன்னகைத்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு நகர சதுக்கத்திற்கு வந்தேன்.
கிட்டதட்ட அச்சு வெல்லம் மாதிரியான ஒரு நினைவுச் சின்னம் அமைந்திருந்தது. அதன் ஒரு பக்கத்தில் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த இந்த டவுணைச்சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்பு இருந்தது. இன்னொரு பக்கம் முதல் உலகப்போரில் இறந்தவர்களுக்கு. மூன்றாவது பக்கம் என்னவாக இருக்கும் என்ற யோசனை வந்தது. இப்போது வழக்கமான எண்ணம் தலைகாட்ட ஆரம்பித்தது. நான் இன்னொரு பக்கத்தைப் பார்க்கபோகும்போது மற்ற பக்கங்களில் எழுதியிருந்தவை மறைந்துவிடும்…இந்த எண்ணம் வந்தவுடன் என்னுள் பதற்றம் மெல்ல புகையாய் எழுந்தது.
சட்டென எதிரில் இருந்த டெஸ்கோ எக்ஸ்ப்ரஸ் கடையில் நுழைந்தேன். ஸ்காட்டிஷ் ஏல் நான்கு புட்டிகள், க்ரிஸ்ப்கள், வாழைப்பழம், உருளைக்கிழங்குகள், வெங்காயம் ஐஸ்க்ரீம் பெட்டி, அஸ்ஸாம் டீ என்று என்னென்னவோவையெல்லாம் வாங்கிக்கொண்டு மறக்காமல் போனின் ஹெட்செட்டை பொறுத்திக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன். கடும் வெண்புகை மூட்டத்தினுள் நடக்கும்போது மாலை மூன்று மணி அல்லது ஐந்து மணி எல்லாம் ஒரே மாதிரிதான் இருந்தது.
வீட்டில் யூ ட்யூப்பில் பழைய நாகேஷ் படம் பார்த்தேன். அவர் “ஆமா, தெரியாமத்தான் கேக்கறன், உனக்கு என்னாய்யா பேர் இருக்கு, கெட்டு போறதுக்கு” என்று படபடவென பேசும்போது மனம் விட்டுச் சிரித்தேன். இந்த கடும் குளிர்காலம், அதன் வாசனை, புகை, இங்கிலாந்து எல்லாவற்றையும் தாண்டி அங்கே கொஞ்சம் நேரம் இருந்தேன்.
பின் யூ ட்யூபில் எனது பேவரிட் ப்ளே லிஸ்டை சத்தமாக வைத்துவிட்டு, பிடிவாதமான உற்சாகத்துடன் சமையலை ஆரம்பித்தேன்.
வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் தவிர்க்கவே முடியாத இரவை தவிர்க்க என்னென்னவோ செய்துகொண்டிருந்தேன்…
***
பிரக்ஞை வந்த முதல் உணர்விலேயே அந்த முணுமுணுப்புகள் கேட்டது. எங்கிருக்கிறேன்? கண்கள் இருட்டிற்குப் பரிச்சயமாகச் சற்று நேரம் ஆனது.
சோபாவிலேயே சாய்ந்திருக்கிறேன். விருட்டென எழுந்தபோது காலடியில் இரு Ale பாட்டில்கள் உருண்டன. சற்று தடுமாறி சுவற்றைத் தடவி சுவிட்சை அழுத்தினால்…விளக்கு எரியவில்லை.
சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. தலையைத் தேய்த்துக்கொண்டேன். இந்த ஊரில் கரண்ட் கட் எல்லாம் உண்டா என்ன? கேள்விபடவேயில்லையே…
மறுபடியும் கால்கள், சிறு கூட்ட கால்கள் தேய்ப்புகள்….
இதுவரை இந்தச் சத்தங்கள் படுக்கையறைக்கும் மேலே பரணில்தான் கேட்டன. இப்போது ஹாலிலேயே கேட்கிறது. மொபைல் எங்கே? மெல்ல எழுந்து கணப்படுப்பின் அருகில் நகர்ந்தேன். சத்தங்கள் சற்று அதிகமானது போல் தோன்றியது. கணப்படுப்பின் மேல் அடுக்கான mantel placeல் துழாவினேன். எனது மொபைல் தட்டுபட்டது. அத்துடன் சுருக்கென ஏதோ குத்தியது. மரச்சிராய்ப்புகள் போல உணர்ந்தேன். மொபைல் சுவிட்சை அழுத்தி அந்த வெளிச்சத்தில் பார்த்தேன்.
அந்த மரத்தால் ஆன ஷெல்ப்பிற்கும் கணப்படுப்பிற்கும் இடையில் இடைவெளி அது. என்னவோ தோன்ற விருட்டென மொபைல் வெளிச்ச உதவியுடன் சமையலறைக்குச் சென்று சமையல் கத்தியுடன் திரும்பி வந்தேன். அந்த இடைவெளியினுள் கத்தியை விட்டு துழாவினேன்.
ஏதோ தட்டுபடுவது போல் தோன்றியது பிரமைதான் என்றாலும் மறுபடியும் ஆழத் துழாவினேன். பிரமையில்லை. ஏதோ பேப்பர் துண்டு போல உணர்ந்தேன். மெல்ல, மெல்ல ஓர் ஓரமாய் கத்தியை வைத்துத் துழாவி மெல்லியதாய் தெரியவந்ததை இழுத்தேன்.
Blue Jacket Boy, Dec 1916.
நான் தரையில் எதையோ மிதித்திருக்க வேண்டும். அல்லது பின்னாலிருந்து யாரோ தள்ளியிருக்க வேண்டும். முன்னோக்கி விழுந்தேன். முதலில் மொபைல் சுவற்றில் மோதிய சத்தம் தெளிவாக கேட்டது. அதன்பின்தான் என் தலை தரையில் மோதிய சத்தம்…
“Incredible….Incredible, indeed” என்று முணுமுணுத்தார் ஜார்ஜ்.
கன்னங்கள் பாறை பாறையாய்த் துடித்தன. சூரிய ஒளி நேராக அவர் முகத்தில் அடித்ததால் கண்களைச் சுருக்கிக்கொண்டார்.
“கடிதம் முறையாக ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு, முகவரியெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. ஏன் போஸ்ட் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. எழுதியது எனது தாத்தாதான். பிலிப்ஸ்”
நான் ஜன்னல் திரைகளையெல்லாம் இழுத்துவிட முயற்சிக்கவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“தெற்கு வேல்ஸில் உள்ள ஒரு முகவரிக்கு எழுதியிருக்கிறார். அங்கு அவரது தங்கை இருந்ததாக நினைவு, குடும்ப வரலாறு நோட்டைப் பார்த்தால் தெரிந்துவிடும்”
“Incredible…தேதியைப் பார்த்தால் பிலிப்பி தாத்தா அனேகமாக முதல் உலகப்போருக்கு கிளம்பிப் போவதிற்கு முன் எழுதியதாக இருக்க வேண்டும்”
“ஓ, அவர் முதல் உலகப்போரில் பங்கு பெற்றாரா?”
“பின்ன, ட்ரென்ச்சில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் குடும்ப கலெக்க்ஷனில் இருக்கின்றன”
நான் முன் நெற்றியைத் தடவிக்கொண்டே “ஓ”….
முன்னிருந்த டீயைக் குடிக்காமல் பக்கத்திலிருந்த கடிதத்தையே யோசனையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“இவ்வளவு காலம் எப்படிக் கண்களில் படாமல் போய்விட்டது? நானே கரியிலிருந்து காஸ், எலக்ட்ரிக் என்று மூன்று நான்கு முறைகள் கணப்படுப்புகள் மாற்றியிருக்கிறேன்”
குருவிகள் கரைச்சல் மட்டும் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பின் மொபைலில் டெக்ஸ்ட் வந்த ஒலி கேட்டது. இருவருமே யாருடைய மொபைல் என்று பார்க்கவில்லை.
“ரைட், நிறைய வேலைகள் இருக்கின்றன. கடிதத்தைப் பிரிப்பதற்கு முன் சில மெயில்கள் அனுப்பவேண்டியிருக்கிறது, உறவினர்களைக் கூப்பிட வேண்டியிருக்கிறது, கிளம்புகிறேன்.
“உனக்கு மிக மிக நன்றி” இன்றிரவு 8 மணிக்கு Kings Arms பப் வந்துவிடு” என்றவாறே எழுந்தார்.
எழ முயன்றேன்.
“இரு, இரு, நானே என் வழியைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஹால்வேயில் மறைந்தார்.
என்னென்னவோ கேட்க நினைத்தது எதையும் கேட்காமல் திருதிருவென விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
பின், “ஜார்ஜ், ஜார்ஜ்” என்று கூப்பிட்டுக்கொண்டே டைனிங் அறையை விட்டு வெளியே வந்தேன். திறந்திருந்த கதவு முழுவதும் அடைத்துக்கொண்டு ஜார்ஜ் திரும்பிப்பார்த்தார்.
“உங்கள் தாத்தா இந்த வீட்டில்தானே இறந்தார்?” தயக்கத்துடன் ஆனால் கேட்டுவிட்டேன்.
“இல்லையே, அவர் உலகப்போரிலிருந்து திரும்ப வரவே இல்லை. அங்கே trench/பாதுகாப்பு குழிகளில் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் இவரும் ஒருவர்”
எனக்கு ஏமாற்றமா அல்லது நிம்மதியா என்று தெரியவில்லை.
“ஆனாலும் அவர் மகா விவரக்காரர். போருக்கு போவதிற்கு முன்பே அவருக்கு ஏழு குழந்தைகள்”
ஜார்ஜ் குரலில் குறும்பு இருந்தது.
“அனைத்து குழந்தைகள், அவர்கள் குடும்பங்கள் எல்லாருக்குமே இதுதான் வீடு”
ஜார்ஜ் இப்போது திரும்ப உள்ளே வந்தார். இவ்வளவு நேரம் அவர் மறைத்திருந்த வெளிச்சம் அவர் உருவத்தின் எல்லா ஓரங்களிலும் பளிச்சிட்டது.
சற்றே என்னை நோக்கி குனிந்து
“போன வாரம் ஒருஹாலிவுட் படம் பார்த்தேன். சேனல் 4 னு நினைக்கிறேன். அதில் ஒரு ஸ்பெஷல் கண்ணாடி. போட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா தெரிகிற கண்ணாடி. அதுபோன்ற ஒரு கண்ணாடியைக் கொண்டு மட்டும் கிடைத்து இந்த வீட்டைப்பார்த்தால்… வீட்டு முழுவதும் உட்கார கூட இடமில்லாமல் ஆத்மாக்களைப் பார்க்கலாம், அவ்வளவு கூட்டம் தெரியும்- லாப்டில் கூட இடமிருக்காது!” சத்தமாகச் சிரித்தார்.
பின் மெல்ல திரும்பி வெளிச்சத்தில் மறைந்துபோனார்.
சில நிமிடங்கள் ஹால்வேயிலேயே நின்றிருந்தேன். பின் படுவேகமாக ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன். திறக்கவே போவதில்லை.