மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும்

பென்னி தான் மோட்ஸார்ட்டை, அவனுடைய அற்புதமான இசையை, அதன் இனிமையை எனக்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தியவள். ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நான் ஆராய்ச்சியாளராக இருந்த போது பென்னி எனது பேராசிரியரும் மேலாளருமாக இருந்தாள். அன்பும் கண்டிப்பும், நிறைந்தவள். ஒரு சில தினங்களிலேயே நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். அவளுடைய ஆபீஸ் அறையில் எப்போதும் மேற்கத்திய சாஸ்திரீய இசை, ஒலித்துக் கொண்டே இருக்கும். அதன் பின்னணியில் தான் அவளுடைய நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

நான் பென்னியைச் சந்தித்ததே ஒரு வினோதமான அனுபவம். கண்டிப்புக்கும் கறாருக்கும் பெயர் போனவள் என்று அறிந்ததிலிருந்து எப்படி அவளை அணுகுவது என்பதே என் பெரிய பிரச்சினையாகிப் போனது. முதலில் அவளுடைய அலுவலகத்துக்குப் ஃபோன் செய்தேன், “டாக்டர் பெனலபே க்ரீன் உடன் பேசலாமா?” “நான் தான் அவள்,” ‘வெடுக்’கென்ற பதில். “உங்கள் ‘லாபி’ல் வேலை செய்ய…” என் குரல் இடைமறிக்கப் பட்டது. “நான் இப்போது மிகவும் ‘பிஸி’யாக இருக்கிறேன். அப்புறமாகக் கூப்பிடுகிறேன்,” ஃபோன் வைக்கப்பட்டு விட்டது. எனக்கு வருத்தம் (அவமானம்?!) தாங்கவில்லை. ஆனால் சொன்னது போல சரியாக இரண்டு மணிக்குக் கூப்பிட்டாள். விளக்கமாகப் பேசி நான் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தாள். இப்போது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!

நான் அவளுடன் வேலை பார்த்த ஆரம்ப நாட்களில் குழந்தையைக் காப்பகத்தில் விட ஆரம்பித்திருந்தேன். அவன் அங்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு விட்டானா என விசாரிப்பாள். ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ஆனதால், குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்களை மனோதத்துவ முறைப்படி எனக்கு விளக்குவாள். இரண்டு வயதுக் குழந்தை நான் சொன்னதையே கேட்க மாட்டேன் என்கிறான் என்று ஒருமுறை அவளிடம் பாதி அலுப்புடனும், பாதி ஒரு தாய்க்குரிய பெருமையுடனும் விவரித்தபோது, சொன்னாள்: “அவன் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும், ‘சரி அம்மா,’ ‘அப்படியே செய்கிறேன் அம்மா,’ என்று சொல்லிய வண்ணம் இருந்தால் அவனுடைய தனித்தன்மை எவ்வாறு வளர்ச்சி பெறும்? அவன் எவ்வாறு ஒரு முழு மனிதனாவான்?” என்று கரிசனத்துடன் கூறினாள்.

ஒரு கிறிஸ்துமஸின் போது நான் பென்னிக்கு இந்திய சாஸ்திரீய இசையைப் பரிச்சயப் படுத்த எண்ணி லால்குடி ஜயராமனின் ‘ஆடமோடி கலதே’ இசைத்தட்டைப் பரிசாக அளித்தேன். என்ன ஒற்றுமை! அவளும் எனக்கு மோட்ஸார்ட்டின் ‘கிரேட் மாஸ் இன் சி மைனர்’ (Great Mass in C minor) என்ற இசைத்தட்டைப் பரிசாக அளித்தாள். மேற்கத்திய இசையை ரசிக்கவும் கொஞ்சமாவது அறிந்து கொள்ளவும் இது தான் எனக்குப் பிள்ளையார் சுழி போட்டது!  வெகு நாட்களுக்கு அந்த முதல் இசைத்தட்டு எனக்கு மிகவும் பிடித்த இசையாக இருந்தது. ஏன் இப்போதும் கூடத்தான்! அதில் அற்புதமாக உயர்ந்த ஸ்தாயியில் பாடியிருந்த  ஒரு பெண்குரலுக்கு ‘ஸொப்ரானோ,’ (Soprano) என்று பெயர் என அறிந்து கொண்டேன். ஒருநாள், “பென்னி! உனக்குத் தெரியுமா? நான் இந்தக் குரலுக்கு அடிமையாகி விட்டேன். எனது கனவு, அடுத்த பிறவியிலாவது நான் ஒரு ‘ஸொப்ரானோ’வாக ஆக வேண்டும் என்பது தான்,” என்று கூறினேன். உரக்கச் சிரித்தாள். பென்னியிடம் பாசாங்கு  அறவே கிடையாது. என் கனவின் தீவிரத்தை உணர்ந்தவள் போலக் கண்கள் பளபளத்தன; நானே எதிர்பாராத வண்ணம் என்னை அணைத்துக் கொண்டு, “இந்த உயர்ந்த இசை உன்னை என்ன செய்து விட்டது பார்!” என்று கூறிப் புன்னகைத்தாள்.

ஆஹா! ‘ஸொப்ரானோ’ என்னும் அந்தக் குரல், தெய்வ அர்ப்பணத்துக்கென்றே ஏற்பட்ட குரலாக இருக்க வேண்டும். சொல்ல மறந்து விட்டேனே- ‘மாஸ்’ என்றால் இசையோடு கூடிய பிரார்த்தனை (கிறிஸ்தவ முறையில்) என்று பொருள். எல்லா சங்கீத முறைகளிலும் ‘குரலைப் பண்படுத்துவது’ என ஒன்று உண்டு. அப்பா சொல்லுவார்- மார்கழிக் குளிரில் கழுத்து வரை குளத்து நீரில் நின்று கொண்டு அகார, இகார சாதகம் செய்ய வைப்பார்களாம். ‘சங்கராபரணம்’ படத்தில் சங்கர சாஸ்திரியார் தன் சின்னப் பெண்ணைப் பாட வைப்பதைப் பார்த்திருப்போமே அது போல! இந்த ‘ஸொப்ரானோ’ எவ்வாறு தன் குரலைப் பண்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று வியப்பாக இருக்கும். தனிமையில் இசைத்தட்டை ஒலிக்க விட்டு கூடவே அது போலப் பாடிப் பார்த்துக் கொண்டு என்னால் முடியுமா என்று தெரிந்து கொள்வேன். மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஓ! அவை எத்தனை இனிய நாட்கள்!

Orchestra_Classical_Concert_Music_Symphony_Performance_Violin_Recital

இந்த இசை வழிபாட்டில், அதாவது, ‘மாஸ்’-ல் நான்கு அல்லது ஐந்து பகுதிகள் உண்டு. முதல் பகுதி, ‘கடவுளே என் மீது கருணை காட்டும் (Kyrie eleison),’ எனப் பாடுவது. வயலின், புல்லாங்குழல் இவை இசைக்கப் படுவதைத் தொடர்ந்து ‘ஸொப்ரானோ’ பாடகி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது  உடல் எல்லாம் புல்லரிக்கும். பின் படிப்படியாக  மற்ற குரல்களுடன் சேர்ந்தும் தனியாகவும் பாடும் போது, பொருள் விளங்காவிடினும் (பெரும்பான்மையாக இவை இலத்தீன் மொழியில் இருக்கும்) ‘இது ஒரு இசை வழிபாடு – இசையே பிரதானம்,’ என்ற உணர்வில் தவறாமல் கண்ணீர் பெருகி விடும். ‘கடவுளே, எத்தனை விதமான இசை மரபுகள், அத்தனையும் சத்தியமான அழகு பொங்கும் இறை வடிவங்கள் அல்லவோ,’ என்று மயிர்க் கூச்செடுக்கும்.

அவளுடைய கணவர் ஜார்ஜ் ஒரு ஆர்கெஸ்டிராவில் வயலின் வாசிக்கும் முதன்மைக் கலைஞர். அவருடைய வாசிப்பினாலேயே கவரப்பட்டு பென்னி அவரைக் காதலித்தாளாம். அவர் வாசிக்கும் இசை நிகழ்ச்சிகளில் பென்னியைப் பார்க்க வேண்டுமே!- கடினமெல்லாம் நெகிழ்ந்து, உள்ளத்து மகிழ்வு கண்களில் காதலாகப் பெருகி வழிய, தன்வசமிழந்து, தானும் தவமியற்றுவது போல அவரைப் பார்த்தபடி, உணர்ச்சி பொங்க அமர்ந்திருப்பாள். ஆதர்ச தம்பதிகள் என எண்ணிக் கொள்வேன்!

பென்னி- ஜார்ஜ் தம்பதிகளின் தொடர்பினால், அதிகமாக மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லலானேன். ஜார்ஜ் ஒரு ஜாலிப் பேர்வழி. “ஹாய் தேர்! ஸ்வீட் ஹார்ட்!” என்றபடி என் தோளில் கையைப் போட்டு லேசாக அணைத்துக் கொள்ளும்போது சிறிது கூசினாலும், ‘அவர் என் தந்தையைப் போன்றவர்; விகற்பம் இல்லாமல் பழகுபவர்,’ என்று எனக்கு நானே சமாதானம் கூறிக் கொள்வேன். ஒவ்வொரு இசை மேதையைப் பற்றியும் கண்ணும் மூக்கும் வைத்துக் கதை சொல்வார். அவற்றிலேயே மோட்ஸார்ட்டின் இசையைப் போல அவனுடைய புயல் போன்ற வாழ்க்கை வரலாறும் என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயம்.

மோட்ஸார்ட் ஒரு சிறு வயது மேதை. ஆறு வயதிலேயே ‘ஸிம்ஃபனி’களை (Symphony) எழுதினான். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, மதகுருக்களின், அரச குடும்பத்தினரின் முன்னிலையில் இசைக் கச்சேரிகள் செய்து பிரபலமாகி விட்டான். ஆனால் உலக இயல்பு தான் தெரியுமே! அரசனின் பிரியத்திலிருந்து அவனைப் பிரிக்க மற்ற அரசவை இசை வல்லுனர்கள் சதி செய்தனர் என ஒரு வரலாறு. இதனால் நல்ல இசை வாய்ப்புகளை இழந்து வறுமையில் வாட ஆரம்பித்தான்.  மோட்ஸார்ட் தனது இசைப் படைப்புகளைத் தொடர்ந்து எழுத இந்த வறுமை தடையாகவே இருக்கவில்லை. அவன் கவலையில்லாத மனிதனாகவே வாழ்ந்தான். இறுதியில் ஒருவிதமான மன நோய்க்கு உள்ளாகி, தான் இறந்தபின் பாடுவதற்காக ஒரு ‘இறந்தவருக்கான இசை வழிபாட்டை’ (Requiem Mass) எழுதத் துவங்கினான். அதையும் பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டு விட்டு, நோய்வாய்ப்பட்டு, 35 வயதில் மரணத்தின் வாயில் விழுந்தான். அவனுடைய இறுதி ஊர்வலத்தில் ஒரு ஈ காக்காய் இல்லை! அனாதைப் பிணங்களுக்குச் செய்யப்படும் பொது அடக்கம், பைசா செலவின்றி செய்யப்படுகிறது. நானும் பென்னியும். ‘அமேடியூஸ்’ ( Amadeus) என்ற திரைப் படத்தில் இதைப் பார்த்தபோது நெஞ்சை அடைத்துக் கொண்டு, ஒருவர் கரத்தை இன்னொருவர் பிடித்துக் கொண்டு அழுகையும் வராமல் விக்கித்தோம்.

சில மாதங்களில் எதிர்பாராத விதமாக பென்னியின் வாழ்வில் புயல் வீசியது. ஜார்ஜ் தன் ‘ஆர்கெஸ்டி’ராவில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டு, பென்னியை விட்டுப் பிரிந்து சென்றார். பென்னியின் உலகம் தலைகீழாக மாறியது. என்னால் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. இன்னும் சில மாதங்கள் இப்படியே செல்ல, நான் அமெரிக்காவை விட்டு ஜெர்மனி செல்ல நேர்ந்தது. அது தான் பென்னியைக் கடைசியாக நான் பார்த்தது.

***

ஜெர்மனி வந்து சில மாதங்களில் தாமரா எனக்கு நல்ல தோழியானாள். மேற்கத்திய இசையில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு எங்கெங்கு இசை நிகழ்ச்சி இருந்தாலும் என்னையும் அழைத்துப் போவாள். சின்னக் குழந்தையை கணவர் பார்த்துக் கொள்ள, தனியாகவும் இசை நிகழ்ச்சிகளுக்குப் போகலானேன்.

அப்படித்தான், இலையுதிர் காலத்தின்  ஒரு நாள் மாலையில் தாமரா சொன்னாள் , “இந்து! நாளை அருகிலிருக்கும் சிறிய பழைய ‘சர்ச்’சில் ஒரு ‘மாஸ்’- அதாவது, மோட்ஸார்ட் எழுதி, அவன் காலத்தில் பிரபலமாகாத ‘இறந்தவருக்காகச் செய்யப்படும் இசை வழிபாடு,’ என்ற இசைப் படைப்பை ஒரு குழு பாடப் போகிறது. என்னால் வர முடியாது. ஆனால் இதை நீ ‘மிஸ்’ பண்ணவே கூடாது.”

விடுவேனா? அதைக் கேட்கும் ஆவலினால் சென்றேன். மோட்ஸார்ட் இதைத் தனக்காகவே தான் எழுத ஆரம்பித்தான் எனக் கூறுவார்கள். என்ன கூட்டம்! நவம்பர் மாத இறுதி ஆனாலும் குளிர் மிகுந்திருந்தது. இங்கெல்லாம் ஒரு வழக்கம். எங்கெங்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடுகிறார்களோ அங்கு குளிர்காலங்களில் ஹீட்டரை, வெப்பத்தை ஒன்றும் மிக உயர்த்தி விட மாட்டார்கள். மனிதக் கூட்டத்தின் உடல் வெப்பத்தாலேயே அந்த அறைகள் சிறிது பொழுதில், வேண்டிய வெப்ப நிலையை அடைந்து விடும். ஆனாலும் பழங்காலத்து ‘சர்ச்’ ஆனதால் கல் கட்டிடம் குளிராக இருந்தது. உட்கார இடமும் இல்லை. நாற்காலிகள் எல்லாவற்றிலும் மனிதர்கள் நிறைந்து வழிந்தனர். ‘ஆர்கன்’ (Organ), எனப்படும் சர்ச்சுக்கே உரிய ஒரு இசைக்கருவி (மிகப்பெரியது) வைக்கப் பட்டிருக்கும் பால்கனி போன்ற அமைப்பிற்கு மக்கள் ஏறிச் செல்லலாயினர். கூட்டு வழிபாட்டின் போது அதற்கென்று நல்ல பயிற்சி பெற்றுள்ள ஒருவரால் இந்த ஆர்கன் இசைக்கப்படும். இதிலிருந்து எழும் இசை நமது கோவில் மணி போல மனத்தை ஒருமைப் படுத்தி இறைவன் பால் குவியச் செய்யும்.

இங்கு குளிர் இன்னுமே அதிகமாக இருந்தது. உட்காரவும் இடமில்லை. எல்லாரும் குளிரில் நடுங்கியபடி, கோட்டுகளையும், கம்பளிக் கையுறைகளையும் கூடக் கழற்றாமல் நின்ற வண்ணமே இருந்தோம். இது எல்லாம் இசை ஆரம்பிக்கும் வரை தான். பின் இசை தான் எங்கள் சிந்தையை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது. ‘கடவுளே, இவர்களுக்கு, நிரந்தரமான, அமைதியான ஓய்வைத் தந்தருள் (Requiem aeternam),’ என்ற பொருள் பட ஆரம்பித்த வழிபாட்டில் உள்ளம் ஒருமைப் பட்டது.

உணர்ச்சியும், வாழ்வில் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்ட மேதையான ஒரு இளம் இசைக் கலைஞன், தனக்காகவே எழுதிக் கொண்ட இறுதி இசை வழிபாடு, ஆரம்பித்த உடன் எல்லாரையும் ஒரு அழுத்தமான துயர வலையில் மூடிப் பொதிந்து கொண்டது. ஒரு பகுதி முடிந்து இன்னொரு பகுதி ஆரம்பிப்பதற்குமான இடைப்பட்ட சிறு நொடிகளில் கூட ஒரு சப்தமுமில்லை. ஒரு மோனத்தில் மூழ்கிய வண்ணம் அனைவரும் மோட்ஸார்ட்டிற்கு மானசீகமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். கிட்டத் தட்ட 50 நிமிஷங்களின் பின் இசை முற்றுப் பெற்றதும் இதயங்கள் கனத்து இருந்ததால்  ஒரு கைதட்டல் ஒலியும் இல்லை. இது இலவச  நிகழ்ச்சியாதலால், உண்டியல் ஒன்றை ‘சர்ச்’சைச் சேர்ந்த சிலர் கொண்டு வர, எல்லாரும் அதில் தங்களால் இயன்றதைப் போட்டோம். பத்தும், இருபதுமாகத்தான்! மோட்ஸார்ட் இறந்தபோது இப்படிச் செய்திருந்தால்  அந்த மேதைக் கலைஞனுக்குரிய கடைசி மரியாதையை நன்றாகச் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் அப்பொழுது ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

திடீரென்று பென்னியின் நினவு தோன்றி வேதனை செய்தது. ‘அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்,  இன்னும் கூட ஜார்ஜின் இசை நிகழ்ச்சிகளுக்குப் போவாளா? இசையால் நெகிழும் அன்பு உள்ளம் எப்படி எல்லாம் பாடு படும்? இசை மன நோய்க்கு மருந்தாகும் என்பார்களே, பென்னிக்கு அது என்னவாக இருக்கும்? மருந்தா இல்லை நஞ்சா?’ என்றெல்லாம் கேள்விகள் தோன்றி அலைக்கழித்தன.

சில கேள்விகளுக்கு விடைகள் கடைசிவரை கிடைப்பதில்லை என்பது உலகில் ஒரு சாபக்கேடு. கனத்த நெஞ்சும் கண்களில் பொங்கிய நீரும் மோட்ஸார்ட்டுக்காகவா? பென்னிக்காகவா? புரியவில்லை!

***

சில ஆண்டுகளின் பின் நாங்கள் இந்தியாவிற்கு வந்து விட்டோம். ஆனால் மோட்ஸார்ட்டின் நினைவுகளும் அவனுடைய இசையும் நாங்கள் எங்களுடன் கொண்டு வந்த பெரிய பொக்கிஷம். பாலமுரளி கிருஷ்ணாவையும், எம்.எஸ்ஸையும், லால்குடியையும் கேட்கும் அதே ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் மோட்ஸார்ட்டின் இசையையும் ( இன்னும் பல மேற்கத்திய இசை மேதைகளின் இசையையும் கூட) குழந்தைகளும் கணவரும் என்னுடன் சேர்ந்து ரசித்தனர்.

“ரமேஷ், இப்போது பென்னி என்ன இசையைக் கேட்பாள் என்று நீ நினைக்கிறாய்? இசை இல்லாமல் அவளால் இருக்கவே முடியாதே?” ஓட்டமாக ஓடிய வாழ்க்கையின் வேகத்திலும், ஆண்டுகளின் அடுக்கடுக்கான ஊர்வலத்திலும், ஊதுவத்தியிலிருந்து சுழன்று சுழன்று எழும்  நறுமணப் புகை போலப் பென்னி பற்றிய எண்ணங்கள் இசை கேட்கும் போதெல்லாம் எழுந்து சுழன்று கொண்டிருக்கும்.

***

இரண்டு ஆண்டுகள்! பென்னியிடமிருந்து கடிதம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. பெரிதாகக் கடிதம் ஒன்றும் எழுதிக் கொள்ள மாட்டோம்; கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில், துளி இடம் விடாமல் நிரப்பி நிரப்பி, அந்தந்த வருஷத்து நிகழ்வுகள், என் குழந்தைகளின், அவள் பேரக் குழந்தைகளின் திருமணங்கள், குடும்பங்களில் பிறப்பு இறப்புகள், உடல் நிலை பற்றிய சமாசாரங்கள், வேலை பற்றிய விவரங்கள் இன்ன பிற தான் ஆண்டுக்கொருமுறை நிகழும் எங்களின் கடிதப் பரிமாற்றம். நுட்பமான மெல்லிய மன  உணர்வுகள் எழுதாக் கவிதை போல இந்தக் கடிதங்களின் வரிகளூடே விரவி நிற்கும்! இதை உணர்ந்து  கொள்வது எங்கள் இருவருக்குமே கைவந்த கலை! எங்கள் பாசப் பிணைப்பும் நட்பும் இவ்வாறு தான் தொடர்ந்தது!!

ஆமாம். பென்னியிடமிருந்து கடிதம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன என்ற எண்ணம் திடீரென்று விடாமல் மனதை உறுத்தத் தொடங்கியது. பாடுபட்டு இணையத்தில் தேடி, அவளுடைய ஒரு மகனின் வலைத்தள முகவரியைக் கண்டு பிடித்து விட்டேன்……….

‘பென்னி இறந்து போய் ஓராண்டு ஆகிறது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக அவள் சுய நினைவின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாள். அவளது குழந்தைகள் அவளை நன்கு கவனித்துக் கொண்டனர். இசை ஒன்றே அவளைச் சிறிது அமைதிப் படுத்தியது. இப்போது அவள் நிம்மதியான மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்………’

 

உறைந்து விட்ட கை பல நிமிஷங்களின் பின் அனிச்சையாகக் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கும் இசையைத் தேடித் திறந்து ‘ப்ளே’ என்று தட்டி விட்டது.  மோட்ஸார்ட்டின் 29-ம் எண் கொண்ட ‘ஸிம்ஃபனி’ (Symphony)அது.  படிப்படியாக அலைகளாக எழும்பி, ‘ஜிலு ஜிலு’வென்று பல வயலின்கள் சேர்ந்து ‘விறுவிறு’ப்பாக இசைக்கும் உருப்படி. இப்போது நான் இதைத்தான் கேட்கப் போகிறேன்…………..ஏன் தெரியுமா? பென்னிக்கு இப்போது  ‘மாஸ்’ (Requiem Mass) வேண்டாம். தேவையில்லை!!

‘இந்து! இந்த இசை உன்னை என்ன செய்து விட்டது பார்!’ என்று கண்கள் பளபளக்கச் சொல்லும் பென்னியைப் போல் அந்த உயிர்ப்பான, மெய்சிலிர்க்கச் செய்யும் மோட்ஸார்ட்டின் இசை என்னைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டது.

***

_

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.