பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸை விட்டுக் கிளம்பிய சிறப்பு ரயில் 8மணி நேரம் கழித்து லாஹூரின் முகல்புரா நிலையத்தை வந்தடைந்தது. வரும் வழியில் பலர் கொல்லப்பட்டனர் ; தாக்கப்பட்டோர் அதற்கும் மேல் ; கணக்கற்றோர் காணாமல் போயினர் .
அடுத்த நாள் காலை பத்து மணிக்குத்தான் சிராஜுதீனுக்கு உணர்வு திரும்பியது.
வெற்றுத் தரையில் கிடந்தான். சுற்றிலும் ஆடவர் பெண்டிர் மற்றும் குழந்தைகளின் வேதனைக் கூக்குரல் .அவனுக்கு எதுவும் புரிபடவில்லை.
புழுதி படர்ந்த வானத்தைப் பார்த்தபடி அசைவற்றுக் கிடந்தான் . அங்கு நிலவிய குழப்பமும் இரைச்சலும் அவன் புலன்களை எட்டியதாகத் தெரியவில்லை . கிழவன் பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறான் என்று பிறர் நினைத்திருக்கலாம். நிலவரம் அதுவல்ல. அவன் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறான் – அதல பாதாளத்தில் தொங்கிக்கொண்டு இருப்பவனைப் போல .
அலை பாயும் விழிகளில் சூரிய ஒளி பட்ட அதிர்சசி அவனை நனவுலகுக்குக் கொண்டுவந்தது. சமீபத்திய நிகழ்வுகள் அவன் மனத்திரையில் படபடவென நிழலாடின. கட்டவிழ்ந்த வன்முறை -தீ வைப்பு -ஓட்டம் -ரயில் நிலையம் -இரவு-சகினா . சட்டென்று எழுந்து, அகதி முகாமில் இலக்கின்றி அலைந்து குழம்பி நிற்கும் கும்பலிடையே தன் தேடுதலைத் துவங்கினான் .
‘சகினா’ ‘சகினா ‘என்று தன் மகளின் பெயரைக் கூவி அழைத்துக்கொண்டு பல மணி நேரம் இங்குமங்கும் அலைந்தான் .அவள் எங்கேயும் தென்படவில்லை .
தொலைந்துபோன மகன்களை ,மகள்களை ,மனைவிகளை ,பெற்றோரைத் தேடி அலையும் மனிதக் கும்பல்-ஒரு குழப்பமான சூழல் அங்கே நிலவியது. இறுதியில் சிராஜுதீன் தன் தேடலைக் கைவிட்டான் . கும்பலை விட்டு வெளியேறி தனியே அமர்ந்து சிந்தித்து தெளிவடைய முயற்சித்தான்-எந்த இடத்தில் கடைசியாக மகளையும் மனைவியையும் பிரிந்தேன் ?சட்டென்று அந்த காட்சி நினைவுக்கு வந்து நிலைபெற்றது – அங்கே கோரமாக வயிறு கிழிக்கப்பட்டு அவன் மனைவி இறந்து கிடக்கிறாள்.
சகினாவின் அம்மா இறந்துவிட்டாள் என்பது நிஜம். அவன் கண்ணெதிரே நிகழ்ந்தது அந்த சாவு .’என்னை இங்கேயே விட்டுவிடு .இவளுடன் எங்கேயாவது தப்பிப் போய்விடு ‘-அவன் மனைவி சொன்ன கடைசி வார்த்தைகள் .
இருவரும் ஓட ஆரம்பித்தார்கள்.ஓடுகையில் நழுவித் தரையில் விழுந்த சகினாவின் துப்பட்டா வை எடுக்கக் குனிந்தபோது ‘அப்பா , அது கிடக்கட்டும் விட்டுட்டு வாங்க ‘என்று அவள் சொன்னதும் நினைவுக்கு வந்தது .ஆனாலும் எடுத்து வைத்தேனே-எதுவோ திணிக்கப்பட்டு பாக்கெட் நிரம்பியிருந்ததை உணர முடிந்தது.அது ஒரு நீளமான துணி ,ஆம் , சகினாவின் துப்பட்டா தான். ஆனால் சகினா எங்கே போயிருப்பாள் ?
பிற விவரங்கள் புலப்படவில்லை. ரயில் நிலையம் வரை அவள் அவனுடன் வந்தாளா? அவனோடு ரயில் பெட்டியில் ஏறினாளா ?கலகக்காரர்கள் ரயிலை நிறுத்திய போது ,அவர்களால் தூக்கிச் செல்லப்பட்டாளா ?
எல்லாமே கேள்விகள்?பதில்கள் தான் இல்லை. அழ வேண்டும் போல் இருந்தது.ஆனால் கண்ணீர் வரவில்லை. அவளைத் தேட பிறர் உதவி தேவை என்று உணர்ந்தான்.
சில நாட்களுக்குப் பின்னர் ,அதற்கு வழி பிறந்தது .ஆயுதம் ஏந்திய எட்டு இளம் வயதினரைக் கண்டான்.அவர்கள் ஒரு மினி லாரியும் வைத்திருந்தார்கள் .இந்திய எல்லையில் காத்திருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு கொண்டு வந்து உறவுகளுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
அவர்களிடம் தன் மகளின் விவரங்களைச் சொன்னான் -”சிவப்பு நிறம் ,நல்ல அழகி ;என்னைப் போலிருக்கமாட்டாள் ;அவள் அம்மாவைக் கொண்டிருப்பாள்; வயது பதினேழு ,பெரிய கண்கள் ,கருங்கூந்தல் ;இடது கன்னத்தில் ஒரு மச்சம் .என் மகளைக் கண்டுபிடித்தால் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்’.
‘உங்கள் மகள் உயிரோடிருந்தால் கட்டாயம் கொண்டு வந்து சேர்ப்போம் என்று அவனுக்கு உறுதியளித்தார்கள் இளைஞர்கள்.
தளரா முயற்சியுடன் ,உயிரைப் பணயம் வைத்து ,அமிர்தசரசுக்கு வாகனத்தில் சென்று பல பெண்டிரையும் குழந்தைகளையும் மீட்டு அகதி முகாமுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.ஆனால் சகினாவை மீட்க முடியவில்லை
அடுத்த ட்ரிப்பில் ,சாலைப் பக்கம் ஒரு பெண்ணைக் கண்டார்கள் .அவர்களை கண்டு அவள் பயந்து ஓட ஆரம்பித்தாள் .ட்ரக்கை நிறுத்திக்கீழெ குதித்து அனைவரும் அவள் பின்னே ஓடினார்கள் .வயற்காட்டில் பிடிபட்டாள் .அழகி ,இடது கன்னத்தில் மச்சம் .அவர்களில் ஒருவன் ‘பயப்படாதே .உன் பெயர் சகினாவா ?’என்றான்.அதைக் கேட்டு அவள் முகம் வெளுத்தது. தாங்கள் யார் என்று அவர்கள் சொன்ன பிறகே தான் சிராஜுதீன் மகள் சகினா என்று ஒப்புக்கொண்டாள் .
இளைஞர்கள் அவளுக்கு அன்பு காட்டினார்கள்.உணவும் பாலும் கொடுத்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய ஜாக்கெட்டை கொடுத்து போர்த்திகொள்ளச் சொன்னான்.கைகளால் மார்பை மறைத்து கலவரமடைந்த நிலையில் அவள் நின்றதைக் கண்டு மனமிரங்கி -துப்பட்டா இல்லாதது கண்ணியக்குறைவென்ற உணர்வோடு அவதியுற்றாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
நாட்கள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தன.சிராஜுதீனுக்
பின்னொரு நாள் முகாமில் அவர்கள் தென்பட்டார்கள் ,அவர்களின் ட்ரக் புறப்படத் தயார் நிலையில் இருந்தது அப்போது. அவர்களில் ஒருவனைப் பார்த்து உரத்த குரலில் ’மகனே,என் மகள் சகினாவைக் கண்டுபிடித்து விட்டாயா ?’என்று கேட்டான் ,
‘ கண்டுபிடிக்கப்போவது நிச்சயம் ‘ என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள் .
அவன் மீண்டும் அவர்களுக்காக பிரார்த்தித்தான் .அது அவனுக்குத நிம்மதி யளித்தது .
அன்று மாலை முகாம் பரபரப்புடன் காணப்பட்டது. ரயில் பாதையருகில் உணர்விழந்து கிடந்த இளம் பெண்ணின் உடலை நான்கு பேர் தூக்கி வருவதைக் கண்டான் . முகாமின் மருததுவ மனைக்கு உடலை எடுத்துச் சென்ற அவர்களைப் பின் தொடர்ந்தான் .
கொஞ்ச நேரம் மருத்துவமனைக்கு வெளியில் நின்றான் .பின்னர் ஒரு அறைக்குள் நுழைந்தான் . தூக்குப் படுக்கையில் யாரோ படுத்திருக்கக் கண்டான்.
மின் விளக்கு போடப்பட்டதால் அறையில் வெளிச்சம் பரவ,அங்கே படுத்திருந்தவளின் இடது கன்னத்தில் மச்சம் தெரிந்தது. சிராஜுதீன் ,” சகினா “ என்று அழுது ஓலமிட்டான்.மின் விளக்கைப போட்டு விட்டு அறைக்குள் வந்த மருத்துவர் சிராஜுதீனை உற்றுப் பார்த்தார் .
‘நான் இவளுடைய தந்தை ‘என்ற வார்த்தைகள் உளறலாக வெளிவந்தது.
மருத்துவர் படுத்திருந்த உடலின் நாடி பிடித்து பார்த்தார் .பின் சுட்டுவிரலால் ஜன்னலைக் காட்டி ‘அதைத் திற ‘ என்று சிராஜுதீனிடம் சொன்னார்.
தூக்குப் படுக்கையில் மயக்க நிலையில் கிடந்த இளம் பெண் கொஞ்சம் லேசாக அசைந்தாள். கண்களைத திறவாமல் உடுத்தியிருந்த ஷல்வாரின் நாடா வைத் தடவி முடிச்சை உணர்ந்தாள் .பொறுத்துக்கொள்ள முடியாத மந்த கதியில் நாடாவின் முடிச்சை அவிழ்த்து ஆடையைக் கீழே இழுத்து விட்ட பின் தொடைகளை அகல விரித்தாள் .
‘என் மகள் உயிரோடிருக்கிறாள்’ என்று சிராஜுதீன் மகிழ்ச்சியோடு கத்தினான்.
பெண்ணின் நிலை உணர்ந்த அதிர்ச்சியில் மருத்துவருக்கு ‘குப் ‘ என வியர்த்தது.
Foot Notes: The above is the tamil translation of a short story by Sadat Hasan Manto ,a noted urdu writer. Penguin India had published a book of Sadat Hasan Manto’s selected stories under their Modern Classics caption wherein the above story entitled ‘The Return’ in pages 50to 53.Tamil translation from English version by :GORA
ஆசிரியர் அறிமுகம் :
சாதத் ஹசன் மண்டோ (11-5-1912 to 18-1-1955)
இவர் உருது மொழியில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட ,Bu(odour),Khol do(open it), Thanda Gosht(cold meat), Toba Tek Singh போன்ற சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார் .சர்ச்சைக்குரிய எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் . சினிமா /ரேடியோ கதைவசன கர்த்தாவாகவும் journalist-ஆகவும் பணியாற்றினார் . இவர் பிரசுரித்தவை- இருபத்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து வானொலி நாடகத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு சொந்த வாழ்வு பற்றிய குறிப்புகளின் தொகுப்புகள் ஆகியன.