மில்லியனர்கள் ஆகும் ஆமிஷ்
சொல்வனத்தில் ஆமிஷ் வாழ்க்கைமுறை குறித்த கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் சொல்லப்பட்ட அந்தக்காலத்தில் இருந்து, இப்போதைய நடைமுறைக்கேற்ப எப்படி எல்லாம் ஆமிஷ் மாறி வருகிறார்கள் என்பதை ப்ளூம்பெர்க் பிசினெஸ்வீக் ஆராய்கிறது. ஆமிஷ் மாதிரி சிரத்தையாக வேலை செய்பவர்கள் குறைவு என்பதால், குழாய் பழுதுபார்க்கவும் மரவேலை செய்யவும் பெரும்பாலும் ஆமிஷ் மக்களையே நாடுகின்றனர். சிறு சேமிப்பு பெரு லட்சமாக, பணக்காரர்களாகி முதலீட்டாளர்களாக ஆமிஷ் மக்கள் மாறி இருக்கிறார்கள். மின்சாரத்தை உபயோகிக்காவிட்டாலும், ஐஃபோன் கொண்டு வியாபாரம் செய்வதை ஜென் பான்பெரி எழுதுகிறார்.
http://www.businessweek.com/articles/2014-06-26/rich-amish-lured-into-florida-land-investment-scheme
oOo
ஸ்டெஃபானி க்வொலெக்: அஞ்சலி
உலகில் உள்ள பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், ஏராளமான அரசியல் தலைவர்கள் ஆகியோரில் துவங்கி, எதிரி நிலையில் இருக்கும் கள்ளக் கடத்தல்காரர்கள், மாஃபியா தலைகள், (மனித) கொரில்லாக்கள், கடற்கொள்ளையர், போதைமருந்துக் குற்றக் கும்பல்கள் என்றிருக்கும் ஒட்டுண்ணிகளையும் சேர்த்து ஏராளமான நபர்கள் பொதுவில் உயிர்ப்பயம் இன்றி உலவ, செயல்பட உதவிய ஒரு நபர் 21 ஜூன் 2014 அன்று இறந்தார். யார் அவர்? எந்த நாடு? என்ன செய்து இப்படி ஒரு பாதுகாப்பை அவர் கொடுக்க முடிந்தது?
ஸ்டெஃபானி க்வொலெக் (இது ஒரு போலிஷ் பெயர் என்று தெரிகிறது.) ஒரு அமெரிக்க ரசாயன ஆய்வாளர். நன்கு தெரிய வந்திருக்கிற டுபாண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் 1946 இலிருந்து அந்நிறுவனத்தில் ஆய்வுகள் நடத்திய இவர், 1965 வாக்கில் கண்டுபிடித்தது ஒரு திரவ பாலிமர் ஸ்படிகம் (chrystal). இதை முதல் செயற்கை திரவ ஸ்படிகம் என்று டுபாண்ட் நிறுவனம் அழைக்கிறது. கார் டயர்களை மேலும் உறுதிப்படுத்த ஏதாவது ஒரு நாரிழையைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருந்த இவர் தற்செயலாக இந்தப் பாலிமரைக் கண்டு பிடிக்கிறார். இது இலேசானது, எஃகை விட ஐந்து மடங்கு உறுதியானது. அதனால் இதைத் துப்பாக்கி குண்டுகளைத் தடூத்து நிறுத்த உதவும் மேலங்கிகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மேலும் பல பயன்பாடுகள் உண்டு.
இதை எப்படிக் கண்டு பிடித்தார். பின் அதைத் தன் நிறுவனத்து மேலாளர்களிடம் சொல்லுமுன் எத்தனை தயங்கினார். பலமுறை சோதித்த பின்னரே அறிவித்தார் என்பதெல்லாம் கீழ்க்கண்ட செய்திக் குறிப்பில் கிட்டுகின்றன. உலகில் உள்ள கொலைக் கருவிகளுக்கெல்லாம் தடுப்பான ஒரு மேலங்கியைத் தயாரித்துப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவியவர் ஒரு பெண் அறிவியலாளர் என்பது எத்தனை பொருத்தமான விஷயம்?!
http://www.theguardian.com/world/2014/jun/21/stephanie-kwolek-inventor-kevlar-dies
oOo
மெய்யும் புனைவும்
பெண்களை நாயகியாக வைத்து எழுதுவோர் குறைவு. தமோரா பியர்ஸ் இந்த அரிய வகையைச் சேர்ந்தவர். பதின்ம வயதினருக்கான புத்தகங்கள் எழுதுகிறார். மாயாஜாலம், ஜீபூம்பா என வழக்கமான பரபரப்பு கலாச்சாரம் காணப்பட்டாலும், மாதவிடாய் குறித்தும் போகிற போக்கில் புத்தகத்தில் வருகிறது. பாலுறவு போன்ற பேசாப் பொருளை, அன்றாட நிகழ்வாக வாசித்த அனுபவத்தையும் இவரைப் போன்றே சகஜமாக மகளிர் வாழ்வியல் நடப்புகளை சொல்லிச் செல்லும் நூல்களையும் புனைவுகளையும் அறிமுகம் செய்து தொகுக்கிறது இந்தப் பதிவு.
http://thegeekanthropologist.com/2014/06/25/fantasy-and-the-female-body/
oOo
நிலவைத் தொட நினைக்கும் கூகுள்
ஒரு புறம் பார்த்தால் ஓட்டுனர் இல்லாத கார். இன்னொரு புறம் எல்லா பட்டி தொட்டிகளிலும் அதிவேக இணைய அகலபட்டைத் தொடர்பு; அதிலும் முற்றிலும் இலவசமாக. செல்பேசியிலும் கைக்கணினிகளிலும் இயந்திரப் பார்வை கொடுப்பது; சுற்றுப்புற உலகத்தை முப்பரிமாணத்தில் உலாவுவது; வலையே கிடைக்காத இடங்களில் வையவிரிவு வலையைக் கிடைக்கச் செய்வது என கூகுள் எங்கெல்லாம் கால் பதிக்கிறது என்பதை இந்தக் கட்டுரை பருந்துப் பார்வையாகக் காட்டுகிறது. நடந்து முடிந்த கூகுள் திருவிழாவான ஐ/ஓ 2014ல் இருந்து வெளியான முக்கியமான அறிவுப்புகளையும் பகிர்கிறார்கள். கூகிள் கார்ட்போர்ட் பெற்றுவிட்டீர்களா?
http://www.cnet.com/news/larry-pages-stamp-on-google-more-than-moon-shots/
oOo