சிங்கப்பூர் சென்ற மகன்

ku.aa_thumb[1]

கழுகுமலை பலசரக்குக்கடை சங்கரன் செட்டியார் வீட்டுக்குக் காவேரிப் பாட்டி வந்து சேர்ந்த போது மாலை ஐந்து மணிக்கு மேலேயே இருக்கும். அப்போது வீட்டில் செட்டியார் இல்லை. அவருடைய மனைவியும் மகளும்தான் இருந்தார்கள். இருவருமே பாட்டியைப் பார்த்ததும் ஆவலோ வெறுப்போ இன்றி “வா பாட்டி, எங்கிருந்து வர்ரே?” என்று வரவேற்றார்கள்.

“ஊரிலே இருந்துதான் வர்ரேன் மீனாச்சி!” என்று கூறிவிட்டு, “முருகா…” என்று சொல்லிக்கொண்டே ஒரு மூலையில் உட்கார்ந்தாள் பாட்டி. உட்கார்ந்ததுமே “நாளைக்கு மாசிமகமாச்சே, முருகனைப் போய்ச் சேவிச்சிட்டு வருவோம்னு வந்தேன். அடுத்த மகத்துக்கு இருக்கப் போறனோ, என்னவோ! “ என்றும் சொன்னாள்.

அவளுக்குப் பயம். “ஏன் வருஷம் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வருகிறாய்? உன்னை யார் இங்கே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள்?” என்று கேட்டு விடுவார்களோ என்று. அதனால், தான் வந்த காரணத்தை முன்கூட்டியே அவசரம் அவசரமாக சொல்லி முடித்தாள்.

செட்டியாரின் மனைவி தனக்குள் சிரித்துக் கொண்டாள். ‘வரும்போதெல்லாம் அசைக்கமுடியாத ஒரு காரணத்தையும் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறாளே’ என்பதை நினைக்கும்போது மீனாக்ஷியம்மாளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

அப்போது வடபக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகக் கோமதி உட்கார்ந்திருந்தது பாட்டியின் கவனத்தைக் கவர்ந்தது.

“கோமதி எப்ப வந்தா மீனாச்சி?” என்று காவேரிப்பாட்டி கேட்டாள்.

“ஏழாம் மாசத்திலேயே கூட்டியாந்திட்டோம், பாட்டி. இதுதான் மாசம்” என்றாள் மீனாக்ஷியம்மாள்.

“வாம்மா கோமதி, வா, வந்து இப்படிப் பக்கத்திலே உக்காரு” என்று அவளை அழைத்து வைத்துக் கொண்டு அவளுடைய கணவன் வீட்டு க்ஷேமலாபங்களை அக்கறையோடு பாட்டி விசாரிக்கலானாள். கோமதியைக் கர்ப்பிணியாகப் பார்த்ததில் பாட்டிக்கு ஒரே சந்தோஷம், அவளுடைய பிள்ளைப்பேறு சமயத்தில் ஒத்தாசையாக இருக்கும் சாக்கில் கழுகுமலையில் இரண்டு மாதங்களாவது தங்கியிருக்கலாம் என்று பாட்டிக்கு நம்பிக்கை பிறந்தது.

சிறிது நேரம் சென்றதும், ஏதோ ஒரு நல்ல விஷயம் ஞாபகத்துக்கு வந்துவிட்டதைப் போல் ஒரே சந்தோஷ முழக்கத்துடன், “வைகாசி மாசத்திலே வர்ரதாச் சொல்லி ஆறுமுகம் காயிதம் போட்டிருக்கான், மீனாச்சி. முந்தாநாள்தான் காயிதம் வந்தது!” என்று காவேரிப்பாட்டி சொன்னாள்.

மீனாக்ஷியம்மாள் இந்தச் செய்தியைக் கேட்டதும் ஆவலோடு, “என்ன, ஏது” என்று விசாரிப்பாள் என்று பாட்டி எதிர்பார்த்தாள். ஆனால் அந்த அம்மாளோ அதைக் காதில் வாங்காதவள் போல ஒருபக்கம் பராக்குப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

பாட்டி தன் முழக்கத்தை நிறுத்தவில்லை. “அம்மட்டுக்கும் நல்ல சமயத்திலேதான் வர்ரான். வைகாசிக்கு, கோமதியோட பிள்ள மூணு மாசக் குழந்தையா இருப்பான்…ஆமாம், முருகன் கிருபையிலே பேரன்தான் பிறக்கப் போறான். என் வாக்குப் பலிக்குதா இல்லையா பாரு மீனாச்சி! பேரனுக்கு ரெண்டு பவுன்லே அரணாக்கொடி செஞ்சிக்கிட்டு வாடான்னு ஆறுமுகத்துக்குக் காயிதம் போடப்போறேன்.”

அப்பொழுதும் மீனாக்ஷியம்மாள் எதுவும் பேசவில்லை. மறுமுறையும் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளத்தான் செய்தாள். ஆறுமுகத்தையும், தங்க அரைஞாணையும் பற்றி எதுவுமே பிரஸ்தாபிக்காமல், “பாட்டி வாக்குப் பலிக்கட்டும்! பேரன் பிறக்கட்டும்!” என்று மட்டும் சொன்னாள்.

தன் மகனுடைய வருகைக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து, மீனாக்ஷியம்மாளின் ஆவலை எப்படியாவது தூண்டிவிடவேண்டும் என்ற முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டாள் பாட்டி.

“போன வருசமே வந்திருப்பான். அப்போ கடை முதலாளியும் அனுப்பி வைக்கிறதாத்தான் சொன்னாராம். ஆனா, கப்பலுக்கு பொறப்படுகிறபோது, ‘அவசர வேலை இருக்கு ஆறுமுகம்; நீ இல்லாமே இங்கே என்ன காரியம் நடக்கும்? இருந்து, அடுத்த வருசம் ஊருக்குப் போகலாம்’னு சொல்லி பயணத்தை நிறுத்திப்போட்டாராம். கடைசி கடைசின்னு பத்து வருஷத்துக்குப் பிறகு இந்த வைகாசியிலே பயணம் வச்சிருக்கான்……ஹூம், இந்தப் பத்து வருஷமும் நான் பட்டப் பாடு எனக்குத் தெரியும்; அந்த முருகனுக்குத் தெரியும்.”

கண்களில் கசிந்திருந்த கண்ணீரைப் பாட்டி விரலால் துடைத்துச் சுண்டினாள்.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். பிறகு மீனாக்ஷியம்மாள் எழுந்து, “இரு பாட்டி, கோமதிகிட்டே பேசிக்கிட்டு இரு, விளக்கேத்திட்டு வர்ரேன்” என்று சொல்லிவிட்டு அப்பால் போனாள்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் சங்கரன் செட்டியார் கடையைச் சாத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காவேரிப்பாட்டி வந்திருப்பதைப் பார்த்து, “வா, பாட்டி, சௌக்கியமா? என்று கேட்டார்.

பாட்டி அவரிடமும் தன் வாய்ப்பாட்டை ஒப்பித்தாள்: “கழுகுமலைக்கு வந்ததற்குக் காரணம் மாசிமகத் திருநாள்தான்… … ஆறுமுகம் வைகாசியில் சிங்கப்பூரிலிருந்து வரப்போகிறான்… பேரனுக்கு இரண்டு பவுன் அரைஞாண் கொடி… முந்தாநாள் கடிதம் வந்தது…” என்று பாட்டி சொல்லிக்கொண்டே போகும்போது, செட்டியார் குறுக்கிட்டு “காயிதம் வேறே போட்டிருக்கானா?” என்று கேட்டார்.

“ஆமா சங்கரா, முந்தாநாள்தான் வந்தது” என்று அழுத்தம் திருத்தமாக பாட்டி சொன்னாள்.

“அப்படியா!” என்று ஒருமாதிரியாக சொல்லிவிட்டு, சங்கரன் செட்டியார் கிணற்றடிக்குப் போய்விட்டார்.

கிழவிக்கு மனக்கஷ்டம் தாங்கவே முடியவில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிய பிறகும் காவேரிப்பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பத்து வருஷங்களுக்குப் பிறகு ஏராளமான சம்பாத்தியத்துடன் மகன் திரும்பி வருகிறான் என்றும், செட்டியாருடைய பேரனுக்கு இரண்டு பவுன் அரைஞாண் கொடியைக் கொண்டுவந்து கொடுக்கப்போகிறான் என்றும் சொல்லியும்கூட, அவர்கள் அதை வேண்டுமென்றே காதில் வாங்கிக்கொள்ளாமல் அப்பால் நழுவுவதை நினைக்கும்போது அவளுக்கு அவமானமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

ஆறுமுகம் வருவான் என்று அவர்கள் நம்பவில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ‘நம்பாததற்குக் காரணம்? அவன் தாயைத் தேடி வரக்கூடிய சற்புத்திரன் அல்ல என்று நினைத்தார்களா? இல்லையென்றால்…?’ கிழவிக்குப் பயத்தினால் நெஞ்சு ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது.

கிழவி

“முருகா! இந்த வயசிலே நான் இப்படி ஊர் ஊரா அலைஞ்சி திரியிரது கூட ஒனக்குப் பொறுக்கலியா? இந்தப் பொழைப்பிலும் மண் விழணுமா? நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணிணேன்?” என்று கடவுளிடம் தன் குறையை. சொல்லி அழுதாள். ‘மாசிமகம் திருநாள் முடிந்ததுமே கழுகுமலையை விட்டுப் போய்விடலாமா? இல்லையென்றால் துணிந்து கோமதியின் பிரசவம் வரைக்கும் இருந்துவிட்டுப் போவதா?…இந்த இரண்டில் எதைச் செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு வெகுநேரம் வரையில் மனசோடு போராடினாள். கடைசியில், ஒரு முடிவுக்கும் வரமுடியாமலே எப்படியோ தூங்கி விட்டாள்.

காவேரிப்பாட்டி அவள் சொன்னதுபோல் ஊர் ஊராய் அலைந்து ஜீவனம் பண்ண ஆரம்பித்துப் பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. பத்து வருஷங்களுக்கு முன்பு அவளுடைய ஏகபுத்திரன் திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விட்டான். அவன் அப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டுப் போனதற்கு அவனுடைய சோம்பேறித்தனத்தைத் தவிர வேறு காரணம் எதுவும் கிடையாது. பலகாரம் விற்று அன்றாடம் அரையும் காலும் சம்பாதித்துக் கொண்டிருந்த தகப்பனார் காலமாகி விட்டார். தாயாருக்கு சுயமாகப் பலகாரம் போட்டு விற்கும் திறமை கிடையாது. அவனுக்கோ வயது இருபத்திரண்டு ஆகியும் எந்த வேலையை செய்வதற்கும் சாமர்த்தியம் இல்லை; மனமும் இல்லை. சோம்பேறியாகவே இருந்து பழகிவிட்டான். போதும் போதாததற்குக் கெட்ட சகவாசங்கள் வேறு. இந்த நிலையில்தான் அவன் ஊரை விட்டுப் போய்விட்டான். எங்கே போனான், என்ன ஆனான் என்று யாருக்குமே தெரியாது. காவேரிப்பாட்டி பிள்ளைப் பாசத்தினால் அந்த சோம்பேறி மகனையும் தேடிக்கொண்டு, உற்றார் உறவினர் வாழும் ஊருக்கெல்லாம் ஒருமுறை போய்விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள்.

வருஷம் ஒன்றாயிற்று; இரண்டாயிற்று. அதுவரையிலும் மகனை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது போய், தன்னை நினைத்தே கவலைப்பட வேண்டியதாகி விட்டது. ஐம்பத்தைந்து வயதுக்கு மேல் கைமுதல் எதுவுமில்லாமல் தனி வாழ்க்கை வாழ்வது எப்படி? கிழவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தச் சமயத்தில் பத்துப் பன்னிரெண்டு மைல் தூரத்திலுள்ள கடம்பூரில் தன் உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தாள். போன இடத்தில் பாட்டிக்கு எதிர்பாராத விதமாக ஆறுமுகத்தைப் பற்றிய செய்தி தெரியவந்தது. சிங்கப்பூரிலிருந்து சுமார் ஒரு மாதத்துக்கு முன் திரும்பி வந்திருந்த அவ்வூர் க்ஷவரத் தொழிலாளி சுப்பையா, காவேரிப்பாட்டியின் மகன் ஆறுமுகத்தைப் பற்றி ஒரு சமயம் அந்தக் கல்யாண வீட்டுக்காரரிடம் பிரஸ்தாபித்திருக்கிறான். சிங்கப்பூருக்கு வந்தவர்களில் நல்லவிதமாகச் சம்பாதித்து பணத்தோடு ஊர் திரும்பியவர்களும் உண்டு. ஒன்றும் சம்பாதிக்காமலே குடித்துவிட்டுப் பாழாகப் போகிறவர்களும் உண்டு என்று சொல்லி, அப்படிச் சீரழியும் ஆசாமிகளில் செட்டிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் ஒருவர் என்று அவன் ஆறுமுகத்தை உதாரணம் காட்டியிருக்கிறான். உடனே சுப்பையாவிடம், ஆறுமுகத்தைப் பற்றித் தீர விசாரித்துத் தெரிந்துகொண்ட கல்யாண வீட்டுக்காரர், அதை ஞாபகம் வைத்திருந்து, பாட்டி வந்ததும் அவளிடம் விஷயத்தைச் சொன்னார். அந்த நிமிஷமே சுப்பையாவைத் தேடிப் போனாள் பாட்டி. மகனைப் பற்றி விசாரித்தாள். கடல் தாண்டிப் போயும் மகன் திருந்தாததற்காக ஒரு மூச்சு அழுதாள். அப்புறம் “சுப்பையா! நீ எனக்குப் பெத்த பிள்ளை மாதிரி. நீ போய் அவனுக்குப் புத்தி சொல்லு. நாலுபேரைப்போல சம்பாதிச்சு நல்லபடியா ஊர் வந்து சேர ஒரு வழி பண்ணிக் குடு. உனக்குக் கோடி புண்ணியம். உன் புள்ளை குட்டி நல்லாயிருக்கும்.” என்று கெஞ்சினாள். சிங்கப்பூருக்குப் போய் தனக்கு மறக்காமல் கடிதம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். தன்னால் ஆனதைச் செய்வதாக சுப்பையா வாக்குக் கொடுத்த பின்பு, பாட்டி கல்யாண வீட்டுக்குத் திரும்பினாள்.

கல்யாணம் முடிந்ததும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த பாட்டி, வெகு சீக்கிரத்திலேயே தன் மீதி வாழ்நாளையும் தள்ளுவது எப்படி என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

நாள் கணக்கில் தீவிரமாக ஆலோசித்த பின்பு ஒரு முடிவுக்கு வந்தாள்.

சுமார் இருபது மைல் வட்டாரத்தில் இருக்கும் ஏழெட்டு ஊர்களில் அவளுக்குப் பந்துக்கள் இருந்தார்கள். யாருடைய வீட்டிலாவது போய் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று தோன்றியது. அதன் பிரகாரம் முதலில் ஒரு கிராமத்துக்குப் போனாள். போய் இரண்டு மூன்று நாட்கள் இருந்த பிறகுதான் தன் திட்டம் நிறைவேறக்கூடிய திட்டமல்ல என்று தெரிந்தது. பந்துக்களில் சாப்பாடு போட்டு வேலைக்காரி வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்த குடும்பங்கள் இரண்டொன்றுதான் இருந்தன. அவர்களுக்கும் அந்த சக்திதான் இருந்ததே ஒழிய, அவசியம் எதுவும் இல்லை. வேலைக்காரி இல்லாமலே அவர்கள் சமாளித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். மற்றக் குடும்பத்தினர் பாட்டியைப் போலவே ஏழைகள். அதனால் நிரந்தரமாக எந்தக் குடும்பத்துடனும் அவளால் தங்கமுடியவில்லை. இதை உத்தேசித்து ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ இருப்பது, வீட்டுவேலை செய்ய முடிந்த இடங்களில் வீட்டு வேலை செய்வது, கூலி வேலை செய்யும் குடும்பங்களாக இருந்தால் அவர்களுடன் சேர்ந்து தானும் கூலி வேலை செய்வது என்று முடிவு செய்தாள். அன்றிலிருந்து பாட்டியின் முடிவில்லாத யாத்திரை ஆரம்பமாகிவிட்டது.

ஊருக்கு ஒருமாதம், இரண்டு மாதங்கள்; அப்புறம் அடுத்த ஊர். இப்படியே அந்த இருபது மைல் வட்டாரத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தாள் காவேரிப் பாட்டி. போகிற ஊர்களில் தன்னைப் பஞ்சம் பிழைக்க வந்த அனாதையாக நினைத்து இழிவாக நடத்தக்கூடாது என்பதற்காகவும் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காகவும் சிங்கப்பூரில் தன் மகன் ஒரு பெரிய கடையில் கணக்கப்பிள்ளையாக இருக்கிறான் என்றும், கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்கிறான் என்றும், சீக்கிரம் ஊருக்கு வந்துவிடுவான் என்றும் சொன்னாள். சில ஊர்களில் இந்தக் கட்டுக்கதையை நம்பவும் செய்தார்கள். சிறிதுகாலம் சென்றபின், இந்தக் கட்டுக்கதையை தன் சுயகௌரவத்துக்காக மட்டுமல்லாமல், ஒரு தந்திரமாகவும் சொல்லத் தொடங்கிவிட்டாள். வசதியாக வாழும் பந்துக்களின் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியரிடம், ‘உங்கள் மாமன் சிங்கப்பூரிலிருந்து வரும்போது நகை செய்துகொண்டு வருவான்; பட்டு வாங்கிக்கொண்டு வருவான்’ என்றெல்லாம் சொல்லுவாள். ஏழை உறவினரின் குழந்தைகளிடம் ‘பாவம், இந்த வயசில் இப்படிக் கஷ்டப்படும்படி ஆகியிருக்கிறது, உங்கள் தலை எழுத்து. உம், ஏதோ இன்னும் கொஞ்சம் காலம் பல்லைக் கடித்துக் கொண்டு இருங்கள். அவன் சீக்கிரத்திலேயே சிங்கப்பூரிலிருந்து வந்துவிடுவான். வந்தால் உங்களை இப்படிக் கண்கலங்க விடமாட்டான்’ என்று நம்பிக்கை ஊட்டுவாள். இப்படி ஆசைவார்த்தை சொல்லியே அவள் ஒவ்வோர் ஊரிலும் முகாம் போட்டுவந்தாள்.

இந்த பத்து வருஷ காலத்திலும் ஓர் ஊரில்கூட அவளை யாரும் வெறுத்து விரட்டவில்லை. ஆறுமுகத்தின் சம்பாத்தியத்தில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வைக்காமலே அவர்கள் பாட்டிக்கு நிழல் கொடுத்தார்கள். ஆரம்ப காலத்தில் இரண்டொருவர் தங்கள் தரித்திரத்தின் காரணமாக அம்மாதிரி ஆசைப்பட்டிருந்தாலும், அவளுக்குப் புகலிடம் கொடுத்து வந்ததற்கு அது காரணம் அல்ல. அவளால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்படாமல் இருந்ததுதான் உண்மையான காரணம். பாட்டி தன் வயிற்றுப்பாட்டுக்குச் செய்யவேண்டிய வேலையைவிட அதிகமாகவே ஒவ்வொரு வீட்டிலும் செய்து வந்தாள். நோய்நொடி, பிரசவம் போன்ற பல கஷ்டமான சமயங்களிலும் அவள் உதவியாக இருந்தாள். அத்துடன் அவளுடைய உதவியால் சில கல்யாணங்களும்கூட நடந்தேறின். குறிப்பிட்ட பெண்களுக்கு எந்தெந்த ஊர்களில் நல்ல மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள் என்றும் அதேபோல் குறிப்பிட்ட பையனுக்கு எங்கெங்கே பெண் கொடுப்பார்கள் என்றும், அவள் சொன்ன தகவலை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சிலர் காரியத்தில் இறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இப்படி அபூர்வமான பல கைங்கரியங்களைச் செய்து வந்ததால் அவள் வருகையை யாரும் வெறுக்கவில்லை; அவளை ஒரு சுமையாகவும் நினைக்கவில்லை. வருஷத்துக்கு ஒருதடவை தவறாமல் வந்து தங்கினாலும் அன்போடு இடம் கொடுத்து மரியாதையாக நடத்தினார்கள். ஆனால் பாட்டியோ தனக்குக் கிடைத்த அன்புக்கும் மரியாதைக்கும் தன்னையும் தன் உழைப்பையும் காரணமாக நினைக்காமல், தன் மகன் பெயரைச் சொல்லி ஆசை காட்டியதையே காரணமாக நினைத்து விட்டாள். அதனால் சதா காலமும் மகனுடைய கதையை ஒவ்வொரு ஊரிலும் மறவாமல் சொல்லிக்கொண்டு வந்தாள்.

பாட்டியின் யாத்திரை மார்க்கத்தில் உள்ள ஊர்களில் கடம்பூரும் ஒன்று. க்ஷவரத் தொழிலாளி சுப்பையாவின் வீட்டுக்குச் சென்று அவனுடைய தகப்பனாரிடம், “சுப்பையா காயிதம் போட்டிருக்கானா? ஆறுமுகத்தைப் பத்தி எழுதியிருக்கானா?” என்று விசாரிப்பதற்காகவே அவள் கடம்பூருக்குப் போவாள். பாட்டி மிகவும் வைதீகமானவளாதலால் வேறு எங்கும் சாப்பிட மாட்டாள் என்று சுப்பையாவின் தகப்பனார் ஒரு நாலணாவை அவள் கையில் கொடுப்பார். போனதற்கு இதுதான் மிச்சமாக இருக்குமே ஒழிய, மகனைப் பற்றிய தகவல் கிடைக்காது. கடைசியில் மூன்று வருஷங்களுக்கு முன் பாட்டியின் சொந்த ஊருக்கு அவளுடைய பெயருக்கே சுப்பையாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஆளில்லாத வீட்டில் தபால்காரரால் எறியப்பட்டுக் கிடந்த அனதக் கடிதத்தை, ஒரு மாதம் கழித்து ஊருக்கு வந்தபோதுதான் பாட்டி பார்த்தாள். அதை எடுத்துக்கொண்டு அந்த ஊர் வாத்தியார் வீட்டுக்கு ஓடினாள். வாத்தியார் கடிதத்தை வாங்கி, “அன்புள்ள காவேரிப் பெரியம்மாளுக்கு, சுப்பையா வணக்கத்துடன் எழுதிக்கொண்டது… …” என்று வாசிக்கத் தொடங்கியதும், “சுப்பையாவா? சுப்பையா காயிதமா?” என்று சொல்லிக்கொண்டே பாட்டி சுற்றுமுற்றும் ஒருதடவை பார்த்தாள். தன் மகனைப் பற்றி சுப்பையா ஏதாவது மோசமான தகவலை எழுதியிருக்ககூடும் என்றும், அதை யாராவது கேட்டுக்கொண்டு விடுவார்களோ என்றும் அவள் பயந்தாள். வாத்தியாரைத் தவிர வீட்டில் வேறு யாருமே இல்லை என்பதைக் கண்டு பாட்டி சந்தோஷப்பட்டுக் கொண்டாள். ஆனால் சுவருக்கு அந்தப்புறத்தில் வாத்தியாரின் மனைவி இருப்பாளே என்று அவள் நினைக்கவில்லை; நினைக்கத் தோன்றவில்லை.

வாத்தியார் கடிதம் முழுவதையும் வாசித்துக் காட்டினார். ஆறுமுகத்தைப் பற்றி மோசமான தகவல்தான் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை கேட்டுக் கிழவி அழுததும், புரண்டதும், அலறித் துடித்ததும்… …அது பழைய கதை.

***

கழுகுமலையில் மாசிமகத் திருநாளுக்கு வழக்கம்போல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். ஊரே கொள்ளாத ஜனக்கூட்டம். சங்கரன் செட்டியாருக்கும் , காவேரிப்பாட்டிக்கும் உறவான ஒரு குடும்பமும் விழாப் பார்ப்பதற்காக குழந்தை குட்டிகளோடு அன்று எட்டயபுரத்திலிருந்து வந்திருந்தது.

அது ஓர் ஏழைக்குடும்பம். செட்டியார் குடும்பத்தின் சார்பிலும், தன் சார்பிலும் பாட்டியே அவர்களை எதிர்கொண்டழைத்தாள். அந்தக் குழந்தை குட்டிகளை எடுத்து, “கண்ணே, ராசா!” என்றெல்லாம் கொஞ்சினாள். குழந்தைகளுக்குப் பாட்டி நன்கு பரிச்சயமானவள். முந்திய வருஷம் அவர்கள் ஊருக்கும் பாட்டி சென்று ஒருமாதம் தங்கிவிட்டு வந்திருக்கிறாள்.

சாயங்காலமானதும் சங்கரன் செட்டியாரின் மனைவியும், எட்டயபுரத்துப் பெண்ணும், அவள் குழந்தைகளும், பாட்டியும் கலகலப்பாக பேசிக்கொண்டே முருகன் கோவிலுக்குப் பூஜாதிரவியங்களுடன் சென்றார்கள். பிராகாரம் சுற்றி முடித்ததும், பாட்டி பயபக்தியோடு தன் முந்தியில் முடித்து வைத்திருந்த காசுகளில் இரண்டணாவை எடுத்தாள். கர்ப்பக் கிருஹத்தைப் பார்த்துத் திரும்பி, இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு “முருகா! என் மகன் சௌக்கியமா ஊர் வந்து சேரணும்! வைகாசி விசாகத்துக்குத் தாயும் புள்ளையுமா நாங்க வந்து உன்னைச் சேவிக்கணும்!” என்று சொன்னாள். கூப்பிய கைகளைத் தலைக்கு மேல் தூக்கினாள். அந்தச் சமயத்தில் அவளுடைய உதடுகள் பேசமுடியாமல் துடித்தன. கண்கள் நனைந்தன. உண்டியலில் காசைப் போட்டுவிட்டுப் புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்புறம் எல்லோரும் வீடு திரும்பினார்கள். கலகலப்பாகப் பேசிகொண்டே கோவிலுக்குப் போனவர்கள், திரும்பி வரும்போது சொல்லிவைத்தாற்போல் பாட்டியிடம் எதுவுமே பேசவில்லை. உண்டியலில் காசு போடும்போது, ஆறுமுகத்தைப் பற்றி அவள் பிரஸ்தாபித்ததுதான் காரணமாகப் போய்விட்டது. பாட்டியை மறந்துவிட்டு அவர்கள் தங்களுக்குள்ளேயே எதை எதையோ பேசிக்கொண்டு வந்தார்கள்.

காவேரிப்பாட்டி பழையபடியும் மனக் கஷ்டத்துக்குள்ளானாள். “அவன் பேரைச் சொன்னாலே இப்படி ஏன் ஒதுங்கிப் போகிறார்கள்?” என்று திகைத்தாள். தன் மனசுக்கு ஆறுதல் தேடும்முறையில் அந்தக் குடும்பத்தின் ஆறு வயது சிறுவன் ஒருவனைத் தன் கையில் பிடித்துக் கொண்டு, “கோயிலுக்கு ஒவ்வொரு குழந்தையும் எப்படி எப்படியெல்லாம் நகைநட்டுப் போட்டுக்கிட்டு வந்திருக்கு! பாவம், உனக்கு நல்ல நாளும் பொழுதுமா ஒரு பட்டுச்சட்டைகூட கொடுத்துவைக்கலியேடா ராசா! அத்தனை பேருக்கும் நடுவிலே உன்னை இந்த கோலத்தில் பார்க்க எனக்கு சகிக்கல்லேடா கண்ணு!” என்று எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொன்னாள். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததுதான் தாமதம், அந்தப் பையனுடைய தாயார் சினந்த பார்வையோடு பாட்டியைத் திரும்பிப் பார்த்தாள்.

பாட்டி இன்னும் கொஞ்சம் உரத்த குரலில், “அவன் இருந்திருந்தா உன்னை இப்படிக் கோயிலுக்குப் போக விட்டிருப்பானா? உனக்குக் கெண்டைத் துண்டு வாங்கிக் கட்டி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“ஏ கிழவி, மூடு வாயை” என்று சீறினாள் சிறுவனுடைய தாய். எல்லோரும் திடுக்கிட்டு நின்றுவிட்டார்கள்.

“என்ன கிழவி, ஒரேயடியா நீட்டி முழக்குறே! வாய்க்கொழுப்பா உனக்கு?”- எட்டயபுரத்துப் பெண் நெருப்பையே கக்கினாள்.

கிழவி பயந்து நடுங்கிக்கொண்டே, “நான் என்ன சொன்னேன்? குத்தமா ஒண்ணும் சொல்லலையே?” என்றாள்.

“குத்தமா ஒண்ணும் சொல்லலையா? நாங்க என்னமோ கஞ்சிக்குத் திண்டாடுற மாதிரியும், நீயும் உன் மகனும் எங்களுக்குப் படியளக்கிறவுக மாதிரியுமில்லே பேசுறே! அவன் செத்து, அவனைப் பொதைச்ச இடத்துலே புல்லும் முளைச்சுப் போச்சு. நீ என்னடான்னா செத்தவன் பேரைச் சொல்லி எங்களை ஏமாத்திப் பிழைக்கிறதோட நிக்காமே, எங்களுக்குமில்லே பிச்சைக்காரப் பட்டம் கட்டுறே?” என்று எட்டயபுரம் பெண் சீறினாள்.

“முருகா!முருகா!” என்று தெருவே எதிரொலிக்கும்படிக் கத்தித் தலையில் அடித்துக் கொண்டாள் கிழவி.

“அநியாயமாச் சொல்லாதே! நாக்கு அழுகிப் போகும்! எனக்கு இருக்கிறது ஒத்தைக்கு ஒரு பிள்ளை…”

நடுத்தெருவில், திருவிழாக் கூட்டத்துக்கு மத்தியில், கிழவி தலையில் அடித்துக்கொண்டு கூப்பாடு போடுவதைக் கண்ட மீனாக்ஷியம்மாளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “பாட்டி, பேசாமலிரு, சத்தம் போடாதே” என்று அவள் கையை இழுத்தாள்.

ஆனால் கிழவி தன் கூப்பாட்டை நிறுத்தவில்லை. அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. தெருவில் நிற்பவர்களோ, “என்ன? ஏது?” என்று கேட்டுக்கொண்டே நெருங்கி வந்தனர்.

“ஐயையோ! மானம் போகுதே! நடுத்தெருவில் கிழவி இந்த ஆட்டம் ஆடுறாளே” என்று மீனாக்ஷியம்மாள் கைவிரல்களை சொடுக்கினாள். இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு கிழவியையும் மற்றவர்களையும் அப்படியே விட்டுவிட்டு, அதிவேகமாகத் தன்வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாள்.

“இந்தக் கிழவியை இனி வீட்டுக்குள்ளே விடுறதே தப்பு, கோமதி! அவளுக்குப் புத்தி சுவாதீனமே இல்லை. நடுத்தெருவிலே வெறி பிடிச்சவ மாதிரி கத்துறா” என்று மீனாக்ஷியம்மாள் தன் மகளிடம் கதையைச் சொல்லத் தொடங்கியதும், காவேரி பாட்டியும், எட்டயபுரத்துப் பெண்ணும், குழந்தைகளும் வந்துவிட்டார்கள். பாட்டி அழுகையும் கூக்குரலுமாகவே வந்தாள்.

தெருவில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்ட செட்டியார் திடுக்கிட்டு, “அட, பாவமே, கிழவியிடத்தில் அந்தச் சமாசாரத்தைப் போய் ஏன் சொன்னீக? இந்த வயசுக் காலத்திலே…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எட்டயபுரத்துப் பெண் தணியாத ஆத்திரத்துடன், “இந்தக் கிழவி என்னையும், என் பிள்ளைகளையும் நடுத்தெருவிலே இவ்வளவு கேவலமாகப் பேசலாமா, அண்ணாச்சி? ஊருக்கு வர்ரபோதுதான் இப்படி அவமானமாகப் பேசுறாள்னு பார்த்தா, நாங்க வந்த எடத்துலயுமா பேசுறது?” என்றாள்.

“என் பிள்ளை சாகல்லே, சங்கரா! உசுரோட இருக்கிறான். முருகன் பேரிலே சத்தியமாச் சொல்றேன். அவன் உசுரோடதான் இருக்கிறான்! அநியாயமாகப் பேசுற இவள் விளங்கமாட்டாள்” என்றாள் பாட்டி ஆவேசத்துடன்.

“சத்தியம் வேறயா பண்றே! சத்தியம் பண்ணிட்டா, மூணு வருசத்துக்கு முன்னாலே செத்தவன் உசுரோடே வந்திருவான்னு நினைப்பா?” என்றாள் எட்டயபுரத்துப் பெண்.

“நீ சும்மா இரு” என்று அவள் வாயை அடக்கினார் அவள் கணவர்.

சங்கரன் செட்டியார் மிகவும் இரக்கமான குரலில், “எத்தனை நாளைக்குத்தான் மூடி வைக்கமுடியும்? பாட்டி! நான் சொல்றதை நம்பு. உன் பிள்ளை சமாசாரம் எனக்கு அப்பவே தெரியும். எனக்கு மட்டுமில்லே, இன்னும் யார்யாருக்கெல்லாமோ தெரியும். வயசு காலத்திலே அதை உனக்குச் சொல்ல வேண்டாம்னுதான் எல்லாரும் இத்தனை நாளும் மூடி மறைச்சு வச்சிருந்தோம். உண்மையை எத்தனை நாளைக்கு மறைச்சு வச்சாலும், ஒருசமயம் இல்லாட்டா ஒருசமயம் வெளியாகாமப் போகாது. மனசை அடக்கிக்கோ” என்று ஆறுதல் அளிக்க முயன்றார்.

ஆனால் யார் சொன்னாலுமே பாட்டி ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. தான் இதுவரையில் ஏமாற்றிப் பிழைத்ததாக நினைத்து விடுவார்களே, மற்ற உறவினர்களுக்கும் விஷயம் எட்டித் தன்னைக் கேவலமாகப் பேசுவார்களே, எங்கும் தலைகாட்ட முடியாதே, என்ற பயமும் அதிர்ச்சியும் அவளுடைய புத்தியைப் பேதலிக்கச் செய்துவிட்டன. உயிரை கொடுத்தாவது தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திலிருந்து மீளவேண்டும், மகன் உயிரோடு இருப்பதாக நிரூபித்துவிடவேண்டும் என்று துடித்தாள்.

முழுக்க முழுக்கச் சுவாதீனத்தை இழந்து, “சங்கரா! நீ கூடவா அப்படிச் சொல்றே! நான் சொல்றது நிசமா, பொய்யா என்கிறதை முந்தாநாள் வந்த இந்தக் காயிதத்தைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கோ!” என்று கூறித் தன் புடவையில் முடிந்திருந்த வெள்ளைக் காகிதத்தை எடுத்து எதிரே வீசினாள். வீசிய மாத்திரத்தில் கிழவி அப்படியே கீழே சரிந்தாள்.

செட்டியாருக்கோ அவள் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. நம்பமுடியாத ஆச்சரியத்துக்குள்ளான அவர், கசங்கியிருந்த கடிதத்தைத் தான் அவசரமாகப் பிரித்து வாசித்தார். முந்தாநாள் ஆறுமுகத்திடமிருந்து வந்ததாகக் கிழவி சொன்ன அந்தக் கடிதத்தில், மூன்று வருஷங்களுக்கு முந்திய தேதியிடப்பட்டு, பின்வருமாறு எழுதியிருந்தது:

“அன்புள்ள காவேரிப் பெரியம்மாளுக்கு, சுப்பையா வணக்கமாய் எழுதிக்கொண்டது.

“இப்பவும் உங்கள் மகன் சிலநாட்களாய்ச் சீக்காய் கிடந்து நேத்து ராத்திரி சிவலோகப் பதவி அடைந்துவிட்டார். அளவில்லாமல் குடித்து, கண்காணாத இடத்தில் இப்படி சாகும்படி அவர் தலைவிதி இருந்திருக்கிறது. எல்லாம் கடவுள் செயல். நாங்கள் ஐந்தாறு பேர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் பண்ணினோம். கடவுளை நினைச்சு மனசைத் தேற்றிக்கொள்ளுங்கள். தலை எழுத்தை நம்மால் மாற்ற முடியாது.

ரா.சுப்பையா

சிங்கப்பூர்.

*****

ஆசிரியர் குறிப்பு:

கு. அழகிரிசாமி (23-9-1923 – 5-7-1970) ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான எழுத்தின் மூலம் மிகச் சிறந்த கதைகளை எழுதியவர். இவருடைய ‘யாருக்குக்கட்டிய வீடு, திரிபுரம், பெருமாள் எழவில்லை, தன்னையறிந்தவர், தேவ ஜீவனம், செவி சாய்க்க ஒருவன் முதலிய கதைகள் உண்மையை வெகு எளிமையாக எழுத முடியும் என்பதர்கான சான்றுகள்.

இவர் தன் நண்பர் திரு கி. ராஜநாரயணனுக்கு 7-2-47ல் எழுதிய கடிதத்திலிருந்து :-
“கல்லும் முள்ளும் செறிந்த ஒரு கானகம் இருந்தது; சந்தோஷமும் சிறிது கஷ்டமுமாக. பிறகு காட்டு மரங்களில் நோய் பரவவே, கானகத்தை அழித்து, செழித்ததோர் பூங்காவனம் ஆக்கும் முயற்சியில் ஈடு பட்டோம். இந்த வேலையின் தொடக்கத்துக்கு முன்பாக, கானகம் அழிந்து பாலையாகவோ சுடுகாடாகவோ மாறிவிடுமோ என்று பயந்து செத்த உள்ளங்கள் இன்று புத்துயிர் பெற்று வளர்ந்து விட்டன. கானகம் பூங்காவனம் ஆகிறது. கானகத்திலும் இருதயத்திலும் சாம்பல் பறந்துவிடுமோ  என்று பயந்தோம். ஆனால் இன்று மகரந்தம் பறக்கிறது.

இந்த மலர்வனத்தை நீ சாமான்யமாகக் கருதி விடாதே. இதற்கென்று, உலகெங்கும் பரந்து வியாபித்த இந்த மலர் வனத்துக்கென்று ஒரு தனி சரித்திரம் உண்டு; தனிக் காவியம் உண்டு. பாராட்டிப் பாராட்டி மகிழ மயிர் சிலிர்க்கும் புகழ் படைத்த பாரம்பர்யமும் உண்டு. இந்தத் தலைமுறையில் நாம் இதில் உட்கார்ந்து, வாசமண்டும் தேனையுண்டு, மோகன முகாரி ராகம் பாடி’ பாரசீகத்து, உமார்க் கவிஞனின் சிஷ்யகோடிகளாக புனித வாழ்வு நடத்துகிறோம். இதே மலர் வனத்தில்தான்   முன்னொரு தலைமுறையில் புத்தன் பிறந்தான். இந்த வனத்திற்கு அன்றைய பெயர் லும்பினி.
மேனகை என்ற வானுலகத்துப் பேரழகி, இந்த வனத்தில்தான், கவிஞர் போற்றும் சகுந்தலை என்ற லட்சியத்தை ஈன்றெடுத்தாள் என்ற பெருமையையும் ம்றந்து விடாதே !…..
புத்தனும், சகுந்தலையும் பிறந்த இந்தப் பூந்தோட்டம் அழிந்தால் உலகத்தில் தர்மம் ஏது, ராஜா? நீயும் நானும்தான் இவ்வுலக வாழ்வை விரும்பி வாழ முடியுமா சொல்?
இதிகாசப் பெருமை பெற்ற இத்தோட்டம் தன் பரம்பரையைக் காப்பாற்றும். இனியும் ஆயிரம் புத்தர்களையும் சகுந்தலைகளையும் பெற்றேடுக்கப் போகிறது இது…..
புராண நாயகர்களையும், சரித்திர வீரர்களையும் வேறு யாரோ அந்நியர் என்றா நீ கருதுகி
றாய்? நம்மில் தொடங்கி நம்மில் முடியும் செய்திகளை இனியும் நாம் மூடத்தனமாய்ப் புறக்கணித்து மறக்க முடியாது.

0 Replies to “சிங்கப்பூர் சென்ற மகன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.