கிராமத்து வீடு

கார் கிராமத்தை நெருங்க நெருங்க 40 வருடங்களுக்குப் பின் தாத்தாவின் கிராமத்துக்குப் போகும் உற்சாகம் வடிந்து கொண்டே வந்தது. முன் சீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் இருந்த சித்ரா, கிராமத்துக்கான திருப்பத்தை விட்டுவிடப்போகும் கவலையில் கவனமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கிராமப்புறமும் சென்னை போலத்தான் இருக்கு. பசுமையையே காணும்! என்னமோ சென்னை முடிஞ்சு உடனே கிராமத்துக்குள்ளே வந்துட்ட மாதிரி இருக்கு“என்றாள் உமா, சித்ராவின் அக்கா.
“40 வருட வளர்ச்சி இதுதான். பாரு ப்ளாஸ்டிக் குப்பையை.” என்று சிரித்தாள் ராஜேஸ்வரி, சித்ராவின் சித்தி.
“மரத்தை வெட்டறது, எங்கே பாத்தாலும் குப்பை போடறது, துப்பறது. பிளாஸ்டிக் குப்பை. இதுனாலெல்லாம்தான் இந்த ஊர் உருப்படாம இருக்கு,” இது ராஜேஸ்வரியின் பெண் நிர்மலா. அமெரிக்காவில் 25 வருடங்களுக்கு மேலாய் வாசம். ஆனால் அமெரிக்காவும் ஒட்டவில்லை, இந்தியாவும் பிடிக்கவில்லை.
ராஜேஸ்வரிக்கு கடந்த வாரம் 70 வயது முடிந்திருந்தது. அதைக் கொண்டாடுவதற்கு குடும்பத்தினர் சென்னையில் கூடியிருக்கையில் ராஜியின் அண்ணன் ராமநாதன் கிராமத்து வீட்டை விற்றுவிட எண்ணியிருப்பதாகச் சொல்லி அவளது அபிப்ராயத்தைக் கேட்டார். அந்த வீட்டில் கழித்த பால்ய நாட்கள் பற்றிய பேச்சுகளுக்கிடையே திடீரென்று நிர்மலாவுக்கு அந்த யோசனை வந்தது.
‘வீட்டை விக்கறதுக்கு முன்னாலே நாமெல்லாமா சேர்ந்து ஒரு தரம் ஊருக்குப் போய்விட்டு வந்தால் என்ன? பக்கத்து வீட்டிலே சாவி வாங்கி சுத்தம் பண்ணி ஒரு ரெண்டு மூணு நாளாவது இருந்துவிட்டு வருவோமே. நான் மூணு வயசுலே கடைசியா போனது. ஒண்ணுமே நினைவிலே இல்லை” என ஆரம்பிக்க, ஆண்களுக்கெல்லாம் ஏதோ வேலைகள் இருந்ததினால் சித்ரா தலைமையில் மடமடவென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதோ வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.
காரை விட்டு இறங்கிய உமா தன் நினைவில் இருந்த தெரு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று கவனித்துக் கொண்டிருக்கையில், ‘முதல்லே சாமானையெல்லாம் இறக்கி உள்ளே வெச்சுட்டு அப்புறம் பராக்கு பாக்கலாமே,” என்றபடி வந்தாள் சித்ரா. அதற்குள் பக்கத்து வீட்டுக்குப் போய் சாவி வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். அந்த வீட்டு மாமாவும் மாமியும் வாசலுக்கு வர, ராஜி அவர்களை நலம் விசாரிக்கப் போனாள்.
சித்ராவுக்கு 20 வயது இருக்கையில் அவள் தாய் மீனாட்சி கான்ஸரில் இறந்து போனாள். அதற்குள் உமாவுக்குத் திருமணம் முடிந்து போயிருந்தது. அண்ணன் ரகுவுக்கு வடக்கே வேலை. இதனால் சித்ராவுக்கு இளம் வயதிலேயே வீட்டுப் பொறுப்புகளை ஏற்பது பழக்கமாகியிருந்தது.  குடும்ப விசேஷங்களிலும் அவள்தான் எல்லோரையும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருப்பாள். இப்போதும் பெட்டிகளை எங்கே வைப்பது. குழாய்களில் தண்ணீர் வருகிறதா, சுத்தம் செய்யத் தேவையான உபகரணங்கள் எங்கே இருக்கின்றன, பாத்ரூம் உபயோகிக்கும் நிலையில் இருக்கிறதா, ஜன்னலெல்லாம் மூடுகின்றனவா என்றெல்லாம் கவனிக்க ஆரம்பித்தாள்.
பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு ‘அப்பாடா” என்று தண்ணீர் பாட்டிலுடன் வெளியே வந்த உமா ராஜியுடன் திண்ணையில் உட்கார்ந்து தெருவை ஆராய ஆரம்பித்தாள். முன்புறம் வீட்டின் அகலத்துக்கு நீண்ட திண்ணை. 10 பேர் தாராளமாய் படுக்கலாம். கதவுக்கு அந்தப் பக்கம் இன்னொரு குட்டித் திண்ணை.
“ஐயோ ஒரே அழுக்கு, ஒட்டடை, நான் போய் புது துடைப்பம், பினாயில், சோப்பு எல்லாம் வாங்கிண்டு வரேன்.  இல்லேன்னா வீட்டுலே கால் வைக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே நிர்மலா காரில் திரும்ப ஏறினாள். வீட்டை சுத்தம் பண்ணி வைத்திருந்த பக்கத்து வீட்டு மாமியின் முகம் வாடிப்போனதை கவனித்த உமா, ‘மாமி, அது அமெரிக்கா சுத்தம், நீங்க தப்பா நெனச்சுக்காதீங்கோ. பாவம் சிரமப்பட்டு சுத்தம் பண்ணிக் குடுத்திருக்கேள். தாங்க்ஸ்,” என்றாள்.
பின் உள்ளே போய் தங்கை சித்ராவிடம் “வந்ததுமே ஆரம்பிச்சுடுத்து அமெரிக்கா. ஏண்டீ இப்படி வெடுக்குன்னு சொல்றேன்னாக்க நெஜத்தைத்தானே சொன்னேன். இங்கே பாரு ஒட்டடை. இதுக்கு பேரு சுத்தமா? ஒரு காரியம் பண்ணறேன்னு ஒத்துண்டா சரியாய் செய்யணும் அப்டீன்னு ஆரம்பிச்சுடுவா,” என்றாள்.
கேட்டுக்கொண்டே வந்த ராஜி ‘ஆரம்பிச்சாச்சா கசமுசா. இந்த மூணு நாளும் உங்க மூணு பேரையும் எப்படி சமாளிக்க போறேனோ” என்று சிரித்தாள்.
சித்ரா, நிர்மலா இருவருக்கும் பிடிவாத குணம். பிடிக்கவில்லை என்பதை முகத்திலடித்தாற்போல சொல்லிவிடும் குணம். ‘நம்ம பக்கத்திலே நியாயம் இருந்தால் எதற்காக இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது’ என வாதாடுவார்கள். இதனாலேயேகூட அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லையோ என உமா சொல்வாள். ராஜியோ அவர்கள் தம் போக்கிலேயே இருந்து விட்டதுதான் இந்தப் பிடிவாத குணம் தொடர்வதற்குக் காரணம் என்பாள்.
‘கலியாணமாகி ஒரே வீட்டில் இன்னொருவரோடு இருக்கறபோது அட்ஜஸ்ட் செஞ்சுண்டுதான் ஆகணும். அப்போ இன்னொருவருடைய கட்சியையும் கன்ஸிடர் பண்ணும் குணம் வந்திருக்கும். இப்போ தான் செய்யறதுதான் சரி என்கிற அபிப்ராயம் வந்துவிட்டது” என்று சொல்வாள்.
ராட்சஸ அளவு ஈகோ உள்ள தன் கணவனை உமா நினைத்துக் கொள்வாள். ‘இவர்கள் இருவருக்கும் எனக்கு வாய்த்தது போல ஒருவன் வந்திருந்தால் என்ன ஆயிருக்குமோ!’
உமா படிப்பில் கெட்டிக்காரி. வேலையில் வெகு சீக்கிரம் முன்னேறி பெரிய பதவிக்கு வந்தவள். பிள்ளை ஒன்பதாவது வகுப்புக்கு வந்தபோது “நாம ரெண்டு பேரும் உத்தியோகத்தில் கவனமாய் இருந்தால் குடும்பத்தை கவனிப்பது பிரச்சினையாகும். நான் வேலையை விட முடியாது. நீ விட்டு விடு” என்ற அவள் கணவன் மாதவன் அவள் வேலையை ராஜிநாமா செய்யும் வரை அவளை துளைத்துக் கொண்டே இருந்தான். ஒருநாள் வைராக்கியத்துடன் வேலையை விட்டுவிட்டு வீடு, தோட்டம், பாட்டு என நேரத்தைக் கழித்து வந்தாள். ‘இப்படி நிம்மதியா வீட்டிலே இருப்பதை விட்டுவிட்டு எதற்காக வீட்டிலயும் வேலை, வெளியிலயும் டென்ஷன் என்று கஷ்டப்படணும். நான் சம்பாதிப்பதில் ராணி போல இருக்கலாமே” என்று சொல்வான். ‘என் இஷ்டம் பணத்தில் மட்டுமில்லை’ என்று சொல்லி அவனிடம் சண்டை போட உமாவுக்கு மனவலிவு கிடையாது. அது அவனுக்குப் புரியவும் புரியாது. எதிலும் அவர்களிடையே ஒற்றுமை கிடையாது.
‘க்லோபல் வார்மிங்கா? அது சில பேரால் கிளப்பட்ட புரளி’ என்பான். மரத்தையெல்லாம் வெட்டுகிறார்களே என இவள் கவலைப்பட்டால் ‘நகர போக்குவரத்துக்கு ஏத்த ரோடு வேண்டுமென்றால் மரங்களை வெட்டத்தான் வேண்டும். இன்னும் ஒன்று புதியதாய் வேறு இடத்தில் நட்டுவிட்டால் போச்சு’ என்பான். இவள் ஒரு எழுத்தாளரைப் படித்துவிட்டு ‘இத்தனை சின்ன வயது என்றால் நம்ப மாட்டார்கள். என்னமாய் எழுதுகிறாள் அந்தப் பெண்’ என்று சொன்னால் ‘யாராவது எழுதிக் கொடுக்கிறார்களோ என்னவோ’ என்பான்.
இப்படித்தான் அவர்களிடையே பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து போகும். பொதுவான விஷயங்கள் எதுவுமே இல்லையோ எனத் தோன்றும். அதற்கு மேல் அவனுடைய ஈகோ. இவளாய் எதைப் பற்றியும் முடிவெடுத்தால் அதை எப்படியாவது தடுத்துவிடுவான். அவனாக முடிவு செய்தபின் அதை நடத்தி முடிப்பதை இவளிடம் விடுவான். உட்கார்ந்த இடத்தில் சேவை செய்யவேண்டும். நாள் முழுதும் உமா ஏதோ செய்துகொண்டே இருப்பாள். இவன் வீட்டிலிருந்தாலும் மல்லாந்து படித்துக் கொண்டிருப்பான்.
உமா காலேஜில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தந்தைக்கு பிஸினசில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் மிகுந்த கஷ்ட நிலையில் இருந்தது. சகோதரன் ரகு இன்னும் வேலைக்குப் போக ஆரம்பிக்கவில்லை. அந்த சமயத்தில் மாதவன் உமாவின் மீது ஆசைப்பட்டு ‘எளிமையாய் திருமணம் செய்துகொடுத்தால் போதும்’ என்றதும் பெற்றோர் சம்மதித்து விட்டனர். திருமணமான சில நாட்களிலேயே மாதவனின் குணம் வெளியே தெரிந்து போனாலும் அவள் பிறந்த வீட்டின் நிலைமையால் உமா அதை சகித்துப் போக ஆரம்பித்தாள். நாளாக நாளாக பழகிப் போனாலும், அவளுக்கு அந்த வலி இருக்கவே செய்தது. தன் வருத்தத்தை சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள முயன்றால் அவர்கள் “நீதான் அவனை வளர்த்து விட்டிருக்கிறாய். ஆரம்பத்திலேயே நீ எதிர்த்து நின்றிருந்தால் இன்று உன்னை மிதியடிபோல் நடத்திக் கொண்டிருக்க மாட்டான்.” என்பார்கள். அதனால் அவர்கள் இல்லாதபோது ராஜியிடம் மட்டும் மனம் விட்டுப் பேசுவாள்.
வீட்டை சுத்தம் செய்யத் தேவையான சாமக்கிரியைகளுடன் நிர்மலா வந்து சேர, சித்ராவும் அவளுடன் சுத்தம் செய்யக் கிளம்பினர். ‘நான் சமையலறையை ரெடி பண்றேன்” என உமா கிளம்ப, “நானும் வரேன்” என்று ராஜியும் உள்ளே போனாள்.  இருவருமாய் சேர்ந்து இரவு உணவுக்கான ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்தனர்.
“என்ன சித்தி இந்த தரம் உன்னையும் சித்தப்பாவையும் கிளப்பி அமெரிக்கா அழைச்சுண்டு போற முடிவோடதான் இருக்கா போலிருக்கே நிர்மலா” என்றாள் உமா.
“சின்ன வயசிலே சித்தப்பாவுக்கு உத்தியோகத்தில் எங்கேயெல்லாம் மாத்தலோ அங்கே எல்லாம் போயாச்சு. இப்போ பொண்ணோட உத்தியோகத்துக்குத் தகுந்தாப்போல அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான். இங்கே. எங்களை தனியாய் விட்டுப்போனால் கவலையாக இருக்குங்கறா. என்ன செய்யறது?”
“அவள் ஏன் சொல்றான்னு தெரியறது. உனக்கு அதிலே சந்தோஷமா?”
“வயசானா பிறருக்குக் கஷ்டம் கொடுக்காமல் இருக்கப் பழகிக்கணும். அவளால் இங்கே வந்து இருக்க முடியாது. எங்களை வா வா ன்னு கட்டி இழுக்கறா. சரி போனாப் போறது. எல்லா எடத்துலயும் மனுஷாதானே இருக்கா.”
கூடத்திலிருந்து நிர்மலாவின் குரல் வந்தது.
“அம்மா சமையலை முடிச்சுட்டு இங்கே வா. எங்களுக்கு இந்த வீட்டை சுத்திக் காட்டு”.
“ஆமாம். அமெரிக்காவானா, இந்த வீட்டோட சரித்திரம், மேப் எல்லாம் போட்டு 4 பக்கம் அச்சடித்து ஒரு  வாக் நடத்திடுவா 10 டாலருக்கு“ என்று உமா சிரித்தாள்.
“சரி வாங்கோ வாசத்திண்ணைலேர்ந்து ஆரம்பிப்போம்” என்று முன்னறையில் நுழைந்து “இது ரேழி” என்றாள் ராஜி.
“ரேழியா ,இது என்ன பாஷை” என்றாள் நிர்மலா
“அது இடைகழி. எடகழின்னு திரிஞ்சு ரேழி ஆயிடுத்தோ என்னவோ” என்றாள் உமா.
‘ஆங் இருக்கும்’ என்றாள் ராஜி. கூடத்துக்கு முன்னாலிருந்த இடங்களைக் காட்டி இதெல்லாம் தாத்தா ஆபீஸ்  பின்னாலே இருக்கறது காமரா உள்ளு என்றாள்.
“அதென்ன காமராக்குன்னு ஒரு உள்ளா? அப்படி என்ன பெரிய காமரா? இதைப்பற்றி புலவர் உமாவின் தியரி என்ன?” என்றாள் நிர்மலா மறுபடியும்.
“லாடின் வார்த்தை அது – காமரா. அதுலே பணப்பெட்டி வைச்சிருந்திருப்பா. அதான் காமரா அறை.”
கூடத்தை அடுத்திருந்த தாழ்வாரத்தில் இறங்கி அடுத்த கட்டுக்கு நகர்ந்தனர்.மூன்றுகட்டு வீடு. வீட்டின் ஒரு பக்கம் வாசலிலிருந்து கொல்லை வரைக்கும் ஆளோடி. அதில் சுவற்றுப்பக்கமாய் நெல் பத்தாயம், ஒரு பக்கமாய் நகர்த்தி வைக்கப்பட்டிருந்தன ஒரு பெரிய உரலும் இயந்திரமும். சுவரோரம் சாய்த்து வைத்த உலக்கைகள்.
தூசி இருக்கும் என்று மூடியிருந்த அறைகளை திறக்காமல் நடந்தனர்.
இரண்டாம் கட்டிலிருந்த முற்றத்தில் இருந்த கிணற்றருகே போய் நீர் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். தரை தெரிந்தது.
“இங்கே பாரேன். கிணத்து கிட்டே முத்தத்துலே உபயோகிக்க ஒரு தொட்டி. இதோ இன்னொரு தொட்டி சமையல் கட்டுப் பக்கம். இங்கே தண்ணி ரொப்பி அங்கே மொண்டு எடுக்க வசதியாய்.” என வியந்தாள் சித்ரா.
“அதென்ன முத்தத்துக்கு அந்த பக்கமா பாத்ரூம் கிட்டே ஒரு பெரிய ரூம்” எனக் கேட்டாள் நிர்மலா.
“இங்கேதான் உமா வரைக்கும் எல்லா குழந்தைகளும் பிறந்தது. மாசாமாசம் பெண்கள் தீட்டானா அங்கேதான் இருக்கணும் என்றாள் ராஜி.
“அந்த நாள்  லைஃப்ஸ்டைலுக்குத் தகுந்தாப்லே எப்படியெல்லாம் ப்ளான் பண்ணி கட்டியிருக்கா. இன்னிக்கு அகப்பட்ட எடத்திலே எப்படியெல்லாமொ கட்டி வைக்கறாளே. ஒரு அபார்ட்மெண்டிலயாவது பத்து பாத்திரம் தேய்க்க எடம் இருக்கா? துணி உலர்த்த எடம்? இதோ பாரு இந்த முற்றத்துலே எல்லா வேலையும் முடிச்சுடலாம். யூடிலிடி ஸ்பேஸ்னா இப்படின்னா டிசைன் பண்ணனும். அமேஜிங்” என்றாள் சித்ரா.

05022012

கொல்லைக்கதவைத் திறந்து,
“இப்போதான் என்னமோ புதுசா கண்டுபிடிச்சது போல வீட்டிலேயே காம்போஸ்டிங் என்றெல்லாம் சொல்கிறோமில்லையா. இதோ பார் தோட்ட மூலைலே இதுக்குப் பேர் எருக்குழி. சாப்பிட்ட எலைகள், கறிகாய் குப்பை , தோட்டத்து இலைகள் குப்பை எல்லாம் போட்டு மூடி வைப்பார்கள். அது எருவானதும் தோட்டத்தில் பரப்பிவிடுவார்கள். இல்லையானால் வயலுக்குக் கொண்டுபோய் போடுவார்கள்,” என விவரித்தாள் ராஜி.
ஒவ்வொரு இடமாய் பார்த்து அதை எப்படி யோசித்துக் கட்டியிருக்கிறார்கள் என வியந்து அதிசயித்து, ரெட் ஆக்ஸைட் தரையின் பளபளப்பை சிலாகித்து, மரத்தூண்களைத் தடவிப் பார்த்து, ரோஸ்வுட் மர ஊஞ்சலின் நேர்த்தியை ரசித்து, எண்ணை போடாத ஊஞ்சல் கொய்ங் கொய்ங் என்று முனக அதன்மேல் விடாமல் உட்கார்ந்து ஆடி பொழுது போனது.
ராஜிக்குத் தன் சகோதரிகளின் நினைவு வந்து கண்ணில் நீர் தேங்க ஆரம்பித்ததை கவனித்த உமா ‘சித்தி, சாப்பிட்டுடலாமா?” என்றாள்.
“சித்தே போகட்டுமே. இதோ இந்த கூடத்திலேதான் அக்கா ரெண்டு பேருடைய கல்யாணம், எங்க எல்லாரோட வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நடந்தது. அப்பாவும் இதே கூடத்துலேதான் போனார். நீங்களெல்லாம் நீந்தி தவழ்ந்து விளையாடினதெல்லாம் இங்கேதான். இதோ இந்த முத்தத்துலேதான் பாண்டிக் கட்டம், தாயக்கட்டை கட்டமெல்லாம் போட்டு விளையாடுவோம். இந்த தூண்களுக்கு நடுவிலே நாலுமூலை தாச்சி என ஒரு விளையாட்டு. அதெல்லாம் ஒரு காலம் .எல்லாரும் போய் சேர்ந்தாச்சு. இப்போ என் காலமும் முடியப் போறது. நம்ம குடும்பத்தோட ஒரோரு சிரிப்பும் அழுகையும் இந்த வீட்டுக்குத் தெரியும். நமக்குத் தெரியாத ரகசியங்கள் கூட இதுக்குத் தெரியும்“.
“ஆமாம். என் அம்மாவுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லைன்றது கூட இதை கேட்டா தெரியுமோ என்னவோ?” என்றாள் உமா.
“ஆமா, நீ அம்மாவை எடுத்தெறிஞ்சு பேசுவே. எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவே. அப்புறம் அம்மாவை குத்தம் சொல்லு” என்றாள் சித்ரா. அவளுக்கு அம்மாவின் மேல் அபாரப் பிரியம்.
“அது காரணம் இல்லை. விளைவு. அம்மா என்னைப் பிடிக்காமல் நடத்தியதினாலேதான் நான் அப்படி நடக்க ஆரம்பித்தேன். ஒரு ரிபெல்லியன். அப்படியே இருந்தாலும், அம்மா என்பவள் அன்கண்டிஷனல் அன்பைக் கொடுப்பவள் என்பது என் கேஸில் பொய்தானே?”
புகுந்த வீட்டில் கூட அனைவருக்கும் நல்லவளாய் இருந்த அம்மா தன்மேல் மட்டும் ஏன் எப்போதும் எரிந்து விழுந்தாள் என்பது உமாவுக்குப் புரிந்ததே இல்லை. இத்தனைக்கும் மூன்று குழந்தைகளில் இவள்தான் எல்லோரிடமும் நன்றாகப் பழகி ‘சமர்த்து” என்ற பெயர் வாங்குபவள். நாலைந்து வயதிருக்கையில் ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கையில் அண்ணனிடம் “நான் மட்டும் ஏன் கறுப்பா இருக்கேன். நீயும் சித்ராவும் கலரா இருக்கேளே” என்றபோது அவன் விளையாட்டாய் “தெரியாதா, உன்னை ஒரு மூட்டை தவிட்டுக்குக் கடைலேர்ந்து வாங்கிண்டு வந்தோம்’ என்று சொல்லப் போக வெகுநாட்களுக்கு அதை நிஜம் என்றே நம்பிக் கொண்டிருந்தாள். தாய் தன்னிடம் ஒட்டாமல் இருப்பதற்கு அது சரியான விளக்கமாய் தோன்றி மனதுக்கு சமாதானமாகக் கூட இருந்தது.
எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் தாய், குடும்பத்தில் அதிகம் அக்கறை காட்டாத தந்தை என்று அன்புக்கு ஏங்கியே வளர்ந்ததினாலேயே தன்னை பிடித்திருக்கிறது என்று மாதவன் சொன்னதும் எதைப் பற்றியும் ஆலோசிக்காமல் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள் உமா. பின்னர் அவனுடைய குணம் தெரிந்தபோதும் அம்மாவிடம் சொன்னால் தன்னைத்தான் குற்றம் சொல்வாள் எனத் தெரிந்து அவனுக்குப் பணிந்து போக ஆரம்பித்தாள். அம்மா தன்னிடம் பாசமாக இருந்திருந்தால் இப்படி ஒரு அவசர முடிவை எடுத்திருக்க மாட்டேனோ என் வாழ்க்கை வேறுவிதமாய் இருந்திருக்குமோ என்றெல்லாம் என்று அடிக்கடி நினத்துப் பார்ப்பாள். வகுப்பில் தனக்குப் பின் இருந்த சிலர் இன்று வெற்றிகரமான உத்தியோகங்களில் இருப்பதைப் பார்க்கையில் அவளுக்குள் ஏதோ நெருடும்.
“பாவம் பெரியம்மா நோபில் ஸோல்” என்று நிர்மலாவும் சேர்ந்து கொண்டாள்.
“ஆமாம் அவளுடையது ஒரு எபிக் சோகக்கதைதான். சாப்பிட்டுட்டு பேசலாம்,” என ராஜி சொல்ல எழுந்தார்கள்.
சாப்பிட்டு முடித்தபின், கொண்டுவந்திருந்த பெரிய ஜமக்காளத்தை கூடத்தில் விரித்து, சில குஷன்களையும் போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
ராஜி தண்ணீர் எடுத்து வந்த பாத்திரத்தைக் காட்டி “சித்தி இதுதானே கோதாவரி குண்டு?” என்றாள் உமா.
“கோதாவரி எங்கேயிருந்து வந்தது? இங்கே காவேரிதானே உண்டு” என்றாள் நிர்மலா.
“அதென்னவோ, இந்த பாத்திரத்துக்குப் பெயர் அதுதான்,” என்றாள் உமா.kundu 1
” பூ வெச்சா அழகா இருக்குமே,” என்றாள் நிர்மலா.
“உமா சித்தே முன்னாடி கேட்ட கேள்விக்கு பதில் இந்த கோதாவரி குண்டுக்குத் தெரியுமோ என்னவோ.” என்று ஆரம்பித்தாள் ராஜி.
“உமா பிறந்த பத்து நாட்களுக்குப் பின் தொட்டிலில் போடும்போது உங்க அப்பா இங்கே வந்திருந்தார். அன்றைக்கு ராத்திரி அறையில் மீனாட்சிகிட்டே பேசிட்டு அவர் வெளியே வந்தபோது கூடவே அவர் கால்பட்டு இடறி அறையில் தண்ணி வெச்சிருந்த இந்த குண்டும் உருண்டு வந்தது. சத்தம் கேட்டு என் அம்மா, உங்க பாட்டி அறைக்குள்ளே போனா,  அங்கே மீனாட்சி அழுதுகொண்டிருந்தாள்.
“உன் அப்பா வெளியே வந்தவர் பையை எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டார். பிசினஸுக்காக அவர் ம்பாலும் சென்னைலேதான் இருப்பார். மீனாட்சியும் ரகுவும் உங்க தாத்தா வீட்டிலே இருப்பா..
“சென்னைலேல் அவருக்கு படிச்ச நாகரீகமா இங்கிலீஷ் தெரிஞ்ச ஒரு பெண்ணேட சிநேகிதம் இருந்ததாம். கலியாணம் பண்ணிக்காம சும்மா ஃப்ரெண்டா இருக்க அந்தப் பெண்ணுக்கு சம்மதமில்லாததாலே அவளைக் கலியாணம் செய்துகொள்ளப் போறதாகச் சொல்லியிருக்கிறார். ‘உன்னை விவாகரத்து செய்யலை. அதுக்கு எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டா. அதனாலே நீயும் குழந்தைகளும் பட்டணத்திலே வந்து இருக்கலாம். இல்லேன்னா கிராமத்திலேயே இருந்துடு. ஆனா இனிமேலே நானும் நீயும் கணவன் மனைவியாய் இருக்கமுடியாது’ ன்னு சொல்லியிருகார்.
“மீனாட்சிக்கு இதெல்லாம் ரொம்ப அதிர்ச்சியாயிடுத்து. இத்தனைக்கும் காரணம் தான் கர்ப்பமாயிருந்து கிராமத்திலே தங்கினதுதான்னு தோணிப் போச்சு. அப்புறம் ரெண்டுபக்க தாத்தாக்களும் தலையிட்டு உங்க அப்பாவை வழிக்குக் கொண்டு வந்தாலும் அந்த அதிர்ச்சியிலேர்ந்து அவள் மீண்டு வரலைன்னுதான் நெனைக்கறேன்.
“உமா மேலே வெறுப்புன்னெல்லாம் சொல்ல முடியாது. உமாவைப் பார்க்கிற போதெல்லாம் அந்த நினைவுகள் அவளைத் தாக்கியிருக்கலாம். அந்த நாள்ளே சைக்கியாட்ரிஸ்ட் எல்லாம் தெரியாதே. என் யூகம்தான் இதெல்லாம்.” என்று ராஜி சொல்ல சித்ராவும் உமாவும் திகைத்துப் போனார்கள்.
‘அன்னைக்கு உங்க அப்பா சொன்னதெல்லாம் இந்த கோதாவரி குண்டுக்குத்தான் தெரியும்” என்றாள் ராஜி
“அதுக்கப்புறமா உங்க அப்பாவுக்கு பிசினஸில் நஷ்டப்பட்டுப் பணக் கஷ்டம் வேறே. அத்தனையும் சமாளித்து ஒரு சுகம் அனுபவிக்காமல் போய் சேர்ந்தா என் அக்கா.” என்று முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ராஜி.
“எங்க அப்பா இப்படியெல்லாம் பேசினதுக்கப்பறமும் அவருடன் போய் குடித்தனம் நட்த்தினாளா எங்க அம்மா? ஒரு வார்த்தை கூட அவரைப் பற்றி எங்ககிட்டே சொன்னதே இல்லையே?” என்றாள் சித்ரா.
“ஆமாம். என்ன செஞ்சிருக்க முடியும். நீங்கள்ளாம் இப்போ சொல்றாப்போல அவ அவரை விட்டு வந்திருந்தால் நீ பிறந்திருக்க மாட்டே.  ரெண்டு குழந்தைகளோட அவ பொறந்த வீட்டோட தங்கி தாத்தா, மாமா, மாமி தயவிலே இருந்திருக்கணும். வேலையோ படிப்போ அவளுக்கு இருக்கலையே.
“நீயாவது எங்களுக்கு இதையெல்லாம் முன்பே சொல்லியிருக்கலாம் சித்தி” என்று குற்றம் சாட்டும் தொனியில் சித்ரா சொல்ல, “சின்னக் குழந்தைகள். உங்ககிட்டே பழசை எல்லாம் சொல்லி மனசைக் கெடுப்பானேன்னு இருந்துட்டேன். அதையெல்லாம் தெரிஞ்சுண்டு எதை மாத்த முடியும்?” என்றாள், ராஜி.
அம்மா இறந்தபோதுகூட அழாத உமா முதன்முறையாக அம்மாவுக்காக அழ ஆரம்பித்தாள்.

0 Replies to “கிராமத்து வீடு”

  1. Dear Usha Vi,
    Read The gramathu Veedu. you took me to my repested experinces I had
    when I visited my native village specifically Asramom & Suchindrum.
    Same dialogues,same atmosphere.Oneday someone asked me how the Kollai Pakkam word or name came in. Is it a Tamil word or name like rezhi.
    When I read that word I remember one of my client who asked me when I designed his house ” Sir Entha Veettule Kollaipakkam Enge ”
    A dropof tear flowed down from my eyes as I read the Gramathu Veedu.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.