கிட்டு மாமாவின் எலிப்பொறி

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டு மாமாவின் வாழ்வில் இரண்டு முக்கியச் சம்பவங்கள். ஒன்று, அவர் முப்பத்தைந்து வருடங்களாகப் பணியாற்றிய பேங்கிலிருந்து ஓய்வு. அடுத்து என்ன என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது வந்ததுதான் அந்த இரண்டாவது சம்பவம்.

அமெரிக்காவில் வசிக்கும் மாப்பிள்ளை  பெசன்ட் நகரில் பீச்சிற்கு பக்கத்திலேயே புதிதாக பிளாட் வாங்கி இருந்தார். மூன்று அறைகள் கொண்ட விசாலமான குடியிருப்பு. புது வீட்டை யாருக்கோ வாடகைக்கு  விட கிட்டு மாமாவின்  பெண்ணிற்கு விருப்பம் இல்லை. “நீ ஏன்பா ஒரு ரெண்டு வருஷம் அங்க தங்க கூடாது. நாங்க எப்படியும் அதுக்குள்ள சென்னைக்கு மாத்தல்  வாங்கிட்டு வந்துடுவோம். புது வீட்ட  யார்கிட்டயோ குடுத்து பிரச்சனையில மாட்டிகரத விட நீங்களும் அம்மாவும் அங்க போய் இருங்க” தெரிந்த நண்பரை குடிவைக்கிறேன், பீச் காத்து அம்மாவுக்கு ஆகாது என்று எவ்வளவோ சால்ஜாப்புகள் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

நாற்பது வருடங்களாக இருந்த திருவான்மியூரை விட்டு வருவதில் கிட்டு மாமாவிற்குச் சற்றும் உடன்பாடில்லை. “ரிடயர்ட் வாழ்க்கைய  கோயில், அரட்டை, நண்பர்கள்னு கழிக்கலாம்னு இருந்தேன். இப்போ போய் புது இடத்துக்கு மாற சொன்னா  என் பிளான் எல்லாம் அப்செட் ஆயிடுதே” அவரின் புலம்பலை திருவான்மியூர் நண்பர்கள் மெளனமாக கேட்க மட்டுமே முடிந்தது. “உத்தியோகத்துல இருக்கும் போதுகூட இடம் மாத்தல” என்ற புலம்பலுடன் ஒரு வழியாக திருவான்மியூர் வீட்டை பூட்டிக் கொண்டு பெசன்ட் நகர் வீட்டுக்கு ஜாகை மாறினார்.

போஸ்ட் ரிடயர்மென்ட் சின்டிரோம் (post retirement syndrome). அதாவது பணியிலிருந்து  விடுபட்டும் அதன் இயல்பிலிருந்து விலக முடியாத நிலை. ஒரு பல்லு போனா நாக்கு அத தேடறது இல்லையா, அது போல ஒரு மனோதத்துவ நிலை. முப்பத்தைந்து ஆண்டு கால அலுவல் வாழ்க்கையிலிருந்து தன்னால் எளிதில் விடுபட முடியாதென்பது கிட்டு மாமாவிற்கு நன்றாகத் தெரியும். அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு அவர் தயாராகவும் இருந்தார். ஆனால் இந்தப் புது இடத்திற்கான மாற்றல் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியது.

காலையில் சரியாக ஆறரை மணிக்கு முழிப்பு வந்துவிடும். “சாந்தா ! காபி கிடைக்குமா”

சாந்தா மாமி இரண்டு முறை புரண்டு படுப்பாள். பதில் ஏதும் வராது.

“ஏம்மா சாந்தா! ஒரு காபி குடுத்தா வாக்கிங் போய்ட்டு வந்திடுவேன்”

திரும்பிய நிலையிலேயே பதில் வரும்,”நீங்க மொதல்ல வாக்கிங் போயிட்டு வாங்கோ. காபி அப்பறம் சாப்பிட்டுக்கலாம்”

அறை நிஜார் வெள்ளை காலணியுமாக கிட்டு மாமா பயணப்படுவார். வாக்கிங் குழு நண்பர்கள் கம்யூனிட்டி கிளப் வாசலில் குழுமி இருப்பர். அவர்களில் எத்தனை பேர் வீட்டில் காபி குடித்திருப்பார்கள் என்று கிட்டு மாமா யோசிப்பதுண்டு. கடல் மணலை ஒட்டிய இரண்டு கிலோமீட்டர் நடை. இடையில் சுக்கு காபி சைக்கிள் பையனிடம் நிறுத்தம். தினப்படி பேச்சு அரசியலில் தொடங்கும். பின் மெதுவாக வீட்டில் மகன்,மகள் செய்யும் அட்டூழியம், மூட்டு வலி, காசி யாத்திரை என நீளும். குழுவிற்குப் புதியவன் என்பதால் கிட்டு மாமாவிற்கு அதிகமாகப் பேச வாய்ப்புக்கிட்டாது. அவரது நினைவுகள் திருவான்மியூர்  நண்பர்களை நோக்கி போகும். வாரம் ஒருமுறை ஆட்டோ வைத்துகொண்டு திருவான்மியூர் சென்று வருவார். ஆயினும் அவர்களுடனும் முன்பிருந்தது போல்  ஓர் ஒட்டுதல் இல்லை. தன் ரிடயர்மென்ட் வாழ்வின் கடைசி நூலும் அறுபட்டதாக உணரத்தொடங்கினார்.

மதியங்களில் ஈசிசேரில் படுத்தவாறு அன்றைய ஹிந்து முழுவதையும் படிப்பார். இடையிடையே மாமியைச் சீண்டுவதுண்டு. “நாள் பூரா இந்த டிவியையே பாக்கறையே, எதாவது புத்தகம் படிச்சா என்ன” பலமுறை இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலே வராததால் மாமிக்கு கேட்பதில் ஏதும் பிரச்சனையோ என்று கிட்டு மாமா யோசித்ததுண்டு. போன மாதம் வந்த கிட்டு மாமாவின் டாக்டர் ரிப்போர்ட் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதாக கூறியது. சாந்தா மாமி இப்போழுதெல்லாம்  சாப்பாட்டில் தாளிப்பதற்கு எண்ணை சேர்ப்பதோடு சரி. அதற்கும் பங்கம் விளைவிக்க வேண்டாமென்று மாமியை ரொம்பவும் சீண்டுவதில்லை.

இப்படியானதொரு மதிய நேரத்தில் ஈசிசேரில் ஹிந்து படித்து கொண்டிருந்த போது தான், ஹாலுக்கு நடுவே அந்த எலி ஓடுவதை பார்த்துவிட்டார். முன்பொருகாலத்தில்  திருவான்மியூர் வீட்டில் குடும்பச் சகிதமாக எலி விரட்டியது ஞாபகம் வந்தது. பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த எலி மீண்டும் படுக்கை அறைக்குள் ஓடியது. களப்பணிக்கு ஆயத்தம் ஆனவராய் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு துணி உலர்த்தும் கம்பியுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தார்.

கிட்டு மாமாவின் யூகப்படி எலிகள் பொதுவாக கட்டிலுக்கு அடியில் ஒளியும்.  கட்டிலுக்கு அடியில் குச்சியால் வேகமாக தட்டினார். ஒண்ணும் நகர காணோம். மேலும் இரண்டு மூன்று தடவை தட்டி பார்த்துவிட்டு வெறும் கையுடன் ஹாலுக்கு வந்தார்.

“அங்க என்ன சத்தம் கேட்டது”

“ரூமுக்குள்ள எலி ஓடறத பார்த்தேன்”

“சும்மா ஏதாவது ஒளராதீங்க. இது என்ன உங்க  திருவான்மியூர் ஒண்டி குடுத்தனம்னு நினைச்சேளா ! பிளாட்ஸ் வீடு. இங்க ஏது எலி?”

“நான் பார்த்தேன்கறேன் நீ நம்ப மாட்டேங்கற”

வாக்கிங் வட்டார நண்பர்களும் கிட்டு மாமாவை ஏற்க மறுத்தனர். “கிட்டு! நான் இந்த பிளாட்ல நாலு வருஷமா இருக்கேன். ஒரு எலி என்ன, பல்லிய கூட பார்த்தது இல்லை”. மேல் முறையீட்டின்போது அசோசியேஷன் சேர்மனும்  கிட்டு மாமா புகாரை பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

கிட்டு மாமாவின் முன் ஒரு சவால். எலியை பிடித்துக்காட்டினாலே ஒழிய இவர்கள் என்னை நம்ப மாட்டார்கள். எலியை பிடித்தாக வேண்டும். அதுவும் உயிருடன் பிடித்து இவர்களுக்கு காட்டியாக வேண்டும். அன்று சாயந்தரமே பொடி நடையாக சென்று  எலிப்பொறி   வாங்கி வந்துவிட்டார்.

எலிப்பொறியில் ஒரு ரொட்டி துண்டை கவனமாக மாட்டி கட்டிலுக்கு அடியில் வைத்தார். “அய்யோ ராமா! இதை ஒரு ஓரமா வைக்க கூடாதா” மாமியின் அலறலை கிட்டு மாமா பொருட்படுத்தவில்லை. காலையில் எலியை உலகுக்கு காட்டும் கனவுகளோடு தூங்கப் போனார். மறுநாள் காலை ஆர்வமாக எழுந்து சென்று எலிப்பொறியை  பார்த்தபோது –  எலிப்பொறியின் கதவு திறந்திருந்தது. ஆணியில் காய்ந்த ரொட்டி துண்டு.

சுக்கு காப்பி  குடிக்கையில் அந்த முன்னாள் ஏட்டு சொன்னார், “ரொட்டி துண்டுல வாசமே இருக்காது. எதாவது பக்கோடா வடைன்னு பொறியில வைக்கணும். அப்போதான் எலி அண்டும்”.

அன்று மாலை, “சாந்தா ! எனக்காகவா கேட்டேன். எலியப் பிடிக்கறதுகாகம்மா. ஒரே ஒரு மசால் வடை தானே  பண்ணச் சொல்றேன்”

கடைசியில் மனம் இளகியவளாக சாந்தா மாமி சமையக்கட்டில் நுழைந்தாள். ஹிந்துவை விரித்தவாறே கிட்டு மாமா  ஈசிசேரில் படுத்திருந்தார். ஒன்றன்பின் ஒன்றாக சமையக்கட்டிலிருந்து வாசனை – வெங்காயம், இஞ்சி-பூண்டு, தேங்காய். கடைசியாக எண்ணெயில் பொறிபடும் பருப்பு வாசனை மூக்கை துளைத்தது. ஆனந்தமாக அந்த வாசனையில் லயித்திருந்த கிட்டு மாமாவின் முன்னால் அந்த தட்டு நீண்டது. சாந்தா மாமி அதில் இரண்டு வடைகளை வைத்திருந்தாள். தொட்டுக்கொள்ள ருதுவாய் தேங்காய் சட்னி.

“கிடந்து அலையறீங்களேன்னு ரெண்டு பண்ணேன். இதுக்கு மேல கேக்கக் கூடாது.” தன் வாழ்க்கையிலேயே மிகச் சுவையான இரண்டு வடைகளை கிட்டு மாமா சுவைத்து சாப்பிட்டார்.

வடைத் துண்டை எலிப்பொறியில் மாட்டியாயிற்று. இன்று எப்படியேனும் அகப்படுவான் திருடன் என்ற நம்பிக்கையுடன் தூங்கப்போனார். சமையல் அறையிலிருந்து வந்த மசால் வடை வாசனை இன்னும் அடங்கவில்லை என்று தோன்றியது.

காலையில் எழுந்து ஆர்வமாக எலிப்பொறியை பார்த்தார் – ஆணியிலிருந்த வடையை காணோம் – பொறி கதவு மூடியிருந்தது – எலியை காணவில்லை ! “வடையை உள்ளதான வைச்சீங்க?” சாந்தா மாமியின் கேள்வியில் இருந்த தொனி கிட்டு மாமாவுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. எலிக்கு பொறியியல் ஏதும் தெரிந்திருக்குமோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

“எலிப்பொறிய நல்ல பிராண்டா வாங்கணும் சார். எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அடையார்ல இருக்கு” வாட்ச்மேன்  சொன்ன விலாசத்தில் கிட்டு மாமா சென்று சேர்ந்தார். கடையில் பட்டையாக திருநீர் அணிந்த ஒரு மெலிய உருவம். டாக்டர் நோயாளியை பார்க்கும் நேசத்துடன் கிட்டு மாமாவிற்கு விசிடிங் கார்டை நீட்டினார். கார்டில் நடு நாயகமாக அந்த பெயர் “எலிப்பொறி நாராயணன்”. நாராயணனின் தொழில் பக்தி கிட்டு மாமாவைக் கலங்கடித்தது.

நாராயணன் கனசுருக்கமாக எலிப்பொறியின் பொறியியலை விளக்கினார். பொறிக்கு முக்கியமாக இரண்டு பாகங்கள் – பொறியின் ஆணி மற்றும் அதோடு இணைக்கப்பட்டிருக்கும் ஸ்ப்ரிங் மெக்கேனிசம். பொறியின் அறை அளவு,கதவின் உயரம்,ஆணியின் எடை இவற்றுக்கேற்ப  ஸ்ப்ரிங் அமைப்பு வேண்டும்.

rat-trap-rat-cage-mouse-trap-mouse-cage-big-cage

“எலி எவ்வளவு பெருசு இருக்கும்”

“இதோ இந்த கையளவு இருக்கும்”, உள்ளங்கையை விரித்து காட்டினார்.

நாராயணன் யோசித்தவாறே கடையைச் சுற்றி வந்தார். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த பொறியை எடுத்து பொட்டலம் கட்டி குடுத்தார்.

“ஆணில என்ன மாட்ட போறீங்க?”

“மசால் வடை”

“வேண்டாம்.வேண்டாம்.  மசால் வடை ஸ்ப்ரிங்கிக்கு ஆகாது. மெது வடையா மாட்டி வைங்க.”

அன்று மதியம் கிட்டு மாமா சாந்தா மாமியிடம் மல்லு கட்டினார். “இன்னைக்கு எப்படியும் பிடிச்சுடலாம். நான் வேணா ஒத்தாசையா வடைக்கு மாவரைச்சு தரேனே !”

“பிராணன வாங்காம ஈசிசேர்ல ஒக்காந்தா போதும்” எலி புண்ணியத்தில் அன்றும் கிட்டு மாமாவிற்கு இரண்டு மெது வடைகள் தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னியுடன் கிடைத்தது.

“சீக்கிரம் எழுந்து வாங்க” சாந்தா மாமியின் உலுக்கலில் கிட்டு மாமாவிற்கு முழிப்புத் தட்டியது.

“என்னாச்சும்மா! எலி மாட்டிக்கொண்டதா!”

“எழுந்து வந்து பாருங்கோ!”

பொறியின் கதவு மூடியிருந்தது – ஆணியில் வடையை காணோம் – பொறிக்குள் அந்த எலி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு கீச்சிட்டது.

“அத பாத்தாலே அருவருப்பா இருக்கு. சீக்கரம்  கொண்டு போய் வெளியே விடுங்க.”

“நான் எலி இருக்குன்னு சொன்னப்ப யாருமே நம்பல. இப்ப பாத்தீங்களா”.

கிட்டு மாமாவிற்கு பெருமையாக இருந்தது. எலிப்பொறியை ஒரு சாக்குப் பையினில் போட்டார். எலி கீச்கீச்சென்று ஓயாமல்  கத்திக்கொண்டே இருந்தது. வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது எதிர் வீட்டு டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் சத்தம் கேட்டது. இரண்டு அடி எடுத்து வைத்த கிட்டு மாமா யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டார். பின் மெதுவாக சாக்கிலிருந்து எலிப்பொறியை எடுத்தார். எலி இப்பொழுது கத்தவில்லை.

“உனக்கு என்னை விட்டா ஆள் கிடையாது. எனக்கும் தான்”.Mouse13

பொறியிலிருந்து வெளியே ஓடிய எலி, கிட்டு மாமாவின் வீட்டை நோக்கி பயணப்பட்டது.

0 Replies to “கிட்டு மாமாவின் எலிப்பொறி”

  1. போஸ்ட் ரிடயர்மென்ட் சின்டிரோம் (post retirement syndrome). அதாவது பணியிலிருந்து விடுபட்டும் அதன் இயல்பிலிருந்து விலக முடியாத நிலை. ஒரு பல்லு போனா நாக்கு அத தேடறது இல்லையா, அது போல ஒரு மனோதத்துவ நிலை.- Excellent writing

  2. இந்த positive விமர்சனங்களை,”வீட்டில் ஆண்கள் ஏதோ ஒருநாள் லுங்கியை மடித்து கட்டி சமையல் செய்து அதுவும் நன்றாக அமைந்து விடுவதை போல எடுத்து கொள்கிறேன்”. அடுத்த சமையலும் சுவையாக அமைய முயற்சி செய்கிறேன்! இப்போ உங்களுக்கு ஒரு டெஸ்ட் – மேல் சொன்ன வரிகள் எழுத்தாளர் சுஜாதா ஒரு படத்தில் பயன்படுத்தியது ! கண்டுபிடியுங்கள் பார்போம் !

  3. I like the humor all thru the story. Its really nice. My favorite is
    “களப்பணிக்கு ஆயத்தம் ஆனவராய் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு துணி உலர்த்தும் கம்பியுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தார்”
    BTW – those lines from Mr.Sujatha is from Mudhalvan.. Arjun’s reply to Manivannan.. 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.