கவிதைகள் சொல்லும் (சிறு)கதைகள்

கதைகள் சொல்லுவதும் அவற்றைக் கேட்பதும் எல்லாக் காலங்களிலும் மனித குலத்தின் பொழுது போக்காக இருந்து வந்திருக்கிறது. சொல்லும் விதங்கள் தான் மாறுபட்டு வந்திருக்கின்றன. சிறுகதை ஒரு இலக்கிய வடிவமாகக் கருதப்படுகிறது. இலக்கிய வடிவங்கள் வரையறுக்கப் பட்டபோது சிறுகதை வடிவமும் வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும். கதை சொல்லுவதில் ஆர்வம் கொண்ட மனிதன் எவ்வாறு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான் என்று யோசிக்கிறோம்.

வாய்மொழியாகவே சிறுகதைகள் வெகுகாலத்திற்கு முன் வழங்கப்பட்டன. பாட்டிகள் சொல்லும் பல கதைகள் இன்றைக்கும் இதற்குச் சான்றாக உள்ளன!

உலகில் எல்லா மொழிகளிலும் எழுத்தும் இலக்கியமும் வளரத் துவங்கியதும், கவிதை (அ) செய்யுள் ஒன்றே இலக்கிய வடிவமாகக் கருதப் பட்டிருந்தது. கதை சொல்லும் மனிதன் எவ்வாறு அதைச் சொன்னான்? ‘கவிதை மூலமாகத்தான்’ என்பதற்கு எல்லா மொழிகளிலும் உள்ள பண்டை இலக்கியங்களே சாட்சி!

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் பற்றிய கற்பனையாகிய அழகிய கதைகளை (புராணக் கதைகள் அல்ல! சொந்தக் கற்பனை!) ஸ்லோகங்களில் புகுத்தி இருக்கிறார். ‘சௌந்தர்ய லஹரி‘யில் 66வது ஸ்லோகம்- நம் மனத்தைக் கவரும் ஒரு சிறு கதை தான் இது!

AdiShankaracharya

தேவர்களுக்குப் பார்வதி தேவியால் ஒரு காரியம் ஆக வேண்டும். பிரம்மாவிடம் சென்று உதவி கேட்கின்றனர். அவர் தன் பங்கிற்குத் தன் மனையாள் சரஸ்வதியிடம் சென்று பார்வதி தேவியை மகிழ்வித்து, காரியத்தை நிறைவேற்றி வர அனுப்புகிறார். (சிபாரிசு இல்லாமல் ஒன்றும் நடக்காது! இக்காலத்து நடைமுறைகளுக்குத் தேவர்களே முன்னோடிகள் போலிருக்கிறதல்லவா?! அல்லது மனித இயல்புகளை நாம் தேவர்களுக்கும் வைத்துக் காட்டி நமது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறோமா?!) அவள் தன் கற்பனை வளத்தால், பார்வதியின் கணவரான சிவபெருமானின் பெருமைகளை வீணையில் வாசித்துப் பாடுகிறாள். தலையாட்டி இதனை ரசித்து மகிழும் பார்வதி, “நன்றாக இருக்கிறது,” எனக் கூறும் விதத்தில், “ஸாது,” என்கிறாள். தேனினும் இனிய பார்வதியின் குரல் இனிமையால் தனது வீணையின் நாதம் மங்கி விட்டது என உணர்ந்து நாணமடைந்த சரஸ்வதி, அதை உறை போட்டு மூடுகிறாள்.

ஒரு நிகழ்வு. ஒரு அழகான முடிவு. சிறுகதை இலக்கணத்துக்குள் இது பொருந்துகிறதா? ஸ்லோகத்தில் சுருங்கத்தான் சொல்வார்கள். அதில் கவிதையின் அழகையும் ரசிக்க வேண்டும்.  ‘சௌந்தர்ய லஹரி’யில் இன்னும் நிறைய இதே போன்று இருக்கின்றன.

‘விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதே,’ என்ற இந்தக் கவிதையை வார்த்தை ஜாலங்களால் விரிவு படுத்தி உரைநடையாக மிகவும் அழகுபட இப்போது எழுதலாம். ஆனால் இது எழுதப்பட்ட காலத்தில் உரைநடை எழுத்து வழக்கில் இல்லை! அதனால் என்ன குறைந்தது? சொல்ல வேண்டிய கதையை சங்கர பகவத்பாதர் அழகாகச் சொல்லிவிட்டாரே!

11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பில்வமங்களர், ‘ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம்’ என்ற  நூலைக் கவிதை வடிவில் சம்ஸ்கிருத மொழியில் இயற்றினார். கிருஷ்ணனின் பல லீலைகளை விவரித்து, ‘இத்தகைய கிருஷ்ணன் நம்மைக் காக்கட்டும்,’ எனப் பாடினார். இதில் பல ரஸங்களுக்கும் குறைவில்லை. பெரியோர்கள் தமக்கு முற்காலத்திலும், தற்காலத்திலும் சொல்லும் கிருஷ்ணனைப் பற்றிய வாய்மொழிச் சிறுகதைகள் அனைத்தும் இவற்றில் உள்ளன. இதுவரை யாரும் எண்ணாத  பல அழகிய கற்பனைகளும் அமுதமாகப் பெருகி வழிகின்றன! அதனால் தான் ‘கர்ணாமிர்தம்,’- ‘செவிக்கு அமுது’ எனப் பெயரிட்டார். அவற்றில் கதை சொல்லும் ஒரு க(வி)தையைப் பார்க்கலாமா?

யசோதை கிருஷ்ணனைத் தூங்க வைக்க ராமாயணக் கதை சொல்கின்றாளாம்; ‘ராமன் என்று ஒருவர் இருந்தார்’ என்றதும் குழந்தை கிருஷ்ணன், ‘உம்’ கொட்டுகிறான்; ‘அவர் மனைவி பெயர் சீதை,’ என்றதும், திரும்ப ‘ஊம்’ என்கிறான். ‘தந்தை சொல்படி அவர்கள் இரண்டு பேரும் வனவாசம் சென்றனர்; பஞ்சவடியில் வசித்துக் கொண்டிருந்த போது, அந்த சீதையை, ராவணன் என்ற அரக்கன் தூக்கிக் கொண்டு போய் விட்டான்,’ என்கிறாள் யசோதை. கதை கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் உடனே பரபரப்பாக,” ஹே! (சௌமித்ரே!) லக்ஷ்மணா! எங்கே என்னுடைய வில்? வில் எங்கே? வில்லை எடு!” என்றானாம்.

‘ராமோ நாம பபூவ ஹூம் ததபலா ஸீதேதி ஹூம்….‘ இது ஸ்லோகம். அழகான துறு துறுப்பான குட்டிக்கதை சொல்லும் கவிதை! புதுக் கற்பனை!

Yasoda-with-Krishna

இவை இரண்டும் கூறும் நிகழ்வுகள் கற்பனைக் கதைகளே! கவிஞனின் கற்பனை கவிதை வடிவில் சிறகுகளை உயர்த்தியுள்ளது!

இவ்வாறு கவிதைகளால் சிறுகதை சொல்லும் வழக்கைத் தமிழில் சங்க இலக்கியங்களிலும் காணலாம். சிறுகதை சொல்வதற்கு என அவர்கள் கவிதை எழுதவில்லை. ஆனால் சொல்லப்பட்ட நிகழ்ச்சி தற்காலத்தவரும் ரசிக்கும்படியான சிறுகதைகளாக இருக்கின்றன. அகநானூற்றில் இருந்து ஒரு அழகிய பாடல்- பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது: பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன்  தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். அவன் மிகுந்த அன்புடன் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து தலைவி அதைக் குறிப்பினால் புரிந்து கொள்கிறாள். “நீ பிரிந்து சென்றால் அது அறமாகாது,” என்று குறிப்புணர்த்தி, தான் மார்போடு அணைத்திருக்கும் இளம் புதல்வனின் தலையில் சூடிய மாலையை மோந்து பெருமூச்செறிந்தாள். அப்போது அந்தச் சிவந்த மலர்கள்  பெருமூச்சின் வெப்பத்தால் வாடித் தம் வடிவை இழந்தன. ஆதலால் அதை உணர்ந்து கொண்ட தலைவனும் அவளைப் பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டான்.

இதே பொருளில் தற்காலச் சிறுகதை எப்படி அமையும்? கையில் சிறு குழந்தையுடன் கண்ணீருடன் இளம் மனைவி. கணவன் அவளை விட்டு விட்டுத் திரும்பி சவுதி அல்லது துபாய் சென்று சம்பாதித்து வரக் கிளம்புகிறான். நிம்மதியிழந்து மனைவி, “எனக்கு யார் இருக்கிறார்கள்? நீங்களும் சென்று விட்டால், வளரும் குழந்தை, வீட்டுக் கடன், வயதான பெற்றோர், ஆபீஸ் வேலை இத்தனையையும் நான் எப்படி தன்னந்தனியாக சமாளிப்பேன்?” என்று கண்கலங்குகிறாள். மிகவும் யோசித்த கணவன், ‘இங்கேயே ஒரு வேலை தேடிக் கொண்டால் போயிற்று. இவளுடன் நடத்தும் வாழ்க்கையே எனக்கு முக்கியம்,’ என புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறான். இப்படித் தானே அமையும்!

இரண்டிலும் பொருள் ஒன்றுதான். முதலாவது கவிதை. இரண்டாமது உரைநடை. கவிதையில், அழகிய சொற்களால் மனதைத் தொடுவார் புலவர். ‘பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூ நீர் பயந்த துணை அமை பிணையல் …..’ பின்னதில் வார்த்தை ஜாலங்களால் உணர்ச்சிகளை அழகுற வெளிப்படுத்துவார் இக்காலத்து சிறுகதை எழுத்தாளர்.

சாசர் (Chaucer) என்பவர் 12-ம் நூற்றாண்டில் எழுதிய  கான்டர்பரி கதைகளும் (கிட்டத்தட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு) கூட கடினமான ஆங்கிலக் கவிதை வடிவைக் கொண்டவை தான். இடையிடையே உரைநடை போன்றும் காணப்படும் எனலாம். ஆனால் கதை சொல்லும்- கேட்கும் ஆவலும் யுத்திகளும் இதனால் ஒன்றும் தடைபடவில்லை எனத்தான் தோன்றுகிறது. காலத்துக்கேற்ற கருத்துகளில் அவை சொல்லப்பட்டுக் கொண்டே இருந்துள்ளன.

thecanterburytales

16-17ம் நூற்றாண்டுகளில், கருத்துப் பரிமாற்றங்களுக்கு உரைநடை எழுத்து தலைகாட்டத் தொடங்கியது. சிறுகதைகளும் உரைநடை வடிவில் எழுதப்பட்டன. அதிகமான மக்களால் இவற்றைப் படிக்கவும் ரசிக்கவும் முடிந்தது. பெரிய இலக்கியப் புலமை தேவையாக இருக்கவில்லை! அப்போதும் கவிதைகளில் சிறுகதைகள் (பெரும் கதைகளும் கூடத்தான்) தொடர்ந்து சொல்லப்பட்டன. சொல்லாழம், அழகுணர்ச்சி வெளிப்படக் கூறுதல், கருத்துப் பொதிவு, உவமைகள் இவையெல்லாம் உரைநடையை விடக் கவிதையில்  சாத்தியம் என்பதாலா, எதனால் படைப்பாளிகள் சில சிறுகதைகளைக் கவிதைகளாகவே வடித்தனர் எனத் தெரியவில்லை. சிலவற்றைப் படித்து ரசிக்கலாமே!

லார்ட் டென்னிஸன் (Lord Tennyson) என்ற பெருங்கவிஞர் ஆங்கிலத்தில்  ‘கொடிவா’ (Godiva) என்ற சிறுகதையைக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். ‘நான் இவ்வாறு ஒரு கதையை கேள்விப்பட்டேன்,’ என்று கதையை ஆரம்பிக்கிறார். ‘கவன்ட்ரி தேசப் பிரபு ஒரு கொடுமையாளன். வேட்டை நாய்களுடனும், நீண்ட தாடியுடனும் உலவுகிறான்,’ என்று கூறி, அவனுடைய கொடுமை மனத்தை வாசகர்களுக்கு உணர்த்துகிறார். குடிமக்கள் மீது கண்டபடி வரிவிதித்துக் கொடுமைப் படுத்துகிறான். துன்பமுற்ற மக்கள், அவனுடைய மனைவியான கொடிவாவிடம் வந்து முறையிடுகின்றனர். அவள் மிக மென்மையான மனம் படைத்த பெண்ணரசி. கணவனிடம் சென்று ,”வரியை நீக்குங்கள்,” என வேண்டுகிறாள். “இவர்களுக்காக நீ ஏன் துயரப்படுகிறாய்?” என எள்ளி நகையாடுகிறான் அக்கொடியவன். “நான் இறக்கவும் தயார். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்,” எனக் கேட்டவளிடம், கூசாமல், ” நீ நிர்வாணமாகக் குதிரை மீதேறி நகர்வலம் வந்தாயானால், இந்த வரிவிதிப்பை நான் ரத்து செய்கிறேன்,” என்கிறான். ‘மென்மையான மனம் படைத்த பெண்ணால் செய்ய முடியாதது,’ எனக் கருதித் தான் இவ்வாறு கூறுகிறான். ஆனால் அவள் அதைச் செய்வதாக ஒப்புக் கொள்கிறாள்.

தன் இருப்பிடத்தை அடைந்தவளுக்குப் பெரிய மனப்போராட்டம்- இதை வெகு இயல்பாக வர்ணிக்கிறார் டென்னிஸன்- ஒருமணி நேர மனக் குழப்பத்தின் பின் நியாயத்தை வேண்டி, தூதனை அனுப்பி, “எல்லா மக்களையும் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு வீட்டினுள் இருக்கச் சொல்லி முரசறைந்து  கூறுவாயாக. நான் குதிரை மீது செல்லும்போது யாரும் என்னைப் பார்க்கலாகாது,” என்கிறாள். இடையில் உள்ள அணியை நீக்கி விடுகிறாள்;  ‘வேனிற்காலத்து நிலவு மேகங்களால் சூழப்பட்டது போல சுருண்ட கருங்கூந்தல் முழங்கால் வரை தழைந்திறங்கி அவள் உடலைப் போர்த்தது,’ என்கிறார்.

She linger’d, looking like a summer moon

Half-dipt in cloud: anon she shook her head,

And shower’d the rippled ringlets to her knee;

வார்த்தைகளின் பிரயோகம் அமோகமாக இருக்கிறது. நான் மிகவும் ரசித்த, ரசிக்கும் கவிதைகளில் இதுவும் ஒன்று. “கற்பென்ற உடை அணிந்து குதிரை மீது சென்றாள், (She rode forth, clothed on with chastity)  எனும் வரிகள் அற்புதமான வர்ணனை.

நகர்வலத்தின் போது ஒரு கயவனான மனிதன், சுவரில் துளை போட்டு அவள் செல்வதை நோக்க எத்தனிக்கிறான். ‘தர்மம்’ அவன் கண்ணைக் குருடாக்கி விடுகிறது. பின்பு தன் கணவனைக் காணச் செல்கிறாள். அவன், வரிகளை நீக்கினான். குடிமக்கள் மனதில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொண்டாள் கொடிவா…. என முடிவுறுகிறது இந்த சிறுகதைக் கவிதை!!

இதை எல்லாம் டென்னிஸன் சொல்லும் விதமே ஒரு தனி அழகு. ஆங்கில மூலத்தைப் படித்துப் பாருங்கள், தெரியும். அவர் உரைநடையிலும் எழுத வல்லவர் என அறிகிறோம். ஆனால் கொடிவாவின் கதையைச் சொல்ல, அவளுடைய பெருமையைப் பேச, கவிதையே சிறந்த ஊடகம் என நினைத்தாரோ என்னவோ- நடை அழகும், பொருள் செறிவும், நீதியும் கலந்து விளங்கும் ஒரு கவிதைச் சிறுகதை இதுவல்லவா? விறு விறுப்புக்குக் குறைவில்லை. கொடிவா என்ன பண்ணுவாள், எப்படி அதைப் பண்ணுவாள் என்ற எதிர்பார்ப்புக்கும் பங்கமில்லை! அருமையான க(வி)தை. உரைநடையில் சொல்லியிருந்தால் இவ்வளவு அருமையாக அமைந்திருக்குமோ என்னவோ?

இதுபோல இன்னும் எத்தனையோ ஆங்கிலக் கவிஞர்களின் க(வி)தைகள்!

வங்க மொழியில் தாகூர் எழுதிய சிறுகதைகளும், ‘நாவல்’ எனப்படும் நெடுங்கதைகளும், நாடகங்களும், கவிதைத் தொகுதிகளும் நிரம்ப உள்ளன. இருந்தாலும், சில கவிதைத் தொகுதிகளில் அவர் கூறும் கவிதைகளில் அருமையான ‘பளிச்’சென்ற சிறுகதைகள் பொதிந்து, கவிதையின் கருத்தையும் சொல்லப்படும் விதத்தையும் மிகவும் ரசிக்க வைக்கின்றன. ‘கீதாஞ்சலி,’ (Gitanjali) ‘தோட்டக்காரன்,’ (The Gardener) ‘கனி கொய்தல்,’ (Fruit-Gathering) ஆகிய கவிதைத் தொகுதிகள் மிகவும் பொருட்செறிவு கொண்டவை. ஆங்காங்கே சுவாரசியமான சிறுகதைகளைக் கவிதையாக்கிப் புகுத்தி, நமது ரசனைக்கு நல்ல விருந்தளிக்கிறார் கவியரசர்.

கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:

‘நான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று உனது தங்க ரதம் ஒரு அற்புதமான கனவு போல தூரத்தில் தெரிந்தது; யார் இந்த மன்னர்களுக் கெல்லாம் மன்னன் என நான் வியந்தேன்! (விறுவிறுவென்ற கதைத் துவக்கம்!)

‘எனது துயரங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது என எண்ணினேன். கேட்காமலே கொடுக்கப்படும் பிச்சைக்காகவும், என்னைச் சுற்றிலும் புழுதியில் வாரி இறைக்கப்படும் செல்வங்களுக்காகவும் நான் காத்துக் கொண்டிருந்தேன். (என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்ற நமது எதிர்பார்ப்பு!)

‘அந்த ரதம் நான் இருந்த இடத்தில் வந்து நின்றது. உன் பார்வை என்மீது விழுந்தது; நீ ஒரு புன்னகையுடன் கீழிறங்கி வந்தாய். என் வாழ்வின் பேரதிர்ஷ்டம் கடைசியில் வந்தே விட்டது என நான் கருதினேன். நீ திடீரென உனது வலது கையை என் முன்பு நீட்டியபடி கேட்டாய், “எனக்குக் கொடுப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?” (அடடா, எப்படிப்பட்ட திருப்பம்!)

‘ஆஹா! இப்படி ஒரு பிச்சைக்காரனிடம் கைநீட்டிப் பிச்சை கேட்பது எந்த விதத்தில் சேர்த்தியான அரசனின் வேடிக்கை? நான் குழப்பத்திலாழ்ந்து, என்ன செய்வதென்று புரியாமல் நின்றேன். பின்பு எனது பையினுள் கையை விட்டு, மெல்ல ஒரு சின்னஞ்சிறு தானியத்தை எடுத்து உனக்குக் கொடுத்தேன். (புரியாத நிகழ்ச்சி; முடிவு என்ன?)

gitanjali

‘ஆனால், அந்த நாளின் இறுதியில் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது; என் பையிலிருந்த எல்லாவற்றையும் தரையில் கொட்டிப் பார்த்தபோது, ஒரு சின்னஞ்சிறிய தங்க தானியம் அந்தக் குவியலில் இருந்ததைக் கண்டேன்! என்னிடமிருக்கும் அனைத்தையும் உனக்குக் கொடுக்க எனக்கு ஏன் மனமிருக்கவில்லை என்ற பச்சாதாபத்தில் தவித்து அழலானேன்.’ (ஹ்ம்ம். முடிவு புரிந்தது). ஆனால்  இது தெய்வத்துக்கும் மனிதனுக்குமான ஒருவிதமான உலகாயதமான பிணைப்பு என்பதில் நம் யாருக்கும் ஐயமில்லை! (பத்தில் ஒன்பது பேர் இப்படித்தான் செய்கிறோம்!) சிறுகதைக்கான வடிவத்தில் அழகான கவிதையாக இதை (வங்க மொழியில்) தாகூர் சொல்லியிருக்கும் பாணி மிகவும் வியக்க வைக்கிறது. இப்போது சொல்லுங்கள். உரைநடையில் இந்தக் கதையை இவ்வளவு அழகாகக் கூறியிருக்க முடியுமா? ஒரு வங்காள நண்பர், இதை அழகாக வங்க மொழியில் வாசித்துக் காண்பித்த போது கண்களில் நீரே வந்து விட்டது!

தாகூரின்  கவிதைகளில் காணும் அழுத்தமான வார்த்தை ஜாலங்களை, அவற்றின் பூரணத்துவத்தை, லா ச ராவின் சிறுகதைகளில் நாம் உணரலாம். இவர்கள் இருவருடைய  எழுத்துக்களுமே அவற்றின் பொருட்செறிவுக்காகத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் சக்தி வாய்ந்தவை.

க(வி)தைக் கதை எழுத்தாளர் வரிசையில் அடுத்து வருபவர் சரோஜினி நாயுடு. அதிகமாகக் கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதிய  பெண்மணி.  ‘ராணியின் போட்டியாளர்’ என்ற கவிதை  பொருள் பொதிந்த ஒரு கதையைக் கூறுவது; வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுள்ள ராணி குல்நார், தன் அழகில் சலிப்புற்று வருந்துகிறாள். ‘வெறுமையான பிரகாசம் போல, நிழலில்லாத இன்பம் போல, நான் பார்த்துப் பொறாமைப்படவும், வெற்றிகொள்ளவும் ஒருவரும் இல்லாமல் என் வாழ்க்கை வறண்டு இருக்கிறது,’ என்கிறாள். ராஜா பிரோஃஜ் எத்தனையோ அழகிகளை அடுத்தடுத்த ராணிகளாகக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்துகிறான்; யாருமே அவளைத் திருப்தி செய்யவில்லை.

கடைசியில் ராணியின் இரண்டு வயது மகள் அவளிடம் ஓடோடி வந்து, கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு தலையணியை எடுத்துத் தான் வைத்துக் கொள்கிறாள். தன் போட்டியாளரைக் கண்டு கொண்ட ராணி மனம் மகிழ்கிறாள்,’ என முடிகிறது க(வி)தை.  இதை சுலபமாக அழகான உரைநடையில் சிறுகதையாக எழுதலாம். ஆனால் படைப்பாளியின் மனம் ஒரு தனிப்பட்ட ஊடகத்தை நாடும்போது தான் படைப்பின் முழு வீச்சத்தையும் உணர முடிகிறது என்று நினைக்கிறேன். ஆங்கிலக் கவிதையைப் படித்துப் பார்த்தால் படைப்பின் ஆழம் புரிகிறது.

பாரதியாரின் பல க(வி)தைகள் அழகான, உணர்ச்சிப் பிழம்பான வார்த்தைப் பிரயோகங்களில் பரிமளிக்கின்றன.

உதாரணமாக, ‘தீர்த்தக் கரையினிலே,’ என்ற பாடலைப் பார்த்தால், அது காதலியைக் காண இயலாமல் தாபத்தில் துடிக்கும் ஒரு காதலனின் கதை தான். பாரதியார் காலத்தில் உரைநடை மிகுதியாகப் புழக்கத்தில் வந்து விட்டது. இருந்தாலும், கவிதையில் கதை சொல்ல விரும்பியிருக்கிறார் என்றால், அதைத் தான் சொல்ல விரும்பிய வடிவில் அழகு மிளிரச் சொல்வதற்கு உரைநடையை விடக் கவிதை தான் அவருக்கு இயல்பாக வந்திருக்கிறது.

‘கூடிப் பிரியாமலே- ஊரி ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே,

…..

பாடிப் பரவசமாய்- நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி!’    

சிருங்காரம் இழையும் காதலின் தன்மையை, கவிதை இல்லாமல் வேறு எந்த வார்த்தைகளால் இவ்வாறு விளக்க முடியும்?

இன்னும் எத்தனையோ, சொல்லிக் கொண்டே போகலாம். தியாகராஜர், நீலகண்ட சிவன், பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், அழ. வள்ளியப்பா என்று. படிக்காத க(வி)தைகளும் மிகுதியாக உள்ளன.

கற்றது கைம்மண்ணளவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.