கவிதைகள்

விழிப்பு

Escher_fishஎத்தனை முறை எறிவான் மீன் தூண்டிலை
அவன்?
ஒரு
சிறு மீன் கூடவா சிக்கவில்லை?
ஆசையை எறிவது போல் எறிகிறானே தூண்டிலை
அடுத்த முறையும்?
எப்படிச் சிக்கும்
எப்போதும் விழித்துச் செல்லும் இரு கரையும் புரளும் ஆறு?

 
 
 
உயிர் நிலை
அலை மேல் அலையேறி வரும் நல்மீனை நெடுநோக்கி
அருகே தாழ்ந்து மெல்லச் சிறகடித்து
அலை மேல் வருங் கணத்தில் ’அலாக்காகக்’ கொத்தி
எங்கு போய் இரை மீனின் உயிர் பறித்து உணவு கொள்ளுமென்று
முன் அனுமானிக்க முடியாது
முழு வேகமாய் வெளி கிழித்துச் செல்லும் கருமேகக் காகத்தைக்
கடல் துரத்தி
கரை மோதிச் சிதறும்.
சிதறியதில்
ஒரு சிறு நண்டு தப்பிக் கரையொதுங்கி
சற்றும் கவலையில்லாமல் கால் பதிக்கும் சாவகசமாய் ஈர மணலில்.
கு.அழகர்சாமி
 

***

தாண்டவம்
இப்புடவியின்
கரிய சாம்பல் மீதுShivas-dance
நடனமிடும்போது துடிக்கும்
அவன் சதைக்கட்டுகளின்
மினுமினுப்பில் ஒளிந்தபடி
தலைகாட்டும் கர்வத்தை
ஒப்பிட்டுப்பார்க்கையில்தான்
மிச்சமிருந்த ஒற்றை
அணுத்துகளின்
கங்கு அணைந்தது
அவன் அமைதியானான்
மீட்டுருவாக்கத்துக்கான
கூறுகளும் எரிந்தது
தெரியும் வரை
அமைதி நீடித்தது
இன்மையோடு ஓலமிட்டபடி
அவன் எங்குபோய்
இணை தேடுவான்?
ஆனால்
அவள் இருக்கிறாள்.
நாகபிரகாஷ்.

***

கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்

இனிப்பு வாங்கி உள்நுழையும் எதிர்பார்ப்பை
உடைக்க ஓரிரு சொற்களையோ கற்களையோ
என்னுள் எப்பொழுதுமே தேக்கி வைத்திருக்கிறாய்..
போதும் என்ற சொல் பந்து
மீண்டும் மீண்டும் சுவர்களில் விழுந்து தெறிக்கிறது,
படியும் காவி நிற வட்டங்கள்
அச்சொல்லின் கூட்டு எண்ணிக்கையென
பறைசாற்றிக் கொள்ள..
ஒவ்வொரு சொல்லாய்
ஒவ்வொரு சொல்லடுக்காய்
மென்மேலும் பரவி மெல்லியதொரு அறையென உருவாகும்
சொல்வன்மம் உச்சத்தை உணர மட்டும் இல்லை..
ஒரு வனத்தின் அடர்த்தியைக் கொண்ட
சொல்லறையின் கதவுகள்
யாருக்கெனவும் திறவாது என்றபடி
சொற்களைத் தின்ன துவங்குகிறது அகலவாய் கொண்ட இனிப்பு..

தேனு

***

 
இன்னும் ஓர் சொல்
children_running_in_the_rain-wallpaper-640x960
உறங்கிக்கொண்டிருக்கும்
ஒரு சொல்லை
எழுப்புகிறது
பெருங்கனவொன்றிலிருந்து
விழித்தெழுந்த
மற்றொரு சொல்.
நனைதல் பொருட்டான மழை
உனது பெயரின் கவிதை
திறக்கப்பார்க்கிறது
அடைபட்டுக்கிடக்குமோர்
மிருகத்தின் கூண்டை
ம்…
ம் என்று சொல்லி
அதை ஓர் சொல் என்கிறாய்
ம் என்ற சொல்லில் துவங்கி
ம் என்றே முடியட்டுமோ என் கவிதையும்,
ம்?
முன்பின்னறியா மழை
மழையைத் துரத்திக்கொண்டு ஓடும்
குழந்தைகளைத்
துரத்திக்கொண்டு போகிறது
இன்னொரு மழை
ஸ்வரூப் மணிகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.