நாடு ஒன்றிருந்தது. அந்நாட்டில் எல்லோருமே திருடர்கள்.
இரவில், எல்லோரும் கையில் சாவியோடும் மை பூசிய லாந்தரோடும் புறப்பட்டு விடுவார்கள், அண்டை வீடுகளை கொள்ளை அடிக்க. விடியலில், கொள்ளையடித்த பொருட்களோடு தங்களின் கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளுக்கு திரும்புவார்கள்.
எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.
ஒரு நாள், எப்படி என்று நமக்கு தெரியாது, ஒரு நேர்மையான மனிதன் அந்த நாட்டிற்கு வாழ வந்தான். இரவில், மூட்டையோடும் லாந்தரோடும் வெளியே செல்வதற்கு பதில், புகைபிடித்துக்கொண்டு நாவல்கள் படிப்பதற்காக அவன் வீட்டில் தங்கினான்.
திருடர்கள் வந்தார்கள், அவன் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் உள்ளே செல்லவில்லை.
இப்படியாகச் சில நாட்கள் போயிற்று: அவன் ஒன்றும் செய்யாமல் வாழ நினைத்தாலும் அடுத்தவர்களை ஒன்றும் செய்யாமல் தடுப்பது உகந்த காரியமல்ல என்பதை அவனுக்கு விளக்க முனைந்தார்கள். அவன் வீட்டில் தங்கும் ஒவ்வொரு நாளின் அடுத்த நாளில் மற்றொரு குடும்பம் பட்டினியாய் போகும்.
அந்த காரணத்தை நேர்மையான மனிதனால் மறுதலிக்க முடியவில்லை. மற்றவர்களைப்போல் இரவில் வெளியே சென்று விடியலில் வீடு திரும்பினான், ஆனால் அவன் திருடவில்லை. அவன் நேர்மையை மாற்ற முடியவில்லை. அவன் பாலத்தின் வரைக்கும் சென்று கீழே போகும் தண்ணீரை வேடிக்கை பார்த்துவிட்டு தன் களவாடப்பட்ட வீட்டிற்கு திரும்பினான்.
ஒரு வாரத்திற்க்குள் நேர்மையான மனிதன் ஒற்றைக் காசில்லாதவானான். அவனிடம் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, அவன் வீடும் காலியாயிருந்தது. ஆனால் அதுவல்ல பிரச்சினை. பிரச்சினை என்னவென்றால் அவனுடைய செயல் மற்றெல்லாவற்றையும் குலைத்தது. தான் மற்றவர்களிடமிருந்து திருடாமல் மற்றெல்லோரையும் திருட விட்டதால், எப்பொழுதும் யாரொ ஒருவரின் வீடு திருடப்படாமல் இருந்தது: அவனால் திருடப் பட வேண்டிய வீடு. இப்படியாக, சில நாட்களில் திருடப்படாதவர்கள் மற்றவர்களை விட பணக்காரர்களானார்கள், அதனால் அவர்கள் திருட வேண்டிய நிர்பந்தத்திலிருந்து விடுபட்டார்கள். இதை விட மோசம் என்னவென்றால், நேர்மையாளனின் வீட்டிற்கு திருட வந்தவர்கள், அவன் வீடு எப்பொழுதும் காலியாய் இருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் ஏழைகளானார்கள்.
இதனிடையில், பணக்காரரானவர்கள் “பாலத்திற்குப் போய் கீழே போகும் தண்ணீரை வேடிக்கைப் பார்ப்பது” என்ற நேர்மையாளனின் பழக்கத்திற்கு ஆளானார்கள். அதனால் மேலும் பலர் பணக்காரர்களாகவும் மற்றும் பலர் ஏழைகளாகவும் ஆனார்கள். இது குழப்பத்தை அதிகரித்தது.
பணக்காரர்கள், பாலத்திற்குப் போனால் விரைவில் ஏழைகளாவோம், என்பதை உணர்ந்தனர். அதனால் “சில ஏழைகளுக்கு பணம் கொடுத்து அவர்களை நமக்காக திருடச் செய்வோம்” என்று நினைத்தனர். ஒப்பந்தங்கள், நிரந்தர ஊதியங்கள், விழுக்காடுகள் ஆகியவைகளை வரையறுத்தினர்: ஆனால் எல்லோரும் திருடர்களாதலால் ஒருத்தரையொருத்தரை சுரண்டுவதில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதனால், எதிர்பார்த்ததைப் போல், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களானார்கள் ஏழைகள் மேலும் ஏழைகளானார்கள்.
சில பணக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து திருடவோ அல்லது அடுத்தவர்களை அவர்களுக்காக திருடச் செய்யவோ வேண்டியிராத அளவுக்கு பெரும் செல்வந்தர்களானார்கள். ஆனால் அவர்கள் திருடுவதை நிறுத்தினால் அவர்கள் ஏழைகளாவார்கள் – மற்ற ஏழைகள் அவர்களிடமிருந்து திருடுவதால். அதனால் அவர்களுடைய உடைமைகளை ஏழைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு அடிமட்ட ஏழைகளை கூலிக் காவலாளிகள் ஆக்கினார்கள். சிறைச்சாலைகள் கட்டினார்கள்.
நேர்மையாளன் வந்த சில வருடங்களுக்குள், அந்நாட்டு மனிதர்கள் திருடுவதைப் பற்றியோ திருட்டுப் போவதைப் பற்றியோ பேசுவதை நிறுத்திவிட்டு, பணக்காரர்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் மட்டுமே பேசினர்; ஆனால் அவர்கள் எல்லோருமே திருடர்கள்தாம்.
அந்நாட்டின் ஒரே நேர்மையாளன் விரைவில் இறந்து போனான், பட்டினியால்.
***
புலப்படாத நகரங்களை படித்து இடாலோ கால்வினாவின் வாசகனானேன்.இக்கதை மிக சுவையாக இருந்தது.இத்தகைய நகைச்சுவையை சிறுகதையில் கொண்டு வந்த விதம் சிறப்பானது.
பொன்.கந்தசாமி