கனவு நோயாளி

ஒரு வட்டத்தின் மீது ஓடிக் கொண்டிருந்தான். தொடக்கப்புள்ளி இறுதிப்புள்ளிகளை கண்டறிய முடியாத வட்டம். எந்தப் புள்ளியிலும் நிற்கவில்லை. ஓடி ஓடிக் களைத்துப் போனான். தான் மூச்சு விடும் ஓசை அவனுக்கு தெளிவாகக் கேட்டது. ஒரு வினாடி அல்லது சில வினாடிகள் இருக்கலாம். அவன் நின்றான். ஓடிக்கொண்டிருந்த வட்டம் சதுர வடிவாக மாறியிருப்பதைக் கண்டான். அவன் நின்ற இடம் சதுரத்தின் ஒரு மூலை. சதுரப் பாதையில் மீண்டும் ஓட்டம். சதுரம் விரைவிலேயே செவ்வகமாக மாறியது. பிறகு நாற்கரம்..அடுத்து இணைகரம்…..முக்கோணமாக மாறியபோது அவனின் ஓட்டத்தின் வேகம் அதிகரித்தது. வடிவம் ஒழுங்கிழந்து ஒற்றைச் சொல்லில் வர்ணிக்கவியலாத வடிவங்களில் விதவிதமாக மாறிக் கொண்டேயிருந்தது. அவன் களைத்து போனான். பாதையை விட்டு விலக முடியவில்லை ; நிற்கவும் இல்லை. அவன் பாதங்கள் அப்பாதையில் படிந்து விட்டதனாலேயே ஓடிக் கொண்டே இருக்கும் நிலைக்கு சபிக்கப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் அவனுள் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் முடிவு செய்தான். என்ன ஆனாலும் சரி ஓட்டத்தை நிறுத்திவிட்டு களைப்பாறிக் கொள்ள வேண்டும். முடிவு செய்தவுடன் அவன் பாதங்கள் ஓடுவதை நிறுத்தின…….ஜீவா கனவு கலைந்து விழித்தான். விடியல் வெளிச்சம் அறைக்குள் பரவியிருந்தது. கண்களைக் கசக்கினான்.

ஓய்வற்ற கனவுகள் அவன் தூக்கத்தில் வந்து கொண்டேயிருந்தன. கனவு காண்கிறோம் என்கிற பிரக்ஞை அவ்வப்போது அவனுள் எழுந்தாலும் அக்கனவுகளில் இருந்து அவனால் விடுபட முடிவதில்லை. சாதாரண விஷயமாகத் தான் முதலில் இதை அவன் எடுத்துக் கொண்டான். ஆனால் கடந்த சில தினங்களாக கனவுகளின்றி தூக்கம் வராதோ என்ற கவலை துவங்கியிருக்கிறது.

மதியப் பொழுதிலோ கேட்கவே வேண்டாம்! ஒரு வார இறுதி மதியத்தில் கண்கள் அசந்து கொண்டு வந்தன. தூங்கத் தொடங்கினான். காற்றில் மிதக்கும் யோகிகள் போல அவன் வானில் பறக்கும் கனவு வந்தது. தெளிவான வானில் கண்களைத் திறந்த ஆசனமிட்டு பறந்தான். மகிழ்ச்சியாக உணர்ந்தான். தெளிவிலாத புகை மண்டிய ஆகாயப் பிரதேசம் அடுத்து வந்தது. அவனுக்கு மூச்சு திணறியது. கீழே சென்று விட வேண்டும். தெளிவான ஆகாயத்திற்குப் போக என்ன செய்ய வேண்டும்? தெரியவில்லை. எங்கு போக வேண்டும் என்பதை நான் தானே தீர்மானிக்க வேண்டும்? அவன் விருப்பத்தை அவனால் செயல் படுத்த முடியாமல் போனது. கைகால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் அங்கஸ்திதியை மாற்ற முடியாமல் எழுந்து நின்று விட்டால் ஆகாயத்தில் இருந்து தரையில் விழுந்து விடுவோமோ என்ற பயம் அவனை ஆட்டியது. சில நேரத்தில் புகை மண்டிய ஆகாய வெளிப் பிரதேசத்தை தாண்டி கும்மிருட்டான வானவெளியில் மிதந்து சென்று கொண்டிருந்தான். அமைதி. அவன் மனதில் இருந்த பயம் விலகியது. எழுந்து நிற்க வேண்டும் என்று தோன்றவில்லை. சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தான். இருட்டு வானத்தில் அழகான உருவங்கள் தோன்றி அவன் பார்வையைக் குளுமைப்படுத்தின. விரைவில் கும்மிருட்டு வானம் கலைந்து, இடி மேகங்கள் முழங்கும் கரு மேகங்கள் அதி வேகமாக உரசிக் கொள்ளும் ஈர வானத்தில் அவன் மிதந்தான். இடியோசை அவன் காதில் பூதாகரமாக ஒலித்தன. பஞ்சு போன்ற மேகங்கள் மோதி கிளம்பிய மின்னலொளி அவன் கண்களைக் கூசச் செய்தன. காதுகளைப் பொத்தியும் கண்களை மூடியும் பயனில்லை. மூடிய காதுகளையும் மீறி இடியோசை நாராசமாக ஒலித்தது. கண்களை மூடினாலும் மின்னலொளி நிறம் மாறியவாறு வீசிக் கொண்டிருப்பதை நன்கு உணர முடிந்தது. . மஞ்சள் நிற மின்னலை என்றாவது கண்டிருக்கிறோமா என்ற ஐயம் ஒரு காரணமுமிலாமல் அவன் மனதில் தோன்றுகையில் கண்களைத் திறந்தான்….ஜன்னலைத் தாண்டி சூரிய ஒளி அவன் படுக்கையில் அடித்தது.

மருத்துவர் ஒருவரைச் சென்று ஆலோசிக்க தீர்மானித்தான். அவன் இருந்த இடத்திற்கு சற்று தூரத்தில் இருந்த வைத்தியசாலையில் நீண்ட வரிசை. வரிசையில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவன் முறை வர நெடுநேரம் பிடித்தது. வெண்ணிற உடையணிந்து வெண்தாடியுடன் இருந்த மருத்துவர் ஒளிரும் புன்னகை வீசி அவனை விசாரித்தார். “கனவு எல்லோருக்கும் வருகிறது. இதில் பயப்பட என்ன இருக்கிறது? இன்பக்கனா, துன்பக்கனா எல்லாமும் வரும். துன்பக்கனா வந்தால் தண்ணீர் குடித்து விட்டுப் படுங்கள்” என்று அறிவுறுத்தினார். “கொஞ்ச நேரம் கனவு வந்தால் தேவலை. முழுத் தூக்கத்தில் ஒரே கருப்பொருள் கொண்ட கனவு. ஓடிக் கொண்டிருந்தால் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பறந்து கொண்டிருந்தால் பறந்து கொண்டேயிருக்கிறேன். தூக்கம் பதற்றமும் அமைதியின்மையுமாகக் கழிகிறது” என்றான், “இயக்கம் ஒன்றாக இருந்தாலும் வருகின்ற காட்சிகள் மாறிக் கொண்டிருக்குமே. அக்காட்சிகளைப் பார்த்தவாறே சுய இயக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் கனவில் இருங்கள். கனவுகள் உங்கள் தூக்கத்தை அலைக்கழிக்காது” என்றார் மருத்துவர். மருந்தொன்றை எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த மருந்து அக்கம்பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைகளில் கிடைக்கவில்லை. அடுத்த நாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினான்.

அன்றிரவும் கனவு வந்தது. தொடர்ந்து உரு மாறிக் கொண்டே இருக்கும் கனவு. காட்சிகள் மாறவில்லை. வன விலங்குக் காட்சி சாலையின் ஒரு கூண்டில் அவன் இருக்கிறான். அவன் ஒற்றைக் கால் கட்டப்பட்டிருக்கிறது. கம்பிகளினூடே பார்வையாளர்கள் அவனைப் பார்க்கிறார்கள். நான்கு பார்வையாளர்கள். பார்வையாளர்கள் அவனைப் பார்த்து கை தட்டினார்கள். அவன் மனித உருவிழந்து உடும்பாக மாறினான். கைத்தட்டல் வலுத்தது. ஆமை, பருந்து, சிங்கம் –அவன் மாறிக் கொண்டேயிருந்தான். அதே நான்கு பார்வையாளர்கள் கூண்டுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு உருமாற்றத்தின் போதும் அவர்கள் கை தட்டினார்கள். அவன் அனகோண்டாவாக மாறித் தரையில் அசைவின்றிக் கிடந்தான். கொஞ்ச நேரம் கூண்டில் இருந்து காணாமல் போனான். காணாமல் போயிருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. பிறகு முயலாக கூண்டினுள் திரும்பி வந்தான். பல்லியாக மாறியபோது அவன் கண்கள் மூடிக் கிடந்தன. பல்லியாக கண்ணை மூடியபடி அங்கேயே கிடந்தான். பார்வையாளர்கள் இன்னும் இருக்கிறார்களா என்று அவனுக்கு தெரியவில்லை. அவன் அசைந்தபோது தன் உதட்டில் எச்சில் வழிய தரையில் படுத்துறங்கியிருப்பதை உணர்ந்தான். வாசற் கதவு திறக்கப்பட்டு சூரிய ஒளி பாதி அறையில் படர்ந்திருந்தது.

ஜீவாவின் அறைக்கு நண்பன் சினேகன் வந்த போது சொப்பனாவஸ்தை பற்றி அவனிடம் பேசினான். சினேகன் “இதற்கெல்லாம் சாதாரண மருத்துவரிடம் சென்று பயனில்லை. மன நல மருத்துவரை நாடினால் தான் பலன் கிட்டும். மன நல மருத்துவரிடம் செல்வது இப்போதெல்லாம் சாதாரணமான விஷயமாகிவிட்டதே” என்றான். “யோசிக்கலாம்” என்றான் ஜீவா.

மருத்துவர் சொன்ன மருந்தை வாங்க ஜீவா ஒரு முயற்சியும் செய்யவில்லை . கனவுகள் தொடர்ந்தன. நிற்காத குதிரையின் மேல் பயணம், தரையைத் தொடா பள்ளத்தில் விழுந்து கொண்டே இருத்தல் என்றவாறு தொடரியக்கக் கனவுகள்.

கனவை தடுத்து நிறுத்துதல் எப்படி? கனவை தடுத்து நிறுத்த மனோபலத்தால் முடியவில்லையே! அது ஏன்? கனவு எப்படி தோன்றுகிறது. நம் மனம் தூக்கத்தின் போது அமைதியுறாமல் சிந்தனைச் செயலை தொடர்ந்து செய்வதால் அச்சிந்தனைகள் கனவுகளாக நம் தூக்கத்தில் நுழைகிறது என்ற ஒரு தியரி பற்றி அன்றைய நாளிதழில் கட்டுரையொன்று வெளியாகி இருந்தது. அதை எப்படி சரிபார்ப்பது?

உறங்குவதற்கு முன்னர் மனதை ஒருமுகப்படுத்தி “கனவிலாத தூக்கம் வேண்டும்” என்ற சுய-பரிந்துரையை ஒரு மந்திரம் போன்று உச்சரித்தான். தூக்கம் வரும் வரை பிரக்ஞையுடன் சுய-பரிந்துரையை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தான். அவனறியாமலேயே அவனை உறக்கம் தழுவியது. பாதி உறக்கத்தில் தாகமெடுத்தது. தண்ணீர் அருந்தி தூக்கத்தை தொடர்ந்தான். அவனுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன. இறக்கைகளை ஆட்டியவாறே பறக்க முயன்றான். நின்ற இடத்திலேயே இருந்தான். இரு புற இறக்கைகள் அசைந்து கொண்டே இருந்தன, ஆனால் நின்ற இடத்தை விட்டு அவன் ஒரு தப்படி நகரவில்லை. இறக்கை அசைத்தலின் வேகத்தை அதிகரித்தும் பலனில்லை. அவனுக்கு கோபம் வந்தது. கடுங்கோபம். இறக்கையை கழற்றி வீசத் தோன்றியது. கைகளைக் குறுக்கே கட்டிக் கொள்வது போல இறக்கைகளை குறுக்காக கட்டிக் கொள்ள முயலுகையில் மூச்சுத் திணறியது. போர்வையை விலக்கினான். வாசலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் பட்ட சூரிய ஒளி அறையின் உட்கூரையில் பிரதிபலித்தது.

முந்தைய நாள் செய்தித்தாளின் கட்டுரையை மீள் வாசிப்பு செய்ததில் ஜீவாவுக்கு ஒரு யோசனை பிறந்தது. தூங்காமல் உடலைக் களைக்க விடுவது என முடிவு செய்தான். மிகவும் களைத்துப் போய் அசதியில் தூங்கினால் கனவுகள் தோன்றாமல் இருக்கக் கூடும். படுக்கைக்குப் போகும் நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான் ; அதைத் தொடர்ந்துஸ்குவாஷ் விளையாட்டு. தூக்கத்துக்கு மாறாக புத்துணர்ச்சியாக உணர்ந்தான். நடு இரவுக்குப் பிறகும் ஏதேதோ வேலைகள் செய்த வண்ணம் இருந்தான். நான்கு மணிக்கு கண்கள் சிவக்கத் தொடங்கின. கட்டுப்பாட்டை இழந்து சில நிமிடங்களுக்கு கண்கள் மூடின. உடன் சுதாரித்துக் கொண்டவனாய் புருவங்கள் விரித்து உட்கார்ந்திருந்தான். தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது. அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். விடிந்தவுடன் அறையின் கதவைத் திறந்து கீழ் வானத்தை உற்று நோக்கினான்.

இப்படியாக சில இரவுகள் கழிந்தன. மாலைச் சூரியனைப் போல் சிவந்து கிடந்த கண்ணைச் சுற்றி கருவளையங்கள். நண்பன் சினேகனுக்கு ஜீவாவின் பிரயத்தனங்கள் அர்த்தமற்றவையாகப் பட்டன. ஜீவாவின் முயற்சிகள் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி ஜீவாவை மன நல மருத்தவரிடம் அனுப்பி வைத்தான்.

ஜீவா சொல்வதை கேட்ட மன நல மருத்துவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு காகிதத்தில் மருந்தொன்றின் பெயரை எழுதிக் கொடுத்தார். தூங்கும் முன்னர் அந்த மாத்திரையை தினம் சாப்பிட வேண்டும். இம்முறை எழுதிக் கொடுக்கப்பட்ட மருந்து எளிதில் கிடைத்தது.

மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தூக்கம் வந்து விட்டது. அடித்துப் போட்ட மாதிரி ஆழ்ந்த தூக்கம்.அன்றிலிருந்து இன்பக்கனவுகள் மட்டும் வரத் தொடங்கின. விழித்த பின்னால் கனவுகள் எதுவும் ஞாபகத்தில் இருக்கவில்லை. முன்னர் மாதிரியான ஓய்வற்ற தன்மை கொண்ட கனவுகள் வருவது நின்று போனது ஜீவாவுக்கு ஆறுதல்.தொடர்ந்து மாத்திரையை விழுங்கி வந்தான்.

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மருந்து தீர்ந்த அன்று தூங்கப் போக பயமாக இருந்தது. தூக்கம் வருமா என்ற சந்தேகம் வேறு! கடைக்கு சென்று மருந்தை மீண்டும் வாங்கலாமா? மருத்துவரைப் பார்க்காமல் மருந்து சாப்பிடுவதை தொடர்வது சரியாகுமா?

நெடுநேரம் தூக்கம் வரவில்லை. அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். பழைய நாளிதழைத் தேடி கண்டுபிடித்தான். ஏற்கெனவே பல முறை படித்திருந்த கட்டுரையை மீண்டும் படித்தான். அவனுள் ஓர் உந்துதல். வெண் காகிதமொன்றில் பின் வருமாறு எழுதலானான் :“கனவுகளை மனம் தான் உருவாக்குகிறது என்றால் நினைவுகளையும் மனம் தானே தருகிறது. நினைவில் பலவாறு உழலும் மனதின் ஓட்டத்தைக் கண்டு நாம் பீதியடைகிறோமா? நனவுலகில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பெற்று அதன் விளைவுகளை ஏற்றுக் கொண்டு அடுத்த நிகழ்வு என்று சென்று கொண்டிருக்கிறோம். ஜனித்த நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுக்கு வித்திட்டு பல்வேறு அறிதலையும் ஞாபகங்களையும் தோற்றுவித்து இன்று இருக்கும் நபராக மாற வழி நடத்தியிருக்கிறது. நினைவும் கனவும் ஒரே தன்மையதாய் ஒரே வடிவில் நம் மனதுள் இருக்கின்றன. கனவுகளை நிறுத்த வேண்டுமானால் மனதை இல்லாததாக ஆக்க வேண்டும். மனதை இல்லாததாக்குதல் சாத்தியமா? கடந்து போனவைகள் பற்றிய நினைவுகளை, எதிர் காலம் பற்றிய பயங்களை உதறி விடும்போது மனதை நிகழ்வுகளில் பங்கு பெற ஏதுவான கருவியாக மட்டும் பயன்படுத்துதல் சாத்தியம்!”

கொட்டாவி வந்தது. எழுதுகோலை மூடி வைத்து விட்டு போர்வையை போர்த்தி படுத்துக் கொண்டான். கண்ணை மூடும் முன்னர் எழுதிய விஷயங்களை அசை போட்டான். சில நிமிடங்களில் தூங்கிவிட்டான்.

ஜீவா கனவில் இருட்டாக மாறியிருந்தான். கடும் இருட்டாக தன்னை உணர்ந்தான். நிலப்பரப்புகள், காடுகள், தோட்டங்கள், எல்லாவற்றின் மேலும் இருட்டாக படர்ந்திருத்தான். போர்வை போர்த்தி யாரோ படுத்திருந்தார்கள். பிணமாகவும் இருக்கலாம். துளியும் அசைவில்லாமல் யாராலும் அப்படி படுக்க முடியுமா? உடல் வடிவில் நியான் விளக்கை செய்து அதனை போர்வைக்குள் அடைத்திருக்கிறார்களோ! சடலமோ அல்லது தூங்கும் மனிதனோ தெரியவில்லை.அது ஒளிர்ந்தது. அதன் பளிச்சிடலில் இருள் தன்மையை இழந்து விடுவோமோ? போர்வை லேசாக விலகியது. இருள் வடிவத்தில் இருந்த ஜீவாவின் பிரக்ஞை உடல் வடிவ ஜீவாவை அங்கு கண்டது. உருவமிலா இருள் வடிவ ஜீவாவை உடல் வடிவ ஜீவா கண்டதும் புன்னகைத்தான்.

இருள் : “நீயா? நானா நீ?”

உடல் : “ஆம். நீதான் நான்”

இருள் : “பரந்து விரிந்திருக்கும் நான் எப்படி உடலில் சுருங்கி அடைந்து கிடக்கும் நீயாக இருக்க முடியும்?”

உடல் : “அனுபவப்பூர்வமாக என்னை உணர உடலெனும் கருவிக்குள் என்னை அடக்கிக் கொண்டேன்”

இருள் : “உணர்ந்தாயா?”

உடல் : “உணர்ந்தேன். அதனால் தான் நான் ஒளிர்கிறேன்”

இருள் : “ஒருமையான, எல்லையற்று பரந்து விரியும் தன்மையை விடவா வெவ்வேறு தன்மையதான ஜட அனுபவங்களை தேடிச் செல்தல் சிறப்பானது?”

உடல் : “இருளாகவே இருந்தபோது நான் யாரென உணர்தல் சாத்தியமாகவில்லை. ஒளி இருள் எனும் இருமைகளின் அனுபவங்களை தானாக முன் வந்து பெற்றேன். முழுமையான உணர்தலை அடைவதற்கு இருளாகிய நான் ஒளியின் அனுபவத்தை பெறுதலின் அவசியத்தை ஜட அனுபவங்கள் எனக்கு போதித்தன.”

இருள் பிரக்ஞை நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தது. அது போர்வைக்குள் புகுந்து நிறைந்தபோது உடல் வடிவ ஜீவா மறைந்து போனான்.

0 Replies to “கனவு நோயாளி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.