கணக்குப் பரீட்சை

வடக்குத்தெரு கமலி வீட்டு சேவல் மூன்றுமுறை கூவ விழித்து விட்டாள் முருகம்மாள். தூரத்தில் எங்கோ ஒரு கடிகாரம் ஐந்து முறை அடித்து ஓய்ந்தது.ஆடி மாத காற்றில் கடிகார மணியின் ஓசை அவளின் உறக்கத்தை முற்றிலும் கலைத்தது. ஒருக்களித்து படுத்துக்கொண்டாள். விரித்திருந்த பாயும் தலையணையும் அவளிலிருந்து முப்பது டிகிரி கோணத்தில் விலகிக்கிடந்தன.அம்மா எழும்பி முகம் கழுவும் சத்தம் கேட்டது.பால் பண்ணைக்கு பால் கறக்க செல்பவர்கள் அந்த குண்டுங்குழியுமான சாலையில் வெற்று கேன்களுடன் சென்ற சத்தம் அவளை எழும்பி உட்கார செய்தது.

அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்ளும் போதே இதயத்துடிப்பும் வேகத்தை அதிகரித்தது.சுடலைமாடன் வாத்தியார் இன்று கணக்கில் நிகழ்தகவில் பரீட்சை என்று சொல்லியிருந்தார்.எவ்வளவு போட்டு பார்த்தாலும்,மனனம் செய்தாலும் இந்த நிகழ்தகவு மட்டும் வரமாட்டேங்குதே என்று அலுத்துக் கொண்டவளாய் கிழக்கு பக்கமாய் சென்று ஒதுங்கிவிட்டு முகத்தை கழுவிக் கொண்டாள்.உமிக்கரி கொண்டு பல் விளக்கிவிட்டு கணக்கு பரீட்சைக்கு படிக்கத் தயாரானாள்.

அம்மா கனகவல்லி ஓடைக்கு சென்று வந்து கால் அலம்பிக் கொண்டிருந்தாள்.புத்தக மூட்டையைத் திறந்து நாட்காட்டியை பார்த்தாள் முருகம்மாள்.முதல்பாடவேளை ஆங்கிலம். இந்துமதி டீச்சர் டேபோடில்ஸ் போயம் நடத்துவார்கள். பிரச்சினை இல்லை.இரண்டாவது பாடவேளை சமூக அறிவியல். ஆதிலிங்கம் சார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்துவார். ஜாலியாக இருக்கும். அதன்பின்பு இடைவேளை.மாரி கடையில் சுடச்சுட ஜவ்வுமிட்டாய் வந்துவிடும்.ஐம்பது பைசாவுக்கு இரண்டு வாங்கிக் கொள்ளலாம்.

ஐயையோ!! அடுத்த பாடவேளை கணக்கு.நிகழ்தகவில் பரீட்சை.அன்றே திருத்தி பேப்பரு கொடுத்து விடுவார்.மற்றவர்கள் பெயில் ஆனாதான் திட்டுவார்கள்.ஆனால் சுடலைமாடன் வாத்தியாரோ அறுபது மதிப்பெண்ணுக்கு குறைந்தாலே அடிப்பார்.அதனால் எப்படியாவது காவ்யாவைப் பார்த்து எழுதியாவது அறுபது மதிப்பெண் எடுத்துவிட வேண்டும்.

Exams_in_india

பரீட்சை எப்படியும் எட்டாம் வகுப்புக்கும் ஒன்பதாம் வகுப்புக்கும் இடையிலுள்ள வேப்பமர நிழலில்தான் நடத்துவார். காவ்யாவை சுவரோரம் அமர்த்திவிட்டு வலப்புறம் அமர்ந்து கொண்டால் பார்த்து எழுத வசதியாயிருக்கும்.கணக்கு பீரியட் முடிந்துவிட்டால் அடுத்து அறிவியல்.அதுவும் எமகண்டம்தான்.குமரன் வாத்தியார் எப்பொழுது பாடம் நடத்துவார் எப்பொழுது கேள்வி கேட்பார் என்று ஒன்றும் தெரியாது.அவர் கண்ணில் படாதவாறு ஒழிந்து கொள்ள வேண்டும்.காவ்யாகூட ஒருநாள் பதிலளிக்க முடியாமல் திணறியிருக்கிறாள்.

மதியம் சாப்பாடு முடிந்ததும் இரண்டு பாடவேளைக்கு பி.இ.டி. ஆசனம் சொல்லித்தருவதாய் கடந்த வாரம் கூறியிருந்தார் மிக்கேல் வாத்தியார்.கடைசி பாடவேளை தமிழ்.அது ஒருநாளும் பிரச்சினையில்லை.

பத்து நிமிடங்கள் கரைய நாட்காட்டியை மூடிவைத்துவிட்டு கணக்கு நோட்டைத் திறந்தாள்.

கனகவல்லி சிவனாண்டி கடையிலிருந்து டீ வாங்கி வந்து அவளிடம் ஒரு கிளாஸ் ஊற்றிக் கொடுத்துவிட்டு தானும் குடிக்கத் தொடங்கினாள்.

“டீய குடிச்சிட்டு வெளிக்கி பேட்டு வந்து படிமா தங்கம்”

“செரிமா”

“பாயி எங்க விரிச்சது எங்கபோயி கிடக்கு பாரு கழுத.கழுத மாதி உருளுதிய”

“போம்மா நீதான் எந்திரிக்கும்போது எடுத்து போட்டுட்டு என்ன குர சொல்லுத”

“ம்க்கும்” என்றவறே கனகவல்லி காலி டம்ளரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் சாணிக் கரைத்து முற்றம் தெளிக்க.

கணக்கு நோட்டை மூடிவைத்துவிட்டு ஓடைப்பக்கம் சென்று வந்தாள்.அவள் வரும்போது இரவின் நிறம் மங்கத் தொடங்கியிருந்தது.வாசலில் தண்ணிர் பிடிக்கும் சத்தம் பலமாய் கேட்டது.

“எலே முருவம்மா அந்த பித்தள குடத்த தூக்கிட்டு வாளா தண்ணி வந்துட்டு”அம்மாவின் குரல் கேட்டு எழுந்து பித்தளை குடத்தைத் தூக்கிக் கொண்டு தெருவிற்கு சென்றாள்.அம்மாவுக்கும் எதிர்வீட்டு வள்ளியம்மைக்கும் சண்டை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.வள்ளியம்மை வாயாடி.எல்லோரையும் மதிப்பற்று நாள் முழுவதும் பேசுவாள்.அதனாலே அவளிடம் பேசுவதற்கு எல்லோரும் பயப்படுவர்.காவ்யாவும் பயந்து கொண்டாள் அம்மா சண்டை போட்டுவிடுவாளோ என்று.

வள்ளியம்மை ஜாடைமாடையாக திட்டத்தொடங்கினாள்.

“தேவிடியாளுவ வருசயில மொதல்ல இருந்த எங்குடத்த தூக்கிட்டு கடேசில போட்ருக்காளுவ”என்று பாவாடையை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்டு ஆயத்தமானாள்.

எல்லோரும் அமைதியாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.அவளிடம் யாரும் பேச்சு கொடுக்காததால் சிறிது நேரத்தில் பேச்சின் சுரம் குறைந்தது.ஒருவழியாக பேசிப்பேசி ஓய்ந்து போனாள்.

தண்ணீர் பிடித்து,குளித்து முடித்து,கனகாம்பரம் பூப்பறித்து தொடுக்க ஆரம்பித்திருந்தாள் முருகம்மாள்.அருகில் கணக்கு நோட் காற்றில் பறந்து கொண்டிருந்தது.அடுப்பில் இரவு வைத்த வெண்டைக்காய் புளிக்குழம்பு சுண்டிக் கொண்டிருந்தது.நாசித்துளைகளில் மணம் புகுந்து நாக்கில் நீர் ஊறச் செய்தது.

பூ கட்டி முடிந்ததும் பழைய சோற்றை இறுகப் பிழிந்து வைத்து சுண்ட வைக்கப்பட்ட வெண்டைக்காய் குழம்புடன் சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு வாய் வைக்கும் முன்னே கணக்கு பரீட்சையும்,சுடலைமாடன் வாத்தியாரும் கண்முன்னே தோன்றினர்.இரண்டு வாய் சுவையாயிருந்த சாப்பாடு அடுத்த நொடியே நஞ்சாய் கசந்தது.தொண்டை முதல் அடிவயிறுவரை இறுக்கமாக உணர்ந்தாள்.சாப்பிடமுடியாமல் மீதி சோற்றை அம்மாவுக்கு தெரியாமல் கோழிக்கு இரை வைக்கும் தட்டில் தட்டிவிட்டு,மதிய உணவுக்காக கழுவிய தட்டை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டாள்.மணிக்கூண்டு எட்டு முறை அடித்து ஓய்ந்தது.

அதற்குள் மேலத்தெருவில் இருந்து தோழி காவ்யா வீடுதேடி வந்துவிட்டாள்.

“ஏபே நீ இன்னும் கிளம்பலயாங்கும்?”

“இல்லப இப்பதான் சாப்ட்டென்.ரெண்டு நுமுசம் இரேன்.தலக்கி எண்ண வச்சி சீவிருதேன்”

“எண்ண எங்கப இருக்கு நானே தேச்சி விடுதேன்”

பத்து நிமிடத்திற்குள் தயாராகி,கட்டிய கனகாம்பரம் பூவை ஆளுக்கு பாதியாக சூடிக்கொண்டனர்.அம்மாவிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினர்.

ஊரிலிருந்து கிழக்கே மூன்றாவது கிலோமீட்டரின் துவக்கத்திலிருந்தது பள்ளிக்கூடம்.சுடலைமாடன் கோவில் கழிந்து,வயல்வெளி கடந்து,யானைப்பாறை வழியாக,புளியந்தோப்புக்குள் நுழைந்து,பள்ளி மைதானம் கடந்தால் பள்ளிக்கூடம்.

வேகமாக நடக்கத்தொடங்கினர் இருவரும்.சுடலைமாடன் கோவிலில் கையை உதட்டருகில் குவித்து வேண்டிக் கொண்டு,வேப்பங்கொளுந்தைப் பறித்து பைக்குள் இட்டுக் கொண்டனர்.ஒரு ஓணான் வெடுக்கென்று மரத்திலிருந்து வேலிக்குள் பாய்ந்தது.தூரத்தில் சாரை சாரையாய் குழந்தைகள் நடந்து கொண்டிருந்தனர்.

வயல்வெளியை எட்டும்முன் கதிர் எதிர்பட்டான்.

“போங்க போங்க சுடலமாடன்ட்ட நல்லா அடிபட்டு சாவுங்க”

“நீ ஏம்ல இன்னக்கி வரலயோ?”

“இல்ல காவ்யா எனக்கு ஒரு எளவும் தெரியாது நிகழ்தகவப் பத்தி.என்ன எப்பிடியும் அவமானப்படுத்துவான்.அதான் காச்சல்னு கணேசங்கிட்ட லீவுலெட்டுரு குடித்துருக்கேன் ஹி ஹி ஹி..”

“போடா லுசு நீ கண்டிப்பா இந்த வருசமும் பெயில்தான் ஆவப்போற”

“போங்கடீ போயி படிச்சி கலெக்டரு ஆயி நம்ம ஊருலே பள்ளிக்கொடம் கட்டுங்க”என்றவாறே இணைந்து எதிரெதிரே பிரிந்தனர்.

ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் பச்சைப்பசேலென படர்ந்திருக்கும் வயல்வெளி ஆடிமாத கோடையில் வறண்டு தரைவெடித்துக் கிடந்தது.வயல்களினூடே நடந்து நடந்து பாதை உண்டாகியிருந்தது.ஆறுமுக நாடான் கிணற்றை சுற்றியுள்ள பகுதி மட்டும் பச்சையாய் இருந்தது.அந்த கிணற்றில் மட்டும் எந்த கோடையிலும் தண்ணீர் வற்றாது.பலமுறை கோடைக்காலங்களில் ஊருக்கே நீராதாரமாக இருந்திருக்கிறது.

பேசிக்கொண்டே நடக்க யானைப்பாறையை நெருங்கினர்.முன்னால் சென்ற ரவியும்,சேகரும் யானைப்பாறை மேலிருந்து மூத்திரம் அடிப்பது தூரத்தில் தெரியவே,

“இந்த பாய்ஸ் மட்டும் ஏந்தான் இப்டி பண்ணுதானுவளோ?”என்று தலையிலடித்துக் கொண்டாள் காவ்யா.

அதற்குள் இருவரும் சுதாகரித்துக் கொண்டு வெட்கத்தில் ஓடி மறைந்தனர்.சிரித்துக்கொண்டே யானைப்பாறையைக் கடந்தனர்.யானையின் முதுகிலிருந்து அடிவரை கருங்கோடு வெயிலில் மின்னியது.

எப்போதுமே அந்த புளியந்தோப்பை கடக்கும் போது எல்லோருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும்.பிள்ளை பிடிக்கிறவன் இந்த தோப்புக்குள் இருந்துதான் கடத்திக்கொண்டு செல்வான் என்று செவிவழி கேட்டு வளர்ந்ததுதான் அதற்குக் காரணம்.ஒவ்வொரு மரத்தின் அடர்ந்த நிழலும் அவர்களின் தைரியத்துக்கு சவாலாக இருந்தது.முன்னால் சென்ற ரவியின் முதுகுப்பை மட்டும் தூரத்தில் தெரிந்தது.ஆந்தைகள் அலறத்தொடங்கி தோப்பின் நிசப்தத்தை கலைத்தன.ஓடிக் கடந்தனர் தோப்பை.

பள்ளி மைதானத்தை அடைந்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.ஆங்காங்கே மாணவர்களும்,மாணவிகளும் கோகோ,கண்ணாமூச்சி என்று விளையாடிக் கொண்டிருந்தனர்.அவர்களை நோட்டமிட்டவாறே கடந்து பள்ளி வாயிலை அடைந்தனர்.

வெள்ளரிக்காய் தாத்தாவும்,நெல்லிக்காய் பாட்டியும் எதிரெதிரே கடைவிரித்திருந்தனர்.புதிதாய் வந்திருந்த ஐஸ்காரனும்,பலாப்பழ வியாபாரியும் இடம் கிடைக்காமல் சாலையின் மறுபுறம் நின்றிருந்தனர்.

வேகவேகமாக அவர்களைக் கடந்து பள்ளி ஆசிரியர்கள் ஓய்வறையை நோட்டமிட்டவாறே சென்றனர்.யாராவது வரவில்லையென்றால் அவர்களின் சந்தோசம் அப்போதே தொடங்கிவிடும்.அன்று தமிழ் வாத்தியார் வரவில்லை.முருகம்மாளுக்கு ஆற்றாமையாய் இருந்தது.”இந்த சுடலமாடன் லீவு போட்ருந்தா எவ்வளவு சூப்பரா இருந்திருக்கும்.போயும் போயும் இந்த அப்புராணி தமிழ் ஐயா லீவு போட்டுட்டாரே”என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அசெம்பிளி கூடியது.தமிழ்த்தாய் வாழ்த்துபாடி,ஒரு திருக்குறளும் அதன் தெளிவுரையும் கூறப்பட்டு,எல்லா வகுப்பு வருகைப்பதிவும் சொல்லப்பட அசெம்பிளி கலைந்தது.

இந்துமதி டீச்சர் ஆங்கிலப் புத்தகத்தை திறந்து படித்துக் கொண்டிருந்தார் வகுப்பில் நுழையும் போது.மேசையில் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி கிடந்தது.டேபோடில்ஸ் மலர்களை வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கூட அந்த அளவுக்கு வர்ணித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.ஆனால் இந்துமதி டீச்சர் வர்ணிப்பதை கேட்டதும் எப்படியாவது அந்த பூப்பரித்து தொடுத்து தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று முருகம்மாளுக்கு.

முக்கியமான புரியாத வார்த்தைகளின் அர்த்தத்தை பென்சிலால் அந்த வார்த்தைக்குமேலே அடிக்கோடிட்டு எழுதிக் கொண்டனர்.நாற்பத்தைந்து நிமிடம் நகர்ந்ததே தெரியவில்லை.அடுத்த பாடவேளைக்கான அழைப்புமணி மூன்று முறை அடிக்கப்பட்டது.

இரண்டு நிமிடத்திற்குள் ஆதிலிங்க வாத்தியார் சிரித்த முகத்துடன் நுழைந்தார்.வணக்கம் சொல்ல எழும்பினர் அனைவரும்.

“என்ன பிள்ளியளா பேயடிச்ச மாதி நிக்கிய? உக்காருங்க”

எல்லோரும் அமர்ந்தனர்.முருகம்மாளுக்கு அந்த பாடவேளையின் சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் அடுத்த பாடவேளைக்கான பயம் மெல்ல மேனிக்குள் இறங்கியது.இதயத்துடிப்பின் வேகம் இரண்டு குதிரைத்திறனைத் தாண்டியது.

“டேய் எல்லாரும் கவனிங்க இன்னக்கி நம்ம ஜாலியன் வாலாபாக் படுகொலையப் பத்தி படிக்கப் போறோம்.என்ன படிக்கப் போறோம்?”

“ஜாலியன் வாலாபாக் படுகொலையப் பத்தி”கோரசாக அனைவரும் கூறினர்.

“இந்த கோட்டிக்கார வெள்ளக்கார பய டயருக்கு வெறி எப்புடி இந்த நாயுவ நம்மள எதுத்து போராட்டம் பண்ணுதுன்னு.ஒருனாளு இந்த அமிர்தசரசுல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுனாங்க.இத தெரிஞ்சிக்கிட்டு இந்தபய என்னெஞ்சான்? இவன் ஆளுவ ஒரு நூறு வேர கூட்டிட்டு போயி,துப்பாக்கிய எடுத்து ணங்கு ணங்கு ணங்குனு சுட ஆரம்பிச்சிட்டான்” என்று கையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சொல்லிக் காண்பித்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் அவரின் நடிப்பைக் கண்டு. முருகம்மாளுக்கு சிரிப்பே வரவில்லை.அழுகை வந்துவிடக்கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

”இருந்த ஒரேஒரு கதவயும் பூட்டிப்புட்டான்.பாதி வேரு நடுவுல கெடந்த கெணத்துல போயி வுழுந்துட்டானுவ தப்பிக்கதுக்கு.கிட்டத்தட்ட நானூறு வேர் கிட்ட செத்துட்டாங்க.” என்று தொடர்ந்து உணர்ச்சிகரமாக பாடம் நடத்தினார்.சிறிது நேரத்திற்குள் நீண்ட மணி அடிக்கப்பட அப்போதுதான் தொடங்கிய அந்த பாடவேளையும் முடிந்தது.இடைவேளையில் மாரி கடைக்குச் சென்று சவ்வு மிட்டாய் வாங்கிக் கொண்டாள்.இஞ்சியும் சர்க்கரைப் பாகும் கலந்த ஜவ்வுமிட்டாய் அமிர்தமாய் இறங்கியது.வேகவேகமாய் வகுப்பிற்குள் வந்து கணக்கு நோட்டை எடுத்து புரட்டினாள்.

“எட்டு பகடைகள் உருட்டப்படும்போது மூன்று வெள்ளை,இரண்டு பச்சை,இரண்டு கருப்பு,ஒரு சிவப்பு விழுவதற்கான நிகழ்தகவு என்ன? அதற்கான வழிமுறைகளை மனதில் இருத்திக் கொண்டாள்.அடுத்தப் பக்கத்திற்கு,அடுத்தப் பக்கத்திற்கு என்று ஐந்து நிமிடத்தில் முப்பது பக்கங்களுக்கு மேல் கடந்து விட்டாள்.

சுடலைமாடன் வாத்தியார் கையில் மூங்கில் பிரம்புடன் இறுகிய முகத்தோடு நுழைந்தார்.அதுசரி அவர் எப்போது சிரித்த முகமாய் இருந்திருக்கிறார்? இன்று மட்டும் இறுகிய முகத்தோடு வர.மூக்கு கண்ணாடியை சரிசெய்து கொண்டார்.அப்போது மூக்கும் மேலுதடும் மேல்நோக்கி குவிவதை அவரால் தடுக்கமுடியவில்லை.அது பார்ப்பதற்கு நாயைக்கண்ட பூனை வழித்துக்காட்டுவதுபோல் இருந்தது.சிரிப்பைத்தாண்டி பயமும்,கோபமும் சேர்ந்துகொண்டு வெறிகொண்ட நாய் வேட்டையாட முயலைத் துரத்துவது போல முருகம்மாளைத் துரத்தின.

“இன்னக்கி பரிச்சன்னு சொன்னம்லா எல்லா பயலுவளும் படிச்சிட்டு வந்தியளா?என்னல”

“…….”

அதுக்கு ஏம்ல வெட்டப்போற ஆடு மாதி முழிக்கிய? வாயத்தொறந்து சொல்லுங்கல”

“படிச்சிருக்கோம் சார்”

“உங்க மூஞ்சியள பாத்தா படிச்சமாதி தெரியலியே.செரி செரி இந்த பீரிடு முழுசும் கணக்கு போட்டுப் பாருங்க.கடேசி பீரிடு தமிழ்வாத்தியார் வரலல்லா அப்ப பரீட்சய வச்சிக்கிடலாம்.எதுனா சந்தேகம்னா கேளுங்க”என்று மூக்குக் கண்ணடியை கழட்டியவாறே கூறினார்.வலக்கை இடப்புற அக்குளை சொறிந்தது.

தூக்கி வாரிப்போட்டது முருகம்மாளுக்கு.துரத்திக் கொண்டிருக்கும் பயத்தை இந்த பாடவேளையோடு துரத்திவிடலாம் என்று எண்ணினால் இன்று முழுவதும் அதற்கு இறையாகும்படி செய்துவிட்டாறே என்று விசனித்துக் கொண்டாள்.

பக்கம் பக்கமாய் புரட்டப்பட,மெல்லிய தொடர்ச்சியான இரைச்சலோடு அந்த பாடவேளையும் முடிந்தது.அறிவியல் பாடவேளை அன்று எந்த பதற்றமுமின்றி கடந்தது.மதிய உணவுக்கான மணி அடிக்கப்பட சத்துணவு கொடுக்கும் இடத்திற்கு சென்றனர்.

சோறும் பருப்புக்கறியும் வாங்கிக் கொண்டனர்.சோறு புழுங்கிய வாடையாய் இருந்தது.அரிப்பு வைத்து அரித்தாலும் பருப்பின் சிறு துணுக்கைக் கூட கண்டுபிடிக்கமுடியாது.பருப்புக்கறி என்று சொல்வதைவிட மஞ்சள் வெந்நீர் என்று சொன்னால் பொருத்தமாயிருந்திருக்கும்.அதுவும் இரண்டு கரண்டிக்குமேல் சோறும்,ஒருகரண்டிக்குமேல் கறியும் ஊற்ற மாட்டார்கள்.உள்ளூர்க்காரியான பக்கத்து பெஞ்ச் மரகதம் வீட்டிலிருந்து கொண்டுவந்த ஊறுகாயும்,எள்ளுத்துவையலும் தொட்டுக்கொள்ள அத்தனை ருசியாய் இருந்தது.

உண்ட மயக்கம் தெளிய எல்லோரும் வேப்பமர நிழலில் அமர்ந்து அரட்டை அடிக்கத்தொடங்கினர்.சிறிது நேரத்திற்குள் பி.இ.டி வாத்தியார் மைக்கேல் மைதானத்திற்கு வரும்படி அழைத்துவிட்டிருந்தார்.எல்லோரும் வரிசையாய் மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“அப்பிடியே சோத்து சட்டிய முழுங்கிட்டு அசைய முடியாம வர்றதப் பாரு.ஏ ஆத்தா காவியா நீ இன்னைக்கி ஆசனம் பண்ணிருவியா”என்று வழக்கம் போல குறும்பு பேச்சுடன் ஆரம்பித்தார் மைக்கேல் வாத்தியார்.

“செரி இன்னைக்கு நம்ம ஒரு அஞ்சு ஆசனம் பண்ணி பாப்போம் சரியா.முதல்ல பத்மாசனம் எப்டி பண்றதுனு பாக்கலாம்.எல்லாரும் வருசையா ஒருத்தொருக்கொருத்தர் ரெண்டடி இடவெளி விட்டு உக்காருங்க பாப்போம்”

எல்லோரும் அந்த பெரிய வாதமடக்கி மரநிழலில் அமர்ந்தனர்.

பத்மாசனம்,தனுசிராசனம்,பச்சமோத்தாசனம்,சவாசனம் என்று தொடர அருகில் செய்பவர்களின் உடல்மொழியைப் பார்த்து ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டனர்.தூரத்தில் இடி இடிக்கும் ஓசை கேட்டது.சிறிது நேரம் எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து பொன்னியின் செல்வன் கதையை போனவாரம் விட்டதிலிருந்து தொடங்கினார்.

வந்தியத்தேவன் குதிரையில் விரைந்து கொண்டிருந்தான்.

இடியும் மின்னலும் வெகு சமீபத்தில் உணரப்பட எல்லோரும் அவசர அவசரமாக வகுப்பறையை நோக்கி ஓடினர்.கோடைமழையும் அவர்களை வேகமாக துரத்திவந்து வாசலில் நின்று கூப்பாடு போட்டது.

வகுப்பறைக்குள் தனியாக அமர்ந்திருந்தார் சுடலைமாடன்.மழை அழுது தீர்த்துக்கொண்டிருந்தது.பரீட்சை ரத்தாகிவிடும் என்று சந்தோசம் தாங்கமுடியவில்லை முருகம்மாளுக்கு.வாத்யாரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் ஒருசேர வெடித்தன.சிறிது நேரம் அமைதி குடிகொண்டது.மழையின் ஓலம் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது.அமைதியைக் கலைத்தது அவர் குரல்,

“செரி நாளைக்கு மொத பீரிடே பரிச்ச சரியா.இப்ப எல்லாரும் இன்னும் நல்லா போட்டு பாருங்க.நாளைக்கு பெயில் ஆவுத பயலுவ எல்லாம் ஒரு வாரம் முட்டாங்கால்ல தான் நிக்கணும்” என்று கூறிவிட்டு கொண்டுவந்திருந்த புத்தகத்திற்குள் புதைத்துக் கொண்டார் தன்னை.

தொடர் மணி அடிக்கப்பட வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.வழியெங்கும் உள்ள மரங்கள் நன்றாய் குளித்துவிட்டு வழியில் செல்வோருக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தன.

முருகம்மாளின் சந்தோசம் மெல்ல விலக திரும்பவும் வேட்டை நாய் துரத்த ஆரம்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.