இரண்டு விரல் தட்டச்சு

Rem Mod 1 016

நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ஒரு நாற்காலியை எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கவேண்டும். கொஞ்சம் அதிகப்படி சாய்ந்தால் அப்படியே பின்னால் விழ வேண்டும். அப்பா அலுவலகத்தில் ஒரு  மகா தைரியசாலிதான் அதில் உட்கார்ந்திருக்க வேண்டும். அப்புறம் ஒரு நாள் ஒரு பெரிய ஜாதிக்காய்ப்பலகை பெட்டியை இருவர் தூக்கி வந்து, “இதை எங்கே வைக்கவேண்டும்?” என்று கேட்டார்கள்.

“என்னது?” என்று அம்மாவும் நானும் கேட்டோம்.

“தெரியாது. சார்தான் கொண்டு போய் வைச்சுட்டு வரச் சொன்னார்.”

மேஜை மீது வைக்கச் சொன்னோம். கனமாகக் கனத்தது. அவர்கள் போனபிறகு நான் ஒரு ஸ்குரூடிரைவர் கொண்டு பெட்டி மேல் பலகையை எடுத்தேன். உள்ளே ஒரு டைப்ரைட்டர்.

அதை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் குழம்பினோம். அப்பா வந்தபிறகு பெரிய ஜாதிக்காய்ப்பலகை பெட்டி வந்ததைச் சொன்னோம். தேவையே இல்லை. “நான்தான் வாங்கினேன்,” என்றார்

“இப்படி பழைய சாமானாக வாங்கி வீட்டை அடைக்கறேளே?” அம்மா கேட்டாள்.

“புது டைப்ரைட்டர் ஐநூறு ரூபா. இது நாப்பதஞ்சு.”

மலிவுன்னு உபயோகமில்லாததை வாங்கி என்ன செய்யறது?”

“இது ஒண்ணு வீட்டிலே இருந்தா நிறையப் பிரயோசனம் உண்டு’”

அம்மா அதற்கு மேல் பேசவில்லை. ஆனால் அவளுக்கு ஏதோ தோன்றியிருக்கிறது. டைப்ரைட்டரை மட்டும் அல்ல, கண்வன் வாங்கிய இந்த ஏல சாமான்களும் தூரப் போட்ட சாமான்களுமாக வீட்டை நிரப்புவது பயமெழுப்பியிருக்கிறது.

அப்பா அவசரப்படவில்லை. ஆற அமரப் பெட்டியை இரவில் திறந்தார். “அட, திறந்தே இருக்கே!” என்றார்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு மெல்ல டைப்ரைட்டரை பெட்டியிலிருந்து எடுத்து மேஜை மீது வைத்தார். அது ரெமிங்டன் ரேண்ட் 14 என்று பின்புறத்தில் குறித்திருந்த்து. இப்போது மேஜையை டைப்ரைட்டர், பெட்டி இரண்டும் சேர்ந்து அடைத்தது.

“ஸ்குரூடிரைவர் கொண்டா” என்றார். பெட்டியைப் பலகை பலகையாகப் பிரித்து கொல்லைபுறத்தில் போடச் சொன்னார். அந்தப் பெட்டி ஆணி ஸ்குரூ இல்லாமல் செய்யப்பட்டது! அப்பா ஒரு தாளை டைப்ரைட்டரில் பொருத்தித் தட்டச்சு செய்ய ஆரம்பித்தார்.

”நீ எப்போ கத்துண்டே?” என்று நான் கேட்டேன்.

“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”

“நான் கொஞ்சம் அடிக்கிறேன்.”

“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”

இப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.

ஒரு நாள் அப்பா ஆபீசிலிருந்து திரும்பியவுடன், ”கிளம்பு. நாம ஒரு இன்ஸ்டிடுயூட்டுக்குப் போறோம்,” என்றார். எனக்கு ரயில்வே இன்ஸ்டிடுயூட் தெரியும். அங்கு இரு பெரிய அறைகள். ஒன்றில் ஒரு மிகப்பெரிய மேஜை மீது நிறையப் பத்திரிகைகள் இருக்கும். சுவரோரமாக அலமாரிகள். ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இன்னொரு அறை பில்லியர்ட்ஸ் ஆடும் இடம். அங்கு ஆடுபவர்கள் பில்லியர்ட்ஸ் நன்றாக ஆடுகிறார்களோ இல்லையோ விடாமல் புகை பிடித்த வண்ணம் இருப்பார்கள். அங்கு கிருஸ்துமஸ் வாரத்தில் அறைகள், வெற்றிடங்கள் எல்லாவற்றையும் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்திருப்பார்கள். பெரிய அறையில் மேஜை நாற்காலிகள் எல்லாவற்றையும் அகற்றி விட்டு நடன நிகழ்ச்சிக்குத் தயாராக ஏற்பாடு செய்து விடுவார்கள். வாத்திய இசைக்குழு பத்துப் பன்னிரண்டு பேர் வெராண்டாவில் அமர்ந்து வாசிப்பார்கள். அறையிலும், திறந்த வெளியிலும் சட்டைக்காரர்களும் சோல்ஜர்களும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவர்களுக்குத் தெரிந்த நடனத்தை ஆடுவார்கள். ஆங்கிலப் படங்களில் இந்த நடனக் காட்சி மிகவும் அழகாக இருக்கும்.  அன்று நான் சிறுவன். பல விஷயங்கள் புரியவில்லை. சற்றுக் கறுப்பாக உள்ள பெண்கள் என்னதான் இலட்சணமாக இருந்தாலும் அவர்கள் அருகில் சோல்ஜர்கள்  வர மாட்டார்கள். அவர்கள் நடனம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கும். அந்த டாமீஸ் என்பவர்கள் நம் சாதாரண சிப்பாய்களுக்கு சமம். ஆனால் நடனம் ஏற்பாடு செய்யப்பட்ட இரவில் அவர்கள் எங்கோ ஆகாயத்திலிருந்து இறங்கியது போலக் கறுப்பர்களை நடத்துவார்கள்.

ஆனால் அப்பா இரயில்வே இன்ஸ்டிடுயூட் பக்கம் போகவில்லை. மாரட்பள்ளி பக்கம் என்னை அழைத்துப் போனார். எனக்கு அங்கு தெருவுக்குத் தெரு தெரிந்தவர்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அப்பா மாரட்பள்ளி பக்கம் போனதில்லை. அப்பாவுக்குப் பணக்காரர்கள் பற்றி உள்ளூர நம்பிக்கை கிடையாது என்று இன்று எனக்குப் புரிகிறது. அவர் நட்புடன் பழகியவர் முகம்மது உஸ்மான் கடை உரிமையாளர் கௌஸ் முகம்மது. ஆனால் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பையன்கள் எல்லாரும் சமம். நான் அங்குப் பலர் வீட்டிற்குப் போயிருக்கிறேன்.

மாரட்பள்ளியில் மிக நன்றாகக் கட்டப்பட்ட வீடுகள் இருந்தாலும் மாடி வீடு என்று அன்று ஏதும் கிடையாது. எல்லாம் தனித்தனி வீடுகள். ஒரு வீடு கருங்கல்லால் கட்டப் பட்டது போலிருந்தது. எனக்கு அந்த வீட்டில் நண்பன் யாரும் கிடையாது. அப்பா அந்தத் தெருவில் திரும்பியபோது அந்தக் கருங்கல் வீட்டுக்கு அப்பா போகக்கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அப்பா கோடி வீட்டுக்குப் போனார்.

மாரட்பள்ளியில் நான் போன வீடுகள் எல்லாவற்றிலும் கேட் முன்னால் ஒரு கோலம், உள்ளே போனவுடன் ஒரு கோலம் என்றிருக்கும். இந்த வீட்டில் கோலம் இல்லை. உள்ளே எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகள் மிகவும் மங்கலாக இருந்தன. அப்பா “மிஸஸ் சிம்ஸன்,” என்று கூப்பிட்டார். யாரும் வரவில்லை. அப்பா மறுபடியும் கூப்பிட்டார்.

ஃபிராக் போட்ட பெண் ஒருத்தி வந்தாள். பொதுவாக நாங்கள் அதை கவுன் என்போம்.

“யார் வேண்டும்?”

“மிஸஸ் சிம்ஸன்.”

அந்தப் பெண் உள்ளே போனாள். சற்று நேரத்திற்குப் பின் ஃபிராக் போட்ட அம்மாள் .

ஒருத்தி வந்தாள். அந்த இருட்டிலும் அவள் நல்ல கறுப்பாக இருந்தது தெரிந்தது. முகத்தைத் தூக்கி, “யார்?” என்று கேட்டாள். அப்பா தன் பெயரைச் சொன்னார்.

“ஓ!” என்று அந்த அம்மாள் கத்தினாள். என் அப்பாவைக் கட்டிக் கொண்டாள். “எவ்வளவு வருஷங்கள் போய் விட்டன?” என்று சொன்னாள். “வா வா. உள்ளே வா? பையன் யார்? உனக்கு ஆண் குழந்தைகள் இரண்டு மூன்று செத்துப் போய்விடவில்லை?”

“இவன் ஒருவன் தங்கினான். நீ எப்படி இருக்கிறாய்?”

“வரவு செலவு அப்படி இப்படி இழுத்துக் கொள்ளும்.”

நாங்கள் உள்ளே போனோம். முதலில் ஒரு சிறிய அறை. அதில் ஒரு நாற்காலி, ஒரு ஸ்டூல், ஒரு சின்னக் கட்டில். கட்டிலில்  படுக்கையைச் சுருட்டி வைத்திருந்தது.

“இது உன் இடம், இல்லையா?”

“ஆமாம். நான் காவல்காரியாகவும் இருக்கவேண்டியிருக்கிறதல்லவா? ஏன், நீங்கள் முன்னாலேயே வரவில்லை? இதெல்லாம் உங்கள் தயவல்லவா?”

அப்பா அவள் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. ”உள்ளே போகலாமா?”

அடுத்த அறையில் எங்கள் வீட்டில் உள்ளது போலவே ஒரு பெரிய மேஜை. நான்கு பக்கங்களிலும் நான்கு டைப்ரைட்டர்கள். அப்போது யாரும் தட்டச்சு செய்யவில்லை.

“மார்கரெட்!” என்று மிஸ்ஸ் சிம்ஸன் கூப்பிட்டாள்.

நாங்கள் முதலில் பார்த்த பெண் வந்தாள்.

மிஸ்ஸ் சிம்ஸன் அவளிடம் சொன்னாள். “விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று சொல்.” அப்புறம் எங்களிடம் சொன்னாள். “எல்லாரும் பெண்கள்.. அவர்களுக்குத் தெரியவேண்டுமல்லவா?”

வரலாம் என்று உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. நாங்கள் மூவரும் உள்ளே போனோம். அதுவும் ஒரு சிறிய அறை. வரிசையாக மூன்று படுக்கைகள். கொசுவலை கட்டியிருந்தது. அதற்குப் பக்கத்து அறையிலும் மூன்று படுக்கைகள்.

அப்பா கேட்டார், “படுக்கையெல்லம் எதற்கு?”

””எல்லாரும் வெளியூர் பெண்கள். அவர்கள் எல்லாரும் இங்கேயே தங்கி செகரட்டேரியல் வேலை கற்றுக் கொள்ளலாம் மூன்றே மாதத்தில் முதல் பரிக்ஷைக்கு அனுப்புகிறேன். சாப்பாடு டிரெயினிங் எல்லாவற்றுக்கும் மாதம் நாற்பது ரூபாய். அதிகமா?”

”சரியென்றுதான் தோன்றுகிறது.”

”வெறும் பெண்கள் மட்டும்தான். அதில் சில சௌகரியங்களும் உண்டு, அபாயங்களும் உண்டு. நான் குடிகாரர்களின் பெண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. பார்த்தால் பரிதாபமாக இருக்கும். ஆனால் சேர்த்துக் கொண்டால் அப்பாக்காரன் பணம் ஒழுங்காகத் தரமாட்டான். குடித்துவந்து இங்கே என்னை மிரட்டுவான். ஒருவன் நான் பிராத்தல் நட்த்துகிறேன் என்று கத்தினான். நான் குடிகாரனோடு பாடு பட்டது போதாதா?” மிஸ்ஸ் சிம்ஸன் அழுதாள்.

”சிம்ஸன் பற்றித் தகவல் ஏதும் இல்லையா?”

”எனக்குப் பெயரைக் கொடுத்துவிட்டு எங்கோ ஓடிவிட்டான். அவன் கல்கட்டாவில் இருக்கிறானாம்.”

திடீரென்று மிஸஸ் சிம்ஸன் சிரித்தாள். “ஒரு ராஜா ஒரு மிஸஸ் சிம்ஸனுக்காக ராஜ்யத்தையே வேண்டாம் என்றானாம். இங்கே நான் வேண்டாம் என்று ஒரு ராஜா ஓடிப் போகிறான்..”

நாலைந்து பெண்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பா சொன்னார், “வா, நாம் முன்னறைக்குப் போவோம்.”

நாங்கள் டைப்ரைட்டர் அறையில் உட்கார்ந்தோம். ஒரு பெண் ஒரு தட்டில் பிஸ்கட்டுகள் கொண்டு வந்து வைத்தாள். அப்பா, “டீ காபி எதுவும் வேண்டாம்,” என்றார்.

மிஸ்ஸ் சிம்ஸன் என்னைப் பார்த்து, “பையா, இந்த டைப்ரைட்டர், டேபிள் எல்லாம் உன் அப்பா தயவால் முப்பதுக்கும் நாற்பதுக்கும் வாங்கியது. உன் அப்பா அந்த நாளில் உதவி செய்யாவிட்டால் நான் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பேன்.”

”சிம்ஸன் என்னுடன் வேலை பார்த்தானே?”

”என்ன பார்த்தான், என்னைத் தெருவில் விட்டான்.”

”அதெல்லாம் இப்போது எதற்கு?”

நாங்கள் கிளம்பினோம். “கட்டாயம் மறுபடியும் வர வேண்டும். பகல் வேளையில் கிளாஸ் நடக்கும்போது நீ வர வேண்டும்.”

நாங்கள் சிறிது தூரம் பேசாமல் வந்தோம். திடீரென்று அப்பா சொன்னார், “இந்த ஊர்லே பையங்களுக்கு இந்த மாதிரி ஒரு இன்ஸ்டிடுயூட் இல்லையே?”

”இங்கே சேர முடியாதா?”

அப்பா பேசாமல் நடந்தார். நான் கேட்டேன், “மிஸ்ஸ் சிம்ஸன் ஏதோ ராஜா

ராணின்னு சொன்னாளே?”

”அதுவா, இப்போ இங்கிலாண்டு ராஜா யார் தெரியுமா?”

”ஜார்ஜ் ஆறு.”

”அதுக்கு முன்னாலே எட்வேர்ட்னு ஒத்தன் இருந்தான். அவன் ஒத்தியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னான். அந்தப் பெண் பேர்தான் மிஸ்ஸ் சிம்ஸன். இங்கிலாண்டு பார்லிமெண்ட் கூடாதுன்னு சொல்லித்து. எட்வேர்ட் ராஜ்யமே வேண்டாம்னு போயிட்டான். அப்படித்தான் இப்ப இருக்கிற ஜார்ஜ் ராஜாவானார்.”

‘      ”அந்த அம்மா சொன்னபடி நீதான் அந்த டேபிள், டைப்ரைட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தயா?”

”ஆமாம். ஆனா அவ இன்ஸ்டிடுயூட்டை ரொம்ப நன்னா நடத்தறா.”

”சிம்ஸன் யாரு?”

”ஒரு கார்ட். அவளுக்கு ஒரு விஷயம் தெரியாது. சிம்ஸன் என் கிட்டே சொல்லிட்டுத்தான் போனான்.”

நான் எந்த இன்ஸ்டிட்யூட்லியும் சேரவில்லை. அப்பாவே இரண்டு மாதத்தில் செத்துப் போய் விட்டார். டேபிள், நாற்காலி, டைப்ரைட்டர் எல்லாம் போய் விட்டது. ஆனால் என் இரண்டு விரல் தட்டச்சுப் பழக்கம் போகவில்லை.

சென்னை, 4 – 6 – 2014

அசோகமித்திரன்

0 Replies to “இரண்டு விரல் தட்டச்சு”

  1. அசோகமித்திரன் நட்ட நடுவில் பாதியில் விட்டுவிட்டு சுற்றுலா போல அவருக்கு தோணுகிற பாதையில் ஒரு சுற்று சுற்றி விட்டு விட்ட இடத்திற்கு மீண்டும் வருவார்.
    நமக்கும் அவரது அந்த சுற்றுலா அனுபவம் வாய்க்க பெற்றாலும் விட்ட இடத்திற்கு அவர் மீண்டும் வந்து தொடரும் பொழுது நாமும் அவரைத் தொடர திறமை பெற்றிருக்க வேண்டும். அந்தத் திறமை+ பொறுமை இல்லையென்றால் அ.மி.யை வாசிப்பதில் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கப் பெறாது போவதற்கும் சாத்தியகூறுகள் இருக்கின்றன.

  2. எப்போதுமே உணர்ந்துகொள்ள ஒரு கதை இருக்கும்.,திரு.அசோகமித்திரன் அவர்களிடம்.
    ”இரண்டு விரல் தட்டச்சு”..சட்டென மெல்லத்தழுவும் உணர்வு.

  3. ரொம்ப நாள் கழிச்சுப் படிக்க சந்தோஷமாக இருக்கு! தட்டச்சுக் கற்றுக் கொண்ட அனுபவம் சுவாரசியம். வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம் தேவையானு தோணுது! 🙁

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.