இடுக்கி கோல்ட்

தாத்ரிக்குட்டி வாழ்ந்து முடிந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த அந்தத் தோப்பு, காலத்தின் புயல் வீசிச் சாய்ந்த தென்னை மரங்களும் நெருக்கடியான கனவுகளின் தாங்கொணாப் புழுக்கம் சுமந்த பெண்ணின் கண்ணீர் பெய்து பழுத்துப்போயிருந்த மாமரங்களும் சோபையுடன் நிற்க காட்சியளித்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிப்போய்விடும் என்னும் நிலையில், நாங்கள் அந்தத் தோப்பினூடே அவள் மிச்சம் வைத்துச் சென்ற தடயங்கள் இருக்கிறதா என்று தேடினோம். அவள் எப்பொழுதோ அவ்விடத்தை விட்டுப்போயிருந்தாள். அவளுக்குச் சாட்சியாக, அங்கே பாழடைந்து கிடந்த கிணறும் அவள் வழிபட்ட முழங்கால் அளவே உயரம் உடைய அம்பாளும் மட்டுமே இருந்தன. அம்பாளுக்கும் வேதனை தாங்கமுடியாததாக இருந்திருக்கவேண்டும். தலைகுப்புற சாய்ந்து கிடந்தாள். நான் ஓடிச்சென்று அதை நிமிர்த்தி வைக்க முயன்றேன். அகரன் ஓடிவந்து என்னைத் தடுத்தான். ‘ஏன் தொட்டாய்?’ என்று கண்டிப்பாகவும் அதே சமயம் கெஞ்சலாகவும் கடிந்து கொண்டான். சட்டென்று நான் கைகளை எடுத்துக்கொண்டேன். அதில் உயிர் இருந்ததைப் போல் இருந்தது. வானம் இருட்டிக்கிடந்த இடங்களில் நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்தன. உடன் வந்த கார்த்திகை அம்மாள், இயன்றவரை வேகமாக அந்தத்தோப்பிலிருந்து எங்களை வெளியேற்றவிரும்பினாள். அங்கிருந்து கிளம்புவதற்கான விருப்பமோ முனைப்போ என்னில் கொஞ்சம் கூட இல்லை.

thathrikuttiஅங்கே இருந்த குளம், தூர்ந்து போய் இருந்தது. சூழ்ந்திருந்த வாதுமை மரங்களும் நாவல் மரங்களும் பிசாசுகள் அமர்ந்திருந்தவை போல எங்கள் எல்லோரையும் உற்றுநோக்கிக் கொண்டிருந்தன. மூர்த்தி, அங்கே இருந்து கிளம்பும் அவசரத்தில் இருந்தான். நானும் அகரனும் தான் அங்கே முழுமையாக எங்களை உலவவிட்டு இருந்தோம். தோப்பின் எந்தப்பகுதியிலும், கால்வைத்து நடக்க இயலாத படிக்கு, பழுத்து முறிந்து கிடக்கும் கிளைகளும், உதிர்ந்த இலைகளும் ஓரடி ஆழத்திற்குக் கிடந்தன. மிகவும் கவனமாக நடக்கவேண்டியிருந்தது. தனிமையின் பூச்சிகள் கால்களுக்கிடையே பரபரத்தன. எனக்கோ, அங்கெல்லாம், தாத்ரிக்குட்டி அலைக்கழிந்த கால்தடங்களும் வேக அசைவுகளும் தென்பட்டதாய் இருந்தது. கொஞ்சம் குள்ளமான, மெத்தென்ற மார்புகளுடன், வரைந்தெழுதிய தீர்க்கமான கண்களுடன், மூங்கிலைப்போல வளைந்த தோள்களுடன், நீண்ட தூரம் பெருமூச்செறிய பயணித்த உறுதியான கால்களுடன் மல்லிகைப்பூக்களின் வாசனை சூழ, தூய்மையான வெள்ளை உடை சரசரக்க அவள் என் நினைவுகளில் நிறைந்திருந்தாள். அவள் தேடலும் பயணமும் எப்பொழுதும் ஆண்களின் இருப்பிடம் நோக்கி, அவர்கள் அயர்ச்சியில் சரிந்துகிடந்த மெத்தைகள் நோக்கியே இருந்தன. அந்த மெத்தைகள் தான், ஆண்களைத் தூண்டியெழுப்ப அல்லது சரணடையச்செய்ய சரியான இடம் என்று அவள் கண்டறிந்திருக்க வேண்டும். அப்படி என்ன, ஆண்களின் அன்பு விலைமதிப்பிலாததா என்ன?

ஆண்களின் அன்பில் அப்படி என்ன மாயரசம், இருக்கிறது? சில்வியா பிளாத் இப்படித்தான் தெட் என்ற கவிஞனின் அன்பிற்காகச் செத்துக்கிடந்தாள். இனி இருவருமாக வாழ்க்கையைத் திட்டமிட்டு, எந்தச் சச்சரவும் இல்லாமல் வாழவேண்டும் என்று அவனிடம் கூறி முயங்கி, கலவியில் உச்சம் பெற்று அவன் மார்பில் கிடந்திருக்கும் போது, அவன் சொன்னான், அவனுடைய புதிய காதலி, ‘கருவுற்றிருக்கிறாள்!’ என்றும் அவன் அவளுடன் அவள் விரும்பும் படி, கிராமத்திற்கு வரமுடியாதென்றும். சில்வியா ப்ளாத், செத்துப்போனதில் சிறிதும் எனக்கு உடன்பாடில்லை. தாத்ரிக்குட்டியும் அப்படித்தான் ஆண்களின் அன்பிற்காக இரவும் பகலும், காடும் மேடும், தெரிந்தும் தெரியாமலும், களைப்புடனும் ஆசையுடனும் கலையாகவும் வேட்டையாகவும் காமத்துடனும் பசியுடனும் அலைந்து கொண்டே இருந்தாள். அறுபத்திநான்கு ஆண்களின் காமத்தை உண்ட பிறகு தான் அவள் வேட்டையின் வியூகம் வெற்றியடைய சாதகமாக இருந்தது. அப்பொழுது அவள் தூக்கியெறியப்பட்டாள். அவள் மனிதப்பெண்ணே இல்லை என்று அருவெறுப்பாகத் தூக்கியெறியப்பட்டாள். இரவும், பகலும் தாண்டி, நீர்நிலைகள் மலைவெளிகள் காடுகள் தாண்டி அவள் விரட்டியடிக்கப்பட்டாள். அவள் தனக்கும் தன் எதிர்காலத்திற்கும் இடையே நீண்ட தூரத்தைக் கடந்து சென்ற போது அவளிடம் சோகமே இருந்திருக்காது என்று தோன்றும்படியான, கவர்ச்சியும் அழகும் அவள் நடையில் இருந்ததாக என் கற்பனை இருக்கிறது. அவளுடைய திட்டத்தை ஒற்றைப் பெண்ணாக அவள் நிறைவேற்றிக் கொண்டாள். தன்னை வஞ்சிக்கும் ஆண்களின் பாலியல் சூழ்ச்சிகளையும் அதற்கு ஆதரவாக வைத்திருக்கும் சட்டதிட்டங்களையும் சவாலுக்கு அழைப்பது தானே அவள் எண்ணம்.

யானை பழக்கியவனிடம் காமுற்றாள். யானையைப் பழக்கவும் கற்றுக்கொண்டாள். தன் தந்தையின் நண்பரிடம் காமுற்றாள். அவன் எழுந்திருக்க முடியாத காமநோயில் சாய்ந்தான். கதகளி கலைஞன் ஒருவன், தீவிரமாய் விரும்பிய கதாபாத்திரத்தால் பீடிக்கப்பட்டிருந்தபோது, தன் காமத்தைத் தின்றக்கொடுத்துப் பலியாக்கினாள். அரசனுக்கு, காமம் பெரிது என்று காட்டினாள். படகோட்டியிடம், நடு ஆற்றில், காமம் கொண்டு, அவள் உடலை இயக்கினாள். இது எதுவுமே ரசனையற்ற, தான் தோன்றித்தனமான காமமாக இல்லை. எல்லாமே வீழ்த்துதலும் இல்லை. விழித்துக்கொண்டனர் நிறைய ஆண்கள். அவளிடம் காமம் கொண்ட பிறகு, காமமே ஆசையிலாத அளவுக்கு நிறைவையும் உணர்ந்தனர். முழுநிலவின் அருகில் சென்று வந்ததைப்போல் பித்தம் உடலுக்கு ஏறி, பெண்ணைக்கண்டால் காத தூரம் ஓடினர். பெண் எனும் தீரவெளி சிலரை முழுமையாக்கி, யதார்த்தத்திலும் ஒற்றை இறகைப்போல உலவவிட்டது. எத்தனை கலைகள் அவள் கற்றிருந்தாள் என்று எவரும் முழுமையாக அறிந்திருந்தாரில்லை. முழுப்பொழுதும் உடனிருந்த தோழியரும் அறிந்தாரில்லை. சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை.

வீடு திரும்பும் வழியில், ஓர் ஆற்றின் மீது இருந்த பாலத்தைக் கடந்தோம். இன்னொரு ஊரில் கதக்களி வேடம் கட்டியிருந்த வாசுதேவனைப் பார்க்க, இந்த ஆற்றில் இறங்கித் தான் ஒரு நள்ளிரவில், தாத்ரிக்குட்டி சென்றிருக்கவேண்டும். வீடு திரும்பும் வரை, நானும் அகரனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் உடலுக்குள் ஒரு கிளர்ச்சி பெருவெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.

அன்றைய இரவு, அவன் தன்னுடைய வீட்டில் இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தான். நான் அகரனைச் சந்தித்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். என் ஆங்கிலக்கவிதை வாசிப்பு நிகழ்விற்கு அவன் ஒருமுறை மும்பை வந்திருந்தான். ஒரே நாள் நிகழ்வுப்பொழுதைக் கழித்துவிட்டு, அங்கிருந்தே அவசரமாக வெளிநாடு கிளம்பிச்சென்றான். பின் ஒரு முறை, மின்னஞ்சல் வழியாக என்னுடைய கவிதைகள் சிலவற்றை அனுப்பித்தரச்சொன்னான். அவ்வளவு தான். அதற்குப் பிறகு, முற்றிலுமாகத் தொடர்புகள் அறுந்து போயிருந்தது. இப்பொழுது, தாத்ரிக்குட்டி குறித்த ஆய்விற்காக, நான் தான் அவ்வூரில் கல்லூரிப்பேராசிரியாக வேலை பர்த்துவந்த அவன் உதவியை நாடினேன். அவன் தான் முழுப்பயணத் திட்டத்தையும் வகுத்திருந்தான். எங்குமே பின்னடைவு இல்லை. ஆனால், நான் தான் புனைவிற்கும் இறந்தகால வரலாற்றுக்கும் இப்பொழுதைய என் கற்பனைக்கும் இடையில் அலைக்கழிந்து கொண்டிருந்தேன். உடலில் இனம்புரியாத உஷ்ணம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

அவன் வீடு, பாதுகாக்கப்பட்ட காட்டின் மத்தியில், உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் இருந்தது. அகரனின் அப்பா, வனத்துறையில் பெரிய பதவியில் இருந்தார். சலுகைகளை அளவுக்கதிகமாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்த ஓர் ஆளாகவே அகரன் தன்னைக் காட்டிக்கொள்ளாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வழியெங்கும் கதவுகள் தானாய்த் திறந்தன. கதவருகே ஓடி வந்து வேலையாட்கள் என்ன செய்யவேண்டும் என்று நின்றனர். அகரன், எந்த மிதப்பும் இல்லாமல் அவன் கனமானதொரு கல்லைப் போலக்கிடந்தான். நான் அதிகமான சிந்தனையின் களைப்பில் இருந்தேன். வீட்டில் அவன் அம்மாவும் அப்பாவும் வரவேற்பறையிலேயே தேநீர் கொடுத்து, நலம் விசாரித்து எங்கள் அறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு தனியறையின் குளியலறையில் குளித்து உடைமாற்றவும் பசித்தது. சில இட்லிகள் தன்னுணர்வின்றி வயிற்றில் இறங்கின. உடல் மட்டும் நிலைகொள்ளாமல் தவித்த வண்ணம் இருந்தது. மூர்த்தியிடம் இருந்த பதட்டம் போய், தான் அவன் ஆசுவாசம் அடைந்திருந்தான். அவன் கையில் இப்பொழுது ஒரு பீர் பாட்டில் இருந்தது. முழுநாளும், அவன் பதட்டத்துடன் இருந்ததற்கான காரணத்தை உணர்ந்தேன். மூர்த்தி, மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியர். யசோதா என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தான். அவனும் தாத்ரிக்குட்டி ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்ததால் உடன் வரவேண்டுமென்று அடம்பிடித்தான். அவன் கவனம் முழுதும், அவன் அன்றைய மாலையில் அருந்தப்போகும் மதுவிலேயே இருந்தது. அருந்தாத பொழுதும் அவன் மதுவையே நினைத்துக்கொண்டிருந்தான் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் முந்தைய நாட்கள் பயணம் முழுவதுமாகச் சேர்ந்திருந்த காமம் குறித்த கற்பனைகள் மதுவாகச் சேகரமாகி என்னில் தளும்பிக் கொண்டிருந்தது. என் காதுமடல்கள் கொதித்து இருந்தன. தோள்கள் குழைந்து கிடந்தன. மார்புகள் திமிறிக்கிடந்தன. தனிமையில் என் அறையில் சென்று படுத்துக்கிடந்தால் போதும் என்றிருந்தது. முழுப்பயணமும் உடன் வந்து சிரமங்கள் மேற்கொண்டிருந்த அகரனை அப்படியே விட்டுச்செல்ல, சங்கடமாக இருந்தது. மொட்டை மாடிக்கு வந்தோம். விநோதமான மிருகங்களின் குரல்கள் எல்லாம் கேட்டன. சுற்றிலும் இருட்டில், நிலவின் ஒளியினூடே மலை உருவங்கள் தெரிந்தன. வளர்பிறை நிலவு. கொஞ்சம் குளிராய் இருந்தது. மூர்த்தி, மாடியின் சுவர்க்கட்டையில் ஏறிப்படுத்திருந்தான். அவ்வப்பொழுது எழுந்து ஒரு மிடறு பீர் அருந்திவிட்டுப் படுத்துக்கொண்டான். அகரன், என் அருகே வந்து தோளைத்தட்டி, மாடியின் இன்னொரு புறத்திற்குக் கூட்டிச் சென்றான். தன் சட்டைப்பாக்கெட்டிலிருந்து, ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். கொஞ்சம் பொடிகளாய் உதிர்ந்திருந்த தழையை நுனிவிரலால் அள்ளி, ஒருவெள்ளைக்காகிதத்தில், வைத்துப் பீடியைப் போல் சுருட்டினான். அவன் கைவிரல்கள் இடையே, அவன் விரல் அசைவுகள் கலைவெளிப்பாடு கொண்டிருந்தன. தீக்குச்சியை எடுத்துப் பற்றவைத்து, எனக்குப் புகைக்கக் கொடுத்தான். புகை, உள்ளே இறங்கி சுவாசக்குழாய்களின் கிளைகளூடே வேகமாய்ப் படர, தலை குளிர்ந்தது. உடல் இன்னும் உஷ்ணமாகியது. தொடைகளுக்கு இடையே வேதனை விழிப்புற்றது. தழையின் புகை, எண்ணற்ற காடுகளையும், காட்டின் சத்தங்களையும் இருளின் நிகழ்வுகளையிம் மனிதர்கள் இல்லாத வெளியில் நிகழும் அமானுஷ்யங்களையும் என்னுள் நிரவத்தொடங்கியிருந்தது.

மொட்டை மாடியில் இருவரும் சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தோம். மூர்த்தியும் சில முறை புகை உட்கொண்டதும் அங்கேயே தரையில் படுத்து அயர்ந்து உறங்கிப் போனான். அகரன், என்னை உடன்வரக்கையசைத்துவிட்டு, படிகள் வழியாகக் கீழிறங்கி அவன் அறைக்குள் நுழைந்தான். நுழைந்த கணம் தாமதியாது நான் அவன் மார்பில் சாய்ந்தேன். எந்தப்பதற்றமும் இன்றி அவன் என்னை மெல்ல அணைத்துக்கொண்டு, தலையிலும் நெற்றியிலும் இதழிலும் முத்தமிட்டான். மெல்ல என்னைத் தன்னிடமிருந்து விடுவித்தான். அந்த அறையைச் சுற்றிலும் முழுதுமாய்க் கவனித்தேன். மிகவும் தூய்மையாக, வெளிர்சிவப்பு நிறத்திரைகள் இரு சன்னல்களிலும் தொங்கின. காட்டை நோக்கியிருந்த சன்னல் திரையுடன், சன்னலை ஒட்டியிருந்த மேடையும் மூடி அது ஒரு சிறு அறையைப் போல, மெத்தையிடப்பட்டு இருந்தது. அங்கே படுத்துக்கொண்டு, காட்டையும் அதனூடே பாயும் ஆற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கலாம். மெத்தையில் வெளிர் சிவப்பு நிற விரிப்பு ஒன்று எந்த அழுத்தமும் இன்றி குழைவாய்க் கிடந்தது. ஏற்கெனவே, புகைமூட்டம் கொண்டு, உடல் தரைக்குச் சற்று மேலே மிதப்பதைப் போல உணரத்தொடங்கியிருந்தேன். சுவரில் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதில் அகரனுடன் அவனுடைய தங்கை போல் ஒருத்தி அவன் தோள்களில் சாய்ந்திருக்க, இருவரும் முகம் முழுக்கச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தனர்.

‘தங்கை தான்!’ என்றான் அகரன்.

‘இப்ப எங்க இருக்காங்க. வீட்டுல எங்கயும் பாக்கலியே, நான்!’ என்றேன்.

‘ம்..சூசைட் பண்ணிக்கிட்டா!’ என்றான்.

அவன் முகமெங்கும், இடுக்கி கோல்ட் தழையின் புகையும் மயக்கமும் கொடிபோல படர்ந்திருந்தது. இந்தக் கஞ்சாவின் புகை நறுமணம் தோற்றமாயைகளை விட நுட்பமான நினைவு விவரங்களைக் கொண்டு வரும். இது தான் அதன் தனிச்சிறப்பு. அதைவிட, இடுக்கி கோல்ட் எனப்படும் தழை, அது குடித்து வளர்ந்த நீர்வெளிகளை எல்லாம் நினைவிற்குக் கொண்டுவரும்.

‘எப்ப..?’

‘ஆறு மாசம் ஆச்சி.’

klimptகாட்டின் பக்கம் இருக்கும் சன்னலின் திரையை விலக்கி, அதன் வழியே வெளியே பார்த்தான். ஆறொன்று சன்னல் அடியிலிருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல சரசரவென நெளிந்து எதிர்த்திசைநோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. சில நொடிகள். திரைகளை மீண்டும் விட்டுவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தான். புகை, என் தலைக்குள் ஒரு பந்தைப்போல உருண்டு என்னைக் கிளர்த்தியிருந்தது. ஒரு சொகுசு வாகனப்பயணம் போல காற்றின் வெளியில் நான் மிதந்து கொண்டிருந்தேன். உடலெங்கும் இன்பம். அவன் அருகில் அவனைத் தொடாமல் உட்கார்ந்தேன். மெத்தையிலிருந்து தொங்கும் தனது இடது கால் கட்டை விரலுடன் இணைந்த விரலால், என் வலது காலில் சுண்டுவிரலைக்கவ்வி இழுத்தான். காமத்தின் நரம்புகளைச் சுண்டிவிட்டது போல உடலெங்கும் ஒரு மெல்லிய அதிர்வு. இன்பம் என்றால் அப்படியோர் இன்பம். நல்ல விளையாட்டாக இருந்தது.

‘எப்படி…?’

‘அதுவா…?’ முழுதுமாய்ப் புகைத்தத் துண்டை தரையில் எறிந்து, வலது கால் கட்டை விரலால் நசுக்கி அணைத்தான்.

‘ம்…. அப்படி ஒரு மழ அன்னைக்கு. இந்தவீடே அசைஞ்சா மாரி ஒரு உணர்வு. அப்பா வெளி மாநிலத்திற்கு அஃபிசியல் டூர் போயிருந்தார். ஜமுனாவோட ஃப்ரெண்டுக்குக் கல்யாணம் அடுத்த நாள். ரெண்டு நாளாவே கேட்டுக்கிட்டு இருந்தா. அப்பா ஓகே சொல்லிட்டாரு. அன்னைக்கு அப்பா ஊர்ல இல்லாததுனால, இந்த வீட்டுல தனியா இருக்க அம்மாவுக்கு பயமா இருந்துதோ என்னவோ, வேணாம்னு மறுத்துட்டாங்க. ஜமுனாவுக்கு அப்படி ஒரு பிடிவாதம். கொஞ்ச நேரம் அடம்பிடிச்சிருக்கா. அம்மா முடியாதுன்னா சொல்லிருக்காங்க. கீழே இருந்து இந்த ரூமுக்கு வந்தவ சில நிமிடத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டா. அன்னைக்கு, அவ கல்யாணம்னு சொல்லிக்கிட்டு இருந்தாளேன்னு என் மனசுல ஓர் ஓரத்துல. காலேஜ் ஃப்ங்சன் முடிஞ்சி, அதுனால வீட்டுக்குப்போவோமின்னு நான் வந்துட்டேன். சில நிமிடம் தாமதமா நான் இந்த ரூமுக்குள்ள வந்துட்டேன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சு. இந்தா இந்த இடத்துல தான் கயிற அறுத்து அவ உடம்ப இறக்குனேன்.’

மீண்டும் புகைத்தான். அவன் கண்களிலிருந்து நினைவுகள் படங்களைப் போல வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்தவனைப் போல, அவன் பார்வை செல்லும் திசைகளையே தொடர்ந்த படி, பேசிக்கொண்டிருந்தான்.

‘அம்மா ஓடிவந்தவங்க, அதிர்ச்சியில பேச்சு மூச்சு இல்லாம ஆயிட்டாங்க. மயக்கம் தெளிஞ்சியும் அவங்களுக்குப் பேச்சு வரவே இல்ல. ஜமுனாவுக்கு அப்படி என்ன ஒரு பிடிவாதம்னு யோசிச்சேன். எங்கயாவது எழுதி வச்சிருக்காளான்னு தேடுனேன். ரொம்ப குழப்பமா இருந்துச்சி. ஒரு மாசம் என்னென்னவோ காரணம் தோணுச்சி. ஏன்னா அப்படியான ஷார்ட் டெம்பர் பொண்ணே இல்ல.’ எழுந்து போய் சன்னல் வழியே வெளியே பார்த்து, அமைதியாகிவிட்டு வந்தான்.

இப்பொழுது அவன் முகம், கண், நாசி , உதடு என உறுப்புகள் இருந்த இடம் எல்லாம் உருவழிந்து புகையின் தூபமே பரவி இருந்தது போல இருந்தது.

‘ஜமுனாவோட ஃப்ரெண்ட், அரவிந்தன் ஒரு நாள் காலேஜுக்கு என்னைய பாக்கவந்தான். அவன், அவள காதலிக்கிறதா ப்ரொபோஸ் பண்ணியிருக்கான். இதுக்கு இடையில, ஃப்ரெண்டு கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் சேந்து போறதா ப்ளான் பண்ணியிருக்காங்க. அவனுக்குப் பதில அன்னைக்கு ராத்திரி பயணத்துல அவ சொல்லுறதா சொல்லியிருக்கா. கல்யாணம் முடிஞ்சி ரெண்டு நாள், அவங்க ஃப்ரெண்டு மாலினியோட கொச்சின் வீட்டுக்குப் போய் தங்கியிருந்துட்டு வர திட்டமும் இருந்துருக்கு.’

மெத்தையில் அயர்ந்திருந்தான்.

‘கதவ சாத்திட்டுவாயேன்.’

அவன் குரல் என்னை மயக்குவதாக இருந்தது. ‘அம்மாவுக்குப் பேச்சு வரவே இல்ல. அப்பாவோட ஃப்ரெண்டு டாக்டரு தான் ஒரு ஐடியா சொன்னாரு. டெய்லி, தோணும்போது எல்லாம் ரெண்டு பேரும் செக்ஸ் வச்சிக்குங்கன்னு. எவ்வளவு தீவிரமா முடியுமோ அவ்வளவு தீவிரமா. நாங்க இந்த வீட்ட காலி பண்ணி, எங்க பெரியம்மா வீடு திருநெல்வேலில இருக்கு. அங்கப் போயிட்டோம். பழக்கம் இல்லாத வீடுன்னதுனால, எல்லோருக்குமே தனியா படுக்க என்னவோ போல இருந்துச்சி. ஹால்ல அம்மா, அப்பா நான்னு மொத்தமா படுத்துக்கிடப்போம். நான் தூங்குறவரைக்கும் காத்திருப்பாங்க. தூங்குற மாரி என்னால நடிக்கத்தான் முடிஞ்சிது. அம்மாவும் அப்பாவும் செக்ஸ் வச்சிக்கிறத தினமும் உணர்ந்தேன். இன்பத்த ஒரு வலியோட அளவுக்குக் கொடுக்குறது தான் மருந்து போல’

அகரனின் கண்களின் மையத்தில் தீப்பொட்டுகள் போல அந்தக்காமத்தின் தீண்டல் தோன்றி மறைந்தது. என்னை இறுக்கி அணைத்தான். அவன் உடல் சில்லென்று குளிர்ந்து, நனைந்திருந்த உணர்வைக் கொடுத்தது.

எழுந்து இன்னொரு சிகரெட்டைத் தயார் செய்து வந்தான். என் உடல், புகை செல்ல செல்ல எப்படியான ஒரு காற்றுக்குமிழியாகிறது என்று அறியும் தீவிரமான ஆர்வத்தில் நான் அதை அனுபவித்துக் கொண்டே இருந்தேன்.

‘இந்த வீடு கட்டும் போது, இந்த ரூமு யாருக்குன்னு எப்பவும் சண்டை வரும். அந்த சண்டையில, பல தடவ, அவ அழுதுருக்கா. அவள விளையாட்டா அழவைக்கிறதுல எனக்கு எப்பவும் ஒரு சுகம் இருந்துச்சி. இந்த சன்னல் வழியா தெரியிற, ஆத்தப் பாக்குற சுகத்துக்காகவே ரெண்டு பேரும் விட்டுக்கொடுக்காம சண்ட போட்டோம். சுவர் எழுப்பும் போதும், சிமெண்ட் பூச்சுக்கும் நான் தான் தினமும் வந்து தண்ணி அடிச்சி நனைச்சேன். அப்ப, இந்த ரூமு அவளுக்குக் கொடுத்துரனும்னு மனசுல நெனைச்சிட்டேன். அவக்கிட்ட சொல்லாம இருந்து சொல்லனும்னு காத்துக்கிட்டு இருந்தேன். அவ சாகும் போது கூட வீடு முழுசா முடியல.’

அகரன் அறையில் அங்கும் இங்கும் நடந்தான். என் உடலின் வழக்கமான நாகரிகமான பாவனைகள் எல்லாம் கழண்டு போய், சிறகுகள் துளிர்விட்டதைப் போல் உணர்ந்தேன். தலை, கழுத்தின் மீது ஓர் இலகுவான அசைவுடன் இருந்தது. கைகளால், உடலை அங்கங்கே நீவி விட்டேன். கால்களை அகட்டி, சுவரில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தேன். அகரனும் வந்து உட்கார்ந்தான். அவன் மெத்தையில் நீண்ட நேரம் ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தவன், சில புகைத்தல்களுக்குப் பின் அப்படியே சரிந்து போனான்.

நான் மெல்ல எழுந்து, காட்டைப் பார்த்த சன்னலை நோக்கி நடந்தேன். அதன் அறை போன்ற பகுதியில் நுழைந்து அதன் மெத்தையில் அமர்ந்து , காட்டை நோக்கினேன். ஆறு மிகவும் அழகாக, வெள்ளி நீராய் ஓடிக்கொண்டிருந்தது. அதில், தூரத்திற்குச் சம்பந்தமில்லாத பிரமாண்டமுடன் ஒரு பெண் இடது புறமிருந்து, வலது புறம் நோக்கி, ஆற்றில் இறங்கி நடந்து கொண்டிருந்தாள். என் உடலெங்கும் சிலிர்த்து அடங்கியது. பயம் ஒன்று அடிவயிற்றைக் கவ்வியது. கண்களை நவைந்து கொண்டு மீண்டும் ஒரு முறை உற்றுப்பார்த்தேன். ஆமாம், திறந்த மார்புகளுடன், இரு கைகளாலும் நீர்ப்பரப்பை அளைந்தபடி, மிகவும் நிதானமாக ஆற்றின் ஆழம், பெருக்கு பயமின்றி நடந்து சென்றாள். ‘அகரன்..!’ என்று அவனை அழைக்க முயன்றும், குரல் தொண்டையிலிருந்து எழாமல் திணறினேன். அவன் பக்கம் திரும்ப முயன்ற போது, ஏதோ ஒரு கை என்னைத் திரும்பவிடாமல், அதே சமயம் அன்புடன் தடுத்தது. என் அருகில், ஜமுனா, தன் முலைகள் மடங்கியிருந்த என் கை மீது அழுந்த, மூச்சுமுட்டத் தீவிரமாக என்னை அணைத்தாள். ஒரே சமயத்தில் இன்பமாயும் பயமாயும் இருந்தது. என் இதழைக்கவ்வி, பிரியத்துடன் முத்தமிட்டாள். அப்பொழுது அவள் கண்களில் நிறைந்து கிடந்த ஏக்கம் அந்த நதியைப் போல நீர்மநிலையில் இருந்தது. நான் அவளிடமிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடியும் என் உடலை அவள் பிடியிலிருந்து மீட்கமுடியவில்லை. உடலெங்கும் புகை நிறைந்ததால், அது ஒரு கனமான, திடமான பொருளாகத் தரையில் அடக்கமுடியாமல், புவி ஈர்ப்பு விசையை இழந்தது போன்று என் எண்ணத்திலிருந்தே நழுவி, வழுவிப் போய்க் கொண்டிருந்தது. என் பிடிவாதத்தால் கூட, என் உடலைக் கட்டுப்படுத்த முடியாமல், முழுதும் ஜமுனாவின் பிடியில் இருந்தது. எண்ண ஆழத்தில், அந்த அணைப்பின் மீது எனக்குத் தீவிர ஆர்வமும் இருந்ததாகப் பட்டது. அவள் உடுத்தியிருந்த, சிவப்பு நிறப்பூக்கள் கொட்டியிருந்த வெள்ளை உடை மெத்தென்று இருந்தது. உடலுக்குள் உணர்ந்த இன்பத்தின், வலியில் கொஞ்சம் கொஞ்சமாக என் குரல் செத்துப்போயிருந்தது. அப்படித்தான், என்னிடமிருந்து முற்றிலும் பேச்சு இல்லாமல் போனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.