தந்திப் புரட்சி  – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்

அத்தியாயம் ஒன்று

எழும்பூரில் இருந்த பழைய காங்கிரஸ் காரியாலயத்திற்கு நான் சுதந்திரம் கிடைத்த பின்பு ஒரு நாள் சென்றிருந்தேன். இடுங்கிய படிகளிலும் இருண்ட அறைகளிலும் ஏறி இறங்கிப் பார்க்கும் பொழுது எங்களுடைய பழைய அறை நினைவு வந்தது. மர மேஜை ஒன்றை விலக்கி அதன் சிறு கதவைக் கண்டுபிடித்தேன். அதன் பின்னால் ஆறுமுகத்தின் சிரிப்பொலி கேட்பது போல பிரமை. கதவைத் திறக்காமலே திரும்பி வந்து விட்டேன்.

*

காங்கிரஸ் காரியாலயத்தில் மின்துறை இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தார் என் அப்பா. நான் பத்தாவது படித்த பின்னால் அப்பாவின் கடையில் வேலை பார்த்து வந்தேன். அப்பா அந்த ஐந்து நாட்களுக்கு தேச பக்தராக மாறி, கட்டைக் குரலில் தேசப் பக்திப் பாட்டுக்கள் பாடி என்னைச் சேர்த்து விட்டார். “நாலு படித்தவன் வருவான். அவனுடன் தொற்றிக் கொள்,” என்பதே அப்பாவின் வாழ்க்கை அறிவுரை. அவர் பெரும் தீர்க்கதரிசி. நான் முகத்தில் எண்ணை வழிய ஓட்டுப் போட்ட சட்டையுடன் “மலையாளி” என்று பொதுவாக அழைக்கப்பட்ட நம்பியாரைத் தான் காரியாலயத்தில் முதலில் பார்த்தேன். அவர் முகத்தில் என் அழகைப் பார்த்து எந்த மாற்றமும் இல்லை. நேராகக் கொண்டு போய்  மேற்சொன்ன அறையில் உள்ளே தள்ளினார். “நான் வருவேன்,” என்று உறுதியளித்து விட்டு மறைந்தார். அறையில் ஜன்னல்கள் இல்லை. “சர்க்கார் உளவாளிகள் பார்த்து விடுவார்கள்,” என்கிற முட்டாள்தனமான காரணத்தைக் காட்டி எங்களுக்கு இந்த மட்டகரமான அறை அளிக்கப்பட்டது பின்னால் தெரிந்து கொண்டேன். காற்றோட்டமே கிடையாது.

ஓரத்தில்  ஒரு மின்விளக்கு எரிந்தது. அதன் வெளிச்சத்தில் நான் அந்த வினோதமான அறையில் இருந்தவர்களைப் பார்வையிட்டேன். தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவர் பிராமணர். குடுமி வைத்திருந்தார்.முப்பது வயதிருக்கும். அவர் முன்னால் ஒரு பரந்த இந்திய வரைபடம் இருந்தது. என்னை அவர் கவனிக்கவில்லை. அறையில் இருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞன் என்னைப் பார்த்துக் கை காட்டினான்.

“உள்ளே வா. கதவைச் சாத்து,” என்றார் ஐயர் தலையை எழுப்பாமலே.

சுவற்றில் ஒரு கரும்பலகை இருந்தது. இடமின்றி அதில் கணிதக் குறிகள் எழுதியிருந்தன. பலகையின் மேலே, “ஜூன் 17 1911” என்று எழுதி அடிக் கோடிட்டிருந்தது. இளைஞன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். பிறகு வாயில் விரல் வைத்துச் சும்மா இருக்கும்படிச் சைகையிட்டான்.

“எந்த காலேஜ்,” என்றார் ஐயர் நிமிராமலே.

நான் புரியாமல், “நம்பியார் வரச் சொன்னார்,” என்றேன்.

ஐயர் கடைசியில் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். விளக்கு வெளிச்சத்தில் அவரின் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. “என்னப்பா ரூம் மாறி வந்திட்டியா?” என்றார் ஐயர். கதவு திறந்தது. நம்பியார் உள்ளே வந்தார்.

“உஸ்ஸ்… அப்பா…,” என்று விட்டு, “தம்பி பேரென்ன சொன்னாய்?” என்று கேட்டார் என்னிடம்.

“குமரன்,” என்றேன் நான்.

“சரி, மூன்று பேர் வந்தாகி விட்டது. மீட்டிங் ஆரம்பிக்கலாமா?” என்றார் நம்பியார்.

“மிஸ்டர் நம்பியார். பையன் பார்த்தா வேலையாள் மாதிரி இருக்கான், ” என்றார் ஐயர்.

“பயங்கர சூட்டிகையான பையன்,” என்றார் என்னைத் தெரியவே தெரியாத நம்பியார்.

“But, this committee needs a well educated…”

“இதோ பார் வாசு,” என்றார் நம்பியார். “நீ ரெண்டு பேர் கேட்டாய். வந்தாகி விட்டது. தேச சேவை செய்கிறோம் பார். நேரத்தை வீணாக்காதே. மீட்டிங் தொடங்கலாம்” என்றார். பிறகு அந்த இளைஞனைப் பார்த்து. “உன் பேரென்னப்பா சொன்னாய்?”

“ஆறுமுகம், சார். எம். ஏ ஆங்கில இலக்கியம்  இரண்டாம் வருஷம்”

“சரி. சந்தோஷம். வாசு, நீ என்ன கண்டுபிடித்தாய் சொல்,” என்றார்.

“Statistically…,” என்று தொடங்கினார் வாசு. அவர் பேசுவது இசை போல புரியாமல் ஆனால் இனிமையாக இருந்தது. நம்பியார், “தமிழ்ல சொல்லுப்பா.அடியேனுக்குப் புரியணுமே,” என்றார்.

“இது தூண்டப்பட்ட  கொலை தான்னு நம்ம நிச்சயமா சொல்ல முடியாது.” கொலை என்றவுடன் நான் திகைத்து ஆறுமுகத்தைப் பார்த்தேன். அவனும் விழித்தான்.

“என்ன கொலை?” என்றான் ஆறுமுகம்.

“ஆஷ் துரை கொலைக் கேஸ். மணியாச்சியில் நடந்ததே? பேப்பர் படிக்கிற வழக்கம் இல்லையோ?” என்றார் வாசு.

*

ஆறு மாதங்கள் முன்பு தான் திருநெல்வேலி கலெக்டர் ஆஷை வாஞ்சி ஐயர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரராகவன் தூத்துக்குடியில் நடத்திய அதிரடிப் புலனாய்வில் பதினாலு பேர் மாட்டியிருந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் சூத்ரதாரியான  நீலகண்ட ஐயர், ஒரு ரகசிய சதிக் கூட்டம் நடத்தியதாகக் கேள்வி. படிக்கப் படிக்க மர்மக் கதை போல இருந்த இந்த சதியைப் பற்றி நாலணா நாவல்கள் கூட வந்து விட்டன. கேஸ் முடியும் தருவாயில் இருந்தது. பதினாலு பேருக்கும் மொத்தமாகக் தூக்கு என்று என் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது பிரிட்டிஷ் விசுவாசி. ரிப்பன் கட்டிடத்தில் சில அறைகளுக்கு வயரிங் செய்ய காண்டிராக்ட் பிடித்து விட்டார்.

*

“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார்.

“சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.”

“ஆஹா,” என்றான் ஆறுமுகம். எனக்குப் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பயமாக இருந்தது. நம்பியார் கையைத் தூக்கி ஆட்டினார்.

“காங்கிரசாரை இந்தக் கொலையோடு இணைக்கும் ஒரே ஒரு தந்தி இருக்கிறது என்கிறான் பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டர் ஆடம். நமசிவாயம் என்று இங்கே மதராஸ் காரியாலயத்தின் ஆள் அனுப்பியது என்கிறான்.”

“நமசிவாயம் எங்கே?” என்று கேட்டான் ஆறுமுகம்.

“சென்ட்ரல் ஜெயிலில்.”

“நன்றாகத் தூக்கில் தொங்கட்டும்.”

“உங்களுடைய முதல் வேலை அது தான். ஜெயிலுக்குப் போய் நமச்சிவாயத்தைப் பார்த்து வாருங்கள்,” என்றார் நம்பியார். ஜெயிலா? எனக்கு உடம்பு நடுங்கியது.

“மிஸ்டர் நம்பியார், இதெல்லாம் எதுக்கு? நாங்கள் இங்கிருந்தபடியே ஆராய்ச்சி செய்கிறோம்,” என்றார் வாசு.

“கூட நம்ப வக்கீலை அனுப்பறேன்,” என்றார் நம்பியார்.

*

வெளியே கண்கூசும் வெயில். ஒரு பெரிய இரு குதிரை வண்டி நின்றது. பக்கத்தில் நெடிதுயர்ந்த மனிதர் ஒருவர் நின்றார்.

“நம்பியார், இது தான் உம்ம குரூப்பா?” என்றார் அவர். என் மேல் அவர் பார்வை நின்றது.

“என்னுடைய ஒரே நம்பிக்கை,” என்றார் நம்பியார். “தம்பிகளா, இவர் தான் நம்ம வக்கீல், ஜகன்னாதன்”. ஜகன்னாதன் வண்டியில் ஏறிக் கொண்டார். வாசு தயங்காமல் பின்னால் ஏறினார்.

“நீ முன்னாடி வண்டிக்காரனுடன் உக்காந்து வாப்பா,” என்றார் ஜகன்னாதன் என்னைப் பார்த்து.

” அவர் எங்களுடன் தான் வருவார்,” என்றார் வாசு. நான் உள்ளே ஏறி அமர்ந்து கொண்டேன். வண்டி கிளம்பியது. நம்பியார் அதற்குள் வேறு வேலை பார்க்கப் போய் விட்டார்.

“இது தேவையே இல்லாத தொந்திரவு. நான் ராஜாஜியிடம் சொன்னேன், இந்த நம்பியார் இல்லாத ஊருக்கு வழி பார்ப்பான்,” என்றார் ஜகன்னாதன், வெளியே பார்த்தபடி.

“எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை,” என்றான் ஆறுமுகம், திடீரென்று.

“காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு தலைவலி வந்திருக்கிறது என்று ஒரு பத்திரிகையிலும் போடவில்லையே? ஏன்?”

“இன்ஸ்பெக்டர் ஆடம், விஷயத்தை வெளியே விடவில்லை,” என்றார் ஜகன்னாதன்.

“அதுதான் ஏன் என்று கேட்கிறேன். துரையின் கொலையில் காங்கிரசுக்குப் பங்கிருந்தால் மொத்தமாக வெள்ளைக்காரனுக்குக் கொண்டாட்டம் தானே?”

ஜகன்னாதன் மெளனமாக இருந்தார். பிறகு, “அது விஷயம் எனக்கும் புரியவில்லை,” என்றார். ஜெயில் வாசலில் வண்டி நின்றது. நான் இறங்கிச் சற்று நேரம் பயத்துடன் அதன் சுவர்களைப் பார்த்தேன். உள்ளே போனால் வெளியே விடுவார்களா? அப்பா இப்படி இங்கே வருவேன் தெரிந்திருந்தால் காலையில் அனுப்பியே வைத்திருக்க மாட்டார். வக்கீலுக்கு உள்ளே ஜெயிலர்களைத் தெரிந்திருந்தது. விசாலமான பாதை வழியாகப் போய் நமசிவாயத்தின் தனிக் கூண்டை அடைந்தோம்.

“ஒய், எழுந்து வாரும்,” என்றார் ஜகன்னாதன், உள்ளே பார்த்து. ஜெயிலர் கையில் இருந்த தடியால் கம்பியில் ஒரு போடு போட்டார். நான் அறைக்குள் உற்றுப் பார்த்தேன். தாடியும் மீசையுமாக ஒரு உருவம் எழுந்து நின்றது. ஜெயிலர் சற்றுத் தள்ளிப் போய்  நின்று கொண்டார்.

“நல்லா கவனிக்கிறாங்களா?” என்றார் ஜகன்னாதன், அருகில் வந்த நமச்சிவாயத்தைப் பார்த்து. நான் உற்றுப் பார்த்தேன். அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். குளித்துச் சில நாட்கள் ஆனது போல இருந்தார். கை நடுங்கியது.

“பாரத் மாதா கீ,” என்று கத்தினார். பிறகு ஒரு நிமிடம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமினார்.

“சரி, அதெல்லாம் இருக்கட்டும். நீ எதுவும் சொல்லலியே இவா கிட்ட?” என்றார் வக்கீல். கைதி தலையை இல்லை என்று ஆட்டினார்.

“நீயா ஏதாவது சொல்லி மாட்டிக்காதே.” நமசிவாயம் மெதுவாக ஏதோ சொன்னார். “என்ன சொல்றை? கேக்கலை.”

“நான் என்ன தப்புப் பண்ணேன், மாட்டிக்க” என்றார் நமசிவாயம்.

“சத்தியத்தைத் தவிர வேற எதுவும் அறியேன்.” வக்கீல் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. வாசு, தணிந்த குரலில், “மிஸ்டர் நமசிவாயம், உண்மையிலேயே நீங்க தந்தி கொடுக்கலியா?” என்றார்.

வக்கீல், “How does that matter?” என்றார். வாசு பதில் சொல்லவில்லை.

நமசிவாயம், “நீங்க யாரு தெரியலை. ஆனா நான் ஒரு பாவமும் அறியேன். எனக்கு வாஞ்சியைத் தெரியாது. நீலகண்டன் என் குடும்ப சிநேகிதன். சில முறை பாத்திருக்கேன். அவ்வளவு தான்.”

“தந்தி கொடுத்தீங்களா இல்லையா?” என்றான் வாசு. “அது தெரியாம நாங்க எப்படி உதவி பண்றது?” நமசிவாயம் மவுனமாக நின்றார். வக்கீல், “நீ சும்மா இருந்தாலே போதும்,” என்றார். கிளம்பு முன், மனைவிக்கும் பெண்ணிற்கும் அந்தரங்கமாக வக்கீலிடம் செய்தி சொன்னார் கைதி. பிறகு எல்லோரும் ஜெயில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

“நான் கிளம்பறேன்,” என்றார் வக்கீல். குதிரை வண்டியில் ஏறிக்  கொண்டு எங்களை அம்போ என்று விட்டுச் சென்றார். மூவரும் சற்று நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் நின்றோம்.

“பக்கத்தில நல்ல காபி ஹவுஸ் ஒண்ணு இருக்கு,” என்றார் வாசு எங்கோ பார்த்துக் கொண்டு.

*

போண்டா சாப்பிட்டவாறே நான் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“யோசித்துப் பார்த்தால் தூக்குத் தேவை தான். இவர்களுடைய முட்டாள்தனத்தால் எவ்வளவு பேருக்குக் கஷ்டம்?” என்றான் ஆறுமுகம்.

“ஆனால் ஜெயிலில் பார்த்தால் பரிதாபமாக  இருக்கிறது.”

வாசு, “அதற்காகத் தான் நம்மை அனுப்பி வைத்திருக்கிறார் நம்பியார்,” என்றார்.

“இரக்கப்பட வைக்கவா? எனக்குச் சுத்தமா வரலை,” என்றான் ஆறுமுகம்.

“இரக்கப்படுவது ஒருபுறம். உண்மை என்ன என்று நமக்குத் தெரியவில்லை. It is a challenge. நாம் இளைஞர்கள்  – நம்மை இது கவர்ந்திழுக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.”

ஆறுமுகம் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.

“அந்தத் தந்தியில் என்ன எழுதியிருந்தது?” என்றான்.

வாசு புன்னகைத்தார். “உனக்கு ஆர்வம் வந்து விட்டது பார்,” என்றார்.

*

நாங்கள் எழும்பூர் காரியாலயம் சென்ற போது நம்பியார் காத்திருந்தார்.

“நம்ம ரகசிய ரூமுக்குப் போலாமா?” என்றார்.

மறுபடி கதவையெல்லாம் சாத்தி விட்டு உள்ளே அடைபட்டோம்.

“செக்ஷன் எண்பத்தி எட்டு , Indian Evidence Act,” என்றார் நம்பியார். கையில் ஒரு தடிமனான புத்தகம் வைத்திருந்தார். எண்பத்தி எட்டாம் செக்க்ஷனைத் தேடிப்  பிடித்தார்.

“The Court may presume that…,” என்று கத்திப் படித்து விட்டு எங்களைச் சுற்றிப் பார்த்தார்.

“புரிந்ததோ?”

எல்லோரும் திருதிருவென்று விழித்தோம்.

“நமசிவாயம் கொடுத்த தந்தி, சென்னையில இருந்து தஞ்சாவூர்ல இருந்த நீலகண்டனுக்குப் போனதா இன்ஸ்பெக்டர் ஆடமோட கேஸ். கோர்ட்ல போயி, ‘நான் அனுப்பலை, வேற ஒருத்தன் என்பேர்ல அனுப்பினான்’னு சொல்லலாம். ஆனா நான் அனுப்பினது வேற, தஞ்சாவூருக்கு போய்ச் சேர்ந்தது வேறன்னு சொல்ல முடியாது. கோர்ட்டு, தந்தி கம்பனி சரியா வேலை பார்க்குதுன்னு ஒத்துக்கறான்.”

வாசு, “அப்போ நமசிவாயம் ‘தந்தி கொடுத்தது நான் இல்லை’ அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியது தான? ” என்றார்.

நம்பியார் தலை குனிந்து புத்தகத்தைப் படிப்பது போல இருந்தார். சற்று நேரம் அமைதி. ஆறுமுகம், “நம்ப ஆள் தந்தியும் அனுப்பியிருக்கார். அனுப்பினதைப் பாத்ததா சாட்சியும் இருக்கு, இல்லையா, மிஸ்டர் நம்பியார்?” என்றான். நம்பியார் குனிந்த தலை நிமிரவில்லை.

“The man is guilty,” என்றார் வாசு.

*

வெளியே மழை மூட்டமாக இருந்தது. திடீர் புயல் போலும். காற்று விஷ்,விஷேன்று அடித்தது. ஒரே நாள் அனுபவங்களில் திகைத்த எனக்கு மறுநாள் மறுபடி வயர் பிடிக்கும் வேலைக்குப் போவதை நினைத்து அலுப்பாக இருந்தது.

“தம்பி நன்றாக வருவாய்,” என்று ஆசீர்வதித்தார் வாசு. “வாய்ப்புக் கிடைத்தால் மறுபடி பார்ப்போம்.”

வாசு கிண்டி காலேஜில் படித்தவர். வசதியான குடும்பம். ரேடியோ பெட்டி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததாகச் சொன்னார்.

“எல்லாத்தையும் தூக்கிப் போட்டு தேச சேவை செய்யலாம்னு நினைச்சு இங்க வந்தேன். இங்க பாத்தா இவங்களே திருட்டுத்தனம் பண்றான்,” என்றார்.

“இதில் வேறு ஏதோ சூது இருக்கு,” என்றான் ஆறுமுகம். “நமக்கு முழு விஷயமும் தெரியலை.”

“நாம போயிட்டா என்ன பண்ணுவாங்க?’ என்று கேட்டேன் நான்.

“கோர்ட்ல போய் ஏதாவது மாய்மாலம் பண்ணுவான் அந்த வக்கீல், வேறென்ன. அந்த நமசிவாயம் பிரமாதமான நடிகன்,” என்றார் வாசு.

*

நான் வீட்டுக்கு கிளம்பினேன். பல நாட்கள் முன்னால் மூர் துரையின் வீட்டில் மின்சார விளக்குகள் இழுக்கும் போது ஒரு பத்து நிமிஷம் மற்ற வேலையாட்களுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது என் அப்பாவின் நண்பர், மொடாக்குடியர் மாடசாமி, ஒரு கதை சொன்னார். அதாவது துரையின் வீட்டில் ஒரு ரகசிய அறை இருந்ததாம். அந்த அறையில் வேலை பார்க்க கண்ணைக் கட்டிக் கூட்டிப் போவார்கள். அறையின் நட்ட நடுவில், பல வயர்கள் வந்து சேரும் இடத்தில், ஒரு பெரிய போன் பெட்டி இருந்ததாம்.

“அது எல்லா துரை வீட்டுலயும்  இருக்கு. இது தான் பெரிய ரகசியமா,” என்றார் என் அப்பா.

“ஆனா, தம்பி, இந்தப் பொட்டி துரை பேசுறதுக்கு வைக்கலை. இப்போ நானும் நீயும் பேசுறோம்னு வையி. அது அந்தப் பொட்டியில கேக்கலாம்,” என்று உற்சாகத்துடன் சொன்னார் மாடசாமி. “புரியுதா ஒனக்கு? துரை உன் வீட்டுக்கு அந்தக் காலம் மாதிரி  வேவு பாக்க ஆள் அனுப்பவே தேவையில்லை. ஒரு வயர் இழுத்தா போரும். எல்லார் வீட்டுக்கும் போன் பொட்டி வந்தா துரைக்குக் கொண்டாட்டம். எல்லா சதித் திட்டத்தையும் அவன் வீட்டுலேர்ந்தே கேட்கலாம்.”

*

மறுநாள் காலை ஆறு மணிக்கு, நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது அப்பா வந்து எழுப்பினார்.

“வா, எந்திரி, வாசலுக்கு வா,” என்றார். நான் கண்ணைக் கசக்கியபடி வீட்டு வாசலில் வந்து நின்றேன். ஆறு குடித்தனக்காரர்களும் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள். வெளியே ஒரு மோட்டார் வண்டி நின்றது. நான் வாழ்க்கையில் இரண்டு முறை தான் அவற்றைப் பார்த்திருக்கிறேன். சாம்பல் நிறத்தில் மினுமினுத்தது வண்டி. அதன் மேல் ஒருவர் கம்பீரமாகச் சாய்ந்து நின்றார். வண்டிக்கு மறுபுறம் ஆறுமுகம் நின்றான்.

“மிஸ்டர் குமரன்?” என்றார் புதிய மனிதர்.

நான் தலையாட்டினேன்.

“என் பெயர் ராஜகோபாலாச்சாரி. உன் நண்பர்கள் உள்ளே இருக்கிறார்கள். ரயிலுக்கு நேரமாச்சு, வாருங்கள்,” என்றார் அவர்.

என் அப்பா, “சேலம் வக்கீல் ராஜாஜியா?” என்று கேட்டார். அவர் புன்னகைத்தார். வண்டிக்கு உள்ளிருந்து வாசுவின் முகம் தெரிந்தது.

“இரண்டு நாளுக்குத் திருச்சி  போய் வருகிறோம்,”  என்றார் ராஜாஜி.

நன்றி : தி ஹிந்து

(நன்றி : தி ஹிந்து)

குளித்து உடை உடுத்தி நான் வருவது வரை ராஜாஜி அங்கே பொறுமையாக நின்றார். மோட்டார் வண்டியைப் பலர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். நான் பெருமையுடன் ஏறிக் கிட்டத்தட்ட வாசுவின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வண்டி மெதுவாகக் கிளம்பி ஆடியபடிச் சென்றது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மெயில் வண்டி கிளம்ப அரை மணி நேரம் இருந்தது.

“நீலகண்டன், அபிநவ பாரதம் என்று தனி கும்பல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான்,” என்றார் ராஜாஜி, ரெயில் வண்டிகளின் இரைச்சலுக்கிடையே.

“பாண்டிச்சேரியில் சிலருடன் அவனுக்குத் தொடர்பு இருந்தது. தேச பக்தியில் காங்கிரசாருக்குச்  சற்றும் சளைத்தவனில்லை. நான் அவனை நேரில் பார்த்திருக்கிறேன். காங்கிரசாரில் சில பேர் சேர்ந்து அவனையும் தூத்துக்குடியில் அவனது சகாக்களையும் திருத்தி விடலாம் என்று நினைத்தோம்.”

“நமசிவாயம் உங்கள் சொல்படி தான் நீலகண்டனுடன் பேசி வந்தார் என்கிறீர்களா?”

“ஆமாம். நமசிவாயம் குற்றமற்றவன். ஆனால் எங்கள் பேரிலும் குற்றமில்லை. ஆஷ் துரையைக் கொல்லத் திட்டமிட்டது நாங்களல்ல. காங்கிரசாரை நீங்கள் நம்பணும்,” என்றார் ராஜாஜி.

“மிஸ்டர் ராஜாஜி, நமசிவாயம் கொடுத்த தந்தியில் என்ன எழுதியிருந்தது?”

“ஜூன் பதினெட்டாம் தேதி, நான் நமசிவாயத்திடம், நீலகண்டனுக்கும் ஆஷ் கொலைக்கும் சம்பந்தம் உண்டோ என்று கேட்கச்  சொன்னேன். நமசிவாயம் மவுண்ட் ரோடு தபால் நிலையத்தில் போய்க் கொடுத்திருக்கிறான். தந்தி அன்று மத்தியானம் நீலகண்டனைப் போய்ச் சேர்ந்திருக்கிறது. இரு நாட்களில், ஜூன் இருபதாம் தேதி, இன்ஸ்பெக்டர் வீரராகவன் நீலகண்டன் வீட்டை நடு ராத்திரி சுற்றி வளைத்திருக்கிறார். அவனிடம் அகப்பட்ட கடிதப் போக்குவரத்தில், அபிநவ பாரதத்தின் சதி முழுவதும் வெளிவந்து விட்டது. கொத்தாக அள்ளிக் கொண்டு மதராஸ் வந்து விட்டார் இன்ஸ்பெக்டர்.”

“ஆடம் யார்?” என்றான் ஆறுமுகம்.

“ஸ்காட்லான்ட் யார்டு டிடெக்டிவ். பெரும் புகழ் பெற்றவன். ஜூலை மாதம் அவன் மதராஸ் வந்து சேர்ந்தான். நீலகண்டனின் வீட்டில் மறுபடிச் சோதனையிட்டிருக்கிறான் – அப்போது கிடைத்தது தான் நமசிவாயத்தின் தந்தி. தந்தியில் Congratulations on your success என்று எழுதியிருந்ததாகக் கேள்வி.”

“நீங்கள் தந்தி பொய் என்கிறீர்களா? ஆடம் பொய் சொல்கிறானோ?” என்றார் வாசு.

“அவர் டிடக்டிவ். பொய் சொல்ல அவசியமில்லை.”

“நமசிவாயம் மாற்றிக் கொடுத்திருக்கிறாரா?”

“அவர் காங்கிரஸ்காரர். பொய் சொல்ல மாட்டார்.” ஆறுமுகம் சிரித்தான்.

வாசு, “மிஸ்டர் ராஜாஜி, நீங்கள் சொல்வது புரியவில்லை. கொடுக்கப்பட்ட தந்தியின் வார்த்தைகள் எப்படி மாறிப் போகும்?” என்றான்.

“தெரியவில்லை. But it is our only hope. Indian Evidence Act செக்க்ஷன் எண்பத்தி எட்டை யாரும் இது வரை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. தந்திக் கம்பனி சரியாக வேலை பார்ப்பதில்லை என்று யாரும் இது வரை கோர்டில் சொன்னதில்லை. இந்தக் கேசில் அதை விட்டால் வேறு வழியில்லை,” என்றார் ராஜாஜி.

***அத்தியாயம் இரண்டு***

ரெயில் வண்டி கிளம்பியது. நான் சற்று நேரம் வெளியே வேடிக்கை பார்த்தேன். வாசு கையில் இருந்த பெட்டியைத் திறந்து கீழே வைத்தார்.வண்டியில் அதிகம் கூட்டமில்லை.

“இவங்களை இன்னும் என்னால முழுசா நம்ப முடியல..,” என்றான் ஆறுமுகம். சற்று நேரம் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க வயர்லஸ் பொட்டியில வேலை பாக்கறீங்க. நான் ஆங்கில இலக்கியம் பத்தி ஆராய்ச்சி பண்றேன். நம்ம ரெண்டு பேரையும் ஏன் சேத்து வச்சிருக்காங்க?” என்றான் திடீரென்று.

“என்ன சொல்ல வருகிறாய்?” என்றார் வாசு.

“ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்து நம்மளைத் தள்ளுறாங்களோன்னு  எனக்குத் தோணுது.”

“அப்போ இந்தப் பையன் எதுக்கு?” என்றார் வாசு.

“தெரியலை. ஆனா அதைக் கண்டுபிடிச்சா நமக்கு பதில் தெரிஞ்சிடும்,” என்றான் ஆறுமுகம். எனக்கு மாடசாமி சொன்ன போன் பெட்டி நினைவுக்கு வந்தது.

*

மறு நாள் காலை ஸ்ரீரங்கத்தில் வடக்கு வீதியில் ஒரு பழைய வீட்டுக் கதவைத் தட்டினோம். நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்து கதவைத்திறந்தார்.

“யாரு?” என்றார்.

“மிஸ்டர் ஆளவந்தான்? நாங்கள் சேலம் ராஜகோபாலாச்சாரி சொல்லி வந்தோம். என் பெயர் வாசு,” ஆளவந்தான் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு வெளியே வந்து நின்றார். தெருவில் இரண்டொருவர் நின்று எங்களை உற்றுப் பார்த்தார்கள்.

“என்ன விஷயம் சொல்லுங்கோ,” என்றார்.

“நீங்கள் தற்போது உள்ள டெலிக்ராப் ஆபீசில் முக்கிய பொறுப்பில் இருந்ததாகச் சொன்னார்.”

“சீப் இஞ்சினீயர்,” என்றார் ஆளவந்தான். “இப்போ ரிடையர் ஆயிட்டேன்.”

“உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாம் என்று வந்தோம்.” ஆளவந்தான் எங்களை கிளப்புவதில் குறியாக இருந்தார்.

“என்ன சந்தேகம், சீக்கிரம் சொல்லுங்கோ. நான் கோவிலுக்குக் கிளம்பிண்டே இருக்கேன்.”

வாசு, பொறுமையாக, “தந்தி அனுப்பினால் மாறிப் போக வாய்ப்பு உண்டோ?” என்று கேட்டார்.

“தவறுதலாகவா? தந்தி மெஷினின் இருபக்கமும் உள்ளவர்கள் மனிதர்கள். தவறு செய்யலாம்.” வாசு தயங்கினார்.

“தவறுதலாக இல்லை. திட்டமிட்டு ஒரு தந்தியின் செய்தி மாறிப் போகுமா?”

ஆளவந்தான் சிரித்தார். “நீ கேட்கும் கேள்வியைப் பற்றி யோசித்துப் பார். அது சாத்தியமா?”

“ஏன் சாத்தியமில்லை?” என்றான் ஆறுமுகம். “மதராசில் இருந்து தஞ்சாவூர் அனுப்பும் தந்தியை நடுவில் யாராவது மாற்றி விட்டால்?”

“நடுவில் யார் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

“திருச்சி தபால்  ஆபீஸ் வழியாகத் தானே தந்தி போகிறது?” என்றார் வாசு.

“It is automatic,” என்றார் ஆளவந்தான். “முன்னால் மாதிரிக் கிடையாது. மூன்று வருடம் முன்னாலே புது மெஷினெல்லாம் வந்தாகி விட்டது. எலக்ட்ரோ மெக்கானிக்கல் ரிலேக்கள் மூலமாக மேலே  போகிறது தந்தி. தவறு நடக்க வாய்ப்பே இல்லை. அது மட்டுமில்லை. நீங்கள் அனுப்பும் தந்தி தஞ்சாவூர் வந்து  சேர்ந்ததும், அவன் உடனே தூக்கிக் கொண்டு ஓடுவதில்லை. மெசெஜ் சரியா என்று பார்க்க மறு முறை அதைத் திருப்பி அனுப்புகிறான். மதராசில் உள்ளவன் சரிதான் என்று சொல்லும் வரை தந்தியை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.”

வாசு புரிந்தது என்று  தலையாட்டினார். ஆளவந்தான் கை கூப்பினார். “போய் வாருங்கள்,” என்றார். திரும்பி வரும் போது ஆறுமுகம்,

“ரொம்பவும் பயப்படுகிறார். இவருக்கு சேதி  வந்து விட்டது போல,” என்றான்.

“என்ன சேதி?”

ஆறுமுகம் கையில் வைத்திருந்த தினசரிப் பேப்பரை எடுத்துக் காட்டினான். முதல் பக்கத்தில், கீழ் பத்தியில், “ஆஷ் கொலைச் சதியில் காங்கிரஸ்காரர் கைது” என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது. வாசு பரபரப்பாக பேப்பரை வாங்கிப் படித்தார்.

“கேஸ் புதன் கிழமை ஆரம்பிக்கிறது,” என்றான் ஆறுமுகம். “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.”

*
காவிரி ஆற்றுக் கரையில் சற்று நேரம் அன்று மாலை இளைப்பாறினோம். மத்தியான நேரத் திருச்சி வெயிலில், தந்தி ஆபீசிற்குப் போய் ஆளவந்தான் சொன்னது அத்தனையும் உண்மையே என்று கண்டறிந்து வந்திருந்தோம். ஆற்றின் கரையில் நல்ல காற்று. படித்துறைக்கு அருகில் காலை நனைத்தபடி நான் இருந்தேன்.

வாசு, “இப்போ என்ன பண்றது?” என்றார். “தந்தி செய்தி மாறிப் போக வாய்ப்பே இல்லையே?” என்றார். ஆறுமுகம் ஒரு பாறையில் படுத்திருந்தான்.

“ஆளவந்தான் சொல்றதுல ஒரு தப்பு இருக்கு,” என்றான்.

*

“எலிசபெத்து மகாராணியை எதிர்த்து ஸ்காட்லாந்து ராணி மேரி செய்த சதியை பாபிங்க்டன் கண்டுபிடித்தார். நானூறு வருடங்கள் முன்னால்  நடந்தது.”

நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் கவனித்தோம்.

“ராணி மேரி எழுதியதாகச் சொன்ன கடிதத்தை வைத்து அவளை சிரச்சேதம் செய்யச் சொன்னார்கள். இந்த நமசிவாயம் கேஸ் வெளி வந்ததில் இருந்து நான் மேரி எப்படி மாட்டிக் கொண்டாள் என்பது பற்றிப் படித்து வருகிறேன்.

“மேரி எழுதிய கடிதம் ரகசிய மொழியில் இருந்தது. அதை யாரும் புரிந்து கொள்ளச் சாத்தியமில்லை. அந்தக் கடிதம் மற்றும் மற்ற கடிதங்கள் ஒரு பாதிரியாருக்குப் போவதாக மேரி நினைத்திருந்தாள். பாதிரியாரும் தாம் எழுதும் ரகசியக் கடிதங்கள் மேரிக்குப் போவதாக நினைத்திருந்தார். ஆனால் நடுவில் இருந்ததோ எலிசபெத்தின் ஒற்றர். அவர்கள் இருவரும் அனுப்பிய கடிதங்கள் முதலில் அவரிடம் போகும். பிறகு அவர் மாற்றி அனுப்புவார். இதனால் அவர்கள் ரகசிய சங்கேத மொழியில் எழுதியும், அது வீணாகப் போயிற்று.”

“நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்றார் வாசு.

“நடுவில் யாரோ இருக்கிறார்கள்,” என்றான் ஆறுமுகம். “அவன் இருப்பது இரு பக்கமும் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. மதராசில் இருந்து தஞ்சாவூருக்கு தந்தி போய்ச் சேருகிறது. தஞ்சாவூர் தந்தி ஆபீசில் இருப்பவன் அதைச் சரி பார்க்க திருப்பி அனுப்புகிறான். ஆனால் நடுவில் உள்ள ஒற்றன், முதல் தந்தியை நிராகரித்து பதிலுக்கு வேறு செய்தி மாற்றி அனுப்புகிறான்.”

*

ஆறுமுகம் சொன்னதைச் சரி பார்க்க ஒரே ஒரு வழி தான் இருந்தது.

தஞ்சாவூரில் தந்தி ஆபீஸைத் தேடிக் கண்டுபிடித்தோம். வாசுவிற்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம் “காம் ரெஜிஸ்டர்” என்று அழைக்கப்பட்ட ஒரு பெரும் நோட்டுப் புத்தகத்தையும் பிடித்து விட்டோம்.

“ஆபீசிற்குத் தந்தி சேதியை எழுதி வைக்க அனுமதி கிடையாது,” என்றார் அங்கே கிளார்க்காக இருந்தவர். ரெஜிஸ்டரில் யாரிடம் இருந்து யாருக்குப் போகிறது என்பதும், நேரமும் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஜூன் பதினெட்டாம் தேதி வந்த நூறு தந்திகளில் நீலகண்டனுக்கு நமசிவாயத்திடம் இருந்து வந்ததும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

1. Com rejected என்று மார்ஜினில் எழுதியிருந்தது. எனக்குப் புல்லரித்தது.

“இது என்ன?” என்று கேட்டார் வாசு.

“தந்தி தவறாக அனுப்பப்பட்டால் எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தப்பு வந்தது என்று கணக்கெடுப்பார்கள்.” மூன்று பேரும் அதை உற்றுப் பார்த்தோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு மிருகத்தின் சத்தத்தை அடர்ந்த காட்டில் கேட்டால் எப்படி இருக்கும்? அந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஆனால் அடுத்த பக்கத்தில் இன்னும் சில “com rejected” இருந்தன.

“ஒரு மாதத்திற்கு இருபது முப்பது தவறுகள் வரும்,” என்றார் கிளார்க். அவரிடம் நன்றி சொல்லி வெளியே வந்தோம்.

“கோர்ட்டில் இதை வைத்து ஒன்றும் ருசுப்படுத்த முடியாது,” என்றார் வாசு. திருச்சியில் ராஜாஜியிடம் இருந்து நாங்கள் தங்கி இருந்த சத்திரத்திற்கு தந்தி வந்திருந்தது. “சீக்கிரம் நல்ல செய்தி தெரியப்படுத்துங்கள்.”

“இதுக்கு மேல என்ன செய்றது?” என்றார் வாசு, விட்டத்தைப் பார்த்தவாறு.

“ஊருக்குப் போய் நம்மால் முடியலைனு சொல்லிடறது உத்தமம்.”

*

எழும்பூரில் இறங்கி வீட்டுக்குப் போக காத்திருந்தோம்.

“இன்னும் குமரனை ஏன் நம்ம கூடச் சேர்த்து விட்டாங்கன்னு தெரியலையே,” என்றான் ஆறுமுகம்.

“அது மட்டும் தெரிஞ்சா இதுக்கு ஒரு விடிவு பொறக்கும்.”

அவன் கேள்விக்கான பதில் என் வீட்டில் கிடைத்தது.

அப்பா, “என்னடா, நாலு நாள்ல இளைச்சிட்ட?” என்றார். வீட்டில் தடபுடல் சமையல். இரவு வழக்கம் போல இருவரும் திண்ணையில் அமர்ந்தோம். திருச்சி, தஞ்சாவூரில் நடந்ததைச் சொன்னேன்.

“நீங்க தொடங்கினது நல்லாத் தொடங்கிட்டு இப்படி முழிக்கிறீங்களே? படிச்சு என்ன புண்ணியம்?” என்றார். எனக்கு ரோஷம் வந்தது.

“ஏன்? நீங்க என்ன பண்ணுவீங்க?” என்றேன்.

“தம்பி, முதல்ல தபால் ஆபீஸ் வரவு-செலவுக் கணக்கு இருக்கே…” என்றார் அப்பா.

“அதுல நமச்சிவாயத்தை ஒட்டுக் கேட்க காபி, டீ செலவு எழுதியிருப்பானா?” என்றேன் நக்கலாக. அவர் அதைப் பொருட்படுத்தாமல்,

“ஒவ்வொரு தந்தி ஆபீசிலையும் இருந்து எல்லார் அனுப்புற  தந்தியையும்  கண்காணிக்க  மெஷின் வேண்டாமா? மெஷினுக்குப் பணம் வேண்டாமா? அதுக்கு வரவு-செலவுக் கணக்கு இருக்குமே…கோடிக்கணக்குல போகும்,” என்றார்.

நான் அதிர்ச்சியுடன், “என்ன சொல்றீங்க? எல்லாரோட தந்தியையுமா?”

“பின்ன? உங்க நமசிவாயம் எங்க இருந்து தந்தி அனுப்பினான்னு போலீசுக்கு என்ன சோசியமா தெரியும்?  நான் சொல்றேன் பாரு,

எல்லா தந்தியும் ஏதோ ஒரு இடத்துக்குப் போய்ச் சேருது. அங்க ஒருத்தன் இருக்கான். அவனைப் பத்தித் தெரியணும்னா நீ பணம் எங்க போகுதுன்னு தேடிப்  பாக்கணும்,” என்றார் அப்பா. எனக்குக் கை கால் பரபர என்றது. உடனே வாசுவையும் ஆறுமுகத்தையும் தேடி ஓட நினைத்தேன்.

*

Rajaji

பதினொன்றாம் வருட தபால் டிபார்ட்மண்டு கணக்கில்,  “Office of Communication Analysis,” என்று எழுதியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னால் அதன் பங்கு ஆரம்பமாகியிருந்தது. ஒன்பதாம் வருடம் லட்சக்கணக்கில் பணம் ஓ.சி.ஏ செலவிற்கு  ஒதுக்கி இருந்தார்கள். அது போலவே முந்திய  வருடமும் செலவாகி இருந்தது. கோர்ட் வளாகத்தில், “உங்கப்பாவுக்கு நம் வந்தனத்தைச் சொல்லு,” என்றார் ராஜாஜி. எனக்குப் பெருமையாக இருந்தது. போய் வரும் எல்லாத் தந்திகளையும் கண்காணிக்கும் ஓ.சி.ஏ, மற்றும் அதன் மெஷின்கள் நடுவில் இருப்பதால், செக்ஷன் எண்பத்தி எட்டு செல்லாது என்றே நாங்கள் நினைத்தோம். நமசிவாயம் கேஸ் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கையில்  சென்னை ஐ கோர்ட்டில் காங்கிரஸ் வக்கீல்கள் கேசைத தள்ளுபடி செய்யுமாறு நீதிபதிகளிடம் கேட்டார்கள். ஆனால் மறு நாள் நான் கோர்ட்டிற்குப் போன போது வெளியே ஆறுமுகமும் வாசுவும் சுரத்தே இல்லாமல் இருந்தார்கள்.

“நீதிபதி நம்ம மோஷனை ஏத்துக்கலை,” என்றார் வாசு. “வைசராய்க்கு இந்திய கவுன்சில் சட்டப்படி அவசரச் சட்டம் போட உரிமை இருக்கு. அதுனால அழகா ஓ.சி.ஏ டிபார்ட்மண்டோட மெஷின் எதுவும் டெலிக்ராப் ஆபீசை பாதிக்காதுன்னு ரகசியச் சட்டம் போட்டு வச்சிருக்கார்.”

நமச்சிவாயத்தை இழுத்துக் கொண்டு போனார்கள். அவர் பெண்ணும் மனைவியும் கதறி அழுவதைப் பார்த்தேன். ஆறுமுகம்,

“வெள்ளைக்காரன் முதல்ல சட்டத்தைப் போட்டுத் தான் தப்புப் பண்ணுவான்” என்றான். “ஆனா நம்ம கிட்ட இன்னும் ஒரே ஒரு துருப்புச் சீட்டு இருக்கு.”

*
பத்திரிகைகள் பரபரப்புடன் நமசிவாயம் சதி கேசைப் பற்றி விவாதித்தன. ஆஷ் கொலையில் காங்கிரசிற்குப் பங்கு இருக்கும் என்றும்; காங்கிரஸ் தடை செய்யப்படும் என்றும்;  ஏன், ரகசிய சதிகாரக்  கும்பலான அபிநவ பாரதமே காங்கிரசின் ஒரு கை தான் என்றும் ஊகங்கள் பல உலாவின. கேஸ் தொடங்குவதற்கு முதல் நாள் மாலை ஆறுமுகம் என் வீட்டிற்கு வந்தான்.

“வா, ராஜாஜியை ஒரு வழி பண்ணலாம்,” என்று என்னைக் கிளப்பினான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது. மாலை இருள் மங்கும் நேரம் ராஜாஜியின் மயிலாப்பூர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். வாசு அங்கே காத்திருந்தார்.

“வாருங்கள்,” என்றார் ராஜாஜி, உள்ளே சென்றதும். “முடிந்த வரை, உங்கள் வேலையைப் பிரமாதமாகச் செய்தீர்கள். என்ன செய்வது, அதிருஷ்டமில்லை.”

ஆறுமுகம், “மிஸ்டர் ராஜாஜி, உங்களிடம் இருந்து உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். தருவீர்களா?” என்றான், துணிவுடன். அவர் முகத்தில் புன்னகை மாறாமல் இருந்தது.

“என்ன கேக்கணும், கேளுங்கோ.”

“இந்த வேலைக்கு எங்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“அகஸ்மாத்தாய் அமைந்தது. கடவுள் கிருபை” என்றார் ராஜாஜி.

“உண்மையைச் சொல்வேன் என்றீர்கள்.”

அவர் அமைதியாக இருந்தார்.

“நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? உங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் ஜனங்கள் எல்லோருடைய பேச்சையும் கவனிக்கிறான் என்று முன்னமே தெரியும். தெரிந்தும் நீங்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை.”

“பிறகு உங்களை ஏன் அமர்த்தினேன் என்று நினைக்கிறாய்?”

“இது ஒரு விளையாட்டு. நாங்கள் இந்த விஷயத்தைத் தோண்டத் தோண்ட அரசாங்கம் கேசை வாபஸ் பெற்று விடுவான் என்று நினைத்து விட்டீர்கள். பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்த்து உங்கள் மிரட்டல் இது.”

ராஜாஜி ஒன்றும் சொல்லவில்லை. சற்று நேரம் மவுனம் நிலவியது.

“நீங்கள் செய்தது சரியல்ல, மிஸ்டர் ராஜாஜி.”

“நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?”

“இது போல ஒற்று வேலை, அதுவும் குற்றமற்ற சாதாரண மனிதர்களை ஒரு அரசாங்கம் கண்காணிப்பது தெரிந்தால், அதை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை,” என்றான் ஆறுமுகம்.

ராஜாஜி சிரித்தார்.

“எல்லோருக்கும் தெரிந்தால்? தந்தி ஆபீஸையும் தபால் ஆபீஸையும் உபயோகப்படுத்தாமல் இருந்து விடுவார்களோ?” ஆறுமுகத்தின் முகம் சிவந்தது.

“உனக்கு இளம் வயது. பாயத் துடிக்கிறாய். நான் சொல்வதைக் கேள். பிரிட்டிஷ் அரசாங்கம் நீ நினைப்பது போல நடப்பது இல்லை. இந்தச் சட்டம், வாதம், அரசாணை  எல்லாவற்றுக்கும் மேலே குடிமக்களின் பயத்தை நம்பி நடப்பதே பிரிட்டிஷ் சர்க்கார். தந்தி ஆபீசில் ஒவ்வொரு ஊரில் இருந்து அனுப்பும் எல்லாவற்றையும் ஒரு அரசாங்கம் பார்க்குமானால் அதற்கு என்ன ஒரு சக்தி இருக்க வேண்டும், யோசித்துப் பார். அந்த சக்தி வெளியே தெரிந்தால் பிரிட்டிஷ் வைசராய்க்கு மதிப்பு கூடுமா, குறையுமா?”

ஆறுமுகம் திகைத்துப் போனான் என்று தெரிந்தது.

“அரசியல் போராட்டம் சந்தையில் மாடு வாங்கப் போவது போலத் தான். சில சமயம் ஜெயம் நம் பக்கம். பல நேரம் வெல்பவன் திருடன் தான்,” என்றார் ராஜாஜி.

உள்ளே இருந்து எல்லோருக்கும் காப்பி வந்தது. நான் தயக்கத்துடன் அதை ஆற்றியபடி இருந்தேன்.

“நான் சொன்னது சரி என்று பட்டால், நீ கொண்டு வந்ததைக் காட்டு,” என்றார் ராஜாஜி.

ஆறுமுகம், திகைப்புடன், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். பிறகு பையில் இருந்து சில காகிதங்களை எடுத்து பாயில் பரப்பி வைத்தான்.

“நீலகண்டனுக்குத் தமிழ்நாட்டில் இருந்தும் பாண்டிச்சேரியில் இருந்தும் வந்த தந்திகள்,” என்றான்.

ராஜாஜி, ஆச்சரியத்துடன், “இது எப்படி உனக்குக் கிடைத்தது?” என்றார்.

“ஓ.சி,ஏவில் இருந்து கிடைத்தது.”

“திருடினாயா?” என்றார் வாசு.

ஆறுமுகம் சிரித்தான்.

“இந்தக் கேசில் ஓ.சி.ஏ நம் நண்பர்கள்,” என்றான். “தமிழ்நாடு முழுவதும் கண்காணிக்க நீங்கள் பட்ஜெட் பெறுகிறீர்கள். ரகசியமாக எல்லாம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். லட்சக் கணக்கில் செலவு. பல நூறு ஊழியர்கள்.

“திடீரென்று காங்கிரசில் ஒரே ஒரு ஆளை மாட்டி வைக்க ஒரு தந்தியை மாற்றி அனுப்பும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், இது எல்லாவற்றையும் தியாகம் செய்வீர்களா?”

ராஜாஜி கையைத் தட்டி, “சபாஷ்,” என்றார்.

“தந்தியை மாற்றி அனுப்பும் யோசனை, வேறு யாரோ மேலே உள்ள ஆளினுடையது என்று எனக்குத் தோன்றியது,” என்றான் ஆறுமுகம். “தங்கள் ரகசியத்தைக் காப்பாற்ற மட்டுமே ஓ.சி.ஏ ஆட்கள் விரும்புவார்கள். இந்தத் தந்திகள் அவர்களுடைய பரிசு. அவர்களாகத் தம் டிபார்ட்மெண்டைக் காப்பாற்றிக் கொள்ளக் கொடுத்த விலை.”

ராஜாஜி பரபரப்பாக அவற்றை எடுத்துப் படித்தார். ஆறுமுகம், “ஆஷ் துரை பற்றி நான்கு முறை இவற்றில் வருகிறது,” என்றான்.

“ஜூன் பதினெட்டுக்கு முன்னாலே கலக்டர் ஆஷை ஒரு சதித்திட்டம் குறி வைக்கிறது என்று இவற்றைப் படித்திருந்தால் உளவுத்  துறைக்குத் தெரிந்திருக்க வேண்டும்,” என்றான்.

“They did nothing,” என்றார் ராஜாஜி.

“நீங்கள் பிராசிகியூட்டர் துரைக்கு இதைக் காட்டுவது நல்லது.”

ராஜாஜி எழுந்து நின்றார். “அடேய், காரைக் கிளப்பு,” என்றார்.

பிறகு எங்களைப் பார்த்து, “காங்கிரசைக் காப்பாற்றி விட்டீர்கள்,” என்றார்.

ஆறுமுகம், “இல்லை, ஒரு அப்பாவியைக் காப்பாற்றினோம், ” என்றான்.

oOo

0 Replies to “தந்திப் புரட்சி  – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்”

  1. விறுவிறுப்பாக இருந்தது. இரண்டு முறை படித்தேன். ராமையாவின் முந்தையா கதைகள் நகைச்சுவை மிகுந்து இருக்கும். இதில் அது குறைவு என்றாலும் சஸ்பென்ஸ் வைத்து சமன் செய்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.