குழந்தைகள் கொலு

நம்மாத்திலே ஏம்மா கொலு வக்கல்லே?’ என்று தாயிடம் கொஞ்சிக் கொண்டு மன்றாடினாள் பாலா. அவள் தம்பி கோபு இன்னும் கொஞ்சம் சுதந்திரத்துடன் அவள் முன்றானையைப் பிடித்து இழுத்துக் கொண்டே, ‘அம்மா, இன்னிக்குக் கொலு வைக்கணும்!’ என்றான்.

‘கண்ணு, நம்மாத்துலே இந்த வருஷம் கொலு வைக்கப்படாதுடா, அப்பா!’ என்றுதான் மீனாவால் சொல்ல முடிந்தது. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. குழந்தைகளை விட்டு விட்டுக் கொல்லைக் கட்டிற்குப் போய் விட்டாள்.

அப்பொழுது தாயைப் பெற்ற பாட்டி, காவேரியிலிருந்து ஸ்நானம் செய்துவிட்டுப் பூனா தம்ளரில் ஜலத்துடன் வாயில் ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தாள்.

‘பாட்டி, நம்மாத்துலே ஏன் கொலு வக்கல்லை?’ என்று கேட்டுக் கொண்டு அவளை நோக்கி ஓடினான் கோபு.

‘மேலே பட்டுடாதேடா! இப்போதான் இரண்டு ஸ்நானம் ஆயுடுத்து. இன்னும் முழுக வைக்காதே. கொலுவா? கொலு வக்கறாப் போலத்தானே இருக்கு? அதான் உங்கப்பாவை உருட்டிட்டு உட்கார்ந்திருக்கிறேளே?’ என்று பாட்டி சிடுசிடுப்புடன் சொன்னாள்.

பாலாவுக்கு வயசு எட்டு; அவளுக்குக் கொஞ்சம் விவரம் தெரிந்து விட்டது; ஆகையால் அவள் பாட்டியின் குரலைக் கேட்டு ரோஷத்துடன், ‘அம்பி, இங்கே வாடா, வாசல்லே பார், மோளம்’ என்று தம்பியை அழைத்துக் கொண்டு வெளியே போனாள்.

மீனாவின் புருஷன் இறந்து நான்கு மாசங்கள் ஆகியிருந்தன. இந்த வருஷம் முழுவதும் வீட்டில் பண்டிகை ஒன்றும் கொண்டாடக் கூடாது அல்லவா? ஆனால் குழந்தைகளுக்கு ஹிந்து தர்ம விதிகலெல்லாம் அந்த வயசில் எப்படி அர்த்தமாகும்?

’அம்மா, நம்மாத்துலே பிள்ளையார் ஏன் வாங்கல்லேம்மா?’ என்று கோபு பிள்ளையார் சதுர்த்தியன்று அம்மாவைக் கேட்டான்.

என்ன சொல்லுவாள் தாய்?

‘நம்மாத்துலே இந்த வருஷம் பிள்ளையார் வைக்கக்கூடாதுடா கண்ணு!’ – இதுதான் அவள் சொன்ன பல்லவி.

அந்த மாதிரி அவள் சொன்ன போதெல்லாம் ஏன் என்று கேட்க வாயெடுப்பான் கோபு. அதற்குள் தாய் போய் விடுவாள். இந்த மாதிரி ஒவ்வொரு பண்டிகையும் கோபுவின் ஏன் என்ற கேள்விக்குப் பதில் பெறாமலேயே கழிந்தது.

பழூர் சிறிய கிராமம். அக்கிரகாரத்தில் இரண்டு வரிசைகளிலும் இருபத்தைந்தே வீடுகள்தாம். மற்ற வீடுகளில் எல்லாம் பண்டிகைகள் நடந்தன. தங்கள் வீட்டில் மட்டும் செம்மண் கோலம் கூட இல்லாமல் போனது கோபுவுக்குப் பெருத்த புதிராக இருந்தது.

‘ஏண்டி, பாலா, நம்மாத்துலே ஏன்,கொழுக்கட்டை பண்ணல்லை?’

‘அப்பா செத்துபேட்டாரோல்லியோ, அதனால்தான்!’

பிறர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த மட்டில் பாலாவுக்கு அவ்வளவுதான் தெரியும். ஐந்து வயசுதான் கோபுவுக்கு. அப்பாவின் மேல் கொஞ்சம் கோபங்கூட வந்தது.

அப்பாவுக்கு ஜொரம் வந்துதோல்லியோ…?’
அந்த வியாக்கியானம் ஒன்றும் கோபுவின் மனசிற்குத் திருப்திகரமாகப் படவில்லை.
‘எல்லாரும் கொலு வச்சிருக்கா! பாட்டிதான் வெக்கக் கூடாதுங்றா! பாட்டியைக் கண்டா எனக்குப் பிடிக்கல்லே. பாட்டி எப்போ செத்துப்போவா, பாலா?
‘ஐயையோ, அப்படிச் சொல்லப்படாது2
‘அம்மா, அவா கேக்கறத்துக்கு என்னாலே பதில் சொல்ல முடியல்லே. இன்னிக்கு இரண்டு படி கொலு வச்சுடப் போறேன்.’

‘ஏண்டி, உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுத்தா? அதுகள் சொல்லுமுன்னு கொலு வைக்கறதா? ஆகுமோ? ஊருக்குத்தான் நன்னாயிருக்குமோ?’

‘ஊருக்குத் தெரிய வேண்டாம்; குழந்தைகள் ஆத்தில் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.’

‘வாயை மூடிண்டு இருக்குமோல்லியோ உன் குழந்தைகள்? அடுத்தாத்துலே போயி, ‘எங்காத்துலே கொலு வச்சிருக்கு’ன்னு சொல்லும். கைகொட்டிச் சிரிப்பா!’

‘நம்மைக் காட்டிலும் அவாளுக்கு ரொம்பத் துக்கமாக்கும்?’

‘உம்; மனஸிலே துக்கம் இருக்கிறதெ யார் கேக்கறா? வெளீலே வர்றதுதான் தெரியும். உன் ஆம்படையான் போனப்போ நீ அழவேல்லியாமே, அதைக் கூடச் சொல்றா!’

மீனாவுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை.

அழுவதற்கும், அழாததற்கும் அவர்கள் யார்? என் ஜோலிக்கு ஏன் வருகிறார்கள்?’

’நன்னாத்தான் சொல்லுவாள்; ஏன் சொல்ல மாட்டா? நாலுபேர் மாதிரியா போகாட்டா சொல்லித்தான் காட்டுவாள்! நீ மடியாகலேன்னு கூட பெரிய பேச்சுப் பேசறா?’

‘நன்னாப் பேசட்டும்; அதனாலே எனக்கு ஒண்ணுமில்லை. எனக்கு குழந்தைகள் ஏங்குவதைப் பார்க்க முடியவில்லை. இன்னிக்கு, கொலு வச்சுக் கொடுக்கப் போறேன்.’

‘கொலு வச்சுக் கொடு; நீயும் போயி நாலு ஆத்துலே அழச்சுட்டு வா. உன் அடங்காப்பிடாரித் தனத்துக்கு ஏத்தாப்போலத்தான்…’ என்று கிழவி ஆரம்பித்தாள்.

மீனா வெறுப்புடன் தாயை எரிப்பது போலப் பார்த்து விட்டு அப்புறம் போனாள்.

3

11234

’பாட்டிக்குத் தெரியவே படாது. சொல்லிப்பிடாதே!’ என்று தம்பியை எச்சரித்துக் கொண்டே பாலா கொல்லைப்புறத்தில் கொதிக்கும் வெயிலில் களிமண்ணைப் பிசைந்து எலி, பூனை, பாம்பு, தட்டு, சொப்பு, கிருஷ்ணன் எல்லாப் பொம்மைகளையும் செய்து கொண்டிருந்தாள். பக்கத்தில் கோபு உட்கார்ந்து கொண்டு தானும் கொஞ்சம் மண்ணைப் பிசைந்து உருண்டை உருண்டையாக உருட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

‘பாட்டி தூங்கறா. அம்மா என்னமோ பொட்டியெல்லாம் இறக்கி வச்சுண்டிருக்கா. அவா கிட்டே சொல்லாதே!’ என்று பாலா மறுபடியும் சொன்னாள்.

‘போரும்டி. இவ்வளவு பொம்மை போரும். உள்ளே வா? கொலு வச்சிப்பிட்டு- ‘

‘பாட்டுப் பாடப்படாது. பாட்டி காதுலே பட்டுடும்!’ என்று சொல்லிக் கொண்டு பாலா செய்திருந்த பொம்மைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தம்பியுடன் வாசல் உள்ளுக்குப் போனாள். அங்கே ஒரு மூலையில் ஒரு ஸ்டூலையும், மணையையும் போட்டு அதன் மேல் கோபுவின் துண்டு ஒன்றை விரித்து மண் பொம்மைகளை இரண்டு அடுக்காக வைத்து எதிரில் மாக்கல்லால் கோலம் போட்டாள். கோபு கொல்லையிலிருந்து சில புல் பூண்டுகளைப் பிடுங்கிக் கொண்டு வந்து பொம்மைகள் மேல் போட்டான். பாலா சின்னத் தட்டு ஒன்றை ஓசைப்படாமல் எடுத்துக் கொண்டு வந்து அதில் சிவப்பு மையைக் கொஞ்சம் கொட்டி நீர்விட்டுக் கலக்கினாள். தம்பியிடம் ஒரு பக்கத்தைக் கொடுத்துத் தான் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக ‘ஜயஜய கோகுல பாலா!’ என்று பாட ஆரம்பித்தாள்.

‘அடி! விளக்கு வைக்க வேண்டாமா?’ என்று கேட்டான் கோபு.

‘அதோ ரெண்டு பக்கத்திலும் வச்சிருக்கேன் பாரு ரெண்டு குத்து விளக்கு!’ என்று காண்பித்தாள் பாலா.

ஈர்க்குச்சியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு உருண்டைகளைத் தட்டையாகத் தட்டிச் செருகி இரண்டு பக்கங்களிலும் வைத்திருந்தாள்.

‘அடி பாலா, அடுத்தாத்து யோகுவையும், எதிராத்துக் காமுவையும் கூட்டிண்டு வரட்டுமா?’ என்று ஆவலுடன் கேட்டான் கோபு.

பாலா விசனத்துடன், ‘கூடாது’ என்று தலையை அசைத்தாள்.

யோகுவையும், காமுவையும் கூப்பிட்டால் என்ன ஆகும் என்பது அவளுக்குத் தெரியும். கோபுவுக்கு அது தெரியும் வயசு வரவில்லை.

உடனே இருவரும் ஆரத்தி எடுத்தார்கள். பாலாவின் முகம் புன்னகையுடன் திடீரென்று மாலை நேரத்து மலர்போலப் பூரித்தது. கோபுவின் சின்னஞ் சிறிய உள்ளத்தில் என்ன நேர்ந்ததோ, யாரால் சொல்ல முடியும்? குதூகலத்துடன் எழுந்து குதித்தான்.

மீனா குழந்தைகளைத் தேடிக்கொண்டு வந்தாள். அங்கே தன் முன் இருந்ததைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டாள்.

புருஷன் மாண்டுபோன மகத்தான துக்கங்கூட அவள் உள்ளத்திலிருந்து ஒரு நிமிஷம் விலகிற்று. மூன்று நான்கு மதில்களுள் அவளுக்குள்ளே அடைந்து கிடந்த மகிழ்ச்சி எப்படியோ திடீரென்று ஏற்பட்ட ஒரு துவாரத்தின் வழியே வெளியே பொங்கி வழிந்தது.

புருஷனை இழந்தவள் என்பதை மறந்தாள். விதவைக் கோலத்தில் இருப்பதையும் மறந்தாள். மூன்று மாசங்களுக்கு முன் அழகும் அலங்காரங்களும் நிறைந்து புருஷனுடனும் குழந்தைகளுடனும் கொஞ்சிக் குலாவிய யுவதியாக மாறினாள்.

ஓடிப்போய்க் குழந்தைகளை வாரியணைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள். குழந்தைகள் அதைக் கண்டு திகைத்துப் போனார்கள்.

அவள் சிரித்த சிரிப்பின் ஒலியைக் கேட்ட நிமிஷம் அவள் அடிவயிற்றில் பகீரென்றது. செய்யக் கூடாததைச் செய்து விட்டாள் போல் திகிலடைந்து குழந்தைகளை விட்டுவிட்டு நகர்ந்து நின்றாள்.

’அம்மா, நன்னாயிருக்கு!’ என்று தாய் சொன்னது அவள் காதில் பட்டது.

அந்த இரண்டு ஒலிகளுங்கூட அவ்வளவு சட்டென்று அவள் யோக நிலையைக் கலைக்கவில்லை. அவள் முகத்தில் இன்னும் ஓர் இன்பம் தயங்கி நின்றது- இரவு வருமுன்பு மாலையில் தயங்கி நிற்கும் மங்கிய ஒளியின் நிழல்போல.

‘யாராவது வந்தால் பார்த்துச் சிரிக்கப் போறா! எனக்கு மானம் போறது!’ என்று சீறிக் கொண்டு கிழவி அறைக்குள் நுழைந்தாள்.

மீனா திரும்பித் தன் தாயைப் பார்த்தபோது கிழவியே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள்.

‘உள்ளே வராதே, வெளியே நில்லு!’ என்று கரைகடந்த கோபக் குரலில் கத்தினாள் மீனா.

‘ஏன்?’

‘என் குழந்தைகள் கொலு வச்சிருக்கு. அதை நீ பார்க்கக் கூடாது!’

‘கொலுவா!’

‘ஆமாம், கொலு! கொலு வச்சிருக்கோம் நானும் என் குழந்தைகளும். நீ பார்க்கக் கூடாது- நீ ஊரார்!’

‘ஐயையோ! பைத்தியம்-’

‘போ அந்தண்டை! நீயும் உன் ஊரும்! யாருக்கு வேண்டியிருக்கிறது உங்கள் உளறல்கள்!’

‘ஐயோ, ஆகாதடி!’

‘என்ன ஆகாது? யாருக்கு ஆகாது? உனக்கும் ஊருக்கும்- நானும் என் குழந்தைகளும்- சந்தோஷப்படுவது ஆகாது! அவ்வளவுதானே? ஆகவே வேண்டாம்!’

’மகிஷாசுரமர்த்தனி குத்தம் சுமரும்!’

‘மகிஷாசுரமர்த்தனை இங்கே வந்து கொலு இருக்கிறாளே! அதோ பார்!’ என்று மீனா பெண் பொம்மையாக உட்கார்த்தப்பட்டிருந்த மண் உருண்டையைக் காண்பித்தாள்.

பரவசப் புன்னகையுடன் மீனா உடனே கொலுவை நோக்கி நமஸ்காரம் செய்து, எழுந்து குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு, அவர் போன துக்கம் இன்று எனக்குத் தீர்ந்தது. நீங்கள் இருக்கும் போது நான் துக்க வேஷம் போடுவது அம்பாளுக்குப் பிடிக்கவில்லை. தாயே, இதுவரையில் எனக்குத் தெரியவில்லை!’ என்று சொல்லிப் பலபலவென்று கண்ணீர் உகுத்தாள்.

‘யாராவது வரப் போறா, வாசக் கதவைச் சாத்துகிறேன்!’ என்று கிழவி திரும்பினாள்.

***

வெளியீட்டு வருடம் குறித்த தகவல் கிட்டவில்லை. எங்கு வெளியிடப்பட்டது என்பதும், வேறு புனைபெயரில் வெளியாயிற்றா என்பனவும் தெரியவில்லை. ஆனால் ‘புனர் ஜன்மம்’ என்ற தொகுப்பு நூலில் வெளியானதாகத் தெரிகிறது.

இந்தத் தகவல்கள் ‘கு.ப.ரா. கதைகள்’ என்ற கதைத் தொகுப்பில் தொகுப்பாசிரியரும், பதிப்பாசிரியருமான முனைவர். அ. சதீஷ் என்பார் கொடுத்திருப்பவை. [பார்க்க: பின்னிணைப்பு 3]

இந்தத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் பிரசுரம்:

அடையாளம் பிரசுரம். 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம். 621310

[முனைவர் சதீஷ் அவர்களுக்கும், அடையாளம் பிரசுரத்தாருக்கும் சொல்வனம்தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.]

கு.ப.ரா. சொல்கிறார்:
என் கதைப் புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் – இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதியதாக ஞாபகம். இது குற்றச்சாட்டென்றால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.

‘ கண்டதை எழுதுவதுதானா கதை?’ என்று கேட்கலாம். கதை உருவமாகும் பொழுது, கண்டது மட்டுமின்றிக் காணாததும், தங்கத்துடன் செப்பு சேருவதுபோல் சேருகின்றான. அந்த அனுபவம் காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக் கூடிய பல சிறு இரும்புத் தூள்களைப் போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக் கொள்கிறது. தத்துவங்கள், ஆசிரியனுடைய அனுபவம் என்ற நிலையில் அடிபட்டு பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

0 Replies to “குழந்தைகள் கொலு”

  1. கு.ப.ரா அதிவேகமாக நம்மை நம் தளத்தில் இருந்து, பழமைவாதத்திற்குச் சவால் விட்ட படி, நம்மை அடுத்த தளத்துக்கு நவீனப்பூர்வமாக உயர்த்திச் செல்கிறது. ரொம்ப யதார்த்தமான நடை, தளம் என இரண்டும் சேர்ந்து, நம்மை காற்றைப் போல் கதையின் ஓட்டத்துடன் இழுத்துச் செல்கிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.