ஆதிமூலத்தின் நான்கு எருமை மாடுகளும் மேய்ச்சலுக்காக ஊரின் வடக்கு மூலையிலுள்ள அடிபம்பைக் கடக்கும்போது ராணியின் பீடித்தட்டில் கிடந்த சிறிய கடிகாரத்தில் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் பத்தின் அருகில் இருந்தன.ஆதிமூலத்தின் மனைவி சுப்பு மாடுகள் நெடுவே சாணமிட அதை அள்ளியவாறே பின் தொடர்ந்தாள்.மூன்று மாடுகள் ஏற்கனெவே சாணமிட்டு விட்டன.கடைசிமாடு இன்னும் சாணமிடவில்லையே என்ற கவலை அடிபம்பைக் கடந்ததும் நீங்கியது.
அடிபம்பின் கிழக்குப் பக்கம் எந்த சீசனிலும் காய்க்காத பெரிய மாமரம்.துவைக்கும்,குளிக்கும் நீரானது மரத்திற்கு பாயும் வண்ணம் சிறிய வாய்க்கால் பிடித்திருந்தார் தங்கபாண்டி.வாய்க்காலின் இருபுறமும் கீழாநெல்லியும்,பசலிக் கீரையும் வளர்ந்திருந்தன.வடக்குத்தெரு பெண்கள் அனைவரும் பகலில் பீடிசுற்றும் இடம் அந்த மாமர நிழல்தான்.மாமர நிழல் மேற்கு பக்கமுள்ள சாலையைக் கடந்து நீண்டு கிடந்தது.
காலையில் பத்து மணிக்கு பீடி சுற்ற ஆரம்பித்தால் மாலை ஆறு மணிவரை அங்கேதான் சகலமும் அவர்களுக்கு.இடையில் பீடிக்கணக்கு போடுவதற்காக பக்கத்து ஊருக்கு நடந்தும்,சைக்கிளிலும் சென்று வந்து மீண்டும் அங்கே சங்கமித்து விடுவர்.அந்தக் காலை நேரத்தில் ராணி மட்டும் முனைப்போடு பீடி சுற்றிக்கொண்டிருந்தாள்.சுப்பு கடப்பதைக் கண்டதும்,
“ஏடி சுப்பு இன்னக்கி ஒனக்கு எத்தன மணி கணக்கு?”
“அத யாம்ளா கேக்க.ரெண்டு மணி கணக்கு பாத்துக்க.இந்த கோட்டிக்காரபயட்ட நூறு தூளுதான் வாங்குனேன்.இன்னும் பத்து சல்லி கூட சுத்தல.மாட்டு குண்டி பின்னால சுத்திக்கிட்டு கெடக்கேன்”
“இனும எங்க சுத்தி அழப்போற”
“அதான் கனகாட்ட வட்டிக்கு கேட்டுருக்கேன்.தரேன்னு சொல்லிருக்கா.நீ சுத்திட்டியா?
“இந்த மானங்கெட்டவா தெக்குத்தெரு காளியம்மக்கி நேத்தி இருவது சல்லி சுத்தி குடுத்தென் பாத்துக்க.தேவிடியா ஒரே விரிப்பா விரிச்சிட்டா.என்ன செய்ய தெக்குதெரு தொரச்சிட்டதான் இருவது சல்லி சுத்த சொல்லிருக்கென்”
“சுத்து சுத்து”என்றவாறு கையில் காய்ந்த சாணியோடு கடந்தாள்.
பீடிக்கணக்கு வேளையைப் பொருத்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வர்.சிலர் வட்டிக்கு பீடி கொடுப்பர்.வட்டிக்கு பீடி வாங்கி அன்றே கொடுத்துவிட்டால் இரண்டு சல்லி அதிகம் கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் ஒரு நாளைக்கு ஒரு சல்லி விதம் வட்டி.அந்த ஊரில் கனகாதான் வட்டிக்கு அதிகம் விடுபவள்.
நூறு புகையிலைத்தூளுக்கு,கால் கிலோ புகையிலை கொடுப்பார்கள்.இலையை பணிய வைத்து,பீடிக்கு தகுந்த வடிவில் உருவாக்கப்பட்ட அளவுகோல் கொண்டு இலை வெட்டி, மீண்டும் பணிய வைத்து, நூல் கண்டில் நூல் உருட்டி,தேவையான தூளை வைத்து சரியாக உருட்டி,நூல்கொண்டு கட்டி,பொட்டுக் குச்சி கொண்டு தலைப்பாகத்தை மடக்கினால் பீடி தயார்.நூறு தூளுக்கு 22கட்டுகள் (சல்லிகள்) சுற்ற வேண்டும்.ஒரு சல்லிக்கு 24பீடிகள்.22 சல்லி சுற்றுவதற்கு நூற்றி இருபது ரூபாய் கூலி.ஆறு நாட்கள் சுற்றினால் 720 ரூபாய் லம்பாக கிடைக்கும்.
ராணியைத் தொடர்ந்து வள்ளி,பத்திரகாளி,பூபதி என்று ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.வள்ளி சற்று பருத்த உடற்கட்டுடையவள்.அன்று இறுக்கமான ரவிக்கை வேறு.
“என்னளா நாளுக்கு நா விரிஞ்சிட்டே போற? புதுசா கல்யாணம் ஆயிருக்குனு ஒரே ஏறா ஏறாத,” என்று தொடங்கினாள் ராணி.
“நீ ஏறாமதான் ரெண்டு பிள்ள பெத்தியோ?இன்னும் அடங்காமதான சுத்திக்கிட்டு அலையுத வயக்காட்டுலயும், சந்துவளுக்கிள்ளயும்,”என்று காற்றிலாடிய கூந்தலை உச்சிக் கொண்டையாய் முடிந்து கொண்டாள்.
“ஓங்கிட்ட மனுசி பேசுவாளா? எப்புடிதான் முருகன் ஒன்னிய கெட்டி அழுவுதானோ?”
“ஒன்னியவே கெட்டி அழுவுதான் தொர. எனக்கென்னடி?”என்று பேச்சு வழக்கம்போல் சூடு பிடிக்கத் தொடங்கியது.
பேச்சு ஒருபுறமிருந்தாலும் கை இலையில் தூளை வைத்து உருட்டுவதும்,நூல்கொண்டு கட்டுவதும்,பொட்டுக் குச்சி கொண்டு மடக்குவதுமாய் அனிச்சையாய் செயல்பட்டன.தொடர்ந்தாள் ராணி.
“இந்த பிளவுசு அண்ணக்கி களஞ்சியம் அண்ணாச்சிட்ட எடுத்ததுதான?”
“ஆமாளா.இந்த மாரிமுத்து கிறுக்குப்பய இறுக்கலா தச்சிப் புட்டான்.பாடிஸ் கூட போட முடியல”
“எனக்கும் எல்லாம் கிழிஞ்சி போச்சி.இந்தவாரம் எடுக்கணும்,” என்றவாறே ரவிக்கையை சரிசெய்து கொண்டாள்.
பத்திரகாளியும், பூபதியும் இவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்தவாறே பீடி சுற்றுவதில் மும்முரமாய் இருந்தனர். மடக்கிவைத்திருந்த காலை நீட்டியவாறே பூபதி ஆரம்பித்தாள்.
“ஏளா ராணி ஒனக்கொரு விசியம் தெரியுமா?நேத்து கருக்கல்ல இப்ப மாட்ட பத்திட்டு போனானே கோட்டிக்காரப்பய ஆதிமூலம்.நல்லா குடிச்சுபுட்டு வந்து அந்த பிள்ள சுப்புவ அடி அடினு அடிச்சிபிட்டானாம். முப்புடாதி அக்காதான் போயி சத்தம் போட்டு விலக்கி விட்ருக்காவ.”
“இப்ப போம்போதுகூட இவா ஒண்ணுமே சொல்லல பாத்துகிடுங்களேன்.இவனுவளுக்கு சோறு பொங்கி போட்டு,ஆடு,மாடு தண்ணி காட்டி, தூத்து,தொழிச்சி, இவனுவ துணியலாம் தொவச்சி போட்டு, இவனுவ கூப்டும்போதுலாம் போயி பாய விரிச்சி கடேசில அடியும் வாங்கணும். நமக்கென்ன தலவிதியா?”என்று பொங்கினாள் ராணி. கண் எல்லோரையும் ஒருமுறை மேய்ந்துவிட்டு தட்டுக்கு திரும்பியது.
தன் புருசன் துரையும் குடிகாரன் என்பது அவளை அத்தனை கோபப்படுத்தியது. குவாரியில் கல் உடைப்பான்.இருநூறு ரூபாய் சம்பளத்தில் நூறு ரூபாய்க்குக் குடித்துவிடுவான். சில நாட்களுக்கு இருநூறும் காலியாகிவிடும்.ஒன்றாம் வகுப்பு படிக்கும் துளசி,இரண்டாம் வகுப்பு படிக்கும் சுடலை என் இரண்டு குழந்தைகள்.இரண்டுமுறை கருக்கலைப்பு ஆனது நல்லதாயிற்று என எப்போதும் எண்ணிக் கொள்வாள்.இரண்டாம்முறை கருக்கலைப்பு ஆனதும் குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டாள்.
“வேணுமா அவலக்கி?வேணுமா அவலக்கி?”என்று குவியவாறே அவல் வியாபாரி ஊருக்குள் நுழைந்தார்.
“வேணும்யா அவுல்கார்ரே.இங்க ஒரு அரப்பிடி தாரும்”என்றாள் ராணி.
எல்லோரும் பீடித்தூளுக்குள் கிடக்கும் சில்லறையை பொறுக்கினர்.எட்டு ரூபாய் சேர்ந்தது.முக்கால் பிடி அளந்து ஒரு பெரிய தட்டில் தட்டினார்.
“என்ன தாத்தா அவுலு ஒம்ம பல்லு மாதி செம்மண்ணு கலருல இருக்கு”என்றாள் ராணி.
“ஒனக்கு என்ன பொன்னாங்கண்ணி நெல்லுலயா அவுலு குத்துதாங்க ஓம்பல்லுமாதி மினுங்க.இது சம்பா நெல்லுல குத்துனது அப்டிதான் இருக்கும்.நல்லா கொஞ்சம் தண்ணி தெளிச்சி,ரெண்டு சீனிய அள்ளி போட்டு திம்பியா”என்று முன்ங்கியவாறே மூட்டையை கட்டிவிட்டு ஊருக்குள் நுழைய எத்தனித்தார்.
“ஒமக்கும் வாய் நல்லா கொழுத்துப் போச்சியா”
“தாயி ஓங்கூட பேசுனா என் பொழப்பு நாறிரும். நா வாரேன்”
“ வேணுமா அவலக்கி?வேணுமா அவலக்கி?”என்று கூவியவாறே கடந்தார்.
“எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லருந்து இந்த மனுசன் இந்த யாவாரந்தான் பண்ணுதாரு. எதுனா மிச்சம் பண்ணிருக்காரோ என்னமோ பவம்” என்றாள் ராணி.
புழுக்கம் அதிகரிக்க மாராப்பை எடுத்து விசிறிக் கொண்டாள்.
“நல்லா சொன்னபோளா.அருப்பு நேரத்துல தப்பு நெல்லு பெறக்கியே சம்பாதிச்சி,கப்பலு மாதி வீடு கட்டிருக்காரு.பார்வதி மொவா சடங்குக்கு போம்போது பாத்துருக்கோம்.”என்றாள் பத்திரகாளி.
எல்லோரும் அவலை சுவைத்தவாறே அதன் சுவையைப் பற்றி பேசிக்கொண்டனர்.
“ம்ம்ம்…பெண்கள் மாநாடு தொடங்கிட்டு போலுக்கு”என்றவாறே சைக்கிளிலிருந்து இறங்கினான் மாரி. சொத்துக்கள் அனைத்தையும் அப்பா பார்த்துக்கொள்ள ஊர் சுற்றும் செல்லப்பிள்ளை அவன். ராணி மேல் எப்போதும் அவனுக்கு ஒரு கண். அவள் செல்லும் இடமெல்லாம் பழியாய் கிடப்பான். அவளுக்கும் அவன் தன் பின்னால் சுற்றுவது ஆனந்தமாகவே தோன்றியது.
“என்ன அவலுலாம் பலமா இருக்கு இன்னக்கி”என்று ஒரு பிடி அவலை அள்ளிக்கொண்டு விலகியிருந்த ராணியின் வலதுபக்க ரவிக்கையை நோக்கியவாறே அருகிலிருந்த திண்டில் சென்று அமர்ந்தான்.ராணியும் முந்தானையை சரி செய்வதுபோல் நடித்து அப்படியே விட்டிருந்தாள். அக்குள் வியர்வை மார்பை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.
“இப்புடி சும்மாவே அலையுதிய மாரி, திங்க சோறுலாம் எப்பிடிதான் செமிக்கி உனக்கு,” என்றாள் வள்ளி.
“ஓம் புருசன் மட்டும் என்ன வெட்டி மொறிக்கானாங்கும்.அங்க பஸ்ஸ்டாண்டுல உக்காந்து வாரவா போறவாள பாத்துக்கிட்டு இருக்கான்.”
அதற்குள் “எலே மாரி எலே மாரி,” என்று கூப்பிடும் குரல் கேட்ட்து.
“போய்யா ராசா, ஒங்க அம்ம கூப்புடுதாவ.ஓங்கூட சேந்த பெறவு அந்த ஆளு எங்க வெளங்கப்போறான்.வரட்டும் இன்னக்கி.”
“இவளுக்கு அதுக்குள்ள பொறுக்காத,”என்று முனங்கி ஆழமாய் ஒருபார்வை ராணியை பார்த்தவாறே,சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பீடித்தட்டு நிறைய பீடி குவிந்துவிட எடுத்து சல்லியாக கட்டத் தொடங்கினாள் ராணி.ஆறு கட்டு சேர்ந்திருந்தது.இன்னும் பத்து கட்டு சுற்றினால்தான் கணக்கு போடமுடியும்.துரச்சியிடம் முப்பது சல்லியாக வாங்கிவிட்டால் என்ன என்று ஒருகணம் தோன்றவே மறுகணம் பீடித்தட்டை மூடிவிட்டாள். மனம் ஏனோ பதட்டமாகவே இருந்தது.மாரியின் பார்வை வேறு உள்ளுக்குள் கிளர்ச்சியை தூண்டியவாறே இருந்தது.
மாமரம் நெடுவே மேற்கு நோக்கி விழுந்து கிடந்த தன் நிழலை தனக்குள் சுருட்டி கிழக்கு நோக்கி மெல்ல நீட்டியது.
“இந்தா தொரச்சிய பாத்துட்டு வாறேன்”என்றவாறே புறப்பட்டாள்.
வள்ளி மட்டும் ஏனோ நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள். ராணி வீட்டு புறவாசலும், மாரிவீட்டின் சிறு தொழுவமும் அடுத்தடுத்து இணைந்தாற்போல் இருக்கும். துரச்சி வீட்டிற்கு செல்லாமல் வீடு நோக்கி நடந்தாள்.வீட்டிற்கு வெளியே வெயிலில் காய்ந்து முறுக்கேறிக் கிடந்த துணிகளை அள்ளி வீட்டுக்குள் போட்டுவிட்டு,கொல்லைப்பக்கம் வந்து நீண்ட சோம்பல் முறித்தாள்.முந்தானை மார்பின் குறுக்காய் சுருங்கி விட்டிருந்தது.மாரி வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு ஏதோ செய்கை காட்டினான்.அவள் முதலில் கொட்டகைக்குள் நுழைய அவனும் பின் தொடர்ந்தான்.அரைமணி நேரம் கழித்து வந்து கை,கால்,முகம் கழுவிக் கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தாள்.இரண்டு இடங்களில் பல் தடம் தெரிய சோப்பு போட்டு மீண்டும் மீண்டும் கழுவினாள்.
வீட்டிலிருந்து இறங்கி துரச்சியிடம் சென்று முப்பது சல்லி வாங்கிக் கொண்டாள்.சரியாக சேர்ந்து விட்டது.மீண்டும் மாமர நிழலை அடைந்தாள்.
“எளா வள்ளி கொஞ்சம் சைஸ் பாரேன் நேரம் ஆய்ட்டு”
“கொண்டா” இருவரும் கட்டை சரி செய்யத் தொடங்கினர்.சற்று பழுப்பு நிற வண்ணம் குறைந்த பீடியை நடுவிலும்,நல்ல நடு நரம்பு நீக்கப்பட்ட இலையில் சுற்றிய பீடி வெளிப்புறமும் வரும்படி கட்டினர்.எல்லா பீடியின் நூல்கட்டும் ஒரே கோட்டில் அமைய வேண்டும்.இல்லையென்றால் பீடிகடைக்காரன் கழித்து எறிந்துவிடுவான்.
வழக்கமாக பீடிக்கடைக்கு நடந்து செல்லும் ராணி அன்று யாராவது கொண்டு விட்டால் தேவலாம் என்றெண்ணினாள். மாரியைக் கூப்பிட்டால் கொண்டுவிடுவான் என்றாலும் புரளி பேசும் ஊரை எண்ணி அந்த எண்ணத்தை எங்கு தோன்றியதோ அங்கே புதைத்தாள். முதுகுவலியோடு வயிற்றுவலியும் சேர்ந்து கொண்டது.மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
சற்று தொலைவு சென்றதும் வடக்குத்தி அம்மன் கோவில் வேப்பமர நிழலில் சற்று நேரம் இளைப்பாறினாள்.வேலியோரம் மேய்ந்து கோண்டிருந்த இளம் மரியை புணர துரத்திக் கொண்டிருந்தது வெள்ளாட்டங்கிடா. தூரத்தில் மாரி சைக்கிளில் வருவது தெரிந்தது.ஊர் என்ன பேசினாலும் பரவாயில்லை ஏறிக்கொள்வது என்று தீர்மானித்துக்கொண்டாள்.
“வாரியா?” என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் பின்னால் ஏறிக் கொண்டாள்.
“என்ன ராணி சொல்லாம கொள்ளாம எந்திச்சி ஓடிட்ட”
“ம்க்க்கும்..இன்னும் ரெண்டு நாளைக்கு அங்கேயே கெடப்பேன்னு நெனச்சியாக்கும்”
“கெடந்தாதான் என்னவாம்”
“என்னிக்கி என் புருசன் பாத்து கொல்லப்போறானோ தெரியல”
“அதெல்லாம் யாருக்கும் தெரியாது” என்று பேச்சைத் தொடர்ந்தவாறே நரியங்குளத்தைக் கடந்து அடுத்த ஊரின் எல்லையைத் தொட்டனர்.
திரும்பி வரும்போது நடந்தே வந்துவிடுவேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தாள் பீடிக்கடையை நோக்கி. பானுமதி திரையரங்கில் ஒட்டியிருந்த சகிலா நடித்த வசியம் பட போஸ்டரை சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பினான் மாரி.
பீடிக்கடை வாசலில் கூட்டம் மொய்த்திருந்தது.தட்டுகளில் பீடிக்கட்டை மொத்தமாய் கொட்டி சைஸ் பார்ப்பதும்,இலை வாங்குவதும்,இலையின் தரத்தை விமர்சிப்பதும்,பாஸ்புக்கில் பீடியை வரவு வைப்பதும் என்று ஒரே களேபரமாக இருந்தது.
அவ்வளவு பெண்களுக்கு மத்தியில் பீடியைப் பரிசோதித்து வரவுவைக்க நான்கு பேர்,இலை,தூள் அளந்து கொடுக்க ஒருவன் என ஐந்து பேரைக் கண்காணிக்க ஒரு கணக்குப்பிள்ளை.ஒரமாக நாற்காலியில் அமர்ந்து ஏதோ ஒரு ரெஜிஸ்டரை நோண்டியவாறே அனைவரையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் கணக்குப்பிள்ளை.
ராணி வரிசையில் நின்று பீடி சரி பார்க்கும் இடத்தை எட்டிவிட்டாள்.வழக்கமாக இருக்கும் பத்மநாபன் இல்லாத அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாதவளாய் புன்முறுவல் செய்தாள்.அவனைப்போல இவன் குழைந்து நெளியவில்லை.கடுகடுவென இருந்தான்.இரண்டாவது கட்டை எடுக்கும்போதே அதைப் புறம் தள்ளினான் பழுப்பு ஏறி இருக்கிறது என்று.பின்பு இரண்டு கட்டுகள் நூல் நேர்கோட்டில் இல்லை என்று கழித்தான்.
“இது என்னதுமா?மண்டையில தூளே இல்ல.குடுக்குற தூள பீடில வச்சி சுத்தாம எடைக்கி போடுதியோ என்றவாறே முறித்தெறிந்தான்.ஒன்றன் பின் ஒன்றாக பத்து கட்டை கழித்து விட்டான்.ராணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“அண்ணாச்சி நீங்க குடுக்க இலயே கண்டங்கரேன்னு இருக்கு.அதுல சுத்துனா இந்த கலர்லதான் இருக்கும்:என்றாள் பம்மியவாறே.
“ஆடத்தெரியாதவா தெருகோணன்னாளாம்.காலைலருந்து ஒரு அம்பது வேருக்காது கணக்கு பாத்துருப்பேன் இவ்ளொ மோசமா யார் பீடியும் இல்ல”
ராணிக்கு அவமானமாய் ஆகிவிட்டது.வேகமாய் சென்று 100தூள் வாங்கிக் கொண்டாள்.நாளைக்கு கழித்த பத்து கட்டும் சேர்த்து கொண்டுவந்து கணக்கு முடிக்க வேண்டும்.விரக்தியோடு பீடிக்கடையை விட்டு வெளியேறினாள்.
பானுமதி திரையரங்கம் கடந்து மெல்ல நடக்கத்தொடங்கினாள்.மேல்வானில் சூரியனை கருமேகங்கள் சூழ்ந்து நின்றன.சரளை மண்சாலை ஒவ்வொரு அடி வைக்கும்போதும் ரப்பர் செருப்பினூடே காலை அழுத்தியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து கொண்டிருந்தது.சூழ்ந்துள்ள ஈரக்காற்று அவள் உடலின் சூட்டை உறிஞ்சிக் கொண்டிருந்தது.மனது கிடந்து அடித்துக் கொண்டது.ஆற்றமையாய் இருந்தது பீடிக்கடைக்காரன்மேல்.பலவித சிந்தனையோடு ஊரை அடைந்தாள்.மாமர நிழல் கிழக்கே வெகுதூரம் வரை நீண்டு கிடந்தது.
இரண்டு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டை அடைந்திருந்தனர் அவள் நுழையும் போது.அவர்களுக்கு சாப்பிட புழுங்கல் அரிசி வறுத்து கொடுத்தாள்.வாங்கி வந்த இலையை தண்ணீரில் நனைத்துவிட்டு,அடுப்பாங்கரையை நோட்டமிட்டாள்.என்ன குழம்பு வைப்பது இரவுக்கு என்று குழப்பமாய் இருந்தது.தினமும் பருப்புக்கறி தின்று வெறுத்துப் போயிருந்தது.முட்டைகுழம்பு வைப்பதென்று தீர்மானித்துக் கொண்டு கடைக்கு சென்று முட்டை மற்றும் சாமான்கள் வாங்கிவிட்டு சிட்டையில் வரவு வைத்துக் கொண்டாள்.
முற்றத்தில் இலைவெட்ட அமரவும்,புருசன் வேலையிலிருந்து வரவும் சரியாய் இருந்தது.தெருவில் விளயாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அப்பாவைப் பார்த்ததும் “அப்பா பண்டம் அப்பா பண்டம்”என்று காலைக் கட்டிக் கொண்டன.
“தேவிடியா இதுவளுக்கு திங்க ஒண்ணும் குடுக்கலியாங்கும்ளா? என்று எரிந்து விழுந்தான் சைக்கிளிலிருந்த சமட்டியை எடுத்து கூடத்தில் வீசியவாறு.குழந்தைகள் விலகி அவள் முந்தானைக்குள் புகுந்து கொண்டனர்.அவள் பதிலேதும் பேசாமல் அடுப்பை பற்ற வைத்தாள்.
ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு ரெடியாகியது.குழந்தைகளுக்கும்,புருசனுக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு தானும் உண்டு முடித்தாள்.முச்சந்தியில் இருக்கும் தெருவிளக்குக்கு பீடி சுற்ற செல்லும்முன் துரையிடம் கெஞ்சியவாறே கூறினாள்,
“இந்த எலய கொஞ்சம் வெட்டி குடுங்கயா.நாளக்கி கணக்கு முடிப்பான்”
“தெரணையில கொண்டாந்து போடு வெட்டுதேன்”
கணக்கு முடிக்கிறார்கள் என்று சொன்னதால்தான் அவன் வெட்ட சம்மதித்தான் என்பது அவளுக்கு தெரியும்.ஏனென்றால் இதையே சாக்காய் வைத்து நாளை கொஞ்சம் கறந்து விடலாம்.இலைக்கட்டை கொடுத்துவிட்டு தெருவிற்கு சென்றாள்.
இவள் செல்லும் முன்னே திருவிழாக் கூட்டமாய் இருந்தது தெரு.பால் பண்ணைக்கு பால் கறந்து ஊற்றுபவர்கள்,ஊர்க்கதை பேசுபவர்கள்,நொண்டி விளையாடும் சிறுமிகள்,கபடி விளையாடும் சிறுவர்கள்,கள்ளன் போலீஸ் விளையாடுவோர்,தாயம் விளையாடும் பெருசுகள் என தெரு முழுவதும் திருவிழாக்கோலம்.அந்த தெருவிலுள்ள மூன்று தெருவிளக்குகளில் அது ஒன்றுதான் உயிர்ப்பித்திருந்தது.
குரல்களின் ஓலம் நேரம் செல்ல செல்ல கரைந்தது.தாயம் விளையாடும் பெருசுகள் மட்டும் இவர்கள் பீடி சுற்றி முடித்து வீட்டுக்கு கிளம்பும்வரை விளையாடிக்கொண்டிருந்தனர்.
ராணி வீட்டை அடையும்போது இலை முழுவதையும் வெட்டி முடித்திருந்தான்.அவளுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.”எப்படியும் நாளைக்கு கணக்கு முடிச்சிடலாம் காளியம்மையும் இருபது சல்லி தந்துவிடுவாள் என்று எண்ணிக்கொண்டாள்.சோற்றுக்கு நீர் ஊற்றிவிட்டு முற்றத்தில் பாய் விரித்தாள்.அவன் வீட்டிற்குள் அழைக்கவே தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைத் தாண்டி மூடிய அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.அவளின் முனகலும்,இயங்கும் சத்தமும் சற்று நேரம் நீடித்தது.முற்றத்தில் வந்து காற்றில் படுக்க சிறிது நேரத்தில் உறங்கிப் போயினர்.
மறுநாள் அவன் வேலைக்கு செல்லவில்லை.அவளுக்கு தண்ணீர் பிடிக்க உதவினான்.குழதைகளை பள்ளிக்கு அனுப்பினான்.கொஞ்ச நேரத்தில் காளியம்மை 20சல்லி திருப்பிக் கொடுத்தாள் மன்னிப்புக் கேட்டவாறே.இன்று மாமரத்திற்கு செல்லாமல் வீட்டில் புருசனுடன் அமர்ந்து பேசியவாறே சுற்றி முடித்தாள்.
கணக்குக்கு நேரம் ஆக இருவரும் சைக்கிளில் கிளம்பினர்.இன்று பத்மநாபன் இருந்தான்.ஒருபீடிகூட கழியவில்லை.வழக்கம்போல அவனிடம் போலிச்சிரிப்பை சிரித்து விட்டு கணக்கு முடித்து 720 ருபாய் வாங்கிக்கொண்டு வெளியே காத்திருக்கும் புருசனை அடைந்தாள்.50ரூபாய்க்கு குழந்தைகளுக்கு பண்டம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரவும்,வாரவட்டிக்காரன் காத்துக்கொண்டிருந்தான்.அவனுக்கு 250 ரூபாய் கொடுத்தாள்.300 ரூபாய் கடைப்பாக்கி கொடுத்தாள்.நூறு ரூபாயை துரை பிடுங்கிக் கொண்டான்.
“முத்தம்மாள் ஜவுளிக்கடல்” என்று பெயரிடப்பட்ட பாதி கிழிந்த மணிப்பர்ஸுக்குள் இருபது ரூபாய் பல்லிளித்துக் கொண்டிருந்தது.
பரிதாபம்.
Really a sad story… Still people are there like this?
இன்னும் அவர்களது வாழ்க்கைமுறை எந்தவித மாற்றத்தையும் எட்டவில்லை என்பதுதான் உண்மை..xavier