மகரந்தம்

திருப்தியும் துன்பமும்

The World’s Most Content (and Miserable) Countries

எந்த நாடுகள் மிக மகிழ்ச்சியான வாழ்வைக் கொண்டவை, எவை மிக துக்ககரமான வாழ்வைக் கொண்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? உளவியலாளர்கள் (அதிலும் சமூக உளவியலாளர்கள்) இப்படிச் சில அளவு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள். ஏன் என்று நம்மால் ஊகிக்க முடியாது என்று தோன்றுகிறது. மேற்கொண்ட தொழிலுக்கு ஏதாவது நியாயம் கற்பிக்கத்தான் என்று சொல்வது சாத்தியம், ஆனால் அது மிகவும் நம்பிக்கை இல்லாத பார்வை அல்லது சந்தேகப் பார்வை. அதை விட்டு விட்டு, மனித குணத்தின் மீது கொஞ்சமாவது நம்பிக்கை வைத்தால், வைக்கலாம் என்று நினைத்தால், மேற்படி ஆய்வாளர்கள் உண்மையிலேயே இப்படிச் சில அளவைகளை உருவாக்குவதும், அவற்றின் மூலம் மக்களின் மனோநிலைகளைக் கண்டறிவதும் சாத்தியம் என்று நினைக்கிறார்கள் என்று நாம் கருதலாம்.

அப்படி ஒரு முயற்சியில் கண்ட விளைவுகளை ஒரு கட்டுரை சொல்கிறது. அப்படி ஒரு முயற்சி செய்தவர்களின் முடிவுப்படி, உலகின் மிக மகிழ்ச்சிகரமான நாடுகள், முதல் பத்தும் அனேகமாக லத்தீன் அமெரிக்காவில்தான் இருக்கின்றனவாம். ஹ்ம்… அதில் உள்ள சில பெயர்களைப் பார்த்தால் இந்த அளவைகள் மிகவுமே தண்டமானவையோ என்று நினைக்கத் தோன்றும். கொலம்பியா, குவாடமாலா. பானமா போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? வெனஸுவேலா, எல் சால்வடார் எல்லாம் இந்த பத்து நாட்டுப் பட்டியலில் இருப்பதும் இந்த அளவையைச் சந்தேகிக்கச் சொல்கிறது. ஆனால் நமக்குத் தோன்றக் கூடிய சந்தேகத்தின் அடிப்படைக் காரணங்களை எல்லாம் இந்த அளவை முயற்சி செய்தவர்களே பட்டியலிட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் எதிர்மாறான நிலையிலேயே மக்களை வைக்க வேண்டும், ஆனால் அம்மக்களோ மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாகவே சொல்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. மனிதரை அறிவதுதான் எத்தனை சிரமம் என்று தோன்றுகிறது. மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணம், குடும்பம் என்னும் அமைப்பு இந்நாடுகளில் சிதையாமலும், வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து விடுபட்டு அடைக்கலம் புகக் கூடிய நல்ல இடமாகவும் இருப்பது என்று இந்த உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.

மாறாக, தாம் மிக துக்கமான நிலையில், நிம்மதியற்ற வாழ்வில், நம்பிக்கை இல்லாத நிலையில் இருப்பதாக மக்கள் சொல்லும் நாடுகளில் முதல் பத்து நாடுகளின் பட்டியல் நாம் எதிர்பார்க்கக் கூடிய நாடுகளே. அவற்றில் பெரும்பான்மை முன்னாள் சோவியத் யூனியனின் அங்க நாடுகள். சில எக்கச் சக்கமான எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். அவற்றில் நேபால் ஒரு நாடு.

இந்தப் பட்டியலைப் பார்த்தால் இந்த ஆய்வுக்கு ஏதோ அரசியல் சாய்வு இருக்குமா என்று கேட்கத் தோன்றலாம்.

ஆனால் ஒரு முறை இதைப் படித்துதான் பாருங்களேன், என்ன ஆகிவிடப் போகிறது?

http://247wallst.com/special-report/2014/05/22/the-worlds-most-content-and-miserable-countries/

oOo

கடவுள் உகாண்டாவைக் காதலிக்கிறாராம், ஐயோ கடவுளே!

god_loves_uganda_Documentary_Africa_Evangelism_Christianity_Church_Money_Poor_Rich_Wealth_USA_west_Religion

மூட நம்பிக்கைகளும், ஒற்றைத் திரிக் கருத்துகளுமே நிரம்பிய மதம் எதுவானாலும் அது வாழ்வுக்கு விஷத்தைத்தான் அதிக பட்சமாகக் கொடுக்கும் என்பதே உகாண்டாவிற்கு நேர்ந்த கதை பற்றிய கட்டுரையில் புரிகிறது. ஒரு நாட்டில் விஷம் கக்கும் மதம் இன்னொரு நாட்டில் சுதந்திர ஜோதியாகத் தெரிவது என்பது நிச்சயம் இரண்டாவது நாட்டில் அதன் பிரச்சாரத் தந்திரம் வெற்றி பெற்றதாலிருக்கலாம் அல்லது அந்நாட்டு அறிவாளர்களுக்கு நிஜமாகவே புத்தி மட்டு என்பதாலுமிருக்கலாம். விவிலியத்தில் சொல்லி இருக்கிறதில்லையா, சில காசுகளுக்கு கருணாளரையே விற்கக் கூடியவர் அவரருகேயே உண்டு என்று. அதேதான், சொந்த நாட்டையே சில காசுகளுக்காகவோ, அல்லது சொந்த வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு ஈடுகட்ட அந்நாட்டுக்குப் பெரும் பாதகத்தைக் கொணர்வது சரிதான் என்ற நம்பிக்கையிலோ, அல்லது உண்மையிலேயே வேலை செய்யாத ஆய்வறிவாலேயோ இப்படிக் காட்டிக் கொடுத்து நிம்மதி அடையும் அறிவாளர்கள் ஒரு நாட்டில் அதிகம் இருக்கலாம். அந்நாடு ஏன் இந்தியாவாகவும் இருக்கிறது என்பதுதான் நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயம். இந்தக் கட்டுரையில் இந்தியா இப்படியே அந்நியக் கருணாளர்களை நம்பிக் கொண்டிருந்தால் என்ன நிலைக்கு வந்து சேரும் என்பதற்கு ஒரு முன்னோட்டம் கிட்டுகிறது. அந்த நாடு உகாண்டா. அன்னியக் கருணாளர்கள், மனிதர்களை ஏதோ ஒரு கடவுளுக்காக ‘அறுவடை’ செய்ய வந்தவர்கள் உகாண்டாவை என்ன பயங்கர நிலையில் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதே பயங்கர நிலை இந்தியர்களுக்கு வரவேண்டுமென்று எத்தனை பேர் முனைந்து வேலை செய்கிறார்கள்!

ஆனால் அப்படி உகாண்டாவுக்கு என்னதான் நேர்ந்தது? இந்தக் கட்டுரையைப் படித்தால் புரியும்.

http://www.slate.com/blogs/outward/2014/05/23/god_loves_uganda_shows_how_american_evangelicals_exported_homophobia_to.html

oOo

ஐரோப்பாவில் வலதுசாரி அரசியல்

European-election-graphic-Who_Sites_Votes_Elections_Polls_EU_Infographic_Parliament_Representatives

இது ஓரளவு முக்கியமான மாறுதல் யூரோப்பில். இது நடந்தால், இந்தியாவில் ஹிந்து கட்சி பதவிக்கு வ்ந்தது ஒரு பெரும் நாசகேடு என்பது போல பாவனை செய்யும் மேற்கின் பத்திரிகைகளுக்குப் பின் உலகுக்கு அற போதனை செய்ய ஒரு முகாந்திரமும் இராது. ஏற்கனவே அப்படி எழுதுவது பேசுவதெல்லாம் வெறும் ஒப்பனை, பொய்மை என்பது தெளிவாகித்தான் இருக்கிறது. இருந்தும் வெளிப்படையாகத் தெரிய வேண்டுமே. அது இந்த மாறுதல் நடந்தால் வெளியாகும். எத்தனை காலம்தான் யூரோப்பும், மேற்கும் உலக மக்கள் முன்பு பொய் முகத்தோடு உலவ முடியும்?

http://www.thedailybeast.com/articles/2014/05/21/elections-could-be-the-beginning-of-the-end-for-europe.html

oOo

விபரீத வீக்கம்

CEO_Billionaire_Pay_Compensation_Cartoon_Stockholders_Employees

விடுவிடுவென விண்ணைத்தொடும் சம்பளத்தை அடுத்த வருடமே எட்ட வேண்டுமா? ஒரு நிறுவனத்தின் CEO ஆக மாறிவிட்டால் குறைந்தபட்சம் பத்து மில்லியன் டாலர் சம்பளத்துக்கு உத்திரவாதம் உண்டாம். நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவின் பரிசீலனைப்படி இவர்களுக்கு நிறுவனப் பங்குகளை போனஸாக அளிப்பதன் மூலம் ஒவ்வொரு வருடமும் அதன் நிகர் வருமானம் அதிகரிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.  CEO க்களுக்கு இத்தனை கொடுத்துவிட்டால் பிற வேலையாட்களுக்கு என்ன மீதமிருக்கும்? அவர்களது வேலைத் திறன், துறையின் வளர்ச்சி போன்றவற்றைப் பொறுத்து போனஸ் தரப்படுமாம். இப்படிப்பட்ட சமநிலை இல்லாத திட்டத்தை முணுமுணுப்போடு ஏற்றுக்கொண்டுதான் பல நிறுவனங்கள் நடக்கின்றன.  இந்தச் செய்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயலரானவர்களின் ஊதியங்கள் எப்படி விபரீதமாக வீங்கிக் கொண்டிருக்கின்றன என்ற விவரங்களைப் பார்க்கலாம்.

வால்மார்ட்டின் தலைமைச் செயலதிகாரி (CEO) ஒரு சாதாரண வால்மார்ட் ஊழியரைப் போல எத்தனை மடங்கு கூடுதலாகச் சம்பாதிக்கிறார் தெரியுமா?  1034 மடங்கு! அது குறித்த செய்தி இங்கே

http://www.huffingtonpost.com/2013/03/29/walmart-ceo-pay_n_2978180.html

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.