தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்

வருடம் 1999

பிப்ரவரி பதினைந்தாம் தேதியன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற டில்லி டிரான்ஸ்போர்ட் பஸ் ஓட்டுனர் ஷபி ஹஸ்னைன் சைடிக்கு ஒரு சந்தோஷமான அதிர்ச்சி காத்திருந்தது. இருபதாம் தேதி டில்லியிலிருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் செல்லும் பஸ்ஸில் அவருக்கு டூட்டி. பாகிஸ்தானுக்கு பஸ் ஓட்டி செல்லுவதே ஒரு வித்தியாசமான அனுபவம். அதிலும் கூட வரும் பயணிகள் வி.வி.ஐ.பி. என்றால் கேட்க வேண்டுமா? இவருடைய 25க்கு மேலான சர்வீஸில் இப்படியும் ஒரு வாய்ப்பு.

“இதற்கு முன்னால் எட்டாம் தேதி முன்னோட்டம்  சென்ற பஸ்ஸை ஓட்டி சென்றதும் நான்தான். இருந்தாலும்பிரதமர் நம்முடன் பிரயாணம் செய்கிறார் என்றால் நான் ரொம்பவே திரில்லாகிவிட்டேன். கொஞ்சம் யோசித்துதான் பாருங்களேன்… இந்த தில்லி டிரான்ஸ்போர்ட் பஸ்சில், பிரதமர்….?! மிகவும் வித்தியாசமான சூழ்நிலை என்பதுடன் இப்படி ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணத்திற்கு நான் டிரைவர் என்று நினத்தாலே மகா பெருமை எனக்கு. தவிர இந்த நிகழ்ச்சியை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது என் பெருமையை அதிகரித்தது.”

பயணம் முடிந்து வீட்டில் மனைவி, மகள் (இவருக்கு ஒரே மகள்) மற்றும் நண்பர்களிடம் சுவாரசியமாக என்ன விஷயங்கள்  பரிமாறிக்கொண்டீர்கள்? வேறென்ன? இப்படி பிரதமருடன் அதுவும் என் சாதாரண டிடிசி (DTC) பஸ்சில்பயணம் எனக்கு கிடைக்கும் நீங்கள் யாராவது கற்பனைப் பண்ணியிருப்பீர்களா என்று பீற்றிக் கொண்டேன்.அதோடல்ல. பஸ்சில் நிறைய ஒரே வி.வி.ஐ.பி…. பிரதமர் வாஜ்பாய், நடிகர்கள் ஷத்ருகன் சின்ஹா, தேவானந்த், கிரிக்கெட் கபில் தேவ்….இவர்களையெல்லாம் என்றாவது நேரில் காண்போம் என்று நினைத்தது கூட இல்லை. இப்போது என்னடாவென்றால், பாகிஸ்தான் எல்லையின் வாகாவில் இறங்கியதும் இவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள்…வெல் டன்… என்று கூறி என்னுடன்  கைக்குலுக்கினார்கள்.”

பிரதமரும் கூடவா? “இல்லை. அவரை சுற்றி செக்யூரிடி நிறைய.. அப்படியெல்லாம் செய்துவிட முடியுமா? ஆனால்அமிர்தசரஸ’ல் பஸ்சில் ஏறும் முன்னர் நான் நமஸ்தே சொன்னதற்கு பதில் நமஸ்தே சொன்னார். பஸ் பயணம் டில்லியிலிருந்துதான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பிறகுதான் தெரிய வந்தது…. அமிர்தசரஸ்சிலிருந்துதான் என்று. பின்னரும் வாகா எல்லையிலிருந்து லாகூருக்கு ஹெலிக்காப்டரில் சென்று விட்டார். அங்கிருந்து 36 கிலோ மீட்டர்தான் லாகூர்.”

அமிர்தசரஸ’லிருந்து வாகா எல்லை வரையிலான 45 நிமிட பயணம் எப்படி இருந்தது? பிக்னிக் போலவா அல்லது ஒரு இறுக்கம் இருந்ததா? ” என்னைப் பொறுத்தவரை பயணம் என்னவோ சாதாரணமாகதான் இருந்தது. நான் வழக்கமாக வெளியூர் ரூட்டுகளில்தான் போவது வழக்கம். நகர ரூட்டுகளில் அல்ல. 31 இருக்கைகள் உள்ள பஸ். முழுவதும் பயணிகள். சிலர் நின்று கொண்டு.( அட…வி.ஐ.பி. பஸ்சிலும் தொங்கல் உண்டா??!) அதாவது பிரதமரின் செக்யூரிட்டி போலீஸ’ற்கு உட்கார இடமில்லை. அதனால் நின்று கொண்டு வந்தார்கள்.”

பிரதமர் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தாரா? மற்ற பயணிகள் மூட் எப்படி? “பிரதமர் சாதாரணமாகதான் இருந்தார். பக்கத்து சீட்டில் இருந்தவரோடு பேசிக் கொண்டு – அவர் யாரென்று எனக்கு தெரியாது.( பத்திரிகையாளர் சையிது நக்வி பிரதமருடன் அருகில் இருந்தார்.)மற்றபடி வீடியோ படம் ஒன்று – ராஜ்குமாரின் படம் ஒன்று- போடத் தொடங்கினார்கள். ஆனால் பின்னர் அதை நிறுத்த சொல்லிவிட்டார்கள். எல்லா  சீட்டுகளிலும் விமானத்தில் உள்ளமாதிரி காதுகளில் பொறுத்திக் கொள்ளும் கருவி -இசைக்காக- இருந்ததால் அவரவர் ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். தவிர வழியெல்லாம் பள்ளிக் குழந்தைகளும் மக்களும் நின்றுகொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். பிரதமரும் இவர்களுக்கு அவ்வபோது கையசைத்துக் கொண்டிருந்தார். இதெல்லாமே எனக்கு வித்தியாசமான அனுபவங்கள். வாழ் நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.”

புறப்படும் முன் தீவிரவாதிகளால் ஏதாவது நேரிடுமோ என்று லேசாக பயம் இருந்ததோ? ” எனக்கு எந்தவிதமானபயமும் இல்லை. ஆனால் பிரதமரை வைத்து ஓட்டுகிறோம். ஏதும் அசம்பாவிதம் நேராமல் இருக்க வேண்டும் என்று மட்டும் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. ஏதாவது நேர்ந்தால் நாட்டுக்கே…உலகளவில் கூட  அதிர்ச்சியாகிவிடுமே..? ஒரு கவலை இருக்கதான் இருந்தது.”

பாகிஸ்தான் மக்கள் வரவேற்பெல்லாம் எப்படி? “அதையேன் கேட்கிறீர்கள். ஜமாய்த்துவிட்டார்கள். என்னைக் கேட்டால், இங்கே நம்மவர்களைவிட ஒரு படி அதிகமாகவே உற்சாகமாக வரவேற்பளித்தனர். உடனேயே திரும்ப வேண்டுமா…இன்னும் தங்கிவிட்டுப் போகலாமே என்றெல்லாம் உபசரித்தார்கள். நன்றாகவும் பழகுகிறார்கள். சொல்லப்போனால் இங்கு இருப்பதற்கும் அங்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லை. மக்களாகட்டும், ஊராகட்டும்.”

India_Pak_Border_Lahore_Bus_Service

oOo

இருபதாந்தேதி டில்லி லாகூர் சென்ற பஸ் 21 லட்சம் ரூபாய்களுக்கு இன்ஷூர் செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பயணத்திற்கு பிரதமர் வாஜ்பாயின் இன்ஷ”ர் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 177 ரூபாய்! சாதாரணமாக பஸ்பயணங்களுக்கான தொகை இதுதானாம். வி.ஐ.பி என்பதால் தொகையை அதிகரிக்கமுடியாதாம். அஷோக்லேலண்டின் இந்த டீலக்ஸ் பஸ்சில் ( DL 13711-PA) ஏசி  தவிர சேனல் மியூசிக், வீடியோ, மடங்கும் இருக்கைகள் இப்படி வசதிகள் உண்டு. வாரத்தில் மூன்று டிரிப் டில்லி – லாகூர். இரண்டு ஓட்டுனர்கள். ஆனால் இதைக் கையாளுவதற்கு ஓட்டுனர்கள் ஸ்பெஷல் டிரெயினிங் எடுக்கவில்லை. ( இருந்தாலும், டிரைவர் ஷபியுடன்  தொலைபேசியில் பேச முயற்சித்தபோது “கொஞ்சம் பொறுங்கள். பஸ்ஸை சரியாக மூடிவிட்டு வருவார். அவரைத்  தவிர வேறு யாருக்கும் இந்த பஸ்ஸைக் கையாளத் தெரியாது…” என்று டிடிசி அலுவலக மேனேஜர் கூறினார்.)

டில்லி டு லாகூர் மொத்த பயண நேரம் 12 மணி நேரம் (“10 மணி நேரமே போதும். ஆனால் சுங்கம் மற்றும் இமிகிரேஷன் வகையறாக்களையும் சேர்த்து 12 மணி நேரம்” – ஷபி.)

oOo

வருடம் 2014: இந்த சர்வீஸ் இப்போது இல்லை. 2001 வரை இருந்தது. 2001ல் இந்திய பார்லிமெண்ட் தாக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா இடையே இருந்த உறவில்  கடும் விரிசல் விழுந்து,  இந்த சர்வீஸ் நிறுத்தப்பட்டது.

2001: பாகிஸ்தான் – இந்தியா – ஆக்ரா உச்சி மாநாடு

நடந்து முடிந்த ஆக்ரா உச்சி மாநாடு எதைச் சாதித்ததோ இல்லையோ டெலிவிஷனின் வீச்சையும், தொழில் நுட்ப சாதனங்களால் செய்தி வினியோக முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஆணித்திரமாக வெளிப்பட வைத்துள்ளது.

தொலைக்காட்சியின் வீச்சில்,  செய்தி வினியோகத்தில்தான் எத்தனை மாற்றங்கள்?

ஆரம்ப நாட்களில் அரசு அல்லது தனியார் அமைப்புகள் கொடுக்கும் செய்தியறிக்கைகள்தாம் பெரும்பாலும்  செய்திகளாக இருக்கும். ( இந்த காலத்திலும் குறுக்கு கேள்விகளுக்கு இடமளிக்காத “சுய பேட்டிகள்” அளிக்கும் வினோத புள்ளிகள் இருப்பது வேறு விஷயம்…!)

ஒரு காலக் கட்டத்தில் செய்தி சேகரிப்பவர்கள் செய்திகளையனுப்பி, அவை “சுத்தம்” செய்யப்பட்டு செய்தி வாசிப்பவரிடம் வந்து சேரும்.ஆனால் தற்போது உலகெங்கும் செய்திகள் உருவாகும்போதே உடனுக்குடன் தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் நம் வீட்டு வரவேற்பறையில் காண்பித்து விடுகின்றன. இதற்கு செய்தித் தொடர்புதுறையில் தனியார் துறைக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு முக்கிய காரணம்.

தகவல் நுட்ப சாதனங்களின் வலிமையால் ஒரு தெகல்கா லஞ்ச லாவண்யங்களை அப்பட்டமாக நமக்கு வெளிச்சம் போட்டு காண்பித்ததென்றால், தமிழகத்தில் சமீபத்தில் நடந்த கைதுகளின் போது நடந்த மனித உரிமை அத்து மீறல் செயல்களுக்கு ஆணித்திரமான ஆதாரமாக அதே தகவல் நுட்ப சாதனங்கள் நிரூபித்தன. தகவல் சாதனங்களின் நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்  செய்தி சேகரிக்கும் இன்றைய தலைமுறை நிருபர்களும் எக்கச்சக்க சாமர்த்தியமாக இருக்கிறார்கள். பழுத்த அரசியல்வாதியாகட்டும், அரசியல் சம்பந்தமில்லாத அரசு ஊழியர்களோ அல்லது தொழிலதிபர்களாகட்டும், அவர்களை முகத்திற்கு நேரே மைக்கை நீட்டி கிடுக்கி போட்டு கேள்விகள் கேட்கும் விதத்தில் அவர்கள் ஆழ் மனதில் இருக்கும் எண்ணங்களையும் வெளிப்படையாக உலகமெங்கும் தெரியப்படுத்திவிடுகிறார்கள்.” நான் எங்கு சொன்னேன்..? மீடியா திரித்து வெளியிட்டது…” என்ற சால்ஜாப்புக்கேஇடமில்லை. மிஞ்சிப் போனால் தங்கள் செயல்களை அல்லது பேச்சின் அர்த்தத்தை தங்கள் கோணத்தில் “விளக்கலாமே” தவிர கொட்டிய வார்த்தைகளிலிருந்தோ செய்த செயல்களிலிருந்தோ தப்ப முடியாது.

தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் இப்படி செய்தியைத் தோண்டி வெளிக்கொண்டு வந்தால், அதன் முன்னோடியான பத்திரிகையுலகம் அந்த செய்திகளுக்குப் பின்னால் புதைந்துள்ள செய்திகளை ஆராய்ந்து போட்டி போட்டுகொண்டுவெளியிடுவதைப் பார்க்கும்போது இன்று தகவல் சாதனங்கள் சரித்திரம் எழுதுகின்றன என்றுதான்சொல்லத்தோன்றுகிறது.

இந்த இளம் செய்தியாளர்கள் வயதிலும் அனுபவத்திலும் வேண்டுமானால் இளையவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களிடம் வெளிப்படுவது, யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் உண்மையை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் ஒரு ஆர்வம். இளம் கன்று பயமறியாது என்பதை இன்றைய செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் விதத்தைப் பார்த்தால் புரிந்து போகும்.

இப்படி வலிமை வாய்ந்த மீடியாவை ஆக்ரா உச்சி மாநாட்டில் முஷாரப் வளத்து போட முற்பட்டதில் ஆச்சரியமில்லை. நம் வெளியுறவு அமைச்சகத்திற்குதான் இந்த சாமர்த்தியம் இருக்கவில்லை.

செய்தி சேகரிக்கும் விதத்தில் இப்படி அழுத்தமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது இன்று ஒரு படி மேலே போய் இந்த ஆக்ரா உச்சி மாநாட்டில் செய்தியளிக்கும் ஸ்தாபனங்களே செய்தியாக மாறிவிட்டது அடுத்த கட்டம். செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் தனிப்பட்ட முறையில் பரிமாறிக்கொள்ளவதாக இருந்த ஒரு உரையாடலைப் பாகிஸ்தான் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்தது ஆக்ரா பேச்சு வார்த்தை முடிவு பெறாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் பாதி நிகழும்போதே, இந்திய தகவல், தொடர்பு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முதலில் மீடியாவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் பற்றி பேட்டி கொடுத்ததால்தான் பாகிஸ்தானும் தன் பங்குக்கு செய்தி நிறுவன ஆசிரியர்களுடன் உரையாடலை ஒளிபரப்பு செய்தது என்பது அவர்கள் தரப்பு வாதம்.

எது எப்படியோ… இந்த ஆக்ரா சமாசாரத்தில் வெளிப்பட்ட இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயமும் வெளிப்பட்டது.இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவும் தனி மனிதர்களுக்கிடையே இருப்பதுபோல்தாம். உறவுகளில் – அது இரு நாடுகளுக்கிடையே ஆகட்டும், அல்லது தனி மனிதர்களிடையே ஆகட்டும் – லயம் இழைவதும்மறைவதும் சிறு சிறு செயல்கள்,சின்ன சின்ன அசைவுகள், வார்த்தைகள், இவை அனுப்பும் சங்கேதங்களில் இருக்கிறது.

ஒரு உடன்பாடு தயாரிக்கப்பட்டு கையெழுத்தாகும் நிலையில் ஏனோ இந்தியா பின் வாங்கிவிட்டது என்பதுபாகிஸ்தானின் குற்றச்சாட்டு. ஆனால் ஏன் இந்தியாவுக்கு ஒப்புதல் இல்லை என்பது முஷாரபுக்கு புரியாமல் இல்லை.

பேச்சு வார்த்தை என்றால் கொடுக்கல் வாங்கல் இரண்டுமே இருக்க வேண்டும். முஷாரப் இந்த முறை சுத்தமாக வாங்கிப்போக மட்டுமே வந்துள்ளார்.கொடுக்கத் தயாராக இல்லை.

காஷ்மீர்தான் முக்கியப் பிரச்சனை என்று சொல்லும் முஷாரப், இந்தியப் பகுதி ஒன்றில் தன் மூக்கை நுழைத்து அதை முக்கியப் பிரச்சனையாக்கியதே தாங்கள்தாம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்.காஷ்மிரில் வன்முறைக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நியாயமான கவலையை அவர்  ஏற்றுகொள்ள தயாராக இல்லை.

மொத்தத்தில் இந்தியா பாகிஸ்தான் விஷயத்தில் என்றுமே உறவுகள் பிரமாதமாக சொல்லிக்கொள்வதுபோல் இருக்கவில்லை. புதிதாக ஒன்றும் அபஸ்வரம் நுழையப்போவதில்லை. இன்று ஆக்ரா நிகழ்ச்சிகளுக்குப் பிறகுநிலை 1947க்கு திரும்பி விட்டதோ என்று கூட தோன்றுகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் மக்கள், இருண்ட குகையின் முடிவில் ஒரு கீற்று வெளிச்சம் வராதா என்று இன்னும் மயிரிழை நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

oOo

வருடம் – 2014:  வரும் வருடங்களில்  மேலே உள்ள நிகழ்ச்சிகளின் வெர்ஷன் 2 மீண்டும் நடக்கலாம் ஆனால்  கடைசி வரிகளில்  மாற்றம் இருக்குமா?

0 Replies to “தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்”

  1. வாஜ்பேயி காலத்து செய்தியா அருணா. பஸ்ஸில் போகிறவர்களை எல்லோருமே பேட்டி எடுத்திருப்பார்கள். நீங்கள் ஒருவர்தான் டிரைவரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள் அதுவும் சுவையான கேள்விகளுடன். மிக நன்றாக இருந்தது அருணா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.