உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமிடுவீர்கள்.
கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ் நீதிமன்றத்தில் கூகுளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்திருந்தது. இரு வாரம் முன்பு மேல் முறையீட்டில் ஆரக்கிளுக்கு சார்பாக தீர்ப்புக் கிடைத்துள்ளது.
கார்ல் சாகன் சொன்ன மேற்கோளை முன்வைத்து இந்தப் பிரச்சினையை ஆராயத் துவங்கலாம்: “If you wish to make an apple pie from scratch, you must first invent the universe.” (ஆப்பிள் அல்வாவை ஆதியில் இருந்து செய்ய வேண்டுமானால், முதலில் நீங்கள் அகிலத்தை உருவாக்குவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.)
ஜாவா என்னும் நுட்பம் இருபதாண்டு காலமாக இருக்கிறது. ஜாவா என்பது கணினிமொழி. என்ன மாதிரி கட்டளைகள் சொன்னால், கணினி எப்படி இயங்கும் என்று சங்கேதமாக கணினியோடு உரையாடும் மொழி. அதே ஜாவா கொண்டு, தொலைக்காட்சியை இயக்கலாம். அதற்கு தனியாகக் கட்டளைகள் உண்டு. இந்த மாதிரி உபரி கட்டளைகளும் ஜாவா மொழியில் உள்ளடங்கியே இருக்கின்றன. துவக்கத்தில் அ,ஆ,இ,ஈ எனப் பயில ஆரம்பிக்கலாம். நாளடைவில் விருத்தம் பாடுமாறு வளர்ச்சி அடைந்துவிட்டால், செல்பேசியோடு பேசும் ஜாவா, இரகசியமாக சங்கேதமொழியில் பேசும் ஜாவா எனப் புலவராகலாம். வெண்பா இயற்றும் வல்லுநராகிவிட்டால், திரைப்படம் எடுக்கும் அனிமேஷன் மாயாஜால ஜாவா கொண்டு வித்தகராகிவிடலாம்.
கடந்த இருபதாண்டு காலத்தில் கணித்துறை எங்கெல்லாம் கால் பதித்ததோ, அங்கெல்லாம் ஜாவா மொழியும் சென்றிருக்கிறது. ஃப்ரிட்ஜ்ஜில் துவங்கி இசைக்கருவிகளின் நுட்பம் தொட்டு விண்கலன் வரை எங்கும் வியாபித்திருக்கிறது ஜாவா மொழி. அவை எல்லாவற்றையும் திறமூலமாக்கி, எல்லோருக்கும் பயன்படுமாறு இலவசமாக விநியோகிக்கப்படும் மொழியாக ஜாவா இருக்கிறது.
அதெல்லாம் 2006-07 காலகட்டம். பன்னெடுங்காலமாக திறவூற்றுப் பயனாளர்களுக்கும், இலவசமாக மென்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கும் ஜாவாவும், ஜாவா சார்ந்த நிரலிகளும் வரப்பிரசாதமாக இருந்தது. மைக்ரோசாஃப்டுக்கு எதிராக மல்லுக்கட்டுவோர் எவராக இருந்தாலும் ஜாவா பக்கம் சாய்ந்தனர். எவருக்கெல்லாம் விண்டோஸின் கெடுபிடியான உரிமங்களும் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கேட்கும் அடாவடி விலைகளும் ரசிக்கவில்லையோ, அவர்கள் எல்லோரும் ஜாவா பக்கம் நின்றனர்.
ஜாவா எப்படி எழுதப்பட்டது என்பதும் ஜாவா எப்படி உருவாக்குவது என்பதும் திறந்த ரகசியமாக, எல்லோரும் அணுகும் விதத்தில் இணையத்தில் கட்டுப்பாடற்றுக் கிடந்தது.
அதைப் பயன்படுத்துவோருக்கு இரண்டு நிபந்தனை மட்டும் வைக்கப்பட்டது.
1. ஜாவா-வின் மூலத்தை அப்படியே லபக்கி, இன்னொரு பெயரில் விற்கக்கூடாது.
2. ஜாவா என்று சொல்லி எதையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து போங்காட்டம் கூடாது. அதன்கூட லாகிரி வஸ்துக்கள் சேர்த்தீர்கள் என்றால் தீட்டு; ஜாவா மூலத்தில் இருந்து சிலதை நீக்கினாலும் அபச்சாரம்.
இந்த இரண்டு நிபந்தனைகளுமே முக்கியமானது.
இலவசியமாக இணையத்தில் கிடைப்பதை, தனி நிறுவன லாபத்திற்காக மறுசுழற்சி செய்யக் கூடாது என்பது முதல் விதி. அதாவாது, ஜாவா உடன் இணைந்து உங்கள் மென்பொருள் இயங்கலாம். தமிழில் தட்டச்ச ஜாவா உதவியுடன் நீங்கள் நிரலி எழுதி விற்கலாம். தப்பே கிடையாது. ஆனால், வெறுமனே ஜாவா நிரலியை எடுத்து “பாவ்லா” எனப் பெயர் மாற்றி விற்கக் கூடாது.
இரண்டாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.
செல்பேசிகளை இயக்க தன்னுடைய ஆண்ட்ராய்ட் நிரலிக்கு ஜாவா போன்ற மொழியை கூகுள் தேர்ந்தெடுத்தது. பார்ப்பதற்கு ஜாவா போலவேத் தோற்றமளிக்கும். இயங்குவதற்கு ஜாவா போலவே இருக்கும். ஜாவா பயன்படுத்தினோருக்கு ஆண்டிராயிடின் டால்விக் (Dalvik) புழங்குவதில் சிரமமே இருக்காது. ஆனால், அதன் பெயர் ஜாவா இல்லை. டால்விக்; ஆண்டிராய்ட் (Android) வழங்கும் டால்விக்.
2006ல் இதை கூகுள் அறிமுகம் செய்கிறது. ஜாவா-வின் அன்றைய எஜமானரான “சன் (Sun) மைக்ரோசிஸ்ட”மும் இதை இரு கை தட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்கிறது. ‘இத…. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! ஜாவா மொழி போல் ஆயிரம் மொழிகள் பூக்க வேண்டும். அவற்றில் எது வேகமாக இயங்குகிறதோ, எது பரவலாகக் கிடைக்கிறதோ, எது எளிதாக உபயோகமாகிறதோ… தொழிலுக்கேற்ற மாதிரி வித்தியாசப்படுத்திக்கணும்!’ என்கிறார் ஜாவா முதலாளி ஜொனாதன் ஷ்வார்ஸ்.
இரண்டாண்டுகள் செல்கின்றன. ஜாவா கைமாறுகிறது. இப்பொழுது ஆரக்கிள் நிறுவனம் வசம் ஜாவா இருக்கிறது.
திறமூலம் மெல்ல மெல்ல நிர்மூலமாகிறது. புதிய ஷரத்துகளின்படி ஜாவா மொழியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மாறுகிறது. சும்மா வேடிக்கை பார்த்தால்… சரி. ஆனால், ஜாவா போல் எதுனாச்சும் இயங்கினால், எங்களின் ஆசி உங்களுக்குத் தேவை என செல்லமாக மிரட்டும் மொழி.
மேலும் வக்கீல் படையே ஆரக்கிள் வைத்திருக்கிறது. எங்கே, எவன் கிடைப்பான் என நாளொரு வழக்கும் பொழுதொரு கேஸுமாக ஜெயிப்பது ஆரக்கிளுக்கு கை வந்த கலை.
இதுவரை ஆண்டிராய்ட் டால்விக்-கிற்கும் ஜாவா-விற்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது என கற்பூரம் அடித்து பொதுவில் சத்தியம் செய்த கூகுள் மேலாளர்களின் தொனியும் மாறுகிறது. ஆரக்கிளுடைய ஜாவா மாதிரி எங்களுடைய டால்விக் இருப்பது ரொம்ப அகஸ்மாத்தானது. ஜாவா-வைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதனால், அதன் தோற்றமும் இன்ன பிறவும் டால்விக் நிரலியில் வெளிப்படலாம் என பூசி மெழுக ஆரம்பிக்கிறது கூகுள்.
இப்பொழுது அமெரிக்க வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடலாம்.
அது 1946ஆம் வருடம். ஒன்றுக்கிருக்கும் கைக்குழந்தையின் அபிஷேகம் தன் மீது சிந்தாமலிருக்க பிளாஸ்டிக் திரைச்சீலையை எடுத்து அவசரத்திற்கு அரைக்கச்சை ஆக்குகிறார். புத்தாடையும் பாதுகாக்கப்படுகிறது. டயாப்பர் (Diaper) காப்புரிமையும் கிடைத்துவிடுகிறது. ஐந்தே ஆண்டுகளில் நியு யார்க்கின் நவநாகரிக வீதிகளிலும் வலம் வருகிறது. நூறு ரூபாய்க்கு பவுன் விற்ற அந்தக் காலத்து மதிப்பீட்டில் ஒரு மில்லியன் டாலருக்கு அந்த உரிமைக்காப்பை விற்றும் இருக்கிறார். தோய்க்கும் முறையாகட்டும்; உண்ணும் விதமாகட்டும்… அமெரிக்காவில் எதுவாக இருந்தாலும் உங்களுக்கென் ஒரு பாணி இருந்தால் அதை தனியுரிமைச் சான்றிதழ் வாங்கி காப்புரிமை பெற்றுவிட வேண்டும் என்பது மூலமந்திரம்.
”இந்தி – சீனி பாய் பாய்’” ஆக இருந்த மாதிரி ஜாவா-வை ஆரத் தழுவி ஆண்டிராட் டார்விக் உருவானது. ஜாவா மொழியில் எழுதிய எந்த நிரலியும் டார்விக் சூழலில் இயங்குமாறு கூகுள் செய்திருக்கிறது. நியாயப்படி பார்த்தால் இதற்கு ஜாவா உரிமையாளரான சன் மைக்ரோசிஸ்டத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால், அண்ணன் – தம்பியாக இருந்த அந்தக் காலத்தில் ‘பொது எதிரி மைரோசாஃப்ட்டும் விண்டோஸும் ஒழிந்தால் சரி… கூகுள் சின்னப் பயல்’ என விட்டுவிட்டார்கள்.
இப்பொழுது ஆரக்கிள் வழக்குத் தொடுத்துவிட்டது. இதுதான் ஆரக்கிளின் வாதம்: “எங்களின் ஜாவா இடைமுகம் (API) ஓவியம் போன்றது. ஒரே ஒரு பிக்காஸோதான் இருக்க முடியும். அவர் உருவாக்கியதுதான் அசல் குவர்னிகா. மற்றதெல்லாம் டூப்பு.”
கூகுளும் உவமையில் பதிலடி கொடுத்தது: “ஜாவா என்பது நூலகம். அந்த நூலகம் பாரிஸில் இருக்கலாம். லண்டனில் இருக்கலாம். கன்னிமாராவாக இருக்கலாம். எந்தப் புத்தகம் எப்படி எடுக்க வேண்டும் என்பது நூல் நிலையம் சென்ற எவருக்கும் அத்துப்படி. ஒரு துறை சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் ஒருங்கேக் கிடைக்கும். புனைவுகள் இன்னொரு பக்கம் இருக்கும். அகரவரிசைப்படி இருக்கும். இதெல்லாம் எல்லா நூலகத்திலும் ஒரே மாதிரிதான். சில நூலகத்தில் மாடியில் அபுனைவுகளும், தரைத்தளத்தில் கதைப்புத்தகங்களும் வைத்திருப்பார்கள். அப்படித்தான் நாங்கள் கொஞ்சம் மாற்றி அடுக்கி இருக்கிறோம்.”
புத்தகங்களைக் காப்புரிமை ஆக்கலாம். அதை கூகுள் மதிக்கிறது. ஆனால், புத்தகங்களை எப்படி வைத்திருக்கிறோம் என அறிவிப்பதை காப்புரிமை ஆக்க இயலாது என்கிறது கூகிள்.
அதாவது, புத்தகத்தினுள் இருக்கும் விஷயங்கள் தொழில் இரகசியங்கள். நிரலி எப்படி இயங்கும் என்பதை உணர்த்தும் சூட்சுமங்கள். அவற்றை கூகுள் சுடவில்லை. ஆனால், லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் போடும் அட்டவணை என்பது ரகசியமே அல்ல. இன்ன இன்ன களங்கள் இருக்கின்றன என்று பட்டியல் போடுவதை காப்புரிமை ஆக்க முடியாது என்கிறது.
இது இப்போதைக்கு முடியாத பில்லியன் டாலர் கணக்கு வழக்கு. இதே போல் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் கூட போராட்டம் நெடுங்காலமாக நீடித்து இருந்தது. அதன் முடிவில் சொன்ன தீர்ப்பு, “பிரச்சினையைத் தீர்க்க ஓரிரு பாதைகளே இருக்கும்போது, காப்புரிமையெல்லாம் செல்லுபடி ஆகாது.”
அதைவிட ஆரக்கிள் தோன்றிய கதையோடு இந்த வழக்கை முடிக்கலாம். ஆரக்கிள் என்பது உங்கள் விஷயங்களை கணினியில் நம்பகமான முறையில் சேமிக்க வைக்க உதவும் மென்பொருள். இந்த மாதிரி “தரவுதளங்கள்” இப்படித்தான் இருக்க வேண்டும்… இவ்வாறுதான் இயங்க வேண்டும்… இந்த மாதிரிதான் செயல்பட வேண்டும் என ஒவ்வொரு நுண்விவரங்களையும் பொதுவில் எழுதி வைத்தவர் “ஐ.பி.எம்.” (IBM) நிறுவனமும் அதன் டெட் காட் (Ted Codd) என்பவரும். அவர்கள் சொன்னதையும் வெளியிட்டதையும் வைத்து உருவான ஆரக்கிளே இன்று ’நான் சொன்னதை நீ எப்படி செய்யலாச்சு’ என்பது கூகுளை சாடுவதே நிரலியின் விதி.
ரொம்ப நாளைக்குப் பிறகு, கணினி தொழில் குழாய் சண்டை மிகவும் நகைச்சுவையாக படிப்பதற்கு நன்றாக இருந்தது. இடையே பாலா கொடுத்த எளிய விளக்கங்கள்ருமையாக இருந்தது.
அதென்ன ஜாவா கணிமொழி? எனக்குத் தெரிந்து கருணாநிதியின் மகள் கணிமொழி.யார் கண்டார்கள் – இதுவும் 2ஜி -யைப் போல இழுத்துக் கொண்டு எத்தனை கோடியில் முடியுமோ?
Excellent article Bala , especially i liked the way you summarized it in last paragraph . This case is like a producer telling my pasamalar story has been looted by 1000 directors so they need to pay me .
அறிவியலும் தமிழும் இணையும் அழகே தனி.. இது போல் Science சம்பந்தப்பட்ட கட்டுரை நான் படித்ததே இல்லை.. மிகதெளிவான அதே சமயம் எளிமையாகவும் புரியும்படியான எழுத்து நடை.. அட்டகாசம், பாலா…