ஒரு யானையும் நான்கு ஒற்றர்களும்

தலைமை ஒற்றன் மாடலன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். அவனுடைய கருத்த முகம் மேலும் கருத்திருந்தது. கண்கள் மிளகாயாய் சிவந்திருந்தன.
‘ஐயா, சாத்தான்கோட்டை ஒற்றர் குழுத்தலைவன் நரியன் வந்திருக்கிறார்…’
காவலாளி வணங்கித் தெரிவித்தான்.
‘வரச்சொல்!’
தலைமை ஒற்றன் மாடத்தில் வைத்திருந்த .தலைப்பாகையை அணிந்துகொண்டான். தன் இருக்கையில் அமர்ந்தான்.
நரியன் நெளிந்து குழைந்து குனிந்து வணக்கம் தெரிவித்தான்.
‘உன்னை ஏன் வரச்சொன்னேன் தெரியுமா?’ தலைமை ஒற்றனின் குரல் கடுமையாக ஒலித்தது. பூனையிடம் சிக்கிய எலியென உணர்ந்தான் நரியன்.
‘சொல்லுங்கள் ஐயா. புலிப்பாலானாலும் கொண்டுவருகிறேன்.’
‘கிழித்தாய். நீ ஒரு துப்பு கெட்டவன், ஆட்டுப்பாலைக்கூட உன்னால் கொண்டுவரமுடியாது.’
அறையில் வெப்பம் அதிகரித்தது. நரியன் ஊமையாய் நின்றான். அவன் தலைக்குள் பூமி வேகமாய் சுற்றியது.
‘முந்திரிக்காட்டில் கிழவியைக் கற்பழித்தவன் யார்? கண்டுபிடித்தாயா?’
’குற்றவாளியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் ஐயா.’
‘ஒரு வருடமாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை?
‘வேங்கையூர் கடைவீதியில் கொள்ளை நடந்து எத்தனை நாளாகிறது?’
‘ஆறு திங்களாகிறது ஐயா?’
‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பூ தொடுத்துக் கொண்டிருக்கிறாயா?’
‘விரைவில்கண்டுபிடித்துவிடுவோம் ஐயா,
நெருங்கிக் கொண்டிருக்கிறோம், கண்டுபிடித்துவிடுவோம் – இப்படி நழுவல் பதில்கள் எனக்கு வேண்டாம். குற்றவாளிகளை ஏன் பிடிக்கவில்லை?’
’ஐயா, உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.. குற்றவாளிகள் அரண்மனைக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்..’…நரியன் குழைந்தான.
‘குற்றவாளிகள் யாரென்பது பற்றி எனக்கு கவலையில்லை. குற்றம் நடந்தது. வழக்குப் பதிவானது. வழக்கை ஏன் முடிக்கவில்லை? எப்போது முடிப்பாய்?’
வேதாளம் முருங்கை மரமேறிவிட்டதென்பதை நரியன் புரிந்துகொண்டான்.
‘ஒரு திங்களில் இரண்டு வழக்குகளையும் முடித்து விடுகிறேன், ஐயா!’
அப்பாடா, தப்பித்தோமென்று நினைத்தான் நரியன். தலைமை ஒற்றன் அடுத்த சுற்றைத் துவங்கினான்.
‘உன் ஒற்றர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள்?’
‘ஒட்டுண்ணி, கள்ளச்சாவி, முகமூடி மூன்று பேர் ஐயா.’
‘அவர்கள் உளவு சேகரிக்கிறார்களா? ஆடு-புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்களா?’’
‘நேரத்துக்குச் சோறில்லை. தூக்கமில்லை. ராப்பகலாக உழைக்கிறார்கள் ஐயா!’
‘ராப்பகலாக உழைப்பவர்களுக்குக் கோட்டையில் ஒரு யானை காணாமல் போனது எப்படியடா
தெரியவில்லை?’ தலைமை ஒற்றன் கர்ஜித்தான்.
நரியனின் முகம் வெளிறிப்போயிற்று.
‘உன்னால் ஒற்றர் துறைக்கே அவமானம் கோட்டையில். ஒரு யானை காணாமல் போகும்வரை
தூங்கிக் கொண்டிருந்திருக்கிறாய். படைக் கணக்கெடுப்பில் கணக்கன் கண்டுபிடித்து சொல்கிறான்.அரசர் எனக்குத் தகவல் அனுப்புகிறார். அதுவரை நீ என்ன செய்து
கொண்டிருந்தாய்?அடைகாத்துக் கொண்டிருந்தாயா? ஏன் எனக்குத் தகவல் தரவில்லை?
சிரைக்கவா உங்களுக்கு சாத்தான் கோட்டை ஒற்றன் வேலை? உங்கள் நால்வரையும் பணிநீக்கம் செய்கிறேன்..’
மறுகணம், நரியன் நெடுஞ்சாண்கிடையாக தலைமை ஒற்றன் காலில் விழுந்தான்.
‘ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள்..நாங்கள் உங்கள் பிள்ளைகள்..அறியாமல்
தவறுசெய்துவிட்டோம்.. எங்களை மன்னித்துவிடுங்கள்…..’
’மூன்று நாட்களுக்குள் காணாமல் போன யானை என்முன்னால்நிற்கவேண்டும்.. தவறினால் பணிநீக்கம் உறுதி. போ வெளியே..’
“..”

the-guards-and-the-elephant-1

 2

தலைமை ஒற்றன் மாளிகையிலிருந்து தட்டாஞ்சாவடிக்குப் போகும் வழியில் பிரியும் கிளைச்சாலையின் கடைசியில் இருபுறமும் பாக்கு மரங்கள் வரிசையாக நிற்கும்
ஒரு பாதையில் இருந்தது சாத்தான்கோட்டை ஒற்றர் குழுவின் அலுவலகம்.
அதன் ஒருபுறமிருந்து பார்த்தால் சாத்தான் கோட்டை மதில் தெரியும். இன்னொரு புறம் வெள்ளையாற்றங்கரையில் நிற்கும் நீண்ட தென்னந்தோப்பு. தென்னந்தோப்பின்
நடுவில் குதிரைகளுக்காக வளர்க்கப்படும் புல்நிறைந்த வளாகம். குதிரை சற்றுநேரம் புல் மேயட்டுமென்று அந்த வளாகத்தில் நிறுத்திவிட்டு நரியன்
தன் அலுவலகத்தை நோக்கி நடந்தான். அது ஒரு சிறிய வீடு போலிருந்தாலும் அதனுள்ளே ஒற்றர்கள் உண்ணவும் தங்கவும் அனைத்து வசதிகளுமிருந்தன.
வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் மூன்று குதிரைகள் சேணமில்லாமல் நின்று கொண்டிருந்தன..
ஒற்றர்கள் கள்ளச்சாவி, ஒட்டுண்ணி, முகமூடி மூன்று பேரும் ஒரு அறையில் ஆடு-புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
நரியன் சந்தடியில்லாமல் உள்ளே நுழைந்தான்.
‘ஆடு-புலி ஆட்டமாடா ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்.
தலைமை ஒற்றன் உங்களுக்கு ஆப்பு வைத்துவிட்டான்..’
‘வரும்போதே தலையில் கல்லைப் போடுகிறாய். என்ன நடந்தது?’
கள்ளச்சாவி, ஒட்டுண்ணி, முகமூடி மூன்றுபேரும் ஆட்டத்தை நிறுத்தினார்கள். சற்றுப் பதட்டத்துடனிருந்தான் கள்ளச்சாவி..
நரியன் தலைமை ஒற்றனின் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டுச் சொன்னான்.
‘முந்திரிக்காட்டில் கிழவியைக் கற்பழித்தது அமைச்சர் பொன்ன்னின் மைத்துனன் குணாளன். குடிபோதையில் சாவிக்கொத்தை சம்பவ இடத்தில் விட்டுச் சென்றுவிட்டான். சாவித்தகட்டில் அவன் பேர் இருக்கிறது. அதைப் பத்திரமாக வைத்திருக்கிறோம. குணாளனைச் சிறை
பிடிக்கிறோமென்றோம். நீதான் வேண்டாமென்றாய். என்னைப் பணிநீக்கம் செய்தால் தலைமை ஒற்றனிடம் நான் நடந்ததைச் சொல்லிவிடுவேன்,’ மிரட்டினான் கள்ளச்சாவி.
‘அமைச்சரின் மைத்துனன்.. குணாளனைச் சிறைபிடிக்க வேண்டாமென்று சொன்னேன். வழக்கை முடிக்க வேண்டாமென்று சொன்னேனா? நீ வழக்கை முடித்திருக்கவேண்டியதுதானே?
தலைமை ஒற்றன் என்னைத் தாளிக்கிறான்.’
’குற்றவாளியைப் பிடிக்காமல் வழக்கை எப்படி நரியா முடிப்பது?’ –ஒட்டுண்ணி திருப்பிக் கேட்டான்.
‘ஆமாமடா, இதெல்லாம்கூட நான் சொல்லித் தரவேண்டும். முந்திரிக்காட்டுப் பகுதியில் வேறொரு குணாளனைக் கண்டுபிடித்து மந்திரியுங்கள். சிறையிலடையுங்கள். வழக்கை
முடியுங்கள்.. தலைமை ஒற்றனின் தொல்லை தாங்க முடியவில்லை..’
கள்ளச்சாவி ‘இது ஒரு பிழைப்பா?’ எனச் சொல்லித் தலையிலடித்துக்கொண்டான்.
‘கண்ணு, கள்ளச்சாவி, நாம் இப்படித்தான் பிழைத்தாகவேண்டும். வேறு வழியில்லை. அரண்மனைக்கு என்னுடன் வந்து பார் தெரியும். பூனை இளைத்தால் எலிகளுக்கு கொண்டாட்டம் கதை நடக்கிறது.. அரசர் பொம்மையாக்கப்பட்டுவிட்டார். அமைச்சர்கள் ஒவ்வொருவனும் தலைக்குத் தலை அதிகாரம் செய்கிறான், அதிகாரிகளே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .நாம் எந்த மூலை? ஒற்றர் துறையிடம் முன்பெல்லாம் அச்சமிருந்தது. இப்போது ஒருவனுக்குமில்லை. நம் பிழைப்பு தாசிப்பிழைப்பாகி விட்டது. ஒருவன் ஆடச்சொல்கிறான். ஒருவன் பாடச் சொல்கிறான். ஒருவன் படுக்கச் சொல்கிறான். ஒருவன் மண்டி போடச் சொல்லி வேட்டியைத் தூக்கிக் காட்டுகிறான். நாம் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும்,’ பாதி யதார்த்தமாகவும் பாதி ஆலோசனையாகவும் நரியன் கூறினான்.
‘தலைமை ஒற்றனிடம் நம் நிலைமையைச் சொன்னாலென்ன?’ – கள்ளச்சாவி விவாதித்தான்.
‘முட்டாளே. அவனவன் அவன் பதவி, அவன் வசதி, பொற்காசு மூட்டைகளைத் தேடிக் கொண்டிருக்கிறான். எவனும் நியாயம் நீதியைப் பற்றிக் கவலைப்படவில்லை.. நீ பிழைக்கத தெரியாத உதவாக்கரையாயிருக்கிறய். முதலில் உன்னை உன் வேலையைக் காப்பாற்றிக்கொள். நான் சொன்னதைச் செய்,’ நரியன் கண்டிப்புடன் கட்டளையிட்டான்.
’வேங்கையூர் வழிப்பறி வழக்கை அதேபோல் முடித்துவிடலாமா?’ முகமூடியைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டே கேட்டான் ஒட்டுண்ணி.
’வேறு வழியில்லை. மாசாத்துவான்தான் வேங்கையூர் சாலைக் கொள்ளைக்குக் காரணமென்று எனக்கும் தெரியும். ஆனால், மாசாத்துவான்- அரசரின் ஆலோசகனாக மட்டுமில்லை. மகுடம் சூடாத அரசனாய் இருக்கிறான். அரசர் அவன் கைத்தடியாக இருக்கிறார். அரசகோபம் நமக்கெதற்கு? கடுக்காபாளயத்தில் பத்துபேர் புரட்சியைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருவரைக் கொள்ளயர்களென்று சிறையில் தள்ளுங்கள். வழக்கை முடியுங்கள். தலைமை ஒற்றன் கடுங்கோபத்திலிருக்கிறான்..’
‘தலைவா, குற்றவாளிகளைப் பிடித்தால் அரசருக்குக் கோபம். அமைச்சருக்குக் கோபம். பிடிக்காவிட்டால் தலைமை ஒற்றனுக்கு கோபம். ஒற்றர்கள் நாங்கள் என்னதான் செய்யவேண்டும்?’ முகமூடி எரிச்சலுடன் கேட்டான்.
‘இன்றைக்கு இந்த நிமிடம் கோட்டையில் காணாமல் போன யானையை நீங்கள் கண்டுபிடித்துத் .தலைமை ஒற்றன் முன்னால் நிறுத்தவேண்டும். தலைமை ஒற்றன் தந்திருப்பது மூன்றுநாள் அவகாசம். தவறினால் பணிநீக்கம் உறுதி. பன்றிவிட்டை பொறுக்கிப் பிழைக்கவேண்டியிருக்கும். அதனால் ஒழுங்காய் யானையைக் கண்டுபிடிக்கும் வழிகளை யோசித்து வையுங்கள்…எனக்கு கோட்டையில் ஒரு ஜோலி இருக்கிறது. அமைச்சர் மலையன் வீரனூர் மாளிகைக்குசெல்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவறிந்துவிட்டு வருகிறேன். நான் திரும்பிவந்ததும் யானையைக் கண்டு பிடிக்கக் கிளம்பவேண்டும்..’
நரியனின் குதிரை சாத்தான் கோட்டையை நோக்கிப் பறந்தது. அங்கிருந்து வீரனூர் அமைச்சர் மாளிகைக்குச் சென்றது.
3
’ஆட்டைக் காணலையென்றால் சாப்பாடாகியிருக்கும்.. புரிகிறது. முயலைக் காணலையென்றால் குழம்பாகியிருக்கும,.புரிகிறது. அம்மாம் பெரிய யானை எப்படி காணாமல் போகும்? உனக்கேதேனும் புரிகிறதா கள்ளச்சாவி?’ முகமூடி ஆரம்பித்தான்..
முகமூடி மூவரில் இளையவன். ஒற்றர் வேலைக்குப் புதியவன்.
‘எனக்குத் தெரிந்து காட்டுக்கு முயல் பிடிக்கப் போவார்கள். உடும்பு பிடிக்கப் போவார்கள். மானை வேட்டையாடப் போவார்கள். நாம் ஒரு யானையைப் பிடிககப் போகிறோம். பிடிக்காவிட்டால் பணிநீக்கம். எல்லாம் கணக்கனால் வந்த வினை…’
‘கணக்கன் இருக்கிறானே, தானும் படுக்கமாட்டான். தள்ளியும் படுக்கமாட்டான்.’
ஒட்டுண்ணி மூன்று குவளைகளில் கேப்பைக் களியில் மோரைக் கலந்து கொண்டு வந்தான். கூழைக் குடித்தவாறே மூவரும் விவாதிக்கத் துவங்கினார்கள்.
கள்ள்ச்சாவி கட்டிலில் அமர்ந்தான். ஒட்டுண்ணி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். ஒரே மூச்சில் கூழைக் குடித்து முடித்தான்.
முகமூடி நடந்துகொண்டே விவாதித்தான்
‘சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு யானை காணாமல் போனதாகச் சொல்வதே தவறு. யானை களவு போயிருக்கிறது. சதி நடந்திருக்கிறது,’ மீசையைத் துடைத்துக்கொண்டே சொன்னான் முகமூடி
‘யானை சங்கிலியை அறுத்துக்கொண்டும் போயிருக்கலாம்’ – கள்ளச்சாவி.
‘தாளிட்ட கோட்டைக் கதவைத் தாண்டி யானை எப்படிப் போகும்?’ – முகமூடி
‘ஒருவேளை யானை கோட்டை மதிலை எகிறிக் குதித்துப் போயிருக்குமோ?’ அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேள்வியெழுப்பினான் ஒட்டுண்ணி.
‘அட, போங்கய்யா. யானை களவுபோனதுதான் உண்மை,’ முகமூடி உறுதியாகச் சொன்னான்.
‘எப்படிச் சொல்கிறாய்?’ கள்ளச்சவி குறுக்கிட்டான்.
‘மதம் பிடித்தால்தான் யானை சங்கிலியை அறுக்கும். பாகனை முதலில் கொல்லும். யானை மிதித்து பாகன் எவனும் செத்ததாய் தகவலில்லை. அதனால்தான் சொல்கிறேன், யானை களவு போய்விட்டது..’ முகமூடி மீசையை முறுக்கினான்.
‘யானையைத் திருடிக்கொண்டுபோய் யார் தீனி போடுவது?’ கள்ளச்சாவி தொடர்ந்தான்.
‘தீனி போட முடிந்தவன்தான் யானையத் திருடியிருக்கிறான். ஒட்டுண்ணி ஊஞ்சலில் படுத்துக்கொண்டு கைத்தாங்கலாய் தலையை வைத்துக்கொண்டான்.
மூவரும் ஒரு பட்டியல் தயார் செய்தார்கள். பல பெயர்களைக் கழித்தார்கள், முடிவில் பட்டியல் பத்துப் பெயர்களில் அடங்கியது. மீண்டும் பத்துப் பெயர்களில் ஒவ்வொன்றாய கழித்தார்கள். ஐந்து பெயர்கள் நின்றன.
‘இந்த ஐந்து பேரில் கோட்டையில் செல்வாக்குள்ளவன்தான் யானயைக் கடத்தியிருக்கிறான்.’ முகமூடி கண்களை மூடிக்கொண்டு யோசித்தான்.
மீண்டும் பட்டியலைப் பரிசீலித்தார்கள். பட்டியலில் இரண்டு பெயர்கள் நின்றன.
மாசாத்துவான். நிதிகாமி.
‘மாசாத்துவான் இந்தக்காரியத்தைச் செய்திருக்கமாட்டான். மாசாத்துவான் அரசரிடம் தனக்கு ஒரு யானை வேண்டுமென்றால் அரசர் அவனுக்கு யானைப் படையையே கொடுத்து விடுவார். நிதிகாமி மேலதான் எனக்கு சந்தேகம் வலுக்கிறது,’ என்றான் ஒட்டுண்ணி.
‘நிதிகாமி பொற்காசுக் களஞ்சியமே வைத்திருக்கிறான். அவன் எதற்கு யானையைத் திருட வேண்டும்?’ கள்ளச்சாவி ஆட்சேபித்தான்.
‘நிதிகாமி- முப்படைப் பராமரிப்புக் குழுவின் தலைவராக இருக்கிறான். அவனுக்கும் கோட்டைக்கும் தொடர்பிருக்கிறது. நிதிகாமி ஏற்கெனவே கோட்டைக்கும் அரண்மனைக்கும்
சுரங்கப்பாதை அமைப்பதில் துட்டு சம்பாதித்தவன். ஒரு ஆட்டைப் பார்த்தால் அதன் எடையைத்தான் முதலில் கணக்குப் போடுவான். விலை,லாபம் இரண்டும் அவன் விரல் நுனியிலிருக்கும். அதனால் யானைக்கும் நிதிகாமிக்கும் தொடர்பிருக்கிறது.’
கள்ளச்சாவியும் முகமூடியும் கூழ்குடித்துக் குவளைகளை முற்றத்தில் வைத்தார்கள்.
’ஆங்! இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்னால் அண்டை நாட்டு அரசன் சேந்தன் படைக்கு யானைகளை வாங்க ரகசிய உத்தரவு பிறப்பித்திருக்கிறான். அமைச்சர்களை மலைநாட்டுக்கு அனுப்பியிருக்கிறான்….இப்பொழுது பாருங்கள், என்கணிப்பு சரியாக வருகிறது. சேந்த மன்னன் யானை வாங்குகிறான்.. கோட்டையில் யானை காணாமல் போயிருக்கிறது. யானையைத் திருடி சேந்தன் நாட்டுக்கு விற்றிருக்கிறார்கள்.’
‘யானை திருடு போனபோது காவலாளிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?’
‘இதென்னடா கேள்வி, கள்ளச்சாவி? நம்மைப்போல் அவர்களும் ஆடு-புலி ஆட்டம் ஆடியிருந்திருப்பார்கள்.’ ஒட்டுண்ணி கொட்டாவிக்குச் சிட்டிகை போட்டான்.
‘எனக்கு விளங்கிவிட்டது. அரண்மனைச் செல்வாக்குள்ளவன்தான் யானையைத் திருடி அண்டை நாட்டுச் சேந்தனுக்கு விற்றிருக்கிறான். அது நிதிகாமியாக இருக்கலாம். அல்லது கோட்டையில் வேறு யாராகவுமிருக்கலாம்… பாகனை விசாரிக்கிற விதத்தில் விசாரித்தால் யானை இருக்குமிடம் தெரிந்துவிடும்.’
முற்றத்துக்கு வந்த அண்டங்காக்கை, குவளைகளைக் கொத்தி விட்டுக் கரைந்தது.
‘முகமூடி சொல்வது உண்மையானால், பாகனுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது. புறப்படுவோம், பாகனை விசாரிப்போம்..’
கள்ளச்சாவியும் முகமூடியும் புறப்படத் தயாரானார்கள்.
‘பொறுங்கள்.. அமைச்சர் பாகனை விசாரிக்க வேண்டாமென்று சொன்னதாக நரியன் என்னிடம் முன்பே சொல்லியிருக்கிறான்..’ ஒட்டுண்ணி.
காகம் கரைந்துகொண்ண்டேயிருந்தது.
முகமூடி எரிச்சலைடைந்தான்.
‘அமைச்சர் ஏன் தடுக்கவேண்டும்?’ முகமூடி ஆடு-புலி ஆட்டக் கட்டத்திலிருந்து ஒரு புளியங்கொட்டையை எடுத்து வீசிக் காக்கையை விரட்டினான்.
’கோட்டையில் காணாமல்போன யானைக்கும் நிதிகாமிக்கும் தொடர்பிருப்பதாக யானைப் படைவீர்ரகள் நடுவில் பேச்சிருக்கிறது. அமைச்சர் மலையனின் மகளுக்கும் நிதிகாமியின் மகனுக்கும் திருமணப் பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அமைச்சர் மலையன் விசாரணையைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்.’ ஒட்டுண்ணி விவரித்தான்.
‘‘ யானை களவு போய்விட்டது. ‘பாகனை விசாரிக்கவேண்டாம்.’ அமைச்சர் உத்தரவு. மூன்று நாட்களுக்குள் யானையைக் கொண்டு வரச்சொல்லித் தலைமை ஒற்றன் உத்தரவு. நாம் என்னதான் செய்வது?”முகமூடி சலித்துக்கொண்டான்.
‘ஒரு யானை பொம்மையைக் கொண்டுபோய் தலைமை ஒற்றன் முன்பு நிறுத்துவோமா?’ கள்ளச்சாவி எகத்தாளமாகச் சிரித்தான்.
‘முகமூடி, இரு திங்கள் முன்னால் நரியன் உன்னைக் கிளியனூருக்கு அனுப்பினானே எதற்கு?’
‘அதுவா? தோகைமலைக் காட்டிலிருந்து கிளியனூர் வனத்துக்கு ஒரு யானை அடிக்கடி வருகிறது.. அந்தவழியாகப் போகிறவர்கள் பயப்படுகிறார்கள். அது களிறா பிடியா, பெரிதா, சிறிதா பார்த்து வரச் சொன்னான் அண்ணன் நரியன். அதற்குப் பத்து இருபது வயதிருக்கும்.. களிறு..’ மூகமூடி அப்பாவியாகச் சொன்னான்.
‘முகமூடி, ஒற்றர் வேலையென்றால் லேசில்லை. எதையெல்லாம் உளவறிய வேண்டியிருக்குது பார்.’ குறும்பாகச் சிரித்தான் கள்ளச்சாவி.
‘யானை கிடைத்து விட்டது!’ ஒட்டுண்ணி கைதட்டி ஆரவாரித்தவாறே எழுந்து உட்கார்ந்தான்.

மகாராஜாதிராஜ மகாவீர மகாபண்டித மகா பராக்ரம சிங்கராய பொம்மனின் அரசவை கூடியது.
மன்னர் சிங்கராயபொம்மன் அமைச்சர் மலையனைக்கேட்டார்;
‘யானைப்படையின் கணக்கு சரியாக இருக்கிறதா, அமைச்சரே?’
’சரியாக இருக்கிறது அரசே.’ அமைச்சர் பதிலிறுத்தார்.
அரசர் யானைப்படைத் தலைவனை கேள்விக்குறியுடன் பார்த்தார்.
’கணக்கு சரியாக இருக்கிறது, அரசே.’ யானைப்படைத்தலைவன் ஆமோதித்தான். தளபதி ஆமோதித்தான். படைகளின் பராமரிப்புக் குழுவிலிருந்த நிதிகாமியைப் பார்த்தார் அரசர்.
’ஒரு தவறும் நடக்கவில்லை அரசே. எல்லாம் சரியாக இருக்கிறது.’ என்றார் நிதிகாமி.
மன்னர் சிங்கராய பொம்மன் அரசவை ஆலோசகர் மாசாத்துவானை பார்த்தார்.
‘எங்கள் மன்னர் மகாராஜாதிராஜ மகாவீர மகாபண்டித மகா பராக்ரம சிங்கராய பொம்ன் ஆட்சியில் எல்லாம் சரியாகஇருக்கிறது. சிஙுகராயபொம்மன் வாழ்க,’ என்று உரத்த குரலெழுப்பினார். அரசவையினர் அனைவரும் கோஷமெழுப்பினர்.
அரசர் கணக்கனின் இருக்கையை நோக்கித் திரும்பினார். கணக்கனின் இருக்கை காலியாக இருந்தது.
***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.