[இந்த பேட்டியின் முந்தைய பகுதிகள்: பாகம் 1; பாகம் 2]
’புனைவின் கலை’ என்கிற வரிசையான பேட்டித் தொடர்களில் இந்த பேட்டியின் எண்- 221
பேட்டியாளர்: ஜான் வ்ரே
பே: ஆண்களின் உலகத்தில் ஒரு பெண் எழுத்தாளராக இருப்பது என்பது பற்றிய விஷயத்தில், எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன் [A room of one’s own- எனக்கென ஒரு அறை] என்பதை ஒரு உரைகல்லாக நீங்கள் சொல்லி இருந்தீர்கள்.
லெ குவின்: என் அம்மா அதை எனக்குக் கொடுத்தார். ஒரு அம்மா தன் மகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியமான புத்தகம் அது. அவர் எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன் – ஐயும், த்ரீ கினீஸ் – ஐயும் நான் பதின்ம வயதினளாக இருக்கையில் எனக்குக் கொடுத்தார். அப்படி என்னை முற்றிலும் கெடுத்தார், அவரை நான் வாழ்த்துகிறேன். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, 1950களில், எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன் புத்தகம் கொஞ்சம் படிக்கச் சிரமமாகத்தான் இருந்தது. அன்று எழுத்துலகில் ஆண்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது, அன்று வரை நானோ அதைக் கேள்வியே கேட்டதில்லை. அதை மறுத்துக் கேள்வி கேட்ட பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே எனக்கு அதிக பட்சமாக இருந்தது, அவர்கள் மிகவுமே புரட்சியாளராகத் தெரிந்தார்கள். அதனால் நான் ஆண்களின் எழுத்துலகில் என்னைப் பொருத்திக் கொண்டு, ஆணொருவரைப் போல எழுதினேன், ஆண்களின் கண்ணோட்டத்தையே கொடுத்தேன். என் துவக்க காலப் புத்தகங்களெல்லாம் ஆண்களின் உலகிலேயே பதிக்கப்பட்டவை.
பே: ஆண் நாயகர்களையும் கொண்டவை.
லெ கு: நிச்சயமாக. அதற்குப் பிறகு இலக்கியத்தில் பெண்ணியம் வந்தது, அது எனக்குப் பெரும் பிரச்சினையாகவும், பரிசாகவும் இருந்தது. அதை நான்…. எப்படியோ கையாள வேண்டி இருந்தது. மேலும் எனக்கு அதைக் கையாளத் தெரியுமா என்று விளங்கவில்லை, ஏனெனில் நான் கோட்பாடுகளில் அத்தனை வலுவான ஈடுபாடற்றவள். எங்காவது போங்கள், என்னை எழுத விடுங்கள்.. என்றிருந்தவள். ஆனால், உண்மை என்னவென்றால், நான் அப்போது தேக்கத்தில் சிக்கி இருந்தேன். ஒரு ஆணாக நடிப்பதை என்னால் தொடர முடியவில்லை. பெண்ணியம் தக்க தருணத்தில் வந்து எனக்குதவியது.
பே: பெண்களின் இயக்கம் உங்களை மாறும்படி கட்டாயப்படுத்தியது என்று சொல்வீர்களா?
லெ கு: அது என்னிடம் சொன்னது, ஏய், தெரிகிறதா, நீ ஒரு பெண். ஒரு பெண்ணாகவே நீ எழுதலாம். ஆண்கள் எழுதுவதை நான் எழுத வேண்டிய தேவை இல்லை என்று நான் புரிந்து கொண்டேன், அல்லது ஆண்கள் எதைப் படிக்க விரும்புவார்களோ அதையே நான் எழுதத் தேவை இல்லை என்றூம் தெரிந்து கொண்டேன். பெண்களுக்கு ஒரு பெரும்பரப்பில் மிக்க அனுபவம் இருந்தது, ஆண்களுக்கு இல்லாதது அது- அதைப் பற்றி எழுதுவதும், படிப்பதும் பயனுள்ளது என்று நான் அறிந்து கொண்டேன்.
அதனால், நான் பின்னே சென்று வர்ஜீனியா ஊல்ஃபை ஊன்றிப் படித்தேன், பிறகு பெண்ணியர்கள் முன்வைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்தேன், பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் எழுதிக் கொண்டிருந்தவற்றைப் படித்தேன், பெண்கள் தாமாக இருந்து எழுத முடியும் என்பதைக் கண்டேன், ஆண்களிடமிருந்து வேறுபட்ட விஷயங்களை அவர்கள் எழுத முடியும் என்றூ கண்டேன் – ஏன் கூடாது என்றிருந்தது. அட! அப்படி மாறி வர எனக்குப் பல வருடங்கள் ஆனது என்பதென்னவோ உண்மை.
பே: மாறிப் பொருத்திக் கொள்ளப் பல வருடங்களாயின உங்களுக்கு என்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்?
லெ கு: அந்தக் கருத்துகள் சாதாரணமானவையாக இன்று தெரியலாம். 40 வருடங்கள் முன்பு அவை அப்படித் தெரிந்திருக்கவில்லை. புரட்சிக் கருத்துகளாகத் தெரிந்தன. சிலர் துரிதமாக அவற்றை ஏற்றனர்- பலர் மெதுவாகத்தான் ஏற்றனர், என்னைப் போல. பல எழுத்தாளர்களும், வாசகர்களும், விமர்சகர்களும் நிஜத்தில் இன்னுமே அவற்றை ஏற்கவில்லை.
பே: உங்களுடைய எந்தப் புத்தகம் இந்த மாறுதலைத் தெளிவாகச் சுட்டுகிறது?
லெ கு: அந்த மாறுதல் அறிந்து நடக்கவில்லை. 1978 இல் ஒரு சிறு புத்தகம் பிரசுரமாயிற்று, தி ஐ ஆஃப் த ஹெரன் (The Eye of the Heron) என்பது அது. இன்னொரு கிரகத்தில் இருக்கும் இரண்டு குடியேற்றங்களைப் பற்றியது கதை- ஒன்று காந்தியர்களைப் போன்ற அமைதி மார்க்கத்தினரது. இன்னொன்று பெருமளவு தென்னமெரிக்காவிலிருந்து குடியேறியவர்களால் உருவாக்கப்பட்டது, அதில் பலரும் குற்றக்கும்பல் பின்னணி கொண்டவர்கள. இந்த இரண்டும் அருகருகில் உள்ளன. என் நாயகன் காந்திய சமுதாயத்திலிருந்து வருபவன், ஒரு நல்ல இளைஞன். இன்னும் அங்கு இருப்பது ஒரு பெண், குற்றவாளிகளின் சமூகத்தின் தலைவனின் மகள். அந்த நாயகனோ பாதிப்புத்தகத்தில் தான் சுடப்பட்டு இறக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். நானோ, ஏய், நீதான் புத்தகத்தின் நாயகன், அப்படியெல்லாம் செய்ய முடியாது! என்றேன். என்னுடைய நனவிலி மனம் என்னை அந்தப் பெண்ணுடைய பிரக்ஞைதான் புத்தகத்தின் மையம், அந்தப் பையனுடையதல்ல என்று புரிந்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறது.
பே: த லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ் புத்தகத்தை திரவம் போல் நெகிழ்வு கொண்ட பாலடையாளம் இருக்கும் உலகத்தில் நடப்பதாக அமைக்க எது உங்களைத் தூண்டியது?
லெ கு: அது பெண்ணியத்தை என் அறியாமையால் அணுகியதில் நேர்ந்தது. எனக்கு பாலடையாளம் என்பதே கேள்விக்குரியதாகிக் கொண்டிருக்கிறது என்பது வரைதான் புரிந்திருந்தது. பாலடையாளம் என்பதே சமூகத்தால் கட்டப்படுவது என்பதைச் சொல்லுமளவு மொழி விரிவு எங்களுக்கு அப்போது இல்லை. அப்படித்தான் நாம் அதை இப்போது சுருக்குக் குறிப்பாகச் சொல்கிறோம். ஆனால் பாலடையாளம் என்பது- அதுதான் என்ன? அது ஆண் தன்மை அல்லது பெண் தன்மையாக இருக்க வேண்டுமா என்ன? அறிவியல் நவீனம் சுவாரசியமான புது விஷயங்களைத் தேடி எடுத்து, அவற்றை மறூபடி பார்த்து, மறூபடி கேள்விக்குட்படுத்தும் களத்தில் பாலடையாளமும் ஒரு கருதுபொருளாக இறக்கி விடப்பட்டிருந்தது. நான் அப்போது நினைத்தேன், அட, யாருமே இதை எடுத்துப் பேசவில்லையே? சற்று முன்னர்தான் தியொடோர் ஸ்டர்ஜன் வீனஸ் ப்ளஸ் எக்ஸ் என்ற ஒரு புத்தகத்தை எழுதி விட்டிருந்தார் என்பது நிஜமாக எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அது ஒரு அபூர்வமான புத்தகம், படித்துப் பார்க்கத் தக்கது. துவக்க கால ஆண் முயற்சி அது, பாலடையாளம் என்பது- பகுதியாவது- சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது என்ற கருத்தைப் பற்றி யோசிக்கிறது அது. ஸ்டர்ஜன் ஒரு திறமை நிறைந்த, அன்பான இதயம் கொண்ட எழுத்தாளர். எனவே அதனளவிலேயே அது சுவாரசியமான புத்தகம். நடை என்பதைப் பொறுத்து அவர் சிறந்த எழுத்தாளரில்லை, ஆனால் அவர் ஒரு சிறப்பான கதை சொல்லி, மிகச் சிறப்பான புத்தியுள்ளவர். நானோ, வேறென்ன, வேறு திசையில் சென்று விட்டிருந்தேன். நான் என்னையே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லக் கூடும்- பெண்ணாகவோ, ஆணாகவோ இருப்பது என்றாலோ, ஆணடையாளமோ, பெண்ணடையாளமோ கொண்டவராக இருப்பது என்றாலோ அதற்கெல்லாம் என்ன பொருளாகிறது? ஒருக்கால் நீங்கள் அதில் ஏதுமாக இல்லாவிட்டால்?
பே: அல்லது அந்த நாவலில் இருப்பது போல, சில சமயம் ஒரு பாலடையாளத்தோடும், இன்னொரு சமயம் இன்னொரு பாலடையாளத்தோடும் , அனேக நேரம் இரண்டுமே இல்லாதும் இருந்தால்?
லெ கு: அதில் பாருங்கள், ஏதோ ஒன்றாகச் சில நேரமாவது இருக்க வேண்டி இருந்தது, ஏனெனில் அதில்தான் பாலுணர்வு என்பது இருக்கிறது. மக்கள் அந்தப் புத்தகத்தை வெறுப்பார்கள், குறிப்பாக ஆண்கள் வெறுப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் ஆண்கள்தான் அதை மிக விரும்பினார்கள்!
பே: அது ஏன் என்று நினைக்கிறீர்கள்?
லெ கு: நான் அதை ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை. நான் அன்று இருந்த நிலையை விட, முன்னேறிய இடத்தில் இருந்த பெண்களில் பலரோ, ஆனால் அவள் எல்லாரையும் ”அவன் ”என்றுதானே சொல்கிறாள் என்றார்கள்! அவர்கள் சொன்னது மிகவும் சரி, நான் எல்லாரையும் ‘அவன்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தேன், அதை ஆதரித்தும் சில காலம் வரை வாதிட்டேன். பிறகு நான் புரிந்து கொண்டேன், அது செல்லாது என்று.
பே: நீங்கள் வர்ஜீனியா ஊல்ஃபின் ரசிகர் என்பதால், ஆர்லாண்டோ (நாவல்) உங்கள் ‘த லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ்’ புத்தகத்துக்கு என்ன வகையில் முக்கியமானது என்று கேட்க வேண்டி இருக்கிறது.
லெ கு: நான் அதை கல்லூரியில் புகுமுக நிலையில் இருந்த போது படித்தேன், அதனால் மிகவுமே மதி மயங்கிப் போயிருந்தேன். அதன் எலிஸபெத் கால இங்கிலாந்தின் மொழியும், அந்தக் காலச் சித்திரமும்- எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அப்போதுதான் நான் ஊல்ஃபுக்கு விசிறியானேன். அதில் அவர் கொணர்ந்த பால் மாறுபாட்டின் விசித்திரத்தையும், புத்தி சாதுரியத்தையும் நான் பார்க்கவே செய்தேன். எனவே பல சிறந்த எழுத்தாளர்கள் செய்வது போலவே, அவர் எனக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார் என்று நீங்கள் சொல்லலாம்.
பே: அவருடைய மொத்த எழுத்திற்குள்ளும் அது தனிச் சிறப்போடு இருக்கிறது.
லெ கு: அவருடைய அனைத்துப் புத்தகங்களுமே ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டிருக்கின்றன. ஃப்ளஷ் படித்திருக்கிறீர்களா? எலிஸபெத் பாரெட் ப்ரௌனிங்கின் நாயப் பற்றியது அது, நாயின் பார்வையிலேயே எல்லாவற்றையும் சொல்வது. அது மிகச் சிறியது, மிக இலேசானது, மறக்க முடியாதது.
பே: உங்கள் அம்மாவும் எழுதினார்.
லெ கு: என் அம்மா எப்போதுமே எழுத விரும்பினார். அவர் எழுத ஆரம்பித்த பின்னரே இதை என்னிடம் சொன்னார். அவர் தன் குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டுப் போகும் வரை, தன் கணவரைத் தவிர வேறு யாருக்குமான தன் பொறுப்புகள் எல்லாம் விடும் வரை பொறுத்திருந்தார். அவருடைய தலைமுறைக்கான பழக்கம் இது. அவர் எழுதத் துவங்கியபோது அவர் தன் ஐம்பதுகளில் இருந்தார்- குழந்தைகளுக்கு எழுதத் துவங்கினார், அப்படித்தான் பெண்கள் அனேக நேரம் துவங்குகிறார்கள். யாருக்கும் அது அச்சுறுத்தலாக இராது, அவர்களுக்கே கூடத்தான். அவர் சில அருமையான சிறு குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
அவர் நாவல்கள் எழுத விரும்பினார், சிலதை எழுதவும் செய்தார், ஆனால் அவற்றுக்குப் பிரசுரகர்த்தர் யாரும் கிட்டவில்லை. என்ன நடந்ததென்றால், இஷி யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். முதலில் என்னவோ அவர்கள் என் அப்பாவைத்தான் அந்த வரலாற்றை எழுதச் சொல்லிக் கேட்டார்கள், அவரோ, அந்தக் கதையை என்னால் ஒருக்காலும் எழுத முடியாது என்று மறுத்திருந்தார். அவர் அந்தக் கதையைத்தான் வாழ்ந்திருந்தார், அதை எழுத விரும்பவில்லை. அவர் பின்னோக்கிப் பார்க்கும் நபர் இல்லை. அவர் சொன்னார், நீங்கள் வேண்டுமானால் என் மனைவியைக் கேட்டுப் பாருங்கள், அவர் நல்லதொரு எழுத்தாளர். அவர்கள் கேட்டார்கள், அவரும் எழுதினார். வளர்ந்தவர்களுக்கான அவருடைய முதல் புத்தகம் பெரிதளவில் விற்றதொரு புத்தகமாக அமைந்தது, அவருக்கு அது அருமையான துவக்கம்தான். அப்போது அவர் தன் அறுபதுகளில் இருந்தார். பலரிடம் இருந்து எனக்குக் கடிதங்கள் வருகின்றன, நான் உங்கள் அம்மாவின் புத்தகத்தைப் படித்தேன், அது எனக்குக் கண்ணீரை வரவழைத்தது என்று. அவை அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவர் சொல்வார், அதைத்தான் அந்தப் புத்தகம் செய்வதாக இருந்தது.
அதெல்லாம் சுவாரசியமாக இருக்க இன்னொரு காரணம், நானும் அவரும் ஒரே காலகட்டத்தில் பிரசுரிக்கப்பட வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தோம்.
பே: என்னவொரு வித்தியாசமான துவக்கம், உங்கள் இருவருக்குமே!
லெ கு: அவர் என்னை முந்தி விட்டிருந்தார். அதுவும் நியாயமானதுதான். ஏனெனில் நான் தாமதம் நிறைந்தவள், மிக மெதுவானவள். மெதுவாகக் கற்றுக் கொள்பவள். ஆனால் அவரளவு தாமதமானவள் இல்லை. அவருடைய கதையைச் சொல்ல எனக்கு மிகப் பிடிக்கும், ஏனெனில் ஒருவர் தாமதமாகவும் துவங்கலாம் என்பதை மக்கள்- குறிப்பாகப் பெண்கள்- கேட்க வேண்டி இருக்கிறது. அவர் தன்னால் அதைச் சாதிக்க முடியும் என்று கருதினாரென்பது, இருபது முப்பது வருடங்கள் முன்பு வலுவான பெண்ணியர்களாக இருந்தவர்களுக்கு நம்ப முடியாதபடி அதிர்ச்சியாக இருந்தது. இப்போது அப்படி யாராவது அதிர்வடைவார்களா என்பது எனக்கு ஐயமே. ஆனால் நிறைய பேருக்குப் பெண்கள் மீது எத்தனை வலுவான சமூக இறுக்கம் இருந்தது என்பது சிறிதும் தெரியவில்லை.
பே: அவர்கள் அதை ஒருவேளை மறந்திருக்கலாம், அல்லது ஒருபோதும் தெரிந்து கொள்ளவில்லையோ என்னவோ.
லெ கு: இளைஞர்களுக்குத் தெரிவதில்லை என்பது எப்போதும்தான் இருக்கிறது. தங்களது பாட்டிகள், பாட்டிகளின் தாய்கள் ஆகியோர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது குறித்து அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது. என் வாழ்நாளிலேயே அப்படி ஒரு பெரும் மாறுதல் நடந்து விட்டிருக்கிறது.
பே: ஆனாலும்- குடும்பமா, வேலையா என்று இருதலைக் கொள்ளியாக விஷயங்களைப் பார்க்கும் விதம் இருக்கிறதே- அந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
லெ கு: அது எப்போதுமே போகப் போவதில்லை. உண்மையைச் சொன்னால், அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என் தனி வாழ்வில் அதற்கான விடை நான் மணந்து கொண்ட ஆணைப் பொறுத்திருந்தது. எங்களுடைய விடை இதுதான், ஒரு நபரால் இரண்டு வேலைகளைச் செய்ய முடியாது, அதாவது குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு, முழு நேர நாவலாசிரியராகவோ, முழுநேரக் கல்லூரிப் பேராசிரியராகவோ- சார்லஸைப் போல- இருக்க முடியாது. ஆனால் இருவர் சேர்ந்து மூன்று முழு நேர வேலைகளைச் செய்ய முடியும்! நாங்கள் செய்தோம்- எல்லாருக்கும் இது சாத்தியம்.
அந்த மட்டில் நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள், இப்படி வேலை செய்ய விருப்பமுள்ள ஒருவரை மணக்க என்னால் முடிந்தது. அதை நான் சாதாரணமாகவும் எடுத்துக் கொண்டிருந்தேன்! எங்கள் இருவருக்குமே நாங்கள் என்னதில் இறங்கியிருக்கிறோம் என்பது விளங்கி இருக்கவில்லை. அதனால் நான் ஒரு இருபது வருடங்கள் அவரை நம்பி வாழ்க்கை நடத்தியிருக்கிறேன், ஏனெனில் எனக்கு அதுவரை ஏதும் வருமானமே இல்லை. அதன் பிறகு நான் குடும்பச் செலவுக்குச் சம்பாதிப்பவளானேன், முக்கியமான வருமானம் கொண்டவளானேன். பிரமாதம்! எல்லாமே ஒரே நிலுவை, ஒரே ஒரு வங்கிக் கணக்காகவே இருந்தது.
பே: உங்களுடைய ’த வேவ் இன் த மைண்ட்’ என்ற புத்தகத்தில் இருந்த ஒரு வரியைப் பற்றிக் கேட்கப் போகிறேன். “ தொகுப்பான புனைவு பல காலமாக மெள்ளமாகவும், குறிப்பில்லாமலும், பெரும் அளவிலும் ஒரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, கதைகளின் பெருங்கடலான, அதிபுனைவை , மறுபடியும் சேரவிருக்கிறது.” இதை எழுதியது நினைவிருக்கிறதா?
லெ கு: இல்லை! எப்போது இதை எழுதினேன் என்று யோசிக்கிறேன். ஆனால் நான் என்ன சொல்ல வந்திருப்பேன் என்றால், நாம் இன்னமும் எதார்த்தவியம் ஒன்றுதான் இலக்கியத்துக்குத் தக்க அணுகல் என்று நம்பிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்பதே அது.
பே: கடந்த இருபது வருடங்களில் இலக்கிய நடப்புகளைப் பார்த்தால் நீங்கள் சொன்னதுதான் நடந்திருக்கிறது என்று சொல்லலாம் போலத்தான் இருக்கிறது.
லெ கு: அதை எழுதியபோது நான் கால்வினோ, போர்ஹெஸ் போன்ற எழுத்தாளர்களை நினைத்துத்தான் அப்படி எழுதி இருப்பேன். ஆனால் வகைமைப் பட்ட இலக்கியம் எழுதியவர்கள், நடை என்று ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, மிகவுமே தட்டையான, செய்தியாளர்களின் எழுத்தைப் போன்ற உரைநடையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பே: அது ஏனென்று நினைக்கிறீர்கள்?
லெ கு: அன்று கதை எழுதிய ஆண்களின் குணங்களைப் பொறுத்து அப்படி அமைந்தது என்று நான் ஊகிக்கிறேன். மேலும், ஹெமிங்வேயைப் போன்ற, முழுக்க முழுக்க ஆணடையாளமுள்ள ஒரு எழுத்தாளரின் ஆடம்பரமாகவே மிகத் தெளிவான, தட்டையான நடையை அவர்கள் பெரிதும் விரும்பியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.
பே: அறிவியல் நவீனத்தின் மீது மேம்போக்கான பார்வையால் இளக்காரமான கருத்து கொண்டுள்ள பல வாசகர்கள், நடை பற்றிய இந்தக் கேள்வியைக் கொண்டுதான் தங்களுடைய மேம்போக்குப் பார்வையை நியாயப்படுத்துகிறார்கள்.
லெ கு: சில நேரம் அவர்கள் சொல்வதும் சரிதான். அல்லது அவர்கள் அன்று சொன்னது சரி. குறிப்பாக முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் அறிவியல் நவீனம் மிகச் சங்கடம் தரும் வகையில் மோசமாக எழுதப்பட்டிருந்தது. வெட்கவுணர்வின்றி மோசமாக எழுதப்பட்டிருந்தது.
பே: அந்தப் புத்தகங்கள் கருத்துகளைக் கடத்த ஒரு வாய்ப்பாகக் கருதப்பட்டன என்பதால் அப்படி இருந்ததா?
லெ கு: அதுவேதான் காரணம். நான் இந்தத் துறைக்கு வந்த போது, முதிய ஆண் எழுத்தாளர்கள் சிலர், இன்னுமே தம்முடைய அந்த வித எழுத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் புது யோசனைகளை எழுதுபவர்கள், பெண்களின் அசட்டு மோகங்களில் ஒன்றான ‘நடை’ பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படப் போவதில்லை! அனேகமாக, எனக்கு நடைதான் ஒரு புத்தகமே. போர்ஹெஸ்ஸை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் புது யோசனைகளை வைத்துக் கொண்டு சோதனை செய்கையில், அவர் உருவத்தில்தான் சோதனை செய்கிறார். அவர் எத்தனை உரைநடையாளரோ, அத்தனைக்குக் கவிஞரும் கூட.
பே: போர்ஹெஸ் உங்களுக்கு முக்கியமாகவிருந்தாரா?
லெ கு: அந்த முதியவரிடமிருந்து என் வாழ்நாள் பூராவுமே கற்றுக் கொண்டிருப்பதாகத்தான் உணர்கிறேன். போர்ஹெஸ்ஸும், கால்வினோவும்தான் என்னைச் சிந்திக்க வைத்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், அதை என்னால் செய்ய முடியுமா? [என்பதே உந்துதல்]. என் சமகால எழுத்தாளர்களில் அவர்களே கதவுகளைத் திறந்தனர். என்னை அமெரிக்காவிலிருந்து வெளியே இழுத்துப் போனார்கள்.
பே: ஒரு வாசகராக என்று சொல்கிறீர்களா?
லெ கு: ஒரு வாசகராக. ஏனெனில் அன்று- வகைமை இலக்கியத்தில் தவிர- வேறு யாரும் அவர்களைப் போல ஏதும் செய்யவில்லை. ஒரு அறிவியல் நவீனகர்த்தா, எனக்குத் தெரிந்து, அந்த வகை இலக்கியத்துக்குள் மட்டுமே தெரிய வந்தவர், கார்ட்வெய்னர் ஸ்மித். என் மீது அவருக்குப் பெரும் தாக்கம் இருந்தது. அவர் பிரக்ஞைபூர்வமாக இலக்கிய எழுத்தாளராக இருந்தார், அருமையான உரைநடையும், விசித்திரமான கற்பனைத் திறனும் கொண்டிருந்தார். அவர் வெளியுறவு இலாகாவில் வேலை பார்த்தார் என்று நினைக்கிறேன். கார்ட்வெய்னர் ஸ்மித் என்பது ஒரு புனைபெயர்.
பே: அவர் சியாங் காய்- ஷெக்கோடு ஏதோ விதத்தில் தொடர்பு கொண்டிருந்தாரில்லையா?
லெ கு: அவர் சீனாவில் ஏதோ மிகுந்த ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அறிவியல் நவீனத்தைப் பொறுத்த வரை- இது நான் இந்தத் துறையில் நுழைந்த போது உண்மை நிலை, இன்றும் அப்படியே தொடர்கிறது என்று நினைக்கிறேன் – ஒரு அருமையான விஷயம் என்னவென்றால், நாம் எந்தக் கருத்தையும் பிற எழுத்தாளரிடமிருந்து தைரியமாகக் கடன் வாங்கிக் கொள்ளலாம், திருடுகிற விதத்தில் இல்லை, ஆனால் யோசனைகளையும், எப்படிச் சில விஷயங்களைச் செய்வது என்று அறிகிற விதமாகவும் கடன் வாங்கலாம். பரோக் கால இசைப் படைப்பாளர்களைத்தான் இதற்கு நான் ஒப்பீடாகச் சொல்வேன். அந்த இசை கர்த்தாக்கள், தம் யோசனைகளை வெளிப்படையாகப் பலருடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், மெட்டுக்களைக் கூடப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். பரஸ்பரம் கற்பனையை ஊக்குவிப்பது அந்த முறை. எல்லாரும் ஒரே விஷயத்தில்தான் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் என்ற அணுகல்.
பே: அப்படி ஒரு உறவு வலையை உங்களோடு யார் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்?
லெ கு: அவர்கள் பலரும் என் தலைமுறை எழுத்தாளர்களே. நிஜத்தில் அவர்களில் பலரும் என்னை விட வயதில் சிறியவர்கள், ஆனால் நாங்களெல்லாம் இத்துறைக்கு ஒரே காலகட்டத்தில் நுழைவு பெற்றோம். ஹார்லன் எல்லிஸன் போன்ற சிலரோடு எனக்கு ஒரு எழுத்தாளராகச் சிறிதும் பொதுவானதாக ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரிடம் நான் தேடிக்கொண்டிருந்த அரிய புதுக் கண்டுபிடிப்புகளின் பொறித் தெறிப்பு இருந்தது. வாண்டா மாகிண்டையர் போல சில பெண்கள் நுழைந்து கொண்டிருந்தார்கள். என்னை விட மிக இளையவர்கள்- ஆனால் துறையில் எல்லைகளைப் பெரிதும் தள்ளி விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள், சுவர்களை உடைத்தார்கள். அறிவியல் நவீனத்தின் பொற்காலம் என்று கருதப்பட்ட வருடங்களில் எழுதப்பட்டதை விட மிகவுமே மேலான, சுவாரசியமான விஷயங்களை எழுதினார்கள்.
பே: உங்களுடைய சமகால எழுத்தாளர்களிடையே அப்படி எல்லாரும் ஒரே நிலையில் இருப்பதான உணர்வு இருந்ததா? நீங்களெல்லாம் ஒரே பயணம்தான் போவதான உணர்வு இருந்ததா?
லெ கு: உள்நாட்டில் அறிவியல் நவீனம், அதிபுனைவு ஆகியன எழுதுவோரின் சிறு சமூகக் குழு, அழகியல் பார்வை, அரசுக் கொள்கைகள், பாலடையாள அரசியல் ஆகியவற்றைக் குறித்த மிகத் தீவிரமான சர்ச்சைகளில் ஈடுபடுவோரும், அதனால் கோபமான விலகல்களும், வெடிப்புகளும் கொண்டதாக இருந்தாலும், பொதுவாகப் புதுமுகங்களை வரவேற்கும் குணமுடையதாக இருந்தது என்பது எனக்குப் பிடித்திருந்தது. நான் மிக நெருக்கமான நண்பர்களை அங்கு அடைந்தேன், ஆனால் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் குறைவாகவே பங்கெடுத்தேன், தற்கால நோக்கில் உறவுப் பின்னல்களைத் தேடுகிற செயல்கள் எனக் கருதப்படுவனவற்றில் சிறிதும் ஈடுபடவில்லை.
ஒரு நபர் என் எழுத்து வாழ்வுக்குப் பெரியதாகவும், நேரடியாகவும் உதவுபவராக அமைந்தார்- அவர் என் ஏஜண்ட்டாக ஆன வர்ஜீனியா கிட். 1968 இலிருந்து 90களின் இறுதி வரை, கவிதையைத் தவிர்த்து, என் எல்லாப் படைப்புகளுக்கும் எல்லாத் துறைகளிலும் அவர் என் பிரதிநிதியாக இருந்தார். இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு கதையை நான் அவருக்கு அனுப்பினாலும், அவர் அதை ‘ப்ளேபாய்’ பத்திரிகைக்கோ, அல்லது ஹார்வர்ட் லா ரிவ்யூவுக்கோ, வோர்ல்ட் டேல்ஸுக்கோ, த நியு யார்க்கருக்கோ விற்று விடுவார்- அதை எங்கே கொண்டு செல்லலாம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. என்ன எழுதலாம், என்ன எழுதக் கூடாது என்று எனக்கு ஒரு போதும் அவர் சொன்னதில்லை, அது விற்காது என்று எனக்கு ஒரு போதும் சொன்னதில்லை, என் உரைநடையில் அவர் ஒருபோதும் தலையிட்டதில்லை.
பே: வகைமைப்பட்ட இலக்கியத்துக்கு என்ன எதிர்ப்பு இருந்தாலும், உங்களுக்கு நிறைய ‘இலக்கிய’ வாசகர்கள் இருந்தனர். உதாரணமாக, ஜான் அப்டைக் கூட உங்கள் எழுத்தைப் பாராட்டியிருக்கிறார்.
லெ குவின்: இளம் பருவத்தினருக்கென நான் எழுதிய த பிகினிங் ப்ளேஸ் என்ற ஒரு நாவலுக்கு அருமையான ஒரு மதிப்புரையை அப்டைக், த நியுயார்க்கர் பத்திரிகையில் எழுதினார். அவர் எப்போதுமே தாராளமான மதிப்புரையாளராக இருந்தார். மேலும் ஹரால்ட் ப்ளூம் – அவர் என் சார்பில் நல்ல வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார். இது வேடிக்கையானது. தி ஆன்க்ஸைடி ஆஃப் இன்ஃப்ளூயன்ஸ் (புத்தகம்) வெளி வரும் தருணத்தில்தான், பெண் எழுத்தாளர்கள் இதர பெண் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு கொண்டு, அடேடே, நமக்கும் தாக்கங்கள் இருக்கின்றனவே என்று அறியத் துவங்கியிருந்தார்கள். அதற்கு முன்பு அப்படி நாங்கள் தெளிவாக இல்லை. இந்த ஆண்களெல்லாம், தாம் பாதிக்கப்படுவது குறித்துக் கவலைப்படத் துவங்கினார்களா, பெண் எழுத்தாளர்கள் கிளர்ந்து ‘ஓஹோ! ‘ என்றார்கள்.
பே: ’டெல்லிங் ஈஸ் லிஸனிங்’ என்ற உங்கள் கட்டுரையில் நீங்கள் வகைமை இலக்கியம் சில பொதுவான கடமைகளை நிறைவேற்றுகிறது என்று எழுதினீர்கள்- அது வாசகரை ஒரு திசையில் அழைத்துப் போகிறது, ஒரு வகைக் கதைப் போக்கு அதிலிருக்கும், அவர் எதிர்பார்க்கும் சில விஷயங்களைக் கொடுக்கும் ஆகியன அவற்றிலுண்டு.
லெ கு: அது சரிதான், அந்த இலக்கியம் சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறது, அதுவும் சில மிகக் குறிப்பான எதிர்பார்ப்புகளை. அப்படிச் செய்வதுதான் அதை வகைமை இலக்கியமாக்குகிறது.
பே: அந்தக் கட்டுரையில் வாசகர்களுக்கு வகைமை இலக்கியத்தின் மீதுள்ள ஈர்ப்பு பற்றிப் பேசுகிறீர்கள், அதில் எழுத்தாளருக்கு என்ன ஈர்ப்பு ?
லெ கு: ஓரளவு அதேதான். அது ஒரு வடிவில் எழுதுவதை ஒத்ததுதான் – உதாரணமாக, கவிதையைப் போல. ஒரு வடிவுக்குள் எழுதுகையில், ஒரு ஸொனட் அல்லது வில்லனெல் என்று ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள், அந்த உரு இருக்கிறது, அதை நீங்கள் நிரப்ப வேண்டும். அந்த உருவை நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதைச் சொல்ல வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் என்ன காண்பீர்களென்றால்- ஒரு உருவைக் கொண்டு இயங்க முயலும் எந்தக் கவிஞரும் என்னோடு இங்கு ஒத்துப் போவார்- அந்த உரு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அங்கு உங்களை அழைத்துப் போகும். இது அற்புதமானதும், மர்மமானதும் ஆகும். இதே போன்ற ஒன்றுதான் புனைகதைகளிலும் நடக்கிறதென்று நான் கருதுகிறேன். ஒரு நோக்கில், வகைமை இலக்கியம் என்பது ஒரு உருவம். அது, ஒரு வரையறுக்கப்படாத வெளியில் இயங்கினீர்களானால் நீங்கள் சிந்தித்திருக்க முடியாத கருத்துகளுக்கு உங்களை இட்டுச் செல்லும். இது ஏதோ விதத்தில், நம் புத்தி எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதென்பதோடு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
பே: ஸ்டியரிங் த க்ராஃப்ட் என்பதில் – இரண்டு விதமாகவும், அதாவது ஒரு வாசகராகவும், எழுத்தாளராகவும் பார்த்து – நீங்கள் சொல்வது, ‘நான் முன்பு எப்போதும் பார்த்திராத ஒன்றைக் கண்டறிய வேண்டும்.’
லெ கு: புனைவு என்பதன் இயல்பில் இருக்கும் ஏதோ ஒன்று அது. ரொம்ப காலமாக இருக்கும் ஒரு கேள்வி, ‘எது நிஜமோ அதையே ஏன் நான் எழுதுவதில்லை?’ இருபதாம் நூற்றாண்டின் , மேலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் அமெரிக்காவில் வாசகர்கள் நினைக்கிறார்கள், அதுதான் அவர்களுக்குத் தேவை என்று. அவர்களுக்கு புனைவல்லாத எழுத்துதான் வேண்டும். அவர்கள் சொல்வது, நான் புனைவைப் படிப்பதில்லை, ஏனெனில் அது நிஜமல்ல. அது நம்ப முடியாத அளவு வெகுளித்தனமானது. புனைவு என்பது மனிதர்கள் மட்டுமே செய்வது, அதுவும் சில சமயங்களில் மட்டுமே செய்வது. அதுவும் நமக்கு அதை நாம் ஏன் செய்கிறோம் என்பதுமே புரிபடாதது. ஆனால் அது செய்யும் பல விஷயங்களில் ஒன்று, அது நாம் முன்பு அறிந்திராதவற்றுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான்.
இதைத்தான் நிறைய ஆன்மீக/ தாந்திரீக வழி அணுகல்கள் தேடுகின்றன- வெறுமே பார்ப்பது, நிஜமாகப் பார்ப்பது, நிஜமான பிரக்ஞையை அடைவது. அதன் பொருள், நம்மைச் சூழ்ந்த பற்பல பொருட்களைக் குறித்து நாம் இன்னும் ஆழ்ந்த புரிதலைப் பெறுகிறோம், ஆனால் அதே நேரம் அவை முற்றிலும் புதியனவாகவும் தெரிகின்றன. ஆக, முழுதும் புதிதாகப் பார்ப்பதும், அறிவதும் இரண்டுமே நிஜத்தில் ஒன்றேதான்.
பே: இந்தக் கருத்தைக் கொஞ்சம் விரித்துச் சொல்ல முடியுமா?
லெ கு: அவ்வளவு போதுமான அளவில் சொல்லவியலாது. என்னால் இதில் சிறிது குட்டையைக் குழப்பத்தான் முடியும். ஒரு மிக நல்ல புத்தகம் எனக்குச் செய்தியைக் கொடுக்கிறது, எனக்குத் தெரிந்திராத விஷயங்களையோ, அல்லது எனக்குத் தெரிந்திருக்கிறது என்பதோ, அல்லது எனக்குத் தெரியவில்லை என்பதோ எனக்கே தெரியவில்லை என்று விளக்கும் விதமான விஷயங்களையோ கொடுக்கிறது- ஆமாம், உலகமே இப்படித்தான் இருக்கிறது என்பதை நான் அறிவேன். புனைவு – கவிதையும், நாடகமும் கூட- பரிச்சயப்படலுக்கான (அறிவதற்கான) கதவுகளைச் சுத்தம் செய்கின்றன.
எல்லாக் கலைகளும் இதைச் செய்கின்றன. இசை, ஓவியம், நாட்டியம் எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை நமக்குச் சொல்கின்றன. ஆனால் இலக்கியத்தின் மர்ம குணம் என்னவென்றால், அது அவற்றை வார்த்தைகளிலேயே சொல்கிறது என்பதுதான், அதுவும் நேரடியான வார்த்தைகளிலேயே சொல்கிறது.
பே: கடந்த சில பத்தாண்டுகளில் நீங்கள் வரலாற்றால் நேரடியாகத் தாக்கம் பெற்ற வகைப் புனைவுகளிலேயே ஈடுபாடு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உங்களின் சமீபத்து நாவலான, லாவீனியா , மிகத் தெளிவாகவே சுட்டிவிடக் கூடிய ஒரு மனித வரலாற்றுக் கட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது, அதுவும் வர்ஜில் காலத்து இத்தலியில். உங்களுடைய ’த ஒய்ல்ட் கேர்ல்ஸ்’ (The Wild Girls) எனும் குறு நாவல் வேறொரு அண்டத்தில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதே போன்ற வரலாற்றுத் தன்மையைக் கொண்டிருக்கிறது.
லெ குவின்: இல்லை, த ஒய்ல்ட் கேர்ள்ஸ் அமெரிக்காவின் மிஸிஸிபியப் பண்பாட்டில் வலுவாக வேர் கொண்டது. அந்தக் கதையில் இருக்கும் அடுக்கு முறைச் சமுதாயத்தை ஒத்த ஒரு சமுதாயத்தை அந்தப் பண்பாடு கொண்டிருந்தது. எனக்கு வெகுநாட்களாகத் தெரிந்திருந்த ஒரு மானுடவியல் ஆய்வை எடுத்துக் கொண்ட நான் இது ஒரு சுவாரசியமான கதைக்கருவைக் கொண்டிருக்கிறதே என்று யோசித்தேன். அப்படி ஒரு பண்பாட்டில் வாழ்வது என்பது எப்படி இருக்கும்? ஐயா, எனக்கு அது பற்றி ஒரு சிறிதும் தெரிந்திருக்கவில்லை! நான் உடனே வெளியேறி விடவே விரும்பினேன்.
பே: அது ஒரு கொடுமையான கதை.
லெ கு: ஆமாம். அது வெறுப்பு நிறைந்த கதைதான். என் பிற்காலக் கதைகளே ஒரு அளவு உலர்ந்து, கல்லைப் போல கடினமாகி விட்டிருக்கின்றன, இதைப் போல. எனக்கு இவை அத்தனை பிடிக்காதவை. ஆனால் லாவீனியா இவற்றுக்கு எதிர்மாறானது. அது உலர்ந்திருப்பதற்கோ, கல்போலக் கடினமானதாக இருப்பதற்கோ முற்றிலும் எதிர்மாறானது. அது மிகவும் விளையாட்டுத்தனம் கொண்டது. வர்ஜிலை லத்தீன் மொழியில் படிக்க நான் முயன்று கொண்டிருக்கும்போது இது எனக்குத் தோன்றியது. அந்த முயற்சியில் மிகவும் முனைப்பாக இருந்தபோது இந்தக் கதை எனக்கு உருவானது. இங்கேயோ நான் வர்ஜிலின் உலகில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இதோ இந்தப் பெண் வந்து, தன் கதையைச் சொல்லப் போகிறாள்… நிஜத்தில், நாவலில் சில பக்கங்களைத் தாண்டியதும் பார்ப்பீர்கள், லாவீனியா வாசகரை நேரடியாக விளித்துப் பேசுகிறாள். நான் அதை எழுதியவுடன் யோசித்தேன், அடேடே, தாமிரக் கால இத்தாலி பற்றி நான் எப்படி ஒரு நாவலை எழுத முடியும்? அந்தக் கால இத்தாலி பற்றி என்ன மண்ணாங்கட்டி எனக்குத் தெரியும்? ஆனால், யாருக்குத்தான் அந்தக் கால இத்தாலி பற்றி என்ன தெரியும்?
பே: அது இன்னொரு கிரகத்தில் ஒரு சமூகத்தைப் படைப்பதை ஒத்திருந்ததா?
லெ கு: நிச்சயமாக. வரலாற்று நாவல்களும், அறிவியல் புதினமும் மிக நெருங்கியவை. நாம் ஏதோ ஒன்றை மறு உருவாக்கம் செய்கிறோம் அல்லது அதன் முன்மாதிரியைக் கட்டுகிறோம்- இரண்டும் ஒரே மாதிரி நடைமுறைகளையே கொண்டவை. நாவல் எழுதாதவர்கள் சொல்ல விரும்புவது போல, நானும் ‘ஆராய்ச்சி’ செய்தேன். மிகத் துவக்க கால ரோம் பற்றியும், தாமிர யுகத்து இத்தாலி பற்றியும் நான் அறிய வேண்டியவை பல இருந்தன. போர்ட்லண்ட் மாநில நூலகத்தின் புத்தக அடுக்குகளின் கீழ்த் தளத்தில் நான் நிறைய சந்தோஷங்களை அடைந்தேன் – துவக்க கால ரோம மதம் பற்றியும், அது போன்ற இதர விவரங்களைப் பற்றியும் என் கற்பனைக்குத் தீனி போட்ட பிரமாதமான புத்தகங்களை அங்கிருந்துதான் அகழ்ந்து எடுத்துப் படித்தேன். ஆனால் இந்தப் புத்தகம் அடிப்படையில் ஒரு குரலை இடம் மாற்றிப் பொருத்திப் பேசும் செயலை ஓரளவு ஒத்திருந்தது. நான் என்ன எழுத வேண்டுமென்று லாவீனியா எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் .
பே: ’த வேவ் இன் த மைண்ட்’ புத்தகத்தில் நீங்கள் எடுத்துப் பேசிய ஒரு கருத்துக்கு- ஒரு பாத்திரத்திலிருந்து துவங்கும் நாவல் என்பதற்கு- இது மிகச் செம்மையானதொரு உதாரணம்.
லெ கு: அதுவும் ஒரு குரலோடு கூட. (என்) காதில் ஒரு குரலோடு. அந்த முதல் பக்கம் நான் எழுதினேனே- நாவல் அங்கிருந்து முன்னேறுகிறதே, அது வேறேதுமில்லை, லாவீனியா நம்மிடம் பேசுவதுதான்- தெளிவாகவே, நானும் அதைக் கேட்டவர்களில் ஒருத்தி.
பே: உங்களுடைய நாவல்களில் ஒரு தெளிவான வளர்ச்சி என்று நான் ஏதும் சுட்ட வேண்டுமானால், அது சிக்கனத்தை நோக்கிய நகர்வுதான்.
லெ கு: பாருங்கள், என் எழுத்து வாழ்வு மிக நீண்டதாக இருந்திருக்கிறது. எனக்கு என்ன தெளிவாகி இருக்கிறதென்றால், நான் உரைநடையின் சில முன்னாயத்தங்களை விட்டு விட்டேன். ஒரு சகஜமான, வாழ்வுக்கு அருகான குரலையே இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தி வருகிறேன்.
பே: அது ஏனென்று நினைக்கிறீர்கள்?
லெ கு: அறுபதுகளிலும், எழுபதுகளிலும், அதி புனைவுகளின் மொழி இன்னும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் நடைகளையே நம்பி இருந்தது- டோல்கீன், சொல்ல வேண்டுமா? ஆனால் டன்ஸேனி, எட்டிஸன், மக்டானல்ட், பிறகு தெளிவாகவே மிகப் பின்னே போனால், மாலரி. நான் அதிபுனைவுகளில், நாயகத்தனத்திலிருந்தோ, சாகஸங்களிலிருந்தோ விலகிப் போகத் துவங்கிய போது, ஓரளவு நெறிப்பட்ட சொல்பயன்பாட்டை விட்டும் விலகி, நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதற்கேற்ற ஒலியமைப்புகளைக் கொண்ட மொழிக்கு மாறினேன்.
பொதுவாக எழுத்தில் என் குரலைப் பொறுத்தவரை, சொல்லப் போனால், நாம் முதியவர்களாகிறோம், நம் மொழி நம் காலணிகளைப் போலவோ, நம் சமையலறைப் பாத்திரங்களைப் போலவோ ஆகி விடுகிறது- நமக்கு இனி புதுப் பளபளப்பு அத்தனை தேவையாக இருப்பதில்லை. ஒன்றை நேரடியாகச் சொல்ல நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். என் முந்தைய நாவல்களை மறுபடி படிக்கையில் நான் நினைப்பது இது, எனக்கு இத்தனையெல்லாம் தேவையாயிருந்திருக்கவில்லை- இத்தனை கூடுதலாக நான் சொல்லியிருக்க வேண்டாம் என்பதுதான். நிறையவற்றை நான் வெட்டி இருக்கலாம். ஒரே வெட்டு!
எனக்கு என் கதையில் அதைத் தொடர்ந்து முன்னேற்ற ஒரு தாள கதி தேவை. ஏனெனில் ஒரு கதையைச் சொல்வதின் மொத்த நோக்கமே அதுதான். நாம் ஒரு பயணத்தில் இறங்கியுள்ளோம்- இங்கிருந்து அங்கே போகவிருக்கிறோம். அது நகர வேண்டும். அந்த தாளகதி மிக நுண்மையானதாகவும், சிக்கலானதாகவும் இருந்தாலும் சரிதான், அதுதான் வாசகரை இழுத்துக் கொண்டு போகப் போகிறது. இதெல்லாம் சிறிது பூடகமாகத் தொனிக்கிறதோ என்னவோ.
பே: இதில் இசைத் தன்மையும் தொனிக்கிறது.
லெ கு: வயதாவது என்ற மொத்த நடைமுறையுமே – இன்னும் மேலாக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் சிலவற்றை மறுபடி மறுபடி செய்வதிலேயே பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம், அவற்றைச் செய்வதிலேயே வயதானவராகவும் ஆகிறோம். அப்படிக் கற்பதில் ஒன்று, நமக்கு வேண்டுவன நிஜமாகவே குறைவானவைதான். நான் ஒன்றும் மினிமலிஸம் பற்றிச் சொல்லவில்லை, அது ஒரு மிகவும் சுயத்தில் ஊறிய நடையைக் கேட்கும் முறை, அதை என்னால் செய்ய முடியாது என்பதோடு அதைச் செய்ய எனக்கு விருப்பமும் இல்லை. நான் நிறையவே வருணிக்கத் தயாராக உள்ளேன், அதுவும் அலங்காரமாகவும், உணர்ச்சி ததும்பவும் எழுதவும் தயார். ஆனால் அதையே நாம் சுருக்கமாகவும் செய்ய முடியும், அது மேலானதாகவும் இருக்கிறது. இதில் என் முன்மாதிரி யாரும் உண்டென்றால் அது கடைக்கால பீத்தோவன். கடைசி க்வார்டெட்டுகளில் அவர் இடம் விட்டு இடம் மாறுகையில் அப்படித் திடீரெனவும், புதிராகவும் நகர்கிறார். அவருக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரிந்திருக்கிறது, அங்கே போக நிறைய நேரத்தை வீணடிக்க அவர் விரும்பவில்லை. ஆனால் நாம் கேட்கும்போது, அதோடுதான் பயணிக்கிறோம், அவர் தன்னோடு நம்மை அழைத்துச் செல்கிறார். சில நேரம் மூத்த ஓவியர்களைப் பற்றி நினைப்பதும் இதே- அவர்கள் தாம் பயன்படுத்தும் பொருட்களில், வழிகளில் அத்தனை எளிமையாகி விடுகிறார்கள். அவ்வளவு நேரடியாக, எளிமையாக. ஏனெனில் தமக்கு அதிக நேரம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நமக்கு வயதாக வயதாக இது நன்கு புலப்பட்டு விடுகிறது. நாம் நேரத்தை வீணடிக்க முடியாது.
oOo
———————————————–
பின்குறிப்புகள்:
[1] ‘த பிலீவர்’ என்ற ஒரு பத்திரிகை, ரிவ்யு வகைப் பத்திரிகை இல்லை, ஆனால் அதன் கவனம் பேட்டிகளில் நிறைய உள்ளது. மாதப்பத்திரிகை, அனேகமாக எல்லா மாதங்களிலும் ஒரு பேட்டி உள்ள பத்திரிகை.
[2] http://www.everywritersresource.com/topliterarymagazines.html
[3] இந்தியர் என்று இக்கட்டுரையில் குறிக்கப்படுவோர் எல்லாம் பழங்குடி அமெரிக்கர்களே. இங்கும் அப்படித்தான்.