கவிதையின் நேரம்

படிகளின் எண்ணிக்கை  நாமெல்லோருமே அறிந்தது தானே
தோழா, இந்தச் சிறையிலிருந்து
அந்த அறைக்கு.
இருபதென்றால்
அவர்கள் உன்னை குளியலறைக்கு அழைத்துச் செல்லவில்லை.
நாற்பத்தைந்தென்றால்
அவர்கள் உன்னை  வெளியே அழைத்துச் செல்லவில்லை
உடற்பயிற்சிக்காக.
எண்பதைக் கடந்த பின்
குருடனைப்  போல் படிக்கட்டில்
நீ இடறத் தொடங்கினாலோ
எண்பதை  நீ கடந்து விட்டாலோ
ஒரேயொரு இடம் தான்  இருக்கிறது
அவர்கள் உன்னைக் கொண்டுசெல்ல
ஒரேயொரு இடம் தான்
ஒரேயொரு இடம் தான்
இப்போது ஒரேயொரு இடம் தான்  மீந்திருக்கிறது
அவர்கள் உன்னைக் கொண்டுசெல்ல.

oOo

Pain_Hands_Helpless_save_SOS_Bachao_bath_tun_Mental_Shrink

நான் வசிக்கும் இடத்திற்கு  அருகே, ஏரியையொட்டி ஒரு ஹோட்டல் இருக்கிறது, கடந்த யுத்தத்தின் போது அது கெஸ்டாபோவின் (Gestapo)  உள்ளாட்சித் தலைமைச் செயலகமாக இருந்தது. அதில் பலரும் விசாரிக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்போது அது மீண்டும்  ஹோட்டலாகியிருக்கிறது. பாரிலிருந்து வெளியே நோக்கினால்  நீருக்கு அப்பாலுள்ள மலைகள்  தென்படும்; பத்தொன்பதாம் நூற்றாண்டின்  நூற்றுக்கணக்கான  கற்பனை நவிற்சிவாத (Romantic)  ஓவியர்களுக்கு அக்காட்சி  உன்னதமாகவே இருந்திருக்கும். இதே காட்சியைத் தான் , விசாரணைகளுக்கு முன்னேயும் பின்னேயும் , சித்திரவதை செய்யப்பட்டவர்களும் பார்த்திருப்பார்கள். அக்கட்டிடத்தில் அவர்கள் முடிவுறாது நீடித்திருக்கும் மரண அவஸ்தைக்கும், விவரிக்கவே முடியாத வலிக்கும்  உட்படுத்தப்பட்டிருப்பதால் அதைப்  பார்ப்பதற்குக் கூட திராணியில்லாமல், அவர்களது காதலர்களும் நண்பர்களும் இதே இயற்கைக் காட்சி முன் தான் ஸ்தம்பித்து நின்றிருப்பார்கள்.  உன்னதத்திற்கும்  தற்போதய யதார்த்தத்திற்கும் இடையே, அந்த மலைகளிலும் அந்த ஏரியிலும் அவர்கள் எதைக் கண்டார்கள்?
அனைத்து அனுபவங்களிலும், முறைப்படுத்தப்பட்ட மானுடச் சித்திரவதையே  மிகவும் விவரிக்க இயலாததாக இருக்கக் கூடும்.  அதில்  சம்பந்தப் பட்டிருக்கும் துயரத்தின் செறிவினால்  மட்டுமே அல்ல, வதையின்  முனைப்பு,   மொழிகளனைத்தும் இயங்கும் அடிப்படை  அனுமானத்தையே எதிர்த்திருப்பதாலும் கூட : வேற்றுமைகளுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்விற்கான சாத்தியமிருக்கிறது என்ற அனுமானம்.  வதையோ  மொழியைத் தகர்க்கிறது : மொழியை குரலிடமிருந்தும், வார்த்தைகளை  உண்மையிடமிருந்தும்  கிழிப்பதே அதன் குறிக்கோள். வதைபடுபவருக்குத் தெரியும் : இவர்கள் தன்னை உடைக்கிறார்கள் என்று.  அவனுடைய அல்லது அவளுடைய எதிர்ப்பென்பது  உடைக்கப்படும் சுயத்தின்  அழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பதே.

வதை கிழித்துப் பிரிக்கிறது.
அவர்களை நம்பாதீர்கள், என்னுடலின் படத்தை
உங்களிடம் அவர்கள் காட்டுகையில்,
அவர்களை நம்பாதீர்கள், நிலவை நிலவென்று
உங்களிடம் அவர்கள் கூறுகையில்,
நிலவை நிலவென்று உங்களிடம் கூறினால்,
ஒலிநாடாவிலிருக்கும் குரல் என்னுடையதென்று கூறினால்,
வாக்குமூலத்திலிருக்கும் கையொப்பம் என்னுடையதென்று கூறினால்,
மரத்தை மரமென்று கூறினால்.
அவர்களை நம்பாதீர்கள்
நம்பாதீர்கள்
அவர்கள் உங்களிடம் கூறும் எதையுமே,
அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கும் எதையுமே,
அவர்கள் உங்களுக்குக் காட்டும் எதையுமே,
அவர்களை நம்பாதீர்கள்.

சித்திரவதைக்கு  மிக நீண்ட மற்றும் பரவலான  ஒரு வரலாறு இருக்கிறது. இன்று பலரும் அதன் மீள்தோற்றத்தின்  (அது எப்போதாவது மறைந்ததா என்ன?)  அளவையைக் கண்டு அதிர்ச்சியுறுகிறார்கள் என்றால்,  அதற்குக் காரனம் தீவினையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையின்மை தான். வதை அரிதாக இருப்பதாலோ ,கடந்த காலத்திற்கே உரியது  என்பதாலோ  அது நமக்கு அதிர்ச்சியளிப்பதில்லை : அது தன் செயல்பாட்டின் மூலமே நம்மை அச்சுறுத்துகிறது.சித்திரவதையின் எதிர்ப்பதம் முன்னேற்றம் அல்ல, கருணையே . (இவ்விஷயம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிற்கு மிக அருகே இருப்பதால் அதன்  சொல்லாடல்களையே  நாம் பயன்படுத்தலாம்).

வதை செய்வோருள்  பெரும்பாலோர், மருத்துவ ரீதியின் வரையறையில்  Sadists  என்றழைக்கப்படும் துன்புறுத்தலில் இன்பம் காண்பவர்களோ  சாத்தானின் அவதாரங்களோ அல்ல. குறிப்பிட்ட பயிற்ச்சியை ஏற்று அதன் பின் அதை பிரயோகிக்க பதப்படுத்தப்பட்ட  ஆண்களும் பெண்களும்  தான் அவர்கள். அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட , வதைப்பவர்களுக்கான முறைசார்ந்த மற்றும் முறைசாரா பள்ளிகள் உள்ளன.  ஆனால் முதல் பதப்படுத்தல் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாகவே  நிகழ்கிறது : சில வகை மனிதர்கள்  நம்மிலிருந்து அடிப்படையாகவே வேறுபட்டவர்கள், அவர்களின் வேற்றுமை நமக்கு மிகப்பெரிய  ஆபத்தை விளைவிக்கக் கூடுமென்ற  கருத்தியல் கூற்றுகளின் மூலமே இது நிகழ்த்தப் படுகிறது. படர்க்கையை  கிழித்தெறிவது, “அவர்களை “,  நம்மிடமிருந்தும் உங்களிடமிருந்தும். அடுத்த பாடம்,  வதை பயிற்றுவிக்கும்  பள்ளிகளில் : அவர்களின்  உடல்கள்  பொய்கள், ஏனெனில்  அவை  தாங்கள்  ஒன்றும் அவ்வளவு வேறுபட்டவை  அல்ல  என்று  கோருவதால் : வதை என்பது இப்பொய்யிற்கான தண்டனையே. வதைப்பவர்களே தாங்கள் அறிந்து கொண்டதை  கேள்விக்கு உட்படுத்த நேர்கையில் / நேர்ந்தால்  தாங்கள் ஏற்கனவே செய்தவற்றை எண்ணி  பயந்து, மீண்டும் வதையைத் தொடர்வார்கள் ; வதையே படாத தங்கள்  சருமத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு இப்போது மீண்டும் வதைப்பார்கள்.
லத்தீன் அமெரிக்க ஃபாசிஸ்டு (Fascist)  ஆட்சிகளில்  – பினோச்செயின்  சிலே (Pinochet’s Chile) ஓர் உதாரணம் – வதையின் தருக்கம் முறையான திட்டத்துடன்  நீடிக்கப் பட்டிருக்கிறது. உடல்களைக் கிழித்தெறிவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களைப் பற்றி படிக்கவே கூடாதென்று , அவர்களின் பெயர்களையும் கிழிக்க முனைவார்கள். அவமானத்தாலோ, வெட்கத்தாலோ அவ்வரசுகள் இதைச் செய்கின்றன என்ற அனுமானம் தவறானதே. வீரத்தியாகிகளையும், நாயகர்களையும்  அடியோடு ஒழித்து, மக்களிடையே அதிகபட்ச  அச்சுறுத்தலை  ஏற்படுத்துவதே  அவர்களின் நோக்கம்.
பெண்ணோ ஆணோ  வெளிப்படையாகவே கைது செய்யப்பட்டு, அவர்களது வீட்டிலிருந்து இரவிலோ அல்லது பணியிடத்திலிருந்து பகலிலோ காரில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். கைது செய்வோரும், பலாத்காரமாக தூக்கிச் செல்பவர்களும்  சாதாரண ஆடைகளே  அணிந்திருப்பார்கள். இதன் பிறகு மறைந்த நபரைப் பற்றிய தகவலறிவதென்பது  ஏலாத காரியம். காவல்துறையினர், மந்திரிகள், நீதிமன்றங்கள்  இவர்களெல்லோரும்  காணாமல் போன நபரைப் பற்றிய எந்தத் தகவலையுமே அங்கீகரிக்க மறுத்து விடுகிறார்கள். எனினும் காணாமல் போன நபர்கள் அனைவரும் ராணுவ நுண்ணறிவுத் துறையின்  கையடைவில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். மாதங்கள், வருடங்கள் கழிகின்றன.  காணாமல் போனவர்களை இறந்துவிட்டதாக  எண்ணுவது கூட கொடூரமாகப் பிரிக்கப்பட்டவர்களின்  நினைவிற்கு நாம்  இழைக்கும் துரோகமாகும்; ஆனாலும் அவர்கள்  உயிருடனிருக்கிறார்கள் என்ற  நம்பிக்கை அவர்கள் வதைபடும் கொடுங்கனவையும் ,  பிறகு,  அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்கவேண்டிய நிர்பந்தத்தையும் உடனழைத்து வருகிறது. கடிதமில்லை, அறிகுறியில்லை, இருக்குமிடத்தை பற்றிய தகவலில்லை, முறையிட எவருமில்லை, விதிக்கப்பட்டிருக்கும்  தீர்ப்பிற்கு  முடிவுமில்லை, ஏனெனில்  தீர்ப்பே இல்லை. பொதுவாக மௌனமென்பது ஒலியின் இன்மை என்றே பொருள்படும். இங்கு மௌனம் செயற்படுவதாக, மீண்டும் முறைப்படி, மனதை வதைக்கும்  கருவியாக  மாற்றப் பட்டிருக்கிறது. எப்போதாவது, கடற்கரையில் அலைகளால் வீசியெறியப்பட்ட   சடலங்கள் தோன்றி, காணாமல் போனவர்களின் பட்டியலால் அடையாளப் படுத்தப்படும். எப்போதாவது, ஓரிருவர்  இன்னமும் காணப்படாமலே இருக்கும் மற்றவர்களைப் பற்றிய தகவலுடன்  திரும்புவார்கள் : ஒருகால், ஆயிரக்கணக்கான இதயங்களை  வதைக்கக் கூடிய நம்பிக்கைகளை விதைப்பதற்காகவே அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கலாம்.

Scream_Shaking_Spinning_Head_Revolve_Rotate_Confused_Pain

சென்ற வருடம்
மே 8 –இல் இருந்து
என் மகனைக்
காணவில்லை.
 

சில மணி நேரம்
அவனை அழைத்துச் செல்வதாக
அவர்கள் கூறினார்கள்
எப்போதும்போல  வழக்கமான
கேள்விகளைக் கேட்பதற்காக.

கார் சென்ற பிறகு
உரிமத்தகடே இல்லாத அக்கார் சென்ற பிறகு,
எங்களால்
அவனைப் பற்றி
வேறெதையுமே அறிந்துகொள்ள
முடியவில்லை.
 
ஆனால்  இப்போது நிலைமை மாறியிருக்கிறது
அப்போது தான் வெளிவந்த
தோழரொருவரிடமிருந்து கேட்டறிந்து கொண்டோம்
ஐந்து மாதங்களிற்குப் பிறகு
வில்லா கிரிமால்டியில்
அவனை வதைத்துக் கொண்டிருந்தார்களென்று
செப்டெம்பர் இறுதியில்
அவனை விசாரித்துக் கொண்டிருந்தார்களென்று
கிரிமால்டிகளுக்குச் சொந்தமான
அந்த சிகப்பு வீட்டில்.
 

அடையாளம் கண்டதாகக் கூறுகிறார்கள்
அவனது குரலை அவனது கதறல்களை
அவர்கள் கூறுகிறார்கள்.

யாராவது என்னிடம் வெளிப்படையாகவே கூறிவிடுங்கள்
எப்படிப்பட்ட  காலமிது
எம்மாதிரியான உலகிமிது
இது எந்த நாடென்று ?
நான்  கேட்க வந்தது
ஒரு தந்தையின்
மகிழ்ச்சி
ஒரு தாயின்  மகிழ்ச்சி
எப்படி
இன்னமும்
தங்கள் மகனை
அவர்கள் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்றறிவதை மட்டுமே
பொறுத்திருக்க முடியும் ?
ஆயினும்
ஐந்து மாதங்களாக
அவன்  உயிருடன்  இருந்திருக்கிறான்
என்பது தானே இதன் அனுமானம் ?
மேலும் எங்களின் பெரும்
நம்பிக்கையே
அடுத்த வருடம்
அவனை  அவர்கள் இன்னமும்
வதைத்துக் கொண்டிருப்பதை
கேட்டறிவோம் என்பதே
ஏனெனில்
எட்டு  மாதங்களுக்குப் பிறகும்
அவன்
உயிருடன்
இருப்பான் இருக்கலாம் இருக்கக்கூடுமென்று

உடல் சார்ந்த வதை பிறப்புறுப்புகளின்  மீது தான் அதிகம் கவனம் செலுத்துகிறது அவற்றின் கூருணர்வுத் தன்மையாலும், சம்பந்தப்பட்டிருக்கும் தாழ்வுணர்வாலும். வதைபடுவர் மலட்டுத்தனத்தால் அச்சுறுத்தப்படுகிறார் என்பதாலும். மறைந்துவிட்டவர்களை  காதலிக்கும் பெண்களையும் ஆண்களையும் உணர்வு ரீதியாக வதைக்கையில்  அவர்களின் நம்பிக்கைகளே  வலியைப் பிரயோகிப்பதற்கான புள்ளியாகத்  தேர்வு செய்யப்படுகின்றன, மேலே குறிப்பிட்ட  மலட்டுத்தனத்தை பற்றிய பயத்தை வேறொரு தளத்தில்  ஏற்படுத்துவதற்காக.

அவன் இறந்திருந்தால்
நான்  அறிந்திருப்பேன்
எப்படியென்று என்னைக் கேட்காதீர்கள்
நான்  அறிந்திருப்பேன்.
என்னிடம் ஆதாரங்களில்லை,
துப்புகளில்லை, விடைகளில்லை
மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ
எதுவுமில்லை.

அதோ  வானம்
அதே நீலத்துடன்
எப்போதும் போல.

ஆனால் எதற்குமே இது நிருபணமல்ல.
அட்டூழியங்கள் நடந்து கொண்டே இருக்கையில்
வானம் மாறுவதே இல்லை.

அதோ குழந்தைகள்.
விளையாடி முடித்துவிட்டார்கள்.
இப்போது நீரருந்துவார்கள்
காட்டுக் குதிரைகளின்
மந்தையைப் போல
அவர்களின் தலைகள்
தலையணையை தொட்டவுடனேயே
இன்றிரவு தூங்கிவிடுவார்கள்.

ஆனால் யாரிதை  ஏற்றுக்கொள்வார்கள்
அவர்களின்  தந்தை
மரணம் எய்தாத்தற்கு
நிரூபணமாக ?

இவ்வழக்கங்கள்,  அவற்றின்  அதிகரிக்கும் நிகழ்வுகள், அவற்றின் தினசரி இயக்கத்தில் இல்லையென்றாலும் அவற்றிற்கான முன்னேற்பாடுகளில்  சம்பந்தபட்டிருக்கும் அமெரிக்க முகமைகள் , இவற்றை நாம் எதிர்கொள்கையில், எல்லா விதமான  எதிர்ப்பு மற்றும் கண்டன முறைகளையும் நாம் கையாள வேண்டும். (ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் என்ற  அமைப்பு  இவற்றில் சிலவற்றை ஒருங்கிணைக்கிறது.) .  மேலும் கவிஞர்கள் – சிலேயின்  ஆரியெல் டார்ஃப்மனைப் (Ariel Dorfman) போல் – கவிதைகள் எழுதுவார்கள் (மேலே  தரப்பட்டுள்ள, அனைத்துக் கவிதை வரிகளும் டார்ஃப்மனால் எழுதப்பட்டு ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனலால் பதிப்பிக்கப்பட்ட  “காணவில்லை (Missing)”  என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன). சர்வாதிபத்தியத்தின்  பயங்கரமான இயந்திர அமைப்பை  டாண்டேயின்  எரிநரகக் (Inferno) காலத்தைக் காட்டிலும் அதிகமாகவே  எதிர்கொள்ளும்போது கவிதைகளும் அதிகமாகவே எழுதப்படும்.

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்  சமூக அநீதிக்கு எதிராக  பல மறுப்புரைகள் உரைநடையில் எழுதப்பட்டன.  அவை நன்கு அமைக்கப்பட்ட நியாயமான வாதங்கள்,  காலப்போக்கில் மக்கள் நியாயத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும் இறுதியில் வரலாறு நியாயத்தின் பக்கமே திரும்பும்  என்ற நம்பிக்கையிலும் எழுதப்பட்ட வாதங்கள்.  ஆனால் இன்று அப்படிப்பட்ட நம்பிக்கைக்கான  சாத்தியங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை.  அதன் விளைவுகளுக்கும் உத்திரவாதமில்லை. கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தின் துயரத்தை எல்லோரும் இன்புற்றிருக்கும் ஒரு வருங்கால சகாப்தம்  ஈடுசெய்வதற்கான சாத்தியம் குறைவானதே. தீமை என்பது  அடியோடு ஒழித்துவிட முடியாத  ஒரு நிரந்திர யதார்த்தம். ஆகவே, இதற்கான தீர்வை –  வாழ்க்கைக்கு அளிக்கப்பட வேண்டிய அர்த்தத்தை ஏற்று – நாம்  காலம் கடத்த முடியாது. வருங்காலத்தை நம்பமுடியாது. உண்மைக்கான கணம் இப்போதே. இனி மேலும் மேலும்  உரைநடையைக் காட்டிலும் கவிதையே  இவ்வுண்மையை  பெற்றுக்கொள்ளும். கவிதையை விட உரை நடை எளிதில் நம்பிவிடுகிறது : உடனடிக் காயத்துடன் கவிதையே பேசுகிறது.
மொழியின் பேறு கனிவல்ல. அது தன்னிடம்  தக்கவைத்திருக்கும்  அனைத்தையும்  துல்லியத்துடன்  தக்கவைத்துக் கொள்கிறது , கழிவிரக்கமின்றி.  நேயத்தை தெரிவிக்கும் பதங்களில் கூட : நடுநிலையாக, சூழ்நிலைக்கே  முக்கியத்துவமளித்து. மொழி பூரணம் ஆகக் கூடியது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் வார்த்தைகளில் தக்கவைத்துக் கொள்ளுவது அதற்கு சாத்தியம் என்பது அதன் பேறு. நிகழ்ந்தது மற்றும் நிகழப்போவதனைத்தையும். வார்த்தைகளில் விவரிக்க இயலாததற்கும் அது இடமளிக்கிறது. இவ்வகையில்  மொழியைப் பற்றிக் கூறுகையில்,   அது  மனிதர்களுக்கான வாசஸ்தலம், அவரிடம் பகைமை கொள்ள மாட்டாத குடியிடம். தடங்கள், பாதைகள்  மற்றும் நெடுஞ்சாலைகளாலான  வலையமைப்பின்  மூலம் கடந்து செல்லக் கூடிய தேசத்தைப் போல் ஒரு அகன்ற  நிலப்பரப்பே. உரைநடைக்கான இருப்பிடமாக அமைந்திருக்கிறது; கவிதைக்கோ  இவ்விடம் செறிந்திருக்கிறது,  ஒரேயொரு மையத்தில், ஒரேயொரு குரலில்.
மொழியிடம் எதையும் கூறலாம். எனவேதான்  மௌனத்தையும் கடவுளையும் விட நம்முடன் நெருக்கமாக  அதனால் செவிமடுக்க முடிகிறது. ஆயினும் அதன் திறந்திருக்கும் தன்மையே பலமுறை  உதாசீனமாகக் கொள்ளப்படுகிறது. (மொழியின் அக்கறையற்ற உதாசீனம் எப்போதுமே பரிந்து கோரப்பட்டுத் தகவலேடுகள், சட்ட ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் கோப்புகளால் பயன்படுத்தப்படும்.) இவ்வுதாசீனத்தை அழித்து அக்கறையைத்  தூண்டும் விதத்தில் தான் கவிதை மொழியை அணுகுகிறது. கவிதை எவ்வாறு  நம்மீதான இக்கவனிப்பைத் தூண்டுகிறது? கவிதையின் உழைப்பின் நோக்கமென்ன ?
உழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே  பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும்  கவிதை என்ற கலைவடிவத்தின்  உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே  இவ்வோயாத உழைப்பின்  பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால்  குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால்  மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு  ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை  நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின்  மூலம்.

பிரியமானவளே !
எவ்வளவு இனிமையாகயிருக்கிறது
உன் கண்முன்னே
குளத்திலிறங்கிக்
குளிக்க
நீ பார்த்திருக்கும்படி
நனைந்த என்  மெல்லாடை
என்னுடலின் அழகை
மணந்து கொள்வதை.
வா, வந்தெனைப் பார்.
எகிப்திய  சிலையொன்றில் பதிக்கப்பட்ட கவிதை, 1500 கி.மு

உருவகத்தைப் பிரயோகிக்கும் உத்வேகம், ஒப்புமைகளைக் கண்டறிதல், இவை நிகழ்வின்  தனித்தன்மையைக் குறைக்கவோ, ஒப்பு நோக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ அல்ல (எல்லா ஒப்பீடுகளும் தம்மளவில் அதிகாரப் படிநிலையாக்கங்ளே). இருப்பின் வகுக்கவே முடியாத முழுமைக்கு ஒப்புமைகளின் கூட்டுத் தொகையை நிரூபணமாக கண்டறிவதே அதன் நோக்கம். இந்த முழுமையை நோக்கியே கவிதை முறையிடுகிறது, மேலும் அதன் முறையீடு உணர்ச்சி வயப்படுதலுக்கும் நேர் மாறானது. உணர்ச்சிப்பசப்பு  எப்போதுமே விதிவிலக்கைக் கோருகிறது, வகுக்க முடிவதையே அது விழைகிறது.
உருவகத்தால் ஒன்றிணைப்பது மட்டுமல்லாது கவிதை தன் எட்டத்தாலும் (Reach) மீண்டும் இணைக்கிறது. ஓருணர்வின் எட்ட த்தை பிரபஞ்சத்தின் எட்டத்துடன்   சமன்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தட்டுக்கேட்டின்  வகை முக்கியத்துவம் இழந்து அதன்  அளவுத் தரமே முன்னுரிமை பெறுகிறது. அளவுத் தரமே அறுதியான தட்டுக்கேடுகளை  இணைக்கிறது.

நான் உன்னுடன் சமமாகவே தாங்கிக்கொள்கிறேன்
நிலைத்திருக்கும் அந்த இருண்மையான பிரிவை.
ஏன் அழுகிறாய் ?  அழுவதை நிறுத்தி என்னிடம்
உன் கையைக் கொடு,
கனவில் மீண்டும் வருவேனென உறுதியளி
நாமிருவரும்  துயரமலைகள்.
நாமிருவரும் இந்த பூமியில் சந்திக்கவே மாட்டோம்.
விண்மீன்கள் வழியாக ஒரு வாழ்த்தை மட்டும்
நள்ளிரவில் உன்னால் எனக்கனுப்ப  முடிந்ததென்றால் …
அன்னா அக்மதோவா

இங்கு அகவழி நோக்கும் புறவழி நோக்கும்  குழப்பிக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று வாதிடுவதென்பது பட்டறிவு சார்ந்த ஒரு பார்வைக்கே  திரும்பிச் செல்வதைப் போன்றது. தற்போதையத் துயரத்தின்  பரப்பு இதற்கெதிராக அறைகூவுகிறது,  அதிசயமாக நியாயப்படுத்த இயலாத ஒரு சிறப்புரிமையைக் கோருவதற்காக.
கவிதை அனைத்தையும் அன்னியோன்யப்படுத்துவதால்  மொழியை அக்கறை கொள்ள  வைக்கிறது . கவிதையின்  உழைப்பின் விளைவாகவும்,  அது  சுட்டும் ஒவ்வொரு  செயல், பெயர்ச்சொல், நிகழ்வு மற்றும் பார்வை இவ்வனைத்தையும் அது நெருக்கமாக ஒன்றிணைப்பதன் விளைவாகவும்தான்  இந்த அன்னியோன்யம் உருவாகிறது. பெரும்பாலும் உலகின் கொடூரத்திற்கும் உதாசீனத்திற்கும் எதிராக இந்த அக்கறையை விடக்  கணிசமான  வேறெதையுமே நாம்  நிலைநிறுத்த முடியாது.

எங்கிருந்து வலி நம்மிடம் வந்தடைகிறது ?
எங்கிருந்து அவன் வருகிறான் ?
தொன்றுதொட்டு  அவன் இருந்திருக்கிறான்
நம் தரிசனங்களின்  தமயனாக
ஒலி இயைபுகளின் வழிகாட்டியாக

என்று இராக்கிக் கவியாகிய நசீக்-அல்-மில்’-இகா எழுதுகிறார்.

நிகழ்வுகளின்  மௌனத்தை  உடைப்பதற்கு , எவ்வளவு கசப்பாகவும்  புண்படுத்துவதாகவும் இருப்பினும் அனுபவத்தைப் பற்றிப்  பேசுவதும், அதற்கு வார்த்தைகளில்  உருவமளிப்பதும், இவையனைத்தும்  ஒரு நம்பிக்கையை கண்டெடுக்கின்றன : வார்த்தைகள் கேட்கப்படலாம், அவை கேட்கப்படும் போது நிகழ்வுகளுக்கும் நீதியளிக்கப்படலாம் என்ற நம்பிக்கை.  நிச்சயமாக,  இந்த நம்பிக்கையே நமது பிரார்த்தனைகளின் தொடக்கம். பிரார்த்தனையே  – உழைப்பும் கூட- நமது பேச்சுமொழியின் தொடக்கத்தில்  இருந்திருக்கக் கூடும்.  மொழியின் பயன்பாடுகளுள்  கவிதையே இத்தொடக்கத்தின் நினைவை மிகவும் புனிதமாகப்  பாதுகாத்து வந்திருக்கிறது.
கவிதையாக  வெற்றி பெறும் ஒவ்வொரு கவிதையும்  ஒரு மூலமே.  மூலத்திற்கோ  இரு அர்த்தங்கள்:  தொடக்கத்திற்கே திரும்பச் சென்று, முதன்மையாக இருப்பதனால்  தனக்கு பின்னே  வந்த அனைத்தையும் தோற்றுவிக்கிறது என்றொரு அர்த்தம்; மேலும் இதுவரையில் நிகழாதது  என்று மற்றொரு விதமாகவும் இதை அர்த்தப்படுத்திக்  கொள்ளலாம்.  கவிதையில், கவிதையில் மட்டுமே , இவ்விரு பொருள்களும்  முரண்பாடின்றி  இணைக்கப் பட்டிருக்கின்றன.
எனினும் கவிதைகள்  எளிய பிரார்த்தனைகள் அல்ல.  சமயம் சார்ந்த கவிதை கூட இறைவனிடம் மட்டுமே பிரத்தியேகமாகப் பேசுவதில்லை.  கவிதை மொழியை நோக்கியே பேசப்படுகிறது.  இதன் அர்த்தம்  தெளிவாக இல்லையெனில் ஒப்பாரியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் :  அதில் இழப்பை, வார்த்தைகள் மொழியிடம் பிரலாபிக்கின்றன.  இதே போலத் தான் கவிதையும் மொழியுடன் பேசிக்கொள்கிறது, ஆனால் இன்னமும் விசாலமாக.
வார்த்தைகளில் இடுவதென்பது அவை கேட்கப்படுமென்றும்  அவை விவரிக்கும் நிகழ்வுகளுக்கு நீதி வழங்கப்படுமென்ற நம்பிக்கையையும் கண்டடைவதே.  கடவுளால் நீதி தீர்க்கப்பட்டு அல்லது வரலாற்றால் நீதி தீர்க்கப்பட்டு. இரண்டிலுமே நீதி  தொலைவிலிருக்கிறது.  எனினும்  மொழியோ  –  உடனடியாகவும், சில சமயங்களில் ஒரு கருவியாகவும் மட்டுமே தவறாக  எண்ணப்பட்டு – கவிதை அதனை அழைக்கையில் பிடிவாதமாகவும், மர்மத்துடனும் தன் தீர்ப்பை அளிக்கிறது. இத்தீர்ப்பு  எந்த அறக் கோட்பாடுகளிலிருந்தும்  தனித்திருந்தாலும், தான் கேட்டதை  அங்கீகரித்து, நன்மைக்கும் தீமைக்குமிடையே  உள்ள வேறுபாட்டை  உறுதியளிக்கிறது –  அவ்வேறுபாட்டைப் பாதுகாப்பதற்காகவே மொழி படைக்கப்பட்டது போல !
இதனால் தான்  “பழிமலைந் தெய்திய ஆக்கங்களை” தக்கவைத்துக்  கொள்வதற்காக  இழைக்கப்படும்  உலகின் மிக பயங்கரமான கொடூரங்களையும்  மற்ற எந்த சக்தியை விடவும்  கவிதையே முழுமையாக  எதிர்க்கிறது.  இதனால் தான் உலைகளின் நேரம் கவிதையின் நேரமாகவும்  இருக்கிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.