ஃப்ரெஞ்சு மூலம்: ரஷிதா மதானி[1]; தமிழ் மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்
[மொராக்கோவைச் சார்ந்த கவிஞர் ரஷிதா மதானி தன் கவிதைகளை ஃப்ரெஞ்சு மொழியில் எழுதுகிறார். டாஞ்சியர்ஸ் நகரில் வாழும் ரஷிதாவின் கவிதைத் தொகுப்புடைய ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் ‘Tales of a Severed Head’ என்பது 2013 ஆம் வருட பென் பரிசுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த புத்தகம். அதை இங்கிலிஷில் மொழி பெயர்த்தவர் பென் பரிசை முன்பே வென்றிருக்கிற மாரிலின் ஹாக்கர் என்பவர். அவர் பென் பரிசை (PEN Award) மொழிபெயர்ப்புக்காக முன்னரே வென்றவர். இந்தப் புத்தகம் அராபியக் கதைகள் என்று நாம் அறிந்திருக்கிற ஒரு கதையை இன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கிறது. இங்கு அந்த நெடுங்கவிதையின் ஒரு பகுதி மட்டும் கொடுக்கப்படுகிறது. ]
முதல் கதை :
I
எந்த நகரத்தில் எந்த இரவு
ஏனெனில்
பிரிந்து செல்பவனின் அதே பாதிக்காக
பெண்ணும் ரயில்நிலையமும் விவாதிக்கையில்
நகரத்தில் இரவு கவிகிறது.
வாலிபன் , அழகன் ,
வெள்ளை ரொட்டித் துண்டைத் தேடிச் செல்கிறான்.
நங்கை வசந்தப் பூங்கொத்தின் அழகுடன்
பிரிந்துசெல்லும் அவளது காதலனுக்காக
இறுதி முறையாகப் பூக்க முயற்சிக்கிறாள்.
ஆனாலும் ரயில் வருகிறது
ஆனாலும் கிளை முறிகிறது
ஆனாலும் நிலையத்தில் திடீரென வசந்த காலத்தினிடையே
மழை பொழிகிறது
மேலும் ரயில் திசைகளனைத்திலிருந்தும் வெளியேறி
சீட்டியடித்தபடி பெண்ணை ஊடுருவிச் செல்கிறது
அவளது முழு நீட்டத்தின் மீது.
பெண் ரத்தம் கசியுமிடங்களில், வசந்தம் பூக்காது
மீண்டும்.
இரவில், அவளது மனதில், தலையணைக்கடியில்,
ரயில்கள் செல்கின்றன ஆட்களை நிறைத்து
குழைமண் நிறைத்து
அனைத்தும் அவளூடே செல்கின்றன
நீட்டம் நெடுக.
இன்னும் எத்தனைக் குளிர்காலங்கள், எத்தனைப் பனிப்பொழிவுகள்
ரத்தம் கசியும் முதல் கடிதம் வருமுன்
முதல் வாய் வெள்ளை ரொட்டிக்கு முன்?
II
ஒருக்கால் அதே நகரமாகவும் இருக்கலாம்
ஆனால் வேறொரு தனிமை
மற்றொரு மழை வீழும் சாலை
ரொட்டியின் மணத்தை தொடரும் நாயைத்
தொடரும் வேறொரு நாயைத்
தொடரும் குழந்தையைத் தொடர்ந்து
காலியான தெருவில் மற்றொரு குழந்தை நடந்து செல்கிறது.
மணத்துக்கருகே அவன் வர வர
மணமோ விலகிச் சென்று
படபடத்து
அந்தரத்தில் சுழன்று
திடீரென விட்டில்பூச்சியைப் போல்
தெருவிளக்கின் மீதேறி
அமர்கிறது
இரண்டு சிறுவர்களும்
இரண்டு நாய்களும்
தெருவிளக்கடியின் வெறுமையில்
ஒளி நிரம்பிய வட்டத்துள்
வாய்பிளந்தபடி நிற்கிறார்கள்.
மேலும் இது அதே இரவு
அதே தனிமை
அதே குழந்தை
அதே தெருவிளக்குகளின் வட்டத்தில்.
இப்போது அவனது கன்னத்தில் பசி
ஆழமாக்குகிறது
கண்ணீரின் சுவடுகளை.
இப்போது அவனது குச்சிக் கைகளால்
இழுத்துச் செல்கிறான் அவனது இரப்பாளி பொம்மையை :
ஓர் அட்டைப்பெட்டி
அதனுள் எலும்பும் தோலுமாக ஓர் நாய்க்குட்டி
மற்றும் ஒட்டித்தைத்த ஓர் குழந்தைப் பருவம்.
சாலைத்தளத்தில் இழுத்துச் செல்லப்படுகையில்
அவ்வொட்டுக் குழந்தைப் பருவம்
விசித்திரமானதொரு சிற்றொலி எழுப்புகிறது.
ஆனால் குழந்தையோ இரவிற்கு செவிமடுத்து
தன் பசிமுழுதும் கொண்டு கனவு காண்கிறது :
தன்னை ஒரு மாலுமியாக,
அட்டைப்பெட்டி கப்பலாக மிதந்து
அவனது பால்யத்தை சுமந்து செல்ல
பால்யமோ பறவையாகிறது
ஒரு சிறகடிப்பில்.
III
மலையுச்சியின் மீது நடக்கும் பெண்
அனைத்தையும் இழந்துவிட்டாள், தன் பச்சைக்குறிகளைக் கூட..
கைவளைகளை விற்றுவிட்டாள்
கேசத்தை விற்றுவிட்டாள்
வெண்முலைகள விற்றுவிட்டாள்
கடைசி கண்ணீர்த்துளியை அடகுவைத்தாள்,
கடைசி வாய் ரொட்டித்துண்டையும்..
அக்கம்பக்கம் பேசிவிட்டாள்
நீதிபதியுடன் பேசிவிட்டாள்
காற்றுடன் பேசிவிட்டாள்.
செங்கோட்டின் மீது நடக்கும் அப்பெண்
தன் குழந்தையை வேண்டினாள்.
தனக்கே தனக்காக அவனை வேண்டினாள்,
தனக்கு மட்டுமாய்
தான் கருத்தரித்த சிசுவைக் கேட்டாள்.
அவனை தாலாட்டிக் கொண்டிருக்க விரும்பினாள்,
எல்லாப் பெண்களையும் போல
மென்மையாக, மென்மையாக, ஒவ்வொரு இரவும்
தான் பாடியது போல் பாடித் தாலாட்ட,
தான் கருத்தரித்த சிசுவை.
ஆனால் ஆண்கள்
ஆனால் காற்று அவளைச் செங்கோட்டின் மீது புறந்தள்ளுகிறது
கடலைப் பார்க்கிராள்
கடலுள் தன்னை வீசியெறிந்து
கடலையே குடித்துத்தீர்க்க விரும்புவாள்.
ஆனால் திடீரென அவளது பச்சைக்குறிகளனைத்தும்
தங்களைப் பொருத்திக் கொள்ளத் திரும்பி,
ஒன்றாகப் பேசத் தொடங்குகின்றன.
தன்னுடலில் பச்சையும் நீலமுமாய்
பொறிக்கப்பட்ட பழங்கதைகளை
ஒரே பொழுதில் கண்டெடுக்கிறாள்.
பின்செல்லும் அலையைப் பார்த்தபடி நிற்கிறாள்
கண்கள் வறண்டு
உதடுகள் மடிந்து.
இப்போது மலையுச்சியை விட்டுச் செல்கிறாள்
விலகிச் செல்கிறாள்…..
இப்போது செல்கிறாள் அவளுக்கே உரிய நீதியை நோக்கி.
IV
என்ன ஒரு பெண், என்ன ஒரு புறப்பாடு!
தனது பயத்திற்கு பெயரிட்டு
அதன் நீளத்தையும் அளந்து விட்டாள்.
அதன்பின் தன் வாயை அளந்தாள்
அதன்பின் ஒரே அசைவில் எழுந்தாள்.
கண்ணாடி நகரினுள் செல்கின்றாள்
வீடு வீடாகச் செல்கின்றாள்
பேசுகிறாள்
இனி எதுவும் அவளைத் தடுக்க இயலாது.
இரவுகள் அனைத்தையும் பேசுகிறாள்
அனைத்துப் பெண்களைப் பற்றியும்
கடலைப் பற்றிப் பேசுகிறாள்
அனைத்தையும் கொண்டு சென்றுவிட முடியும் போல்
அனைத்தையும் கொண்டு செல்லும் அலைகளைப் பற்றியும் பேசுகிறாள்
அங்கே, கடலெங்கு முடிகிறதோ
அதை மீண்டும் தொடங்கும் அலைகளைப் பற்றியும்.
நகரத்தினூடே செல்கிறாள்
மரணத்துடன் கைகோர்த்து
நடக்கிறாள்
கைகளில் நடுக்கமில்லாமல்….
உன் மண்டைக்குள்ளேயும் அவள் பேசுகிறாள்
வெடித்துச் சிரிக்க மாட்டாளா, அந்தப் பெண்
ஒருக்கால், மதிலடியே, ஷாரீயார் உயிர்த்தெழுந்தால்!
V
இந்தப் பெண் பிறப்பதற்காக
எத்தனை காயடிக்கப்பட்ட நகரங்கள் ?
மணல்குடித்து வெறியேறிய
எத்தனை ரத்தமுறிஞ்சும் பிசாசு-மனிதர்கள்
எத்தனை உபதெய்வங்கள் ?
எத்தனை ஆப்பிள் பழங்கள்
வானிலிருந்து உருண்டு விழுந்திருக்க வேண்டும்?
பூமி அப்படி ஒன்றும் பரந்திருக்கவில்லையே
அவள் எப்போதும் அதே மரத்தை நோக்கி செல்வதற்கு.
எப்போதுமே அந்த மரத்தை நோக்கி செல்வது பெண் தானா?
மாதுளம்பழம் கூட எனக்கு போதுமானதாய் இருந்திருக்கும்.
உன் தொண்டையைக் கிழித்த அந்த ஆப்பிளாக இருந்தேனென்ற
குற்றவுணர்வுகளும் எனக்கு இருந்திருக்காது.
ஏனெனில்
உன் உதடுகளிலிருந்து நான் பிறக்கவில்லை
உன் நெஞ்சிலிருந்து நான் பிறக்கவில்லை
உன் கபாலத்திலிருந்தும் நான் பிறக்கவில்லை
வாழ்நாள் முழுதும் கோணியே இருப்பாயென
முன்பே அறிந்திருப்பேனாயின்
உன் விலாவெலும்பிலிருந்தும் கூட
நான் பிறந்திருக்க மாட்டேன்.
மணல்குடித்து வெறியேறிய உபதெய்வமே
எத்தனை ஆப்பிள்கள் தேவைப்பட்டன
வானிலிருந்து நிர்வாணமாக நீ உருண்டுவிழ?
oOo
[1] ரஷிதா மதானியின் ஒரு கவிதை படிக்கப்படும் காட்சியை இந்த யு ட்யூப் விடியோவில் பார்க்கலாம். அவர் ஃப்ரெஞ்சு மொழியில் எழுதுகிறார்.
https://www.youtube.com/watch?v=2pmpJvXE8Yo
இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு பார்க்கலாம்:
http://www.jadaliyya.com/pages/index/7920/five-poems-by-rachida-madani