அர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)

’புனைவின் கலை’ என்கிற வரிசையான பேட்டித் தொடர்களில் இந்த பேட்டியின் எண்- 221

பேட்டியாளர்: ஜான் வ்ரே

பே: இது நியுயார்க்கிலா?

லெ குவின்: இது நியுயார்க்கில்தான் நடந்தது. நான் இருபத்தி மூன்று வயதில் இருந்த போது, என் அப்பாவிடம் கேட்டேன், நாப்பிடம் என் நாவலை அனுப்புவது, அவர்களுடைய நட்புக்கு ஏதும் சங்கடம் விளைக்குமா என்று. அவரோ இல்லையே, அவருக்கு அனுப்பிப் பாரேன் என்றார். நானும் அதைச் செய்தேன், பதிலுக்கு நாப் ஒரு அழகான கடிதம் எழுதினார். இந்தக் கேடு கெட்டதை நான் எடுத்துக் கொள்ள முடியாது. பத்து வருடங்கள் முன்பு எடுத்துக் கொண்டிருப்பேன், இப்போது எனக்கு இது கட்டுப்படியாகாது. அவர் மேலும் சொன்னார், இது ஒரு விசித்திரமான புத்தகம், ஆனால் நீ நிச்சயம் எங்கோ போய்ச் சேருகிறாய்! எனக்கு அவ்வளவுதான் வேண்டி இருந்தது. எனக்கு அந்த நாவலை ஏற்றுக் கொள்வது தேவையாக இருக்கவில்லை.

பே: அது நாப்புடைய வழக்கமான பதில் இல்லை என்று நான் ஊகிக்கிறேன்.

லெ குவின்: நானும் அது என் அப்பாவுக்கு மரியாதை கொடுத்து எழுதப்பட்டதென்று நினைக்கவில்லை. ஏனெனில் நாப் ஒரு மென்மையான மனிதர் இல்லை. என் அப்பா அவரைக் கடற்கொள்ளைக்காரன் என்றுதான் அழைப்பார்.

பே: அந்த ஆர்ஸினியா நாவல் பிறகு வெளிச்சத்தையே பார்க்கவில்லையா?

லெ குவின்: இல்லையே. அதை யாராவது பல்கலையாளர் தோண்டி எடுத்துப் பிரசுரித்தால் அவர் தலையில் இடி விழட்டும்.

பே: ஒரு திட்டத்தை நிறைவேற்றுமுன் எல்லாப் பாத்திரங்களும் உங்கள் மனதில் தெளிவாக இருந்தால்தான் அதைத் தொடர முடியும் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் எனக்கு என்ன சந்தேகம் என்றால், உங்கள் புத்தகங்களில் சில ஒரு கொத்துப் பாத்திரங்களுடன் துவங்கி இராதவை, நீங்கள் துழாவிப் பார்க்க விரும்பிய ஒரு கருத்தோடுதான் துவங்கி இருப்பீர்கள்.

லெ குவின்: Dispossessed_Ursula_Leguin_Books_Authors_Science_Fiction_SF_Story_Writersஅது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.

ஆகவே, நான் ஒரு பாடத்திட்டம் போன்ற ஒன்றை முடித்தேன், அந்த இலக்கியத்தைப் படித்தேன், அது என்னைப் அசாத்திய சமூகவியத்துக்கு (utopianism) இட்டுச் சென்றது. அது க்ரொபொட்கின் மூலமாக, ஆள்வோரில்லாத சமூகவியத்துக்கு (anarchy), அதிலும் அமைதி வழி ஆள்வோரில்லா சமூகவியத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. ஆள்வோரில்லா அசாத்திய சமூகம் பற்றி யாரும் புத்தகம் எழுதவில்லை என்று ஒரு கட்டத்தில் எனக்கு,த் தோன்றியது.. சோஷலிஸ்ட் அசாத்திய சமூகங்கள், இழிசாத்திய சமூகங்கள், மேலும் இதர வகை சமுதாயங்கள் பற்றியும் புத்தகங்கள் இருக்கின்றன, ஆனால் ஆள்வோரில்லா சமூகவியத்திற்கு- அட, அது கிளர்வூட்டுவதாக இருக்குமே. அப்புறம், நான் ஆள்வோரில்லா சமூகவியம் பற்றிய பிரசுரங்களில் கிட்டியதை எல்லாம் படித்தேன். அதுவோ, போர்ட்லண்டில் சரியான கடைகளுக்குப் போனால், ஏகப்பட்டதாய் இருக்குமே.

பே: பழுப்புக் காகிதப் பைகளில் கொடுப்பார்களே, அங்கேதானே?

லெ குவின்: உங்களுக்கு அந்தக் கடைக்காரரைத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வந்தால், உங்களைப் பின்னறைக்கு அழைத்துப் போய், அங்கு கொழித்துக் கிடக்கும் இந்த விஷயங்களைக் காட்டுவார். அவற்றீல் சில வன்முறை வழியே கிட்டும் ஆள்வோரில்லாச் சமூகம் பற்றியவை, அவை அரசாங்கத்தால் கண்டிக்கப்பட்டிருக்கும்.

இந்த விஷயங்களில் சில வருடங்கள் நீந்திக் கொண்டிருந்தேன், அதன் பிறகே என்னுடைய அந்த காங்க்ரீட் பாறையை அணுக முடிந்தது. இப்போது எனக்குப் புரிந்தது, அந்தப் பாறை துகளாகியிருந்ததென்று. என்னிடம் அந்தப் பாத்திரம் இருந்தது, அவர் இன்னும் ஒரு இயற்பியலாளராகத்தானிருந்தார், ஆனால் நான் நினைத்தபடியான பாத்திரமாக இல்லை அவர். அதனால் அந்தப் புத்தகம் ஒரு கருத்தோடுதான் துவங்கியது, ஆனால் ஒரு கொத்து கருத்துகள் ஒருங்கிணயத் துவங்கியதில் எழுந்தது. எழுதுவதற்கு மிகச் சிரமம் கொடுத்த புத்தகம் அது, ஏனெனில் அடிமுதல் துவங்கி ஒரு சமுதாயத்தை நான் கட்டி எழுப்ப வேண்டியிருந்தது, ஆள்வோரில்லா சமூகம் ஒன்றை முழுதாகக் கற்பனை செய்ய முயன்ற பௌல் குட்மான் போன்ற கலகக்கார எழுத்தாளர்கள் பலரின் உதவியை நாட வேண்டியிருந்தது,

பே: அதுவோ அப்படி ஒரு விசிறி மனோபாவத்தில் எழுதப்படவில்லை.

லெ குவின்: Always_Coming_Home_Ursula_K_Leguin_Book_Authorநான் ஒரு செயல்திட்டத்தை எழுதவில்லை, ஒரு நாவலைத்தான் எழுதினேன். த டிஸ்பொஸஸ்டு நாவலை எழுதியபிறகு நான் அசாத்திய சமூகத்தைப் பற்றித் தொடர்ந்து யோசித்தேன். அப்படி ஒரு சமூகம் பற்றிய கோட்பாடு மடிந்து கொண்டிருப்பதாகவும், அதை எழுத முடியாமல் எல்லாரும் இருந்ததாகவும் உணர்ந்தேன். அழிசாத்திய சமூகங்களே எங்கும் தென்பட்டன. நான் இன்னொரு நாவலையும் எழுதியிருக்கிறேன் , ’எப்போதும் வீடு திரும்புதல்’ (Always Coming Home) – என் கருத்தில் அது அசாத்திய சமூகம் பற்றி நான் எழுதியதில் சிறந்தது அது. ஆனால் பறிக்கப்பட்டவர்கள் (த டிஸ்பொஸஸ்டு ) நாவல் கருத்துகளைப் பற்றி யோசிப்பவர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் ‘எப்போதும் வீடு திரும்புதல்’ நாவலை ஹிப்பி அசாத்திய சமூகம் ஒன்றாகவே பார்க்கிறார்கள், ஏதோ எல்லாரும் தோலால் ஆன கூம்புக் கூடாரத்துக்குத் திரும்பி விட வேண்டும் என்று சொல்ல முயலும் நாவல் அது என்பது போலத் தோன்றுகிறது அவர்களுக்கு. நான் சொல்வதெல்லாம், இன்னும் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள், மக்களே என்பதுதான்..

பே: அது நிஜமாக என்ன செய்கிறது?

லெ குவின்: மிக்க விலை கேட்பதும், மிகுந்த அழிப்பைச் செய்வதுமான ஒரே ஒரு வகை முன்னேற்றத்தையே முனைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துக்கு, முற்றிலும் வேறுபட்டதொரு வாழ்வை அது கொடுக்கிறது- ஒரு முன்வரைவுத் திட்டமாக இல்லை, ஒரு தரிசனமாகத்தான் கொடுக்கிறது.

பே: அந்த நாவலில் இருந்த நாட்டுப் புறப் பாடல்களை மறுபடைப்பு செய்த ஒரு ஒலி நாடாவோடு ஒரு முறை அந்த நாவலின் ஒரு பதிப்பாக நீங்கள் வெளியிடவில்லையோ?

லெ குவின்: ஓரெகன் ஷேக்ஸ்பியர் விழாவுக்கு இசை இயக்குனராகச் செயல் புரிந்த டாட் பார்டன் அதற்கு இசை அமைத்தார்- அந்த ஒலிப்பதிவுக்குப் பெயர் ‘கேஷ்களின் இசையும், கவிதையும்’. அவரும் நானும் சில பாடகர்களைக் கொண்டு அதை உருவாக்கினோம். அதெல்லாம் நான்காவதிலும், ஐந்தாவதிலும், ஒன்பதாவதிலும்தான் அமைந்திருந்தது, ஏனெனில் கேஷ் மக்கள் அப்படித்தான் அதைச் செய்திருப்பார்கள். அந்த இசைக் கோர்வையைத் தயாரிப்பதில் எங்களுக்கு எக்கச் சக்கமான குதூகலம் கிட்டியிருந்தது. பிறகு நாங்கள் அதற்குப் பதிப்புரிமை கோர முயற்சி செய்தோம். பதிவுரிமை அலுவலகத்திலிருந்து எங்களுக்குப் பதில் வந்தது, அவர்கள் சொன்னார்கள்- நீங்கள் நாட்டுப் புறப் பாடல்களுக்குப் பதிவுரிமை கொண்டாட முடியாது என்று. அது ஒரு பழங்குடி மக்களுடையது அல்லவா என்று பதில். எங்களுக்கு அதற்கு ஒரு பதிலெழுதும் சந்தோஷம் கிட்டியது, அந்தப் பழஞ்குடி மக்களையும் நாங்கள்தான் கற்பனையில் கட்டி எழுப்பினோம், அவர்களுக்கும் எங்களுக்குப் பதிப்புரிமை கொடுக்க முடியுமா என்று.

பே: ஒரு திட்டத்தைச் செயல்படுத்த விழையும்போது, அதிலிருந்து ஒரு புத்தகம் கிட்டி அதன் விற்பனை சாத்தியக் கூறுகள் எப்படி இருக்குமென்று நீங்கள் யோசித்ததுண்டா?

லெ குவின்: துவக்கத்தில். என் புனைவுகளைப் பிரசுரிக்க எனக்கு வெகு காலம் பிடித்தது- பலப் பல வருடங்களாகத் தொடர்ந்து அனுப்புவதும், திரும்பிப் பெறுவதுமாகக் கழிந்தது.- நான் ஓரளவு வெறுத்துப் போயிருந்தேன். சந்தேகப்படவும் துவங்கினேன். நானென்ன என் பரணுக்காகவா எழுதுகிறேன்? அப்போது தெளிவாக முனைந்து ஒரு அதிபுனைவுக் கதையை எழுதினேன், அதை விற்க முடியுமா என்று பார்க்கத்தான், அது ஒரு வகைப்படுத்தப்பட்ட புனைவு. பாரிஸில் ஏப்ரல் என்ற கதைக்குப் பின்னும் அப்படி ஒரு உந்துதலே இருந்தது, அது நான் விற்பனை செய்ய முடிந்த பல துவக்க கட்டக் கதைகளில் ஒன்று.

பே: பாரிஸில் ஏப்ரல் கதை அப்படி ஒன்றும் வகைப்படுத்தப்பட்ட கதை போலில்லை, அல்லவா?

லெ குவின்: Ursula_K_leguin_the-winds-twelve-quartersஅது ஒரு அதி புனைவு, காலப்பயணம் பற்றிய அதிபுனைவு. அது எழுதிய அதே வாரம் பிரசுரத்துக்கு ஏற்கப்பட்டது. ’ஆன் டை ம்யூஸிக்’ என்பது ஒரு ஆர்ஸினியன் கதை, ஒரு கற்பனை நாட்டில் அது நடப்பதாக எழுதப்பட்டிருந்தாலும், எதார்த்தமானது, ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு அதை விற்றேன். நீங்கள் விற்பனையைப் பற்றி என்னிடம் கேட்டீர்கள் இல்லையா? நல்லது, அந்த இலக்கியப் பத்திரிகை எனக்கு ஐந்து பிரதிகளைச் சன்மானமாகக் கொடுத்தது. ’ஃபாண்டாஸ்டிக்’ பத்திரிகையா அது , என் ’பாரிஸில் ஏப்ரல்’ கதையை எடுத்துக் கொண்டது? அவர்கள் எனக்கு முப்பது டாலர்கள் கொடுத்தார்கள், இன்றைய கணக்கில் அது முந்நூறு டாலர்களுக்குச் சமம். ஒரு சிறுகதைக்கு மிகவுமே நல்ல சன்மானம்.

பே: உங்கள் எழுத்து வாழ்வின் துவக்கத்தில் நீங்களே உங்களுக்கு ஏஜண்டாக இருந்தீர்கள் என்கிறார்களே, அது உண்மையா?

லெ குவின்: ஆமாம், என் முதல் மூன்று நாவல்களை நான் டான் வோல்ஹைமிடம் விற்றேன், ஏஸ் புக்ஸ் நிறுவனத்திடம். ஒரு விதத்தில் கொஞ்சம் சமத்காரமான வேலை அது. பிறகு நான் ‘இருளின் இடது கை’ நாவலை எழுதினேன், அது என் முதல் மூன்று அறிவியல் நவீனங்களிலிருந்து நன்கு வேறுபட்டதாக இருந்தது என்று நான் தெரிந்து கொண்டிருந்தேன்.

பே: ஆக, ‘இருளின் இடது கை’ நாவலை முடித்த போது, நீங்கள் உணர்ந்தது என்னவென்றால் —

லெ குவின்: அது ஒப்பீட்டில் பெரிது.

பே: என்ன விதத்தில் பெரிதாக இருந்தது?

லெ குவின்: The Left Hand of Darkness_Ace_SF_Ursula_K_Leguin_Science_Fictionஅறிவார்ந்த தளத்திலும், ஒழுக்கத் தளத்திலும் நிறைய விஷயங்களை எடுத்துப் பேசியது, மேலும் அது முழுதுமே ஒரு புத்தி- சோதனை முயற்சிதானில்லையா? ஏஸ் டபுள் பிரசுரங்களைப் போன்ற தல்லவே அது, பாலடையாளமே இல்லாத மக்களைப் பற்றிய புத்தகமாயிற்றே? ஆனால் நான் அறிவியல் புனைவுலகுக்கு நல்லதொரு காலகட்டத்தில் நுழைந்திருந்தேன், அப்போது நிரம்பவும் இலக்கிய எழுத்து போல அமைப்பதும், மிகச் சவாலான விஷயங்களை எடுத்துப் பேசுதலும், அதிகமாக சோதனை முயற்சி போல எழுதப்படுவதும் அறிவியல் நவீனங்களில் அனுமதிக்கப்பட்டன, கதவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா விதமான எழுத்துகளுக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. எல்லாம் ஹைன்லினையோ, ஆஸிமாவையோ நகலாக இருக்கவில்லை. பெண்கள் பதுங்கி நுழைந்தார்கள், ஊடுருவினார்கள், பல்கி எல்லா இடங்களிலும் பரவினார்கள்.

பே: நீங்கள் அந்தக் கட்டத்தில் விரும்பிய எழுத்தாளர்கள், ஆணோ, பெண்ணோ, யார் யார்?

லெ குவின்: இப்போது அந்தப் பெயர்களுக்கு என்ன அவசியம்? அதெல்லாம் கிட்டத் தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தியது. அவர்கள் யாரென்று நான் விளக்க வேண்டி வரும், விளக்கினாலும் யாருக்கும் யாரைப் பற்றி நான் பேசுகிறேன் என்று புரியாது. கவனிக்க வேண்டியது என்னவென்றால், யார் திறந்தாரென்றாலும், கதவுகள் திறக்கப்பட்டன என்பதுதான் விஷயம். ஒரு குறுகிய, தற்காப்புணர்வு மிக்க இலக்கியப் பிரிவு விரிவடைந்து, பெரும் திரள்களை அடையத் தயாராகியது என்பதுதான்.

பே: குறைந்தது இருபதாம் நூற்றாண்டிலாவது, அந்த சமயத்தில், இலக்கியத்தின் வேறு சில கிளைகளாவது அறிவியல் நவீனங்களை விட மேலும் ஆண்களால் நிரம்பியவையாக இருந்தன என்பது என் ஊகம்.

லெ குவின்: பெண்கள் ஆண்களைப் போல நடிக்க வேண்டி இருந்தது, அல்லது தங்கள் பெயர்களின் முதலெழுத்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டி இருந்தது.

பே: அறுபதுகளிலும், எழுபதுகளிலும் அமெரிக்க அறிவியல் நவீனத்தில் ஏகமாக ஊறியிருந்த ஆண் மதிப்பீடுகளுக்கு உங்கள் படைப்புகள் ஒரு எதிர்ப்புள்ளியாகவோ, அல்லது திருத்தமாகவோ இருந்ததாகச் சொல்லப்பட்டன. ஃபிலிப் கே. டிக், உதாரணமாக, நேரடியாக உங்களுக்குச் சமகாலத்தவர். அவர் படைத்த உலகுகள், சில நேரமாவது, மிக ஒடுக்கும் விதத்தில் ஆண் மையம் கொண்டனவாக இருந்தன இல்லையா?

லெ குவின்: ஆமாம். அவருடைய பாணி- நடையைப் பொறுத்து அவர் ஒரு புதிர். ஆனால், அடடா, அவர் என் மீது எத்தனை பெரும் தாக்கம் கொண்டிருந்தார்!

பே: டிக்கின் படைப்புகளில் எது உங்கள் கவனத்தைக் கவர்ந்திருந்தது?

லெ குவின்: Philip K. Dickநாங்கள் இருவருமே பெர்க்லியில் வளர்ந்தவர்கள், குறிப்பாக ஒரே தலைமுறையினர் என்பதாலோ என்னவோ, இருவருக்கும் டாவோயியம், ஐ சிங் போன்றனவற்றில் இருந்த ஈடுபாட்டைப் போல சில விஷயங்களில் பொதுவான ஆர்வங்கள் இருந்தன. அப்புறம், அவரது அறிவியல் நாவல்கள் சாதாரணமான, சிறிதும் அதிசய குணங்கள் இல்லாத, குழம்பிய மக்களைப் பற்றியன. மாறாக காம்ப்பெல்லிய வகையோ, ராணுவ நாயகத்தனமும், முகமில்லாத பெருந்திரளும் கொண்ட கதைகளே பெரும்பாலான அறிவியல் புதினங்களில் அன்று புழங்கின. த மேன் இன் த காஸில் (The Man in the Castle) கதையில் டாகோமி என்பாரின் பாத்திரம், நாம் அறிவியல் நவீனத்தை முனைப்போடு அணுகும் நாவலாசிரியராக இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எனக்கு ஒளியூட்டிக் காட்டியது. உங்களுக்கு இது தெரியுமா, நாங்களிருவரும் ஒரே உயர்நிலப் பள்ளியில் படித்தோம் என்பது?

பே: நீங்களும், ஃபிலிப் கே. டிக்குமா? நிஜமாகவா?

லெ குவின்: பெர்க்லி உயர்நிலை. மூவாயிரத்தைநூறு குழந்தைகள். பெரிய, பிரும்மாண்டமான பள்ளி. யாருக்கும் ஃபில் டிக்கைத் தெரிந்திருக்கவில்லை. பெர்க்லி உயர்நிலைப் பள்ளியிலிருந்து அவரைத் தெரிந்திருந்த ஒரு நபரைக் கூட நான் பார்த்ததில்லை. அவர் ஒரு மாயாவி சக மாணவன்.

பே: இது ஏதோ அவருடைய நாவல்களில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது போல அல்லவா தெரிகிறது? அப்படியானால் உங்களுக்கு அப்போது அவரைத் தெரிந்திருக்கவில்லையா?

லெ குவின்: இல்லை! வளர்ந்தவர்களாகத்தான் நாங்கள் கடிதம் பரிமாறிக் கொண்டோம். ஆனால் நான் அவரை நேரில் பார்த்ததே இல்லை.

பே: நீங்கள் துவங்கியபோது அவர் ஏற்கனவே பிரசுரமான எழுத்தாளராகி இருந்தாரா?

லெ குவின்: ஆமாமாம். ஃபில் எனக்கு முந்தியே பிரசுரமாகி இருந்தார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் பெரிய நிலையை அடையவில்லை. ஒரு வகைமை இலக்கிய எழுத்தாளராகவே நடத்தப்பட்டு சுரண்டப்படும் பல எழுத்தாளர்களைப் போலவே அவரும் இருந்தார், அது உங்களுக்குத் தெரிந்திருக்குமே? தனது அறிவியல் புனைவில்லாதா வேறு வகைப் புனைவுகளை, எதார்த்தமான நாவல்களை, அவரால் பிரசுரிக்கவே முடியவில்லை, அதனால்தான் அறிவியல் புனைவுகளை அவர் முயன்றார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அதில் ஒரு அசாத்தியத் திறமை இருந்ததென்பது மிகவுமே தெளிவு. ஆனால் அவரது எழுத்து வாழ்வு அவருக்குச் சிறிதும் பயன் தராததாக இருந்தது. அவர் உயிரோடு இருந்து எழுதிக் கொண்டிருக்கையிலேயே, ஃப்ரெஞ்சு நாட்டினரால் அவர் கவனிக்கப்பட்டிருந்தார். ஃப்ரெஞ்சுக்காரர்கள் அவர்பால் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர். அது அவருக்கு எத்தனை அர்த்தமுள்ளதாக இருந்தது என்று எனக்குத் தெரியாது. அவரோ தன் தலைக்குள் என்ன நடந்ததோ அவற்றைக் கவனிப்பதிலேயே அதிகம் முனைந்திருந்தார்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.