வன்மம்

ஜமால் பூர்விகம் தெரியாமல் யாரையும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மாட்டான். ஒன்று ஜமாலுக்கு அவனை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் ஜமாலுக்கு நன்றாகத் தெரிந்த யாராவது சிபாரிசு செய்ய வேண்டும். அதனால்தான் நாகுலுவை ஜமால் சமையலறைக்குள் கூட்டி வந்து “இவன் உங்களுக்கெல்லாம் உதவியாக இருப்பான்” என்று சொன்னபோது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நாகுலு யார் என்று எங்களுக்குத் தெரியாது, நாங்கள் யாரும் அவனை சிபாரிசு செய்யவில்லை. ஜமாலுக்கும் அவன் பூர்விகம் தெரியாது. நாகுலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது அவனுடைய பேச்சுத் திறமையும் அப்பாவியான முகமும்தான் என்று எனக்குப் பிறகு தெரிந்தது.

நான் அப்பொழுது அல்ஃபதா கஃபே இரானி ஹோட்டலில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். ஜமால் எங்கள் முதலாளி. அவன் எனக்கு உறவு முறைதான். உழைத்து முன்னுக்கு வந்தவன். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடனே பார்ப்பான். வேலை சரியாகச் செய்யாமல் நாங்கள் அவன் உழைப்பை வீணடித்து விடுவோமோ என்று எப்போதும் அவனுக்கு கவலை. கல்லாவை விட்டு அவ்வளவு சீக்கிரம் நகர மாட்டான். பல வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கும் என்னையே நம்ப மாட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எங்கள் ஹோட்டலின் வடிவமைப்பு எல்லா இரானி ஹோட்டல் போல்தான் இருந்தது. இரானி ஹோட்டல்களுக்கு கதவுகள் கிடையாது. ஒரு பெரிய ஹால், அதில் பல மேஜை நாற்காலிகள். இதுதான் எல்லோரும் டீ குடிக்கும் இடம். ஒரு பக்கமாக கண்ணாடி டிஸ்ப்ளே. அதற்குள் கேக்குகள், பிஸ்கட்கள் இன்னும் சில பேக்கரி ஐட்டம்கள். இந்த ஹால் சுவற்றில் கதவில்லாத ஒரு பெரிய ஜன்னல் போல் ஓர் ஓட்டை. அதன் வழியாக நீங்கள் என்னைப் பார்க்கலாம். இது வழியாகதான் நான் சப்ளையர்களுக்கு டீ கொடுப்பேன். ஜன்னலின் நடுவே ஒரு சிறு மேடை இருந்தது. அதில் தான் டீ கோப்பைகளை வைப்பேன். அதன் கீழ் ஒரு மரக்கதவு இருந்தது. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால் அந்தக் கதவைத் திறந்து குனிந்து வர வேண்டும்.

IC

நான்தான் இந்த ஹோட்டலின் டீ மாஸ்டர். எனக்குப் பக்கத்தில் ஒரு டீ கெட்டில் இருக்கும். அதன் பக்கத்தில் ஒரு ஸ்டவ். அதில் எப்பொழுதும் கொதித்துக் கொண்டிருக்கும் பால். நீங்கள் இந்த ஜன்னல் உள்ளே எட்டிப் பார்த்தால் ஒரு பெரிய ஹால் இருப்பதைப் பார்ப்பீர்கள். இந்த ஹாலின் ஓர் ஓரத்தில்தான் எங்கள் சமையல் அறை. இங்குதான் ஹோட்டலில் வேலை செய்யும் எல்லோருக்கும் சமைக்கப்படும். சாயங்காலம் இங்குதான் வாழைக்காய் பஜ்ஜியும் மிளகாய் பஜ்ஜியும் போடப்படும். இப்பொழுதெல்லாம் ஹோட்டலுக்கு வெளியில் தான் பஜ்ஜி போடுகிறோம், ஆனால் அப்பொழுது உள்ளேதான் பஜ்ஜி போட்டோம். இந்தச் சமையலறையில்தான் நாகுலு வேலை செய்தான்.

நாகுலு வருவதற்கு முன் என்னைத் தவிர ஹோட்டலில் இன்னும் மூன்று பேர் வேலை செய்தார்கள். யாதகிரி சப்ளையராக இருந்தான். வெங்கடேஷ் என்பவன் சமையல் செய்தான். யாதகிரி இல்லாதபோது அவன் சப்ளையராக வேலை செய்வான். ரஷீத் என்ற ஒரு சிறுவன் மேஜை துடைப்பான், ஹாலை பெருக்குவான், எடுபிடி வேலைகளைச் செய்வான். எல்லோரும் ஜமாலுக்கு நன்றாக தெரிந்தவர்கள்.

நாகுலு எங்கள் ஹோட்டலில் சேர்ந்த சில நாட்களிலேயே அவனுடைய வாய் ஜலத்தை எல்லோரும் அறிய ஆரம்பித்தோம். “முன்பின் தெரியாத உன்ன ஜமால் சேத்துக்கிட்டாருன்னா அது உன் பேச்சுனாலதான்” என்றான் யாதகிரி. “இவன் படிச்சிட்டு எதாவது ஒரு கம்பனில மார்கெட்டிங் வேலைல சேர்ந்திருந்தா இவன் எங்கேயோ போயிருப்பான்” என்றன் வெங்கடேஷ். “இவன் பேச்சாலேயே ரயில கூட நிறுத்திடுவான் போல இருக்கு” என்று வியந்தான் ரஷீத். எங்கள் ஹோட்டல் பக்கத்தில் ஒரு ரயில்வே பாலம் இருந்தது. அதில் போகும் ரயில்களை வேடிக்கை பார்ப்பது ரஷீதின் பொழுதுபோக்கு. எந்த உவமை சொன்னாலும் அதில் ரயில் வந்துவிடும். நாகுலு பேச்சினாலும், நடத்தையினாலும் ஜமால் உட்பட எல்லோருக்கும் நெருக்கமானான்.

இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கும்போது ‘அவன் எங்களுக்கு நெருக்கமானான்’ என்பது எவ்வளவு அபத்தமான வாக்கியம் என்பது புரிகிறது. அவன் எல்லோருடனும் நன்றாகப் பழகினான் என்றாலும் அவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவன் தன் ஊர் நிஜாம்பாத் என்று சொன்னான். அவனை நாங்கள் நிஜாம்பாத் நாகுலு என்று அழைக்க ஆரம்பித்தோம். அவன் அப்பா நிஜம்பாதில் தாசில்தார் ஆபிசில் வேலை செய்வதாகச் சொன்னான். தான் இங்கு பணம் சம்பாதித்து தன் பெற்றோர்களுக்கு அனுப்பி அவர்கள் நிஜாம்பாத்தில் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பது தன் ஆசை என்றான்.

அவன் உழைப்பதைப் பார்த்தால் அவன் சொல்வது நிஜம்தான் என்று எங்களுக்குத் தோன்றியது. ஹோட்டல்தான் அவன் வீடு. ஹோட்டல் சமையலறைதான் அவன் படுக்கையறை. காலையில் சீக்கிரமே எழுந்து பால்காரனை வரவேற்பான். மேஜை எல்லாம் சுத்தம் செய்து வைப்பான். ஹால் முழுவதும் நன்றாகப் பெருக்கி, கழுவி வைப்பான். இதெல்லாம் முடிந்த பிறகு ஹோட்டல் ஷட்டரை திறந்து வைப்பான். அதற்கு பிறகு அவன் சமையலறையே கதி என்று இருப்பான். கறிகாய் நறுக்குவது, சோறு ஆக்குவது, எதாவது ஒரு காய் செய்வது, ரசம் வைப்பது என்று எங்கள் ஆஸ்தான சமையல்காரனான வெங்கடேஷுக்கு உதவியாக இருப்பான்.

எனக்கு எப்பொழுதுமே சரளமாக பேசுபவர்கள் மேல் ஒரு சந்தேகம் உண்டு. அவர்கள் வார்த்தைகளால் கோட்டை கட்டுவார்கள். நாம் அதை ஒரு அழகான கோட்டையாய் பார்ப்போம். சிறிது காலம் கழிந்த பிறகுதான் தெரியும், அந்தக் கோட்டை நம்மை அவர்களது அகத்தினுள் செல்வதை தடுப்பதற்காக கட்டப்பட்டது என்று. இப்படி அருமையாக பேசும் பல உறவினர்கள் வார்த்தைகள் மூலம் எதையோ மறைப்பார்கள்: தோல்விகளை, துயரங்களை, பயங்களை. நாகுலு மேலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அது வலுத்தது.

சில நாட்களில் இரவு நேரம் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஆல்பா ஹோட்டலிலிருந்து பிரியாணி வாங்கி வந்து சாப்பிடுவோம். இது எங்கள் ஹோட்டல் ஷட்டர் பின் நடக்கும். யாதகிரியும் வெங்கடேஷும் கள்ளு காம்பவுண்டு சென்று குடம்பா வாங்கி வருவார்கள். என்றைக்காவது ரம் வாங்கி வருவார்கள். நான் குடிப்பதில்லை. பிரியாணி சாப்பிடுவேன். இரவு பன்னிரெண்டு மணிவரை இது போகும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்போம்.

யாதகிரி குடிக்க கூப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மனைவியுடன் ஏதோ சண்டை என்று அர்த்தம். குடித்துக்கொண்டே அவளைத் திட்டி தீர்த்துவிடுவான். வெங்கடேஷ் அவ்வளவு சீக்கிரம் குடிக்க வரமாட்டான். எங்கள் ஜமாலை விட இவன் கஞ்சன். காலையிலிருந்து கடுமையாக உழைப்பான். நான்கு மணிக்கே எழுந்து பல வீடுகளுக்குப் பால் கவர் போடுவான். சாயங்காலம் வரை ஹோட்டலில் வேலை. இரவு ஆட்டோ ஒட்டுவான். குடிக்க ஆரம்பித்தால் தத்துவம் பேச ஆரம்பித்து விடுவான். நாகுலு குடிப்பான், ஆனால் மிக ஜாக்கிரதையாக குடிப்பான். அவன் எப்பொழுதும் கண்ட்ரோலில் இருப்பான். போதை ஒரு அளவுக்கு மேல ஏறாமல் பார்த்துக்கொள்வான்.

இது போல் பிரியாணி, குடி என்று இருக்கும் தருணத்தில் வேறு சிலரும் சேர்ந்துக்கொள்வார்கள். எல்லாமே ஜமாலுக்கு தெரியாமல் நடக்கும். அவன் குடிக்க மாட்டான். அவன் தம்பி எப்பொழுதாவது வருவான். ஒரு நாள் யாதகிரியின் நண்பன் ஒருவன் வந்தான். எங்கள் எல்லோரையும் யாதகிரி அவனுக்கு அறிமுகப்படுத்தினான். நிஜாம்பாத் நாகுலு என்ற பெயர் கேட்டவுடன் அவன் உற்சாகமாகிவிட்டான். “ஓஹோ நீ ஊரு நிஜாம்பாதா? அர்ரே நாக்கு நிஜாம்பாத் பாக தெலுசு” என்று ஆரம்பித்தான்.

“உங்க வீடு எங்க நிஜாம்பாத்ல” என்று கேட்டான் அவன்.

“அர்ரே. என்துக்கன்னா” என்றான் நாகுலு

“சொல்றா. எனக்கு நிஜாம்பாத் அத்துப்படி. நான் அங்க வாரா வாரம் போவேன். பம்ப் செட் விக்கறேன். ரிப்பேர் பண்ணுவேன். சொல்லு எங்க உன் வீடு?”

நாகுலு தயங்கினான். பிறகு “நிஜாம்பாத்னா நிஜாம்பாத் இல்ல, கிட்டக்க இருக்கற ஒரு குக்கிராமம்” என்றான்

“எந்த கிராமம்? அதிலாபாத் போற வழியா? பஸ்தர் போற வழியா? எந்த வழி? பக்கத்துல இருக்கற எல்லா கிராமத்துலயும் நான் பம்ப் எறக்கிருக்கேன்”

“என்தெல்லாம் சின்ன ஊரு. பம்ப் எல்லாம் கிடையாது. ரொம்ப பஞ்சத்தில் இருக்கற ஊரு. நல்லா குடிக்கறப்போ எதுக்குன்னா பஞ்ச பாட்டெல்லாம். க்ளாஸ காமிங்க. கொஞ்சம் ரம் ஊத்தறேன்” என்று லாவகமாகப் பேச்சை மாற்றினான்.

எல்லோரும் குடிக்க ஆரம்பித்தார்கள். நான் மிக்சரைக் கொறித்துக் கொண்டிருந்தேன். பேச்சு எங்கோ எங்கோ சென்றது. அப்படி இப்படிச் சுற்றி மறுபடியும் நாகுலு பக்கம் வந்தது “இவன் அப்பா நிஜாம்பாத் தாசில்தார் ஆபிசில வேல பாக்கறாரு” என்றான் யாதகிரி.

உடனே அவன் நண்பன், “தாசில்தார் ஆபிசா? எனக்கு அங்க தெரியாதவங்க யாருமே இல்ல. உங்க அப்பா பேர் என்ன? ராமுலுவா? அவர் என்னவா இருக்கார் அங்க?” என்று கேட்டான். போதை சற்று ஏறியிருந்தது.

“முன்னால வேல செஞ்சிட்டிருந்தாரு. இப்போ வேலை செய்யறதில்ல” என்றான் நாகுலு

‘எனக்கு பத்து வருஷமா தாசில்தார் ஆபிஸ்ல எல்லாரையும் தெரியும். உங்க அப்பா பேர் என்ன?” என்று விடாமல் கேட்டான்.

“உங்களுக்கு தெரியாது அண்ணா. அவர் ஆபிஸ்ல வேல செய்யல. தாசில்தார் வீட்டுக்கு எடுபிடி வேல செஞ்சிட்டிருந்தாரு.”

“இந்த கவர்ன்மென்ட் ஆளுங்களே இவ்வளவுதான். அவங்க வீட்டு வேலைக்குனே சில பேர வச்சிட்டிருப்பாங்க”.

பிறகு எல்லோரும் கவர்ன்மென்ட் ஆட்களைத் திட்டினோம். உரையாடல் திசைமாறியதும் நாகுலு சற்று நிம்மதியடைந்தான் போல் இருந்தது.

அடுத்த நாள் அவனை கேட்டேன். “உன் ஊர் நிஜாம்பாத் இல்லையா?”

“நிஜாம்பாத் தான் பாய். ஆனா நாங்க ரொம்ப ஏழை குடும்பம். என் குடும்பத்தப் பத்தி அவனுக்குத் தெரிஞ்சிருந்தா என்னை ஏளனமா பேசுவானோ என்னவோன்னு பயந்து தான் நான் உண்மைய சொல்லல. அதுவும் அவன் குடிச்சிருந்தான்”

“உன் அப்பா என்னதான் பண்றாரு?”

“விடுங்க பாய். எதுக்கு உங்களுக்கு இதெல்லாம். நாகுலுன்னு ஒருத்தன் இருக்கான். உங்களுக்கு அவன் ரொம்ப தோஸ்த்துன்னு மட்டும் நினைச்சுக்குங்க. எங்க அப்பா யாரா இருந்தாலும் நம்ப தோஸ்தி குறைஞ்சா போயிட போவுது?” என்று கேட்டு என் வாயை அடைத்தான்.

குடிக்கும்போது மட்டுமல்ல, பொதுவாகவே ஒரு ஜாக்கிரதை உணர்வோடுதான் நாகுலு எப்பொழுதும் இருந்தான் என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. ஒரு சிறு ஒலியாக இருந்தாலும் அவனுக்குக் கேட்டுவிடும். சட்டென்று திரும்பிப் பார்ப்பான். புது ஆள் யாராவது ஹோட்டலுக்கு வந்தால் அவர்கள் யார் என்று என்னைத் துருவித் துருவி கேட்பான். முடிந்த வரை சமையல் அறையிலேயே இருப்பான். நன்றாக இருட்டிய பிறகுதான் வெளியே வருவான். அப்படி அவன் வெளியே வரும்பொழுது கவனித்திருக்கிறேன். அவன் கண்கள் எல்லா பக்கமும் நோட்டமிடும். யாரையோ தேடுவது போல். அதற்கு பிறகுதான் அவன் வெளியே வருவான். வெளியே வந்த பிறகும் அவன் கண்கள் எதையோ தேடிக்கொண்டே இருக்கும். முடிந்த வரையில் வெளிச்சம் இல்லாத இடத்தில்தான் நடப்பான். “யாரவது பார்த்துடுவாங்கன்னு பயமா?” என்று ஒரு முறை கேட்டேன். சிரித்தான், ஆனால் பதில் சொல்லவில்லை.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இளைஞனாக இருந்தாலும் அவன் பெண்களைப் பற்றி பேசவே மாட்டான். நாங்கள் ரோட்டில் போகும் பெண்களைப் பற்றி அவ்வப்பொழுது பேசிக்கொள்வோம். அதில் இவனுக்கு நாட்டம் இருந்ததில்லை. ஒரு நாள் இவர்கள் குடிக்க உட்கார்ந்தார்கள். அப்பொழுது ஜமாலின் கடைசி தம்பியும் வந்து சேர்ந்துக்கொண்டான். அவனுக்குப் பெண்கள் தவிர எதிலும் நாட்டமில்லை. குடிக்க ஆரம்பித்தால் பெண்களை பற்றித் தான் பேசுவான். அவன் நாகுலுவை பார்த்து, “டேய். இவன் பேச்சுக்கு எவ்வளவு பெண்கள் விழுந்தான்களோ என்னவோ? என்ன நாகுலு, உங்க ஊர்ல எவ்வளவு பெண்கள ஏமாத்தியிருக்க? சொல்றா” என்றான்.

நாகுலுவின் முகம் மாறியது. முதல் முறையாக அவன் முகத்தில் கோபத்தைப் பார்த்தேன். இதை போதையில் இருந்தால் ஜமாலின் தம்பி கவனிக்கவில்லை. அவன் தொடர்ந்தான் “உன்ன மாதிரி மஸ்கா வெக்கற பசங்கன்னா பெண்களுக்கு உயிர். சில பெண்கள் என்ன சொன்னாலும் நம்புவாங்க. ஆனா நல்லா சொல்லணும். நீ தான் அதுல பயில்வான் ஆச்சே. சொல்றா, எவ்வளவு பேரு?”

நாகுலுவின் கோபம் உச்சிக்கு ஏறியது. அவன் ஜமாலின் தம்பியை அடிக்கத் தயாராகிவிட்டான் போலிருந்தது. நான் உடனே, “அடே, அந்த ஸ்கூட்டர் சத்தம் ஜமால் ஸ்கூட்டர் மாதிரி இல்ல?” என்றேன். இதைக் கேட்டவுடன் ஜமாலின் தம்பிக்கு ஏறிய போதை இறங்கிவிட்டது.

“அரே மாக்கீ, நான் பின் வழியால போறேன். பையா வந்தா நான் இங்க வரலேன்னு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுப் பின் வழியாகச் சென்றுவிட்டான்.

இன்னொரு சம்பவம் சில நாட்களுக்கு பிறகு நடந்தது. வெங்கடேஷின் பெண் பள்ளிக்கூடம் விட்டவுடன் எங்கள் ஹோட்டலுக்கு வந்துவிட்டாள். ஜமால் இருந்தால் அவள் உள்ளே வர மாட்டாள். அன்றைக்கு ஜமால் ஊரில் இல்லை. அவள் சமையலறைக்குள் வந்துவிட்டாள்.

“வா பேடா” என்றேன் நான்.

“நமஸ்தே பாய்” என்றாள் அவள். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுதுதான் சிறு பிராயத்திலிருந்து பெரிய பெண்ணாக ஆகிக் கொண்டிருந்தாள். வயதுக்கு மீறிய வளர்ச்சி இருந்தது. முன்பு அவளுடன் சகஜமாக விளையாடிக் கொண்டிருந்த பையன்கள் அவளை வேறு மாதிரி பார்க்க ஆரம்பிக்கும் பருவம்.

வெங்கடேஷ் நாகுலுவை அந்தப் பெண்ணுக்கு காட்டி சொன்னான், “நான் சொல்லுவேனே நாகுலுன்னு இவன் தான்மா அவன். யார வேணும்னாலும் ரெண்டு நிமிஷத்துல மயக்கிடுவான்”.

“நமஸ்தே அண்ணா” என்றாள் அந்த பெண்.

நாகுலு தலையை மட்டும் ஆட்டினான். ஏனோ அவனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை. “இதோ இப்போ வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் போனவன் வெகு நேரம் வரை வரவேயில்லை. அந்த பெண்ணும் வெங்கடேஷும் சென்ற பிறகுதான் வந்தான். “எங்கடா போன?” என்றேன். “கொஞ்சம் வேல இருந்தது” என்று ஏதோ மழுப்பினான்.

அடுத்த நாள் இரவு எங்கள் பிரியாணி கூட்டம் கூடியது. யாதகிரி சற்று உற்சாகமாக இருந்தான். உரக்க பழைய ஹிந்தி பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தான், “சலோ இக் பார் பிர் சே அஜ்னபி பன் ஜாயே ஹம தோனோ”

எனக்கும் இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். நானும் கூட பாட ஆரம்பித்தேன்.

“என்னமா எழுதியிருக்கான்யா இந்தாளு” என்றான் யாதகிரி.

“சாஹிர் லுத்யன்வி” என்றேன் நான். “அவன் பெரிய ஷாயர்”.

“இதுக்கு என்ன அர்த்தம் பாய்” என்று கேட்டான் நாகுலு.

எனக்கு ஷாயரி என்றால் ரொம்பப் பிடிக்கும். அதை பிறருக்கு விளக்கி சொல்வது என்றால் எனக்கு சந்தோஷம் அதிகமாகிவிடும். “ஷாயர் என்ன சொல்றார்னா நாம்ப திரும்ப பழைய நிலைமைக்கே போயிடுவோம். ரெண்டு பேரும் அன்னியர்களாயிடுவோம். அதாவது மறுபடியும் அவனுக்கு காதல் ஆரம்பித்த தினங்கள் எப்படி இருந்ததோ அப்படி இப்போவும் வேணுன்றான். மறுபடியும் அன்னியனா இருந்து அவளோட மறுபடியும் காதல்ல விழணும்னு பாக்கறான்” என்றேன்.

“பழசெல்லாம் மறக்க முடியுமா பாய்? பழசெல்லாம் மறைக்க முடியுமா பாய்? கடந்த காலத்தை அழிக்க முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஆதங்கம் இருந்தது.

“முடியாது” என்று வெங்கடேஷ் உரக்க சொன்னான். “நாம்ப என்ன பண்றமோ அதுக்கு அனுபவிச்சே ஆகணும்”

“போடா” என்றான் யாதகிரி. “எங்க வீட்டுகிட்ட இருக்கானே ரௌடி யாதகிரி, அவன் எவ்வளவு பாவம் பண்றான். ஆனா நல்ல வீடு, ஒரு மனைவி, ஒரு செட்டப்புன்னு நல்லாதானே இருக்கான். ஜகாங்கீர பாரு. அவனுக்கு ஒரு ஹோட்டல், ரெண்டு வீடு, மூணு மோட்டார் சைக்கிள்ன்னு நல்லாவே இருக்கான். என்ன சொல்றீங்க பாய்?” என்று என்னைக் கேட்டான்.

நான் பதில் சொல்வதற்கு முன் வெங்கடேஷ் சொன்னான், “இந்த ஜன்மத்துல இல்லேன்னா அடுத்த ஜன்மத்துல அனுபவிப்பாங்கடா. ஆனா அனுபவிச்சுதான் தீரனும். நாம செஞ்ச பாவம் எல்லாம் வேதாளம் போல. நாம் எங்க போனாலும் நம்ப முதுகுல ஏறிக்கும். நம்மை விடாம துரத்தும்”

“ஆரம்பிச்சுட்டான்டா தத்துவத்த. இனிமே நமக்கு போத ஏறின மாதிரி தான்” என்று உரக்க சிரித்தான் யாதகிரி.

நாகுலு கண்ணில் ஏதோ சோகம் படர்ந்திருந்தது. அவனைப் பார்த்தேன். உடனே ஒரு சிரிப்புச் சிரித்தான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் இரவு ஹோட்டலை மூடுவதற்கு முன் வெளியில் போன நாகுலு இரண்டு நிமிடத்திற்குள் உள்ளே வந்துவிட்டான். பதற்றமாக இருந்தான். வெளியில் பார்த்துக்கொண்டே இருந்தான். இங்கும் அங்கும் நடந்தான். நான் கிளம்பும்பொழுது “நீங்க வெளியிலிருந்து ஷட்டர் போடுங்க பாய். அப்படியே பூட்டிடுங்க. சாவி எடுத்துக்கிட்டு போங்க. நான் வேணும்னா பின் பக்கமா வெளியில போயிக்கறேன்” என்றான்.

எனக்கு ஒன்று புரியவில்லலை. “ஏன்” என்றேன்.

“இன்னிக்கு ஒரு நாள் ஏன்னு கேக்காம எனக்காக இத பண்ணுங்க பாய். நாள காலைல நீங்க கதவத் திறங்க” என்று கெஞ்சினான். அவன் முகம் பார்க்க பரிதாபமாக இருந்தது. நான் சரி என்று ஹோட்டலை பூட்டிக்கொண்டு சென்றேன்.

அடுத்த நாள் காலையில் சீக்கிரமே வந்து ஷட்டரை திறந்து உள்ளே வந்தேன். நாகுலு எங்கும் காணோம். பின் பக்க கதவு திறந்திருந்தது. சரி அவன் எங்கோ வெளியில் சென்றிருக்கிறான் என்று நினைத்தேன். ஒரு மணி நேரம் ஆகியும் அவனைக் காணோம். ஜமால் வந்ததும் சொன்னேன்.

“எங்க போயிருப்பான்? வருவான்” என்றான்.

ஆனால் நாகுலு அன்றைக்கு வரவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். யாரும் அவனை பார்க்கவில்லை. என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. போலிசுக்கு சொல்வோம் என்றால் ஜமால் கூடாது என்று சொல்லிவிட்டான். “போலீஸ்காரன் நம்ப மேல பழிய போடுவான். நம்ம பேஜார் பண்ணுவான். எதுக்கு நமக்கு இந்த முசிபாத்” என்றான். நாங்களும் சும்மா இருந்து விட்டோம்.

“அவனுக்கு என்ன இருவது வயசிருக்குமா? ஏதோ வீட்ட விட்டு ஓடி வந்திருப்பான். இப்போ வீடு ஞாபகம் வந்திருக்கும். கிளம்பி போயிட்டான். என்னிக்காவது ஒரு நாள் வருவான்” என்றான் யாதகிரி.

அப்படிதான் இருக்க வேண்டும் என்று நாங்கள் எங்களை சமாதானப் படுத்திக்கொண்டோம்.

அவன் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு நாள் காலை ஐந்து மணி அளவில் என் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். நான் போய் திறந்தேன். வெங்கடேஷ் நின்றுக்கொண்டிருந்தான்.

“பாய், டிரஸ் போட்டுக்கோங்க. கொஞ்சம் வெளியில போகணும்” என்றான்.

“என்ன ஆச்சு?”

“நீங்க வாங்க போற வழியில சொல்றேன்” என்றான்.

நான் டிரஸ் மாட்டிக்கொண்டு வெளியில் வந்தேன். ஒரு ஸ்கூட்டரில் வெங்கடேஷ் இருந்தான். இன்னொரு ஸ்கூட்டரில் அவன் நண்பன் ஒருவன் இருந்தான்.

நான் வெங்கடேஷ் ஸ்கூட்டரில் உட்கார்ந்தேன். இரண்டு ஸ்கூட்டர்களும் கிளம்பின. கொஞ்ச தூரம் போன பிறகு கேட்டேன், “எங்க போறோம்? என்ன விஷயம்?”

“நீங்க ஷாக் ஆகக்கூடாது பாய். இதோ இங்க வரானே பிரகாஷ், அவன் ஷங்கர் மட் ஏரியால காலைல பால் போடுவான். இன்னிக்கு பால் போடப் போனபோது ஒரு டெட் பாடி பார்த்தானாம். பார்த்தா நாகுலு போல இருக்குன்னு சொல்றான். ஆனா இவனுக்கு சந்தேகமா இருக்காம். அது நாகுலுவா இல்லையான்னு. அதுக்குதான் என்ன வரச்சொன்னான்.”

“நஹி ஹோ சக்தா. அது எப்படி நாகுலுவா இருக்கும்? இருக்க முடியாது” பயத்தில் வேகமாகப் பேசினேன்.

“இருங்க பாய். நமக்கு இன்னும் ஒன்னும் தெரியாது. நீங்க ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க”

ஷங்கர் மட் வரும்வரை நான் அல்லாவை பிரார்த்தித்துக் கொண்டே வந்தேன். அது நாகுலுவாக இருக்கக்கூடாது. இருக்கக்கூடாது. அவன் இருபது வயது பையன். அவன் இறக்கக்கூடாது. இறக்கக்கூடாது. இறக்கக்கூடாது.

ஆனால் பிரார்த்தனைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போனது. ஒரு சின்ன ஹோட்டல் முன்னால் வண்டியை நிறுத்தினான் வேங்கடேஷ். “ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிபீன்ஸ்” என்று பெயர் பலகை இருந்தது. ஹோட்டலுக்கு எதிர் பக்கத்தில் சில லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெங்கடேஷ் அவற்றிற்க்குப் பின்னால் சென்றான். நானும் தொடர்ந்தேன். ஒரே மூத்திர நாற்றம். இருந்தாலும் அந்த நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு சிறு கூட்டம் அங்கு இருந்தது.

மெதுவாக இருவரை தள்ளிக் கொண்டு முன்னே சென்றேன். அவன் ஒரு லாரி பக்கத்தில் கிடந்தான். மண்டையில் யாரோ கல்லால் அடித்திருக்கிறார்கள். ரத்தம் கசிந்து இப்பொழுது கெட்டியாகிவிட்டிருந்தது. அவன் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்திருக்கிறது. முகம் உப்பியிருந்தது. மாரில் ஒரு கத்தியும், இடுப்பில் ஒரு கத்தியும் இறங்கி இருந்தன.

இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் வரவேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்தார். அதே சமயம் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார். இன்ஸ்பெக்டர் ஜீப்பை விட்டு இறங்கியவுடன் ஒரு கான்ஸ்டபிளைக் கேட்டார், ‘ஹோட்டல் மொதலாளி வந்தானா?”.

“நான்தான் சார் முதலாளி” என்றான் ஸ்கூட்டரில் வந்தவன்.

“இவன் யாரு?”

“எனக்குத் தெரியாது சார். ரெண்டு மாசம் முன்னாடி ஒரு நாள் காலங்கார்த்தால ஹோட்டல் தெறக்கரப்போ வந்தான். ஒரு வேலை வேணும்னான். நல்லா பேசினான். பாக்க பாவமா இருந்தது. சரின்னு வேலை போட்டு குடுத்தேன். எங்க சமையலறைலதான் வேல செய்வான். எல்லாரோடையும் நல்லா பேசுவான். அவனுக்கு யாரும் எதிரின்னே கிடையாது. இவனைப் போயி இப்படிக் கொன்னிருக்காங்களே?” அவன் பயத்தில் பேசுகிறான் என்பது நன்றாக தெரிந்தது.

“அவன் எந்த ஊரு? என்ன பேரு?”

“அவன் பேரு பிரசாத்ன்னு சொன்னான். பலமநேருன்னு ஒரு ஊர்லேர்ந்து வந்தேன்னு சொன்னான். இதுக்கு மேல அவனைப் பத்தி வேற ஒன்னும் தெரியாது சார்”

0 Replies to “வன்மம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.