அவன் ஒரு நல்ல கணவனாக, நல்ல தகப்பனாகத்தான் இருந்தான். அதனால்தான் எனக்கு அது புரியவில்லை. எனக்கு அதன் மீது நம்பிக்கையில்லை. அது நடந்தது என நான் நம்பவில்லை. அது நடப்பதை நான் பார்த்தேன், ஆனால் அது உண்மை இல்லை. அது அப்படி இருக்க முடியாது. அவன் எப்போதும் கனிவானவனாக இருந்தான். அவன் குழந்தைகளுடன் விளையாடுவதைப் பார்த்திருந்தீர்களானால், வேறு யார் பார்த்திருந்தாலும் கூட, அவர்களுக்குத் தெரிந்திருக்கும், அவனிடம் கெட்டது ஏதும் இல்லை, அவன் உடலிலேயே தீயது கொஞ்சமும் இல்லை என்று. நான் அவனை முதலில் பார்த்தபோது, அவன் இன்னும் அவன் தாயுடன் வசித்திருந்தான், ஊற்றுக் குளத்தினருகே. நான் அவர்களை ஒன்றாகப் பார்த்ததுண்டு, அம்மாவும் மகன்களுமாக. அப்போது நினைப்பேன், தன் குடும்பத்துடன் இத்தனை அருமையாகப் பழகும் ஒருவன், தெரிந்துகொள்ளப்பட வேண்டியவன்தான். பின், ஒருமுறை நான் காட்டினுள் நடந்துகொண்டிருந்தபோது அவனை சந்தித்தேன், அவன் வேட்டையிலிருந்து தனியாகத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு இரையும் இல்லை, ஒரு சுண்டெலி கூட இல்லை, ஆனால் அவன் அதனால் பெரிதாக வருந்தியவனாக இல்லை. அவன் காலைக் காற்றை ரசித்தபடி குதூகலமாகச் சென்றுகொண்டிருந்தான். அவனிடம் முதன்முதலில் நான் விரும்பியற்றில் அது ஒன்று. அவன் நிகழ்வுகளால் அடிபடுபவனாக இல்லை, அவன் நினைத்தபடி விஷயங்கள் நடக்காதபோது அவன் சுணங்கிப் புலம்புவதில்லை. அதனால், அன்று நாங்கள் பேசலானோம். அதன்பின் எல்லாம் துரிதமாக நகர்ந்தன, வெகு சீக்கிரத்திலேயே அவன் கிட்டத்தட்ட எல்லாப் பொழுதும் இங்கேதான் கழித்தான். பின் என் சகோதரி சொன்னாள் – பாருங்க, என் பெற்றோர்கள் முந்திய வருடம் இந்த இடத்தை எங்களுக்கு விட்டுவிட்டு தெற்காகப் போய் விட்டார்கள் – என் சகோதரி சொன்னாள், கொஞ்சம் கிண்டலாக ஆனால் முடிவாகவே, “இப்படி அவன் ஒவ்வொரு பகல் பூராவும், பாதி இரவும் இங்கேயே இருக்கப் போகிறானென்றால், எனக்கு இங்கு இனி இடமில்லை என்றுதான் நினைக்கிறேன்!” அவள் விட்டு விட்டு வேறு குடி போய் விட்டாள்- அதே வழியில் சிறிது தூரம் தள்ளி. நாங்கள் எப்போதும் நெருக்கமாக இருந்தோம், நானும் அவளும். அது போன்றதெல்லாம் எப்போதுமே மாறுவதில்லை. என் சகோதரி மட்டும் இல்லையென்றால், நான் இந்த கெட்ட காலத்தைக் கடந்திருக்கவே மாட்டேன்.
ஆம், அப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம் – குழந்தைகள் சின்னவர்களாக இருந்ததால், சில இரவுகள் நான் கூட்டத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தபோது – அங்கு பாடுவது, அதோ அந்த மரங்களூடாக மேலேழுந்து வரும், அந்த நிலவொளியும், கோடை இரவுகளும், முழு நிலவு ஜொலித்திருக்கும் போதும். அதுபோல அழகான ஒன்றை நான் இனி கேட்கப் போவதில்லை. அது போன்ற சந்தோஷத்தை நான் மீண்டும் உணரப் போவதேயில்லை.
அந்த நிலவுதான், அப்படித்தான் எல்லாரும் சொல்கிறார்கள். அது நிலவின் தவறு, மற்றும் இரத்தத்தால். அது அவன் அப்பாவின் இரத்தத்தில் இருந்தது. அவன் அப்பாவை நான் அறிந்ததேயில்லை, இப்போது யோசிக்கிறேன் அவருக்கு என்ன ஆகியிருக்கும் என்று. அவர் மேலே வெண்புனல் வழியிலிருந்து வந்தவர் இங்கே அவருக்கு உறவுகாரர் என்று யாருமில்லை. எப்போதுமே நான், அவர் அங்கேதான் திரும்பிப் போயிருப்பார் ன்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது எனக்கு அதைப் பற்றி ஏதும் தெரியவில்லை. அவரைப் பற்றி ஏதோ பேச்சு எழுந்திருந்தது, ஏதோ கதைகள், என் கணவனுக்கு இப்படி ஆனதற்குப் பிறகு அவை வெளி வந்தன. அது இரத்திலேயே ஓடும் ஏதோ என்று சொன்னார்கள், சாதாரணமாக ஒருபோதுமே தெரிய வராமலும் இருக்கக் கூடியது. ஆனால் அப்படித் தெரிய வந்ததென்றால், அதற்கு அந்த நிலவின் மாற்றம்தான் காரணம். அது எப்போதும் அமாவாசையின் இருளில்தான் நடக்கும். எல்லோரும் வீட்டில், தூக்கத்தில் இருக்கும்போது. ஏதோவொன்று அப்படி இரத்ததில் சாபம் பெற்றவன்மீது வருகிறது, என்று சொல்கிறார்கள், அப்போது அவன் விழித்துக்கொள்கிறான், ஏனென்றால் அவனால் தூங்க முடிவதில்லை, பின் வெளியே செல்கிறான், கண்கூசும் சூரியவெளிச்சத்துக்குள், பின் அப்படியே தனியே செல்கிறான் – அவனைப் போன்றவர்களைத் தேடும் ஈர்ப்புடன்.
அது உண்மையாகவே இருக்கலாம், ஏனென்றால் என் கணவன் அப்படித்தான் செய்வான். நான் சிறிது விழித்துக் கேட்பேன், “எங்கே போறே?”, அவன், “ஓ, வேட்டைக்கு. சாயங்காலம் திரும்பிடுவேன்,” அது அவனைப் போலவே இருக்காது, அவன் குரல்கூட வித்தியாசமாக இருக்கும். ஆனால், நான் மிகுந்த தூக்கக் கலக்கத்திலிருப்பேன், குழந்தைகள் எழுந்து விடக் கூடாதே என்றிருக்கும், ,அவனோ அத்தனை நல்லவன், பொறுப்பானவன், நான் “ஏன்?” “எதற்கு” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க என்ன தேவை என்று இருந்தேன்.
ஆக, அது அப்படி நடந்தது முன்றோ அல்லது நான்கு தடவைகளோ இருக்கலாம். அவன் மிகவும் தாமதமாக, துவண்டுபோய் வருவான், அவனது இனிய சுபாவத்திற்கு மாறாகக் கோபத்துடன் – அதைப் பற்றி ஏதும் பேசச் சிறிதும் விருப்பம் இல்லாமல் இருப்பான். எல்லாருக்கும் ஏதோ ஒரு சமயம் இப்படிப் போய் சீரழிந்து வரத் தோன்றும் என்றும், அப்புறம் அதைப் பற்றித் தொணதொணப்பது ஒருபோதும் யாருக்கும் உதவியதுமில்லை என்றும் நான் நினைத்தேன்.
ஆனால், அது எனக்குக் கவலை தரத் துவங்கியது. அவன் அப்படிப் போனான் என்பது கூட அத்தனை இல்லை, ஆனால் அவனும் மிகுந்த அயர்ச்சியுடனும், ரொம்ப மாறிப்போனவனாகவும் திரும்புகிறான் என்பதுதான். அவனது வாடை கூட மாறி விசித்திரமாக ஆனது. அது எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை, பின் நான் கேட்டேன், “என்னதது – உன்னிடம் ஒரு வாடை? உன் மீது எங்குமிருக்கே!”. அவனோ மிகச் சுருக்கமாகப் பதில் சொன்னான், “எனக்கு தெரியல,” பின் தூங்குவதுபோல இருந்தான். ஆனால், நான் கவனிக்கவில்லை எனத் தோன்றியபோது, அவன் இறங்கிப்போனான், தன்னைத் துடைத்தான் துடைத்தான், அப்படி மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டான், ஆனால், அந்த வாசனை அவன் முடியில் இருந்தது, எங்கள் படுக்கையிலும், பல நாட்களுக்கு.
அதன்பின் அந்த கொடூரமான விஷயம். இதைப் பற்றிச் சொல்வது எனக்குச் சுலபமாக இல்லை. அதை என் மனதிற்கு கொண்டு வரத் தேவையாகிற போதெல்லாம், எனக்கு அழவேண்டும் போல இருக்கிறது. எங்களது கடைசி மகள், என் சிறுமி, அவள் தன் அப்பாவிடமிருந்து விலகினாள். ஒரே இரவில் இப்படி ஆனாள். அவன் உள்ளே வந்தான், அவள் பயந்த-பார்வையோடு, இறுகி உறைந்து போய், கண்களை அகல விரித்து, பின் அழத் தொடங்கினாள், என் பின்னால் ஒளிந்துகொண்டாள். அவளுக்கு இன்னும் பேச்சு சரியாக வரவில்லை, ஆனால் அவள் திரும்ப திரும்ப சொன்னாள், “அதைத் துரத்து! அதைத் துரத்து!”
அவன் கண்களில் அந்தப் பார்வை; அந்த ஒரு நொடி, அவன் அதைக் கேட்டபோது. அதைத்தான் நான் ஒருபோதுமே நினைவுகொள்ள விரும்பவில்லை. அதைத்தான் என்னால் மறக்கமுடியவில்லை. அவன் கண்களில் அந்தப் பார்வை, தன் சொந்தக் குழந்தையையே பார்த்த அந்தப் பார்வை.
நான் குழந்தையிடம் சொன்னேன்,”சீச்சீ வெட்கக்கேடு, என்னாச்சு உனக்கு!”, கடிந்துகொண்டே, ஆனால் அதே சமயம் அவளை என்னருகே நெருக்கமாக வைத்துக்கொண்டே, ஏனென்றால் நானும் பயந்திருந்தேன். உடல் உதறுமளவு பயந்திருந்தேன்.
அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டு, பின், “கெட்ட கனவுக்கு நடுவில் எழுந்திருப்பா போல இருக்கு,” என்பது போல எதையோ பசப்பலாகச் சொல்லி, அதைக் கடந்து விட்டான். இல்லை, செல்ல முயன்றான். நானும் அப்படியே செய்தேன். என் குழந்தைமீது எனக்கு கடும்கோபம் வந்தது, அவள் தன் அப்பாவைக் கண்டு அப்படிப் பயந்த மாதிரியே இருந்ததைப் பார்த்து. ஆனால், அவளால் பயப்படாமல் இருக்க முடியவில்லை, என்னாலும் அவளை மாற்ற முடியவில்லை.
அவன் அன்று முழுவதும் விலகியே இருந்தான். அவனுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அன்று அமாவாசையின் தொடக்கம் என்று.
உள்ளே, கதகதப்பாகவும் அடைந்தும் இருந்தது, இருட்டாகவும், மேலும் நாங்களெல்லோரும் சற்று நேரமாக உறங்கிக்கொண்டிருந்தோம், அப்போது என்னை ஏதோ எழுப்பியது. அவன் என்னருகே இருக்கவில்லை. கவனித்தபோது, நடையில் ஒரு சின்ன சத்தம், நான் உற்றுக் கேட்கையில். அதனால் நான் எழுந்தேன், என்னால் அதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் வெளியேறி நடைக்குச் சென்றேன், அங்கு வெளிச்சமாக இருந்தது, வாயில் வழியாக கடும் சூரிய வெளிச்சம். அவன், சற்று வெளியே, வளர்ந்த புற்களின் நடுவில் நுழைவாயிலருகே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் தலை தொங்கியிருந்தது. சட்டென அவன் உட்கார்ந்தான், தளர்ச்சியாய் உணர்ந்தவன் போல, குனிந்து தன் பாதங்களைப் பார்த்தான். நான் அப்படியே அசைவற்று இருந்தேன், உள்ளேயே, கவனித்துப் பார்த்தேன் – எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை.
அவன் பார்த்ததை நானும் பார்த்தேன். அந்த மாறுதலை நான் பார்த்தேன். அவன் பாதங்களிலிருந்து, அங்குதான் ஆரம்பம். அவை நீண்டன, ஒவ்வொரு பாதமும் நீண்டது, வெளியே இழுத்துக்கொண்டு, கட்டைவிரல்கள் இழுத்துக்கொண்டன, பின் பாதம் நீளமாக சதைப்பிடிப்புடன், வெளுப்பாக ஆனது. அதில் முடிகள் இல்லை.
அவன் உடல் முழுவதிலும் இருந்து மயிர் உதிர்ந்து வரத் துவங்கியது. அவன் மயிர் சூரிய வெளிச்சத்தில் பொசுங்கியதுபோல மறைந்து போனது. அவன் உடலெங்கும் வெள்ளையாக இருந்தது, புழுவின் தோல் போல. பின், அவன் முகத்தைத் திருப்பினான்.
நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அது மாறியது, தட்டையாக, மேன்மேலும் தட்டையாகிற்று, வாய் தட்டையாகவும் அகன்றும், பற்கள் தட்டையாகவும் மங்கலாகவும் இளித்தன, மற்றும் மூக்கு வெறும் சதை உருண்டையாக, இரு சிறு நாசி ஓட்டைகளுடன், பின் காதுகள் மறைந்தன, பின் கண்கள் நீலமாகின -நீலம், வெள்ளை விளிம்பிற்குள் நீலம், நீலமாக என்னைப் பார்த்து வெறித்தன, தட்டையான மிருதுவான வெள்ளையான முகத்திலிருந்து.
அவன் இரண்டு கால்களில் எழுந்து நின்றான்.
நான் அவனைப் பார்த்தேன், பார்க்கவேண்டியிருந்தது. என்னுடையதேயான அன்புக் காதலன், வெறுக்கத்தக்க ஒரு ஜந்துவாக மாறியிருந்ததை.
என்னால் நகர முடியவில்லை, ஆனால் நான் பதுங்கியிருந்தேன் அந்த நடைபாதையில், அந்த கொடூரம் நிகழ்ந்துவிட்ட பகலை வெறித்தவாறே. நடுங்கிக்கொண்டும் தடுமாறிக்கொண்டும், சிறிய உறுமல் பித்துபிடித்தது போல என்னிடமிருந்து பெருகி ஊளையாகிற்று.
அது வெறித்து முறைத்தது, அந்த ஜந்து, என் கணவனிலிருந்து மாறியது, தன் முகத்தை என் வீட்டு வாசலுக்குள் நுழைத்தது. நான் இன்னும் மரண பயத்தால் கட்டுண்டிருந்தேன், ஆனால் எனக்குப் பின்னால் என் குழந்தைகள் விழித்துவிட்டார்கள், என் குழந்தை அனத்திக்கொண்டிருந்தாள். ஒரு தாயின் கோபம் என்னைப் பற்றிக் கொண்டது, நான் உறுமிக்கொண்டே பதுங்கியபடி முன்னேறினேன்.
அந்த மனித ஜந்து சுற்றிப் பார்த்தது. அதனிடம் துப்பாக்கி இருக்கவில்லை, மனிதரிடங்களில் இருப்பவற்றைப் போல. ஆனால் அது தன் நீண்ட வெள்ளைப் பாதத்தைக் கொண்டு, கனத்து விழுந்திருந்த மரக் கிளையை எடுத்தது, அதன் முனையை வாசல் வழியே கீழ் நோக்கி என் வீட்டுக்குள் நுழைத்து என்னை நோக்கி நீட்டியது. அதன் முனையை நான் என் பற்களால் கடித்து ஒடித்தேன், பின் வெளி நோக்கித் தள்ளியவாறே நடக்கத் தொடங்கினேன், ஏனென்றால் எனக்குத் தெரிந்திருந்த்து, வாய்ப்பு கிடைத்தால் அந்த மனித ஜந்து என் குழந்தைகளைக் கொன்றுவிடும், ஆனால், என் சகோதரி ஏற்கெனவே வந்துகொண்டிருந்தாள். அந்த ஆணை நோக்கி அவள் ஓடி வந்துகொண்டிருப்பதை பார்த்தேன், அவள் தலை தணிந்து பிடரி தூக்கியிருக்க, அவள் கண்கள் பனிக்கால சூரியனின் மஞ்சள் நிறத்திலிருக்க. அது அவள் மீது திரும்பி, அவளைத் தாக்கக் கிளையைத் தூக்கியது. ஆனால் நான் வாசல் வழி வெளியே வருகிறேன், தாய்மைக் கோபவெறியோடு, என் அழைப்பைக் கேட்டு மற்ற எல்லோரும் வேறு வந்துகொண்டிருந்தார்கள், மொத்தக் கூட்டமும் சேரத் துவங்கியது, அந்த கண்கூசும் வெயிலின் வெப்பம் கவிந்த உச்சி வேளையில்.
அந்த மனிதன் சுற்றி எங்களைப் பார்த்தது, பெரும் சத்தமாகக் கத்தியது, கையிலிருந்த கிளையை அச்சுறுத்தலாகச் சுற்றிக் காட்டியது. பின் அது உடைந்து ஓடியது, மலைச்சரிவிலிருந்து கீழ் நோக்கி, மரங்களகற்றப்பட்ட வெட்டவெளிகளையும் உழு நிலங்களையும் நோக்கி. அது இரண்டு கால்களில் ஓடியது குதித்துக்கொண்டும், பாதைக்கேற்ப வளைந்துகொண்டும், நாங்கள் அதைப் பின் தொடர்ந்தோம்.
நான் கடைசியாகச் சென்றேன், காதல் இன்னும் என் பயத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தியிருந்தது. அதை அவர்கள் சாய்க்கும்போது நான் ஓடினேன். என் சகோதரியின் பற்கள் அதன் தொண்டையில் இருந்தது. நான் அங்கே சென்று சேர்ந்தேன். அது இறந்திருந்தது. மற்றவர்கள் அக்கொலையிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள், இரத்தத்தின் சுவையினாலும் அதன் நெடியினாலும். சிறுவர்களெல்லாம் பயத்தில் குறுகினார்கள், சிலர் அழுதார்கள், என் சகோதரி தன் வாயைத் தன் முன்னங்கால்களில் மீண்டும் மீண்டும் தேய்த்துக்கொண்டாள், அந்த இரத்தத்தின் சுவையை அழிப்பதற்காக. நான் இன்னும் அருகே சென்றேன், அந்த ஜந்து இறந்திருக்குமானால் அந்த மாயம், அதன் சாபம் முடிந்திருக்கும், என் கணவன் திரும்ப வரக்கூடும்- உயிருடனோ, சடலமாகவோ- என நினைத்தேன், அவனை மட்டும் பார்க்க முடிந்தால், என் உண்மைக் காதலனை, அவனுடைய சுயமான அழகிய வடிவில். ஆனால் அந்த செத்த மனிதன்தான் அங்கு படுத்திருந்தது வெளீரென, இரத்தக்களரியாக. நாங்கள் அதனிடமிருந்து இன்னும் இன்னும் பின்னகர்ந்து சென்றோம், திரும்பி ஓடினோம், மேலேறி மீண்டும் அந்த குன்றுகளுக்குள், நிழல்களும் மாலை ஒளியுமான அந்தக் காடுகளுக்கு, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட இருளுக்கு.
***
எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர், அர்சுலா. அவருடைய புகழ் பெற்ற சிறுகதையான The Ones who Walk Away from Omelas இதோ.