மதுவின் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் முதல் இயற்கை விவசாயி என்ற புகழுடன் பொள்ளாச்சிக்கு அருகில் கோட்டூர் மலையாண்டிப் பட்டணத்தில் ஊர்பண்ணாடி நிவாஸில் வசிக்கும் இஞ்சினியர் மது ராமகிருஷ்ணனின் ஓர் அற்புத படைப்பு, “இயற்கை வேளாண்மைக்கு முதலுதவிப் பெட்டி”. இது இயற்கை விவசாய வழிகாட்டி நூல். பஞ்சகவ்யத்தில் தொடங்கி புங்கக்கரைசல் வரை 22 வகைத் தெளிப்பான்களை எப்படி தயாரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற விபரங்கள் உள்ளன. ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், குணபஜலம், மீன் அமினோ அமிலம், பழக்காடி, பொன்னீம், மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவை முதலிய இருபத்து இரண்டும் இவரது சுயதயாரிப்பு. மண்புழு வளர்ப்பு, மாடித்தோட்டம் பற்றிய குறிப்பும் உண்டு.
 
WP_20140518_16_27_27_Proஇவருடைய இல்லம் கோட்டூர் மலையாண்டிப்பட்டணம். இவர் வாழும் இல்லம் சந்தோஷ் பண்ணை நரிக்கல்பதியில் உள்ளது. இவரது பண்ணை ஆளியார் மேற்குத் தொடர்ச்சிமலை பாதுகாப்பு வளையக்கோட்டின் நீட்சி. இவரது பண்ணைக்குள் நரி, முள்ளம்பன்றி, யானைகள் வருவதுண்டு. இவற்றைத் தடுக்க இவர் பாதுகாப்பான சூரிய மின்வேலியும் நெருக்கமான பனைமரங்களையும் சில இடங்களில் நட்டுள்ளார். யானை வந்தால் ஒரு தென்னை மரத்தை வேரோடு சாய்த்து குருத்தைத் தின்றுவிடும். வாழைக்குத் தண்டு போல் தென்னங்குருத்தின் கொண்டையில் மென்மையான கிழங்கு இருக்கும், இது மிகவும் ருசியான உணவு. சுமார் ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் எல்லாவகையான பயிர் சாகுபடியும் கவனிக்கலாம். தென்னையைத் தவிர எல்லா வகை மரங்களும் உண்டு. 
 
சந்தோஷ் பண்ணையின் முகப்பு நிஜமாகவே சந்தோஷம் தரும். இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் கருத்துப் பெட்டகங்களாக விளம்பர வாசகங்களும் அழகிய குடில் அமைப்பும் விவசாயப் பல்கலைக்கழகம் போல் தோற்றம் உண்டு. தோற்றம் என்ன? இயற்கை விவசாயத்தில் உள்ள தொழில்நுட்பங்களைப் பார்த்தும் படித்தும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் இவர் தோட்டத்தை இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம் என்று போற்றுவதில் தவறு இல்லை.
 
நான் மொழிபெயர்த்துள்ள விருட்சாயுர்வேதம் என்ற நூலின் முதல் கவிதையின் பொருளிது – “பேரின்பம் என்பது வனிதையரின் அழகல்ல. ஏராளமான மரங்களுடன்கூடிய வனம் தருவதே இன்பம். பெண்கள் தம் அழகில் கர்வம் கொண்டு இன்ப உணர்வில் ஏங்கும்போது இன்பத்தை அள்ளித்தரும் இன்ப ஊற்றான வனம் நீண்ட தடாகங்களைக் கொண்டு அதில் தாமரை மலர, வண்டுகள் ரீங்காரமிட மரங்களுடன் வாழ்வதே பேரின்பம்”.  இப்படிப்பட்ட பேரின்பத்தை அனுபவிக்கும் மதுவின் தோட்டத்தில் தடாகமும் உண்டு. தடாகத்தைச் சுற்றி பலவகை மரங்களும் உண்டு.
 
வனவேளாண்மையின் நல்லுதாரணம் மது. 50 ஏக்கர் நிலத்தில் 28 ஏக்கர் நிலத்தில் உழவில்லா வேளாண்மை. இதில் தென்னை, கோக்கோ, ரொட்டிப்பலாம் ஜாதிக்காய், பசுந்தாள் மரமான கிளரிசீடியா, ஏராளமான தேக்கு மரங்களுடன் வானுயர்ந்து நிற்கும் யூகலிப்டஸ். சற்று தலைவலியுடனும் சோர்வாகவும் இருந்த நான் அவருடைய யூகலிப்டஸ் மரங்களின் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். தலைவலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.பதி மருந்து வாசனையை இயற்கையாகப் பெற முடிந்தது.
 
ஆளியாறு பாசன உதவி இருப்பினும் சிறப்பான நீர்ச் சிக்கன நடவடிக்கைகள் உண்டு. சொட்டு, ஸ்ப்ரிங்க்ளர், மிஸ்ட், ரெயின்கன் என்று எல்லாவகையான நுட்பங்களும் உண்டு. மூன்று திறந்தவெளிக் கிணறுகள், நீர்நிலைகளைச் சுற்றி மண்ணரிப்பு ஏற்படாமல் வெட்டி வேருடன் பல ஜாதி மரங்கள் நடவு. விவசாயத்தில் முக்கிய வருமானம் தேங்காய், கோக்கோ, ஜாதிக்காய், வனில்லா, மா, பாக்கு போன்றவை. இவர் மரமேறிக் காய் வெட்டும செலவை மிச்சப்படுத்த தென்னையிலிருந்து தானாகவே விழும் நெற்றையே பயன்படுத்துகிறார். முழுமையான காய் என்பதால் உருட்டுக் கொப்பரை தயாரித்து நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார். பயிர்களுக்கு இவர் எப்படி ஊட்டம் தருகிறார் என்பதைச் சொல்லவே வேண்டாம். தான் தயாரிக்கும் ஊட்டம் பற்றிய நூல்தான் ‘முதலுதவிப் பெட்டி’.
 
இவர் தயாரிக்கும் மண்புழு உரம் பற்றி சில வார்த்தைகள். மண்புழு உர உற்பத்தியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்ட பலவகை முறைகளையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.  அங்கு ஓர் அறிவிப்புப் பலகை தொங்கியது, “மண்புழு – மண்புழு உரம் விற்பனைக்கு இல்லை”. அதுவரை நான் மண்புழு மண்புழு உரம் விற்பனை செய்துவந்தேன். 2007ல் சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம். அதன்பின் நானும் மண்புழு, மண்புழு உர விற்பனையை நிறுத்திவிட்டேன்.
 
மது ராமகிருஷ்ணனின் சுயசரிதை சுவாரசியமானது. கொங்கு வெள்ளாளக் கவுண்டர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைப் பொறியாளர். வேளாண்மைப் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகவும் பின்னர் துணை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சொந்தமாக உரக்கடை நடத்தினார். ரசாயன உரம், பூச்சி மருந்து விற்றார்.  ஒற்றை வைக்கோல் புரட்சி இவர் மனநிலையை மாற்றி இயற்கைக்குத் திரும்பியது மட்டுமல்ல. “ஏன் இயற்கைக்குத் திரும்பினேன்?” என்று புத்தகம் எழுதியுள்ளார்.
 
மது ராமகிருஷ்ணன் இலக்கிய ரசனை மிக்கவர், தாய்த் தொழில்” என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். 
 
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்ற உறுப்பினரான இவர் மேலாண்மைக் குழு உறுப்பினராகவும் பணி செய்துள்ளார். கோவை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவரும்கூட. தென்னை நார்த்தொழில், மூலிகை சோப் தயாரிப்பு போன்ற கிராமத் தொழில்களையும் நடத்தி வருகிறார். இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தரங்குகளில் பங்கு கொண்டு உரையாற்றியவை கணக்கிலடங்காது. அயல்நாட்டு இயற்கை வேளாண்மை கருத்தரங்கிலும் பங்கேற்றவர்.
 
WP_20140518_16_27_48_Proஇயற்கைப் பெரியார் தெய்வத் திருமிகு நம்மாழ்வார் நடத்திய “இயற்கை வேளாண்மை” என்ற இதழாசிரியராகப்  பணி புரிந்த ஓராண்டு அனுபவம் உண்டு. அகில இந்திய வானொலியில் கிராமிய நிகழ்ச்சி ஆலோசனைகுழு உறுப்பினராக இரண்டாண்டுப் பணி. வானொலி உரை இருநூற்றுக்கு மேல். இப்படி இவரைப் பற்றி நிறைய சொல்லலாம். இவர் கலந்துகொண்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளும் நிறைய உண்டு. எனினும் இவர் பெருமையாக நினைக்கும் இயற்கை விவசாய நவமணிகள் ஒன்பது நபர்களில் எனக்கு மூன்றாவது இடம் வழங்கியுள்ளார். முதலிடம் ஜப்பானிய காந்தி புக்கோக்கா.
 
புக்கோக்கா இந்தியா வந்தபோது கோவாவில் ஒரு வாரம் தங்கி இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற தமிழர் இவரே.WP_20140518_16_28_07_Pro கிளாட் ஆல்வாரிஸ்தான் புக்கோக்காவை இந்தியாவுக்கு வரவழைத்தார். இவர் போற்றும்  நவமணிகளில் கிளாட் ஆல்வாரிஸ், டாக்டர் எல் நாராயண ரெட்டி, சுபாஷ் பாலேக்கர், பாஸ்கர் சாவே, பீட்டர் பிராக்டர் (உயிர்சக்தி வேளாண்மை) கைலாசமூர்த்தி (கர்நாடகம்). புக்கோக்காவுக்கு அடுத்தபடியாக இவர் மதிக்கும் நபர் நம்மாழ்வார்.
 
இவரது சமூகப் பணியில் கண்தான இயக்கம் முக்கியம். இவர் தனது இயக்கத்தின்மூலம் 250 கண்தானம் வழங்கியுள்ளார். மேலும் 500 பதிவுகள் உண்டு. பலதரப்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இவருக்கு ‘வேளாண்மைச் செம்மல்’ என்ற விருது வழங்கியுள்ளது. இவரை இயற்கை விவசாயப் பல்கலைக்கழகம் என்றே அழைக்கலாம். இவரது பண்ணைக்குச் சென்று அதன் நடவடிக்கைகளைக் கவனிப்பவர்களுக்கு இது புகழுரை அல்ல என்பது புரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.