மகரந்தம்

அகர முதல் சீனமெல்லாம் ஒன்றிரண்டால் அமைந்தது

Chinese_Letters_English_Roman_Numbers_Pronunciation_Alphabets

சீனர்களுக்கு எண்கள் மீது அப்படி ஒரு காதல். சீனாவில் கார் வாங்க, விற்க 92.காம்; வலையில் விளையாட 4399.காம். ஆங்கிலம் என்பது சீனர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது என்றால், எண்கள் என்றால் வெண்ணெய் உண்பது போல் சுளுவானது. அதுவும் ஆங்கில இணைய முகவரிகளையும் அதில் உள்ள ஆங்கில எழுத்துக்களையும் ஹாட்மெயில்.காம் என நினைவில் வைத்திருப்பதை விட அதை ஒத்த சீன எண்களை ஞாபகம் வைப்பது சுலபம். அதிலும் ஒத்த ஒலியுடைய வார்த்தைகளும் எண்களும் இருப்பதால், சீனத்தை இணையத்தில் புழங்குபவர்கள் இடையே இது சுருக்கெழுத்தாகவே மாறிவிட்டது. 1 என்றால் “வேண்டும்”; 2 என்றால் “காதல்”; 4 என்றால் ‘மரணம்’ (அ) ‘உலகம்’; 5201314 என்றால் ”நான் உன்னை என்றென்றும் காதலிக்கிறேன்”. 250 என்றால் முட்டாள். தமிழ் நன்கு அறிந்தவருக்குக் கூட சொல்வனம்.காம் என தட்டச்சுவது சிரமமான இணையத்தில், solvanam.com என செல்பேசியில் தட்டச்சுவது சிரமமில்லாமலே இருக்கிறது. கூடிய சீக்கிரமே ’சொல்வனம் செல்’ என்றால், இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும் நுட்பம் வரும்வரை சீனர்களும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் எண்களும் மாற்றுவழிகளும் எப்படி ஆபத்பாந்தவராகியது என்பதை அறிமுகம் செய்யும் கட்டுரையை இங்குப் படிக்கலாம்.

http://www.newrepublic.com/article/117608/chinese-number-websites-secret-meaning-urls

oOo

அலுப்பூட்டும் கூகுள் தானோட்டி இரதங்கள்

Google_Self_Driving_Car

தானாகவே ஓட்டிச் செல்லும் கார்களை கூகுள் பல வருடங்களாக பரிசோதனை ஒட்டம் நடத்தி வருகிறது. இந்த நுட்பம் எப்படி வேலை செய்கிறது? அதன் பின்னணியில் வேறு என்னவெல்லாம் ஓடுகிறது? பல்லாண்டு காலமாக கார் தொழிலில் மின்னும் பெரிய நிறுவனங்களை விட வித்தியாசமாக எதையெல்லாம் கூகுள் செய்கிறது? தானியங்கியாக ஓட்டிக் கொள்ளும் கூகுள் காருக்கு எப்படி ஒவ்வொரு சாலையும் அந்தச் சூழலின் சிக்கல்களும் அத்துப்படி? அவற்றையெல்லாம் அட்லாண்டிக் உள்ளே புகுந்து நமக்கு சொல்கிறது.

http://www.theatlantic.com/technology/archive/2014/05/all-the-world-a-track-the-trick-that-makes-googles-self-driving-cars-work/370871/

oOo

கலிஃபோரினியா – காட்டுத்தீ – நீர் கண்டம்

California_Water_no_swimming_Shortage_Crisis

கலிஃபோர்னியாவில் பல விஷயங்கள் புகழ்பெற்றது. கணினியும் வலையும் சார்ந்த நிறுவனங்களின் புதுமை ஒரு புறம் கோலோச்சுகிறது என்றால் திராட்சை ரச மதுவகைகளும் முப்போக அறுவடைகளும் இன்னொரு புறம் இராஜாங்கம் அமைத்திருக்கிறது புவி வெப்பமடைவதால் தீவுகள் மூழ்குவதும் ஏரிகள் வற்றுவதும் குளிர்காலத்தில் சூறாவளிகளும் மழைக்காலத்தில் கொடுஞ்சூரியனும் சகஜமாகும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் விவசாயப் பாசனங்களுக்கான நீர் அவசியமா? அல்லது உள்ளூரில் வாழ்பவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைத் திருப்தி செய்தால் போதுமா? இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

http://www.themorningnews.org/article/big-water

oOo

 காமிக் புத்தகங்களின் சோகமான நிலை

இந்தர்ஜால் காமிக்ஸ் என்றும், அமர் சித்ரா கதா என்றும் இந்தியாவில் காமிக் புத்தகங்கள் நிறைய வெளி வருகின்றன. இவற்றைப் படித்தே பெருவாரியான இந்தியர்கள் இந்தியப் புராணங்கள், வரலாறு ஆகியவற்றை அறிகிறார்கள். பின்னாளில் நிறைய விவரமாகப் படித்துக் கொள்ளலாம் என்று ஏதோ திட்டமெல்லாம் இருக்கலாம். ஆனால் பலருக்கு அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடிவதே இல்லை. இதனால்தானோ என்னவோ இந்திய வரலாறு இன்னுமே காமிக் சித்திரமாகக் கூட இல்லாமல், கேலிச் சித்திரம் போல நமக்கெல்லாம் தெரிகிறது. அதன் மீது நமக்கு அத்தனை அக்கறையோ, கவனமோ இல்லாமல் இருக்கிறோம்.

இதென்னவோ இந்தியாவின் தனிச் சாபக் கேடு இல்லையாம். உலகிற்கு காமிக் புத்தகங்களைப் பெருமளவில் அறிமுகப்படுத்தியதும், இன்னமும் உலகுக்கே அத்தகைய சித்திரக் கதைகளை இன்னும் பெருமளவில் ஏற்றுமதி செய்கிறதுமான அமெரிக்காவிலேயே காமிக் புத்தகங்களில் புனைவுகளும், அசாத்தியக் கற்பனையை முன்வைக்கும் சாகசக் கதைப்புத்தகங்களும்தான் அதிகம் விற்கின்றனவாம்.

மாறாக அமெரிக்காவிலும் சரி,இதர மேலை நாடுகளிலும், காமிக் புத்தகங்களைத் தயாரிப்போரும், வரைவோரும், பிரசுரிப்போரும் ஆன கூட்டணியினரில் ஒரு பகுதியினருக்கு இந்த ஊடகக் கூறை வேறு விதமான படைப்பிலக்கியத்துக்குப் பயன்படுத்தும் உந்துதல் நிறைய உள்ளது. தத்துவம், வரலாறு, மானுடவியல், குழு அனுபவங்கள், தனிநபர் வாழ்க்கைகள் என்று என்னென்னவோ கருதுபொருட்கள் இவர்களுக்கு அவசியமான படைப்பு வெளியாகத் தெரிகின்றன. அப்படிப்பட்ட புத்தகங்கள் பிரசுரமாவதும் நடக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால் அவை அதிகம் கவனிக்கப்படாமலும், அத்தனை விற்பனை இல்லாமலும் போவதோடு, இலக்கியத் துறையினராலுமே அதிகம் கவனிக்கப்படாமல் போகின்றன என்கிற கட்டுரையை இங்கே காணலாம். இந்தக் கட்டுரையில் பேசப்படும் ஒரு ஜப்பானியப் புத்தகத்தின் முன்னட்டையே மேலே படமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

http://lareviewofbooks.org/essay/contemporary-nonfiction-comics-elsewhere