தினம் ஒரு புதையல்

வருடம் 1996.

ஸ்பீல்பெர்க்கின் 1993ம் வருடத்து  ஜுராசிக் பார்க் படத்தின் தாக்கம் உலகில் இன்னும்  பல இடங்களில் சுழன்று கொண்டிருந்த காலம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுமே டைனொசொர் பற்றிக் கனவு கண்ட காலம் அது. நான்  சிங்கப்பூரில்  வாழ்ந்த சமயம் அது. வழக்கம்போல் உள்ளூர் செய்திகளை இந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

அன்றைய செய்தித்தாளில் ஒரு வித்தியாசமான கண்காட்சி பற்றி விளம்பரம் வந்திருந்தது. டைனொசொர்களை ஆராய்ச்சி செய்யும் ஒரு அமெரிக்க அமைப்பு தன ஆராய்ச்சிகளின் மூலம் பலவித டைனொசொர்களை மறு உருவாக்கம் செய்து கண்காட்சி அமைத்திருந்தது. இந்த அருமையான வாய்ப்பை நழுவ முடியுமா? கிளம்பி விட்டேன். சிங்கப்பூரின் அந்த விஞ்ஞான மையத்தின் (Science Center) உள்ளே நுழைந்ததுமே, ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டேன். ஜுராசிக் பார்க் காலத்திற்கு சென்று விட்டோமோ? டைனொசொர்கள் நிஜமாகவே வந்துவிட்டனவோ?

மெள்ள காட்சியில் வைக்கப்படிருந்த  ஒவ்வொரு  டைனொசொரையும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலுடன்  பார்த்துக்கொண்டு வந்தேன். நிஜம் இல்லை என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனதென்னவோ அடித்துக்கொள்ளதான் செய்தது. அத்தனை தத்ரூபம். தொழில் நுட்பம் மூலம்  உயிரோட்டமாக  அசைவுகளும் கொண்ட அந்த டைனொசொர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காடுகளில் நாம் உலவுவது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டன.

ஆனால் இவை அப்படி முழுதுமே செயற்கை என்றும் சொல்ல முடியாது. பின்னர்?

Dinosaur_World_T_rex_Jurassic_Park

இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து பூமியில் புதைந்த  டைனொசொர்களின் புதையுயிர் தடங்கள் – அல்லது புதையுயிர்  படிமங்கள் (Fossils).

கனடாவில் உள்ள எக்ஸ்-டெர்ரா அறக்கட்டளை (Ex-Terra Foundation) என்கிற ஆராய்ச்சி நிறுவனம் சீன ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, டைனொசொர் படிமங்கள்  பற்றி சீனா, கனடா போன்ற நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கண்டுபிடிப்புகளை உலகுக்குக் காண்பிக்கும் பொருட்டு டைனொசொர் வொர்ல்ட் டூர் (Dinosaur World Tour) என்ற பெயரில் பல நாடுகளில் கண்காட்சி நடத்தியது. இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஆராய்ச்சியில் பங்கு கொண்ட ஆராய்ச்சியாளர்களும் இருந்தனர்.

லிண்டா ஸ்ட்ராங்- வாட்சன் என்ற பெண் ஆராய்ச்சியாளர்  அவர்களில் ஒருவர்.  “கனடாவிலும் சீனாவிலும் மிக அதிகமாக டைனொசொர் படிமங்கள் இருக்கின்றன. அதனால் பொதுவாக டைனொசொர் ஆராய்ச்சியாளர்கள் இங்கே ஆராய்ச்சி செய்கிறார்கள். அதுவும் சீனாவில் கோபி பாலைவனத்தில் எக்கச்சக்க டைனொசொர் படிமங்கள் காணக் கிடக்கின்றன. ஒரு டைனொசொர் ஆராய்ச்சியாளரின் கனவை நிறைக்குமிடம் அது..” என்று என் பேட்டியில் லிண்டா கூறினார்.

அமெரிக்க கண்டமும் ஆசியா கண்டமும் ஒரு காலத்தில் ஒன்றான நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பல அகழ்வாராய்ச்சிகள் சொல்கின்றன. “சீனாவிலும், கனடாவிலும் கிடைக்கும் ஒரே மாதிரியான டைனொசொர் படிமங்களைப் பார்த்தால் இந்த கணிப்பு சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் டைனொசொர்கள் இந்த நிலப்பரப்பு மூலமாக இங்கிருந்தும் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து இருக்க வேண்டும்,” என்று லிண்டா விளக்கினார்.  படிம ஆராய்ச்சி செய்யும் மிகச் சில பெண்களில் இவர் ஒரு முன்னோடி.

டாக்டர் பிலிப் கர்ரி  (Philip Currie) என்பவர் 90 களில்  கனடாவில் அல்பர்ட்டா மியூசியத்தின் தலைவர். இவரது வெகுகாலக் கனவு சீனாவிலும் கனடாவிலும்  டைனொசொர் படிமங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது. ஒரு முறை இவரது நண்பர் ஒருவர் இவரிடம் கேட்டாராம் – நிறைய பணமும் வசதியும் இருந்தால் இவர் எங்கே ஆராய்ச்சி செய்யப் போவார் என்று. பதில் வந்ததாம் – ” மங்கோலியா” என்று. சில நாட்களிலேயே  அந்த நண்பர் – பிராயன் நோபில் (Brian Noble)- எக்ஸ்-டெர்ர்ரா ஃபௌண்டேஷன் என்ற இந்த நிறுவனத்தைத் தொடங்கி   டைனொசொர் ஆராய்ச்சியில் பட்டென்று கர்ரி ஈடுபட உதவினாராம்.

சுமார் 15 முறை ஆராய்ச்சிக்காக சீனாவின் கோபி பாலைவனத்துக்கும், கனடாவில் உள்ள ஆர்க்டிக் பிரதேசம், மற்றும் ஆல்பர்ட்டாவிற்கும்  இந்த ஆராய்ச்சி குழு பயணித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டது. இப்படி ஆராய்ச்சிகளில் சேகரித்த படிமங்களை இணைக்கும்போது, கிடைக்காத  பாகங்களுக்குச் செயற்கை எலும்பு சேர்த்து மறு உருவாக்கம்  செய்யப்பட்டு இருந்தது.

சீனாவின் கோபி பாலைவனத்தின் பாறைகளுடன் அந்தக் கண்காட்சியின் பின் புலம் அருமையாக  உருவாக்கியிருந்ததில் நாமே அந்த ஆராய்ச்சிகளில் பங்கு பெற்றாற்போல் பிரமை! நாமே அந்தப் பாறைகளில் சாம்பிளுக்கு கொத்திக் கிளறவும் வாய்ப்பு வேறு. ’90 களில், ஜப்பான், கனடா, சிங்கப்பூர், என்று  மொத்தம்  7 நாடுகளில் இந்த கண்காட்சி வலம் வந்தது. மொத்தம்  33,860 கிலோ புதையுயிர் படிமங்கள் 45 பெரிய மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, இந்த ஏழு நாடுகளிலும் பயணம் செய்தன. அன்று அங்கே 88 வகைப் படிமங்கள் இருந்தன. இது அன்றைய நிலவரம். இன்னும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்க, படிமங்கள் மேலும் சேர்ந்த வண்ணம் இருக்கலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சுமார் 15000 வகை டைனொசொர்கள் இருந்திருப்பதாகவும், அன்றைய கணக்குக்கு சுமார் 350  வகைகள் வரை  கண்டுபிடித்து  இருப்பதாகவும்  என்னிடம் சொன்னார்கள். கண்காட்சியில் அன்று என் கண்களில் தென்பட்ட இந்த பெரிய மரப்பெட்டிகளும் தத்ரூபமான டைனொசொர்களும் சேர்ந்து மனதில் ஒரு ஜுராசிக் பார்க் சினிமா  சூழ்நிலையையே  கொண்டு வந்து விட்டது. ஒரே வித்தியாசம் – இந்த மரப்பெட்டிகளிலிருந்து தொடக்கென்று டைனொசொர் குட்டிகள்  குதித்து வெளிவரவில்லை.

அந்தக் காட்சியில் மிகப்பெரிய டைனொசொர் வகையின் பெயர் டிரனொசொரஸ் ரெக்ஸ். மாமிசம் உண்ணும் மிருகங்களிலேயே மிகப்பெரிய வகை இதுதான். மிருகம் என்று குறிப்பிடும் அளவு பெரிதே தவிர, டைனொசொர்கள் இன்றைய பறவைகளின் முன்னோடி என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இங்கேயிருந்த அனைத்து டைனொசொர் வடிவமைப்புகளும் அசல் புதையுயிர் படிமங்களால் சித்திரிக்கப்பட்டவை. இதில் ஒரு உருவமைப்பு – ஸைன்ராப்டர் (Sinraptor) என்கிற டைனொசொர் வகையைச் சேர்ந்தது. இந்த ஒரு அமைப்பு மட்டும் முழுமையாக அந்த டைனொசொரின் எலும்புக்கூடு என்று சொன்னர்கள். இதன் உயரம் 3 மீட்டர்; 6.5 மீட்டர் நீளம்; 700 கிலோ எடை!! இந்த டைனொசொர்தான் நீங்கள் பார்த்த ஜுராசிக் பார்க் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் டைனொசொர் வகை என்று கொசுறு விவரமும் கொடுத்தார் எனக்கு விளக்கிய கண்காட்சி  உதவியாளர்!

காட்சியிலிருந்த ஒரு ஸ்டாலில் ஒரு டைனொசொர் குடும்பமே – குட்டிகளுடன் இருந்தது. ஒவ்வொரு ஸ்டாலும் பார்க்க அழகாகத்தான் இருந்தது. ஆனால் ஸ்பீல் பெர்க் ரொம்பவே தொந்தரவு செய்து கொண்டு வந்தார். அழகாக ஒரு குடுவையில்  வைக்கப்பட்டு இருந்த டைனொசொர் முட்டைகள் எப்போ வெடித்து குஞ்சுகள் வெளிவருமோ என்ற பயத்தைக் கிளப்பியது அவரோட வேலைதானே!

History_Science_Museum_Dinosaurs_T_rex_Jurassic_Park

உலகிலேயே மிகப்பெரிய டைனொசொர் கண்காட்சியாக அன்று அது இருந்தது. இந்தக் காட்சியில் வைக்கப்பட்ட படிமங்கள் இப்போதும் கனடாவில் ராயல் டிர்ரெல் மியூசியத்தில் (Tyrrell museum) வைக்கப்பட்டுள்ளன என்று கேள்வி. பிற்பாடு எனக்கு பேட்டியளித்த ஆராய்ச்சியாளர் லிண்டா ஸ்ட்ராங்-வாட்சன் தனக்கு எப்போதுமே வித்தியாசமான வேலைகள் செய்யப் பிடிக்கும் என்றும் அந்த ஆர்வமே தன்னை இந்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது என்றும் கூறினார்.

கனடாவில் அல்பர்ட்டா பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கிக்கொண்டு அந்த ஊரிலேயே ஒரு மியூசியத்தில் முதலில் வேலைக்கு சேர்ந்த லிண்டாவுக்கு ராயல் டிர்ரெல் தொல்லுயிரியல்  மியூசியத்தில் வேலை கிடைத்தது அடுத்த திருப்பம். அங்கே அவருக்கு புதையுயிர் படிமங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. 1982ல் அங்கே தலைமைப் பொறுப்பில் இருந்த பிலிப் கர்ரியின் கீழ் வேலை பார்த்தார். எக்ஸ்-டெர்ரா ஃபௌண்டேஷன் அமைப்பின் இயக்குனர் பொறுப்பு அடுத்தபடி வந்தது. படிமங்களை இணைப்பது, உருவாக்குவது என்று எல்லாமே அவருக்கு சுவாரசியமாக அமைந்துவிட்டது.

கனடாவிலும் சீனாவிலும் ஆராய்ச்சிகளில் கிடைத்த புதையுயிர் படிமங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதும் இவர் ஆராய்ச்சியில் ஒரு பகுதி. “இப்படி ஒப்பிடும்போதுதான் இந்த இரண்டு பகுதியிலிருக்கும் டைனொசர்களிடைய இருக்கும் அலாதி ஒற்றுமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு கண்டத்துக்கும் இடையில் இருக்கும் மகா சமுத்திரங்களைத் தாண்டி எப்படி இவை ஒரே மாதிரியான வகைகளாக இருந்தன என்று யோசிக்கும்போதுதான், அமெரிக்க மற்றும் ஆசியக் கண்டங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்  ஒரு நிலப்பரப்பால் இணைந்திருந்தன என்கிற கூற்றில் உண்மையிருக்கும் என்று தோன்றியது,” என்று லிண்டா  அன்று கூறினார்.

இவர்கள் குழுவில் பல்வேறு வகையான ஆராய்ச்சியாளர்கள் இருந்தனர். அனைவரும் சேர்ந்து ஆராய்ந்து  படிமங்களை இணைத்து அந்தந்த படிமங்கள் எந்த டைனொசொர் வகையை சேர்ந்தவை என்று முடிவுக்கு வருவார்கள். சில சமயம் ஆராய்ச்சியில் சரிவர எதுவும் ஆதாரம் கிடைக்காமல் சோர்ந்து போன நாட்களும் நிறைய உண்டு என்றார் லிண்டா.

சீனாவில் கோபி பாலைவனத்தில் கடும் உஷ்ணம் இருக்கும். ஒன்றும் சரிவராமல் மனசும் உடலும் சேர்ந்து அசதியைக் கொடுத்த நாட்கள் அநேகம். மைல் கணக்காக நாள் முழுக்க ஒன்றுமே தென்படாமல் இருக்கும்போது சோர்வு வருவது நியாயம்தானே? “எவ்வளவோ நாட்கள் வேலையை விட்டு விடலாம் என்கிற அளவு சோர்ந்து போயிருக்கேன். ஆனால் இரவு தூங்கி காலை விடிந்ததும் மனசிலும் உடம்பிலும் ஆராய்ச்சியை நினைத்து ஒரு புத்துணர்வு வந்து உட்கார்ந்து கொள்ளும். பிறகென்ன…. தொடரும் கதைதான்” என்று சிரித்த வண்ணம் என்னிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கோபியில் ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை 3 மாதங்கள்தான் ஆராய்ச்சி நடைபெறும். கடும் தட்ப வெட்ப நிலையில் வேலை செய்வது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் இன்று ஏதாவது புதிதாக கிடைக்குமோ என்ற ஆவலே பெரும் உந்துதலாக இருக்குமாம். அதுவும் குழுவாக வேலை செய்யும்போது குழுவில் யாருக்காவது ஒருத்தருக்கு ஏதாவது புதுப் படிமம்  தென்பட்டாலே அந்த சந்தோஷம் அனைவரையும் தொற்றிக்கொள்ளுமாம். ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள்தான்; ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஆச்சரியம் இருந்து கொண்டே இருக்கும். இதுதான் இயற்கையின் மாயா ஜாலம் என்று சிரித்தார் லிண்டா.

“ஒவ்வொரு புதையுயிர் படிமத்தையும் கையில் தொடும்போது அல்லது எடுக்கும்போது உடம்பில் ஒரு சிலிரிப்பு ஓடும்; 75 அல்லது 80 மில்லியன் வருடங்களுக்கும் முன் உயிருடன் இருந்த ஒரு பிராணியைத் தொடுகிறோம்  என்ற நினைப்பே சிலிர்ப்பூட்டும்” என்று அவர் விவரித்தபோது எனக்கே அவருடன் கூடவே  இருந்த மாதிரி உணர்வு!

இன்றைக்கு டைனொசொர் படிம ஆராய்ச்சியில் மேலும் பல முன்னேற்றங்கள் இருக்கலாம், ஆனால் அன்று எனக்குக் கிடைத்த அனுபவம் அலாதியானதுதான்.

இன்றைய செய்தி: இதுவரை காணப்படாத அளவு பெரிதான டைனசொரின் உடல் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்:
http://www.thedailybeast.com/cheats/2014/05/18/biggest-dinosaur-ever-discovered.html

0 Replies to “தினம் ஒரு புதையல்”

  1. ஜுராஸிக் பார்க்கும் அதிர்ச்சி விலகவே நாட்கள் பிடித்தன. அருணா,. இவ்வளவு விரிவான பதிவு அற்புதம். அதுவும் லிண்டா அவர்களின் பேட்டி ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். இவ்வளவு முனைப்புள்ள பெண்ணை அறிமுகம் செய்ததற்கு நன்றி மா. கட்டுரை முழுவதும் ஒரு எழுத்து மிகை இல்லை. டைனோசார் பற்றிக் கூடுதல் தகவல்கள் அறிந்ததில் மிக மகிழ்ச்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.