முந்தைய பகுதி
தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்
கற்பனை செய்யப்பட்டு விழையப்படுவதால் மட்டுமே கண்டுபிடிக்கப்படும் அற்புதத்தை, அமெரிக்காவின் புனைவை மிகுகனவைக் கொண்டு விவரிக்கும் தொடர்வரலாற்றாசிரியர்கள் பலரிடமும் காண முடிகிறது. ஆனாலும் அவர்களுள் நிதானமானவர்கள் கூட அவர்களது கண்டுபிடிப்பை ஏன், “புது உலகில்” அவர்களது இருப்பையும்கூட நியாயப்படுத்த புனைந்தாக வேண்டியிருந்தது. நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதை தவிர்ப்பதற்காகவும்)…. ஆனால் அமேசான் எனப்படும் பெண்போர்வீரர்களும், மயக்கிசைப் பெண்களும், பொற்காலமும், நற்குணம் படைத்த உத்தமக் காட்டுமிராண்டிகளும் (மகாராணியை இம்முறை வியப்பால் மகிழ்விப்பதற்கு) கூட அங்கு இருக்கிறார்கள். இதன்பின் நற்பண்புகள் கொண்ட ஜெனோவாவின் வணிகர் மீண்டும் தன்னை வலியுறுத்திக் கொள்கிறார்: தான் தரையிறங்கிய இண்டீசின் (Indies) காடுகளை கப்பற்படைத் தொகுதியாக தன்னால் மாற்ற இயலுமென்று.
ஆக, கிழக்கில் தான் நாம் இன்னமும் இருக்கிறோம். அமெரிக்கா பெயரிடப்படவில்லை என்றாலும் அதன் அற்புதங்கள் பெயரிடப்பட்டுவிட்டன. எதைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டாரோ அதற்கு கொலம்பஸ் பெயரிட்டுவிட்டார் : தங்கம், உயிரினங்கள், ஆசியா. “புது உலகில்” சைனாவையும் ஜப்பானையும் கண்டுபிடித்ததே அவரது மிகப் பெரிய புனைதல். வெஸ்புச்சிக்கோ (Amerigo Vespucci) “புது உலகில்” புதிதாய் இருப்பது அதன் புதுமையே. பொற்காலமும் , “நல்ல காட்டுமிராண்டியும்” இங்குண்டு, “புது உலகில்” “புது பொற்காலம்” மற்றும் “புது, உத்தம காட்டுவாசி” என்று அவரால் பெயரிடப்பட்டு வரலாற்றை இழந்து, மீண்டும் சொர்க்கத்தில், “வீழ்ச்சிக்கு” முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு, பழையனவற்றால் களங்கப் படாமல்…நமக்கு அமெரிகோவின் பெயரே மிகப் பொருத்தமானது: கற்பனையான நமது புதுமையை அவர் தான் புனைந்தார்.
முற்றிலும் புதியது என்ற உணர்வும், முதலூழி சார்ந்ததொரு தோற்றமுமே அமெரிக்காவில் வார்த்தைகளுக்கும் பெயர்களுக்கும் அவற்றின் உண்மையான தொனியை அளிக்கின்றன. புது உலகைப் பெயரிட்டு விவரிக்க வேண்டிய – புது உலகில் பெயரிட விவரிக்க வேண்டிய- அவசரத்திற்கும் அதன் புதுமைக்கும் நெருக்கமானதொரு தொடர்பிருக்கிறது. இதனால் தான், அதன் புதுமையே புது உலகின் மிகத் தொன்மையான கூறாகவும் விளங்குகிறது. திடீரென்று, இங்கே, ஆமசான் (Amazon) காடுகளின் பரந்த வெளிகளில், ஆண்டிஸின் உச்சிகளில், பாடகோனியாவின் சமவெளிகளில், நாம் மீண்டும் ஹோல்டெர்லின்(Holderlin) கூறிய அந்த பேரச்சத்தின் சூன்யத்திலிருப்பதை உணர்கிறோம் : இயற்கையுடன் மிக நெருக்கமாக இருப்பதை நாம் உணர்கையில் நம்மைத் தாக்கும் இப்பேரச்சம். அப்படியொரு நெருக்கத்தில் இயற்கையால் உண்ணப்பட்டு , நமது பேச்சையும், அடையாளத்தையும் அதனிடம் இழந்து, அத்துடன் ஐக்கியமாகி விடுவதையே பெரிதும் அஞ்சுகிறோம். அதே சமயம், இயற்கையிடமிருந்து வெளியேற்றப்பட்டு, தாயைப் போன்ற அவளது அணைப்பிற்கு வெளியே காத்திருக்கும் நமது அனாதைத்தன்மையைக் கண்டும் நாம் பேரச்சம் கொள்கிறோம். உள்ளே நமது மௌனம். வெளியே நமது தனிமை.
நாவலில் இயற்கையின் இடம் என்ன என்பதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால் என் மனதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்கள் நகரங்களிலும் அறைகளிலும் தான் நிகழ்கின்றன. கொகோல், பால்சாக், டிக்கென்ஸ் மற்றும் தாஸ்டாயெவ்ஸ்கியின் புனைவுகளில் நகரத்தின் தோற்றத்தைப் பற்றி அற்புதமான சொல்லாடலை டொனால்ட் பிராஞ்சர் (Donald Franger) நமக்களித்திருக்கிறார். பத்தொன்பொதாம் நூற்றாண்டின் உள்வெளிகள் சொந்த உடைமைகள் பாதுகாப்பாக இருக்குமிடங்கள் என்று வால்டர் பெஞ்சமின்(Walter Benjamin) நமக்கு நினைவு படுத்தியிருக்கிறார். அது அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதைப் பாதுகாப்பதற்காக ஒரு புது நாயகன் தோன்றுவான்: காலின்ஸினுடைய மூன்ஸ்டோன், போவின் திருடப்பட்ட கடிதம், காணன் டோயிலின் பிரூஸ்-பார்டிங்டன் திட்டங்கள்[5] ஆகிய படைப்புகளில் வரும் துப்பறிவாளர்கள் இதற்கு உதாரணம். மேலும் ஜார்ஜ் ஸ்டைனர் குறிப்பிடுவது போல் ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் இலக்கியங்களால் மட்டுமே புனைவிலேயே நம்மை அதிகம் திக்குமுக்காட வைக்கும் நெரிசலான இடங்களை ( போவின் ஆணியறையப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் சுற்றிலும் மூடப்பட்ட கல்லறைகள், தாஸ்தோயெவ்ஸ்கியின் ரஸ்கோல்னிகோவ் சதி செய்யும் சிற்றறைகள் மற்றும் ரகொசின் காத்திருக்கும் நிழலாழ்ந்த படிக்கட்டுகள்) விட்டுக் கொடுக்காமலேயே அவற்றின் எதிர்துருவமான பரந்த வெளிகளையும் மீட்டெடுக்க முடிகிறது (டால்ஸ்டாய் மற்றும் துருகினெவ், கூப்பர் மற்றும் மெல்வில்[6]). ஆனால் வரலாற்றுக்குள்ளேயோ அதன் புறத்தேயோ வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகையில் உண்டாகும் பேரச்சம் என்பது பெயரிடுதல் என்ற செயலுடன் இவ்வளவு வெளிப்படையாக இணைக்கப்படுவதை வேறெதையும் விட லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் தான் அதிகம் காண முடிகிறது. கண்டுபிடிப்பதற்காவே மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் உடனடித் தன்மையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்: ஜான் ஸ்மித்தும், பிளிமூத் பாறையில் (Plymouth Rock) முதலில் வந்திறங்கிய கள்ளக் குடியேற்றார்களும் மாஸசூஸட்ஸின் (Massachusetts) கரையில் கடற்கன்னிகளை நிச்சயமாகப் பார்க்கவில்லையே !
“அனைத்துப் பூனைகளும் சாமபல் நிறத்தவை” என்ற எனது படைப்பில் நான் நாடகமாக்கியதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன் , அமெரிக்காவில் வரலாறு மிக வெளிப்படையாக மொழியுடன் இணைந்திருக்கிறது. மரணத்தையோ இயற்கையையோ ஒத்திருக்கும் மௌனத்திற்கு இட்டுச் செல்லும் அசெடெக் இன மொழியின் பெயர்தல் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் பண்பாட்டு ரீதியாக சந்தேகத்துக்குரிய, களங்கப்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் ஸ்பானிஷ் மொழியின் பெயர்தல்தான் புது உலக நாகரீகத்தின் அடித்தளம் : வரலாற்றை மீள்செயலாக நிகழ்த்தி, அதை தொன்மமாக மாற்றிக்கொண்டிருக்கையிலேயே நிரந்தரமாக கேள்விக்கு உட்படுத்தவும் செய்கிறது.
அசெடெக் பேரரசனான மாக்டெசூமா (Moctezuma) மனிதர்களின் குரல்களைக் கேட்க மறுக்கிறான் ; தெய்வங்களின் மொழிக்கு மட்டுமே அவன் செவிமடுப்பான். கார்டெஸ் என்ற வெற்றிவேந்தன் மனிதர்களின் குரல்களை கேட்க ஆயத்தமா க இருந்து கொண்டு, மைய அதிகாரத்திற்கு எதிரான குறையீடுகளை, தந்தையாக இருக்கும் சர்வாதிகாரிக்கு எதிராக திருப்பி விடுகிறான். அவன் மரீனா (La Malinche) என்ற இந்திய இளவரசியை துபாசியாக ஏற்றுக் கொள்கிறான். அவளை Mi Lengua – என் நாக்கு- என்றழைத்து அவள் மூலமாக ஓர் ஆண் குழந்தையையும் பெறுகிறான் : அக்குழந்தையே முதல் மெஹிகன், அதன் முதல் மெஸ்டீசோ என்றழைக்கப்படும் கலப்பினப் பிறவி, ஸ்பானிஷ் பேசும் குடிமகன். தூதுவனும் எழுத்தாளனுமாகிய ஹெர்மெஸ்ஸே இவை எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறான், இம்முறை பெர்னால் டியாஸ் டெல் காஸ்டீயொ (Bernal Diaz del Castillo) என்ற வேடத்தில். இதுவே அவன் பெயர் : அளிக்கப்பட்டதென்றாலும் உள்ளார்ந்ததாய், இன்றியமையாததாய் இருப்பினும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாய், பொய்யாக இருப்பினும் உணர்வுகளைத் தூண்டுவதாய் ; மாறக்கூடியதாக இருப்பினும் அவனது விதியாய். டியாஸ் டெல் காஸ்டீயோ சம்பவங்கள் நிகழ்ந்து ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு எழுதுகிறார். எல்லாவற்றிற்கும் அவரால் பெயரிட முடிகிறது, கடைசிக் குதிரையையும் அதன் உரிமையாளரையும் கூட. அவரால் இன்னமும் விழைய முடிவதால் எழுதவும் முடிகிறது, மார்சல் பிரூஸ்டைப் போல. பிரூஸ்டைப் போலவே இவரும் தொலைந்த காலத்தைத் தேடுகிறார். அவர் அழிக்க வேண்டியதை நினைத்து அழுகிறார். ஆக அவரே நமது முதல் நாவலாசிரியர். தரிசன உலகிற்கான வாய்ப்பை இனக்கொலையால் அழித்து, பிறகு தோற்கடிக்கப்பட்ட நாயகனின் தொன்மத்தால் வெல்லப்பட்டு, தான் அடிமைப்படுத்திய நகரத்திடமே தான் பட்டிருக்கும் கடனை இப்போது வார்த்தைகளின் வழியாக திரும்பச் செலுத்த நிர்பந்திக்கப்பட்ட காவியகர்த்தா.
அமெரிக்காவின் கண்டுபிடிப்பு மற்றும் அடிப்படுத்தலுக்கு நானூற்றிற்கும் மேலான ஆண்டுகள் கழிந்த பின், ரோமுலோ காயேகோஸ் அவரது பெரும்படைப்பான கானைமாவில் (Canaima) எழுதுகிறார்:
அமானடோமா, யவிடா, பிமிச்சின், எல் காசிக்கியாரே, எல் அடபாபோ, எல் கியானா[7] : இப்பெயர்களைக் கொண்டு மனிதர்கள் நிலக்காட்சியை விவரிக்கவில்லை, அவர்கள் நுழைந்த காடு மற்றும் ஆற்றின் முழு மர்மத்தையும் வெளிப்படுத்தவுமில்லை, அவர்களை பாதித்த நிகழ்வுகளின் தளங்களையே குறிப்பிட முனைந்தார்கள் என்றாலும் காடு, பயங்கரத்துடன் வசீகரமாக அவர்களது வார்த்தைத் திறத்தில் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்தது.
பெயர், புனை, கற்பனை செய், கண்டுபிடி, விழை போன்ற வார்த்தைகளை அவர்கள் கூறாமல் இருந்திருந்தாலும் அவர்களுக்கு பின்னே “மனிதன் இன்னமும் ஊடுருவிச் செல்லாத, மர்மத்தில் தோய்ந்த பெரும் நிலப்பரப்புகள்: வெனிசுவேலா என்ற முடிக்கப்படாத கண்டுபிடிப்பு” கிடந்தது. மேலும், அங்கே பெயரற்ற நபரொருவர் “ திடீரெனத் தன்னிடமிருந்து தானே விலகிய இன்மையில், காட்டின் தயவில்…” தன்னைக் காணக்கூடும்.
அதே போல, அலெஹோ கார்ப்பெண்டியரின் தொலைந்த காலடிகள் என்ற படைப்பின் தரிசன உலகிற்கான பயணம் – சுவாரசியமான, சில சமயங்களில் பேருவகையானதும் கூட, ஓரினோகோ நதியின் மீது நிகழும் இக்கண்டுபிடிப்பு – திடீரென வார்த்தையின் வரம்புகளைக் கடந்து சென்றுவிடுகிறது; “இரவின் பேரச்சங்கள் நிரம்பியபடி இருக்கும் அடர்ந்த காட்டில்” வார்த்தை பிளந்து, தனக்கே விடையளித்து, மன்றாடி, புலம்பி, ஊளையிடுகிறது :
ஆனால் அப்போது உதடுகளுக்கிடையே நாக்கின் அதிர்வு, உள்ளிழுக்கப்பட்ட குறட்டை, பெருமூச்சு மராக்காவின் (Maracca) கிலுகிலுப்பிற்கு எதிரிசைத்தபடி…..போகப்போக, நாய்களால் சூழப்பட்ட சடலத்திற்கான இவ்வொப்பாரி மிக கோரமாகியது…..தனது இரையை விடுவிக்க மறுக்கும் மரணத்தின் பிடிவாதத்திற்கு முன், “வார்த்தை” திடீரென மங்கியபடி மறைந்தது. ஷாமன் என்ற சூன்யவாதி-பூசாரியின் வாயில், ஒப்பாரி மூச்சிறைந்து வலிப்புகளுடன் இறந்தொழிந்தது. அதுவரையில் நான் இசையின் பிறப்பிற்கே சாட்சியாக இருந்திருக்கிறேன் என்ற கண்கூசவைக்கும் உண்மையை உணர்ந்தேன்.
டையோனிசிய (Dionysiac) களிப்பாகவும் பிரூஸ்டிய விடுதலையாகவுமிருந்த இக்கணத்திலேயே எக்காலத்திற்கும் நின்று கொண்டிருப்பதை கார்பெண்டியரின் கதைசொல்லி விரும்பியிருப்பான் : இசைக்கும் சொல்லிற்கும் இடையே உள்ள வாயிலில். ஆனால் வரலாற்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரிவுகள் இன்னமும் முழுவதுமாகக் கண்டுபிடிக்கப் படவில்லை : காலத்தின் தொடக்கத்திற்கே அவன் சுழன்றனுப்பப் படுகிறான். பின்னர் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னதாகவே இருந்த வார்த்தைகளில்லா உலகை அடைகிறான். இந்த சூழலில், வார்த்தைக்கும் மௌனத்திற்கும் இடையே உள்ள அழியக்கூடிய இந்த சமன்பாட்டில் தான் காப்ரியல் கார்சியா மார்கெஸ்ஸின் உலகம் அமைக்கப் பட்டிருக்கிறது.
நூற்றாண்டுகாலத் தனிமை முதன் முதலில் பதிக்கப்பட்டு அதன் உடனடியான மாபெரும் வெற்றியை அடைந்த போது , வாசகனின் சுய அடையாளத்தைக் கிளரும் அதன் பண்பே அது பிரபலமானதற்கு காரணம் என்று லத்தீன் அமெரிக்காவில் பலர் எண்ணினர் (ஸ்பானிய உலகில் இதை செர்வாண்டெஸ் மற்றும் அவரெழுதிய டான் கியோடேவிற்கு மட்டுமே ஒப்பிட முடியும்) . சுயத்தின் உவகையான மறுகண்டுபிடிப்பும், மக்கோண்டோவின் வம்சாவளிகளில் துவங்கி நமது பாட்டிகள், காதலர்கள், நமது தமயர் தமக்கையர் மற்றும் நமது செவிலித்தாய்மார்களுக்கும் கணத்தில் அனிச்சையாக இட்டுச் செல்லும் திறனும் அதிலிருக்கிறது. இன்று, இருபதாண்டுகளுக்குப் பிறகு கார்சியா மார்கெஸ் என்ற நிகழ்விற்கு Anagnorisis எனப்படும் சுயஅடையாளத்தைத் தாண்டி பல காரணங்களிருப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகிறது. இதுவரை எழுதப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான அவரது நாவல் முதல் வாசிப்பிலேயே அதன் அர்த்தங்கள் அனைத்தையும் முடித்துவிடவில்லை. இந்த முதல் வாசிப்பு (பொழுதுபோக்கு மற்றும் அடையாளம் காணுவதற்காக) மெய்யான வாசிப்பாக விளங்கும் இரண்டாவது வாசிப்பைக் கோருகிறது.
தொன்மமும் உடன்நிகழ்வுமாகும் இந்நாவலின் ரகசியமிதுவே : நூற்றாண்டுகாலத் தனிமை இருவாசிப்புகளை முன் ஊகமாகக் கொள்கிறது, ஏனெனில் அது இரு எழுதல்களையும் முன் ஊகமாகக் கொண்டுள்ளது. நாம் உண்மையெனக் கொள்ளும் எழுதலுடன் முதல் வாசிப்பு ஒன்றிப் பொருந்துகிறது : காப்ரியல் கார்சியா மார்கெஸ் என்ற பெயரைக் கொண்ட நாவலாசிரியர் காலவரிசைப்படி, விவிலிய – ராபெலேசிய(Biblical – Rabelaisian) என்றும் நிச்சயமாகக் கூறலாம் – உயர்வு நவிற்சியுடன் மகோண்டோவின் வம்சவழிகளை மீண்டும் கூறுகிறார். ஹோசே ஆர்காடியோவின் புதல்வனான ஆரேலியானோவின் புதல்வனான ஹோசே ஆர்காடியோவின் புதல்வனான ஆரேலியானோ. முதல் வாசிப்பு முடியும் கணத்தில் இரண்டாம் வாசிப்பு தொடங்குகிறது. மகோண்டோவின் தொடர்வரலாறு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது; மெல்கியாடெஸ் (Melquiades) என்ற நாடோடி விந்தையாளரின் தாள்களிற்கிடையில் அது புதைந்திருக்கிறது. நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் மகோண்டோ நிறுவப்படுகையில் நிகழும் மெல்கியாடெஸின் தோற்றம் நூறு ஆண்டுகள் கழிந்து அவனே கதைசொல்லி என்று வெளியிடப்படும் தருணத்துடன் ஒன்றிவிடுகிறது. அத்தருணத்தில் புத்தகம் மீண்டும் தொடங்குகிறது , ஆனால் இம்முறை மகோண்டோவின் காலவரிசைப்படுத்தப்பட்ட வரலாறு உடன்நிகழும் தொன்மமான வரலாற்று உண்மையாக வெளியிடப்படுகிறது.
(வளரும்)
[5] Collins’s Moonstone, of Poe’s “Purloined Letter,” of Conan Doyle’s “Bruce-Partington Plans
[6] Tolstoy and Turgenev, Cooper and Melville
[7] Amanadoma, Yavita, Pimichin, el Casiquiare, el Atabapo, el Guainia