கவிதைகள்

கனவுகள்

விழுகிறேன்
ஓடுகிறேன்
பயப்படுகிறேன்
மகிழ்கிறேன்
வாசிக்கிறேன்
அழுகிறேன்
கவனிக்கிறேன்
என் கனவுகள்
நிஜத்தின் நிழல்கள் போல
என்னைப்
பெரிதாகவும் சிறியதாகவும்
மாற்றுகின்றன;
என் முன்னும் பின்னும்
ஒளிந்துவிளையாடுகின்றன.
என்னைப் போலவே ஒரு
கனவை எப்படி உருவாக்கிக்கொள்வது?
என் கனவுகளைப் பற்றி
கவலைப்படுகிறீர்கள்,
என் நிழலுடன்
பேசமுடியுமா, உங்களால்?

hills

தரிசனம்

எத்தனை மாடிகள்
ஏறிச் செல்லவேண்டும்
மனிதர்களற்ற வானத்தைப் பார்க்க.
அந்த மலை முகடுகள்
வெகு நாட்களாக அங்கே படுத்திருக்கின்றன,
பள்ளிக்கு செல்வதற்கு முன்பும்,
செல்லும்போதும்,
சென்று முடித்தபோதும்.
பூமியின் எல்லையில் அவை
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்போது
நிர்வாண தரிசனம்,
முன்று ஜன்னல்களாக
பிரிந்துவிட்டது.
கீழிறங்கி வருகிறேன்,
ப்ளாஸ்டிக் தொட்டியில்
ஆல மரம்.