எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் தாகூரின் சிறுகதைகள்

கவியரசர் தாகூருக்குப் பலமுகங்கள் என நாம் எல்லாரும் அறிவோம். பல அற்புதமான கவிதைத் தொகுதிகளை மட்டும் அவர் நமக்கு அளிக்கவில்லை, நல்ல, ஆழமான கருத்துச் செறிந்த ‘தபால் நிலையம்’, ‘கோரா’, போன்ற நாவல்களையும், ‘சித்ராங்கதா’, போன்ற நாடகங்களையும் படைத்தவர் ஒரு ஆச்சரியமான சிறுகதை எழுத்தாளரும் கூட என்றால் மிகையாகாது.

அவருடைய சிறுகதைகளில் பாத்திரப் படைப்பும் அவற்றை முடிக்கும் விதமும் அவருக்கே உரிய தனித்தன்மையானது; பாத்திரங்கள் தமது குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு, ‘நறுக்’கென எதிர்பாராத விதமாக நடந்து கொள்வதில் நாம் அடையும் வியப்பு  மிகவும் ரசிக்கத் தக்கது. அல்லது கதைகளின் முடிவு கொஞ்சம் கூட நாம் கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருப்பது!  ஒரேவகையாக இவை அமைவதில்லை என்பதில் தான் தாகூரின் மேதைமை புலப்படுகிறது. வாசகனை எவ்வாறு  சுவாரஸ்யம் குன்றாமல் கதையைப் படித்து முடிக்கத் தூண்டுகிறார் என்பது சிந்தனைக்குரியது. சிறுகதைகளின் தொடக்கத்தில் ஒரு பாத்திரத்தின் தன்மையை, குணாதிசயங்களை, நிதானமாக, மிக அமைதியான, எதார்த்தமான முறையில் விஸ்தரித்துக் காட்டுகிறார். எதற்கு இத்தனை பீடிகை என்று தான் முதன் முதலாகப் படிப்பவர்களுக்குத் தோன்றும். கிட்டத் தட்ட பாதிக் கதை வரை இந்த பாத்திரப் படைப்பு சம்பவங்களுடன் சாதாரணமான ஒரு சூழலில் ஊடாடிக் கிடக்கும்! எதற்காக இவ்வளவு விவரிக்கிறார் என லேசான ஒரு ஐயம் கூட எழும். ஆனால் கதை வளர்ந்து  வலுப்பெறும் போது, அதன் கருத்து வேறு பாதையில் செல்வதை நாம் உணர ஆரம்பிக்கும் பொழுதில், ‘நச்’சென்று ஒரு முடிவைக் கொண்டு வந்து புகுத்தி, அவர் இத்தனை நேரம் விலாவாரியாக விவரித்ததெல்லாம் இந்த ஒரு உச்சநிலை முடிவுக்காகத்தான் என்பது தெரியும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எத்தனை சிறுகதைகளை நாம் படித்தாலும், ஓரிரு கதைகளின் பின்பு, எதிர்பாராத முடிவு தான் இருக்கும் என  எதிர்பார்ப்போம்; ஆனால் இந்த எதிர்பாராத முடிவு நமது அனுமானத்திற்குள் பிடிபடாது! ஆகவே எதிர்பாராததை, ஒவ்வொரு சிறுகதையிலும் வெவ்வெறு விதங்களில் எதிர்பார்க்கலாம்!

Rabindranath_Tagore_Indian_Bengali_Poems_Nobel_Prize

தாகூரின் கிட்டத்தட்ட இருபத்தைந்து சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பை (ஆங்கில மொழிபெயர்ப்பு) சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒவ்வொரு கதையும் ஒரு விதம். சரளமான, எதார்த்தமான நடையில் செல்லும் கதையின் முடிவு பிரமிக்க வைக்கும். இதில் இரு வித்தியாசமான சிறுகதைகளை மட்டும் இங்கே இப்போது பார்க்கலாம்.

‘மகனுக்காக ஒரு பலி’ (அ) மகன் பலி (?) – Son Sacrifice – என்ற கதையில் வரும் வைத்யநாத் என்ற பாத்திரப் படைப்பு சுவாரசியமானது

‘அந்த கிராமத்திலேயே மிகவும் புத்திசாலியான மனிதன் வைத்யநாத் தான்; ஏனெனில் அவனுடைய செய்கைகள் அனைத்தும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இருக்கும்.  அவன் திருமணம் செய்து கொண்ட போது, தனக்குப் பிறக்கப் போகும் மகனைப் பற்றிய ஒரு கற்பனைத் தோற்றத்தைத் தெளிவாகத் தன் சிந்தனையில் வைத்திருந்தான்; எதிரில் இருந்த மணப்பெண்ணை லட்சியமே செய்யவில்லை! ‘சுப திருஷ்டி’ என்று சொல்லப்படும் மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முதல் தருணம் மிக அபூர்வமானதும், தொலைநோக்கு உள்ளதுமாக அமைந்தது. தான் என்ன செய்கிறோம் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்; அதனால் தான் இறந்த பின் நடைபெற வேண்டிய தான தருமங்களையும் பலிகளையும் பற்றிக் கண்ணும் கருத்துமாயிருந்தான்; அன்பையும் காதலையும் பற்றி யோசிக்கவேயில்லை! ‘மனிதன் ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளத் தான் முதலில் ஒரு மனைவியைப் பெறுகிறான்’: இந்த எண்ணத்தில் தான் அவன் வினோதாவைத் திருமணம் செய்து கொண்டான்.

‘ஆனால் புத்திசாலி மனிதர்களும் தான் இந்த உலகத்தில் ஏமாற்றப் படக் கூடும்! குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய தகுதிகள் எல்லாம் இருந்தும், வினோதா தனது மிக முக்கியமான இந்தக் கடமையில் வெற்றி பெறவில்லை; ஆகவே வைத்யநாத் ஆண்குழந்தை இல்லாத மனிதர்கள் செல்ல வேண்டிய நரகத்தைப் பற்றி யோசித்து மிகவும் பீதி அடைந்தான். தான் இறந்ததும் தன்னுடைய ஆஸ்தி யாருக்குப் போகும் எனக் கவலைப் பட்டு, இப்போது அந்த இன்பத்தை அனுபவிக்க மறந்தான்.  நிகழ் காலத்தைவிட எதிர்காலம் தான் அவனுக்கு மிக உண்மையாக இருந்தது.’

கதை இவ்வாறு வளர்கிறது.

வினோதா இதையெல்லாம் பற்றி எண்ணவில்லை. அவள் நிகழ்கால வாழ்க்கை பாழாகிக் கொண்டிருந்தது. எதிர்காலம் பற்றி அவள் சிந்திக்கவே இல்லை. அன்புக்கும் காதலுக்கும் ஏங்கியது அவள் உள்ளம். அன்பைக் கொடுக்கவும் பெறவும் விழைந்தாள். ஆனால், அவள் மலடி என்று கணவனின் குடும்பம் முழுமையும் குற்றம் சாட்டினார்கள். அறையினுள் வைக்கப்பட்ட மலர்ச் செடிக்கு சூரிய வெளிச்சமும்  நீரும் கிடைக்காதது  போல அவளுடைய இளமை அன்பும் காதலும் கிட்டாமல் ஏங்கிப் பாழாகிக் கொண்டிருந்தது. இந்தத் தருணத்தில் தான் அவள் தனது வெற்றுப் பொழுதைக் கழிக்கவும் கணவனின் குடும்பத்தினரின் அடக்குமுறையிலிருந்து தற்காலிகமாகமாவது விடுபடவும் குஸும் என்ற தோழியின் வீட்டிற்குச் சீட்டு விளையாடச் செல்கிறாள். அங்கு குஸுமின்  மைத்துனன் நாகேந்திரனின் நட்பு கிடைக்கிறது. வெறும் நட்பாகத் தொடங்கியது, நாளடைவில் வேறு ஏதோ ஆக வளர்ந்து கடைசியில் ஒருநாள் நாகேந்திரன், தன் காதலை- காமத்தை, தான் அவள் மீது கொண்ட விருப்பத்தை வெளியிட்டு, வினோதா பதில் கூறும் முன்பே அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயல்கிறான். (நிச்சயமாக என்ன நடந்தது என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டிருக்கிறார் தாகூர்!)

இதை அந்தச் சமயம் அங்கு வந்த வினோதா வீட்டு வேலைக்காரி பார்த்து விடுகிறாள். பின் கேட்க வேண்டுமா? இதற்குக் கண், மூக்கு, காது எல்லாம் வைத்து புயலாகக் கிளப்பி விடுகிறாள். விளைவு? எதிர்பார்த்தது தான். வினோதா வீட்டை விட்டுத் துரத்தப் படுகிறாள். அவள் அப்போது ஒரு பெண் தன் வாழ்வில் அடையக் கூடிய பெரிய அதிர்ஷ்டத்தை அடைந்திருந்தாள். வெளியேறிய தருணத்தில் அவள் அதை உணர்ந்திருக்கவில்லை. ‘அவளுடைய கணவனின் மோட்சத்திற்கு உண்டான வழி அவளுடைய கருப்பையில் பத்திரமாக இருந்தது,’ என்ற வரிகள் கன்னத்தில் அறைகின்றன. இதுவரை கதை ஒரு சராசரி சிறுகதையின் தொனியில் தான் செல்லுகிறது!

பத்து வருடங்கள் உருண்டோடுகின்றன. வைத்யநாத் செல்வத்தை அள்ளிக் குவித்துக் கொண்டும், அதை யார் தனக்குப்பின் அனுபவிக்கப் போகிறார்கள் என்று தவித்துக் கொண்டும் இருந்தான். இன்னும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டும் அவை அவன் எதிர்பார்த்த மகனை அவனுக்குக் கொடுக்கவில்லை. குறி சொல்பவர்களும், குணப்படுத்தும் மாந்திரீகர் களும், பூசாரிகளும்  அவன் வீட்டில் நிரம்பியிருந்தனர். மூலிகைகள், தாயத்துகள், மந்திரித்த நீர், மருந்து மாயம் எல்லாம் வீடு நிறைய இருந்தது. அவன் காளி கோயிலில் பலி கொடுத்த ஆடுகளின் எலும்புக் குவியல் மிக மிக உயரம்! ஆனாலும் எலும்பாலும் சதையாலும் ஆன ஒரு சின்னஞ்சிறிய குழந்தை அவனுடைய அரண்மனை போன்ற ஆஸ்தியை அனுபவிக்க வரவில்லை. தனக்குப் பின் தனது சொத்தை ஆண்டு அனுபவிப்பவர் யார் என்ற நினைப்பிலேயே அவனுக்குச் சாப்பாடும் இறங்கவில்லை!

கிண்டலும் கேலியுமாக மனித வாழ்வின் அவல முகங்களை வெகு இயல்பாக நம்முன் வைக்கிறார் தாகூர்……

வைத்யநாத் திரும்பவும் நான்காவது முறையாகத் திருமணம் செய்து கொள்கிறான். இதற்குச் சமுதாய ரீதியிலான இரண்டு காரணங்களைக் கூறுகிறார்; முதலாவது, மனிதனின் நம்பிக்கைக்கு எல்லையே கிடையாது! இரண்டாவது, பெண்களை (மகள்களை) திருமணம் செய்து அனுப்பி விடத் துடிக்கும் பெற்றோர்களுக்கும் குறைவில்லை! அறுபது வயதுக் கிழவன் பன்னிரண்டு வயதுப் பெண்ணை மணந்து கொள்ளும் வழக்கம் இந்தியா முழுவதுமே பரவலாக இருந்த ஒரு சமுதாயக் கொடுமை தானே. அதுவும் அக்கிழவன் பணக்காரனாகவும் இருந்து விட்டால் மறு பேச்சிற்கு இடமுண்டோ? பெண் விடுதலை எல்லாம் பாரதியின் காலத்திற்குப் பின்னும் ராஜாராம் மோஹன்ராயின் காலத்திற்குப் பின்னும் தானே வழக்கத்தில் வந்தன!

போதாக்குறைக்கு, சோதிடர்களும்  வைத்யநாத்தின் குலம் விளங்கப் போகிறது எனக் கூறி வந்தனர். ஆனால் ஆறு வருடங்களுக்குப் பின்னும் ஒருவரின் வாக்கும் பலிக்கவில்லை!

கடைசியாக, மிகுந்த பொருட்செலவில், சாஸ்திரம் அறிந்தோர் (!!) கூறியபடி  குழந்தைப் பேற்றுக்கான ஒரு பூஜையை ஆரம்பிக்கிறான் வைத்யநாத்.

விதியின் விளையாட்டினால் அப்போது வங்கத்திலும், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களிலும் கொடும் பஞ்சம் தலை விரித்தாடி மக்களை எலும்பும் தோலுமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. தாகூர் கிண்டலும் எகத்தாளமுமாக இவ்வாறு எழுதுகிறார்: ‘வைத்யநாத் நிறைந்து வழியும் தனது செல்வங்களின் நடுவில் அமர்ந்து கொண்டு யார் இதை ஒருநாள் உண்ணப் போகிறார்கள் எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கொலைப் பட்டினியிலும் பஞ்சத்திலும் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய நாடு தனது காலித் தட்டைப் பார்த்தபடி, என்ன சாப்பிடக் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது.’

திரும்பவும் சமுதாயத்தில் உள்ள பொருளற்ற நம்பிக்கைகளை எள்ளி நகையாடுகிறார். ‘நூறு பிராமணர்கள் காலைக் கழுவிய நீரை அவனுடைய நான்காவது மனைவி (குழந்தை வரம் வேண்டி) நான்கு மாதங்கள் விடாமல் குடித்து வந்தாள். நூறு பிராமணர்கள் ஆடம்பரமான மதிய, இரவு உணவு உண்டு, முனிசிபல் குப்பைத் தொட்டிகளை நெய்யும் தயிரும் ஒட்டிக் கொண்டிருந்த வாழை இலைகளால் நிரப்பினார்கள்! உணவில் வாசனையால் கவரப்பட்ட பட்டினி கிடந்த ஜனங்கள், வாசலில் கூட்டமாக நிற்க, அவர்களைத் துரத்தியடிக்க மட்டுமே, அதிகப்படியான வேலைக்காரர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள்.’

இப்படியெல்லாம் சமுதாயக் கொடுமைகளைச் சாடியவர், கடைசிக் கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பாணியே அலாதி.

ஒரு காலைப் பொழுதில், வைத்யநாத்தின் பளிங்கு மாளிகையில், தொப்பை பெருத்த ஒரு சன்னியாசிக்கு இரண்டு ஆழாக்கு மோஹன்போகும் (வங்காளத்து இனிப்புப் பலகாரம்), ஒன்றரை ஆழாக்குப் பாலும் தரப் படுகின்றன. வைத்யநாத் குவித்த கைகளுடன், தோளில் (மரியாதையின் நிமித்தம்) போட்டுக் கொண்ட துண்டுடன், பவ்யமாக அவர் எதிரில் அமர்ந்து அவர் உண்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மிகவும் மெலிந்த ஒரு பெண் மிகவுமே இளைத்துக் காணப்பட்ட தனது  குழந்தையுடன்  வாயில் காப்பவர்களை எப்படியோ ஏமாற்றி விட்டு உள்ளே புகுந்து விடுகிறாள். பரிதாபமாக, “ஐயா, எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்,” என வேண்டுகிறாள்.

வைத்யநாத் அவர்களைத் துரத்தி விட கோபமாக வேலைக்காரனைக் கூப்பிடுகிறான். அந்தப் பெண் பயத்தில் அவசர அவசரமாக, ” ஐயா, இந்தக் குழந்தைக்கு மட்டுமாவது ஏதாவது கொடுங்கள். எனக்கு ஒன்றுமே வேண்டாம்,” என்கிறாள்

‘இந்தக் குழந்தைக்குக் கொடுத்தாலாவது இவனுக்கு ஒரு குழந்தை பிறக்காதா, இப்படியும் ஒரு நீசனா?’ என வாசகர்களாகிய நாம் எண்ணுகிறோம்.

வேலைக்காரன் வந்து அவர்களைத் துரத்தி விடுகிறான். பசியில் வாடி உணவு கொடுக்கப் படாத அந்தக் குழந்தை தான் வைத்யநாத்தின் ஒரே மகன்!! வைத்யநாத்தின் குழந்தைப் பேற்றுக்காக வயிறு பெருக்க உணவு உண்ட நூற்றுக் கணக்கான பிராமணர்களும், மூன்று தடியான சன்னியாசிகளும் அவனுடைய சேமிப்பையும் பொருட்களையும் விழுங்கித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்!

எதிர்பாராத இந்த முடிவின் ‘நச்’சென்ற அவலம் நம்மைச் சிறிது நேரம் பேச்சிழக்கச் செய்கிறது!

Selected Short Stories (Rabindranath Tagore)

‘அனுமதிக்கப் படாத பிரவேசம்’ – Forbidden entry – என்ற சிறுகதையும்  இதே பாணியில், ஆனால், மனித உள்ளத்தின் இயல்புகளைச் சித்தரிப்பதாக அமைகிறது.

இரண்டு சிறுவர்கள், கிருஷ்ணன் கோவில் காம்பவுண்டுக்குள் இருக்கும் மாதவிக் கொடியிலிருந்து மலர்களைப் பறிக்க ஆசைப் படுகிறார்கள். அது ஏன் அவ்வளவு கஷ்டமான காரியம் எனப் புரிய, ஜய்காளி தேவி என்னும் விதவையின் பாத்திரப் படைப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும்! ‘அவள் ஒரு உயரமான, உறுதியான, நீண்ட மூக்குக் கொண்ட, கடின மனம் படைத்த பெண்மணி. தன் காலஞ்சென்ற கணவனால் கிருஷ்ணன் கோவிலுக்காக அளிக்கப்பட்டு, வசூலாகாமலிருந்த பணத்தை எல்லாம் பைசா விடாமல் வசூலித்துக் கணக்கு வழக்குகளைச் சரி செய்திருக்கிறாள். அவளுடைய குணாதிசயங்கள் ஒரு ஆடவனுடையதைப் போல இருந்ததால் அவளுக்குப் பெண் நண்பர்களே கிடையாது! எல்லாரையும் வெகு சுலபமாக அவளால் அவமதித்து விட முடியும்; ஆகவே ஆண்களும் அவளிடமிருந்து  ஒதுங்கியே இருந்தனர். அந்த கிராமத்தின் நடவடிக்கைகளை கழுகுக் கண் கொண்டு பார்த்து வந்தாள். எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்தினாள். அவள் எங்கெங்கு சென்றாலும் அவளுடைய அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது- இதை அவளும் மற்ற அனைவரும் அறிந்திருந்தனர்.’

இவ்வாறு ஜய்காளி தேவியை விவரிப்பவர், குத்தலும் நகைச்சுவையுமாகக் கூறுகிறார்: ‘நோயுற்றவர்களைப் பார்த்துக் கொள்வதில் அவள் வெகு திறமையானவள்; ஆனால் அவளிடம் வரும் நோயாளிகள் சாவைக் கண்டது போல அவளிடம் அஞ்சினார்கள்!! அவளை நேசிக்கவும், ஏன் வெறுக்கவும் கூட அவர்கள் அஞ்சினார்கள். அவளுக்கு எல்லாரையும் தெரிந்தும் கூட, அவளைப் போலத் தனிமையாய் இருந்தவர் ஒருவரும் இல்லை!’

அவளுக்குக் குழந்தைகள் இல்லாததால்  அநாதையாகி விட்ட இரு மருமகன்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தாள். கண்டித்து வளர்க்கும் தகப்பன் இல்லாத குறையும், அன்பைச் செலுத்திக் கெடுக்கும் அத்தையின் பாசமும் அவர்களுக்கு இதனால் இருக்கவில்லை! (ரசிக்கத் தக்க நையாண்டி!) பதினெட்டு வயது மருமகனுக்குத் திருமணம் செய்து வைக்க அவளுக்கு விருப்பமில்லை; ஏனெனில், இளம் தம்பதிகளுக்கிடையேயான அன்பான உறவு அவளுக்கு அபத்தமாகப் பட்டது. அந்த மருமகன் புலின், ஒரு வேலை தேடிக் கொண்டால், மணம் செய்து கொள்வதைப் பற்றி யோசிக்கலாம் என்கிறாள். (தற்காலத்திற்கேற்ற எண்ணம் ஆனாலும், இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இவ்வாறு அவர்கள் எண்ணவில்லை என்பது வியப்பளிக்கிறது. வளர்ந்து பருவம் வந்து விட்டால், ஆணோ பெண்ணோ, திருமணம் என்ற பந்தத்தில் புக வேண்டும் என்பது கட்டாயம் போல இருக்கிறது!!! வேலை என்பது ஒரு பொழுதுபோக்கோ எனத் தோன்றுகிறது).

கோவிலில் தெய்வத்துக்குரிய சிசுரூஷைகளை அவள் துளியும் குறை வைக்காது செய்தாள். இருந்த இரண்டு பிராமணப் புரோகிதர்களும் தெய்வத்தை விட அவளிடம் தான் மிகவும் பயந்தனர்!

இங்கு தாகூர் மிக சூட்சுமமாக அவ்விதவையின் செய்கைகளை எடுத்துரைத்து அவளுடைய குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்ளச் செய்கிறார். ‘அவள் கோவிலைப் ‘பளிச்’சென்று துளி அழுக்கில்லாமல் வைத்திருந்தாள். ஒரு புறம் ஒரு மாதவிக் கொடியை வளர்த்திருந்தாள். கோவிலின் புனிதத் தன்மைக்கோ, தூய்மைக்கோ அல்லது ஒழுங்குக்கோ ஒரு சிறு பழுது ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள மாட்டாள். முன்பு போல, அக்கம்பக்கத்துச் சிறுவர்கள் கண்ணாமூச்சி விளையாடவோ, ஆட்டுக்குட்டிகள் மேய்வதற்கோ முடியாது. தப்பித் தவறி நுழைந்து விட்டால் அவை கதறக் கதற அடித்து விரட்டப்படும்.

‘அந்தக் கோவில் தான் அவளுடைய உலகமாக இருந்தது. உள்ளிருந்த சிலைக்கு அவளே தாய், மனைவி, அடிமை எல்லாமாக இருந்தாள். அதை ஜாக்கிரதையாகவும், கனிவுடனும், தாழ்மையுடனும் பார்த்துக் கொண்டாள் .’

‘மாதவிக் கொடியிலிருந்து மலர்களைப் பறிப்பது ஏன் அவ்வளவு சுலபமான வேலை அல்ல என்று இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்,’ என இத்தனை பீடிகைக்குப் பின் தாகூர் சொல்கிறார்! இத்தனைக்கும் அந்த இருவரில் ஒரு சிறுவன் அவளுடைய இரண்டாவது மருமகன் நளின் தான்!

நளின் மாதவிக் கொடி படர்ந்துள்ள கம்பிவலைச் சட்டத்தின் மீதேறிப் பூப்பறிக்க முயலும்போது கீழே விழுந்து விடுகிறான். ஜய்காளி அம்மாள் ஓடோடி வருகிறாள். (அவள் வந்தது அடிபட்டுக் கிடக்கும் சிறுவனை எடுத்து சமாதானப் படுத்த அல்ல எனத் தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிகிறது!- எதிர்பார்த்தது!!) சிறுவனை நன்றாக அடித்துத் துவைக்கிறாள். அறையினுள் தள்ளி கதவைப் பூட்டுகிறாள். இன்னும் அவன் மதிய உணவு உண்ணவில்லை. யாருக்கும் அவனுக்கு உணவு கொடுக்கும் தைரியமும் இல்லை.

வேலை ஆட்களைக் கூப்பிட்டு உடைந்த கம்பிவலையைச் சரி பண்ண வைக்கிறாள். பசித்த சிறுவன் உரக்க அழ ஆரம்பிக்கிறான். வேலைக்காரி வந்து ‘உணவு கொடுக்கட்டுமா?’ என்று கேட்கும் போது ‘கூடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாள். அவள் கட்டளையை மீற யாராலும் முடியாது.

பசித்து அழுத சிறுவனின் விசும்பல்கள் சிறிது சிறிதாகத் தணிந்து விடுகின்றன. ஆனால் மற்றொரு ஜீவனின் துயரம் மிகுந்த சப்தங்கள்- தூரத்தில் மனிதர்களின் கூக்குரலுடன் கலந்து கேட்கிறது. கோவில் பிரகாரத்தில் ஏதோ காலடி ஓசை கேட்கிறது. ஜய்காளி அம்மாள் தலையைத் திருப்பிப் பார்க்கும் போது ஏதோ ஒன்று மாதவிக் கொடியினடியில் ஓடுகிறது. “நளின்,” எனக் கூவுகிறாள் ஜய்காளி அம்மாள். பதில் வரவில்லை. மிகுந்த கோபத்துடன், நளின் தான் திரும்ப எப்படியாவது தப்பி வந்து தன்னை ஆத்திரமூட்டுகிறான் என நினைத்துக் கொண்டு, உதடுகளை அழுந்தக் கடித்துக் கொண்டு, “நளின்,” என்றபடி, கொடிகளை விலக்கிப் பார்க்கிறாள். திரும்பவும் பதில் இல்லை. இலைகளை விலக்கியபோது, அவற்றின் மறைவில் ஒரு மிக அழுக்கான பன்றி பயந்து நடுங்கிக் கொண்டு ஒளிந்து கொண்டிருந்தது.

(இப்போது நாம் சுத்தத்திற்கும், ஆசாரத்துக்கும் பெயர்போன அவள் என்ன செய்யப் போகிறாள் எனக் குழம்புகிறோம்!)

அந்த மாதவிக் கொடி, கிருஷ்ணனின் பிருந்தாவனத்துச் சோலைகளை நினைவு படுத்தும் பிரதிநிதியாக இருக்கும் கொடி, கோபியரின் வாசமிகுந்த மூச்சுக் காற்றைத் தன் மலர்களின் வாசத்தால் ஈடு செய்யும் கொடி இப்போது இந்த அருவருப்பான செயலால் – தன் புனிதத் தன்மையை இழந்து நின்றது! (நாம் என்ன ஆகும் எனத் திகைத்து நிற்கிறோம்). ஒரு பிராமண வேலையாள் (வேலைக்குக் கூட வேறு ஜாதியினர் இல்லை தெரிகிறதா?!) தடி ஒன்றை எடுத்துக் கொண்டு பன்றியைத் துரத்த ஓடி வந்தான். அவனைத் தடுத்த ஜய்காளி, ஓடிச் சென்று கோவிலின் தோட்டக் கதவைத் தாளிடுகிறாள்.

சிறிது நேரத்தில் ஒரு குடிகாரக் கும்பல் கோவிலின் கதவருகே வந்து தாங்கள் பலியிட வேண்டிய மிருகத்தை (பன்றியை) தரும்படி கூக்குரலிட்டபடி கேட்கிறது. “ஓடி விடுங்கள், அழுக்குகளே,” எனக் கிறீச்சிட்ட ஜய்காளி, “என் கோவிலை அசுத்தப் படுத்த முயலாதீர்கள்,” என்றாள்.

கூட்டம் கலைந்து செல்கிறது. தாங்கள் கண்களால் பார்த்ததை இன்னும் நம்ப முடியாமல் கோவிலின் உள் இருப்போர் தவித்தனர்! ஒரு அழுக்குப் பன்றிக்கு ஜய்காளி அம்மாள் தனது புனிதமான கிருஷ்ணன் கோவிலின் உள்ளே எவ்வாறு அடைக்கலம் கொடுத்தாள் என்பது நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது!!

ஹா! இது தான் அவள் செய்கையா??!!

நாம் எதிர்பார்த்ததொரு எதிர்பாராத முடிவைக் கொடுத்து அழகான ஒரு தத்துவத்தையும் கூறி முடிக்கிறார் தாகூர்

மனிதர்களின் கேவலமான, குறுகிய சமூக வழக்கங்களின் சிறுமைத் தன்மை வாய்ந்த கடவுள் வெகுவாக ஆத்திரம் கொண்டபோதும், பெருந்தன்மை வாய்ந்த கடவுள் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியால் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.