இருக்கும் இடத்தை விட்டு

நாமக்கல்லில் இருந்து சென்னையில் என் வீட்டுக்கு வரும் என் சின்ன மாமனார் ஒவ்வொரு முறையும் கேட்கும் கேள்வி – “என்ன மாப்பிள.. வங்காள விரிகுடாவில் இருந்து நேரடி சப்ளையா?” அவ்வளவு உப்பு. வீடு வாங்கிய 7 வருடங்களாகப் போராடி வருகிறோம். ஆனால், விடிவு வந்த பாடில்லை. போர் வெல்லில் உப்புத் தண்ணீர். கார்ப்பரேஷன் தண்ணீர் மிகக் குறைவாகத் தான் கிடைக்கிறது.

பல தீர்வுகள் சொல்லப் பட்டன. மாற்றுச் சவ்வூடு (reverse osmosis) முறையில் உப்பு நீரைச் சுத்திகரிக்கலாம். அதில், 30-40% நீர் வீணாகும். ஒரு லிட்டர் நீரைச் சுத்திகரிக்க 0.20 – 0.30 பைசா செலவாகும் – ஒரு ஃப்ளாட்டுக்கு மாதம் 3500- 4000 வரை செலவாகும். மேலும்,  அதன் சவ்வுகள் குழந்தைகளைப் போன்றவை. சரியான தொழில் நுட்பம் தெரிந்த திறன் தொழிலாளிகள் இல்லையெனில், விரைவில் கெட்டு விடும் – 8-10 லட்சம் அம்போ.  இன்னும் ஒரு தீர்வாக, கழிவு நீரை, வீட்டு உபயோகத்திற்கு சுத்திகரிக்கும் முறை சொன்னார்கள். அதன் முதலீடு, மாற்றுச் சவ்வூடு முறையை விட அதிகம். அதுவும் கைவிடப்பட்டது

Water_droplet_blue

பின்னர், மிக யதார்த்தமாக, சென்னைக் குடிநீர் வாரியத்துக்குப் பணம் கட்டி, அதிக விலையில் தண்ணீர் லாரிகளை வாங்கி, அதை போர் வெல் தண்ணீருடன் கலந்து உபயோகிக்கத் துவங்கினோம். கொஞ்சம் இப்போது குறைவாகக் கரித்தது. அப்போதுதான்; குடியிருப்பில் இருந்த ஒரு பெண்மணி – இந்துகாந்த் ராகடே என்பவரைப் பரிந்துரைத்தார். அவர், சென்னையில் முன்பு பிரபலமாக இயங்கி வந்த “அலாக்ரிட்டி” என்னும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவர். சென்னை நிலத்தடி நீர், மழை நீர் சேகரிப்பு, நீர் வளம் காத்தல் போன்ற விஷயங்களில் நிபுணர். ராகடே என்னும் பெயர் மராத்திப் பெயர் போல இருந்தது. எனக்குத் தெரிந்த மராத்திகள் எல்லோரும் ஓங்கு தாங்கானவர்கள்.

அவருக்குத் தொலைபேசி விட்டு, அவரை அழைத்து வரச் சென்றேன். திருமலைப்பிள்ளை சாலையில் இருந்த அவர் வீட்டுக்கு. அவர் வெளியே வந்து, பஸ் நிறுத்தத்தில் நிற்பதாகச் சொன்னார். ஆனால், காணவில்லை. காரை விட்டு இறங்கித் தேடினேன். பஸ் நிறுத்தத்தில் இல்லை. ஒரமாக, எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகிருதியில், தோள் பையுடன் ஒரு தாத்தாதான் நின்று கொண்டிருந்தார். மேலும் கீழும் நடந்தேன்.  அந்த ரோட்டில், கார் ரொம்ப நேரம் நிற்க முடியாது. மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன் – “ஹலோ” என்னும் சத்தம் அருகில் ஒலித்தது.

காரில் ஏற்றிக் கொண்டேன். ஸ்டார்ட் செய்தவுடன், சிடி ப்ளேயரில், ஷெனாய் ஒலித்தது. “பிஸ்மில்லா” என்றார். என்னமோ, ரெண்டு பேரும் ஒன்னாக் கிட்டிப் புள் விளையாடினது மாதிரி.  ஓரப் பார்வையில் தாத்தாவைப் பார்த்தேன். கிழிந்து தையல் போடப்பட்ட ஒரு தோள் பை. கூர்மையான மூக்கு. மூச்சைக் கொஞ்சம் விசுக் விசுக் என இழுத்துக் கொள்ளும் ஒரு மேனரிஸம். வழி நெடுகக் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு வந்தார்.

எங்கள் குடியிருப்பு வந்தவுடன் இறங்கினார். ”எங்கே தண்ணீர் டேங்க்?” என்றார். கொண்டு போய்க் காண்பித்தேன். தனது தோள்பையில் இருந்து ஒரு பழைய நசுங்கிய சொம்பை எடுத்தார். அதன் நுனியில் ஒரு கயிறு கட்டிருந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். யாராவது பார்க்கப் போகிறார்கள். “சந்தியா வந்தனம் பண்ற சொம்பு. விட்டு ரொம்ப வருஷமாச்சு” என்றார். அதை இவ்வளவு நாளா, பத்திரமா வச்சுருக்குதே பெரிசு என பெருமூச்சு விட்டேன்.

டேங்கில் இருந்து நீரை அள்ளிக் குடித்தார். போர் துளையைப் பார்வையிட்டார். மோட்டாரை ஆன் பண்ணச் செய்து, நீரை வாங்கிக் கொப்பளித்தார். நீரைப் பரிசோதித்த அறிக்கையைப் பார்த்தார். பரிசோதிக்கப் பட்ட நீர் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்று கேட்டுக் கொண்டார்.

குடியிருப்பைச் சுற்றி வந்தார். நான் ஒரு தொலைபேசி அழைப்பைச் சாக்காக வைத்துக் கொண்டு அலுவலகத்துக்குள் ஒதுங்கினேன். மேலும் கீழும் அலைந்தார். வியர்வையைத் துடைத்துக் கொண்டு, அலுவலகம் உள்ளே நுழைந்தார். தேநீர் வந்தது. “சுகர்?” என்றேன். “ஐ லவ் சுகர்” என்று அத்தேநீரை ஆர்வமாக அருந்தினார். நான் அவரை ஒரு மியூசியம் பீஸ் மாதிரி பார்த்தேன். இந்த மாடல்லாம் இப்போ மானுஃபேக்சரிங்கே பண்ணமாட்டாங்க என்று நினைத்துக் கொண்டேன்.

குடியிருப்பு அமைப்பின் நிர்வாகிகள் எல்லோரும் அமைதியாக இருந்தோம். “ ம்ஹ்ம்” என்று கனைத்துக் கொண்டு சொன்னார் “ இங்கே ஆழமில்லாத கிணறு வெட்டினா சரியாயுடும்.. அதுல சேகரிக்கப் பட்ட மழை நீரை விட்டா, நல்லாயிருக்கும்”. “ப்ஸ்க்.. சார் இங்கே 150 அடி போர் வெல் இருக்கு. அதுலயே தண்ணி இல்ல” எரிச்சலுடன் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.

“தட்ஸ் த ப்ராப்ளம் யூ ஸீ.. ஆமாம், இங்கே இந்தக் குடியிருப்பைக் கட்டும் முன்பு ஒரு மண் பரிசோதனை செஞ்சிருப்பாங்களே.. அந்த ரிப்போர்ட் இருக்கா?”

“அதெல்லாம் பில்டர் கிட்ட இருக்கும் ஸார்.. கெடைக்கிறது கஷ்டம்” என்றேன். எங்களுக்குத் தேவை ஒரு ப்ரிஸ்கிருப்ஷன்.. தாத்தா படுத்தறார்..

“பில்டர் ஆபிஸ்ல எனக்கு ஒர்த்தர் தெரியும்.. நான் வாங்கறேன். அதப் பாத்துட்டு அப்பறம் பேசறேன்..”

எப்படியோ கஷ்டப் பட்டு, அந்த ரிப்போர்ட்டை வாங்கிவிட்டார்.  “உடனே கிளம்பி வா” என்று, மெரினாவுக்கு, காதலியை அழைக்கும் ஆர்வத்துடன் அழைத்தார். போனேன். அந்த ரிப்போர்ட்டை விரித்துக் காண்பித்தார். “மெட்ராஸ்ல நீர் இருக்கும் இடம் கொஞ்சம் மேலே.. இங்கே பரம்பரையாக, கிணறுகளும், ஏரிகளும் தான் நீராதாரம். இப்போ, ஃப்ளாட்டுகள் வந்து, காங்ரீட் போட்டு எல்லாத்தையும் மூடியாச்சு. அதனால, அந்தக் குறைந்த ஆழத்துல கிடைக்கிற நீர நாம எடுக்கறதில்லை. அதை விட ஆழமா ஓட்டை போட்டு, பாறையத் தொளச்சு, அங்கிருக்கற உப்பு நீர எடுக்கறோம்.. இந்த ரிப்போர்ட்ல பார் – 8 அடியில் மணல் இருக்கிறது. அது கிட்டத் தட்ட 30 அடி வரை இருக்கு. அதுக்கப்புறம் – களிமண். அதனால, நான் சொல்றேன் – வெட்டு என்றார்.. அன்று அவரை வீட்டில் விட்டுவரப் போன போதுதான் தெரிந்து  கொண்டேன் – தாத்தா வேதியியலில் முனைவர் பட்டமும், புகழ் பெற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் முது முனைவர் பட்டமும் பெற்றவர். மராத்தியல்ல. சென்னையில் பிறந்து வளர்ந்த துளு ப்ராமணர்.

Sea_Salt_Rain_Underground_Water_Table

ஆறு அடியில், மணல் வந்தது. 8 அடியில் நீர்க் கசிவு. 10 அடியில் கொஞ்சம் நீர் சுரந்தது. மொட்டை மாடியில் இருந்து மழை சேகரிக்கப் பட்டு வரும் நீர்க் குழாயை இணைத்தோம். “ஸார், பத்தடியில் தண்ணீர் வந்துருச்சு” என்றேன் ஆர்வத்துடன். ”இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்து.  ஒரு 6 மாசத்துக்கு இந்தக் கெணறு தண்ணீர் கொடுக்கும்.. வெட்டி முடிச்சுரு. நான் டெல்லி போயிட்டு ஒரு 10 நாள் கழிஞ்சு வர்றேன்..” சொல்லிட்டுப் போயிட்டார்.

குடியிருப்பைச் சுற்றி, ஆழம் குறைவாக, ஆனால், மழை நீர் சேகரிப்புத் தொட்டியை விடக் கொஞ்சம் ஆழமாக, நான்கு குழிகளை வெட்டினோம். மழைநீர்க் குழாய்களை குழாய்களோடு இணைத்தோம். ”இதென்ன.. கெணறும் இல்லாம.. தொட்டியும் இல்லாம?  கோவேறு கழுதை மாதிரி.. காசு வேஸ்ட்” என்றார் ஒரு அன்பர். எதிர்க்கட்சி இல்லாமல், மனித சமூகம் ஏது.

திடீரென்று, தொலைக்காட்சியில் செய்தி.. அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளில் மழை பெய்யும் என்று. இரவில் மழை பெய்தது. காலை எழுந்ததும்,  ஓடிப் போய் பார்த்தேன். 5.5 ஆழத்தில் தண்ணீர்.. பரவசம்.. தில்லியில் இருந்து ராகடே வந்ததும், ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிக் கொடுக்கணும்..

3 Replies to “இருக்கும் இடத்தை விட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.