ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்

தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?

கோவிந்தன்: சேத்தன் பகத்தின் புத்தகம்தானே? புத்தகத்தை படித்தபின் அதன் திரைவடிவம் எப்போதுமே திருப்தியாய் இருப்பதில்லை. இதுவும் அப்படித்தானா?

தமயந்தி: இரண்டும் வேறு வேறு மீடியம்கள். புத்தகத்தில் இருப்பதெல்லாம் சினிமாவில் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த நிராசைக்குக் காரணமோ?

2-states-Movie_Posters_Books_TamilNadu_Punjab

ப்ரொபஸர் கேசவன்: 2 ஸ்டேட்ஸ் என்றால் என்ன? ஆந்திரா பிரிவினை பற்றிய படமோ?

தமயந்தி: அதெல்லாம் ஒன்றுமில்லை. பையனும் பெண்ணும் வேறு வேறு மாநிலத்தவர். கலாச்சாரம்,மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாமே வேறே. இது நமக்கு சரிப்படாது என்று இருதரப்புப் பெரியவர்களும் எதிர்க்க, இளைய தலைமுறை அவர்களை சம்மதிக்க வைக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்தை பழக்க வழக்கங்களை இன்னொரு மாநிலத்தவர் எப்படி நோக்குகிறார்கள் என்பதில் ஏற்படும் நகைச்சுவை, கலகலப்பு, புரிதலின்மை , இவற்றுக்கெல்லாம் அடியில் மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் என்று ஓரளவுக்குக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே மரோசரித்ரா போன்ற படங்களில் காட்டியதுதான்.

கோவிந்தன்: தமிழர்களை ரொம்ப கிண்டல் செய்திருக்கிறார்களோ? இணையத்தில் ஒரு விமரிசனம் பார்த்தேன். தமிழர்கள் எல்லாம் கறுப்பானவர்கள், அவர்கள் வீட்டு வரவேற்பறை சாமான்கள் பஞ்சாபி வீட்டில் திருடிக் கொண்டு வந்தது போல இருக்கும் என்றெல்லாம் வசனங்கள் வருகிறதாமே.

தமயந்தி: மொழி தெரியாதவர் ஸப்டைடில் இல்லாமல் பார்த்தால் வரக் கூடிய பிரச்சினை. படத்தில் வரும் வசனத்தின் அர்த்தம் இது:

தமிழ்நாட்டில் வீடுகளைப் பார்த்தால் ஒரு பஞ்சாபி வீட்டில் திருட்டு நடந்தபின் இருப்பதுபோல இருக்கும். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திருடர்களுக்கு பிடிக்கவில்லை என்பதினால் ஒரே ஒரு சோபாவை மட்டும் விட்டுப் போனது போல இருக்கும் என்பார். இது பஞ்சாபிகளையும் கிண்டல் செய்யும் வசனம். ஏனெனில் அவர்கள் வீட்டை, முக்கியமாக ட்ராயிங் ரூமை,  முழுக்க சாமானால் நிரப்பி வைப்பார்கள்

வடக்கத்தியர்களுக்கு மதறாஸிகள் கறுப்பானவர்கள் என்பதில் ஒரு இளக்காரம்தான். அதைத்தான் காட்டியிருக்கிறார்கள். இது இனத் துவேஷம் இல்லை. நிஜம். ஆனால் படத்தில் வரும் மதறாசிப் பெண் ஆலியாவுக்குப் பாலில் குங்குமப்பூ போட்டாற்போல் நிறம்.

ஏன் தமிழ்நாட்டில் கறுப்புத்தோல் படாத அவமானமா என்ன்ன? எங்கள் வீட்டில் ஒரே  நிறம் குறைந்தவளான நான் நிறைய கமெண்ட்ஸ் கேட்டிருக்கிறேன். கலியாணத்துக்குப் போய் வந்து சொல்வார்கள்:

பொண்ணு லட்சணமாக இருக்கா. ஆனா கொஞ்சம் நிறம் குறைச்சல்.

கறுப்பான பெண் வேண்டாம். குழந்தைகள் நிறம் மட்டாகப் பிறக்கும்.

இத்தனை ஏன், பத்திரிக்கைகளில் வரும் மேட்ரிமோனியல் விளம்பரங்களைப் படித்தால் போதுமே!

மொத்த இந்தியாவில் நிறவேற்றுபாடு நிறையவே உண்டு. அதை மறைக்கத்தான் “கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு” என்று சப்பைக்கட்டு கட்டி பாட்டே எழுத வேண்டியிருக்கிறது.

அகி: முதலில் இந்த படம் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த ஐயர்-பஞ்சாபி திருமணங்களெல்லாம் ‘out of fashion’ ஆகிவிட்டதில்லையா 🙂 ஒரு காலத்தில் வெளி நாடுகளுக்குப் படிப்பிற்காக செல்லும் ஒரு சிலர், அப்படியே அங்கேயே வெள்ளையரைத் திருமணம் செய்துகொண்டு ‘settle’ ஆக விட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது மிகவும் குறைந்த எண்ணிக்கையில், ரொம்பவும் புரட்சிகரமாக சிந்திப்பவர்கள் செய்துகொண்டிருந்தார்கள் (அதிலும் பெரும்பான்மை பெண்களோ??). அது ஒருமாதிரி சகஜமான அடுத்த கட்டத்தில், வட இந்தியாவிற்கு படிக்க செல்பவர்களோ, இல்லை பெரு நகரங்களில் வசிப்பவர்களின் இல்லங்களிலோ இதுபோன்ற தமிழ்-பஞ்சாபி திருமணங்கள் சகஜமாகின. இப்படி எனது விரிந்த குடும்பத்திலேயே, சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது (எனக்கு) ஆச்சரியமளிக்கும் புது மாற்றம், மிக அருகிலேயே தமிழ் நாட்டிற்குள்ளேயே நடக்கும் கலப்புத் திருமணங்கள். இது எனக்கே ஆச்சரியமளிக்கும் எண்ணிக்கையில் என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடையே பார்க்கிறேன். இது பல ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம்தான் என்றாலும், இப்போதுதான் ஓரளவு சகஜமாகிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தல், சாதியிலிருந்து விலக்கி வைத்தல் போன்றவைக் குறைந்திருக்கின்றன, இரு குடும்பங்களும் சுமூகமாக பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

எத்தனைக்கு எத்தனை இரு தரப்பிலும் கலாச்சார வேறுபாடுகள் அதிகமோ, அத்தனைக்கு அத்தனை அவர்களது சகிப்புத்தன்மையும் ஆரோக்கியமாக இருக்கிறதோ என்னவோ.. வட இந்தியர்கள் என்றால், நமது சடங்குகளையும் அவர்களது சடங்குகளையும் நுணுக்கி ஆராய்ந்து ஒரு மையப் புள்ளி கண்டுபிடித்து, “ஆ, இந்த இந்திய புண்ணிய பூமியில்தான் எத்தனை வித்தியாசங்களிலும் ஒற்றுமை’ என்று சிலிர்த்துக்கொள்பவர்கள், தம் பக்கத்துவீட்டுக்காரர்களை அத்தனைப் பாராட்டுவார்களா என்று சொல்ல முடியாது…

தமயந்தி: வித்தியாசங்களில் ஒற்றுமை பார்த்து சிலிர்ப்பவர்களும் தன் வாசற்படி தாண்டி வீட்டுக்குள் அந்த வித்தியாசத்தை வரவேற்கிறர்களா என்பதுதான் கேள்வி. வேறு மாநிலம் ஏன், ஒரே மாநிலத்தவரிடையே கூட காதல் திருமணம் என்றால் இன்னும் கொஞ்சம் தயக்கதானே இருக்கிறது? இதெல்லாம் கதைகளில்தான் நடக்கிறது.

பேராசிரியர் கேசவன்: இப்போதுதான் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் வந்த புத்தக விமரிசனம் படித்துக் கொண்டிருந்தேன்.

க்ளீஷே (தேய்வழக்கு) இல்லாமல் நம் விமரிசகர்களுக்கு எழுதத் தெரியுமா என்று யோசிக்க வேண்டி வருகிறது. குஜராத்தி கிராமத்தின் வாழ்க்கையை இயல்பாகச் சித்திரித்திருக்கிறது என்று இவர்களுக்கு எப்படித் தெரியும்? அங்கே எத்தனை தடவை போயிருக்கப் போகிறார்கள், அல்லது அது குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு? எதை வைத்துச் சொல்கிறார்கள்?

வறுமையும் பட்டினியும் நிலவும் இடத்தே, காதல் ‘மலர்வது’ நாவலை முழுமையாக்குகிறது என்று தமிழ் சினிமாவையே பார்த்து அறிவை வளர்க்கும் ஒரு கூட்டத்தால்தான் எழுத முடியும்.

என்ன ஒரு அறிவு வறுமை? அதிருந்தாலும் காதல் ‘மலர்கிறதே’ என்று கேட்டாலும் கேட்பார்கள் இவர்கள். ஆனால் இன்னொன்று, காதல் ஏன் ‘மலர்கிறது’?

எனக்குத் தெரிந்த, அல்லது நண்பர்களிடம் கவனித்த, கேட்ட காதலெல்லாம் அனேகமாக ஜுரம் போலத்தான் வருகிறதாகத் தெரிகிறது. வந்த சீக்கிரத்தில் போகிற காதலும் உண்டு. போனபிறகுதான் அட இது தொலைந்தது நமக்கு நல்லதாகிற்று என்று அறிவதும் சில நேரம் நடப்பதாகக் கேள்விப் பட்டேன். அதையும் விட, வெற்றி பெற்ற காதல் சில வருடங்களில் பெரிய தொல்லையானதாக நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். அந்தக் காதலெல்லாம் ‘மலர்’ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஜூரம் என்பது மேலும் பொருத்தமான விவரணை.

எதார்த்தமே பெரிய விஷயம் என்பதாக விமர்சனம் எழுதும் புத்திசாலிகளுக்கு இந்த விஷயத்திலெல்லாம் எதார்த்தமே சிறிதும் ஏற்பதில்லை என்பதுமே ஒரு க்ளீஷே ஆகி விட்டது.

தமயந்தி: ஆம் நான் சினிமாவில் பார்க்கும் காதலெல்லாம் இப்படி ஜுரம் அல்லது கொஞ்சம் மெண்டல் பிரச்சினை போலத்தான் தெரிகின்றன. நிறைய பேர் சேர்ந்து வாழவேண்டும் என்பதைவிட சேர்ந்து சாவதில் குறியாய் இருப்பது போலவும் தெரிகிறது. அதைவிட பல கேஸ்களில் இப்போதெல்லாம் காதல் என்பது கல்லூரி காலத்தில் கட்டாயமாய் அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று – கல்லூரியில் கட்டாயப்பாடம் –  என்பது போல நடக்கிறது. வாழ்க்கை பூராவும் சேர்ந்து இருப்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அந்த வயது ஹார்மோன்கள் சொல்படி நடப்பதை ஒரு கடமையாய் செய்வது போல இருக்கிறது.

மௌனராகம் என்றொரு படத்தில் இறந்துபோன காதலனை நினைத்துக் கொண்டு அதன் காரணமாய் தாலிகட்டியவனை புரிந்துகொள்ளவே முயற்சிக்காத பக்குவமில்லாத சின்னப்பெண்ணுக்கு அன்பு அனுசரணை நட்பு என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து அவனைப் பிடிக்க ஆரம்பிக்கும். இதை வேண்டுமானால் ‘மலர்வது’ எனச் சொல்லலாம்.

சிக்கி: காலம் காலமாய் காதல் வசந்தகாலத்தில் Daffodils போல மலர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

காரொளிவண்ணன்: காதலைப் பற்றி ஒருமுறை சோ சொன்னார். “இரண்டு பேருடைய ஈகோ ம்யூச்சுவலா சாடிஸ்ஃபை ஆச்சுன்னா அதுதான் காதல்.

நான் 1960 களிலிருந்து 2010 வரை சில காதலர்களையும், அவர்கள் காதலையும் சந்தித்து இருக்கிறேன். நம் குழுமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே உண்டு. என்னது ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனாலும் நான் பார்த்த காதலர்கள் ட்வுன் டு எர்த்தாகத்தான் இருந்தார்கள். மேலும் அரேஞ்ச்ட் கல்யாணங்களில் வரும் டீதிங் பிரச்னைகள் எல்லாம் காதல் கல்யாணங்களில் ‘கோர்ட்டிங்’ சமயத்திலேயே எழுந்து தீர்ந்து விடும், என்னதான் தன் பெஸ்ட் சைடை மட்டுமே இருவரும் காட்டிக் கொண்டாலும்.

என் நெருங்கிய நண்பனின் மகள் (கன்னட பிராமணர்) உடன் வேலை பார்த்த ஒரு வங்காளிப் பையனைக் காதலித்தாள். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. ஒரு வழியாக கல்யாணம் ஆகி அவர்கள் பையனுக்கு 5 வயது ஆகிறது. இயல்பாகவே நிறையத் திருமணங்களைப் பார்த்த பிறகு படித்த, பக்குவம் உள்ள இருவருக்கு இடையே நடக்கும் காதல் திருமணங்கள்தான் இருக்கிற திருமணங்களிலேயே சிறந்தவை என்கிற என் அனுபவம் சார்ந்த கருத்து.

தமயந்தி: என் நண்பர்களிலும் பலர் self-arranged marriage தான். நல்ல நண்பர்கள் – சரி யாரோ ஒரு  unknown devil க்குக் கழுத்தை நீட்டுவதைவிட தெரிந்தவனுடனே மல்லுக்கட்டுவது சுலபம் என்று ,முடிவு செய்து இப்போதும் திருமணமாகி நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காதலில் ஒருவரைஒருவர் நன்றாக புரிந்திருக்கிறார்கள், அடுத்தவர் விருப்பத்தை மதிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றாக சிரிக்கிறார்கள் – ஒருவரை ஒருவர் கேலி செய்யும்போது கூட.

ஆனால் சினிமாவில் காட்டுவது போல ஒன்றாக வாழ்வதைவிட ஒன்றாக சாவதை glorify  செய்யும் காதல் எனக்கு இன்னும் புரிபடவில்லை. இதைவிட பெரிய கொடுமை காதல் தோல்வி சோகம், தாடி, குடி, தேவதாஸ்.

அகி: இப்படிதான் நேற்று முதல் நாள் இரவு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ‘காப்’ இல் ஏறினேன். ஓட்டுனர் மட்டும்தான் இருந்தார். மற்றவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். அவர் செல்பேசியிலிருந்து ஒரு பாட்டு..’காதல் தீபாவளி..நெஞ்சில் தந்தாய் வலி..’..அடுத்தடுத்த வரிகள் கொடூரம். அவர் கோயம்புத்தூரிலிருந்து வந்தவர். முன்பொரு முறை தன் சுயசரிதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த ‘காப்’இல் செல்லும் ஒரே தமிழ் ஆள் நான் தான். பத்தாவது முடிக்காமலேயே ஊரைவிட்டு ஓடிவந்தாச்சு. வரும்போது மாமா தலையில் பெரிய கல்லை வேறு தூக்கிப்போட்டு வந்திருக்கிறார். நல்ல வேளை மாமா ஆஸ்பத்திரிலிருந்து பிழைத்துவிட்டார்! அதன் பிறகு பெங்களூரு வந்து பதினைந்து வருடங்களாக ஓட்டுனராக இருக்கிறார். போலி எஸ்.எஸ்.எல்.சி செர்டிஃபிகேட் செய்து உரிமம் பெற்றாராம். சென்ற மாதம், ஊருக்கு ஏதோ விசேஷம் என்று இத்தனை வருடங்கள் கழித்து சென்று வந்தார். வந்ததிலிருந்து ஒரே சோகப்பாட்டாக இருக்கிறது. இந்த பாட்டு ஓடிய நாளென்று வேறு யாருமே ‘காப்’இல் வரவில்லை. போகும் வழியெல்லாம் ஒரே விசும்பல். அவர் சாதாரணமாகவே அலட்சியமாகதான் வண்டியை ஓட்டுவார். நல்ல வேளை வீடு போய் சேர்ந்தேன்!

காரொளிவண்ணன்: பத்திரம். ஜாக்ரதை. தமிழ் சினிமா காதலுக்கு கண் உண்டோ என்னமோ மூளை கிடையாது 🙂

சிக்கி: காதலை திரையில், பக்கத்து வீட்டில், உறவினர் வீட்டில் அனுமதிக்கும் மனம் தனது வீட்டிற்கு வரும்போது அனுமதிக்க மறுக்கிறது.

என் வீட்டிலேயே நடந்தது. என் கடைசி தம்பியின் காதலை தகப்பனார் ஏற்க மறுத்துவிட்டார். ஜாதி மட்டும் காரணமல்ல, நிறைய. அந்த காரணங்களை முழுவதும் நான் ஏற்க மறுத்தாலும் தகப்பனார் பக்கம்தான் நின்றேன். அவனுடன் பின் பேச மறுத்துவிட்டேன்.

என் அடுத்த தம்பிதான் கோவிலில் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தான். சினிமா போலவே அப்பா வீட்டில் ஏற்க மறுத்துவிட்டார்.  சினிமா போலவே அப்பாவின் சர்ஜரி, அம்மாவின் கண்ணீர், அம்மாவின் ஆஞ்சியோப்ளாஸ்ட்டி , பேரன், பேத்திகள் அப்பாவை மாற்றியிருக்கின்றன.

காரொளிவண்ணன்: அவரவர்களுக்கு அவரவர்களுக்கான காரணங்கள் இருக்கின்றன. அத்தனை காரணங்களும் அர்த்தமற்றவை என்கிற போதிலும்.

பெரும்பாலான குடும்பங்களில் லவ்வுக்கு எதிர்ப்பு வருவதற்குக் காரணம் ஜாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முன் ‘நம்ம குழந்தை நம்மளை மீறி, நம்மகிட்ட சொல்லாம பண்ணிடுத்தே’ என்கிற உணர்வு. எனக்கும், என் பிள்ளைக்கும் இவ்வளவு இடைவெளியா? அவனு/ளுக்கென்று தனி வாழ்க்கையா? என்கிற எண்ணம். குழந்தைகள் (எவ்வளவு வயதானாலும் குழந்தைதானே) பெற்றோரிடம்தான் முதலில் தன் வாழ்வானுபவங்களைச் சொல்லிக் கொள்வார்கள், பெற்றோர்களே அவர்களது முதல் பிரதம நண்பர்கள்  என்று இருக்கும்போது இம்மாதிரிப் பிரச்னைகள் வருவதில்லை. இந்த நிலைமை திருமணத்திற்குப் பின் மாறி கணவனும், மனைவியும் independent unit நம்ம ரோல் சப்போர்டிவ் ரோல் என்று பெற்றோர்கள் உணர்ந்து நடந்தால் பெரும்பாலான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

கோவிந்தன்: டும் டும் டும் படத்தில் வசனம் வரும்.

அப்பா பார்த்து வைத்த மணப்பெண்ணாக ஜோதிகா. மாப்பிள்ளையாக மாதவன் சொல்வார்.

“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். நாலு வருசம் நாயாப் பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி துரத்தணும். அதற்கப்புறம் இன்னொரு நாலு வருசம் அனுபவிச்சுக் காதலிக்கணும். அப்புறமா கல்யாணம் பண்ணிண்டா… திருப்தி வரும். கிடைக்கிற சுகத்தை இப்படி நிதானமா அனுபவிக்கணும். உன் கூட அவசரம் அவசரமா தாலி கட்டிட்டு, காலம் பூரா கூட இருக்கிறது எல்லாம் சரியா வரும்னு தோணலை.”

பதிலாக ஜோதிகா, “நான் இந்த மாதிரி கெக்கே பிக்கேனு உளர்ற பையனா இல்லாம கட்டிக்கணும். எனவே, எனக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லே”ம்பார்.

தமயந்தி: அடடா தமிழ் சினிமாவில் புத்திசாலிப் பெண்களையெல்லாம் அனுமதிக்கிறார்களா?

சிக்கி:என்னைப் பொருத்தவரை  காதலோ, அரேஞ்ச்டோ இருவரின் மெச்சூரிட்டியை வைத்துதான் வெற்றியும் தோல்வியும்.

இப்போது திரும்பிப்பார்த்தால் காதல்கள் திருமணத்தில் முடியாதது நல்ல காலம் (அனைவருக்கும்) என்று அடித்து சொல்வேன் (சொந்த அனுபவம்தான்!).

என் மனைவியோ உதைத்துச் சொல்வார் (கிக்பாக்ஸிங்கில் போனவாரம்தான் இரண்டாவதோ மூன்றாவதோ பெல்ட் வாங்கினார், நான் வரலை விளையாட்டிற்கு!)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.