இரண்டு இயக்குநர்கள் இணைந்து தயாரித்த உயிரூட்டப்பட்ட சித்திரப் படம் இது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற படம். வில்லியம் ஜாய்ஸும், ப்ராண்டன் ஓல்டன்பெர்க்கும் இயக்கிய படத்தில், பலவகை சித்திரப்படப் பாணிகள் பயன்பட்டிருக்கின்றன. இருபரிமாண உயிர்ப்பூட்டல், குறும்சித்திரங்கள், கணனி உயிர்ப்பூட்டல் என்று பலவிதங்கள் இவை.
இந்தப் படத்திற்கான உந்துதல் சக்திகளாக, கட்ரீனா பெரும்புயல் என்ற நாசகாரப் புயல் ஒன்று அமெரிக்காவைத் தாக்கியபோது நேர்ந்த பேரழிவும், பஸ்டர் கீட்டன் என்கிற மௌனப்படக் காலத்து நகைச்சுவைப்படங்களின் பெருநாயகராக விளங்கிய ஒரு அமெரிக்க நடிகரின் கலையும் என்று இந்த இயக்குநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது முக்கியமாகப் புத்தகங்களையும், வாசிப்பையும் மிகவும் நேசிப்பவர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. திடீரென்று புயல், சூனாமி , நெருப்பு ஆகியன தாக்கி வீடுகளை, ஊர்களை அழிக்கையில் பல மனிதர்கள் ஏகப்பட்டதை இழக்கிறார்கள். உயிர்ச்சேதங்கள் கூட நேர்ந்து பல குடும்பங்களின் வாழ்க்கை பாழாகும். அந்தப் பாழ்படல்களோடு அதிகம் கவனிக்கப்படாத ஒரு பெருநஷ்டம், புத்தகங்களின் அழிப்பு என்பதை இப்படம் நுண்மையாகச் சுட்டுகிறது. வாசிப்பு என்ற அருங்கலை எப்படித் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கை மாற்றித் தரப்படுகிறது, அப்படித் தரப்படுவதே நாகரீகத்தின் அடிக்கல் என்பதையும் சுட்டுகிறது.