மண்புழு மன்னர்

திண்டுக்கல் வந்தபின்னர் பழனி வழியே கோவை செல்லும் சாலையில் உடுமலைப்பேட்டைக்கு வந்துவிடலாம். “சுண்டைக்காயாம் சுரை இலையாம்” என்பார்கள். உடுமலைக்கு அருகில் சுண்டைக்காய்ப் பாளையம் உள்ளது. அங்கு சுண்டைக்காய் கிடைக்காது, செல்வராஜ் நாயுடு கிடைப்பார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இயற்கை விவசாயிகள் பத்து பேரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அப்பட்டியலில் இவர் நிச்சயம் இடம் பெறக்கூடியவர்.
 
இயற்கை விவசாயத்தில் தென்னை, தென்னையில் படரும் வெற்றிலை, பீட்ரூட், மக்காச் சோளம், பல்வகை மரங்களின் சாகுபடி. தென்னை நார்க்கழிவைப் பக்குவமாகப் பயன்படுத்தி ஓகோவென்று மண்புழுக்களையும் மண்புழு உரத்தையும் மலிவு விலைக்கு வழங்குவதில் மன்னர் இவர். தமிழ்நாட்டில் செல்வம் இயற்கை அங்காடியும் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. இயற்கையில் விளைந்த பொருட்களைக் கொள்முதல் செய்து பின்னர் சுத்தம் செய்தும் பக்குவப்படுத்தியும் விற்கிறார். இவருடைய இயற்கை அங்காடியுடன் நல்லுறவு கொண்டு ஒட்டன்சத்திரம் இயற்கை அங்காடியும் சரக்குகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆகக்கூடி, செல்வராஜ் இயற்கை உணவு உற்பத்தியாளர் மட்டுமல்ல, விற்பனையாளரும்கூட. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் செல்வராஜின் விவசாயத்துக்குள் நுழைவோம்.

WP_20140504_18_44_35_Pro

 
நண்பர் செல்வராஜிடம் ஒரு புல்லட் உண்டு. எவ்வளவோ இருசக்கர வாகனங்கள் புதிது புதிதாய் அறிமுகமானாலும் ராயல் என்ஃபீல்டு வழங்கிய காணிக்கை அல்லவா? டி.வி.சுந்தரம் ஐயங்காரை அறிந்தவர்கள் என்ஃபீல்டு ஈஸ்வர அய்யரை மறந்து விடுவார்களா என்ன? செல்வராஜ் தன் வாகன விஷயத்திலும் முதல் தோற்றமான பாரம்பர்ய புல்லட்டையும் குழந்தை போல் பாதுகாப்பதால் புல்லட் செல்வராஜ் என்று இவரை ஊர்மக்கள் அழைப்பதுண்டு.
 
கடந்த பத்தாண்டுகளாக செல்வராஜ் மண்புழு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இவர் மூன்று உத்திகளைக் கையாண்டு வருகிறார். கான்கிரீட் தொட்டி முறை, கொட்டகை முறை, வெட்டவெளியில் முட்டுப்படுக்கை முறை. தான் போதித்துவரும் சிக்கனமான வெட்டவெளியில் முட்டுப்படுக்கை முறையே அதிக உற்பத்தியும் லாபமும் தருவதாகக் கூறும் செல்வராஜ், மற்ற முறைகளில் மானியம் வழங்கப்பட்டதால் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகக் கூறுகிறார். 
 
இவர் தயாரிக்கும் மண்புழு உரத்திற்கு இரண்டு வகையான புழுக்கள் பயனாகின்றன. முதல் ரகம், “யூட்ரிலஸ் யூஜினியா” என்ற ஆப்பிரிக்க இனம். இப்புழு இந்திய நாட்டுப்புழுவுக்கு ஈடானது. பெரிது. உடல் சுருங்கி விரியும்போது ஓர் அடி வரை நீளும். மேலும் கீழும் சென்று மக்குகளைத் தின்று குருணையைக் கொட்டும். இரண்டாவது ரகம், “ஐசீனியா ஃபொட்டிடா” என்ற கலிஃபோர்னிய ரகம். இது சிறிய அளவுடைய குட்டைப்புழு. இதுவும் இளம் சிவப்பு, கிராம்பின் நிறமே. இது நுண்ணிய குருணைகளை வழங்கும்.

WP_20140504_18_45_20_Pro

 
வணிகரீதியாகச் செயல்படுவோர் இந்திய நாட்டுரக மண்புழுக்களைப் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலான விவசாயிகளுக்கு எது நாட்டு ரகம் எது அந்நிய ரகம் என்று தெரியாது. நம் நாட்டுப்புழு, ‘பொம்பிடோ மாருஷி’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆழ்மட்டத்தில் வசித்து மண்ணையே உண்ணும் இயல்புள்ளது. சுறுசுறுப்பு இல்லாதது. மக்கை உண்ணும் திறன் குறைவு. வணிக ரீதியாகப் பயன் இல்லாவிட்டாலும் இதன் ஆற்றல் வித்தியாசமானது. இயற்கைக்கு ஏற்றது.
 
மண்புழு உள்ளது. மக்கிய சாணம் உள்ளது. மலைபோல் தென்னை நார்க்கழிவும் உள்ளது. இவற்றைக் கொண்டு இவர் எவ்வாறு மண்புழு உரம் உற்பத்தி செய்கிறார்? சுமார் 20 அடி நீளம், 3  அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட செவ்வக வடிவில் முட்டுப்படுக்கை அமைக்க வேண்டும். இடையிடையே மக்க வைக்கும் பூஞ்சை, சிப்பிக்காளான் வித்து, யூரியா, கிருமி நுண்ணுயிரிக் கலவை, அமிர்தக் கரைசல் வழங்கப்பட்டு படிப்படியாக தென்னை நார்க்கழிவை உயரப்படுத்த வேண்டும். பின்னர் அப்படுக்கை மேலாக மண்புழு உரத்தைப் புழுக்களுடன் கொட்டி தண்ணீர் தெளித்து வரவேண்டும். மக்கியபின் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டியதுதான்.
 
இவர் தயாரிக்கும் மண்புழு உரத்திற்கு அரசு ஆதரவு உள்ளது. இவரிடம் தோட்டக்கலைத் துறை, தென்னை வாரியம், வனத்துறை, வேளாண்துறை யாவரும் மண்புழு உரம் வாங்குகின்றனர். மண்புழு உரம் தவிர மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யம் ஆகியவற்றையும் தயார் செய்து தானும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் விற்கிறார்.
 
இயற்கை விவசாயத்தின் வாயிலாக இவர் பீட்ரூட், மக்காச்சோள உற்பத்தியில் சாதனை விவசாயி. ஓர் ஏக்கரில் இருபத்து இரண்டு டன் பீட்ரூட் விளைவிக்கிறார்.  இவர் இயற்கை விவசாயம் தொடர்பான இடுபொருட்கள் பற்றிய சிறுசிறு குருநூல் பிரசுரங்களும் வெளியிட்டுள்ளார். 
 
புல்லட் செல்வராஜின் தனிச்சிறப்பு, தென்னையில் படரும் வெற்றிலைக் கொடிகள். சாதாரணமாக வெற்றிலையை அகத்தியில் படர விடுவதுண்டு. அது காரமில்லாத மென்மையான வெள்ளை வெற்றிலை.  இவர் வளர்க்கும் வெற்றிலை காரம் நிரம்பிய மிளகு வெற்றிலை. பீடாவுக்கு மட்டுமே பயன்படும். கார வெற்றிலை இரண்டுக்கு மேல் மென்று விழுங்குவது கடினம். 
 
ஐந்தாண்டுகளுக்கு முன் இவரிடமிருந்து வாங்கிவந்த வெற்றிலை நாற்றை நானும் வீட்டில் உள்ள தென்னை மரத்தின் மீதும் முருங்கை மரத்தின்மீதும் படர விட்டுள்ளேன். தரையில் நன்கு வேரூன்றியபின் மரத்தில் ஏற இரண்டாண்டு தேவைப்பட்டது. என் வீட்டில் உள்ள பன்னீர் என்று சொல்லப்படும் மரமல்லி மீது மணிபிளாண்ட் பிரம்மாண்டமாகப் படர்ந்திருந்தது. இப்போது வெற்றிலையும் படர்ந்து கைக்கெட்டாத உயரம் படர்ந்து விட்டது. இப்படி மரங்களில் படரும் வெற்றிலை ஒரு தனி ரகம். ‘சேறுகமணி ஒன்று’ என்ற தேர்வு ரகம் இது.

WP_20140504_18_45_00_Pro

 
வெற்றிலையைத் தென்னைகளில் படரவிட்ட செல்வராஜ், தென்னையிலும் நல்ல மகசூல் பெறுகிறார். சராசரியாக இவர் மரம் ஒன்றுக்கு 120 காய்களை 5 வெட்டுக்களில் பெறுகிறார். 300 மரங்களில் வெற்றிலை படர்ந்துள்ளது. பீடா வெற்றிலை விற்பனையிலும் கணிசமான தொகை வருகிறது.
 
செல்வராஜ் இப்போது இயற்கை இடுபொருள் மற்றும் இயற்கை விளைபொருள்  அங்காடி மீது அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் பொள்ளாச்சி சாலையில் செல்வம் இயற்கை அங்காடி செயல்பட்டுவருகிறது. இவருடைய கூட்டாளியான சந்திரசேகர் கண்மணி இயற்கை அங்காடி என்ற பெயரில் ஒட்டன்சத்திரத்தில் ரயில் நிலையத்திற்கு எதிரில் கடை நடத்தி வருகிறார். 
 
தொடர்புக்கு:

ஆர். செல்வராஜ் – 98422 70519, 04522 67410
கண்மணி சந்திரசேகர் – 99522 96195

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.