ஆறு டாலருக்காக சொந்த இல்லத்தை இழந்தவர்
உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், ஜனநாயக நாடாகவும் கருதப்படும், தன்னை அப்படியே உலகுக்கு முன் தொடர்ந்து சித்திரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா உண்மையில் எப்படி இருக்கிறது?
நடைமுறையில் ஒரு அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை வைத்துத்தான் இப்படிக் கேள்விகளுக்குப் பதில் காண முடியும். சில நடப்புகளை வைத்து ஒரு நாட்டையே எடை போட முடியாது என்பது உண்மைதான். ஆனால் இங்கு கொடுக்கப்படுவது ஏதோ சில நடப்புகள் மட்டும் அல்ல. பல லட்சம் பேர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் சில நடப்புகளைப் போன்றன ஏற்கனவே கடந்த சில வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்பது அமெரிக்காவின் கடந்த சில வருட நிதி நிலைமையையும், அது சார்ந்த பல குளறுபடிகளையும் பற்றிய செய்திகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
இந்த நாட்டில் ஆறு டாலர் வரி பாக்கி வைத்ததற்காக இரண்டரை லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை இழந்த ஒரு பெண்ணின் கதையை இந்தச் செய்தி சொல்கிறது. அவருக்கு நேர்ந்தது அபூர்வம் இல்லை என்கிறது இந்தச் செய்தி. ஆனால் பல ஆயிரம் லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் என்னென்னவோ கடன்களையும் கொடுக்காமல் எத்தியிருக்கிறார்கள், இன்னுமே எத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விஷயம்.
http://thinkprogress.org/economy/2014/04/29/3432004/woman-loses-home-6-debt/
oOo
திருட்டுப் பயல்
ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி. 2008ஆம் வருடம். டென்மார்க்கின் தலைநகர் கோப்பன்ஹேகன் நகரத்தில் சூரியன் எட்டிப் பார்க்கும் விடியற்காலை. புறநகரில் இருக்கும் பண பட்டுவாடா மையத்தின் வெளியே வேன் வரும் சத்தம் கேட்டு தூக்கம் கலைகிறது. சுவரை உடைத்துக் கொண்டு வண்டி நுழைகிறது. முகமூடி அணிந்தவர்கள் பத்து மில்லியன் டாலர் பணத்தை சுருட்டிக் கொண்டு கருப்பு கார்களில் ஓடிவிட்டார்கள். துரத்தும் போலீசிற்கு இடையூறாக குப்பைகூளம் நிறைந்த லாரிகளை நடுநடுவே எரிக்க விட்டிருக்கிறார்கள். எப்படி செய்தார்கள், எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பதை டேனிஷ் மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஹாலிவுட் படத்தின் கதை போல் இருக்கிறது.
https://atavist.com/stories/the-copenhagen-job/
oOo
ஐரோப்பாவின் தேர்தல்
ஐரோப்பாவின் 28 நாடுகளில் இருந்து நானூறு மில்லியன் வாக்காளர்கள் தேர்தலில் பங்குப் பெறப் போகிறார்கள். இத்தாலியும் ஸ்பெயினும் கிரேக்கமும் திவாலாகும் அபாயத்திற்கு சென்று மீட்கப்பட்ட சமீபத்திய கடன் பிரச்சினைகளுக்கு அப்புறம் நடக்கும் தேர்தல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தாண்டுகள் முன்பு நடந்த தேர்தலில் வெறும் 43% சதவிகிதமே வாக்குப்பதிவு கிடைத்திருந்தது. இந்த நிலையில் நாஜி கட்சிகளின் தலை தூக்குமா? மண்ணின் மைந்தர்களுக்கும் குடிபுகுபவர்களுக்கும் நடுவே வெடிக்கும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்சினைகள் எவ்வாறு அரசியலில் பிரதிபலிக்கும்? உழைக்காமலே உள்ளூர்காரர்கள் பஞ்சப்படி வாங்கும் ஃப்ரெஞ்சு (ஊதாரி?) கலாச்சாரமும், இரண்டாம் உலக யுத்தத்தின் படிப்பினையைக் கைவிடாமல் இன்னுமே சிக்கனச் சிகரங்களாக வாழும் ஜெர்மனியரின் முதலியப் போக்கும் எப்படி முட்டிக் கொள்ளும்? அலசுகிறார்கள்: பகுதி 1 | பகுதி 2
oOo
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (செண்ட்ரல் ஆப்பிரிக்க ரிபப்ளிக்)
மத்திய ஆப்பிரிக்க குடியரசு கனிம வளம் மிக்க நாடு. அணுசக்திக்கான யுரேனியம், அக்ஷய திருதியைக்கான தங்கம், என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று இறைஞ்சும் இளைஞன் நீட்டும் கை மோதிரத்திற்கான வைரம் என பல சுரங்கங்கள் அமைந்த நாடு. 1960ல் சுதந்திரம் பெற்ற பிறகு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நிம்மதியாக மக்களாட்சி நடத்தியதாக சரித்திரம் கிடையாது. முதலில் கொடுங்கோலர்களும் மன்னர்களும் ஆண்டார்கள். நடுவில் ஒப்புக்கு சப்பாணியாக தேர்தல் நடந்து பிரதிநிதிகள் பதவி வகித்தனர். ஆனால், சென்ற ஆண்டின் மார்ச் மாதம் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி கவிழ்க்கப்பட்டு, கேமரூனுக்கு ஓடி தஞ்சம் புகுந்தார். செலேக்கா புரட்சிப் படை நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு ஐம்பது சதவிகித கிறித்துவர்களுக்கும், 15% இஸ்லாமியர்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் பாக்கி பாரம்பரிய மதத்தினருக்கும் நடுவே மூண்ட இனக்கலவரத்தையும் போராட்டத்தின் இன்றைய கொடூர நிலையையும் களத்தில் சென்று பார்த்த க்ரீம் வுட் எழுதுகிறார்.
http://www.newrepublic.com/article/117519/central-african-republic-conflict-africas-bloodiest-fight