பேட்டிகள் – சில குறிப்புகள்

1953 இலிருந்து இயங்கி வருகிற பாரிஸ் ரிவ்யு ஒரு இலக்கியப் பத்திரிகை. இதன் முக்கியமான அம்சம், சிறப்பு என, இதில் அவ்வப்போது வெளியாகும் பேட்டிகளைச் சொல்லலாம். வேறெதற்கும் இல்லாவிடிலும் இந்தப் பேட்டிகளுக்காகவே இந்தப் பத்திரிகை நினைவில் வைத்திருக்கப்படும்.

இப்பேட்டிகளில் பெருவாரி, நன்கு தெரிந்த இலக்கிய- கர்த்தாக்களோடு நடக்கிறவை. குறிப்பிடத் தக்க அளவில் சில, இன்னும் பெரிதாகத் தெரிய வராதவர்களுடனும் நடந்தவை. ஒரு வேளை பாரிஸ் ரிவ்யூவிற்குப் பேட்டி கொடுத்ததால் பலரின் இலக்கிய மதிப்பு உயர்ந்திருக்குமோ என்னவோ. அப்படி ஒரு ஸ்தானம் இப்பத்திரிகைக்குத் துவக்க கட்டங்களில் இருந்தது. இன்றும் மதிப்புள்ளதாகவே இருக்கிறதென்றாலும், இன்று போட்டிக்கு நிறைய ‘ரிவ்யு’ வகைப் பத்திரிகைகள் இருக்கின்றன. இருப்பினும் அவை இந்த அளவுக்குப் பேட்டிகளில் கவனம் செலுத்துவதில்லை.[1]

‘ரிவ்யு’ என்ற சொல்லைத் தம் பெயரில் கொண்ட பல பத்திரிகைகளும் பாரம்பரியமாக இலக்கிய விசாரத்தை மேற்கொள்வன என்றாலும், இக்கால ரிவ்யு பத்திரிகைகள் பொதுவாக அனைத்து சிந்தனைகளையும் எடுத்துச் சர்ச்சிக்கின்றன. அறிவியல் துறைகளின் கருத்துகள், பலவகை மாறுதல்கள் போன்றன உரைநடையில், பேசுமொழியில் விளக்கப்பட்டு சர்ச்சிக்கப்படுகின்றன.

இவை பரந்த சமூகத்தில் பெரும் விநியோகமோ, தாக்கமோ கொண்டவை இல்லை என்றாலும், பல சிந்தனைத் துறைகளிடையே உரையாடலும், கருத்துப் பரிமாற்றங்களும், பலவித விமர்சனங்களும், அவற்றுக்குச் சமாதானங்களும், மறுப்புகளும், மாற்றுகளும் எழுந்து மொத்த சமூகத்திற்கும் அவ்வப்போது அவசியமான அறிவுத் திரட்டு கிட்டுவதைச் சாத்தியமாக்குகின்றன.

இவற்றில் மிக வெற்றிகரமான பத்திரிகை எனக் கருதப்படும் ’லண்டன் ரிவ்யு ஆஃப் புக்ஸ்’ பத்திரிகை சுமார் 64000 பிரதிகள் விற்கிறது. அவை, எத்தனை பேர்களால் முழுதும் படிக்கப்படும் என்பது கேள்விக்குரியது. ஒப்பீட்டில், அதை விடப் பல பத்தாண்டுகள் கூடுதலாக வெளி வந்திருக்கிற ‘நியுயார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸ்’ எனப்படும் பத்திரிகை மாதமிருமுறை வெளியிடப்படுவது, சுமார் 135000 பிரதிகள் விற்கிறதாம். இதிலும் முழுப் பத்திரிகையையும் படிப்பது என்பது கடினம். அவ்வளவு விரிந்த தளத்தில் கட்டுரைகள் அமைகின்றன. சில உண்மையிலேயே மிக அரிதான அல்லது வெகு சிலருக்கே தெரிந்திருக்கக் கூடிய விஷயங்களைப் பற்றி அமைந்திருப்பன. அப்படி ஒரு விரிதளம், முழு இதழைப் படிப்பிற்குத் தடையாக இருக்கும் என்று சுலபமாக நாம் ஊகிக்கலாம்.

இவை இரண்டுமே நெருக்கமாக, சிறு எழுத்துகளில் அச்சிடப்படும் கட்டுரைகளைக் கொண்டவை. லண்டன் ரிவ்யு ஆஃப் புக்ஸ் பத்திரிகை 20,000 வார்த்தைகளுக்கு மேல்பட்ட அளவுள்ள கட்டுரைகளுக்கு சாதாரணமாகக் கொடுக்கும் சன்மானத்தைப் போல இரண்டு மடங்கு, மூன்று மடங்கெல்லாம் கொடுக்கும் பத்திரிகையாம். அது என்னவோ பொதுவாக நஷ்டத்தில்தான் ஓடுகிறது என்கிறார்கள். ஆனாலும் சொல் ஒன்றுக்கு 35 பென்ஸ் வெகுமதி கொடுக்கிறார்களாம். டப்லின் ரிவ்யு என்ற பத்திரிகை இலேசாகக் கிண்டலடிக்கிறது இதை. பிரமாதமாக அச்சிடப்பட்டு, க்ராஃபிக்ஸ், வண்ணமெல்லாம் கொண்டு திகழ்கிற லண்டன் ரிவ்யு எப்படித் தொடர்ந்து வெளியிடப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி, விடையைத் தானே சொல்கிற டப்லின் ரிவ்யு, இப்படி ஒரு பத்திரிகை நடத்துமுன் ஒரு அற்புத ஜீவியான தனவதியின் கருணையைப் பெற வேண்டும் என்கிறது. அதாவது, லண்டன் ரிவ்யு, சில பெரும் தனக்காரர்களின் கருணையால் ஓடுகிறது என்பது தகவல். அத்தனை பெரும் சந்தை உள்ள இங்கிலிஷ் இலக்கியத்துக்கும் புரவலர்கள் இன்றி பிழைப்பு நடப்பதில்லை.

பாரிஸ் ரிவ்யு, த்ரீ பென்னி ரிவ்யு, அக்னி, ப்ளௌஷேர்ஸ் போன்ற பத்திரிகைகள் மதிப்புரைகள், பேட்டிகள், கதைகளோடு கவிதைகளையும் பிரசுரிக்கின்றன. இங்கே பல இங்கிலிஷ் மொழி இலக்கியப் பத்திரிகைகள் பற்றிய விவரணையும் பட்டியலும் இருக்கிறது. [2] கவனித்தால் தெரியும் இவற்றில் 90%த்துக்கும் மேலானவை, தம் விற்பனையால் தம் இயக்கத்தைத் தாங்கக் கூடிய பத்திரிகைகள் இல்லை.

இப்படி ஊற்று பெரிதாக இல்லாத சிறு கிணற்றில் ஏன் ஆயிரக்கணக்கானோர் கூடிச் சேந்துகிறார்கள் ஒவ்வொரு மொழியிலும், நாட்டிலும் என்பது, நாம் எத்தனை தீர யோசித்தாலும் பதில் கிட்ட முடியாத ஒரு புதிர். ஒரு வேளை மனித புத்தியின் மர்மங்களில் இதுவும் ஒன்று போல. பயன் என்னதென்று தெரியாத விஷயங்கள் எத்தனையோ உடற்கூறில் இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பேசுவார்கள், பார்த்திருக்கிறோம். அதே போல மனித அறிதல் முறைகளிலும், நாட்டங்களின் உருவமைப்பிலும் விளக்கம் தெளிவில்லாத பலவும் இருக்கின்றன போலும். இஃதொன்று சுட்டுவது, எத்தனைக்கு வகை பிரித்து, அலசித் தொகுக்கும் ‘பகுப்பறிவு’ என்ற அணுகல் மனித எத்தனங்களில் ஒரு வகைத்தானதே அன்றி, மனிதத்தை ஆள்வதல்ல அது என்று காட்ட. அஃதொன்று மட்டும் பீடமேறி விட்டால் மனிதம் உன்னதமாகி விடும் என்ற கனவு, எட்டாக் கனவு மட்டுமல்ல, குருட்டுக்கனவும் கூட, ஏனெனில் பகுப்பறிவு என்பது ஒற்றைப் பரிமாணத்துக்கு மனிதக் கற்பனையைச் சுருக்கும் மந்த புத்தித் தனம் என்று கூடத் தோன்றுகிறது.

பல அவசிய குணங்களில் ஒன்றை மட்டுமெடுத்துக் கொண்டு அது ஒன்றே நான் என்று சொல்லும் மனிதரை எத்தனை பரிவுடன் பார்த்துத் தொலைக்க வேண்டிய நிலையில் நாம் இருப்போமோ, அதே போன்ற பரிவுணர்வோடுதான் பகுப்பறிவே மானுடத்துக்ககு உய்வு என்று சொல்லும் மனிதரையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

Literary_magazines_Paris_Review_All_US_English_Read_Library

oOo

சுமார் 15 நெடுங்கட்டுரைகளாவது கொண்ட பத்திரிகை லண்டன் ரிவ்யு. நியுயார்க் ரிவ்யு பத்திரிகையும் நிறைய கட்டுரைகள் கொண்ட பத்திரிகைதான். இவை கதைகளை வெளியிடுவதாகத் தெரியவில்லை.

பாரிஸ் ரிவ்யுவின் பேட்டிகள் , கேள்விகளை முன்கூட்டிக் கொடுத்து, பதில்கள் எழுதி வாங்கப்பட்ட வகையா, அல்லது முன் தயாரிப்பில்லாத உடனடி உரையாடலாகப் பதிக்கப்பட்டனவா என்ற தகவல்கள் தெரியவில்லை. பலவகைப் பேட்டிகளும் உள்ளன என்றே வைத்துக் கொள்ளலாம். இரண்டு வகையிலும், பிரசுரமானது ஓரளவு தயாரிப்புக்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.

வேறெங்கோ படித்தது, பாரிஸ் ரிவ்யு அப்படி ஒன்றும் உடனுக்குடன் வினையாற்றும் வகைப் பேட்டிகளைக் கொண்டு வர முயலாது. அதாவது தயாரிப்பு இல்லாது, அன்றே, அங்கேயே எழும் கருத்துப் பரிமாற்றங்கள் உள்ள பேட்டிகளைப் பாரிஸ் ரிவ்யு கொடுக்க வாய்ப்பில்லையாம். அத்தனை நிதானம்.

இளமை இல்லாத பத்திரிகை என்றும் அந்தச் சுட்டலிலிருந்த கிண்டல் எத்தனை நிஜம் என்று சொல்ல முடியவில்லை. தொடர்ந்து பத்திரிகை இதழ்களைப் படித்தால்தான் தெரியும். அதுவோ கட்டணச் சுவருக்குப் பின்னே பதுங்கி உள்ள பத்திரிகை. நூலகங்களில் படித்தால்தான் உண்டு. இந்தியாவில் இது கிட்டக் கூடிய நூலகங்கள் மாநகரங்களில் ஒன்றிரண்டுதான் இருக்கும்.
பல பேட்டிகளிலும் உரையாடல் பாணியைவிட, திருத்தமான பேச்சே தென்படுகிறது. தொடர்பில்லாது உடைந்த வாக்கியங்கள், பேச்சுக்குத் தடை செய்யும் சிறு தயக்கத்தைக் காட்டும் ஒலிகள், குரல் அணைந்த இடைவெளிகள், முக பாவங்களால் பேசுகையில் குரலொலி இல்லா மௌனம், அறுந்த யோசனையை மறுபடி ஒன்று சேர்க்கும் முயற்சிகளால் ஏற்படும் திடீர் நிறுத்தம், தாவல் போன்றன இல்லாத திருத்தம். எல்லாப் பேச்சுக் கணுக்களும் இணைக்கப்பட்ட, நேர்த்தியான சங்கிலித் தொடரான சிந்தனைகள், கேள்விகள், பதில்கள்.

மிகவும் முனைந்த மனோபாவமிருந்தாலே ஒழிய இப்படித் திருத்தமான விதத்தில் யாராலும் சில மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று தோன்றுகிறது. சகஜ பாவமே இல்லாத முழு பரிவர்த்தனை நடக்கிறது தெரியும் இந்த வகை பேட்டிகளில். இவை வாசக வசதி கருதி நிறையச் சீரமைக்கப்பட்ட உரையாடல்கள், அல்லது தயாரித்த கேள்விகளுக்குத் தயாரிக்கப்பட்ட பதில்கள் கொண்டவை என்றுதான் முடிவு கட்ட வேண்டி இருக்கிறது.

ஆனால், இயல்பான பேச்சில் சிலரோ, ஓரிருவரோ பரிமாறிக் கொள்ளும் கருத்துகள் கலந்த உரையாடல் இன்னொரு விதமான பேட்டி. இது எத்தனை உருப்படியாக அமையும், ஆழ்ந்த கவனிப்புகளைக் கொண்டிருக்கும் என்பது சந்தேகத்துக்குரியது. பல நேரம் இப்படி உடனடியாக உரையாடுவதில் பல உண்மைகளும், தகவல்களும் சாதாரணமாக வெளிக் கிட்டாதவை கிட்டி விடும் வாய்ப்பு உண்டு. சில எழுத்தாளர்களாவது எதிர் புதிர் நிலைகளில் மிக்க துடிப்பும், கூர்மையும் கொண்டு செயல்படக் கூடிய கருக்குள்ளவர்களாக இருப்பார்கள்.

இரண்டில் எது மேல்?

oOo

நாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம்? ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்? புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது?

அதுவும் நாம் ஒரு புனைவாளராக இல்லாத போது இந்த வகை உரையாடலால் என்ன பலன்? அல்லது பலன் கருதாத வெறும் கேளிக்கை நோக்கு கொண்ட விஷயமா ஒரு பேட்டி? புனைவில் இல்லாத கேளிக்கை புனைவாளரின் வாழ்வில் கிட்டி விடுமா? அப்படி ஒரு எதிர்பார்ப்புதான் நடப்பு சாத்தியம் உள்ளதா? அல்லது ஆட்டி வைக்கப்பட்ட பொம்மைகளின் கதை சொல்லலை விட, பொம்மலாட்டக்காரரின் கதையே மேலாக இருக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மை உந்துகிறதா?

கேளிக்கை அல்ல, ஆனால் வெறுமனே தெரிந்து கொள்ளும் ஆர்வம், தகவல் சேகரிப்பு, எப்போது இதெல்லாம் பயன்படும் என்று தெரியாமல் சேகரிக்கும் வேலை என்று சொன்னாலுமே பேட்டிகளில் என்ன அசாதாரணமான தகவல் கிட்டி விடும்?

அந்தக் கேள்வி இலக்கியமே எதற்கு என்று கேட்பதன் ஒரு நீட்சிதான். ஆமாம் இலக்கியம் என்பதுதான் எதற்கு? உப்புப் புளிக்குக் கூட ஆகாத ஒரு விஷயம், அதை எதற்குக் கட்டிக் கொண்டு மாங்கு மாங்கென்று உழைக்கிறார்கள் சிலர்? அதைப் படித்து ஜன்ம சாபல்யம் கிட்டியது போல இன்னும் சிலர் ஏன் கிளர்ந்து போகிறார்கள்?

அதைத் தவிர கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமாக, இந்தப் பேட்டிகளுக்குப் பிற்பாடு நேர்வது என்ன என்பதுதான். பாரிஸ் ரிவ்யுவில் வந்த பல உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களின் பேட்டிகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை 40 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே படித்த அனுபவம் தமிழகத்திலேயே பல இலக்கியகர்த்தாக்களுக்கு இருக்கும். குறிப்பாக இங்கிலிஷ் மொழியில் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், அதிலும் அமெரிக்க இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களுக்கும் இந்தப் புத்தகங்கள் நன்கு தெரிய வந்திருக்கும்.

எழுத்தாளர்கள் ஏன், எப்படி எழுதுகிறோம் என்று பேசுவதைப் படிப்பதனால் இலக்கியம் படைக்க நமக்குத் தெரிந்து விடுவதில்லைதான். ஆனால் அப்படித் தெரிந்து கொள்வன, ஏற்கனவே ஒருவரிடம் இருக்கக் கூடிய இலக்கியப் படைப்புக்கான உந்துதலை நல்வழிப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

ஆற்றுப்படுத்தல் என்பதைத் தமிழுலகும், இந்தியப் பண்பாடும் வெகுகாலமாகவே பாராட்டி வந்திருக்கின்றன. அச்செயலைப் படைப்புக்குச் சமமானதாகவே கருதும் பண்பாடு இங்கு உண்டு.

அந்த ஒரு விஷயமே இந்தியாவில் தனிமனிதர் மீது மிக்க கவனமும், கரிசனமும் இருந்திருக்கின்றன, இன்னுமே கூடப் பற்பல பொது நிறுவனங்கள், அமைப்புகளில் இத்தகைய கரிசனம் செயலில் காணப்பட முடியும் என்று நமக்குச் சொல்கிறது. ஆற்றுப்படுத்தல் என்பது பிரதிபலன் எதிர்பாராத, நல்வினையாக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கையில் நற்பலன்களைத் தர வல்லது. தந்து விடும் என்று சொல்லி விட முடியாது, தந்தே ஆகும் என்றும் முடிவு கட்டி விடக் கூடாது. தரலாம் என்று சொல்வதில் வேறு சாத்தியக் கூறுகள் உள்ளடங்குவதால் அதோடு நிறுத்திக் கொள்ளுதல் உசிதம்.

அது பிறரை மேம்படுத்த வழி காண்பிப்பது என்பதாலேயே பிறர் மீது கட்டுப்பாட்டைக் கொள்ள வகை செய்வதாக ஆகி விடக்கூடாது. வழி காட்டுதல் என்பது அப்படி ஒரு நிலைக்கு மாறும்போது தன் பயனை அது இழப்பதோடு, சமூக அமைப்புகளில் ஒரு இடறலாகவும், விஷமுள்ளாகவும், பிறகு காலப்போக்கில் கொடுங்கோலாட்சிக்கு வழி கோலுவதாகவும் ஆகி விடும்.

வழிகாட்டுவோர், தம் வழி தவிர வேறெதையும் கேட்பவர் கருதவும் கூடாது, காட்டப்படும் வழி குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, வெறும் நம்பிக்கையைக் கொண்டு பாதை மாறாமல் செல்ல வேண்டும் என்று எப்போது கட்டளையிடத் துவங்குகிறார்களோ அப்போதே அது கொடுங்கோலாட்சிக்கு இட்டுச் சென்று விட்டது என்று கொள்ளலாம். இறை மறுப்பு (blasphemy) என்பதைக் கொலை செய்யப்படக் கூடிய குற்றமாகக் கருதும் எந்த வழி காட்டலும் கொடுங்கோலாட்சியே அன்றி வேறெதுவும் இல்லை.

இதையே ஆட்சியைக் கைப்பற்றி, பணமூட்டைகளை ஒழித்து, உழைப்பாளரே ஆள வேண்டுமென்ற கருத்தியலை உலகுக்குப் பறை சாற்ற முனைந்த ஆனால் அதில் பெரும் தோல்வியையும் அடைந்த ஒரு மதத்துக்கும் நேர்ந்த சீரழிவென்று ஃப்ரெஞ்சு நாட்டுச் சிந்தனையாளர் மிஷெல் ஃபூகோ சுட்டியிருக்கிறார். அவர் இதைப் பன்னிப் பன்னிச் சொன்னதற்குக் காரணம், நல்ல நோக்கம் என்பதே தாம் ஆளப் போதுமானது என்று பல கருத்தியல்வாதிகளும் கருதுவதில் உள்ள ஆபத்தைச் சுட்டத்தான். பாட்டாளிகளின் எழுச்சியையே தவிர்க்க வேண்டும் என்று சொல்ல அல்ல. ஆனால் எழுச்சிக்குப் பிறகு என்ன செய்ய என்பது குறித்து உலகெங்கும் பற்பல நாடுகளிலும் மனிதர்களுக்குப் புரிபடவில்லை, அவர்கள் இன்னமும் இருளில்தான் துழாவிக் கொண்டிருக்கிறார்கள். நிஜ ஜனநாயகம் என்பது அமைப்புகளையும் ஜனநாயக முறையில் உருவாக்கினால்தான் கிட்டும், நிலைக்கும் என்பது ஒரு மிக எளிய பாடம். அது கிட்டும் என்று சொல்வது கூட ஒரு எதிர்பார்ப்பே அன்றி உலகில் எங்கும் சாதிக்கப்பட்டு விட்ட ஒன்றல்ல, நிறுவப்பட்டு விட்ட ஒன்றல்ல. இன்னுமே அது ஒரு இலக்காகவே உள்ளது. ஆனால் அதை எட்டிப் பிடிக்கப் பாதை என்னவென்று முனைப்போடு கற்கும் மனிதக் குழுக்கள் ஓரளவு நிலையான சமுதாயத்தைக் கட்டி நிறுத்துகின்றனர். மற்றையோர் தொடர்ந்து அழிவின் விளிம்பிலேயே தடுமாறிக் கொண்டிருப்பர்.

எத்தனைக்கு ஜனநாயகம் என்பது நடைமுறையில் செயல்படுத்தப்படுவது ஒரு அவசிய குணமாகப் பயிலப்படுகிறதோ அத்தனைக்கு சமூக அமைப்புகளுக்கு ஸ்திரத்தன்மையும், நம்பகத்தன்மையும் அடிப்படையில் கிட்டும். அவை போதுமானதா என்றால் இல்லை, ஆனால் அவசியமானவை.

நன்னெறியோ, நல்ல நோக்கமோ அனைவருக்கும் எந்நேரமும் கிட்டுவன அல்ல, அவற்றைக் கடைப்பிடிப்பதும் எல்லாருக்கும் எந்நேரமும் சாத்தியமாவதும் இல்லை. அப்படி முடிந்து, அதன் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனவலுவும், வசதியும் இருந்தால் அதுதான் உத்தம வழி.

உத்தமராக இருப்பது ஒன்றுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று நாம் கருதுவது ஒரு குறிக்கோளே அன்றி, அதைத் தவிர மற்றெல்லாம் இழிவு என்று எண்ணுவது அத்தனை நடைமுறைக் கருக்குள்ள அணுகலாகாது. அப்படி ஒரு எண்ணம் எவருக்கும், பிறர் மீது பிரயோகிக்கும் கடும் அணுகலுக்கு ஒரு கவசம் போலாகி விடுகிறபோது, அந்தக் கடும் அணுகலுக்கு உட்படுத்தப்படுவோருக்கு அதை எதிர்க்கவோ, அல்லது கடந்து போகவோ தக்க அறக்கருவிகள் அல்லது தர்க்கச் சாத்தியப்பாடுகள் கிட்டுவது குறைந்து போகிறது. .

பகுத்து அறிதல் என்பது பலவழிகளில் ஒன்று. முக்கியமான ஒன்று என்று கூடக் கொள்ளலாம், ஆனால் பகுப்பதிலும், அறிதலிலும் ஒற்றை வழிதான் எந்நேரமுமே உள்ளது என்று வாதிடுதல் வீண் பிடிவாதமேயன்றி, உருப்பட வழி இல்லை.
உருப்படுதல் என்பது என்னவென்று யோசிக்கத் தலைப்பட்டால் அதொரு அத்தியாயமாகும் என்பதால் அதை இங்கு எடுத்துப் பேசப் போவதில்லை.

இந்த கடும் அணுகல் நிலையை ஃபூகோ இழை பிரித்து எடுத்துக் கொடுத்து, அதன் மீது நம் கவனத்தைக் குவிக்கையில் நமக்கு நற்பலனைக் கொடுக்கும் ஒரு சிந்தனையோட்டத்தை உருவாக்கிப் போனார். நகைமுரணான விதத்தில், அவருடைய நல்ல சிந்தனையும், நன்னோக்கும் சேர்ந்து கூட, அசல் வாழ்வில் அவருக்கே பயனளித்திருக்கக் கூடிய நல்ல, தெளிவான பாதையைக் கொடுக்க முடியவில்லை என்பது வேறொரு விஷயம். சற்றே யோசித்தால், அவர் தன் வாழ்வையே ஒரு சோதனைக் கூடமாக்கிக் கொண்டிருந்தாரோ என்று தோன்றலாம். கட்டுப்பாடு என்பதை, அதிகாரம் என்பதை ஒழிக்க வேண்டும் என்று தான் கருதியதே தவறோ என்று அவர் சோதித்துப் பார்க்கத் துவங்கி இருந்தார் என்பது அவருடைய சில பிரத்தியேக வாழ்வுப் பழக்கவழக்கங்களைப் பார்த்தால் புரியலாம். ஆனால் அதல்ல இங்கு கருதப்பட வேண்டிய விஷயம்.

நல்ல சிந்தனை என்பது நல்ல செயல்முறைக்கு இட்டுச் சென்றே தீரும் என்று ஒரு விதியும் இல்லை. எத்தனை அருமையான அலசலும், புரிதலும் கூட என்னை ஃபெடரரோடு போட்டி போட்டு வெல்லக் கூடிய டென்னிஸ் விளையாட்டாளராக்கி விட முடியாது. ஏன் உள்ளூர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டுக் காரரோடு கூட போட்டி போடக் கூடியவனாக என்னை மாற்றி விட முடியாது.

நிகழ்த்துதல் என்பதன் அவசியக் குணங்கள் என்பன அனேக நேரம் தர்க்கம், வகை பிரித்து பாணி அறிந்து தொடர்புகளை அறியும் சிந்தனை ஆகியவற்றுக்கு அடங்கியவை அல்ல. அதே நேரம் அத்தகைய தர்க்கம், சிந்தனை ஆகியன இல்லாதே நிகழ்த்தும் திறமை என்பது உச்ச கட்ட செயல்திறனை எட்டுதல் என்பது மிகக் கடினமானதொன்றாகவே இருக்கும்.

நல்ல செயல்முறையும் நற்சிந்தனைக்கும் , நற்பலனுக்கும்தான் இட்டுச் செல்லும் என்றேதும் தவிர்க்கவொண்ணாத காரணச் சங்கிலி இல்லை. அது நேரும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

இந்த மூன்றின் இணைப்பு என்பது பிரமாதமான நன்மைக்கு இட்டுச் செல்லலாம். அல்லது பேரழிவுக்கும் இட்டுச் செல்லலாம். பின் என்ன மண்ணாங்கட்டிக்காக இவற்றையே பின்பற்ற வேண்டும் என்று காலம் காலமாக பற்பல சமூகங்களும் போதித்திருக்கின்றன? மாற்று வழிகளில் அழிவுக்கான, தேக்கத்துக்கான, உழற்சிக்கான சாத்தியங்கள் அதிகம் என்பதுதான் அப்படி ஒரு வறுத்தெடுக்கும் போதனைக்குக் காரணம்.

அதேபோலவே நல்ல அறிதல் என்பது நல்ல இலக்கியம் படைக்கவே செய்யும் என்றில்லை. ஆனால் நல்லிலக்கியம் படைக்க நல்ல அறிதல் அவசியம் என்பதில் ஐயமில்லை. அந்த முன் நிலை, அப்படி அறிந்திருத்தல் என்பது, நல்லிலக்கியம் படைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதிலும் ஐயம் கொள்ளத் தேவை இல்லை.

இப்படி ஒரு அறிதலுக்கு இந்த பேட்டிகள் உதவலாம், உதவ வேண்டும், உதவும் என்பது பாரிஸ் ரிவ்யுவைத் துவக்கி நடத்துவோரின் எண்ணம். அதே நேரம் இவற்றில் நெடுகவுமே, மனித எத்தனங்களில் எப்போதும் கூடவே நடந்து வரும் நிழலும் இல்லாமல் இல்லை. அது சுய விளம்பரம் என்பது, அல்லது தன்னைப் பிரகாசமாகக் காட்டிக் கொள்ள முற்படுதல் என்பது, அல்லது தன் முயற்சியைப் பொதுவில் எல்லார் கண்ணிலும் படும்படி அறிமுகப்படுத்த விரும்புதல் என்பது.

அந்த அளவு கூடச் சுய மைய நோக்கு என்பதே இல்லாத செயல்பாடு என்பதை நாம் எதிர்பார்ப்பது பலனளிக்காது. சுயமையம் என்பது அதனளவிலேயே மோசமான செயல் அல்ல. சில நேரம் அதுவும் தேவைப்படுகிறது. அதுவும் பொது அரங்கில் நிகழ்வுகளை நடத்திக் காட்ட விரும்புவோருக்கு ஓரளவு கூடத் தன்மைய நோக்கம் இல்லாதிருந்தால் அவர்களால் துணிவாக, தடைகளை மீறி, என்றும் எங்கும் உலவும் அவநம்பிக்கையை விலக்கிச் செயல்பட்டுக் காட்ட முடியாமல் போகலாம். அதை கெடுதி என்றே பார்ப்பதுதான் கோணல் பார்வை என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது. தன்னை அழித்துக் கொண்டு செயல்படுவது என்பது பயனுள்ள இடங்கள் உண்டு, அவையே நிரம்பியதல்ல புறவெளி.

பாரிஸ் ரிவ்யுவை இளக்காரமாகப் பார்க்கும் ஒரு கருத்தை; இக்கட்டுரையில் முன்பு சொல்லி இருந்தேன், அது இடது சாரிகளின் கருத்தியலில் விளைந்த ஒரு இளக்காரம். பாரிஸ் ரிவ்யு என்பதைத் துவக்கி நடத்திய சிலரில் ஓரிருவர், அமெரிக்க உளவு நிறுவனத்தின் சார்பாளர்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது என்ற போதும், மேலே சொன்ன நிழல் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் இந்த ஒரு தகவல் பாரிஸ் ரிவ்யுவின் நன்மைக்குப் பின்னும் இருட்டு செயல்பட்டிருக்கலாம் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன்.

oOo

பெயர் பாரிஸ் ரிவ்யு என்றாலும் இது வெளிவருவது என்னவோ அமெரிக்காவிலிருந்துதான். அமெரிக்க எழுத்தாளர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்தப் பத்திரிகை, இங்கிலிஷ் இலக்கியத்தில் நிறைய கவனம் செலுத்துவது தவிர்க்கவியலாதது. அப்படிக் கவனிக்கப்படும் எழுத்தாளர்களில் பலர் அமெரிக்கர்கள், ஏனெனில் 20 ஆம் நூற்றாண்டில் ஏகப்பட்ட திறமையான எழுத்தாளர்கள் அமெரிக்கர்கள். அர்சுலா லெ குவின் எனப்படும் முதிய அமெரிக்க எழுத்தாளரை , 2013 ஆம் வருடம் இந்தப் பத்திரிகை பேட்டி கண்டு அதை இலையுதிர்காலத்து இதழில் பிரசுரித்திருக்கிறது.

அர்சுலா லெ குவின் யாரென்பது சொல்வனம் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இவரது சில கதைகளை சொல்வனத்தில் முன்பு மொழி பெயர்த்துப் பிரசுரித்திருக்கிறோம். இந்த பேட்டியும் மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகிறது.

பின்குறிப்புகள்:
[1]
‘த பிலீவர்’ என்ற ஒரு பத்திரிகை, ரிவ்யு வகைப் பத்திரிகை இல்லை, ஆனால் அதன் கவனம் பேட்டிகளில் நிறைய உள்ளது. மாதப்பத்திரிகை, அனேகமாக எல்லா மாதங்களிலும் ஒரு பேட்டி உள்ள பத்திரிகை.
[2]
http://www.everywritersresource.com/topliterarymagazines.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.