பாஸனின் 'கர்ணபாரம்'

Arjuna_and_His_Charioteer_Krishna_Confront_Karna

கர்ணனுக்கும் போரில் அவனுடைய தேரோட்டி  சால்யனுக்குமான உரையாடல் நிலையிலேயே கர்ணபாரம் நாடகம் அமைகிறது. கர்ணனின் மனச்சுமைதான் நாடகத்தின் மையக் கரு. தன் மனதில் உள்ள துன்பமான எண்ணங்களை, மன பாரத்தை இறக்கி வைத்தல் என்பது நாடகத் தலைப்பிற்குப் பொருத்தமாகிறது.

17 ம் நாள் போரில் துரியோதனன்  படையும், யுதிட்டிரன் படையும் மோதும் சூழலில் நாடகக் காட்சி தொடங்குகிறது. துரியோதனன் தான் போருக்கு புறப்பட்ட செய்தியைக் கர்ணனுக்குத் தெரிவிக்குமாறு தன் தூதனை அனுப்புகிறான். கர்ணனைச் சந்திக்க வரும் தூதனுக்கு கர்ணனின் சோகமான  முகபாவம் வருத்தத்தைத் தருகிறது. போர் என்றாலே பொங்கி மகிழும் கர்ணன் சோர்ந்து இருப்பதை முதல் முறையாக அவன் பார்க்கிறான்.

கர்ணனிடம் இந்த மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்ததும், சரியான நேரத்தில் தான் கற்ற போர் வித்தைகள் பலனளிக்காமல் போகும் என குரு பரசுராமன் தந்த சாபமும்தான். தன் மனதில் சுமையாக இருந்தவற்றை சால்யனிடம் இறக்கி வைக்கிறான். அந்தணர்களுக்கு மட்டுமே வித்தைகள் கற்றுத் தருவேன் என பரசுராமன் சொன்னதும் அந்தணன் எனப் பொய் சொல்லி கர்ணன் கற்கிறான். ஒரு சமயத்தில் குரு கர்ணனின் மடியில் படுத்திருந்த போது புழு ஒன்று கர்ணன் தொடையைத் துளைக்கிறது குருவின் தூக்கம் கெட்டு விடக் கூடாது என வலியைப் பொறுத்துக் கொள்கிறான். தொடையிலிருந்து வெளி வரும் இரத்தக் கசிவு குருவை விழிக்கச் செய்கிறது. அவன் அந்தணனாக இருக்க முடியாது என குரு சொன்ன போது வித்தைகள் கற்பதற்காகப் பொய் சொன்னதாக கர்ணன் கூறுகிறான். தன்னை அவன் ஏமாற்றியதாகச் சொல்லி குரு தகுந்த நேரத்தில் வித்தைகள் பயனளிக்காமல் போகும் எனச் சாபம் தந்ததை சால்யனிடம் சொல்லி வருந்துகிறான்.

சால்யனுக்கு இது வேதனையைத்  தர ’இது மிகக் கொடுரமானது’ என அச்செயல் குறித்து கருத்து தெரிவிக்கிறான்.அந்த நேரத்திலும் அவனை அமைதிப் படுத்தும் முயற்சியில் “போரில் இறக்கும் போது ஒருவனுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. வெற்றி பெற்றாலோ புகழ் கிடைக்கிறது.உலகில் இரண்டுமே உன்னதமானவைதான்” என்று சொல்லி கர்ணன் தேற்றுகிறான். இந்த எண்ணம்  அவனுக்குள் ஓர் அமைதியைத் தருகிறது: முக வாட்டத்தை தணிக்கிறது.

அந்த நேரத்தில் அந்தணன் வேடத்தில் இந்திரன் வர கர்ணன் வணங்குகிறான். பாதங்களைத் தொட்டு  தன்னை வணங்கும் அவனை எப்படி வாழ்த்துவது என்று இந்திரன் குழம்புகிறான். ’நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்த முடியாது” என்ன சொல்வது என்று சிறிது குழம்பி விட்டு “உன் புகழ் சூரியனைப் போல, சந்திரனைப் போல, கடலைப் போல இறவாத் தன்மை பெற்றிருக்கட்டும்” என்கிறான். இந்த வாழ்த்து கர்ணனுக்குப் புதுமையாகத் தெரிகிறது.

“ஏன்  நீண்ட காலம் வாழ்க என வாழ்த்தவில்லை” என்று தனக்குள் கேட்டு விட்டு ’நல்ல பண்புகளே உடல் அழிந்த பின்னரும் புகழைத் தருகிறது எனத் தன்னையே சமாதானம் செய்து கொள்கிறான். அந்தணன் தனக்கு வேண்டிய பொருளைக் கேட்டுப் பெறலாம் எனச் சொல்கிறான். யானைகள். பசுக்கள், குதிரைகள்,பொன் என்று எதையும் தன்னால் தர முடியும் என்கிறான். அந்தணன்  இவை எதையும் கேட்கவில்லை. இறுதியில் அவன் விரும்பினால் தன்னோடு பிறந்த கவச –குண்டலங்களை     தரத் தயார் என்று கர்ணன் சொன்ன போது வந்த வேலை முடிந்து விட்டதென அந்தணன் மகிழ்ந்து அவற்றைத் தருமாறு கேட்கிறான்.

அந்தக் கணத்தில் தான் கர்ணனுக்கு  ஐயம் ஏற்படுகிறது.’இதுதான் உண்மையில் அந்தணன் விரும்பியதா ? அல்லது இதுவும் கண்ணனின் கணக்கற்ற லீலைகளில் ஒன்றா? என்று.எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி நினைப்பது சரியல்ல ’என்று தனக்குள் பேசிக் கொள்கிறான். இந்தக் காட்சியை கர்ணனின் கம்பீரமாக பாஸன் காட்டுகிறான். அப்போது சால்யன் கொடைப் பொருளைத் தர வேண்டாம் எனத் தடுக்கிறான்.

”பெற்ற அறிவு ஒரு காலத்தில் நம்மை விட்டுப் போகிறது
ஆழமான    வேர்களைக் கொண்ட மரங்கள் சாய்ந்து விடுகின்றன.
ஆறுகளில் தண்ணீர் வற்றிப் போய் விடுகிறது.
காலம் உலகில் எல்லாவற்றையும் அழித்து விடக் கூடியது.
ஆனால் அழிவற்றவையாக இருப்பது தர்மங்களும் நியாயங்களும்தான்’

என்று சால்யனுக்கு தன் வாழ்க்கைக்கான அடையாளத்தைச் சொல்லி விட்டு அந்தணனுக்கு கவச –குண்டலங்களை தருகிறான். அந்தணன் போன பிறகு  சால்யன் வந்தவன் இந்திரன் என விளக்கம் தருகிறான்.

கடவுளர் தலைவனே தன்னிடம் வந்து நின்றது தனக்குப் பெருமை தருகிற செயல் எனவும் , இதை விடச் சாதாரண மனிதனுக்கு என்ன வேண்டும் எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறான். சால்யனிடம் தேரைப் போர்க்களத்திற்குச் செலுத்துமாறு கட்டளையிடுகிறான்.மரணம் கண்டு அச்சமில்லை: தாயிடமிருந்தும், தம்பிகளிடமிருந்தும் பிரித்து வைத்த விதியும், குருவின் சாபமும் தான் அவனைத் தளரச் செய்கிறது. தன் முடிவை உணர்ந்த வீரனாக அவன் புறப்படுகிறான் என ’கர்ணபாரம்’ நிறைவடைகிறது. கர்ணனின் அடையாளம் குறித்த பாஸனின் பாடல் பலராலும் இன்றும் போற்றப் படுகிறது.

படைப்பாளி மூலக் கதைக்கு மாறுபட்ட வகையில் சில சம்பவங்களைக், காட்சிகளை மிக இயல்பாக தன் படைப்புகளில் வெளிப்படுத்துவது  படைப்பாளியின் சுதந்திரச் சிந்தனைக்கு அடையாளமாகும். மகாபாரத சால்யன் கர்ணனை எப்போதும் விமர்சிப்பது, கடுமையாகப் பேசுவது என்ற இயல்புகளைக்  கொண்டவன் ஆனால் பாஸனின் இந்த பாத்திரம் முக்கியமான மாற்றங்களோடு அமைந்துள்ளது.

தன் மன பாரத்தை கர்ணன் இறக்கி வைத்த நேரத்தில் இரக்கம் கொண்டும், அவனது நிலைக்கு வருந்தியும், குருவின் செயல் தவறு எனச் சொல்லியும் உடனிருக்கிறான். துக்கமான நேரத்தில் உடனிருப்பது மனவலுவிற்கு ஆதாரம். பாரதத்தில் போர் தொடங்குவதற்கு சில காலம் முன்பே கர்ணன் கவச-குண்டலங்களைப் பிரிந்த தன்மை காட்டப் படுகிறது. கர்ணபாரத்தில் போருக்கு கிளம்பும் நேரத்தில், ஒரு சஞ்சலமான பொழுதில் அந்தணன் வரவும்,கர்ணன் கொடையும் நிகழ்கிறது.

இடமும், காலமும் மாறி அமைந்த இக்காட்சி பாஸனின் பாத்திரப் படைப்பை உயர்த்திக் காட்டுவதோடு சூழ்நிலையின் கனத்தை உணர வழி செய்கிறது. மூலகதையில் தன்னிடமிருந்து இந்திரன் பெற்றுப் போகும் பொருட்களுக்கு  பதிலாக சக்தி தர வேண்டும் என்கிறான் கர்ணன். ஆனால் இங்கு கவச குண்டலங்களைப் பெற்றுப் போன இந்திரன் கர்ணனுக்காக வருந்தி ஒரு தேவதையை  ’சக்தி’ தருமாறு அனுப்ப கர்ணன் அதை மறுப்பதாகக் காட்சி அமைகிறது. இதை விட  ஒரு கதாபாத்திரச் சிறப்பை எப்படி வெளிப்படுத்த முடியும்?

கர்ணபாரம் என்ற தலைப்பிற்கு இன்னொரு விளக்கமும் தரப் படுகிறது. நீண்ட காலமாக கவச குண்டல சுமையைத் தாங்கியிருந்த  கர்ணன் சரியான நேரத்தில் அதிலிருந்து விடுபட்டதால் ’பாரம்’ என்ற தலைப்பு பொருத்தமாகிறது என்ற கருத்தும் உண்டு.

பதிமூன்று  நாடகங்களில் இது அளவில் சிறியதாகும். பெண் பாத்திரங்கள் எதுவுமின்றி நாடகம் இயங்குகிறது.சமஸ்கிருத மொழியைப்  பொறுத்தவரை எண்ணிக்கையில் மிகக் குறைவாக அமைந்த அவல நாடகங்களில்  இது குறிப்பிடத் தக்கது. குறைந்த அளவு பாத்திரங்களைக் கொண்டமைந்திருப்பதும் நாடகத்தின் சிறப்பாகும். காப்பியங்களை விட நாடக இலக்கிய வகை உணர்ச்சி வெளிப்பாட்டில் முதலிடம் பெறுகிறது என்பதால் படைப்பாளி தன் பாத்திரங்கள் மீது பார்வையாளனுக்கு அளவற்ற அன்பும்,மரியாதையும் பாத்திர உன்னதமும்  ஏற்படும் வகையில் காட்சிகளை வலிமையான  எண்ணங்களோடு  காட்டுவதும் மிக அவசியமாகிறது. இதிலும் பாஸனுக்கு வெற்றியே. படைப்பாளியின் வெற்றி என்பது சமகால , எதிர்காலத்தினரை தன்வயப் படுத்துவதுதான் . அதுவும் இங்கு சாத்தியமாகி இருக்கிறது.