பாகிஸ்தான் போகும் ரயில் – புத்தக அறிமுகம்

1947… ஆகஸ்ட்…
‘மானோ மாஜ்ரா’ தெரியுமா உங்களுக்கு? அது டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் வழியில், சட்லெஜ் நதியோரம் இருக்கும் ஒரு ஊர். அங்கு சீக்கியர்களும், இஸ்லாம் மதத்தவரும் சந்தோஷமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்தார்கள்.

மானோ மாஜ்ராவில் இருந்த எல்லோருமே வழிபடும் தெய்வம் ஒன்று உண்டு. அது குலத்துக்கு பக்கத்தில் கருவேல மரத்தடியில் நட்டுக்குத்தலாக நிற்கும் மூன்றடி உயர கல்.

இந்த ஊரில் உள்ள ஒரே ஹிந்து குடும்பம் ரம்லாலுடையது. ராம்லால் காசுக்கடை நடத்தி பெரும் பணம் பார்த்தவர். அவர் தான் அந்த ஊரில் அதிகம் படித்தவர் – நாலாம் கிளாஸ். அன்று இரவு கொள்ளைக்காரர்கள் ராம்லால் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள். அதே நேரம் மாஜிஸ்ரேட் – ஹுக்கும் சந்த் – தன் பங்களாவில் ஹசீனா என்கிற பதினாறு வயது பெண்ணுடன் இருக்கிறார், ஊரின் ஆஸ்தான திருடன் – ஜக்கத் சிங்க் – ஆற்றுப்படுக்கையில் காதலியுடன் இருக்கிறான். அப்பொழுது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. ஜக்கத் (ஜக்கா)வுக்கு தெரியும் யார் சுட்டார்கள் என்று.

அடுத்த நாள் ஒரு இளைஞன் ரயிலில் வந்து இறங்குகிறான். அவன் பெயர் இக்பால். இக்பால் என்கிற பெயர் ஜெயின், சீக் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு பொதுவான ஒரு பெயர். அவன் நேராக குருத்வாராவுக்கு தங்குவதற்காக செல்கிறான். அடுத்த தினம், ஜக்காவையும் இக்பாலையும், ராம்லால் கொலைக்காக கைது செய்கிறது போலீஸ்.

Kushwanth_Singh_Books_India_Hindu_Muslim_train_to_pakistan

ஓரிரு தினங்களுக்கு பின், பாகிஸ்தானில் இருந்து ஒரு ரயில் வருகிறது. அது நிறைய பிணங்களுடன். எல்லாம் பாகிஸ்தானில் வாழ்ந்த ஹிந்துக்களின் பிணம். கிராமத்து மக்களிடம் விறகும், மண்ணெண்ணையும் வாங்கி தான் பிணங்களை எரிக்கிறார்கள். கிராமமெங்கும் மண்ணெண்ணெயின், விறகின் மற்றும் பிணத்தின் வாடை. மக்களெல்லோரும் முடிவற்ற வேதனையில் இருக்கிறார்கள். அப்போது ராம்லாலைக் கொன்றது ஒரு இஸ்லாம் குழு என்று கூற, மக்கள் மனதில் ஒரு களங்கம் ஏற்படுகிறது. முசல்மான்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று தலைவர்கள் சொல்கிறார்கள். அனைத்து முசல்மான்களையும் அருகில் இருக்கும் ஒரு முகாமிற்கு குடிபெயர்க்கிறார்கள். ஊர் மக்கள் மிகுந்த வேதனையுடன், சகோதரர்களை பிரிகிறார்கள். அனைவரும் அழுகிறார்கள்.

சில நாட்களில், மறுபடி ஒரு ரயில் நிறைய பிணங்கள் வருகிறது. அனைத்தும் ஹிந்துக்கள். பாகிஸ்தானில் இருந்து வருபவர்கள். இந்த முறை ரயில் நிறைய பிணங்கள் வரும்பொழுது மழை விடாமல் பெய்கிறது. ஏறத்தாழ 1500 பிணங்கள், புல்டோசர் குழி தோண்டி புதைக்கிறது. அடுத்த நாள் ஒரு இளைஞன் கிராமத்துக்குள் வருகிறான். அவர்கள் நமக்கு செய்ததை நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்கிறான். அடுத்த நாள் முகாமிலிருப்பவர்களை ரயிலில் பாகிஸ்தான் கொண்டு செல்லும் பொழுது, அவர்களை ரயிலில் இட்டு கொல்ல திட்டமிடுகிறார்கள். அதன் பின், என்ன நடக்கிறதென்பது மீதி கதை.

Kane and Abel – எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். அதில் ஃப்ளாரன்டினா-வை உங்களுக்கு தெரிந்திருந்தால், ஸ்லோவேனியன் சிப்பாய்கள் Kane-இன் கண் முன்னாள் இட்டு அவளை பலாத்காரம் செய்து கொன்றது தெரிந்திருக்கும். படித்த உடன் அழுகை வரும். அப்படி இருக்கும் அந்த காட்சி. கடைசியாக புணர்ந்தவன் ‘I think I’ve made love to a dead woman,’ என்று கூறியவாறு அவளை புல் தரையில் இட்டு நகர்வான். கேன் அவளை பதினாறு சிப்பாய்கள் அனுபவித்ததை எண்ணிக்கொண்டிருப்பான்.

train_to_pakistan__Khushwant_Singh_anniversary_edition_partition_India_Hindus_Islamஇது போன்று இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த துயர சம்பவங்களை குஷ்வந்த் சிங் எழுதி இருப்பார். அழுகை வரும். புதிதாக திருமணமான பெண். கணவனுடன் தனியாக இருக்கும் ஆசைகளை அசைபோட்டபடி பேருந்தில் செல்கிறாள். அவள் ஆசையாய் அவள் கணவன் கட்டிலில் உடைப்பதற்காக கண்ணாடி வளையல்களை கழட்டாமல் இருக்கிறாள். ஓரிடத்தில், இஸ்லாம் மதத்தவர் பேருந்தை நிறுத்தி ஆடைகளை அவிழ்த்து முசல்மான் என்பதை நிரூபிக்க சொல்கிறார்கள். இவன் முசல்மான் இல்லை என அறிந்ததும் அவனுடைய ஆணுறுப்பை வெட்டி, அவளிடம் கொடுக்கிறார்கள்… சாலையில் அவளுடைய கண்ணாடி வளையல்கள் சிதறுகின்றன. (நான் அழுதே விட்டேன். ஃப்ளாரன்டினாவுக்கு பின் இரண்டாவது முறையாக)

மானோ மாஜ்ராவுக்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. இரவு தூக்கம் முதல், அடுத்த இரவு தூக்கம் வரை அனைத்துமே ரயில் தான். சரக்கு ரயில்கள். மதிய வேளை பாஸன்சர், என்ஜின் மாற்றுதல், கோச்களை அவிழ்த்தல்… அது போல தான் சட்லெஜ் நதியும்.

‘ஜக்கா’வினுடைய காதலி ‘நூருல்’. இஸ்லாம் மதத்தவர்கள் ஊரிலிருந்து புறப்படும் நேரம், ஜக்கா ஜெயிலில் இருப்பான். நூரு ஜக்காவின் அம்மாவிடம் வந்து அழுவாள். தன்னை அனுப்ப வேண்டாம் என்று சொல்லுவாள். தான் ஜக்காவின் குழந்தையை சுமப்பதாக சொல்வாள். அவள் வயிற்றில் இரண்டு மாத குழந்தை. ஜக்காவின் அம்மா, “ஜக்கா உன்னை தேடி வருவான். நீ இங்க இருந்தா உன்னை கொன்னுடுவாங்க. இப்போதைக்கு போயிடு” என்று சொல்லும் இடத்தில் ‘தட்டத்தின் மறையத்து’-ம், ‘அலைகள் ஓய்வதில்லை’-யும் தலை குனிந்து நிற்கின்றன.

மானோ மாஜ்ராவுக்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போய் விட்டார்கள் என்கிற உண்மையும் கூட தெரியாது. சுதந்திரத்தை பற்றி இக்பால் பேசும் போது தலையாரி சொல்கிறார், “சுதந்திரம்னா அதுக்கு எதாச்சு உபயோகம் இருக்கணும் தம்பி. எங்களுக்கு இதனால் என்ன கிடைக்க போகுது?உங்களை மாதிரி படிச்சா புள்ளைங்க, வெள்ளைக்காரன் விட்டுட்டு போன உத்தியோகத்தை எல்லாம் கப்புன்னு புடிச்சுபீங்க. ஆனா, எங்களுக்கு? ஒரு அரை காணி நிலம் கிடைக்குமா? அல்லது நாலு எருமைங்க தான் கிடைக்குமா?” என்கிறார். இது தான் மானோ மாஜ்ராவின் ஓரளவு பெரிய ஆள் ஒருவரின் கூற்று.

இமாம், மசூதியில் குரான் படிப்பவர். நூருல்லில் அப்பா. அவர் “படிச்சவங்க தான் சுதந்திரம் வேணுமுன்னு சண்டை போட்டாங்க. அவுங்களுக்கு அது கிடைச்சது. நாங்க இவ்ளோ நாள் வெள்ளைக்காரனுக்கு அடிமையா இருந்தோம். இப்போ படிச்சவங்களுக்கு அடிமையா இருக்க போறோம்” என்கிறார்.

இப்படி அப்பாவித்தனமாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் இவர்களுடைய வாழ்வில், பிணங்களை ஏற்றிக்கொண்டு வரும் ஒரு ரயில், ஏற்படுத்தும் மாற்றங்கள் – நிறைய. எல்லோருக்கும் ஏதேதோ பாக்கி இருப்பது போல. என்றாவது திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் தான் ஒவ்வொருவரும் கிராமத்தை விட்டு கிளம்புகிறார்கள்.

மதம், இந்தியாவில் ஒரு பெரிய விஷயம் தான் என்பதை தெளிவாக எடுத்து வைக்கும் ஒரு நிகழ்வு இக்பால் கைது செய்யப்பட்டதுக்கு முன்பும், பின்னும் உள்ள அவனுடைய பேச்சு. போலீஸ்காரர்கள் என்ன மதம் என்று கேட்டதற்கு, “மதம் எல்லாம் தேவை இல்லை” என்று பேசிய அதே இக்பால், ரிலீஸ் ஆன பின்பு குருத்வாராவில் ஒருவர் “நீங்கள் சர்தார் தானே?” என்று கேட்டதற்கு, “ஆமாம்” என்னும் இடத்தில் இக்பாலின் மாற்றம் நம்முடைய மாற்றமாகவும் இருக்கிறது.

காதலும், தீமையும், நன்மையும் நாமே தான் என்று, இக்பாலும் ஜக்காவும் நம்மை புரிய வைக்கிறார்கள். ஜக்காவின் நூருல் அந்த பாகிஸ்தானுக்கு போகும் ரயிலில் இருக்கிறாள். இறுதியாக, தன உயிரை கொடுத்து ஜக்கா நூருல்லையும், ஓராயிரம் முசல்மான்களையும் காக்கிறார். அதே சமயம் இக்பால், ‘நானும் சாவேன், அடையாளங்கள் இல்லாமல்’ என்று நினைத்து குருத்வாராவில் உறங்குவது முற்றிலும் மாறுபட்ட ஒரு வெளிப்பாடு. இக்பால் நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடியான.
உலகின் மிகப்பெரும் அரசியல் விவாகரத்து நடந்த வேளையில் மக்கள் என்ன மாதிரியான இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதை எடுத்துசொல்லும் ஒரு மிகச்சிறந்த புத்தகம் இது. பாகிஸ்தான் போகும் ரயில் தவிர்க்கவே முடியாத ஒரு இடத்தை இந்திய இலக்கியத்தில் வகிக்கிறது. ஒரு கிராமத்தைக் கொண்டு எல்லா இடங்களிலும், அக்காலத்தில் எப்போதுமிருந்த ஒரு கதையை அற்புதமாக நம்முன் வைக்கிறார் குஷ்வந்த் சிங். கண்டிப்பாக ஒவ்வொருவரும் மானோ மாஜ்ராவுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்காகவும், அவர்கள் அனுபவத்துக்காகவும் இருதுளிக் கண்ணீர் விட வேண்டும். கட்டாயமாக.

0 Replies to “பாகிஸ்தான் போகும் ரயில் – புத்தக அறிமுகம்”

  1. நேர்த்தியான அறிமுகம்.. இந்தப் புத்தகத்தை ஏற்கெனவே ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். மிக ஆழமான பாதிப்புகளையும் கேள்விகளையும் எழுப்பும் புத்தகம் இது. இதனை மீண்டும் வாசித்த உணர்வைத் தந்தது இந்த அறிமுகம். பொருத்தமான ஒப்பீடுகள் அறிமுகத்தை இன்னும் சுவாரசியமாக்கி விடுகின்றன.

  2. இந்த விமர்சனம் தமிழ் புத்தகத்திற்கா என்று தெரியவில்லை. அங்கங்கு இருக்கும் தமிழ் வரிகளை பார்த்தால், தமிழ் புத்தகத்திற்கு என்று நினைக்கின்றேன். கிழக்கு பதிப்பித்தது. மோசமான மொழி பெயர்ப்பு. தேவையில்லாமல் வட்டார வழக்கை எல்லாம் நுழைத்து (எங்க முத்துகட்டி ராசாவே), சுஜாதாவை காப்பியடித்து (சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி என்று சொல்வதற்கு முன்னால்) கதைக்குள் நுழைய விடாமல் அடித்துவிட்டார்கள். மரியாதையாக ஆங்கிலத்தில் படிப்பதே அவரவர் உடலிற்கு நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.