தாபசாந்தி – எம் டி வாசுதேவன் நாயரின் வாராணசி

வாராணசி: முரணுரைகளின் நகரம்: எந்நேரமும் சிதையில் பிரேதங்கள் புகையும் நகரம், மனிதர் அமைதியை அறியும் நகரம்: மாண்ட மிருகங்கள் மிதந்து செல்லும் கங்கை நதி, பாபங்கள் அனைத்தையும் கரைக்கும் கங்கா ஜலம்: காமமும் மரணமும் அருகிருக்கும் நகரம்.

நீண்ட காலத்துக்குப்பின் இந்த நகருக்குத் திரும்புகிறான் சுதாகரன். ஒருகாலத்தில் தன் நண்பனாகவும் ஆசானாகவும் இருந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் அழைப்பை ஏற்று வாராணசி வந்தடையும் சுதாகரனுக்கு இப்போது வயது 60.. இந்தப் பயணம் சுதாகரனின் கடந்த காலத்துக்குச் செல்லும் பயணம், அதன் தாக்கங்கள் அவனது நிகழ்காலத்தை பாதித்திருப்பதை அவன் உணரும் அறிவுப் பயணம்.

வாராணசியில் வந்திறங்கும் சுதாகரன் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சில நாட்கள் முன்னர் இறந்துவிட்டதை அறிவதில் துவங்கும் சுதாகரனின் பயணங்கள் கடந்த காலத்தினுள் வளைந்துச் செல்கின்றன. பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் வாழ்க்கைத் துணைவியின் வருகைக்காகக் காத்திருக்க முடிவு செய்கிறான் சுதாகரன், அவளைச் சந்தித்தபின் வாராணசியை விட்டுக் கிளம்புவான். காத்திருக்கும் நேரத்தில் வாராணசியில் வாழ்ந்த நாட்கள் அவன் நினைவை நிறைக்கின்றன. வாராணசி மட்டுமல்ல, பெங்களூர், பம்பாய், பாரிஸ் என்று பிற நகரங்களும் அவற்றின் நினைவுகளோடு அவன் மனதில் அலைமோதுகின்றன. இந்தப் பயணம் பெண்களால் நிறைந்த பயணம்; பேரவா கொண்ட பெண்கள், தன்னலம் மிகுந்த பெண்கள், அன்பு செலுத்தும் பெண்கள், அவனது வாழ்வின் திசையை மாற்றிய பெண்கள்.

காலக்கோட்டில் திரும்பிச் செல்லும் சுதாகரனின் பயணம் பெருந்தாபமும் ஏமாற்றமும் அச்சமும் மிகுந்த பயணம். தன் செயல்களின் விளைவுகளைப் விளங்கிக் கொள்ள முடியாதவனின் பயணம். தன்னைத் தப்பியோடியவனின் பயணம் (“உன்னை விட்டு நீ எப்படி தப்பிச் செல்ல முடியும்?” என்று ஒரு சாமியார் சுதாகரனைக் கேட்கிறார்). ஒரு பெருந்தாபத்தின் பலிபீடத்தில் உண்மைக் காதல் கைவிடப்பட்ட இடத்துக்கு அவனைக் கொண்டு செல்லும் பயணம்.

varanasi

கல்லூரி நாட்களில் சுதாகரன் பதின்மபருவத்தின் காதலை அறிந்திருக்கிறான், உடலைப் பிணையும் காமத்தைக் கடந்து உயரத் துடித்த நேசத்தை அவன் உணர்ந்திருக்கிறான். காதலுக்காக அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கும் அன்பால் அவன் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான். சுதாகரனின் காதலி சௌதாமினி. ஒரு நல்ல ஸ்திதியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அவளை மணக்க வேலை தேடிச் சுதாகரன் பம்பாய் செல்கிறான். கீதாவின் உருவில் விதி குறுக்கிடுகிறது.

கீதாவின் காமமும் விளைவுகளை முழுமையாய் உணராத சுதாகரனின் முதல் உடலுறவு அனுபவமும் அவனை கீதாவை விட்டு விரட்டுகின்றன, அவன் சௌதாமினியையும் பிரிகிறான். தன்னை யாரும் அறியாத இடம் தேடி அவன் பெங்களூர் செல்கிறான். அங்கே அவன் திருமதி மூர்த்தியின் தாபத்தை எதிர்கொள்கிறான். கீதா பெங்களூரில் அவன் இருப்பதைக் கண்டுபிடித்ததும் அவன் வாராணசிக்கு ஓடுகிறான்.

வாராணசியில் சுமிதா அவன் வாழ்வில் நுழைகிறாள். ஆனால், அவளது பயணத்தில் அவன் ஒரு சாலையோர நிறுத்தம்தான். பின்னர் பாரிஸ் செல்லும் சுதாகரன் அங்கு ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணம் செய்து தந்தையாகிறான். அவள் அவனைப் பிரிந்து அமெரிக்கா செல்கிறாள், சுதாகரன் தனியாக இந்தியா திரும்புகிறான்.

வாராணசி சுதாகரனின் பயணங்களின் முடிவு போலாகிறது. பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு அவன் பிண்டமிடுகிறான். அவன் தனக்கு ஆத்ம பிண்டம் இடலாம் என்று பூசாரி பரிந்துரைக்கிறார். அவன் இறந்தபின் அவனுக்குப் பிண்டமிட யாரும் காசிக்கு வராமல் போகலாம். சுதாகரன் தனக்கும் ஆத்ம பிண்டமிட்டுக் கொள்கிறான்.

சுதாகரனின் இயல்பைப் பொருத்தவரை இந்த ஆன்ம பிண்டம் குறியீட்டுத் தன்மை கொண்டது. உயிரோடிருந்தாலும் அவனது உணர்ச்சிகள் மரித்து விட்டன. இதைவிட முக்கியமாக, அவன் பிறரின் நினைவுகளில் இறந்துவிட்டான். தனக்கு ஆன்ம பிண்டமிட்டுவிட்டுத் திரும்பும்போது கங்கை நதிக்கரை படிக்கட்டுகளில் அவன் சுமிதாவைச் சந்திக்கிறான், அவளால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. அவன் சந்தித்த பெண்கள் அனைவரும், அவன் கைவிட்டு ஓடிப்போன பெண்கள் அனைரும் அவனை மறந்துவிட்டு, தங்கள் வாழ்வைத் தொடர்ந்திருப்பார்கள். அவன் அவர்கள் பாதையில் ஒரு விபத்து. இந்நிலையில் பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் உயில் சுதாகரனின் சவப்பெட்டியில் அறையப்பட்ட இறுதி ஆணியாகிறது.

ஸ்ரீனிவாசன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கைத் துணையாக இருக்கச் சம்மதித்த பெண்ணுக்கு விசுவாசமாக கடைசி வரை இருக்கிறார். தன் மரணத்துக்குப்பின் அவளுக்கு வாழத் தேவையான பொருளாதார ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சுதாகரனின் இயல்புக்கு நேர் எதிரானதாக இது இருக்கிறது. எந்தப் பெண்ணுக்கும் அவன் விசுவாசமாக இருக்கவில்லை, சில பெண்கள் அவனுடன் வாழவும் விரும்பவில்லை.

வாசுதேவன் நாயரின் கூறுமொழி நேர்க்கோட்டுத் தன்மை கொண்டதல்ல. நெரிசலான சாலையில் ஒரு ரிக்ஷா செல்வதைப் போல் இந்த நாவல் தடுமாற்றங்களுடன் முன் செல்கிறது. முதலில் ஒரு சந்துக்குள் நுழைகிறது, அங்கிருந்து பிரதான சாலைக்குள் நுழைந்து, இன்னொரு குறுகலான சந்தின் வழியாக பிரதான சாலைக்குத் திரும்பி வேறொரு பாதையில் வளைந்து ஒரு வழியாக சேர வேண்டிய இடத்தைச் சேரும் பயணம். வாசுதேவன் நாயரின் சோதனை முயற்சிகளில் மிகத் துணிச்சலான முயற்சி இது என்று பின்னட்டை வாசகம் சொல்கிறது.

நாவலின் கதைசொல்லி வாசுதேவன் நாயரின் குரல் ஏக்கமும் விலகலும் நிறைந்த துயர் தோய்ந்த குரல். துவக்க அத்தியாயங்களில் இந்தத் தொனி நிறுவப்பட்டு விடுகின்றது. நாவலின் உச்சங்களிலும் உணர்வு மேலிட்ட கணங்களிலும்கூட இந்தக் குரல் மாறுவதில்லை. ஒவ்வொரு கணமும் காலத்தின் பாதையில் மாறாத்தன்மை கொண்ட அதே கணமாக இருக்கிறது. கதையின் மைய நிகழ்வுகளும்கூட சுதாகரனின் பார்வையில் காணப்படுவதில்லை, காலம் சென்ற காரணத்தால் நிகழ்வின் உணர்ச்சிகள் அடங்கிவிட்டிருக்கின்றன. இந்தத் தொனி நாவலுக்குத் துணை செய்கிறது.

வாசுதேவன் நாயரின் வர்ணனையில் வாராணசியின் சித்திரம் உயிரோட்டத்துடன் உருப்பெருகிறது.  அதன் பல்வேறு முகங்களும் அதன் இயங்குதளங்களும் சிறப்பாக வெளிப்படுகின்றன. மரணம் மனிதனுக்கு அமைதியளிப்பதை விவரிக்கிறார் என்றாலும் மரணமே அதன் பிரதான வணிகமுமாக இருப்பதைக் குறிப்பிடத் தவறுவதில்லை. சுதாகரனின் வாராணசி நண்பர்கள் இருவரும் மரணத்தைப் பிழைப்பாய் கொண்டவர்கள். ஒருவர் சிதைபொருட்கள் விற்கும் பரம்பரைத் தொழிலை மேற்கொள்கிறார், மற்றவர் சாவதற்கு காசி வந்து நாள் முழுதும் பஜனை கேட்டுக்கொண்டு வாழ்பவர்களுக்கான ஆஸ்ரமம் போன்ற ஓர் அமைப்பை நிர்வகிக்கிறார்.

இந்த நாவல் பெண்களை விவரித்திருப்பது விமரிசிக்கப்படலாம். இதிலுள்ள பெண்களில் பலரும் தங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுதாகரனைத் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  சௌதாமினியைத் தவிர பிற அனைத்து பெண்களுக்கும் சுதாகரன் தங்களின் காமத்தைத் தணிக்கும் வடிகாலாகவே இருக்கிறான். கீதா அவனை உண்மையாகவே காதலிக்கிறாளா என்பது தெளிவாக இல்லை. அவன் ஒரு மலையாளி என்பதால் அவனைத் திருமணம் செய்து கொண்டால் வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற காரணத்துக்காக அவள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். திருமதி மூர்த்தி அவனைக் கொண்டு தன் காமத்தைத் தீர்த்துக் கொள்கிறாள். சுமிதா தன் காதலனை மறக்க முடியாமல் தவிக்கிறாள், அவன் தன்னைத் திரும்ப அழைத்துக் கொள்ளும்வரை அவளது உணர்ச்சிகளுக்கும் தாபங்களுக்கும் பாத்திரமாக இருக்கும் கருவியாக அவளுக்கு சுதாகரன் பயன்படுகிறான். காதலன் திரும்ப அழைத்தும் எந்த தயக்கமும் இல்லாமல் சுமிதா சுதாகரனைப் பிரிகிறாள். பிரெஞ்சுப் பெண்ணும் தன் வசதிக்காகவே அவனை மணந்து கொள்கிறாள்.

சுருக்கமாகச் சொன்னால் ஏறத்தாழ அனைத்துப் பெண்களும் சுதாகரனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவன் ஏமாந்து போகிறான் என்பதாலா அல்லது அவன் பயந்த சுபாவம் உள்ளவன் என்பதாலா அல்லது அவன் உண்மையான காதலை அறியாத காரணத்தால் காதலிக்கத் தெரியாதவன் என்பதாலா? இவை எதுவாகவும், அல்லது இவை அனைத்துமாகவும் இருக்கலாம். எக்காரணத்தாலோ அவன் சந்திக்கும் பெண்களை இப்படிதான் இருக்கிறார்கள்.

வாசுதேவன் நாயரின் இலக்கியப் பயணத்தில் வாராணசி பேரவாவின் இறப்பாக இருக்கிறது. சுதாகரனின் வாழ்வைச் செலுத்தும் இந்தப் பேரவா வாராணசியில் தனிமையில் மரிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.