தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்
————————————————
இது தான் பசு. இது பால் தரவேண்டுமானால் நாம் தினமும் இதை காலையில் கறக்க வேண்டும். காப்பித்தூளுடன் கலந்து காப்பியாக்க பாலைக் காய்ச்ச வேண்டும்.
அவை மீண்டும் தோற்றம் கொள்ள அவற்றின் பெயர்களை உச்சரித்தால் மட்டுமே போதும் : பால்பெக், வெனிஸ், ஃப்லோரென்ஸ். அப்பெயர்கள் குறிக்கும் இடங்கள் என்னுள் ஊக்குவித்த ஏக்கமனைத்தும் அவற்றின் அசைகளில் படிப்படியாகத் திரள்கிறது.
“கிராடிலஸ், மெய்மைகள் எவ்வாறு கற்கப்பட்டு, கண்டு பிடிக்கப்படுகின்றன என்பது நீயும் நானும் தீர்மானிக்க முடியாத பெரும் கேள்வியாகவே இருக்கலாம் ; எனினும், அவற்றின் பெயர்களில் அல்லாது, பெயர்களைக் காட்டிலும் அவற்றின் இருப்புகளின் வழியாகத்தான் அவற்றை நாம் சிறப்பாகக் கற்றுணர முடியும் என்ற முடிவிற்கு நாம் வந்தடைந்ததே பெரும்பயன் விளைவிக்கும்….”
“அது தெளிவாக உள்ளது, சோக்ரட்டெஸ்…”
மேலே தரப்பட்டுள்ள மேற்கோள்களில் முதலாவது காப்ரியெல் கார்ஸியா மார்கெஸ்ஸின் நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவலின் பிரசித்தி பெற்ற ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில், உறக்கமின்மை என்ற கொள்ளை நோயால் தாக்கப்பட்ட பின் மக்கோண்டோ என்ற ஊரே ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய்மையிலிருந்து மீள ஆரேலியானோ புவெந்தியா என்பவர் வலுவானதொரு சூத்திரத்தை உருவாக்குகிறார் : ஊரிலுள்ள அனைத்துப் பொருட்கள் மீதும் அவற்றின் பெயர்களை குறியிடுகிறார் – மேஜை, நாற்காலி, கடிகாரம், சுவர், கட்டில், பசு, ஆடு, பன்றி, கோழி.
சதுப்பிற்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் மக்கோண்டோ என்ற குறிப்பலகையையும் , அதை விடப் பெரிதாக, பிரதான சாலையில், கடவுள் இருக்கிறார் என்று அறிவிக்கும் மற்றொரு பலகையும் எழுப்பினார்கள்.
ஸ்வானின் வழி (Swann’s Way) என்ற நாவலின் இரண்டாவது மேற்கோளில், கதைசொல்லி அப்போது தான் நவீனப் புனைவின் மிகப்பெரும் அருஞ்செயலொன்றை நிகழ்த்தியிருப்பார்: கணத்தைக் காலத்திலிருந்து விடுவித்து அதன் மூலம் காலத்தையே விடுவிப்பதால், மானுடரொருவர் தன்னையும் தன் காலத்தையும் மீண்டும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது . மனிதனைக் காலத்தினுள்ளும், காலத்தின் மூலம் அவனுள் அவனது மெய்ம்மையையும் (authenticity) மீண்டும் புகுத்தும் ஒரு சாதனமாக நாவலை மாற்ற இந்த சிறந்த இலக்கியச் சாதனை பயன்படுகிறது.
எளிதில் அழியக்கூடிய, ஆனால் ஒளிரும் அதன் தோற்றம் கையளவு பொய்களாலேயே சாத்தியமாகிறது : ஒரு சில பெயர்கள், பால்பெக், குயெர்மான்டெஸ், வெனிஸ், பார்மா – இவற்றின் மூலமாகத் தான் கதைசொல்லி, சிறப்புரிமை (privilege) பெற்ற இச்சையின் சந்திப்பிடங்களாக இருப்பதாலேயே யதார்த்தத்தின் படிமத்தை பெயர்கள் எக்காலத்திற்கும் தங்கள்பால் ஈர்த்துக்கொள்ள முடிகிறது என்பதை அறிகிறான். மேலும் பெயர்களைக் கொண்டு இச்சை, காலத்தின் பதிலியாகத் தன்னையே நிறுவிக் கொள்வதையும் அவன் அறிகிறான்:
பால்பெக் என்ற பெயரை புத்தகத்தில் தற்செயலாக வாசித்தாலே போதும் , வசந்த காலத்தில் கூட, கடலினை அலைக்கும் புயல் காற்றிற்காகவும், நார்மன் காத்திக் எனப்படும் கூர்மாடக் கட்டமைப்பிற்காகவும் ஏங்கும் ஓரிச்சையை என்னுள் எழுப்பிக் கொள்ள இயலும்.
ஆனால் ரொலாண்ட் பார்த் எச்சரித்தது போல் ப்ரூஸ்டின் நாவல் கற்பதற்கும், மாயைகளைக் களைவதற்குமான ஒரு பெரும்பயணம் : நாம் பெயரிடுவதை நாமே படைக்கவும் செய்கிறோம் (பார்மா, பால்பெக், குயெர்மாண்டெஸ்) என்ற எண்ணம் கொண்ட சொற்காலத்திலிருந்து (Age of Words), பெயர்களுக்குரிய துவக்கம் முதல் தொடரும் சிறப்புரிமை வெளியுலகின் சந்திப்பால் சீரழிக்கப்படும் காலத்திற்கும் (சீ இவ்வளவு தானா, மாடம் குயெர்மாண்டெஸ் என்பது இது மட்டும் தானா!) , பேசுபவரின் புறத்தே வார்த்தைகள் தங்களைப் பொருட்களாக நிறுவிக் கொள்ளும் காலத்திற்கும் இட்டுச்செல்லும் பயணம் (யூதர்களுக்கெதிரான பிலோக்கின் சொற்பொழிவுகள், மற்றொருவருக்காக அவருள்ளிருக்கும் குற்றவுணர்வைத் தூண்டும் பேருணர்ச்சியின் நிராகரிப்பே : பேருணர்ச்சி பொருள் நிலை அடைகையில் அதன் உண்மையை இந்நிராகரிப்பு வெளிப்படுத்துகிறது)..
மூன்றாவது மேற்கோள் , ப்ளேடோவின் க்ராட்டிலொஸ் (Cratylus, Κρατύλος) என்ற புத்தகத்திலிருந்து வருகிறது : இதுவே மேற்கத்திய உலகின் முதல் இலக்கியக் கோட்பாட்டு நூலாக இருக்கலாம். இதில் சோக்ரட்டெஸும் அவரது நண்பர்களும் பெயர்களைப் பற்றிய பல மனோபாவங்களை விவாதிக்கிறார்கள். க்ராட்டிலொஸிற்கு பெயர்கள் எனப்படுபவை பொருட்களிற்கு உள்ளார்ந்தவை : இயல்பானவை. ஹெர்மோகெனெஸிற்கோ (Hermogenes, Ἑρμογένης) அவை மரபுவழி வந்தவை : பொருளுக்கு நாம் எந்தப் பெயரிட்டாலும் அதுவே அதற்குரிய,சரியான பெயர். பெயர்களின் முறைமையை நிர்ணயிப்பவர் ஒருவர் (Onomastic legislator) பொருட்களுக்கு அவற்றின் நிலைத்த அல்லது அறுதியான, இலட்சியப் பெயர்களை அளிக்க முடியுமென்பதை சோக்ரட்டெஸ் ஒப்புக் கொள்கிறார். ஆனால் பொருட்களின் உள்ளார்ந்த மெய்ம்மையை வெளிப்படுத்தும் இந்த உபதெய்வம் (Substantialist Demi-urge) வரலாற்றால் விரைவிலேயே தோற்கடிக்கப்படுகிறது. அவர் பெயர்களை உருவாக்கினாலும், முரணியக்கவாதி (Dialectician) அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார். வாதப்பயிற்சியைத் தொழிலாய்க் கொண்டோரிடம் உழைத்துச் சம்பாதித்த காசைக் கொடுத்து பெயர்களின் வாதப் பிரயோகங்களை நாம் அறிந்து கொண்டாலும் அவற்றின் முதன்மை மெய்ம்மையை (not originally, in their essence) நாம் அறிவதற்கில்லை என்று சோக்ரட்டெஸ் கூறுகிறார்.
கலை மற்றும் இலக்கியத் துறைகளை பற்றி உயர்வான எண்ணங்களற்ற ப்ளேடோ, மார்சல் ப்ரூஸ்ட் (அல்லது காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்) போன்றோர் விரிக்கும் வலையில் சிக்கவே மாட்டார். அவர், காஃப்காவின் தூதர்களையொத்த ஹெர்மிஸ்ஸின் (Hermes, Ἑρμῆς) சூழ்ச்சியை சாக்ரேடஸின் மூலம் அம்பலப்படுத்துகிறார் : சொல்லின் தூதர் மற்றும் தெய்வங்களின் துபாசி என்று அழைக்கப்பட்டாலும் ஹெர்மிஸ்ஸால் நமக்கு தெய்வங்களின் உண்மையானப் பெயர்களைக் கூட தர முடியவில்லை. ஏனெனில் தெய்வங்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் அழைத்துக்கொள்கையில் நம்முடையதிலிருந்து வேறுபட்ட பெயர்களை உபயோகிக்கிறார்கள். நம்மைப் போலன்றி தங்களது நிஜப் பெயர்களை பயன்படுத்துகிறார்கள்.
ஹெர்மிஸ்ஸே குற்றவாளி. வார்த்தைகளை பணத்தைப் போல் புழங்க விட்டு அவற்றின் நிலையான தன்மையை பறித்துவிடுகிறார் . இது அவற்றின் சாரத்தையே (Essence) பறிப்பதற்குச் சமம்; சிலசமயங்களில் உண்மையாகவும், சில சமயங்களில் பொய்யாகவும், எப்போதுமே தேய்ந்துபோனதாக இருக்கும்படியும் வார்த்தைகளுக்கு இரட்டை அர்த்தத்தை அளிக்கிறார்.
பொருட்களை நேரடியாகவோ, அல்லது அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் மூலமாகவோ பகுத்தறிவாளர்கள் அறிய முற்படுவதையே சோக்ரட்டெஸ் விரும்புகிறார். க்ராட்டிலொஸ், ஹெராக்லிடொஸிற்கும் (Heraclitus) அவரது ஓயாத மாற்றம் என்ற தத்துவத்திற்கும் எதிராக எழுதப்பட்ட ஒரு விவாதம். அது புறநிலை மெய்ம்மைக் கூறுகளை முன்னிறுத்தி வழக்காடுகிறது: பெயர்கள் மாறிக் கொண்டே இருப்பதால், அறிவை எப்போதுமே ஈட்ட முடியாது. மாறும் பெயர்களும், மாறுபடக்கூடிய வார்த்தைகளும் நிலையில்லாத, அவசியமற்ற உலகைச் சேர்ந்தவை. இத்தகைய உலகில் “எல்லா பொருட்களும் ஒழுகும் பானைகளைப் போல”.
கிராட்டிலொஸ்ஸால் சோக்ரட்டெஸ்ஸின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை : ஹெராக்லிடொஸின் கருத்துக்களை உண்மையென எண்ணவே அவர் விரும்புகிறார். சோக்ரட்டெஸ் வாதத்தை சற்று ஓயப் போடுகிறார். கிராட்டிலொஸை மற்றோர் சமயத்தில் திரும்பி வந்து தனக்கு கற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறார். சோக்ரட்டெஸ் தொடர்ந்து இவ்விசயங்களைப் பற்றிச் சிந்திப்பார் என்ற நம்பிக்கையில் கிராட்டிலொஸ் விடை பெறுகிறார். ஆக, உரையாடல் ஒரு பண்பான இணக்கத்துடன் முடிவடைகிறது.
இது தான் அமெரிக்கா. அது ஒரு கண்டம். அது பெரியது. உலகத்தை விரிவுபடுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஓரிடமது. அதில் நற்குணமுடைய காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்கள். மக்கள் இன்புற்றிருப்பதற்காகவே அமெரிக்கா புனையப்பட்டது (Invented). அமெரிக்காவில் வருத்தமாகவே இருக்க முடியாது. அமெரிக்காவில் பெருந்துயரடைதல் (Tragedy) என்பது ஒருவகை பாவச்செயலே. துன்பத்திற்கான தேவை அமெரிக்காவில் இல்லை. அமெரிக்கா எதையுமே வெற்றிகொள்ளத் தேவையில்லை. அது மிகவும் பரந்தது. அமெரிக்காவே அமெரிக்காவின் எல்லை. அமெரிக்காவே அமெரிக்காவின் தரிசன உலகம் ( Utopia).
மேலும் அமெரிக்கா ஒரு பெயர்.
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ் என்பது ஒரு அமெரிக்க எழுத்தாளரின் பெயர் : கடலிலிருந்து ஒளிர் கடலுக்கு (from sea to shining sea)[1] என்பதை விட துருவத்திலிருந்து துருவத்திற்கு நீளும் புது உலகின் (New World) எழுத்தாளர்.
அமெரிக்கா ஒரு பெயர். கண்டுபிடிக்கப்பட்ட பெயர். புனையப்பட்ட பெயர். விழையப்பட்ட பெயர்.
அமெரிக்காவைப் புனைதல் ( The Invention of America) என்ற அவரது முதல்தரமான புத்தகமொன்றில் மெஹிகோ வரலாற்றாசிரியரான எட்முண்டோ ஓ கோர்மன் (Edmundo O’Gorman) அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது என்பதை விட அது புனையப்பட்டது என்று கூறுவதே பொருத்தமானது என்று வாதாடுகிறார். இது உண்மையென்றால், அது முதலில் விழையப்பட்டு பின்னர் கற்பனை செய்யப்பட்டது என்றே நாம் நம்ப வேண்டும். – தங்கள் உலகின் கைதிகள், சிறை கூட சொந்தம் கொண்டாடுவதற்கில்லாத கைதிகளாக இருந்த யூரோப்பியர்களைப் பற்றி ஓ’கோர்மன் பேசுகிறார்.
புவிமையக் கோட்பாடு (Geocentrism) மற்றும் சமயநுணுக்கமுறை (Scholasticism) : முதல் வீழ்ச்சியின் (The Fall) தளமாக இருந்ததால் மாற்றவே இயலாத, எனினும் வரையறைக்குட்பட்ட பூரண, மூலப்படிவப் பிரபஞ்சத்தைப் பற்றிய இரு தரிசனங்கள்: மையநோக்கும் (Centripetal) அதிகாரப்படிநிலையும். (Hierarchical) .
இந்த “வீரியமற்ற ,இறுக்கமாய் அடைக்கப்பட்ட” உணர்விற்கு எதிராக தான் இடத்திற்கான வேட்கை எழுந்து விரைவில் விடுதலைக்கான வேட்கையாகவும் மாறியது. கூஸாவின் நிக்கோலஸ் , பின்னர் கியோர்டானோ பிரூனோ, லூகா சீன்யோரெல்லி மற்றும் பியெரோ டெல்லா பிரான்ஷெஸ்கா, பிசினோவும் காபெர்னிகசும், வாஸ்கோட காமா பின்னர் கொலம்பஸ் ( Nicholas of Cusa, Giordano Bruno, Luca Signorelli, Pierro della Francesca, Ficino, Copernicus, Vasco da Gama and Columbus) போன்றோர் இவ்வேட்கையின் சில பெயர்கள். இதன் யூரொப்பிய மற்றும் அமெரிக்க அவதாரங்கள் :
முதலாவதாக, உள்ளதன் மீது வினையாற்றுவதற்கான சுதந்திரம் . இச்சுதந்திரம் மாகேவில்லியால்(Machiavelli) யூரோப்பில் வெல்லப்பட்டு, கோர்டெஸ்ஸால் (Cortes) அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டது . சுயமுனைப்பால் தன்னை உயர்த்திக் கொண்ட மனிதன் தன் அளவைக்கேற்ப காப்பிய உலகை மாற்றியமைக்கும் சுதந்திரம். இம்மனிதன் அதிகாரத்தை மரபுரிமை வழி பெறாமல், மனோதிடத்தாலும், உள்ளார்ந்த ஆற்றலாலும் கைப்பற்றக் கூடியவன். லத்தீன் அமெரிக்க நாவல் உலகின் களம் இதுவே, அமெரிக்க கண்டத்தின் காடுகளிலும், சமவெளிகளிலும் திரியும் மாகேவெல்லி மற்றும் கோர்டஸ்ஸின் சந்ததியினர் :[2] வெனெசுவெல்லாவின் யானோஸ் என்றழைக்கப்படும் சமவெளிகளில் உலவும் அரடவின்கள் என்ற ரோமுயோ காயேகோஸின் அரசியல் தாதாக்கள் ; ஹுஆன் ரூல்போவின் காசீக் தலைவனான பெட்ரோ பலாமோ ; கவுடீயோ என்ற அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களுக்கெல்லாம் ஆதாரப்படிவமாய் விளங்கும் சார்மியென்டோவின் அழிவில்லா சித்திரிப்பான பாகுண்டோ ; மேலும் செய்திகளில் புழங்கும் பிரான்சியா, எஸ்டிராடா காபெரேரா, போர்பீரியோ டீயாஸ், ஹூவான் வீயெண்டே கோமேஸ், டிரூஹியோ மற்றும் சமோஸா. மேலும் நாவல்களில், அஸ்டூரியாஸின் எல் செனோர் ப்ரெசிடென்டே, கார்ப்பெண்டியரின் முதல் மாஜிஸ்டிரேட், ரோவா பாஸ்டோஸின் எல் சுப்ரேமோ, இறுதியாக அவர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு அவர்களெல்லோரையும் கடந்து வாழும் கார்சியா மார்கெஸ்ஸின் காலத்துக்கப்பாற்பட்ட தலைவனான பாட்றியார்க்.
“ கொள்ளை நோய்க்கும், புயலுக்கும் வழுபடாமல், காலத்திற்கே வழுபடாமல் , அவர் அங்கு இருக்கிறார் என்ற நிர்ணயம் ஒன்று தான் பூமியில் எங்களுக்கு பாதுகாப்பளித்தது”.
இரண்டாவதாக, எது இருந்தாக வேண்டுமோ, அதன் மீது வினையாற்றுவது. இதுவே யூரோப்பில் தாமஸ் மோர், மற்றும் அமெரிக்காவில் வாஸ்கோ டே கிரோகாவின் (Vasco de Quiroga) உலகங்கள். கண்டுபிடிக்கப்பட்டு, ஏனெனில் புனையப்பட்டு, ஏனெனில் கற்பனை செய்யப்பட்டு, ஏனெனில் விழையப்பட்டு, ஏனெனில் பெயரிடப்பட்டு, அமெரிக்கா யூரோப்பின் தரிசன உலகாகியது (Utopia). அக்காலத்தின் மனித இனநல ஆய்வாளர்கள் (Humanists) ஊழலென்றும் கபட நாடகமென்றும் கண்டனம் செய்த யூரோப்பிய வரலாற்றின் வேற்று உருவமாக இருப்பதே அமெரிக்காவின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், பிரான்சில் மாண்டேனும், ஸ்பெயினில் வீவெசும் (Montaigne & Vives), எராஸ்மஸை (Erasmus) பின்பற்றுவோறும் , புதிய பொற்காலத்தை உறுதியளிக்கும் தரிசன உலகாக அமெரிக்காவைக் கண்டார்கள். குருதிதோய்ந்த சமயப் போர்களில் மூழ்கிக் கிடக்கும் யூரோப் தன் அறநலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி அமெரிக்கா தான் என்று நம்பினார்கள்.
வரலாற்று ரீதியாக, பாதர் வாஸ்கோ டே கிரோகா (Father Vasco de Quiroga), மோரின் யூடோப்பியாவைப் படிக்கும் ஸ்பானிஷ் வாசகராகிய பாதர் வாஸ்கோ டே கிரோகா பதினாறாம் நூற்றாண்டு மெஹிகோவில் வாழ்ந்தவர். கான்குவெஸ்ட் (Conquest) என்றழைக்கப்படும் கீழ்ப்படுத்தலிற்குப் பின் சில ஆண்டுகளிலேயே மெஹிகோ சென்று அங்கு மோரின் கருத்துக்களின் படி சமூகக் குழுமங்களை உருவாக்கியவர். இன்றும் தராஸ்கா இந்தியர்களால் “டாடா வாஸ்கோ” என்று மரியாதையுடன் அழைக்கப்படும் கிரோகா அமெரிக்காவின் பழங்குடி மக்களை வன்முறையிலிருந்தும் நம்பிக்கையின்மையிலிருந்தும் மீட்பதற்கான ஒரே வழி தரிசனவுலகின் கோட்பாடுகளால் அமைக்கப்பட்ட காமன்வெல்த் (Commonwealth) என்ற பொது அரசு என நம்பினார் .
1535-இல் மெஹிகோ நகரத்திலும் , மிச்சோவாகானிலும்(Michoacan) முதல் யுடோபிய சமூகக் குழுமங்களை நிறுவினார். அதே வருடம் தாமஸ் மோர் எட்டாவது ஹென்ரியின் ஆணைப்படி சிரச்சேதம் செய்யப்பட்டார். தரிசன உலகைப் பற்றி இதற்கு மேலும் என்ன கூற முடியும்.
இருப்பினும் அமெரிக்க கலாச்சார மையயிழைகளில் ஒன்றாக தரிசனவுலகின் கனவு நிலைத்து வந்திருக்கிறது. பழைய உலகால் (Old World) நாம் தரிசன உலகில் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம். எத்தனை பலுவான பாரம் !. இந்த முரண்பாட்டின் உறுதிமொழியையும், கோரிக்கையையும் யார் தான் நிறைவேற்ற முடியும் : தரிசனம் அழிக்கப்பட்ட இடத்திலேயே தரிசனமாக இருப்பது, தரிசனத்தை விழைவோர்களால் எரித்து, சூட்டுக் குறியிடப்படுவது. கான்குவெஸ்ட்டின் (Conquest) காவிய நடிகர்கள், கார்டெஸுடன் வியப்புடன் டெனோஸ்டித்திலானை(Tenochtitlan) நுழைந்த படைவீரர்கள் 1519 –இல் அவர்கள் கற்பனை செய்து விழைந்த அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள் : இதுவரை வீரப்பண்பு மரபை முன்னிறுத்தும் ரோமான்சுகளில் (Romances of Chivalry) மட்டுமே படித்து வந்திருந்த கனவும் வசியமும் நிறைந்த ஓர் புது உலகைக் கண்டுபிடித்து, தங்கள் கனவுகளில் தரிசனவுலகு என்று பெயரிட்டதை அழிக்க நிர்பந்திக்கப் பட்டார்கள்.
இதனால் தான் கார்பெண்டியரின் தொலைந்த காலடிகளின்(Lost Steps) கதைசொல்லி ஓரினோகோ நதியின் எதிரோட்டத்தை அதன் தொடக்கங்கள் வரையிலும் தொடர்ந்து செல்கிறான், ஒரு பொற்காலத்திற்கு, தரிசன உலகிற்கு, இந்த..
“ கணத்தில் வாழ்வதற்கு, உடைமைகளில்லாது, நேற்றைய சங்கிலிகளில்லாது, நாளையைப் பற்றிய சிந்தனையில்லாது…..”
இதனால் தான், புவெண்டியாக்கள் கொலம்பியாவின் காடுகளில், கடந்தகாலத்தின் பொற்கால மேன்மைகளுடன் வருங்காலத்தின் முன்னேற்றத்தை பற்றிய தரிசனக்கனவையும் பறைசாற்றும், நிலைக்க இயலாத இன்பமும் அமைதியும் நிறைந்ததொரு ஆர்கேடியாவை (Arcadia) நிறுவுகிறார்கள். அறிவொளிக் காலத்திருந்து (Enlightenment) யூரோப்பே லத்தீன் அமெரிக்காவின் தரிசனமாக இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் கார்சியா மார்கெஸ்ஸை படிக்கையில் உணர்கிறோம் : நீதியும், அறிவியலும், அழகும், முன்னேற்றமும் இப்போது யூரோப்பின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஒரு அண்டரண்டப் பறவை(Albatross) : முடிவாக எக்காலத்திற்கும் நமது படிமத்தை நிறுவும் புகைப்படத்தை நாம் மேற்கிடமிருந்து எதிர்பார்த்தோம்; அல்லது குளிர்கையில் எரியும் பனிக்கட்டியை. ஆனால் முன்னேற்றத்தைப் பற்றிய இக்கருத்தானது – அதனுடன் கூடவே வரும் பெயர்களுடன் – ஒரு மாயையே என்று மெய்ப்பிக்கப்படும் :
“உலகிலேயே பெரிய வைரம் இது தான்”
“இல்லை,” என்று நாடோடி ஆட்சேபித்தான். “இது பனிக்கட்டி.”
இந்த நாடோடி அமெரிக்கா என்ற பெயரின் வேராக இருக்கும் சுதந்திரத்தின் மூன்றாவது கோணத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறான் : முரண்நகைச் சிரிப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான சுதந்திரம். இது ,முதல் ஸ்பானிஷ் தத்துவஞானியான செனேகா(Seneca) வென்ற சுதந்திரத்தைப் போன்றதென்றாலும் உண்மையின் இரட்டைத் தன்மை மற்றும் பொருட்களின் தோற்றத்திற்கும் மெய்ம்மைக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த ரெனைசான்ஸ் எனப்படும் மறுமலர்ச்சியில் தான் வேரூன்றி நிற்கிறது. முந்தைய சமய நம்பிக்கையின் முற்றுறு உண்மையில் தொடங்கி இப்போதுள்ள பகுத்தறிவின் முற்றுறுதல்கள் உட்பட, எல்லா முற்றுறுதல்களையும் மறுக்கும் சுதந்திரம்; விவேகசூனியத்தின் முரண்நகை புகழ்ச்சியால் அனைத்தையும் பக்குவப் படுத்தி, அதனாலேயே யதார்த்தவுலகம் மற்றும் தரிசனவுலகம் இரண்டின் கண்களிலும் ஒரு பைத்தியமாக தோற்றம்கொள்வது : இதுவே யூரோப்பில் எராஸ்மஸின் உலகம், குறிப்பாக, எராஸ்மஸ் ஒரு சிந்தனையாளர் என்பதை விட ஒரு பதாகையாக, ஒரு மனப்பாங்காக, ஒரு நிலைத்த மனச்சாய்வாக விளங்கும் ஸ்பெயினில். மேலும் இன்றுவரையில் அம்மனச்சாய்வு போர்ஹே, ரேயெஸ், அர்ரியோலா, பாஸ் [3]மற்றும் கொர்தஸார் போன்றோருள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எராஸ்மஸை ஸ்பானிய மொழி மற்றும் ஸ்பானிஷ் இல்க்கியத்தின் சமிஸ்தாட் (Samizdat) எழுத்தாளராகவும், நமது மனப்போக்குகளையும், வார்த்தைகளையும் பரப்பும் கீழுலக விரைதூதராக நிச்சயமாகக் கருதலாம். ஸ்பெயினில் புறத்தில் தோற்று சாசுவதத்தில் எக்காலத்திற்கும் வெற்றி பேற்ற எராஸ்மஸ் : டான் கியோடேயின் தந்தை, டிரிஸ்டிராம் ஷாண்டி மற்றும் ஜாக் லா பேடாலிஸ்டின் தாத்தா; காத்தரீன் மோர்லண்ட் மற்றும் எம்மா போவரியின் கொள்ளுத் தாத்தா; இளவரசன் மிஷ்கினின் கொள்ளுத் தாய்மாமன்; பெரெஸ் கால்டோஸின் நசரீன், போர்ஹேயின் பியெர் மெனார்ட் மற்றும் கொர்தஸாரின் ஒலிவியெரா ஆகியோரின் வணக்கத்துக்குறிய மூதாதையர்[4] – ஆனால், உலகத்தின் குறிகளை இடைவுறாது பொருள்விளக்க முனையும் புவெண்டியாக்களின் மூதாதையரும் கூட. அவற்றின் பெயர்களோ கடமையோ மறவாமலிருக்க மரங்கள் மற்றும் பசுக்கள் மீதிடப்பட்ட குறிகள், அவர்கள் கண்ட உலகத்தின் தோற்றங்களுக்குப் பின்னே இருக்கும் குறிகள், அவர்களது வாழ்க்கைத் தொடர்வரலாறுகளில் படித்த குறிகள், பரபரப்பாக பொருட்களையும் மக்களையும் பெயரிட்டுக் கொண்டு, தாங்கள் எழுதியதையே பரபரப்பாக பொருட்படுத்திக் கொண்டு…. அவர்கள் கண்டுபிடித்ததை – புனைந்ததை – கற்பனை செய்ததை – விழைந்ததை – பெயரிட்டதை…..
மகோண்டோ …. தொல்பழங்காலத்து முட்டைகளைப் போலுள்ள மெழுகூட்டப்பட்ட மிகப்பெரிய வெண் கற்களாலான படுக்கையின் மீதோடும் தெளிவான நீர் கொண்ட ஆற்றின் கரையில் கட்டப்பட்டது. அண்மையில் படைக்கப்பட்ட உலகென்பதாலேயே பொருட்கள் பெயர்களற்று, அவற்றை குறிப்பிட வேண்டுமெனில் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியத்துடன்….
அமெரிக்காவின் புனைதலையும், அதன் பெயரிடலையும் பிரித்தறிய முடியாது. அலெஹோ கார்பெண்டியர் அமெரிக்க எழுத்தாளருக்குரிய இச்செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவமளிக்கிறார்: அவனுடைய ஞான ஸ்நானமன்றி பெயரில்லாமலே இருந்திருக்கக் கூடிய பொருட்களுக்கெல்லாம் பெயரிடுவது. கண்டுபிடிக்கையில் புனைதல்; புனைகையில் பெயரிடுதல்(To discover is to invent is to name). நிஜ மற்றும் கற்பனைப் பொருட்களுக்கு அளிக்கப்படும் பெயர்கள் உண்மையிலேயே அவர்களுக்கு உள்ளார்ந்ததா அல்லது மரபுவழி வந்ததா, அல்லது நிச்சயமாக அவற்றிற்கும் பொருண்மையின் மெய்ம்மைக்கும் சம்பந்தமில்லையா என்பதையெல்லாம் நின்று யோசிப்பதற்கான தைரியம் எவருக்கிருக்கிறது. அமெரிக்காவின் புனைவு சாக்ரேடஸ்ஸிற்கு முந்தைய காலத்தில் (Pre-Socratic) நிகழ்கிறது. அதன் மறைவை நீட்ஷே அங்கலாய்த்தார்; புதிதாய்ப் பிறந்திருக்கும் பகுத்தறிவுச் சகாப்தத்தின் (Age of Reason) மத்தியில் மாயமாக எழும் ஒரு இதிகாச காலத்தில் (Mythic Time) அது நிகழ்கிறது; ஏதோ அப்பகுத்தறிவின் காலத்தை எராஸ்மஸின் நியதிகளால் எச்சரிப்பதற்காகவே அது நிகழ்கிறது போல : தன் வரம்புகளை அறியாத பகுத்தறிவும் ஒரு வகையான மடமையே. அண்டோனியோ பிகாபெட்டா(Antonio Pigafetta) என்ற கடல்வழி அறிஞர் மஜெல்லனுடன்(Magellan) உலகைச் சுற்றி வந்த போது பெயரிட்ட அற்புதமான பொருட்களை நினைவுகூர்ந்து தனது நோபெல் பரிசு ஏற்புரையை கார்சியா மார்கெஸ் தொடங்குகிறார் :
இடுப்புகளில் தொப்புள்களுடைய காட்டுப்பன்றிகளையும், தனது ஆண்துணையின் முதுகில் முட்டையிடும் பெட்டைகளை உடைய வளை நகமற்ற பறவை வகைகளையும், கரண்டியை ஒத்த அலகுகளையுடைய நாவற்ற கூழைக்கடாக்களைப் போலிருக்கும் பறவைகளையும் அவர் கண்டார். ஒட்டகத்தின் தலை மற்றும் கண்கள், மானின் கால்கள், குதிரையின் கனைக்குரல் இவை அனைத்தையும் கொண்ட பிறழ்பிறப்பு ஜந்து ஒன்றை கண்டது குறித்து அவர் எழுதினார். பாடகோனியாவில் சந்தித்த முதல் பழங்குடியோன் ஒருவன் கண்னாடியை எதிர்கொண்டதை விவரிக்கையில், உணர்ச்சிவசப்பட்ட அந்த ஆஜானபாகு எவ்வாறு தன்னுடைய பிம்பத்தைக் கண்டு பீதி கொண்டு மதி இழந்தான் என்பதையும் கூறுகிறார்.
(வளரும்)
[4] Erasmus the father of Don Quixote; the grandfather of Tristram Shandy and Jacques el Fataliste; the great-grandfather of Catherine Moreland and Emma Bovary; the great-uncle of Prince Myshkin; and the revered ancestor of the Nazarin of Perez Glados, the Pierre Menard of Borges, and the Oliveira of Cortazar